தற்கால நாகரீகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,573 
 
 

(இதற்கு முந்தைய ‘அறிவும் மதமும்‘ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

சுவாமி விவேகானந்தர் “அறிவு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பலனாக நூற்றுக்கணக்கான விஞ்ஞான சாஸ்திரங்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைகளின் பயனாக சொல்பமானவைகள் அதிகமாக உள்ளதை அடிமையாக்கிவிட்டன.” என்றார்.

அதாவது செய்யப் பட்டிருக்கிற நல்லது எல்லாவற்றையும் என்பதுதான் ஏற்கப் பட்டிருக்கிறது. போலியான தேவைகள் புதுசாக உண்டுபண்ணப் பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஏழையும் அவனிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ தன்னுடைய தேவைகள் நிறைவேறிவிட வேண்டும் என்றே ஆசைப்படுகிறான். அப்படி நிறைவேறாதபோது போராடுகிறான். போராட்டத்தில் இறந்தும் விடுகிறான். இதுதான் நாம் கண்ட பலன்.

துன்பப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளும் வழி அறிவால் இல்லை. இதயம் மூலம்தான். இந்த ஏராள முயற்சிகள் எல்லாம் மக்களை இன்னும் தூய்மையும், பதமையும், அடக்கமும் உள்ளவர்களாக ஆக்க முடிந்திருந்தால், இன்று வைத்திருப்பதைவிட ஆயிரம் பங்கு அதிக ஆனந்தம் கொண்டதாக இருக்கும்!

தற்கால நாகரிகத்தின் விளைவுகள் பற்றி பிரபல கவி டென்னிஸன் பின் வரும் வரிகளில் பொருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்:

“விஞ்ஞானம் நகர்கிறது ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு;

ஆனால் மெதுவாக ஊர்ந்து, மெதுவாக வருகிறார்கள், பசித்தோர் சிங்கம் கிட்ட தவழ்ந்து வருவது போல,

தலையசைப்பவனை பயங்கரமாக உறுத்துப் பார்க்கிறது.

மெதுவாக அவியும் தீக்குப்பின் இமை சிமிட்டுகிறது.

அறிவு வருகிறது ஆனால் ஞானம் தாமதிக்கிறது.

நான் கடற்கரையில் தாமதிக்கிறேன். தனி மனிதன் தேய்ந்து போகிறான்

உலகமும் இன்னும் அதிகமாக அதிகமாக…”

ஆமாம், உண்மைதான். அறிவு வருகிறது; ஞானம் தாமதிக்கிறது.

மகாபலி என்ற சக்ரவர்த்தி இருந்தான். உலகம் முழுதும் இருந்த மானிடர்களையும், தேவர்களையும், அசுரர்களையும் வென்றுவிட்டான். இருப்பினும் அவன் இதயம் திருப்தியடையவில்லை. ஜெயிக்க இன்னும் ராஜ்யங்கள் எதுவும் இல்லையா என்று தன் மந்திரியைக் கேட்டான்.

“இன்னும் ஒரேயொரு ராஜ்யம் இருக்கிறது, அந்த ஒன்று உன் அகராஜ்யம்தான்…”

உலகம் முழுவதையும் அடைந்துவிட்டு, தன் ஆத்மாவை இழந்து விடுவதில் மனிதனுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று யேசுதேவன் கூறியிருக்கிறார். இந்தத் ‘தன்னை வெல்லுதல்’ எல்லாவற்றிலும் ரொம்பச் சிரமமானது. இதற்கு, தலைக்கும் இதயத்திற்கும் இடையே, குறையற்ற அறிவுக்கும், சர்வவியாபகமான அன்புக்கும் இடையே ஒரு பரிபூரண இசைவு தேவைப்படுகிறது.

ஆண்டவனே, அறிவு ஒளி, பேரின்ப மயமானவனே; என் இதயத்துக்குள் உறைபவனே; காட்டு யானையை பழக்கி நமக்கு கீழ்படியச் செய்வதும்; கரடி, புலி வாயைக் கட்டுவதும்; மிருகராஜன் சிங்கத்தின் முதுகில் சவாரி செய்வதும்; விஷ நாகத்துடன் விளையாடுவதும்; பலவித உலோகங்களைத் தங்கமாக மாற்றி அதை வைத்து வாழ்வதும்; யாரும் அறியாமல் உலகத்தில் உலாவுவதும்; தெய்வங்களையும் நமக்கு அடிமையாக்குவதும்; சாஸ்வத இளமையை அனுபவிப்பதும்; வேறொருவர் உடலுள் புகுவதும்; நீர் மேல் நடப்பதும்; தீ மீது நிற்பதும்; ஒப்பிட முடியாத சக்திகளை பெருக்குவதும் ஆகிய காரியங்கள், இந்த மனதை அடக்கி வசப்படுத்தி பேரின்ப சாந்தி நிலையை அடையச் செய்யும் முயற்சியை விட, வெகு எளிதானவையாகும் என்று ஒரு தமிழ் பக்திக் கவி பாடியிருக்கிறார்.

மனதை வெல்லுதல்; ஆத்மா அல்லது கடவுளை உணர்தல்; உலகம் தழுவிய அன்புக்குள் தன்னை இந்தச் சிறிய மனிதன் அமிழ்த்திக் கொள்ளுதல், இந்தப் பிரபஞ்சத்தை விட மஹா பெரிய பிரம்மனாக பிரபஞ்சத்தின் நாயகனாக தானே ஆகுதல், முடிவற்ற அவரவர் தேகத்துக்குத் தக்கபடி எல்லா உயிர் ஜந்துக்களுக்குள்ளும் மறைந்து இருக்கும் பிரபஞ்சம் முழுவதும் உபயோகமாக இருப்பதனாதல் – அதுதான் மானிடத்தின் தலை சிறந்த லட்சியம். எல்லாவற்றிலும் மேம்பட்ட நாகரீகம்.

நெஞ்சத்துக்குப் போதித்தல், அன்பை பயிர் வளர்த்தல், சுயநலத்தை அறவே அழித்தல் இவையே இந்த மேலான பேரின்பகரமான நாகரீகத்தைப் பெற அத்தியாவசியமான சாதனங்கள் ஆகும். இதயத்தைப் பண்படுத்தாமல், வேதாந்தத்தில் தன்னை நிறைவு படுத்திக் கொள்ளும் அறிவுப் பாங்கான மதத்தின் உதவி இல்லாமல், இதயத்தின் புனித, காப்பாற்றும் செல்வாக்கு மூலம் அறிவோ விஞ்ஞானமோ ஞானமாக விருத்தியாகாமல், இந்த உலகத்தில் உள்ள எல்லா ரயில்வேக்களும்; இதுவரை கட்டப்பட்டிருக்கும் இனியும் கட்டப்பட இருக்கும் உற்பத்திச் சாலைகளும், நீராவிக் கப்பல்களும் மனிதன் இப்போது இருப்பதைவிட ஒரு இம்மியளவு கூட மேலானவனாக அவனை ஆக்க முடியாது.

தற்கால நாகரீகம் பற்றி வேதாந்தத்தின் நிலை, கல்யாணம் சம்பந்தமாக எத்தகையதோ அதே போன்றுதான். மணம் அவசியம் என நினைப்பவர்கள் மணந்து கொள்ளட்டும்; ஆனால் புலன் இன்ப வசப்பட்டு இருக்கக் கூடாது.

அது நல்லது வளர, சந்ததி வளர்ச்சிக்கானதாக இருத்தல் வேண்டும். (ஹிந்துக்கள் மணங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களின் அர்த்தம் இதுதான்). உண்மையான பற்றறுத்தலுக்கு சாத்தியம் ஆகச்செய்ய மேலான ஒரு வாழ்க்கைக்கு தயார் படுத்தக் கூடியதாக கல்யாணங்களைப் பற்றி நினைக்க வேண்டும்.

மணம் அவசியமே இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அவர்கள் மணந்துகொள்ள வேண்டியதே இல்லை. பற்றறுத்தல், அதாவது மனத்துறவு கொள்ளுதல் ஒரு பொதுவான லட்சியம்.

முடிவாக, தற்கால நாகரீகம் ஒருதலைப் போக்கானது. ஆனால் அது பூர்ணத்துவம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அதன் முக்கியமான குறைபாடுகள் லோகாயத வசதிகளைப் பெற்று அடையும் இன்பமே முடிவானது என்ற அதன் தற்போதைய லோகாயத மனப்பாங்கும் தக்கதொரு லட்சியம் இல்லாததும்தான்…

இந்த நாகரீகம் இன்னும் மேலான, உண்மையான ஒரு நாகரீகத்துக்கு நம்மைத் தயார்ப் படுத்துவதுதான். வேதாந்தத்தின் நோக்கம் அதை அழிப்பது அல்ல. மாறாக அதை செம்மைப்படுத்தி மேன்மைப்படுத்துவதுதான். அதன் போக்கைத் திருத்தி அதற்கு ஒரு லட்சியத்தை தேடிக் கொடுப்பதுதான்.

இதைப் புரிந்து கொண்டால் உலகம் இன்ப மயமானதாக இருக்கும். இதற்கு ஆரம்பமாக நம்முடைய வாழ்வியல் முறை casual லாக இல்லாமல். மிகவும் conscious ஆக மாற்றிக்கொள்ள வேண்டும்; reactive முறையில் இல்லாமல் proactive முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

முயன்றால் இது சாத்தியமே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *