தப்பா(ன)த பிள்ளை




(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டெலிபோன் மணிஅடிக்க எடுத்துப் பேசினார் ராஜசேகர்.

ஹாய் ஸ்வீட் ஹார்ட் நான் ரஞ்சனி பேசுகிறேன்
என்னது?
குரல் மாற்றிப் பேசி விளையாடுகிறாயா? நான் உனக்காக காலையிலே இங்கே காத்துக்கொண்டிருக்கிறேன். அய்யா அங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்?
ஏய் யாரது நான் ராஜசேகர் பேசுகிறேன் என்று கத்தினார்.
ஸாரி.. ஸாரி.. அங்க தினேஷ் இருக்கிறாரா?
நீ யாரும்மா?
அவருடைய பிரண்டு சார்?
வெறும் சாரா? இல்லை வருங்கால மாமனாரா? சிரித்தார் ராஜசேகர்.
உண்மையிலேயே அப்படிதான் சார்.
மறுபடியும் சாரா?
இல்லை சார்..மாமா?
உன்னை எங்கே பார்க்க வருகிறேன் என்று சொன்னான் அந்த மடையன்?
அவரை மடையன் என்று சொல்லாதீர்கள் அங்கிள்.
ஓ! அப்படியா என்று ராஜசேகர் பேசிக் கொண்டிருக்கும் போது மாடியிலிருந்து இறங்கி வந்த தினேஷ் யாரப்பா போனிலே என்று கேட்டான்.
என் வருங்கால மருமகள்?
என்னப்பா சொல்கிறீர்கள்?
படவா ராஸ்கல், இவ்வளவு நாளும் கல்யாணத்தை தள்ளிப் போட்டதுக்கே இந்த ரஞ்சினிதான் காரணமா?
தினேஷ் பதில் சொல்லாமால் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
சரி,சரி போனிலே பேசு. அவள்தான் பேசுகிறாள். என் பி.ஏ வந்தாச்சா. கொஞ்சம் பாரு நான் சட்டசபைக்கு வேறு போக வேண்டும் என்றவாறு கிளம்பினார். போனை தினேஷ் கையில் கொடுத்துவிட்டு…
எம்.ராஜசேகர் வனத்துறை மந்திரி என்ற போர்டை வாசித்து விட்டு உள்ளே வந்தாள் தேவிகா.
கொஞ்சம் உட்காருங்க அம்மா. சார் மற்ற மந்திரிக ளோட கொஞ்சம் டிஸ்கஷ னிலே இருக்கிறார். முடிந்த தும் உங்களுக்கு பேட்டி கொடுக்கச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார் ராஜசேகரின் பி.ஏ.
அவளுக்கு காபி தர ஏற்பாடு செய்து விட்டு அவள் வந்திருப்பதை மந்தி ரிக்குத் தெரிவிக்க அடுத்த அறைக்குள் நுழைந்தார் பி.ஏ.
கொஞ்ச நேரத்தில் எல்லோரும் வெளியே கிளம்பி வர எலெக்ஷன் நேரம். முதல்வர் சொல்வதும் சரி தான். கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று ராஜசேகர் சொல்ல, அதுவும் சரிதான் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள் மற்ற மந்திரிகள்.
திரும்பிப் பார்த்த ராஜசேகர் தேவிகாவைப் பார்த்து யாரம்மா நீ? என்றார். சார் ‘வெளிச்சங்கள்’ பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறேன். பேட்டி தருகிறேன் என்று சொன்னீர்கள் எழுந்தார் தேவிகா.
ஓ! அந்த ஸ்வீட் வாய்சுக்குச் சொந்தகாரி நீ தானா? காபி ஆறப்போகுது சாப்பிடு. என் பி.ஏ வந்ததும் அவரோடு உள்ளே வா.
சரி சார் என்று அமர்ந்து காபி சாப்பிட்டாள். பி.ஏ வந்து அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
சாதாரணமாக பேட்டி முடிந்ததும் எவ்வளவு நாளாக வெளிச்சங்கள் பத்திரிகையில் வேலை செய்கிறாய்? என்று கேட்டார் ராஜ சேகர்.
இரண்டு வருடமாகுது. சார் எனக்கு உங்கள் மகன் தினேஷை மிகவும் நன்றாகத் தெரியும் சார்
அப்படியா? வெரிகுட். எப்படிப் பழக்கம்?
தற்செயலாக சந்தித்தோம். பழக ஆரம்பித்தோம். நீங்கள் கோபப்படவில்லை என்றால் ஒன்று சொல்கிறேன்.
சொல்லம்மா
என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார் சார்.
என்னது? அதிர்ச்சியில் எழுந்து விட்டார் மந்திரி ராஜசேகர்.
மொபைல் போன் சிணுங்க பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து ஹலோ ராஜசேகர் ஸ்பீக்கிங் என்றார். டாடி. நான் தினேஷ் பேசுகிறேன் கொஞ்சம் பேக்டரி வரை வந்து விட்டுப் போக முடியுமா? என்றான் தினேஷ்.
அதற்கு முன்னாலே நான் உன்னோடு பேச வேண்டும். என்ன இதெல்லாம் கண்றாவி?
என்னப்பா சொல்கிறீர்கள்?
எதிரே தேவிகா இருப்பதைக் கவனித்து விட்டு எல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு நிறைய வேலையிருக்கு. நீ பாக்டரியிலே உள்ள பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்துக் கொள், என்றார் ராஜசேகர்.
நிறைய வேலை என்றால் சரோஜா வீட்டிற்கு போறதா…இல்லை… அவன் முடிக்கும் முன் இடியட் இப்படித் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறாய் நீ. நம் வீட்டில் வைத்து நிறைய பேச வேண்டியிருக்கிறது. நான் வருவதற்கு முன் தூங்கி விடாதே என்று போனை வைத்தார்.
நான் ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் சார் என்று எழுந்து கும்பிட்டாள்.
அதெல்லாம் ஒன்று மில்லை. நீ போயிட்டு வாம்மா என்றதும் தேவிகா வெளியே கிளம்பினாள். சார் நாம் லஞ்சுக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகளிடம் பேசப் போகிறோம் என்றார் பி.ஏ.
சாரி வாசு எனக்கு மனசே சரியில்லை, இன்றைக்கு எல்லா புரோக்ராமையும் கேன்சல் பண்ணி விடுங்கள். டிரைவரைக் கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொல்லுங்கள் என்றார் மந்திரி ராஜசேகர். சரி சார் என்று பி.ஏ வாசு கிளம்பியதும் வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டு சரோஜா வீட்டிற்குப் போப்பா என்றார். சாயங்காலம் மந்திரி ராஜசேகரின் புரோக்ராம் எல்லாம் முடிந்த பிறகு இரவு பொதுக்கூட்டத்தை கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு வந்தார். மனைவியிடம் தினேஷ் எங்கே? என்று கேட்க அவன் இன்னும் பேக்டரியிலிருந்து வரவில்லையே என்றாள் அவர் மனைவி காஞ்சனா.
உடனே பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து நம்பரை டயல் செய்து ஹலோ யார் பேசறது? பாக்டரி மானேஜரா..கொஞ்சம் தினேஷிடம் கொடு என்றார்.
போனில் தினேஷ் ‘என்னப்பா விஷயம்’ என்றான். நீ அங்கேயே இரு. நான் உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்.
எனக்கு வேலை முடிந்தாகி விட்டது. நான் அங்கே தான் கிளம்புகிறேன். வீட்டிலே பேசிக்கொள்ளலாமே அப்பா.
ம்..கூம் இது வீட்டிலே பேசக்கூடிய விஷயமில்லை. இங்கே அம்மா, தங்கை எல்லோரும் இருக்கிறார்கள். அங்கயே இரு. நான் வருகிறேன்.
‘சரி’, போனை பாக்கெட்டில் செருகிக் கொண்டு காரில் பாக்டரிக்கு கிளம்பினார்.
சொல்லுங்கப்பா என்ன விஷயம்?
முதலிலே உன் கேபின் கதவிற்கு தாழ்போடு. நாம் பேசும் போது யாரும் உள்ளே வரவேண்டாம் என்றார் ராஜசேகர்.
தினேஷ் எழுந்து கதவிற்கு தாழ் போட்டு விட்டு வர என்னடா இது கண்றாவித்தனம். எத்தனை பெண்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கே என்றார்.
‘ஏம்பா திடீரென்று கேட்கிறீர்கள்’
‘கேட்கிறதுக்கு பதில் சொல்லுடா?’
….மௌனமாக நின்றான் தினேஷ்.
காலையிலே ரஞ்சனி உனக்காக காவல் நிற்கிறேன் என்கிறாள் சரி. மருமகள் கிடைத்து விட்டாள் என்று நினைத்தால் மத்தியானம் அந்த வெளிச்சங்கள் ரிப்போர்ட்டர் தேவிகா வந்து சார் உங்க மகன் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்திருக்கிறார் என்கிறாள். என்னடா விஷயம் சொல்லேன்..
அப்பா வீட்டில் அழகான அம்மா இருக்கும் போது நீங்கள் சரோஜா வீட்டிற்கும் கவிதா வீட்டிற்கும் ஏன் போகிறீர்கள்?
ஒரு அப்பாவிடம் மகன் பேசுகிற பேச்சாடா இது.
கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்களேன்.
அது ஒரு அந்தஸ்து வடிகால்.. இன்னும் பிற நிறைய பிரச்சனைகள்.
உங்களுக்கு மட்டும் அந்த மாதிரி எல்லாம் பிரச்சனைகள் வந்து நீங்கள் சுற்றுகிற போது நான் மட்டும் இரண்டு கல்யாணம் பண்ணிக் கொள்ள கூடாதா?
தினேஷ் நம் ஸ்டேட்டஸ் என்ன…கொஞ்சம் யோசித்துப் பார்த்தாயா? பின்னே ஆயிரம் விளம்பரங்கள் எய்ட்ஸைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்திருந்தால் இப்படி சரோஜா, கவிதா என்று… என்றவாறு தினேஷ் கோபத்தில் கத்த செல் போன் கிணிங்.. கிணிங் என்றது. பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து ஹலோ ராஜசேகர் பேசுகிறேன் என்றார்.
ஐயா. நான் சரோஜா பேசுகிறேன் நீங்கள் ராத்திரிக்கு வர்றதா சொன்னீங்க என்றதும் மறுபக்கம்
‘எனக்கு எந்த சரோஜாவையும் தெரியாது. இனி எங்கேயும் நான் வரப் போவதில்லை’ என தினேஷைப் பார்த்துக் கொண்டே பேசி முடித்து விட்டு போனை பாக்கெட்டில் வைத்தார்.
– தின பூமி, 05-04-1998.