கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2025
பார்வையிட்டோர்: 205 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பத்திரிகை முழுவதையும் எழுத்து எழுத்தாக, வரி வரியாக, பத்தி பத்தியாக கண்களால் விழுங்கித் தள்ளிய பின்னர்தான் ஏனைய அலுவல்கள் ஆரம்பமாகும். இன்று அந்தக் கடமை முடிந்துவிட்ட ஆத்ம சுகத்தில் விரல்களுக்கிடையில் பத்திரிகை ஊசலாடிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார் கனகரத்தினம் மாஸ்டர். 

முகவிதானத்தில் யோசனைகளின் நெளிவுகள். 

“தேத்தண்ணியும் குடிக்காமெ உதென்ன அப்படி முழுசிக் கொண்டிருக்கிறியள்?” 

பகீரதியின் குரல் செவிக்கருகில் மேளமடிக்கிறது. 

“இஞ்ச வந்து வெளியில் பாருமேன்….” 

“ஏன் என்னவாம்?” 

ஆவி பறக்கும் தேநீருடன் பகீரதி அருகில் வந்து, நின்றாள். பார்வை ஜன்னலுக்கு வெளியில் விழுகிறது. 

“இந்த வெற்று இடத்திலே ஒரே கல்லும் முள்ளுமா கிடக்கல்லே….” 

“அதுக்கென்ன?” சட்டென கேட்ட பகீரதி கேள்வியுணர்வுடன் தலையைத் திருப்புகிறாள். 

“என்னவோ? உமக்குத் தலையில் ஒரு மண்ணும் கிடையாது” என முறைத்த அவர், “என்ன அநியாயம் சும்மா கிடக்கிற இந்த நிலத்தில கொஞ்சம் பாகல், புடலை என்று ஏதேனும் நட்டால்…. சா, எவ்வளவு பிரியோசனம்” வாயில் ஊறலெடுக்கும் சுவையுடன் கனகரத்தினம் கூறுகிறார். 

பகீரதியின் கண்கள் மிரட்சியடைகின்றன. 

“இஞ்ச, இந்த எண்ணங்களை விடுங்கோ. இது கொழும்பு. எங்கட சாதி சனம் வாழ்ற இடமில்லை!’ லேசான கோபத்துடன் கடுகடுத்தாள். 

ஜன்னலுக்கு அப்பால் லயித்துக் கிடந்த கனகரத்தினம் மாஸ்டரின் முகம் சட்டென திரும்பி மிஸஸின் முகத்தில் நிலை குத்தியது. கண்மணிகள் கூர் ஈட்டிகளாக ஊடுருவின. ‘என்ன இவள்?’ என்பதுபோல பார்வையில் தீச்சுடரின் தீட்சண்யம். 

‘முகத்தில் முதுமையும் தலையில் நரையும் இழையோடத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் ஜீவிதம் கரைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இந்தக் கொழும்பு மண் இவளுக்கு அந்நியமாகவா படுகிறது!’ என்ற எண்ணங்கள் ஆழ்கடல் நீரோட்டமாக மனதில் ஓசையில்லாமல் நகர்ந்திட, மாஸ்டரின் பரந்த நெற்றியில் சிந்தனைக்கோடுகள் பள்ளமிடுகின்றன. மறுபடியும் கனகரத்தினத்தாரின் பார்வை ஜன்னலுக்கப்பால் சென்று லயித்து விடுகிறது. 

“இஞ்சாருங்கோ! நான் என்ன சொல்லுறன் என்றால், நீங்கள் எதையாவது நடப்போக அது வளரும். இங்கத்தய பெடியளைத் தெரியும்தானே?” 

பகீரதியின் குரல் விசனமுடன் ஒலிக்கிறது. 

“தெரியாமல் என்ன? நான் என்ன ஏ.கே. போட்டி செவனோடத் திரியிறவனே. மனுஷரோடப் பழகத் தெரியவேணும்….”

‘சட்’டெனக் கொதித்துக் கதறிய மாஸ்டரின் குரலில் சினத்தீ புரண்டெழுந்தது. யாரோடோ வஞ்சினம் கொண்டு அவர் எதனையோ வார்த்தைகளாக உமிழ்ந்தார். 

“அது இல்லேப்பா, இங்கத்த சிங்களப் பெடியள்…” எனப் பகீரதி மறுபடியும் ஆரம்பித்து முடிக்கவில்லை. 

“சும்மா இரும். எங்கட சாதி சனம் எண்டு அளக்குறீர். கடைசியா ஊருக்குப் போயிருந்தப்போ அந்த எளிய சாதிப் பயல் நிமலன் என்ன மாதிரி வந்திட்டான்…” 

“எதைச் சொல்லுறியள்?” 

“என்னப்பா அதுக்குள்ள மறந்துட்டியே? குறுக்கு வழியா கனகா வீட்டுக்குப் போனப்போ நிமலண்ட வெங்காய வரம்புக்கை ஏறிப்போனேமே.” 

“ஓம்! ஓம்!” 

“என்ன ஓம்! ஓம்! அந்த எளிய சாதி நிமலன், ஓய் கனகரத்தினம் எப்ப உமக்குக் கண்போனது. சிங்கள அரசாங்கத்துக்கு உழைத்து உழைத்து உமக்குக் கண்ணும் போயிட்டுதோ என்றல்லவா கேட்டவன்.” 

பகீரதி மூச்சடைத்தாற்போல் நிற்கிறாள். 

மாஸ்டரின் உறுமல் ஓயவில்லை. 

“கைகட்டிச் சேவகம் புரிந்த எளிய நாயள் இப்ப கொடிகட்டிப் பறக்கினம்.’ 

அவர் குமுறலுடன் காறித் துப்பினார். 

இதென்னடா தொல்லை என அலுத்துக்கொண்ட பகீரதி, “சரி சரி விடுங்கோப்பா. இதைக் குடியுங்கோ” என தேநீரை நீட்டுகிறாள். 

மாஸ்டரின் முகத்திலிருந்து சினரேகைகள் மாறவில்லை. 

மிஸஸ் கனகரத்தினத்திற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கொஞ்சம் நின்று அவர் முகத்தைப் பார்த்து லேசாக முறுவலித்தார். 

இஞ்ச சும்மா பொரியாதேங்கோப்போ. முகத்தைப் பாக்கச் சகிக்கல்ல” என வெடுக்கெனக் கூறினார். 

மாஸ்டரின் முகத்தில் அசடு வழிகிறது. 

‘சினம் சினந்தாரையே கொல்லும்’ எனத் தனக்குள்ளாகவே புறுபுறுத்துக் கொண்டார். 

சதா மனதை ஆன்மீக விசாரத்திற்குள் ஈடுபடுத்தி அறு அறுவென அறுத்துக் கொண்டிருப்பவராயிற்றே இந்தப் பென்சன்காரர். இன்றைய உலகப் பிரச்சினைக்கெல்லாம் அடிப்படைக் காரணம் கோபம்தான். சினத்தை அடக்கினால் உலகத்தை வெல்லலாம் என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி அனைவருக்கும் போதிக்கும் மனிதராயிற்றே. இவர் தனக்குக் கோபம் வந்துவிட்டதென்று எவரும் சுட்டிக்காட்டுவதை எப்படிப் பொறுப்பார்? 

கனகரத்தினம் மாஸ்டர் அரச உத்தியோகத்திலிருந்து ரிட்டையர் ஆன காலம் முதலாகப் பத்திரிகை வாசிப்பதை விடவில்லை. விடியலிலே எழுந்து பத்திரிகை வாங்கிவந்து வாசிக்காவிட்டால் அவருக்கு மண்டை வெடித்துவிடும். 

காலை கருக்கலில் எழுந்து இருளோடு இருளாக வீதியைக் கடந்து பத்திரிகை வாங்கி வந்து நாற்காலியில் அமர்ந்தாரென்றால் ‘ஆரடா இந்தப் பேயன்’ எனப் பத்திரிகையின் பக்கங்களே ஒப்பாரி வைக்கும் அளவிற்கு அவற்றை உருட்டியும் புரட்டியும் ஒரு எழுத்து விடாமல் வாசிப்பார். அப்புறம் பொடியங்கள் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒரு பிரசங்கம் செய்வார். ஒவ்வொரு நாளும் அவர் பொழுது இவ்வாறுதான் பனிக்கட்டியாகக் கரைகிறது. 


இன்றும் விடியலில் துயில் எழுந்தாயிற்று. பத்திரிகை வாங்குவதற்கு வீதிக்கு நடவாமல், ஜன்னல் கதவைத் திறந்துவிட்டு வெளியுலகைப் பார்த்தார். 

‘அட்டா எத்தனை சுகம்’ ஜன்னல் வழியாக உள்ளே ஓடிவந்த காலையின் இளங்காற்று சிலுசிலுவென உடலைத் தழுவிக்கொண்டபொழுது மெய்மறந்து போனார். 

‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா….’ என்ற பாரதி பாடலை தன்னை மறந்து முணுமுணுத்தார். 

உற்சாகம் உடலை ஓர் உசுப்பு உசுப்பிவிட மண் வெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்று ஜன்னலுக்கு அப்பாலுள்ள வெற்று நிலத்தை கொத்தத் தொடங்கினார். 

உடலில் வியர்வை மழைத்துளிகளாக வழிந்தோட மணலைப் புரட்டி பாத்தியும் கட்டி வேலியும் எழுப்பி நிமிர்ந்தபோது ஜன்னலில் பகீரதியின் முகம் தெரிகிறது. இளமைக்கால பிரமையுடன் மிஸஸ் கனகரத்தினம் அவரை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தார். 

“தேத்தண்ணியும் குடிக்காம,பேப்பரும் பார்க்காம உதென்ன அதுக்குள்ள குந்திக்கொண்டு….”

“தோட்ட வேலை செய்யுறன்.” 

மாஸ்டர் குழந்தையைப்போல் குழைந்துகொண்டு பதில் சொன்னார். 

பகல் முழுவதும் கடூரமான வெயில் எரித்து வெம்மை வறுத்தெடுத்தபோதும் பிற்பகலில் இடி முழக்கத்துடன் லேசான தூறல் விழுந்து மாலையில் அதிகரித்து நடுராத்திரியில் கொட்டோ கொட்டென பொழிந்து தள்ளுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக மழையின் கொட்டம் நிற்கவில்லை. 

மழையோடு மழையாக சுவிஸ், கனடா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பிள்ளைகள் இருவரினதும் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றைத் திரும்ப திரும்ப வாசிப்பதிலும் பதில் எழுதுவதிலும் பொழுதைக் கழித்தார். 

கொழும்பு வாழ்க்கை நார்மலாக இருக்கிறது. கெடுபிடிகள் எல்லாம் உண்டுதான் என்றபோதிலும் ஊரில் போய் குண்டுகளுக்கும் ஷெல்லடிகளுக்கும் மத்தியில் அல்லாடுவதுபோல் அவதிப்படத் தேவையில்லை என பதில் எழுதினார். நாட்டு நிலையைச் சரியாகக் கணிப்பீடு செய்துள்ளோமென்ற திருப்தி அவருக்கு. 

மழை ஓய்ந்துவிட்டது. 

நான்கு நாட்கள் மழை, வெள்ளத்துடனே ஓடி மறைந்தன. 

வழக்கம்போல் காலையில் எழுந்து வெளுப்புக் கரைசலில் ஜன்னலால் எட்டிப் பார்த்தபொழுது அவருடல் புல்லரித்துப்போனது. 

மனதினுள் ஓர் ஆனந்த அலை அடித்தது. 

நிலத்தைக் கொத்திப் பதப்படுத்தினார் அல்லவா! அன்று பாகல் விதையொன்றினைப் புதைத்துவிட்டார். அந்த விதை துளிர்விட்டு மணலைப் பிளந்து வெளியில் தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. 

அடுப்படி வேலையில் கிடந்த பகீரதியைக் கட்டி முகர்ந்து ஜன்னலடிக்கு இழுத்து வந்தார். என்னவோ எனப் பதறிப்போன மிஸஸ் கனகரத்தினமும் துளிர் விட்டுத் தலையை ஆட்டிக்கொண்டிருக்கும் பாகல் கொடியின் தளிரைக் கண்டதும் மெய்மறந்து போனார். 

‘எண்ட ராசா!’ என்ற செல்ல முணுமுணுப்புடன் கனகத்தாரின் நாடியில் லேசான இடி விழுந்தது. 

கனகரத்தினம் மாஸ்டர் தோட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க பகீரதி ஜன்னலால் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

பாகற் தளிரைச் சுற்றிக் கொஞ்சம் மணலை மேடாக்கி பாத்திபோல் கட்டிவிட்டு அவர் பெருமிதத்துடன் எழுந்தபோது சேவலொன்று கூவியது. 

சரேலென எங்கிருந்தோ பறந்துவந்த அந்த அழகான சேவல் வேலியின்மேல் நின்று மறுபடியும் கம்பீரமாகக் கூவியதுடன் வேலியிலிருந்து சட்டென நிலத்திற்குக் குதித்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகற் தளிரை ஒரே கொத்தாகக் கொத்தி விழுங்கி விட்டது. 

‘ஆ!’ 

கனகர் அலறினார். ஒரு பிசாசுப் பிடித்து உலுக்குவதுபோல் அவருடல் நடுங்கியது. மண்வெட்டியை இறுகப் பிடித்திருந்த கைகள் அதனை ஒரு விசுறு விசுறின. 

அந்த வீச்சில் சேவலின் அழகிய கொண்டையுடன் கூடிய கழுத்து அறுபட்டுத் தனியாக விழுந்து துடிதுடித்தது. சடார் சடாரென சேவலின் உடல் நான்கு முனைக்கும் துடிதுடித்துப் பாய்கிறது. 

அடுத்தவீட்டு திலகரத்தினவின் மகன் அரவிந்தவின் செல்லப்பிராணி அது. இங்கே நடந்த கொடூரத்தை ஜன்னலால் கண்டு அவன் அலறினான். 

“புது அம்மே! மஹே குக்குலாவ அல்லப்பு ஹெதர கொட்டியா மெருவா. 

“ஐயோ அம்மா! என்னுடைய சேவலை பக்கத்து வீட்டுப் புலி கொன்னுட்டான்.” 

– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

கே.விஜயன் கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *