தமிழ் நாட்டு அரசியல்!





அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஷியாமை கல்யாணம் செய்து கொண்டு,அங்கேயே செட்டிலாகி விட்ட தன்னுடைய ஆருயிர் தோழி சிந்துஜா பத்தாண்டுகளுக்குப்பிறகு, இன்றுதான் சொந்த மண்ணை மிதிக்கிறாள். அவளை வரவேற்க விமான நிலையத்திற்கே போயிருந்தாள் ஆர்த்தி.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்த்தியின் கார் சக்தி நகரிலிருந்த ஆர்த்தியின் பிரமாண்டமான பங்களாவிற்குள் நுழைந்தது. தோழியின் பெட் ரூமிற்குள் நுழைந்த சிந்துஜா ஆச்சரியப்பட்டுப் போய் விட்டாள்!.‘நியூ ஜெர்ஸியில்’உள்ள தன் பெட்ரூமை விட அதிக நவீன வசதிகளோடு அது இருந்தது.
தனிமை கிடைத்தவுடன், தோழிகள் இருவரும் மனம் விட்டு, கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
வசதியான குடும்பத்தில் பிறந்த ஆர்த்திக்கு அந்தக் காலத்திலேயே கூட்டம் பிடிக்காது. அவள் இயற்கையாகவே அதிகம் யாரிடமும் பேச மாட்டாள். அவள் சுபாவம் சிந்துஜாவுக்கு நன்கு தெரியும்.அப்படி இருக்க, அவளே ஒரு கட்சி சார்பாக தேர்தலில் நின்று ஜெயித்து மாநகராட்சித் தலைவராகவும் நம் ஊரில் பதவி வகிக்கிறாள் என்பதைக் கேள்விப் பட்டு ஆச்சரியப்பட்டுப் போய் விட்டாள்.
“உன் சுபாவத்திற்கு இந்தப் பதவியெல்லாம் ஒத்து வராதேடி?……”
“ஆமாண்டி!……இந்தப் பதவி எனக்குப் பெரிய தொல்லையா இருக்கு…..பைப்பிலே தண்ணீ வல்லே.!குப்பைவண்டிக்காரன் வரலே..தெரு லைட் எரியலே.. என்று காலங்காத்தாலே பங்களா கேட் வாசலிலே வந்து தினசரி ஒரு தரித்திர கும்பல் வந்து நிக்குது..எனக்கு ஒரே எரிச்சலா இருக்கு!…..அதை எங்க வீட்டுக்காரரிடம் சொல்வேன்!.”
“அதற்கு அவர் என்ன சொல்வார்?….”
“நீ பேசாம உன் ரூமிலேயே இரு..அவங்ககிட்டெ நான் பேசிக் கொள்கிறேன்!..உனக்கு இந்தப் பதவி கிடைக்க நான் ஐம்பது லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன் என்று சொல்வார்!”
“அப்படி எதற்கு அவ்வளவு செலவு செய்து எதற்கு இந்தப் பிடிக்காத பதவி?.”…”
“அதை ஏன் கேட்கிறே? என் கணவர் ஒரு மிகப் பெரிய காண்ட்ராக்டர்.பல கோடி ரூபா காண்ராக்ட்டை எல்லாம் நம்ம ஏரியாவில் அவர் தான் எடுத்துச் செய்கிறார். நான் ஆளும் கட்சி மேயராக இருப்பதால் அரசு அதிகாரிகளிடமெல்லாம் அவர் பேசுவதற்கு என்னுடைய இந்த பதவி தான் ரொம்ப உதவியாக இருக்காம்!……”.
அமெரிக்க வாசியான சிந்துஜாவுக்கு அது தமிழ் நாட்டு அரசியல் என்று புரியவில்லை!