தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 245 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலைமகள் பெயருக்கேற்பக் கல்வியிற் சிறந்தவள். அழகில் இலக்குமியை ஒத்தவள். இப்பெண்ணைத் திருமணஞ் செய்யப் பலர் காத்திருந்தனர். ஆனால் திடீரென உதயபுரத்திலிருந்து ஐவர் பெண்கேட்டு வந்தனர். கலைமகளின் சம்மதம் விசாரிக்கப்படாமலேயே கலைமகளின் தந்தை திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்துவிட்டார். தனது அந்தஸ்துக்கு ஏற்ற இடமாய் அமைந்தபடியினாலே சம்மதம் கொடுத்தார். 

மாப்பிள்ளையும் பெண்ணைப் பார்க்கவில்லை. பெண்ணும் மாப்பிள்ளையைப் பார்க்கவில்லை. இருவரும் ஒத்தமனத்தினர். பெற்றார் விரும்பிச் செய்யும் திருமணத்தைச் செய்வதே தமது கடமை என இருவரும் எண்ணிக்கொண்டனர். 

கலைமகளுக்கு ஒரு தோழி உதயபுரத்திலிருந்தாள். அவளுக்கு அவசரக் கடிதம் எழுதினாள். தோழியும் உடனே வந்து சேர்ந்து விட்டாள். உதயபுரத்திலிருந்து வந்த திருமணப் பேச்சைப் பற்றிக் கலைமகள் கூறினாள். தோழி அந்தக் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். அந்தக் குடும்பத்தில் பெண் கொடுக்கப் பலர் முன்வந்தனர். அந்தக் குடும்பத்தில் மாப்பிள்ளை எடுக்க உங்கள் குடும்பம் தவம் செய்த குடும்பமாயிருக்க வேண்டும். மாப்பிள்ளையின் பெயர் கண்ணன். கண்ணனைக் கல்யாணம் செய்யப் பல பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவருக்கும் கண்ணன் அகப்படவில்லை. கலைமகளே! நீ தவம் செய்த பெண். ஆனபடியினால் கண்ணன் உனக்கு அகப்பட்டான். 

கண்ணனோ எந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்தறியான். நல்ல ஒழுக்கமானவன். நல்ல படிப்பாளி. நல்ல உழைப்பாளி தாய் தந்தையர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான். இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு தாய் தந்தையர் என்ன தவஞ் செய்தனரோ என்று ஊரார் பேசிக் கொண்டனர். 

பெரியபுராணம் பாடுகிறாயே! அவர் எப்படியிருப்பார் என்று இன்னும் சொல்லவில்லையே. கண்ணனைப் போன்ற நிறந்தான். அனால் நல்ல அழகன். எந்த நேரமுஞ் சிரித்த முகம்; மலர்ந்த முகம். தோழியின் வருணனையில் கலைமகளின் உள்ளத்திலே ஒரு கண்ணன் உருவாகிவிட்டான். புல்லாங்குழல் ஊதுகிற கண்ணன் படத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதே படம் கலைமகளின் உள்ளத்தில் பேரொளியாகப் பதிந்துவிட்டது. 

மாப்பிள்ளை உங்கள் ஊர் என்று சொன்னார்களே! அது உண்மைதானோ? உதயபுரமேதான். உதயபுரம் என்ற பெயரும் கண்ணன் என்ற பெயரும் மனதில் பதிவு பெற்றுவிட்டன. கலைமகள், “கண்ணா கண்ணா! கமலக் கண்ணா! உதயபுரிக் கண்ணா! ஊரெல்லாம் பேசுங் கண்ணா!” என்று மனம் மாத்திரம் பாடவில்லை, நாவும் அசையத் தொடங்கிவிட்டது. சொண்டும் பேசத் தொடங்கிவிட்டது. வீட்டில் கண்ணன் படத்தைப் பார்த்துவிட்டால் பொழுது போவதே தெரியாமல் படத்தின் முன்னாலேயே நின்று விடுவாள். 

“கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம்” 

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா 
நின்றன் கரியநிறந் தோன்றுதடா” 

என்று பாடுவாள். ஆட்டுக்குட்டியைத் தூக்கி முத்தம் கொடுப்பாள். கண்ணா என்று அங்ஙனம் கொடுக்கும்போது என்னடா அன்பொழுகக் கூறுவாள். இப்பொழுது கலைமகளுக்கு கண்ணன் பைத்தியம் பிடித்துவிட்டது. 

என்னமாதிரி அமைதியாக இருந்த பிள்ளை உதயபுரியார் பெண் கேட்டு வந்ததன் பின் முற்றாக மாறிவிட்டாளே. உள்ளும் புறமும் கண்ணன் என்ற பெயரே ஆட்கொண்டுவிட்டது. கண்ணன் பைத்திய மாகவே மாறிவிட்டான். ஒரு நாளைக்கு ஆயிரந் தடவையாவது அம்மா, அம்மா என்று கூறுகின்றவள், அம்மா என்ற சொல்லையே மறந்து விட்டாளே. அப்பா என்று அழைத்தால் அந்தச் சொல்லிலிருந்து தேன் சொட்டுமே. இவையெல்லாம் இப்போ எங்கே தான் போய்விட்டன. எல்லாவற்றையும் கண்ணனே விழுங்கிவிட்டான் போலும். 

தோழியர் வந்து விளையாட்டிற்கு அழைத்தால் விளையாடப்போக மாட்டாள். தான் கண்ணனோடு விளையாட வேண்டும் என்று வீட்டினுள்ளே போய்விடுவாள். தனக்கு ஒரு உடம்பு இருக்கிறதே அதைப் பேண வேண்டும் என்பதையே மறந்து விட்டாள். 

‘என்னை எனக்கறிவித்தவன் எங்கள் குருநாதன், ‘தன்னையறிந்தவன் தலைவனை அறிவான்’ என்பன பெரியோர் வாக்குகள். 

தலைமகள், மனிதனாகப் பிறந்த ஒருவன் அடைய வேண்டிய இடமாகிய தலைவன் திருவடியை அடைந்து இரண்டற்ற நிலையை அதாவது அத்துவித நிலையை அடைந்துவிட்டாள். தாள் + தலை = தாடலை. இரு சொற்கள் சேர்ந்தபோது பிரிப்பின்றி ஒன்றாகக் காண்பது போல இறைவனின் தாளும் உமாவின் தலையும் ஒன்று சேர்ந்துவிட்டன. ஆற்று நீரும் கடல் நீரும் கலந்துவிட்டால் ஆற்று நீர் கடல் நீராவது போல ஜீவாத்மா பரமாத்வாவுடன் சேர்ந்தபின் அத்துவித முத்தி எனப்படும். ஜீவாத்மா ஜீவனுக்குரிய எல்லா நிலைகளையும் இழந்து இதனை பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை. அப்பர் சுவாமிகள் எவ்வாறு சொல்லுகிறார் என்பதை உற்றுநோக்குங்கள். 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் 
மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *