தப்பாட்டம்
”நெசமாத்தேஞ் சொல்றயா?” அவள் நம்புகிறாற் போலில்லை. குழம்புப் பாத்திரத்தை இடக் கையிலும், கரண்டியை வலக் கையிலுமாகப் பிடித்தபடி தயங்கினாள்.
“ஊத்து சொல்றேன். அட, இன்னீங் கொஞ்சம் ஊத்து. கறித் துண்டும் போடு” என்றான் அவன்.

பழுப்பு நிறம் மாறாத ரேஷன் அரிசிச் சோற்றில் எண்ணெய்ப் படிவும் சிவப்பு நிறமும் கலந்து கறிச்சாறு பரவியது. அவன் சாப்பிடுவதையே கண் வைத்துப் பார்த்து நின்றாள் அவள். சாப்பாடு தட்டில் தீரவும் அவனுக்கு மறுசோறு போட்டாள். குழம்பை அவனே ஊற்றிக்கொள்ளவென்று பாத்திரத்தை அருகில் வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
அம்மா நகர்ந்த பிறகு, கந்தசாமி சாப்பிட்டு முடிவதற்கு சற்று முன்னதாக அருக்காணி வந்தாள். கால் முகம் கழுவி உள்ளே வந்ததில் ஈரச் சுவடுகள் காரைத் தரையில் அவள் பின்னாலேயே போயின. கால் துடைக்க வாசலில் கிடக்கும் சாக்கை ஏதோ நாய் இழுத்துப் போய்விட்டது போலும். இது ஒரு தொந்தரவு. வாசப்படியில் போட்டிருக்கிற சாக்கையும் செருப்புகளையும் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் கடித்துக் குதறிவிடும். அருக்காணி, அம்மாவிடம் போனாள். “வேல தீந்துதா?”
”இல்ல. இன்னைக்கு ரெண்டு பொளுதிக்கும் இருக்குது. அப்பனெங்க?”
“பத்ரனப் பாக்கணும்னு போனது. இன்னீங் காணம். சோத்தயும் திங்காமப் போயிருக்குது.”
குரல்களைத் தொடர்ந்து முந்தானையில் முகம் துடைத்தபடி அருக்காணி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். அவனருகே உட்கார்ந்தவள் ஆச்சரியமானாள்.
“என்னடாயிது…! அதிசீமா இருக்குது?”
“ம்…”
கந்தசாமி வேறெதும் சொல்லாமல் சாப்பிட்டெழுந்தான். அம்மாவும் அக்காளும் சேர்ந்து சாப்பிடுவார்களாயிருக்கும். அல்லது அப்பன் வந்த பிறகு சாப்பிடலாம் என்றிருப்பாள் அம்மா.
‘ஒரு பத்தா நம்பர இழுக்கலாம்’ என்று பட்டது. அடுப்படியிலிருந்த தீப்பெட்டியோடு பின் வழியாக பொடக்காளிக்குப் போனான். வேப்ப மர நிழலில் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்து பீடி பற்ற வைத்தான். அதைப் புகைத்தபடியே யோசனை. தான் தோற்றுவிட்டோமோ என்று.
அம்மா சற்று முன் நம்பாமல் கேட்டதும். அக்கா சொன்னதும் அவனை உறுத்தின. ஐந்தோ ஐந்தரையோ வருடங்களுக்கப்புறம் இன்றைக்குத்தான் அவன் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறான். சாப்பிட மறுத்து அவன்
எடுத்திருந்த வலுவான தீர்மானம் இன்றோடு முடிந்துவிட்டது. இன்னும் எத்தனையோ கூட. எல்லாமே போன பிறகு இது மட்டும் எதற்கு?
குப்பை மேட்டில் செல்லாத்தா வீட்டு அடைக்கோழி கிளறிக்கொண்டிருந்தது. வேலியோரம் மேய்ந்துகொண்டிருந்த நூலான் சேவல் மெல்ல இதன் பக்கம் வந்தது. கருப்பும் கழுத்தோரம் வெளிர் மஞ்சளுமாய் உயரச் சேவல். ஒரு பக்கத்துச் சிறகை காலோடு சேர்த்து விரித்து கொக்கரித்து வரவும், அடைக்கோழி கிளறலைவிட்டு நிமிர்ந்தது. கழுத்து இறகுகள் சிலிர்க்க ‘கே…ர்…’ என்று சீறியது. நூலான் திரும்பி எங்கோ ஓடியது.
கந்தசாமி பார்வையைத் திருப்பினான். கிழக்கே முனியப்பன் பாறை இரண்டு பனை உயரத்தில் தூர இருந்தது. அதன் கீழே பருத்திக் காட்டுக்கு நடுவில் சில ஓட்டுவில்லை வீடுகள் அனலில் நடுங்கின.
“வெளிய எங்கயாச்சும் போறயா நீயி?”
பீடிப் புகை வாயில் கசிய “ஏன்?” என்றபடி திரும்பிப் பார்த்தான். அம்மா பின் நிலைப்படியில்.
“நா சோத்த உண்டுட்டு ஒரு சோலியா வெளிய போறன். அதுக்குத்தா கேட்டன்.”
“இல்ல. நா இங்கதா இருப்பன்.”
மீண்டும் பார்வை முனியப்பன் பாறைக்குப் போனது. அந்தப் பாறைப் பக்கம் போயே எத்தனை வருடங்களாயிற்று! அங்கேயே நாள் முழுக்கக் கழித்த ஒரு காலம். விபரம் தெரியாத வயதின் கற்பனைகளும், இனி எப்போதும் கிட்டாத அந்த உற்சாகமும். வேதனை தரும் பழைய நாட்களின் மகிழ்வான பதிவுகளெல்லாம் மனதில் வீசிப் போயின.
அப்போது அவர்களின் வீட்டில் ஆடுகள் இருந்தன. கந்தசாமி பள்ளிக்குப் போகிறவன், விடுமுறை நாட்களில் அக்காளோடு அவற்றை மேய்க்கத் துணை போவாள். அவனுக்கு அக்காளுடன் போவதில் ஒரு சந்தோஷம். அவளுக்கும்தான்.
இரண்டாவது வரை அருக்காணியும் படித்தவள்தான். இவன் பிறந்ததும் கொழந்தயப் பாத்துக்கறதுக்கு என்று வீட்டோடு இருந்தவள், பிறகு பள்ளி செல்லவில்லை. குழந்தையானவன் வளரவும், அம்மா மகளை ஆடு மேய்க்கப் போட்டுவிட்டாள்.
தலைகாணிக் கவுண்டரின் பண்ணையத்தாள் பேச்சிமுத்துவும் மாடுகளை மேய்க்க முனியப்பன் பாறையோரம் வருவான். அந்தக் கவுண்டருக்குப் பெருத்த வயிறு. உப்பலான இலவம் பஞ்சுத் தலையணை மாதிரி. பேச்சிமுத்து மாடுகளைக் கவனித்தவாறே கந்தசாமியோடு பேசிக்கொண்டிருப்பான். கந்தசாமி நாலாங்க்ளாஸ் முகம்மது ஜாபர் வாத்தியார் மாதிரி கையில் ஒரு குச்சியை வைத்து செடிகளிடம், “ஏம் படிக்கல, நீட்டு கைய” என மிரட்டி, இலைகளை அடித்து உதிர்ப்பான். எல்லா வாத்தியார்களின் பாவனைகளையும் பழித்துக் காட்டி அருக்காணிக்கு சிரிப்பு மூட்டுவான்.
காலம் அந்த நாட்களையெல்லாம் கொண்டு போய் முனியப்பன் பாறையின் உடும்புகளும் பாம்புகளும் பதுங்கிச் கிடக்கும் இடுக்குகளுக்கிடையே ஒளித்து வைத்து விட்டதோ. வழி தெரியாமல் அந்த இடுக்குகளில் இறங்கிவிட்டுக் கத்தும் வெள்ளாட்டுக் குட்டியாக அவனையும் மாற்றிவிட்டதோ.
“நீ நல்லாப் படிக்கோணுமுடா. எங்களப் பெலத்தவங்க அல்லாமே கவுண்டமாருக தோட்டந்தொரவுலயும் இந்த தப்பட்டயடியுலயும் சீவனக் களிச்சிட்டம். நீ இப்புடி ‘ஒருத்தன்’ மின்னால கையக் கட்டி நிக்கப்படாது. ‘ஒருத்தன்’ காட்டுக்கும் மம்முட்டி தூக்கப் போகப்படாது. ஏதாச்சும் நல்ல உத்தியோகமா பாத்து பெரிய ஆளாகோணும்.”
சின்ன வயதில் விபரம் தெரிய ஆரம்பித்த நாளிலிருந்தே அப்பன் சொல்லி வந்தது இது. அதைச் சொல்லும்போதெல்லாம் அப்பனின் கண்கள் லாந்தர் விளக்கொளியில் ஈரமாவதை கந்தசாமி கவனித்திருக்கிறான். அந்தக் கண்கள் அழுவது போலவும் இருக்கும்; எதிலோ லயிப்பது போலவும் தோற்றம் தரும். அதற்குக் காரணம் அப்போது அவனுக்குப் புரியாது. பிற்பாடு நடந்த ஒரு சம்பவம் வெகு நாளுக்குப் பிறகு அது புரிவதற்கான தெளிவைக் கொடுத்தது.
கந்தசாமியின் மூன்றாவதிலோ நாலாவதிலோ நடந்தது அது. தர்மராஜ் கவுண்டர் ஊரில் பெரிய மனித அந்தஸ்துள்ளவர். அவரின் பேரன் தினேஷ்குமார், கந்தசாமியோடு படிப்பவன். பள்ளி விட்டு வரும் ஒரு மாலையில் இட்டேறி வழியாக வரும்போது கந்தசாமி அவனைப் பேர் சொல்லி அழைத்துவிட்டான். கவுண்டர் தன் தோட்டத்துக்குப் போக அவ் வழியே வந்தவர் காதில் விழுந்துவிட்டது. தோட்டத்துக்குப் போய் ஆளனுப்பி கந்தசாமியின் அப்பனையும் கந்தசாமியையும் அங்கே வரவழைத்தார்.
“ஏண்டா,… ஒரு பறப் பைய மவன் என்ற பேரன் பேரு சொல்லிக் கூப்படறதா?”
கவுண்டரின் முன்பாக அப்பன் தரை பார்த்து நின்றான். அழுக்குத் துண்டு இடுப்பில். “இல்லீங் சாமி. சின்னப் பையன். ஏதோ வெகரந் தெரியாம சொல்லிப் போட்டானுங்.” கை கட்டிய வாக்கிலேயே வலது உள்ளங்கை வாயைப் பொத்தினாற் போல இருக்க, பதுங்கி வரும் வார்த்தைகள்.
“சொல்லி வெய்யிடா இப்பிருந்தே. ஆட்டுக்கு வாலு அளவோடதா இருக்கோணும். இதுக்குத்தாஞ் சொல்றது இவனுகளையெல்லாம் படிக்க வைக்கக் கூடாதுன்னு. நாலெழுத்து படிக்கவும் இப்பவே மோளம் ஏறிப்போச்சு பாக்குல?”
இப்போது தாடை இறுக கந்தசாமி பல்லைக் கடித்தான். தர்மராஜ் செத்துப்போய் அவரைப் புதைத்த இடத்தில் மேடு கூட சமதளமாகிவிட்டது. ஆத்திரம் தீரவில்லை. தீர்த்துக்கொள்ள வழியற்ற இயலாமை. ஒவ்வொரு தடவையும் இப்படி பல்லைக் கடித்து அப்போதைய வெறி தணிகிறது.
கல்லிலிருந்து எழுந்தான். வீட்டுக்குள் வந்தபோது அம்மாவும் அக்காவும் இல்லை. முன்புறக் கதவை வெறுமனே சாத்திவிட்டுப் போயிருந்தனர். அது காற்றுக்குத் திறந்துகொண்டிருக்கும். ஏதோ கோழி உள்ளே வந்து ஒரு குட்டு
கழித்துவிட்டுப் போயிருந்தது. வாசலில் போய் ஓரமாய் இருந்த மணலை அள்ளிவந்து அதன் மேல் போட்டான். அப்பனை பத்ரன் வீட்டிலிருந்து காணோமே இன்னும்.
வீட்டுக்குள் வேறு யாருமின்றி, வெறுமை சுவர்களில் படித்து உறுத்தியது. வெளியே போகலாமென்றால் அதுவும் பாடு. எந்த முகங்களையுமே பார்க்க முடிவதில்லை. எல்லா முகங்களும் புன்னகையைத் தோளில் கையாகப் போட்டு, கேள்வியில் கழுத்தை இறுக்குகின்றன.
“என்ன,… வேலைக்கு எங்கியும் போறதில்லையா?”
“படிச்சிட்டிருந்தயே… என்னாச்சு அது?”
உண்மையான அக்கறை போலக் கேட்கப்பட்டாலும், இது வெறும் சீண்டல். வாயைக் கிளறணுமே என்பதற்காகக் கேட்பது.
”ஏன் வாத்தியாரே,… எப்ப நம்ம பள்ளிக்கொடத்துல வந்து சொல்லிக் குடுக்கப் போறீங்கொ?” வளவுக்காரர்கள் யாரேனும் கேட்கக்கூடும். நம்மவன் ஒருத்தன் என்கிற பெருமிதம் அவர்களுக்கு. கேள்விகள் எப்படிப்பட்டதாயினும், அவனிடத்தில் சொல்வதற்கு எந்த பதிலும் இல்லை. மீறிச் சொல்வது பதிலாகவும் இருக்காது.
“இவனெல்லாம் படிச்சு,… வேலைக்குப் போயி,… உருப்பட்டாப்புலதான்…!” என்று சில பேர் முதுகுகளுக்குப் பின்னே பேசியதைக்கூட, கேட்டவர்கள் சொல்லித் தெரிந்ததுண்டு. பலனற்ற வெறும் ஆத்திரத்தில் என்ன செய்ய முடியும்? இப்படி பாதியிலேயே நின்றுவிட்ட பிறகு, எல்லாவற்றையும் சகித்துத்தான் ஆக வேண்டும். குறைந்த பட்சம் எதையும் யோசிக்காமலாவது இருக்கப் பழக வேண்டும்.
‘சரக்… சர்ர்ரக்’கென்று வாசலில் செருப்பை இழுத்து இழுத்து நடந்து வரும் சத்தம். அப்பன்தான் இப்படி காலைத் தேய்த்து நடப்பார். ஜன்னல் கம்பிகளூடே கந்தசாமி பார்த்தான். அப்பன் வாசலில் நின்று கிழக்கே யாருக்கோ கையசைத்துக்கொண்டிருந்தார்.
தூக்கம் வரவில்லை. மதியமே படுத்துத் தூங்கிவிடுவதால், இப்படி இரவுகளில் தூக்கம் வராமல் வெகு நேரம் வரைக்கும் புரண்டு புரண்டு படுக்க வேண்டியதாகிறது. அவனை அடுத்து பாயில் கிடக்கும் மணி, ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். ஓரமாக அம்மாவும் அக்காவும். அப்பன் வெளித் திண்ணையில்.
இருட்டு வெளியே நடுங்கிக்கொண்டிருந்தது. மார்கழிக் குளிர். பக்கத்து ஊர் டென்ட் கொட்டகையில் சினிமா பார்த்து வருபவர்களின் பேச்சு சத்தத்தில் குரைக்கும் நாய்கள். தியேட்டரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து வர அரை மணியாகும். ஒன்பதே முக்காலுக்கு முதலாட்டம் விடும் என்றால், இப்போது பத்தேகால் இருக்கும்.
முனியப்பன் பாறைக்குக் கீழே இருக்கிற வெட்டார வெளியில் சிக்காட்டம் பழகும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்பனும் சோறு உண்டுவிட்டு தப்பட்டையை எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். அடுத்த மாதம் பொங்கலின்போது பூ நோம்பு அன்று சிக்காட்டம் இருக்கும். அதற்கான ஒத்திகை இந்த மாதத்திலிருந்தே துவங்கும். வேலைக்குப் போய் வந்த பிறகு இரவில் எல்லோருமாக பாறைப் பக்கம் கூடுவார்கள். இதைப் போலத்தான் நிலா வெளிச்சத்திலோ, காய்ந்த பனை ஓலைகளைத் தீக் கொளுத்தியோ ஆட்டம் பழகுவார்கள்.
மத்தியில் இருக்கிற ஆள் துடும்பு கட்டியிருப்பான். கால் முட்டிகளின் தாங்கலில் நிற்குமாறு இடுப்பைச் சுற்றி அதன் கயிறு உள்ளவாறு அமைப்பில் நிற்பான். பெரிதாக இருக்கும் துடும்பை அடிக்க குச்சியும் ‘வண்ண’மாக இருக்கும். அவனைச் சுற்றி வட்டமாக நிற்பவர்களிடத்தில் தப்பட்டை. மையத்தில் இருப்பவன் பலமாகத் துடும்பு அடிக்க, கற்றியிருப்பவர்கள் அபிநயங்களோடு தப்பட்டை அடிப்பார் கள். அல்லது துடும்புக்காரன் முன்னே நிற்க, அவனுக் கெதிராக ஐந்தாறு வரிசையில் நின்று தப்பட்டை யடிப்பவர்கள் ஆடுவதும் உண்டு.
முன்பு தென்னை ஓலையிலும் பனை ஓலையிலும் வேயப்பட்டிருந்த குடிசையாக இருந்த இதே வீட்டில், லாந்தர் ஒளியில் பளபளத்த அப்பனின் கண்கள் ஞாபகத்தில் வந்தன. அவர் அப்போது சொல்லும் வார்த்தைகளை நினைத்தான்.
“நீ நல்லாப் படிக்கணுமுடா… ஏதாச்சும் நல்ல உத்தியோகமாப் பாத்து பெரிய ஆளாகோணும்.”
அந்தக் கனவுகள் இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. அவை தனது புத்தகங்களும் நோட்டுகளும் மூட்டையாகக் கட்டி அட்டைப் பெட்டியில் போட்டு வைக்கப்பட்டிருப்பதைப் போல அப்பனின் மனசு மூலையில் கிடக்கக் கூடுமோ.
புத்தகங்களெல்லாம் பாய் வைக்கிற தட்டியின் மேல். தனக்கான பாடங்கள் கொண்டவை. பயிற்சிக்கான எலிமென்ட்ரி ஸ்கூல் வகுப்புப் புத்தகங்கள், ரெக்கார்டுகள், படங்கள் வெட்டி ஒட்டியும், வரைந்தும் இருந்த விதவிதமான நோட்டுகள். பாடம் எடுக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் சிலதில். சார்ட்டுகள் சுருட்டப்பட்டு, காகித உருளைகளாக விளிம்பு சிதைந்து கிடந்தன. உருவ மாதிரிகள், சேகரிப்புகள் என்று வேறு, ஒவ்வொன்றும் அதன் முந்தைய சூழலை மீட்டெடுக்கின்றன. அதையும் கரையான்களும் கரப்பான் மற்றும் நாக்குப்பூச்சிகளும் அழித்துவிடலாம்.
அவற்றை வாங்கவும் அவனைப் படிக்க அனுப்பவும் வீட்டினர் பட்ட கஷ்டங்கள். உழைப்பின் பெரும் பகுதியை அவனுக்காகவே செலவழித்தனர் அவர்கள். அருக்காணி தனது கிழிந்த ப்ளவுசுக்குக்கூட மாற்று வாங்காமல் அவன் கையில் பணங் கொடுத்தது…
”ஏக்கா, என்ற செலவுக்குத்தா அப்பங்கிட்ட வாங்கிக்கறனே. நல்ல துணியா நீ வாங்கிக்க.”
”எனக்கென்ன வேணும் இதுக்குமேல! பளசோ கிளிஞ்சதோ இருந்தாப் பத்தாதா! நல்லதுதான் வாங்கி எத மறைக்கறதுக்கு இருக்குது?”
தேள் கொட்டும் வார்த்தைகள். கடுகடுவென்று அது விஷமாய் ஏறியது. அவளுக்கு எதைச் சொல்வது? தான் ஒரு நிலைக்கு வந்தபிறகு இதெல்லாம் மாறும். அக்கா இப்படித் தன்னை சீரழித்துக்கொள்ள வேண்டாம். அம்மா கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சீக்கு மாறுமென நடந்து தேய வேண்டாம். அப்பனுக்குக்கூட இந்த அலைச்சல் தேவையிருக்காது.
ஒருவேளை அதெல்லாம் அப்படி நடந்தேயிருக்கும். தான் செய்த பெரும் தவறினால் இன்று எல்லாம் போய்விட்டது. நிலைமை முன்னிலும் கீழாக ஆகிவிட்டது. இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்…
அப்படித்தான், தனது தோல்விக்குக் காரணமான, வளவு மக்களை மேம்படுத்தும் முயற்சியாவது நல்ல பலன் கொடுத்ததா? அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஓட்டு வீடுகள், அவற்றில் மின்சார வசதி, குடிநீருக்குக் குழாய்கள். இவைகளால் அவர்களின் தரம் உயர்ந்துவிட்டதா என்ன? இன்னும் மற்றவர்களின் காடுகளில் தம் வியர்வையை விதைப்பதும், கிடைக்கிற காசில் பாதி முக்காலையும் கள்ளுக்கடைகளில் தீர்ப்பதும்தான் நடக்கிறது. இதோ அடுத்த மாத விசேஷத்துக்காக, ஊருக்கு ஒதுக்கமாக ராத்திரி தூக்கமிழந்து தப்பட்டையடித்துப் பழகுகிறவர்களை என்ன செய்வது? இவர்களை மாற்ற முடியும் என்று தான் கொண்டிருந்த வைராக்கியம் எத்தனை அபத்தமானது என எண்ணம் எழுந்தது.
வளவு மெல்ல மெல்ல மாற்றம் பெற்றது கந்தசாமியால்தான். அவன் ட்டி.ட்டி.சி. படித்துக்கொண்டிருக்கையில் நடந்தது அவை யாவும். அரசு மானியக் கடனில் குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளாக முயற்சியெடுத்தது முதல் காரியம். மின் விளக்குகளும் போடப்பட்டன. ஊருக்குள் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டபோது, இங்கேயும் குழாய்கள் இணைக்கப்பட்டன. பல பேர் தங்களின் குழந்தைகளை மாடு மேய்க்கும் வேலையிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினர். கந்தசாமி இதற்காகவெல்லாம் நிறைய அலைந்தான். அலுவலர்களைப் போய்ப் பார்த்தான். தன் வளவுக்காரர்களோடு ராத்திரிகளில் உறக்கம் கெட்டுப் பேசினான், ஓயாமல் செயல்பட்டான்.
நேரம் பொழுதின்றி அலைந்ததில் சரியாக வகுப்புக்குப் போகவும், படிக்க முடியாமலும் போனது. தேர்வுக்காக செய்ய வேண்டிய எதையும் இறுதி அவகாசத்தில் இரவு பகலாயிருந்தும் செய்து முடிக்க முடியவில்லை. ரெக்கார்டுகள் எழுதுவதும், கமிஷனுக்குத் தேவையானதைச் செய்வதும் அவ்வாறே. ரிஸல்ட்டும் அவன் எதிர்பார்த்ததாகத்தான் அமைந்தது.
“தோத்துட்டயா…?”
அம்மாவுக்கு அது தாங்க மாட்டாத வலியாக இருந்தது.
“நீ நல்லாப் படிச்சு பாசாகோணும்னு, இருந்த ஆடுகளயெல்லாம் வித்தம். ஒரு நாளு பொழுதிக்குங்கூட பெருசா செலவு பண்ணாம, நல்ல துணிமணி எடுக்காம… இதா, இந்தக் கொளந்த கூட குண்டி கிளிஞ்ச டவுசரத்தா போட்டுட்டு பள்ளிக்கொடம் போகுது. அப்புடி மிச்சம் பண்ணி…”
”ஏ,… நீ சும்மாருக்க மாட்ட?” அருக்காணி அம்மாவை அதட்டினாள். அக்காவை நேரடியாகப் பார்க்க கந்தசாமிக்குத் தெம்பில்லை. மணிகண்டன் அவளது மடியில் சாய்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு கந்தசாமியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தனக்காகத்தான் அவர்கள் பட்டது, படுவது எல்லாமும். அவர்களின் கடைசி நம்பிக்கையையும் தான் இப்படிப் பாழாக்கிவிட்டு… அப்படி தான் முன்னெடுத்துச் செய்ததாவது இன்று நல்லபடியாக இருந்தால் பரவாயில்லை. சாக்கடையும், குப்பைகளும், மாட்டுத் தோல் காயும் வீடுகளும். இதிலிருந்து மீளவே மாட்டோமா? ஒரு வெள்ளமோ, பூகம்பமோ வந்து எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிடாதா…?
தெளிவின்றி ஏதேதோ குழப்பங்களுக்கிடையில் புரண்டுகொண்டிருக்கையில், முன் கதவைத் திறக்கிற சத்தம் மெலிதாகக் கீறிச்சிட்டது. சத்தம் வந்துவிடக் கூடாதென்று கவனமாக அதைத் திறப்பது தெரிந்தது. அதை மூடும்போதும் அப்படியே. அருக்காணிதான். எப்போதாவது கிடைக்கிற சில ரூபாய்களுக்காக அவள் தினமும் இப்படிப் போய் இருளில் நின்று… அவனுக்கு அழுகை வந்துவிடுவது மாதிரி இருந்தது. அடக்கிக்கொண்டான். ஏனோ தெரியாமல் இன்றைக்கு இப்படி எல்லாவற்றையும் நினைக்கத் தோன்றுகிறது. தூக்கமாவது வந்து தொலைக்கக் கூடாதா.
கல்யாணமான இரண்டாம் வருடமே கைக் குழந்தையோடு அருக்காணி பிறந்த வீட்டுக்கு வந்தாள். கல்யாணத்தின் முன்பிருந்தே புருசங்காரனுக்கு ஒருத்தியோடு தொடுப்பு இருந்தது. அருக்காணியை அடித்து விரட்டிலிட்டான். இங்கே வந்ததில் அருக்காணியின் வாழ்வும் இப்படியானது.
இரண்டாவது ஆட்டம் முடித்து பக்கத்து ஊரிலிருந்து ஆட்கள் வருகிற வரை அருக்காணி காத்திருப்பாள். அதற்குள் ஏதும் தேறலாம். இல்லாவிட்டால் சினிமா பார்த்து வருகிறவர்களில் யாரேனும் வரக்கூடும். அதையும் பார்த்துவிட்டு வர இரண்டு இரண்டரையாகிவிடும். காலையில் எழுந்து வேலைக்கும் போக வேண்டும் அவளுக்கு.
இத்தனை பாரம் உடையவள் கந்தசாமி தேர்ச்சியுறாமல் ஆனபோது வருத்தத்தை வெளிக்காட்டாமல், அம்மாவையும் அடக்கினாளே. அப்பன் அதன் பின் கள்ளோ சாராயமோ குடித்து வரும்போதெல்லாம், இதே புலம்பல்தான். அதைக் கண்டிக்க வீட்டில் யாருக்கும் இயலாது. அப்படி ஏதும் பேசினால், அழ ஆரம்பித்துவிடுவார். பார்க்கச் சகிக்காது. நெஞ்சுக்கூடு விம்ம இருமியபடி அவர் அழுவது, அடிபட்ட நாயின் ஒலத்தைப் போன்றது.
நினைக்க பாரம் கூடுவதல்லாமல் குறையவில்லை. தன் மீதான கழிவிரக்கத்திலும், அக்காவையும் மற்றவர்களையும் நினைப்பதாலும்
உண்டான சுய வெறுப்பு. உறக்கமும் அதனால் விட்டுப்போய் அவனோடு கண்ணாமூச்சி ஆடியது. தூரத்தில் கேட்கிற துடும்புச் சத்தம். கந்தசாமி வெகு நேரத்துக்கப்புறம் உறங்கினான்.
யாரோ வீட்டுக்குள் வந்திருப்பதாக உணர்ந்ததும் அறைக்குள்ளிருந்து முன்வந்து எட்டிப் பார்த்தான்.
அங்கிருந்த வடிவேலு, ”வாத்தியாரே,… சின்னையன் ஊட்டுல இல்லியா?” என்று கேட்டான்.
“மஞ்சக்குன்னு போயிருக்குது, மாம ஊட்டுக்கு. நேத்துப் போனது. பத்துப் பதினொரு மணிக்குள்ள வந்துரும்.”
“மேக்கு வாச பெரிய பண்ணாடிச்சி ஊட்டுக்குப் போகோணும். அல்லாரும் போயிட்டிருக்கறாங்கொ. நேத்தே வந்து சொல்லணும்னு பாத்தன். ராத்திரி நெம்ப நேரமாயிருச்சா, வெடியால சொல்லிக்கலாமுன்னு வந்தன். சின்னையன் வந்ததும் வாத்தியத்த எடுத்துட்டு வரச் சொல்லீர்றயா?”
“ம்… சொல்றன்.”
வடிவேலு சிரித்தான். அந்தச் சிரிப்பும் தள்ளாடலும் வெடியக் காலமே அவன் முங்கி எந்திரித்துவிட்டதைக் காட்டின. கந்தசாமிக்கு ஒரு வகையில் பெரியப்பா மகன்தான்.
“ரைட் வாத்தியாரே…! நா வருட்டுமா? அப்பன் வந்ததும் மறக்காம சொல்லிப்போடு.”
கந்தசாமி சிரித்துக்கொண்டான். வலிய இழுத்து வந்த விரக்தியின் சிரிப்பு அது. பழைய புத்தகங்களை அவன் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் தேவையில்லாதவற்றை எடுத்துக் கடையில் போட்டால் காசாவது கிடைக்கும். நிமிர்ந்து பார்க்கையிலெல்லாம் தட்டியில் கிடந்து உறுத்துகின்றன அவை. வடிவேலு வாத்தியாரே என்று அழைத்தபோது உண்டானது போல. இன்னும் அவர்களுக்கெல்லாம் புரியவில்லை. ஆசிரியர் பயிற்சிக்குப் போகத் துவங்கியது முதல் வாத்தியார் என்றே அவனை அழைத்துப் பழகிவிட்டனர்.
அட்டைப் பெட்டியிலிருந்து ரெக்கார்டுகளை எடுக்கையில் பாச்சைகள் கையில் ஊறி ஓடின. பெட்டிக்குள் பல்லி முட்டை ஓடு கூடக் கிடந்தது. எலியோ எதுவோ கடித்துப் போனதில் நோட்டுகளின் கேலிகோத் துணுக்குகள், காகிதத் துணுக்குகள் ஆகியனவும் இருந்தன. கலைத்துக் கலைத்துப் பார்க்கையில் நினைவுகளின் அடுக்குகளிலிருந்தவைகள் வந்து துன்புறுத்தின. பயிற்சிக் கால சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவனுள் வந்து போனார்கள்.
கலைத்த புத்தகங்களை அடுக்கினான். தேவையற்றதை எடுத்து ஓரமாகத் தனியே வைத்தான். மீதியுள்ளதை மறுபடியும் அட்டைப் பெட்டியைச் சுத்தப்படுத்தி அதனுள் வைத்து பழையபடி பத்திரப்படுத்தும்போது, எதற்கு
இதெல்லாம் என்று தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என முக்கியமானவற்றை வைத்துவிட்டு, தேவையற்றதை எடுத்துக்கொண்டான். நாடார் கடையில் கிலோ கணக்குக்குப் போட்டுவிடலாம். வீட்டைப் பூட்டிக் கொண்டான். அம்மாவும் இன்று அருக்காணியோடு வேலைக்குப் போயிருந்தாள். அப்பன் வர நேரமிருக்கிறது.
நாடார் கடையில் புத்தகங்கள் பத்தொன்பது ரூபாய்க்கு விலை போயின. அங்கிருந்து கள்ளுக் கடைக்குப் போனான். கள்ளுக் கடையில், கையில் கள்ளு பாட்டிலும், ஊற்றிக்கொள்ள பிளாஸ்டிக் ‘மக்’குகளுமாய் சிலர். உள்ளிருந்து கள்ளின் நாற்றம் வெளியே வீதி வரையிலும் அடித்தது. கள்ளுக் கடை வாசலில் பெரிய கேனைக் கழுவிக்கொண்டிருந்தான், கள்ளெடுக்கிற கிட்டு. மலைய மூப்பர்களும், மூப்பச்சிகளும் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டபடி வெளியிலிருந்தனர். மூப்பச்சிகள் கள்ளைக் குடித்து ரோட்டில் ஆடியபடியே புருசனைக் கண்டபடி ஏசுவது வழக்கம். அவர்களின் ஐந்தாறு வயதுக் குழந்தைகள் அவர்களுடன் வந்திருந்தன. குழந்தைகளும் மக்குகளைக் கையில் வைத்திருந்தன.
ஒரு லிட்டர் கள்ளும் பொரித்த மீனும் வாங்கி கந்தசாமி கடைக்குள்ளாகவே ஒதுங்கி நின்றான். இங்கே தென்னங்கள்தான். கள்ளியம்பாற போனால் பனங்கள் குடிக்கலாம். அதன் ருசியே தனி. ஆனால் இதற்காக மெனக்கெட்டுப் போக வேண்டும்.
பொரித்த மீனின் மிகையான காரத்தோடு கள்ளைத் தொண்டைக்குள் இறக்கினான். புளித்த நாற்றம். இன்னும் ஒரு லிட்டர் வாங்கிக்கொண்டான். மீனும் கள்ளும் வாங்கியதுபோக, ஐந்து ரூபாயும் சிலுவானமும் பாக்கெட்டில் இருந்தது. வருகிற வழியில் நாடார் கடையில் ஒரு கட்டு பத்தா நம்பரும் தீப்பெட்டியும் வாங்கிக்கொண்டான். பீடி பற்ற வைத்தபடி நடக்கும்போது வாத்தியச் சத்தம் கேட்டது.
மேற்கு வாசல் வீட்டில் குருவாணம்பாளையத்துக்காரரின் மனைவி இறந்துவிட்டாள். நேற்று இரவு பத்து, பத்தரையிருக்கும். கந்தசாமிக்கு வடிவேலு வரும் முன்பே யாரோ பேசி, காலையில் விஷயம் தெரிந்தது. கிழவி சீக்காகப் படுத்து இப்பவோ பிறகோ என்று இழுத்துக்கொண்டு கிடந்ததுதான். இன்றைக்கே எடுத்துவிடுவார்கள். சீக்கு உடம்பு வைத்திருக்கத் தாங்காது.
வீட்டிற்கு வரும்போது வடிவேலு திண்ணையில் இருந்தான். அப்பன் வந்துவிட்டானா எனப் பார்க்க வந்திருந்தான்.
கந்தசாமி ஜாக்கிரதையாக அவனிடமிருந்து தள்ளியே நின்றான். வாசம் தெரிந்துவிடுமோ என்று பயம்.
”இன்னும் வல்ல. கொஞ்ச நேரத்துல வந்துரும். வந்ததும் அனுப்பிச்சு வெக்கறேன்” என்றான்.
அவன் சரியென்று போனதும் கதவு திறந்து உள்ளே போனான். வாத்தியச் சத்தம் வீட்டுக்குள்ளும் கேட்டது. அப்பன் வாத்தியமடிப்பதே தனி அழகுதான். நல்ல ஆட்டக்காரர் அவர். அதனால்தான் அவரை விடாமல் அழைக்கிறார்கள். ராத்திரி நேரம் இழவு வீடுகளில் கண்ணுறங்காதிருக்க
காலில் சலங்கை கட்டி மாதேரிகள் கதைப் பாட்டு படிப்பார்கள். அதில் அப்பன் பேர் வாங்கினவர். சாராயம் குடித்த கண்களில் சிவப்பு பொங்க அவர் ஆடுவதை சிறு வயதில் கந்தசாமி ரசித்தது உண்டு. வாசப் பணத்துக்கு மாத்து விரித்து கதைப்பாட்டு நடக்கும். அப்போது அந்தப் பாட்டையெல்லாம் சுந்தசாமி வீட்டில் வந்து பாடிக்கொண்டிருப்பான்.
சுவரில் சாய்ந்து அமர்ந்து இப்போதும் பாடிப் பார்த்தான். வரிகள் ஒன்றிரண்டு ஞாபகம் வந்து, மீதியெல்லாம் மறந்துவிட்டது. நினைப்பு வரவே மூலையில் கயிறு கட்டித் தொங்கிய அப்பனின் தப்பட்டையைப் பார்த்தான். துடைக்காததில் தூசு படிந்து இறுக்கம் தளர்ந்து இருந்தது அது.
குருவாணம்பாளையத்துக்காரர் வீட்டில் கூட்டமாக இருந்தது. அழுகையும் பெண்களின் ஒப்பாரியும் வெளியே கேட்டன. வாசலில் பெஞ்சுகளும் மடக்கு நாற்காலிகளும் போடப்பட்டு நிறையப் பேர் சோகமாக்கிக்கொண்ட முகத்தோடு உட்கார்ந்திருந்தனர். வடிவேலுவும் மற்றவர்களும் தப்பட்டைகளைக் காய்ச்சிக்கொண்டிருந்தனர். செத்த கிழவியின் உறவுப் பெண்ணொருத்தி நாலு வீடு தள்ளி வருகிறபோதே உரத்து அழுதபடி ஏதோ ஆவலாதி சொல்லிக்கொண்டும் வந்தாள். வடிவேலு, இவன் போவதைப் பார்த்துவிட்டான்.
”என்ன வாத்தியாரே,… சின்னையன் வந்தாச்சா?” என்று கேட்டான்.
“இல்ல. நான் வந்திருக்கறேன்.”
“நீ எதுக்கு வந்த?”
“இதுக்குத்தான்!” இடது தோளில் கயிறில் மாட்டித் தொங்கும் தப்பட்டையில் குச்சியால் தட்டினான். தபதப வென்று தொய்ந்துபோன சத்தம் வந்தது.
“வாத்தியாரே,… நீயா?” என்றான் அவன்.
“ஆமா…”
கந்தசாமி ஓரமாக அவர்கள் தீப் போட்டிருந்ததைப் பார்த்தான். தப்பட்டையைத் தோளிலிருந்து மாற்றிக்கொண்டான். அவர்களிடையே குத்த வைத்து நெருப்பின் பக்கம் அமர்ந்தான். சருகுகளும் காய்ந்த ஓலைகளும் எரிகிற நெருப்பு. அதில் காய்ச்சியதும் தோல் இறுகியது. விரலில் அடித்தபோது சத்தம் டபடபவென்று வந்தது.
“வேண்டாம் வாத்தியாரே! நீ போயிரு, சின்னையன் வந்துதுனா திட்டும்” என்று வடிவேலு தடுத்தான்.
“ஒண்ணும் திட்டாது.”
“எனக்குத் தெரியும் வாத்தியாரே! எங்கிட்ட எத்தன சொல்லியிருக்குது தெரியுமா…? போயிரு வாத்தியாரே. அப்பன் வருட்டும்.”
அவன் கந்தசாமியிடமிருந்து தப்பட்டையைப் பிடுங்க வந்தான். கந்தசாமி விடாப்பிடியாக நின்றான். வடிவேலுவோடு சேர்ந்து மற்றவர்களில் சிலரும் பேசினர்.
“எங்கப்பா மாதேரிக…? வந்து வாத்தியத்தப் போடுங்க. சும்மா பேசிட்டு நிக்கறதா வேல?”
யாரோ சத்தம்போட, வாசலுக்கு வந்தவர்களில் கடைசியாக வடிவேலு தயங்கித் தயங்கி நின்றான். கந்தசாமி முன்னதாக வந்தான். இடது தோளில் கயிறை மாட்டி, தப்பட்டையை நெஞ்சோரம் அணைத்துப் பிடித்தான். இடக்கை குச்சிகள் விளிம்போடு மேலே நின்று ஒட்டி அடிக்க, வலது கைக் குச்சி விட்டுவிட்டு அடிக்கத் துவங்கியது. அப்பன் வந்துவிடுவானோ என பயமும் இருந்தது.
ஒரு அடி நின்று அடுத்த வகைக்கு மாறும்போது, கந்தசாமி தனியே பிரிந்து அடித்தான். அப்பனைப் பற்றிய பயம் போய், கை நடுக்கமின்றி அடித்தான். வடிவேலு அவனிடம் என்னவோ சொல்ல நெருங்கினான். உள்ளே ஒப்பாரி வலுத்தது.
கந்தசாமிக்கு வாத்தியச் சத்தத்தைத் தவிர்த்து வேறெதுவும் கேட்கவில்லை. உற்சாகமாய் அவன் ஆடவும் தொடங்கியிருந்தான்.
– நிகழ், டிசம்பர் 1994.
குறிப்பு: இக் கதை நிகழ் இதழில், விடுவிப்பு என்னும் கண்ணிக்குள் சிக்கி… என்ற தலைப்பில் பிரசுரமானது. சிறுகதைத் தொகுப்பில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.