தப்புக் கணக்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 2,199 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று எப்படியும் நான் அவளிற்கு கூற நினைத்ததைக் கூறி விடவே வேண்டும். 

மேசை லாச்சிகளைத் திறந்து காசுப்புத்தகம் பேரேடு மற்றும் ‘பைல்’களை எடுத்து மேசையில் அடுக்குகிறேன். ‘பென்சில்,’ ‘பேனா,’ ‘கல்குலேட்டர்,’ ‘கோலிங் பெல்’ என ஒவ்வொன்றாகப் பரப்புகிறேன். நேரம் ஒன்பது என்பதற்கு அறிகுறியாக அடுத்த தெரு ‘பிளாஸ்டிக் கம்பனி சங்கு ஒலித்தோய்கிறது. வழமையில் இந்நேரமெல்லாம் வந்து ‘குட்மோணிங்’ சொல்லிவிட்டு ‘பாத்ரூம்’ பக்கம் சென்று விடும் அவளை இன்று மட்டும் இன்னமும் காணோமே? 

நான் பணிபுரியும் இந்த ஸ்தாபனம் அப்படி ஒன்றும் பெரிதானதல்ல.எங்கள் ‘பொஸ்’, சகலதுக்கும் பொறுப்பாக நான், எனக்கு உதவியாளராக ‘புக்கீப்பரான’ அவள், இன்னும் ஒரு ‘டைப்பிஸ்ட் கிளார்க்’ (அவளது பெயர் கௌசிகாவோ அல்லது கௌரிகாவோ என்பதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருப்பதால் பொதுவாக ‘மிஸ்’ என்றே அழைத்து வருகிறேன்) மற்றும் உள், வெளி வேலைகளைக் கவனிக்க செந்தில், உபாலி என இரு ஆபிஸ் பையன்கள். மொத்தம் ஐவருக்கும் மாதச் சம்பளமாக முப்பத்தோராம் திகதியோ, அல்லது முப்பதாம் திகதியோ ‘பொஸ்’ பதினையாயிரம் ரூபா காசோலையில் கையெழுத்திட்டு என்னிடம் தருமளவிற்கு, இவ்வளவுக்குள் தான் எங்கள் வட்டம். 

இந்த ‘ரேடிங் கம்பனி’யின் காரியாலயத்திற்கு நான் பணிபுரிய வந்தது ஒரு இருபத்தைந்தாம் திகதி என்பது மட்டும் எனக்கு நல்ல ஞாபகம். ஆனால், அது மாசியிலா, பங்குனியிலா என்பது அவளைக் கேட்டுத்தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இப்பேர்ப்பட்ட விவகாரங்கள் உட்பட சகல விடயங்களிலும் சிறந்த ஞாபகசக்தி அவளிற்கே உண்டு. நான் பதவிக்கு வந்த முதல் நாள் நிகழ்ச்சி மட்டும் எனக்கு நல்ல ஞாபகமாக இருக்கிறது. என்னை தன் முன்னாலிருத்தி விட்டு ‘பொஸ்’ தனதறைக்கு இந்த நால்வரையும் அழைத்து ஒவ்வொருத்தராக எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஸ்தாபன நடைமுறைகளையும், தானில்லாத வேளைகளில் பொறுப்புகள் என் கைவசமே எனவும் கூறியவர் என்னை மணமகன் போல என் இருக்கை வரை அழைத்து வந்ததும், அவளை மட்டும் மீண்டும் அழைத்து “சில நாட்களுக்கு இவருக்கு ஹெல்ப் பண்ண வேண்டும்” எனக் கூறியதும் “ஓகே சேர்” என அவள் பவ்வியமாக உரைத்ததும் என் கண்களில் மறக்கப்பட முடியாத திரைப்பட விருந்துகள். 

வாரத்தில் எமக்கு ஐந்தரை நாட்கள் வேலை. ஆனாலும் எனக்கு ஏறத்தாழ எல்லா நாட்களுமே வேலையிருக்கும். வேலையினைப் பொறுப்பேற்ற முதல் நான்கைந்து கிழமைகளும் அவளும் தனது லீவில் அரைநாளை எனக்காகத் தியாகம் பண்ணிவந்ததும், சீறாமல் சினக்காமல் சகல நடைமுறைகளையும் எனக்கு எடுத்தியம்பிய அவளது பண்பும், பாங்கும், எனக்கு அவள்மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. மற்றைய மூவரையும் விட அவளுடனேயே நான் அதிகம் கதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததும் அவள்மீது நான் அந்நியோன்னியமாகிவிட இன்னொரு காரணமாக அமைந்தது. 

வேலைக்கு வந்த மூன்றாம் மாத முடிவிலாக இருக்க வேண்டும்.”ஒரு மணியாச்சு சாப்பிடக் கூட போகாமல் அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு!”, “என்ன மூட் அவுட் ஆக இருக்கிறீங்க சுகமில்லையா? 

படல் திரட்டுமா?” என்றெல்லாம் கேட்குமளவிற்கு அவள் என்னுடன் பழக ஆரம்பித்து விட்டாள். 

“உங்களுக்கென்ன வீட்டிலை ‘பேறன்ஸ்,’ ‘சிஸ்ரேஸ்,’ ‘பிறதேர்ஸ்’ என குடும்பமே கொழும்போடையிருக்கு. எனக்கு அப்பிடியா?” என்பேன். “ஓ! சூட்டிக்கு அம்மா ஞாபகம் வந்திடுச்சா?” என்பாள். “ஏன் உங்க அம்மாவையும், தங்கச்சியையும் கொழும்புக்கு ‘கோல்’ பண்ணுங்களன்?” என்றாள் இன்னொரு நாள். “குடும்பத்தைக் கூப்பிட்டுட்டு கொழும்பிலை எங்கை கோட்டை றெயில்வே ஸ்ரேஷனிலையா இருப்பது?”என்றேன். 

அன்றொரு வெள்ளிக்கிழமை. “உங்களுக்கு லஞ்ச் இண்டைக்கு என்ரை பொறுப்பு” என்றாள். “ஏன் இண்டைக்கு உங்க பிறந்த நாளா” என்றேன். “அப்பிடி எதுவுமில்லை… நீண்ட நாளா கடையிலை சாப்பிடுறீங்களே. ஒரு ‘சேஞ்சுக்கு’ இண்டைக்கு எங்கட வீட்டு சாப்பாட்டையும் ஒருக்கா ‘ரேஸ்ட்’ பண்ணிப் பாருங்களேன். . .” என்று கூறினாள். 

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. “நீங்கள் என்ன நம்பர்” என்று கேட்டேன் நான் ஒருநாள். “என்ன நீங்கள் எண்டு எனக்கு பெரிய மரியாதை தரவேண்டியிருக்கு?” என்றாள் பதிலாக! “அப்ப என்னடி என்று அழைக்கலாமா?” என்று கேட்டேன். “அது உங்க இஷ்டம்” என்றாள். 

“என்ன கழுத்திலை சுழுக்கா?” என்றாள் இன்னொரு நாள். “எப்படி தெரியுது பார்க்க?” என்று கேட்டேன். “கண்றாவியா இருக்கு” என்றவள் ஆபீஸ் பையன்களில் உபாலி என்பவனை அழைத்து ஏதோ ஒரு ‘பிளாஸ்டர்’ வாங்கி வரும்படி தனது ‘ஹாண்ட் பாக்’கிலிருந்து ஒரு பத்து ரூபா தாளை எடுத்து நீட்டினாள். “என்னுடலுக்கு ஒத்தடம் நீ தரலாம். என் உள்ளத்திற்கு ஒத்தடம் யார் தருவார்?”என்றேன். “பெரிய கண்ணதாசன் என்ற நினைப்பு” என்ற வசனம் பதிலாக வந்தது. 

மற்றுமொரு நாள் அவள் இப்படிக் கேட்டாள். “மாசா மாசம் ஐயாயிரமோ ஆறாயிரமோ சம்பளம் எடுக்கிறீங்க. . .. இப்படிப் பாசமலர் பட பாணி ‘றவுசரும்’, ‘பாட்டா சிலிப்பருமா’ போடுவாங்க? செந்தில், உபாலியைக் கூடப் பாருங்க! எப்பிடி ‘றெஸ்’ பண்ணுறாங்க எண்டு.” அதற்கு நான் “ஆக்களின்ரை பதவியும் அந்தஸ்தும் போடுகிற உடுப்பிலையா இருக்கு? இது என்னோடை பாணி இதை மாற்ற எவராலும் முடியாது?” என்றேன். “என்னால் கூடவா?”என்றாள் முகத்தை கோணலாக்கியவாறே. 

அவளுடன் பழக ஆரம்பித்து ஆறு மாதங்களின் பின்.. அண்மையில் ஒருநாள் “எனக்கு இலங்கையை விட்டுச் செல்ல ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு” என்றேன். “என்ன சொல்லுறியள்” என்றாள். “விரைவிலை எனக்கு நீ பிரியாவிடை தர வேண்டியிருக்கும்!” என்றேன் வேறொரு வழியாக. அவள் கண்களில் ஒரு நீர்ப்படலம் மிதந்து வந்தது. “என்ன நடந்தது உனக்கு?” என்றேன். “ஏனோ தெரியல்ல…… காலையிலை இருந்தே கண்கள் கலங்குது…… தடிமன் குணமோ தெரியல்லை”.. என்றவள், “ஏன் அப்பிடி எந்த நாட்டிற்குப் போகப்போறீங்க?” என்றாள். நான் மௌனமானேன். “அப்பிடி எதுவுமே செய்திடாதீங்க. அதுக்கப்புறம் எனக்கு விசரே வந்திடும்” என்றவள் தேநீர்க் குவளையுடன் ‘பாத்ரூம்’ பக்கம் சென்றுவிட்டாள். 

இந்தச் சம்பவம் நிகழ்ந்த இரண்டொரு நாட்களின் பின்…. நாமிருவர் மட்டுமே தனியாக இருந்த ஒரு காலைப் பொழுதில், “எங்கள் இரண்டு பேரிற்கு மிடையிலை எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா?” என்றாள். “அப்படி என்ன பெரிய ஒற்றுமையைக் கண்டுவிட்டாய்?” என்றேன். “என் பெயர் காவேரி, மூன்றெழுத்து. உங்க பெயரும் மூன்றெழுத்து. அன்பு, பாசம், கருணை, நேசம் இவைகளும் மூன்றெழுத்து… இதைக் கவனித்தீர்களா?” என்று கேட்டாள், கையால் மேசைமீது கிடந்த காகிதத்தில் கோலமிட்டவாறே. “ஏன், பிரிவு, சோகம், அழிவு, நாசம் இவைகளுக்குக் கூடத்தான் மூன்றெழுத்து” என்றேன். “போடா விசரா” என்பது பதிலாக வந்தது. 

இந்த சம்பவங்களின் பின்பு தான் இனியும் காலந் தாழ்த்தாது நானாவது முதலில் ‘அதை’ அவளிற்குக் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, இன்று எப்படியும் கூறியே விடவேண்டும் என்ற தீர்மானத்திற்கும் வந்திருக்கிறேன். 

நேரம் ஒன்பதரையைத் தாண்டி விட்டது. ‘டைப்பிஸ்ட் கிளார்க்’கைப் பார்த்தேன். கேள்விக்குறியொன்றுடன் அவவும் என்னை நோக்கினா. “என்ன இண்டைக்கு உங்கடை காயைக் காணேலை?” என்று கேட்குமாப் போலிருந்தது அந்தப் பார்வை. பின்னால் உபாலி எதையோ ‘பைல்’ பண்ணிக் கொண்டிருந்தான். முன்னால் செந்தில் ‘பொஸ்’சின் ‘றாமை’ துப்புரவாக்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தேன். பத்துமணிக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. “ஏன் மிஸ் இண்டைக்கு காவேரி வரமாட்டாவா?” என்றேன் ‘டைப்பிஸ்ட்டைப் பார்த்தவாறே. “ஏன் உங்களுக்குத் தானே தெரிய வேணும்” என்பது பதிலாக வந்தது. கேட்காமலே விட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். வந்த எரிச்சலை எவர் மீதாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போலிருந்தது. தூசி துடைத்து முடித்து விட்டு வளமாக செந்தில் வந்து கொண்டிருந்தான். “என்னப்பா செந்தில் இன்னும் ‘ரீ பிறிப்பயர்’ பண்ணேலையா?” என்றேன். “ரீக்கு லக்ஸ்பிறே தீர்ந்து போச்சு சேர்!” என்றான். ‘பெற்றிக்காஷில்’ இருந்து எடுத்து ஒரு நூறு ரூபாத் தாளை நீட்டியவாறே, “ஏன் இதை முன்னமே சொல்லித் தொலைக்கக் கூடாதா?” என்றேன். “சேருக்கு இண்டைக்கு ‘மூட் அவுட்’ போலை” என்று கதவுக்கு அப்பால் சென்று, அவன் ‘முணு முண ‘த்துக் கொண்டது ‘டைப்பிஸ்டிற்கும்’ கேட்டிருக்கலாம். 

வானொலி காலைத் தமிழ் வர்த்தக நிகழ்ச்சிகள் நிறைவுற்றதற் கான சாத்தியக் கூறுகள் அடுத்ததாயுள்ள ‘கொமினிக்கேஷனிலிருந்து’ ஒலித்தது. எவரோ கதவடியில் வரும் ஓசை கேட்டது. நிமிர்ந்து பார்க்கிறேன். அவள்தான். திருமணப் பெண்ணாக மெல்ல. . . மெல்ல.. அடியெடுத்து காவேரியேதான் வந்து கொண்டிருந்தாள். என்னையறியாமலே என்னுள் ஒரு உற்சாகம் ஊற்றெடுத்தது. “குட்மோணிங்” என்றவாறே என்னைக் கடந்து பின் சென்றாள். “குட் ஆவ்ரநான்” என்றேன் என் கடிகாரத்தைப் பார்த்தவாறே. “கோயிலுக்குப் போட்டு வந்தன். அதுதான் கொஞ்சம் ‘லேட்’டாப் போச்சு” என்று கூறிக் கொள்வதும், என் காதில் வந்து விழுந்தது. 

“இனி ரீ தேவையில்லைத் தானே?” என்றான் பில்லையும் மீதிப்பணத்தையும் நீட்டியவாறே செந்தில்.”என்ன நீ சொல்லுறாய்?’ என்றேன். “இல்லை சேர் ‘லஞ்ச் அவர்’ ஆகுது அதுதான்” என்றவன், மேலும் என் கண்களில் படாது பின்பக்கமாகச் சென்றுவிட்டான். 

திரும்பி, “இங்கை ஒருக்கா வாங்கோ. இந்த ‘காஷ்புளோ இஸ்ரேட்மெண்டை ஒருக்கா ‘பிறிப்பயர்’ பண்ணித் தாங்கோ” என்றேன். பேனையும் ‘பைலுமாக’ வந்து என் முன் அமர்ந்து கொண்டாள். “அதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லவேணும்” என்றேன். “நான் கூட ஒரு ‘நியூஸ்’ உங்களுக்குச் சொல்ல வேணும்” என்றாள். முதலில் சொல்வது யார்? ஒரு வேளை இவள் ‘அதையே’ சொல்ல வருகிறாளா? ஆண்டவா! அதற்குள் நான் முந்திக் கொள்ள வேண்டுமே? 

“வயதுக்கு மூத்தவன் நான். அதனாலை முதல்லை நான் சொல்லுறன். அப்புறம் நீ சொல்லு!” என்றேன். “நோ…நோ… முதல்லை நான் தான் சொல்ல வேணும். முதன் முதலா உங்களுக்குத்தான் சொல்லவும் வேணும்” என்று சிணு ங்கினாள். “சரி சொல்லடி” என்றேன். என் நெஞ்சு ‘படக்….படக்’ கென்று அடிப்பது சத்தமாக அவளுக்கும் கேட்டுவிடும் போலிருந்தது. 

“எனக்கு வர்ற ‘சண்டே என்கேஜ்மெண்ட்! ‘அதுதான் இண்டைக்கு வர லேட்” என்றாள் குனிந்தவாறே. “என்ன நீ சொல்லுறாய்?” என்றேன். சத்தமான என் குரல்கேட்டு ‘டைப்பிஸ்ட்’ ஒரு தடவை தன் வேலையை நிறுத்திப் பின் தொடர்ந்தா. “எனக்கும் என்னோடை போய் பிரண்டிற்கும் வர்ற சண்டே சிம்பிளா ‘என்கேஜ்மெண்ட்’ நடக்க இருக்கு எண்டு சொன்னன்” என்றாள். “இதை ஏன் இவ்வளவு நாளும் எனக்குச் சொல்லேல்லை?” என்று கேட்டேன். “எதையும் முடிவானதுக்கு அப்புறம் தானே சொல்லவேணும்? அதுதான் இண்டைக்கு முதன் முதலா உங்களுக்கு சொல்லுறன்” என்றாள் என்னைப் பார்த்தவாறே. 

அப்ப நான் சொல்ல நினைத்தது..? நான் சொல்லத் துடித்தது…? அதற்கு இனி அவசியமே இல்லை! 

“ஓகே…நீங்க என்ன சொல்ல வந்தீங்க,” அவளது குரல் என்னை நினைவுக்குக் கொண்டு வந்தது. ‘அது. . .அது… எனக்கும் என்ரை கசின் சாந்திக்கும் மே மாசம் இருபத்தைந்தாம் திகதி ‘றிஜிஸ்ரேஷன்’ நடக்க இருக்கு. அதைத்தான் ‘அட்வான்ஸ்’ ஆகவே உனக்குச் சொல்ல நினைச்சன்.’ என்ற உண்மையை நான் சொல்ல நினைத்தாலும் எதையுமே கூறாது, கூற வேண்டிய அவசியங்கள் ஏதும் இல்லாது புரட்டிக் கொண்டிருந்த புதிய ‘பைலை’ எடுத்து அவள் முன்னால் போட்டேன். 

இரண்டு கப் ரீயை செந்தில் கொண்டு வந்து என் மேசைமீது வைத்துச் சென்றான். “என்ன சொல்லுங்களேன்!” என்றாள், கால்களை நிலத்தில் அடித்தவாறே. 

“ஆறேழு மாதங்களுக்கு முந்தி நாங்கள் கொள்முதல் செய்த பொருளொன்றை நீ ‘விக்ஸ்ட் அசெட்ஸ்’ ஆகப் பற்றுவைச்சாயோ எண்டு நான் போட்ட கணக்குத் தான் தப்பாயிட்டுது. நீ அதை ‘கறண்ட் அசெட்ஸ்’ ஆகச் சரியாத்தான் பற்றுவைச்சிருக்கிறாய் எண்டு இப்ப இந்த ‘பைலைப்’ புரட்டின போது தான் எனக்குப் புரியுது. . . ஒரு நிம்மதியாவும் இருக்கு!” என்றேன் நான். புருவத்தை உயர்த்தியவாறே, “என்ன நீங்கள் சொல்லுறீங்க?” என்று கேட்டாள். 

“ஒரு முறைதான் சொல்லமுடியும். நீ ஒரு ‘குவாலிவைட் புக்கீப்பர்’ எண்ட முறையிலை புரிஞ்சாப் புரிஞ்சு கொள்” என்றவாறே தேநீர்க் குவளையைக் காலியாக்குகிறேன். 

“அட் லீஸ்ட் நீங்க சொன்ன ‘என்றி’யை ‘லெட்’ஜரிலையாவது, காட்டுங்களன்” என்றாள். “ஐ ஆம் வெறி சொறி மைடியர். இது லெட்ஜருக்கு வராத டபிள் என்றி” என்று நான் சொன்ன போது, முன்னால் வெளிச்சம் தெரிந்தது. தனது அறை ‘ரியூப் லைட்டைப்’ போட்டுவிட்டு ‘பொஸ்’தான் தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். 

“ரீயைக் குடிச்சிட்டு நீ ஸ்ரேட்மண்டைப் பிறிப்பியர் பண்ணு நான் பொஸ்ஸை ஒருக்கா பார்த்திட்டு வாறன்” என்ற போது, “இந்த ‘ஸ்ரேட்மெண்டிற்கு’ இப்ப என்ன அவசரம்? வழமையாக இருபது இருபத்தைந்தாந் தேதிகளிலைதானே ‘பிறிப்பயர்’ பண்ணிக் குடுப்பன். ஏன் இந்த மாசம் இப்பவே கேக்கிறீங்க?” என்றாள் வியர்க்கும் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவாறே. 

“எதையும் முன்னரே செய்து வைச்சிட்டா அல்லது சொல்லி வைச்சிட்டால்…தப்பான கணக்குகள் உருவாக ஏது இருக்காது இல்லையா?” என்றேன். 

“புரியாத ஆள் தான். போங்க நீங்க” என்றவள் புதிய ‘பைலைத்’ திறந்து, அமைதியாகத் தன் வேலையை ஆரம்பித்தாள். 

‘நான் மட்டுமா?’ என்று சொல்ல நினைத்தாலும் எதையுமே கூறாது, கையொப்பமிடப்பட வேண்டிய காசோலை ‘வவுச்சர்களை’ எடுத்தவாறே, நான் ‘பொஸ்’சின் அறைக்குச் செல்லத் தயாராகுகிறேன். 

– வீரகேசரி வாரவெளியீடு

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *