தர்மம்




சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது.
மனைவியை இழந்த கணவன், தன் ஒரே மகள் காயத்ரியை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களும் கற்றுத் தருகிறார்.
காயத்ரி வயசுக்கு வந்ததும், தந்தைக்கு அவள் திருமணம் பற்றிய பொறுப்பு வந்து விடுகிறது. ஒருநாள் அவர் காயத்ரியிடம் திருமணப் பேச்சை எடுத்தபோது, “அப்பா நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்… எனக்குத் திருமணமே வேண்டாம்…” என்று அடித்துச் சொல்லி விடுகிறாள்.
பிறகு வேறு வழியில்லை என்பதால், நில புலன்களை எல்லாம் விற்று, “மகளே, ஒருவேளை திடீரென எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, பிறரை உதவிக்கு நாடாமல் நன்றாக வாழ்ந்து கொள்…” என்று ஏற்பாடு செய்து ஒரு பெரிய வீட்டையும் மகளுக்காக வாங்கிக் கொடுத்துவிட்டு, சில வருடங்களில் தந்தை இறந்தும் விடுகிறார்.
அதன் பிறகு காயத்ரி தன் பணி இறை சேவை மட்டுமே என்று நினைத்து, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாகத் தன் வீட்டில் தங்க இடம் தருவதும், உணவு அளிப்பதும் என அறப் பணிகளைச் சிறப்பாகச் செய்கிறார்.
அவளது இரக்க குணத்தைப் புரிந்துகொண்ட பலர், மருத்துவ உதவி; கல்வி உதவி என கேட்க, இவளும் நிறைய உதவிகள் செய்கிறாள். மெல்ல மெல்ல அவளின் தயாள குணம் காசி முழுவதும் பரவுகிறது.
தர்மமாக தன்னிடம் இருப்பவைகளைக் கொடுத்துக் கொடுத்து ஒரு கட்டத்தில் வறுமை காயத்ரியை சூழ்ந்து கொண்டது. இது புரியாமல் பலரும் அவளிடம் தொடர்ந்து உதவிகள் கேட்க, வேறு வழியின்றி கடன் வாங்கித் தர்மம் செய்யத் தொடங்குகிறாள்.
ஒரு கட்டத்தில் பலர் அவளுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டு, இதுவரை கொடுத்த கடனை திருப்பித் தருமாறு அவளை நெருக்குகின்றனர். அதனால் காயத்ரிக்கு நெருக்கடி அதிகமானது.
காயத்ரி மன நிம்மதிக்காக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்கிறாள். “இறைவா, தர்மம் செய்ய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி கடன் வாங்கித் தர்மம் செய்துவிட்டேன்… இப்போது நான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. நான் எப்படி இதைச் சமாளிப்பேன்?” என்று மனமுருக வேண்டியபோது, இதைப் பார்த்த ஒரு பழுத்த மஹான், “மகளே, கவலைப்படாதே. காசியில் இருக்கும் இந்த தனவானைப் போய்ப் பார்… நல்லதே நடக்கும்” என்று ஒரு தனவானின் முகவரியைச் சொல்கிறார்.
மஹான் கூறியதால் அன்று மாலையே அந்தத் தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அவர் காயத்ரியைப் பற்றி ஏற்கனவே நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். ஆனால் அவளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. உள்ளே வரச்சொல்லி அமர வைக்கிறார்.
அவரைச்சுற்றி பல ஊர்ப் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். “பெண்ணே உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்கிறார்.
காயத்ரி தயங்கி தயங்கி தனக்கு ஏற்பட்டுள்ள கடனை விவரித்துவிட்டு, “தாங்கள் எனக்கு ஐந்து லட்சம் பண உதவி செய்தால், காசி விஸ்வநாதர் ஆணையாக அதைச் சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்தி கடனை அடைத்து விடுகிறேன்” என்கிறாள்.
தன்னைச் சுற்றிலும் ஊர்ப் பெரியவர்கள் வேறு அமர்ந்திருக்கிறார்கள். “தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும். தவிர தன்னைப் பற்றிய மதிப்பீடும் குறையும்.
எனவே மிகச் சாமர்த்தியமாக, “பெண்ணே உன் தந்தை உனக்கு செல்வத்தை சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை தாரளமாக தர்மம் செய்துவிட்டாய். அதைப் பாராட்டுகிறேன். ஆனால் உனக்கென்று கொஞ்சம் வைத்துக்கொள்ள வேண்டாமா? எந்த தைரியத்தில் கடன் வாங்கித் தர்மம் செய்தாய்? எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித்தர முடியும்?
மேலும் நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? எதை நம்பி நான் இவ்வளவு பெரிய தொகையை உனக்குத் தரமுடியும்?”
