தலைக்காதல்!




ஒரே கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் முகனைப் பார்த்து கோபித்துக் கொண்டாள் வான்மதி. அவன் எதிரில் வரும் போதும், அவனுடன் சேர்ந்து வேலை செய்யும் போதும் சிறிது இடைவெளி விட்டே நடந்து கொண்டாள்.

“ஏண்டி முகனக்கண்டாலே மொகத்த அப்படி வெறுப்போட கோபமா திருப்பிக்கிறே….? அவனென்ன அவ்வளவு கெட்டவனா….? இங்க வேலை செய்யற ஒவ்வொரு வளுசப்பொண்ணுங்களுக்கும் அவம் பேர்ல தான் ஒரு கண்ணு. ஆனா அவன் யாரையும் கண்டுக்க மாட்டான். சொல்லப்போனா கல்யாணமான எனக்கே அவம்பேர்ல ஒரு க்ரஸ் இருக்குன்னா பார்த்துக்குவே….” உடன் வேலை செய்யும் மாலதியின் பேச்சால் மனம் மாறினாள்.
முகன் மீதிருந்த கோபத்தை மனதிலிருந்து தூக்கிப்போட்டு காலில் மிதித்தே விட்டாள்.
‘இவ்வளவு நல்லவன் நம்மிடம் மட்டும் ஏன் எந்தப் பொருளைக் கொடுக்க வந்தாலும் அவனது கை நம் கைமீது படுமாறு கொடுக்கிறான்? எதிரே வரும்போது உரசியபடி செல்கிறான்? ஒரு வேளை நம்மை காதலிக்கிறானோ…? பல பேர் காதலிக்க நினைக்கும் ஒருவன் நம்மைக் காதலிப்பது அதிர்ஷ்டம் தானே…? நம் மனம் மட்டும் ஏன் அவனை வெறுக்கிறது….? ஒரு வேளை வெறுப்பு விருப்பமாக மாறுமோ, என்னமோ…?’ எனும் கேள்விகள் மனதில் எழ குழப்பத்தின் எல்லைக்கே சென்றாள்.
“நம்மள டச் பண்ணறவங்க எதார்த்தமானவங்களா? சூழ்ச்சிக்காரங்களான்னு பார்க்கனம். சில பேர் இவங்க மேல இடிச்சா தப்பா நெனைப்பாங்கன்னு தெரியாம கூட நடந்துக்குவாங்க. அவங்க பார்வைய வெச்சே கண்டு பிடிச்சிடலாம். முகனப் பொருத்தவரைக்கும் வெள்ளந்தியான பையனாத்தான் தெரியறான். எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்? நல்லவங்களா தெரியறவங்களும் தப்பு பண்ணறவங்களா இருக்கறாங்க. கெட்டவங்களா தெரியறவங்களும் தப்பு பண்ணாதவங்களா இருக்காங்க. நாம எப்பவுமே எச்சரிக்கையா இருந்துட்டோம்னா யாரு எப்படியிருந்தா நமக்கென்னன்னு வாழ்ந்திடலாம்” என தோழி ரம்யா பேசிய போது மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது வான்மதிக்கு.
பிறந்த நாளுக்கு அனைவரும் சாதாரணமாக வாழ்த்து சொன்ன போது, முகன் பூச்செண்டு கொடுத்து, கை குழுக்கி வான்மதிக்கு வாழ்த்துச்சொன்னான். இவ்வளவு நாட்களாக அவனது தொடுதலை வெறுத்த அவள் மனம் அவனது கையை இறுக்கிப் பிடித்தது. ‘இயல்பா? மனதின் முடிவா?’ என்பதைப் புரியாமல் அன்றிரவு உறக்கமின்றித் தவித்தாள்.
“முகன்….” வான்மதியின் அழைப்புக்கு உடனே நிற்காமல் “ஒன் ஹவர் வேலையை முடிச்சிட்டு வந்திடறேன்” எனக் கூறிச் சென்றவனைப் பார்த்து ‘இவன் நம்மைக் காதலிக்கிறானா…? வேலையையா…? நிச்சயம் வேலையைத் தான். நாம் தான் அவனது தொடுதலை வைத்து முன்பும், இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டோம். அவன் எப்போதும் போல் தான் இப்போதும் இருக்கிறான். நாம் தான் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறோம். அவனது பார்வை நன்றாகத்தான் உள்ளது. நம் பார்வைதான் தவறான பார்வையாக உள்ளது’. வேலை செய்யவே மனமின்றி வலைத்தளத்தில் மனதைச்செலுத்தினாள். ‘மனம் இந்த நிலைக்குப்போனால் வேலையிலிருந்து முதலாளி தூக்கி விடத்தான் போகிறார்’ என யோசித்தவாறு விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவள் பசிக்கு சாப்பிடக்கூட மனமின்றி பெட்டில் படுத்துக்கொண்டாள்.
முகனைப்பற்றிய எண்ணத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்தாள். ‘இப்படியே போனால் உடல் நிலையும் மனம் போலவே கெட்டு விடக்கூடும்’ என நினைத்து வருந்தினாள்.
“இருதலைக்கொள்ளி எறும்புன்னு சொல்லுவாங்களே அந்த நிலைலதான் நீ மாட்டிகிட்டு தவிக்கிறே. பேசாம இன்னைக்கு நேரா அவனையே கேட்டிடு. ஒன்னு யெஸ், இல்ல நோன்னு சொல்லப்போறான். பிரச்சினை இதோட முடிஞ்சிடும்” தோழி ரம்யாவின் பேச்சைக்கேட்டாள்.
முகனின் அருகில் அமர்ந்து மதிய உணவை சுவைத்த போது எப்போதுமில்லாமல் இன்று அவளது டிபன் பாக்ஸை அவன் பிடுங்கி சாப்பிட்டதும் காதல் உறுதியானதென மகிழ்ந்தாள் வான்மதி. அவனது டிபன் பாக்ஸிலிருந்த தயிர்சாதம் இவளுக்கு அமிர்தமாக இருந்தது.
“எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும். லீவு நாள்ல எங்க பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் சேர்த்து சமைச்சுக் கொடுப்பேன்” என அவன் சொன்ன போது ‘இப்படிப் பட்டவனைத் தானே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என மனதில் தோன்றியதை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். இப்போதெல்லாம் அவன் இவளைத் தொட்டுப் பேசுவதை விட இவள் அவனைத் தொட்டுப் பேச ஆரம்பித்திருந்தாள்.
“என்னடி முகனையே சுத்தி, சுத்தி வாரே…? அவனக் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தனம்னு முடிவே பண்ணிட்டியா….? அது சரி அவன் கிட்ட உன்னோட லவ்வ சொன்னியா...?”
தோழி ரம்யாவின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் வெட்கத்துடன் மழுப்பிச்சென்றாள்.
‘இன்று முகனின் பிறந்த நாள். தனக்கு அவன் கொடுத்தது போலவே பூங்கொத்து கொடுத்து அவனது கைகளை இறுகப்பற்றி ஐலவ்யூ சொல்லி விட வேண்டும்…’ நினைக்கும் போதே மனம் குதூகலமாக இருந்ததை உணர்ந்தாள். மதிய உணவைக்கூட எடுத்துச்செல்லாமல் அவசர, அவசரமாக மகள் கிளம்பியதைப்பார்த்த தாயார் வள்ளி, “என்னடி காதல்ல உழுந்தவளாட்டா ஒரு தவிப்போட கெளம்பரே….? பார்த்துடி. நானும் உன்ற வயசுல உன்னப் போலத் தான் இருந்தேன். இப்ப பார்த்தியா என்ற நெலமைய... ஏதாச்சும் சொத்துப்பத்து இருக்கான்னு விசாரிச்சுக்க. அப்பத்தான் ஒடம்பு ஒத்துழைக்காதப்ப உக்காந்து சாப்பிடவாச்சும் முடியும்” தாயின் பேச்சு காதில் நிற்கவில்லை.
“நீ சும்மா கற்பன பண்ணிக்காத. நீ நெனைக்கிற மாதிரி எதுவும் இல்லை. ஈவினிங் வந்து சொல்லறேன். நான் இப்ப கெளம்பறேன். இன்னைக்கு என்னோட பிரண்டோட பர்த்டே பார்டி இருக்குது. ஹோட்டல்ல சாப்பிடப்போறோம்” நடக்க நடக்க சொல்லியபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி கிளம்பினாள்.
மகள் சற்று தூரம் சென்ற பின்னும் சத்தமாக”ஹோட்டல்ல சாப்பிடப்போறியா…? சைவ ஹோட்டலான்னு பார்த்து சாப்பிடப்போடி…. ஏன்னா இன்னைக்கு அசைவம் சாப்பிடக்கூடாது. பௌர்ணமி…” தாய் சொன்ன சொல் வான்மதியின் காதில் விழாமல் காற்றில் கரைந்து போனது.
“ஹோட்டலுக்கு சாப்பிடப்போகலாமா?” சொன்ன வான்மதியை வியந்து பார்த்தான் முகன்.
“என்கிட்ட பணம் இல்லையே… நாளைக்கு தானே சம்பளம். ஏன் நீ சாப்பாடு கொண்டு வரலையா…?”
“ஆமா…”
“என்னோட சாப்பாட்ட நீ சாப்பிட்டுக்கோ… எனக்கு பசி இல்லை….”
“அ…அதுக்கில்ல... வெளில நாம ரெண்டு பேருமா சேர்ந்து போய் சாப்பிடோணும்னு தோணுச்சு”
“நாம ரெண்டு பேரு மட்டுமா….? கம்பெனில எல்லாரும் தப்பா பேசிடுவாங்க. இங்க கேட்டீன்ல நேத்தைக்கு ஒன்னா பக்கத்துல உக்கார்ந்து சாப்பிட்டதுக்கே வேற மாதிரி பேசறாங்க….”
“வேற மாதிரின்னா….” புரியாமல் கேட்டாள்.
“அ...அது தான்…. அந்த மாதிரி….”
“எந்த மாதிரி....”
“லவ்…. மாதிரி…”
“சொல்லறவங்க சொல்லிட்டு போகட்டுமே... கேட்டா ஆமான்னு சொல்லிடு….” வான்மதியின் ‘ஆமான்னு சொல்லிடு…’ வார்த்தையைக்கேட்டவன் அதிர்ச்சியில் இரண்டு காதுகளையும் கை வைத்து மூடியவாறு அவளுக்கு நேர் எதிராகத்திரும்பி அமர்ந்து கொண்டான்.
எழுந்து சென்று அவனது முகத்தைப்பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி. முகன் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொணாடிருந்தது.
மீண்டும் பக்கத்தில் சென்று அமர்ந்தவள் அவன் கைகளைப்பிடித்து “என்னாச்சு….?” எனக்கேட்டாள். அவன் பேசாமல் எழுந்து சென்றவன் கம்பெனியில் பர்மிஷன் கேட்காமல் கூட பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான். காலையிலிருந்த மனநிலை வான்மதிக்கு தற்போது தலைகீழாக மாறி இருந்தது. அவளாலும் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை. வீட்டிற்கு சென்று விடலாம் என நினைத்து ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தவளின் கையைப்பற்றி அமரவைத்தாள் உடன் வேலை செய்யும் மாலதி.
“நேத்தைக்குத்தான் அவனோட அம்மாவ கோயில்ல பார்த்தேன். ரொப்ப கவலையா இருந்தாங்க. முகனுக்கு சின்ன வயசிலிருந்தே அவனோட அத்தை பொண்ணு மகி மேல வெறித்தனமான லவ். அதுதான் அவனோட தலைக்காதல். ஒரு தலைக்காதல் இல்லை. முதல் காதல். அதை தலைக்காதல்னு சொல்லுவாங்க. தலைச்சம்புள்ளைன்னு முதல் குழந்தைய சொவ்லற மாதிரி. அந்தப்பொண்ணும் கல்யாணம்னு பண்ணினா இந்த ஜென்மத்துல முகனோடதான்னு உறுதியா இருந்திருக்கு. அந்தப்பொண்ணோட அப்பாவான இவனோட மாமா ஒரு குடும்பத்தோட கூட்டு சேர்ந்து பனியன் கம்பெனி வெச்சிருக்கார். தொழில் லாஸ் ஆயிடுச்சு. கடனால குடியிருக்கிற வீடே போற நிலைல கூட்டாளியா இருந்தவங்க நிலத்த வித்து இவரோட கடனையும் கட்டி வீட்ட மீட்டுக்கொடுத்திருக்காங்க. குடும்பத்தோட கடனுக்கு பயந்து தற்கொலை பண்ணிக்க இருந்த குடும்பத்த காப்பாத்தின குடும்பத்தில இருந்த ஒரு பையனுக்கு பிரதிபலனா மாமாவோட பொண்ணு மகிய கேட்க, வேற வழியே இல்லாம ஒத்துகிட்டா. அதக்கேட்டு பைத்தியமாவே ஆயிட்டான் முகன். அப்புறம் அம்மாவுக்காக சாந்தமானவன இங்க வேலைக்கு சேர்த்த வந்த போது உன்னப்பார்த்ததுனால தான் வேலைல சேரவே ஒத்துகிட்டானாம்” மாலதியின் பேச்சு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது வான்மதிக்கு.
“என்னது…. என்னப்பார்த்ததால இங்க வேலைக்கு சேர சம்மதிச்சானா….?”
“ஏன்னா நீ அவனோட மாமம்பொண்ணு மகியோட சாயல்ல இருந்தியாமா….? அதனால தான் நீ வேலை பார்க்கிற செக்க்ஷன்லயே வேலை பார்த்திருக்கிறான். உன்ன ஒட்டி உரசி வேலை பார்த்திருக்கிறான். உன்ன அவனோட கையால தொட்டு சாந்தமானவன், அவனோட மனசால தொட முடியல. ஏன்னா அவனோட மனசு அவன்கிட்ட இல்லை. அதனால தான் நீ லவ்வோட அவன நெருங்கினது தெரிஞ்சதும் பதில் பேச முடியாம வீட்டுக்கு ஓடிட்டான். இன்னும் மகிய முகனால மறக்க முடியல…. ‘இந்த ஜென்மத்துல நீதான்…. இல்லை, இல்லை ஒவ்வொரு ஜென்மத்துலயும்னு நீயே தான் மகி’ னு நெஞ்சுல டாட்டு குத்தியிருக்கிறான்னு அவனோட அம்மா சொன்னாங்க” இதைக்கேட்டு வான்மதி மனமுடைந்து போனாள்.
‘அவனுக்கு மகியோடது தலைக்காதல்னா எனக்கும் முகனோடது தலைக்காதல் தான். ஆனா அது இப்போ ஒரு தலைக்காதலா மாறிடுச்சே….’ நினைத்தவள் கலங்கினாள்.
“சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த கதையா நீ பாட்டுக்கு இருந்தவள முகனப்பத்தி எனக்கே க்ரஸ் இருக்குன்னு பேசப்போயி அதக்கேட்ட நீ காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கே. ஸாரிடி வான்மதி…” சொல்லிச்சென்ற மாலதியை வெறுப்பாகப்பார்த்தாள்.
‘தோழி ரம்யா சொன்ன மாதிரி எந்தப்புத்துல எந்தப்பாம்பு இருக்குன்னு தெரியாம புத்துக்குள்ள கைய விட்ட கதையா நம்ம கத ஆயிடுச்சே. வாழ்க்கைல மறக்க முடியாதவனா ஆயிட்டானே…. எல்லாக்காயமும் ஆறிப்போகும். காதலால் ஏற்படும் காயத்துக்கு மருந்தே அதோட வெற்றிதான். அதற்கு நமக்கு கொடுப்பினை இல்லை’ காலையில் உற்சாகமாக கம்பெனிக்கு வந்தவள் வீட்டிற்கு போகும் போது நடை பிணமானாள்.
“என்னடி ஆச்சு…. ஏன் டல்லா இருக்கே….?” தாயின் பேச்சு அவளை கடுப்பாக்கியது.
“வெங்காயமாச்சு….” என்றாள்.
“ஆமாடி…. அது தெரியாதா உனக்கு…? ஒரு பெரிய வெங்காயத்த எடுத்து அதோட தோலை உறிச்சுப்பாரு. கடைசில ஒன்னுமிருக்காது அப்படித்தான் எல்லா விசயமும்….”
தாயை இது வரை தற்குறி என நினைத்துக்கொண்டிருந்தாள். பெரிய தத்துவ ஞானி என இப்போது புரிந்தவள் ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |