தப்புக் கணக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 5,363 
 
 

ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது ஏக்கரில் இரண்டு சொகுசு பங்களாக்கள் . சென்னை வானகரத்தில் ஒரு வசதியான திருமண மண்டபம். – இயக்குனர் ராமபத்ரனுக்கு மனசுக்குள் நிம்மதி. சபதத்தை நிறைவேற்றிவிட்டத் திருப்தி.

வங்கி கணக்குப் புத்தகம், இடங்களின் பத்திரங்கள், அது சம்பந்தமான ஆவணங்கள் எல்லாவற்றையும் எடுத்து சூட்கேசில் வைத்துக் கொண்டு தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

பந்தாவாக காரில் ஏறி அமர்ந்து மெல்ல சாலையில் இறக்கி ஓட்டினார்.

மனம் பின் நோக்கிப் பயணித்தது.

இருபது வருடங்களுக்கு முன் ராமபத்ரன் முப்பது இளைஞன். அழகான மனைவி. கையில் ஒரு குழந்தை. அரசாங்கத்தில் சாதாரண எழுத்தர் வேலை. வாழ்க்கைக்குத் தேவையான சம்பளம்.

வாய்த்த மனைவி மனோகரி பேராசைக்காரி. அது அவள் தவறில்லை. அக்கம் பக்கம் பாதிப்பு.

” என்னங்க..! எதிர் வீட்டு பாலுவிற்கு உங்க அலுவலகத்தில்தானே வேலை…? ” ஒருநாள் ஆரம்பித்தாள்.

” ஆமாம் ! ” இவன் மகனைக் கொஞ்சிக் கொண்டே சாதாரணமாகப் பதில் சொன்னான்.

” உங்களுக்கு மேலாளரா…? ” அவள் அடுத்த கேள்வி.

” இல்லை. என் வேலைதான். என் இடத்திலிருந்தது நாலு இருக்கை தள்ளி. ”

” அவர் அடிப்படியிலேயே ரொம்ப வசதியா…? ”

” அப்படியெல்லாம் இல்லே…”

”இருக்கிறது சொந்த வீடு. அவர் கழுத்துல எப்போதும் அஞ்சு சவரன் தங்கச்சங்கிலி. ரெண்டு கைகளிலும் நாலு சவரன்ல மோதிரங்கள். இடது கையில் இரண்டு சவரனில் கைச்சங்கிலி. வீட்ல எல்லாமே விலையுயர்ந்த பொருட்கள். அவர் மனைவி நங்கை பட்டுபுடவையும் நகையுமாய்ப் பளபளக்குறாள். எப்படி…? ” கேட்டாள்.

” அடுத்தவங்க சமாச்சாரம் நமக்கு வேணாம்.. மனோகரி…” ராமபத்ரன் குரல் தழைவாய் ஒலித்தது.

மனோகரிக்கு முகம் சிவந்தது.

அடுத்ததாக…

” உங்களுக்குத் துப்பில்லே…!!….” சீறினாள்.

ராமபத்ரன் முகத்தைத் துடைத்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான்.

” லஞ்சம் வாங்குறது குத்தம். தப்பு..! ” மெல்ல சொன்னான்.

” கொடுக்கிறது…? ” இவள் மடக்கினாள்.

” அதுவும் தப்பு ! ”

” அப்போ நீங்க கேட்க வேணாம். குடுக்குறதை வாங்குங்க…”

ராமபத்ரனுக்கு இவள் இடக்கு முடக்கு செய்து மடக்குகிறாள். ! – என்று நினைத்ததுமே கோபம் மீண்டும் துளிர்த்தது.

ஆனாலும்…. மனைவி புரியாமல் பேசுகிறாள் ! எப்படி புரிய வைப்பது..? ‘ – யோசித்தான்.

அவள் தொடர்ந்தாள்.

” பணத்தேவை என்கிறபோது சில இடத்துல வலையனும். நிர்வாண இடத்துல கோவணம் கட்டி திரியக்கூடாது. நம்ம வீட்ல கிரைண்டர் இல்லே. அதுக்காக நான் இட்லி, தோசைக்குப் போடாம இருக்கேனா…?! இந்த நாகரீ க நவீன காலத்துல ஆட்டுக்கல்லுல அரைக்குறேன். மிக்சி இல்லே என்கிறதுக்காக தேங்காய், மிளகாய், சட்னி, அரைக்காம இருக்கேனா…? அம்மியில அரைக்கிறேன். எதுக்காக இவ்வளவு கஷ்டம்..? நாமும் மத்தவங்களை போல நல்ல, ருசியா சாப்பிடனும் என்கிறதுக்காக. அது மாதிரி… அலுவலகத்திலும் வலையற இடத்துல வலையனும்.” சொன்னாள்.

இவள் சொல்வது சாதாரண விஷயமா…?! லஞ்சம் வாங்கறது ! மாட்டினால் வேலை போகும், சிறை ! ‘ – இவனுக்கு நினைத்த பார்க்கவே நெஞ்சு நடுங்கியது.

” என்னால் அப்படி முடியாது மனோகரி..! ” பரிதாபமாகச் சொன்னான்.

அவள் சட்டென்று இவன் பக்கம் திரும்பி முறைத்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் ஆத்திரம் , ஆவேசத்தைத் தாங்கமுடியாமல் உடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

கோபம் ! – படுக்கை அறையிலும் எதிரொலித்தது. இவன் பக்கம் பார்க்காமல் முதுகு காட்டி ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

பேசவில்லை.

ம்ம்ம்ம்….. என்கிற வாயடைப்பு.

” ம….மனோகரி……” தொட்டான்.

” தொடாதீங்க…” சீறி தொட்ட கையைத் தட்டிவிட்டாள்.

ராமபத்ரனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. கையைப் பிசைந்தான்.

” கதை எழுதறேன், கதை எழுதறேன்னு முழிச்சிருந்து….. சாமத்துல வேற இது தொல்லை. எழுத்தாளர்ன்னுதான் பேர். ஒரு கதைக்கு இருநூறு, முன்நூறுன்னு பத்திரிக்கை அலுவலகங்களிருந்து பிச்சை. அந்த வருமானமும் சரி இல்லே. தள்ளிப் படுங்க…” சிடுசிடுத்து ஒதுங்கி, நகர்ந்துப் படுத்தாள்.

இனியும் தொட்டால் இவள் குரல் உயரும். அருகில் படுத்திருக்கும் மூன்று வயது பையன் மட்டும் விழிக்காமல் அக்கம் பக்கமும் விழித்துக் கொள்ளும். வாடகை வீட்டில் இது சரி இல்லை ! – சுமையுடன் படுத்தான்.

தாம்பத்தியத்தில் இப்படித் தள்ளிப் படுத்த நாட்கள் ஏராளம். இவன் வற்புறுத்தலுக்காக அவள் வேண்டா வெறுப்பாக வந்தது சகிக்க முடியாதது.

ஒரு சாதாரண நடுத்தர குடும்ப மனிதர்களுக்கு இதில்தான் கொஞ்சம் மனத்திருப்தி, மகிழ்ச்சி. அதிலும் குறையா..?! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராமபத்ரனுக்கு ஒரு கால கட்டத்திற்கு மேல் தங்க முடியவில்லை.

ஒரு நாள்….

‘ தொடவேக் கூடாது ! ‘ என்கிற தீர்மானத்திற்கு வந்தான்.

வலிய வந்த மனோகரியையும் ..அன்றைக்கு….

” வேணாம் ! தள்ளிப்படு ! ” சொன்னான்.

” என்ன கோபம்…? ”

” படுக்கையில கூட சந்தோஷமில்லாத உனக்கு…. பணம் நினைப்பு. அதைத் தேவைக்கதிகமா சம்பாதிச்சி, உன்னை திருப்தி படுத்திட்டு அப்பறம் உன்னைத் தொட்டுக்கிறேன் ! ” தன் வைராக்கியத்தைச் சொன்னான்.

” இந்த ரோசம் நிசம் தானா…?! ” கணவன் மனநிலை புரியாமல் சந்தேகமாகக் கேட்டாள்.

” சத்தியமான நிசம் ! ” கறாரகச் சொன்னான்.

” அப்போ… என் கனவு பலிக்குமா…? ” அவள் குரலிலும், முகத்திலும் சந்தோசம் பளிச்சிட்டது.

” நிச்சயம் ! ! ” ஆணித்தரமாகச் சொல்லித் திரும்பிப் படுத்தான்.

அன்றைக்கு வெறுத்துப் படுத்தவன்தான் ராமபத்ரன். இருபத்தைந்து வருடங்கள் முடிந்து இன்னமும் தொடவில்லை.

மனதில் உறுதி எடுத்துக் கொண்டு, போட்ட சபதத்தை நிறைவேற்ற….. சினிமா வாய்ப்பிற்காக அலைந்தான்.

கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கினான்.

இயக்குனர்களைச் சந்தித்தான்.

தோல்விதான் ! என்றாலும் மனசு தளரவில்லை.

‘ தட்டினால் திறக்கப்படும் ! முயன்றால் முடியாததில்லை ! ‘ – என்பதில் இவன் உறுதியாக இருந்தான்.

ஒருவழியாக வாசல் திறந்தது. ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலை அடுத்தடுத்து தானாகத் தேடி வர சூடு பிடித்தது. வேலையை விட்டான். அப்படியே குறுகிய காலத்தில் இயக்குனாராகிவிட்டான்.

இன்றைய வெற்றிப் பட இயக்குனர்களில் ராமபத்ரனும் ஒருவன். இயக்கி வெளியிட்ட பத்துப் பதினைந்து படங்களில் சில சூப்பர் டூப்பர். வெற்றி விழா கொண்டாடடியவை.

ராமபத்திரன் பேருக்கும், புழுக்கும் நிறைய குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதித்திருக்கலாம். ஆசைப்படவில்லை. !! நியாமான கூலி, உழைப்பில் நிரந்தர முன்னேற்றம். சொந்தத்தில் வீடு கட்டி வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டாலும் இவன் மனதில் நினைத்த பணமும் காரும் இப்போதுதான் இலக்கை எட்டியது.

ராமபத்ரன் வாசலில் காரை நிறுத்தினார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த மகனுக்குக் காரைப் பார்த்ததும் முகத்தில் திகைப்பு, வியப்பு.

சட்டென்று திரும்பி வீட்டிற்குள் மின்னலாக ஓடினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் மனோகரி பட்டுப்புடவை சரசரக்க பணக்கார அலங்காரத்தில் வாசலுக்கு வந்தாள்.

காரைப் பார்த்ததும் அவள் கண்களும் விரிந்தன.

ராமபத்ரன் இறங்கினார்.

” என்னங்க… நம்ப காரா..? ” அவள் முகம் கேள்வியில் வியப்பு.

” ஆமாம். இதுவும் உனக்கு…” தயாராக எடுத்து வைத்திருந்த வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தையும், சூட்கேசையும் அவள் கையில் திணித்து விட்டு படி ஏறினார்.

வங்கி கணக்குப் புத்தகத்தைப் பிரித்து பார்த்த மனோகரிக்கு தொகை பிரமிப்பூட்டியது.

” அம்மா..! நாம ஒரு ரவுண்டு போய்வரலாம்..! ” பின்னால் வந்த மகன் மகிழ்ச்சியாக அவளைத் தள்ளிக் கொண்டு வந்து காரில் ஏறினான்.

இரவு நிசப்தமாய் இருந்தது. படுக்கை அறை கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த ராமபத்ரன் முகத்தில் தீவிர சிந்தனை.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு படுக்கை அறை கட்டிலில் கணவன்.

மனோகரி மெளனமாக வந்து அருகில் படுத்தாள்.

”……………………………….”

ஐந்து நிமிடங்கள் பொருத்த அவள்….

”என்ன யோசனை..? ”என்றாள்.

” இந்த பணம், பேர் , புகழ், வசதி எல்லாம் உனக்குப் போதுமா இன்னும் வேணுமா…? ”

” போதும்ங்க..”

”இதுக்கு நாம வைச்ச இழப்பு என்ன தெரியுமா…? ”

மனோகரி புரியாமல் பார்த்தாள்.

” நம்ம இளமை !! ” ராமபத்ரன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

மனோகரி ஆடிப் போய் அவரைப் பார்த்தாள்.

” ஆமாம் மனோகரி. நம்ம இளமை.!! பணத்தை என்னைக்கு, எப்படி வேணும்ன்னாலும் சம்பாதிக்கலாம், சம்பாதிச்சுடலாம். ஆனா…. இளமை..? எந்த வழியிலும் சம்பாதிக்க முடியாது.!!

இன்னைக்குப் பார் ! வாழ்க்கை இருக்கு. வசதி இருக்கு. வயசில்லே.!! அன்னைக்குத் தாம்பத்தித்துல கூட உனக்குப் பணம் நினைப்பு. பணம் பணம்ன்னு துடிச்சே. இன்னைக்குப் பணம் வந்துடுச்சி தாம்பத்தியம் வருமான்னு சிந்திச்சுப் பாரு. மனோகரி… கணவனுக்கு மனைவி சோத்துல குறை வைக்கலாம். சுகத்துல குறை வைக்கக் கூடாது.

ஆண்…. காமத்துக்கு அடிமை, அலையறவன்னு தப்பா நெனைச்சி அங்கே மனைவி தன் காரியத்தைச் சாதிக்க கிடிக்கிப் பிடி போடக்கூடாது. பெரும்பாலானப் பெண்கள் இப்படித்தான் நடந்துக்கிறாங்க. இது தப்பு. என்னை மாதிரி கணவன் வைராக்கியக்காரனாய் இருந்தால் வாழ்க்கை நாசம்.

பரவாயில்லே.!! .இதுவரை இந்த வீட்ல நாம தனித்தனியா வாழ்ந்தோம். இனி … வாழ்க்கையிலும் மட்டுமில்லாம இந்த படுக்கையிலும் நல்ல நண்பர்களாய் சேர்ந்து வாழ்வோம் ! ” சொல்லி மனைவியை அணைத்தார்.

மனோகரிக்கு எல்லாம் புரிய…தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *