தலைவர் – ஒரு பக்க கதை





தலைவரே… அந்த ஏகாம்பரம் எதிர்கட்சிக்காரன்கிட்ட பணத்தை வாங்கிட்டு நமக்கு எதிரா உள்குத்து வேலை பார்த்திட்டிருக்கான் தலைவரே..அவன கூப்பிட்டு மிரட்டி வச்சாதான் அடங்குவான்.. பக்குவமாய் எடுத்துச் சொன்னார் வட்டச் செயலாளர்.
தலைவர் யோசித்தார். “அவன வந்து என்னைய பார்க்கச் சொல்லு’ என்றார்.
ஏகாம்பரம் தலைவர் முன் பவ்யமாக நின்றான்..
“என்னடா.. ஏகாம்பரம் நான் கூப்பிட்டதுக்கே இவ்வளவு லேட்டா வர்றே..என்ன விஷயம்..’
“தலைவரே காலங்காத்தால மினி பஸ்ல வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு..’
“ஏண்டா இத்தனை காலம் எங்கூட இருந்துட்டு.. இன்னும் பஸ்லயா போற வர்றே…என்ன ஆளுடா நீ… இந்தா.. இந்த வண்டிச் சாவியை நீயே வச்சுக்கோ.. எலெக்ஷன் வேலையைப் பார்த்ததுக்கு என் பரிசு.’ புது இரு சக்கர வாகனத்தை ஏகாம்பரத்திடம் கொடுத்தனுப்பினார் தலைவர்… மகிழ்ச்சிப் பெருக்கில் கையெடுத்துக் கும்பிட்டான்..
வண்டியை பார்த்து பதமாக ஓட்டிச் சென்றான்..
வழியில் காவல் துறையினர் சோதனை…
ஐயா வீட்டு வண்டியை திருடிட்டுப் போனா சும்மாவா விடுவாங்க… கொத்தாகப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
“பின்னிட்டீங்க… தலைவரே..’ சியர்ஸ் சொல்லியபடியே சரக்கை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர் வட்டமும் தலைவரும்.
– கே. தியாகராஜன் (மே 2011)