“அய்யா, தாங்கள் கூறுவது உண்மைதான். ஏதொ ஆர்வத்தில் தர்மம் செய்துவிட்டேன்… அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. கோடி, கோடியாக தங்களிடம் செல்வம் இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கடனாகக் கேட்கிறேன். உதவி செய்யுங்கள்.”
“மன்னித்துவிடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதையும் கொடுப்பதில்லை…”
“தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட நான் கட்டியதுதான். இந்த நீரை தினமும் மக்களும், விலங்குகளும் பயன் படுத்துகிறார்கள். இவையெல்லாம் புண்ணியம் என்று தாங்கள் அறிவீர்கள். இந்தத் திருக்குளத்தில் நாளைக் காலை முதல், எவரெல்லாம் நீர் பருகுகிறார்களோ, அதனால் ஏற்படக்கூடிய புண்ணியம் முழுவதையும் தங்களிடம் அடகு வைக்கிறேன்… ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் மற்றும் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்போது உங்களிடம் வந்து சேர்கிறதோ, அப்போது நான் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்துவிட்டதாக வைத்துக் கொள்ளலாமா?”
தனவான் கிண்டலாகச் சிரித்தார்.
“பெண்ணே, பாவ புண்ணியங்களை எப்படி அடகு வைப்பாய்?”
“………………………”
“ஒரு பேச்சுக்கு நீ கூறியபடி வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது, கண்ணுக்குத் தெரியாதது. அதை எப்படி நான் கணக்கு வைத்துப் புரிந்து கொள்வது?”
“அது மிகச் சுலபம்… புரிந்துகொள்ளும் படியான ஒரு ஏற்பாட்டை நான் செய்கிறேன்.”
அவரை எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையில் இருக்கும் கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, “ஈசனே இந்தத் திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்போது என் கணக்கில் இருந்து புண்ணியங்கள், அசலும் வட்டியுமாக இவர் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்போது தாங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்…”
அவளின் அதீத பக்தியால் அந்தக் கருங்கல் உடனே அங்கிருந்து நகர்ந்து நீரின் அடியில் சென்று மறைந்தது.
காயத்ரி தனவந்தரிடம், “இது வெறும் கருங்கல் அல்ல. சாஷ்ஷாத் சிவபெருமான்… நாளைக் காலை சூரிய உதயத்தில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்… புண்ணியக் கணக்குகள் தீர்ந்ததும் இந்தச் கருங்கல் சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்… “
“அம்மா, புண்ணியத்தை அடகு வைப்பதைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் எப்படிக் கருங்கல் மிதக்கும்? யாராவது கேட்டால்கூட நகைப்பார்களே?”
“இதைக் கல் என்று பார்க்காதீர்கள்… இது பகவான்.”
தனவான் யோசிக்கிறார். ‘இவளோ புண்ணியவதி! நம்மைச்சுற்றி ஊர்மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தரமாட்டேன் என்றால் நம் புகழுக்கு இழுக்கு… தவிர இவள் கேட்பது சிறிய தொகை. ஒருவேளை சிவலிங்கம் மிதந்தால், இவளின் தெய்வீகத்தை உணரும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்…’
காயத்ரி கேட்ட தொகையை அப்போதே தருகிறார்.
அதைப் பெற்றுக்கொண்டு, கடன்களை உடனே அடைக்கிறாள் காயத்ரி.
நாட்கள் நகர்கின்றன…
தனவந்தர் தன்னுடைய வேலையாட்களிடம் குளத்தை இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணிக்கச் சொல்கிறார்.
ஒரு பெளர்ணமி தினத்தன்று காலையில், காசிவிஸ்வநாதர் ஆலய சினையான காராம் பசுமாடு ஒன்று குளத்திற்கு வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, திடீரென குளத்திற்கு உள்ளிருந்து சிவன் பீறிட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்து விடுகிறார்.
இதைப் பார்த்து மிரண்ட வேலையாட்கள் ஓடிப்போய் தனவந்தரிடம் சொல்கிறார்கள்.
அங்கே கம்பீரமாக வெளியே வீற்றிருந்த கருங்கல் சிவனைப் பார்த்த தனவந்தர் பக்தியில் உருகுகிறார். கூட்டம் கூடுகிறது. மக்கள் பய பக்தியுடன் சிவனைக் கும்பிடுகிறார்கள்.
காயத்ரி அந்த இடத்திற்கு பரவசத்துடன் ஓடி வருகிறாள்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சிக்குப் பிறகு, தனவந்தர் காயத்ரியின் பக்தியை மரியாதைகளுடன் மெச்சி, அவளை தன்னுடைய ஒரே மகளாகத் தத்து எடுத்துக்கொண்டு, தன்னுடைய அவ்வளவு சொத்துக்களையும் காயத்ரி பெயரில் எழுதிவைத்துவிட்டு சில வருடங்களில் இயற்கையும் எய்துவிடுகிறார்…
காயத்ரி மறுபடியும் தன்னுடைய தர்ம காரியங்களை விடாது தொடர்கிறாள்.