தனி ஒருத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 199 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதிதாக அவர் அங்குபோய்க் கொஞ்ச நாட்களே ஆகின்றன. உழைப்பு ஒன்றையே தங்கள் வாழ்க்கையின் அடிகோலாகவும், அளவுகோலாகவும் ஆக்கிக்கொண்ட சமுதாயத்தில், தொழில் பார்ப்பதென்பது விலங்குகளோடு பழகுகிற மாதிரி! 

ஓடித் திரிகிற காலத்தில் அணுகவே விடாத விலங்கு களைப் பிடித்துப் பயிற்றினால் அவை அடித்தாலும் உதைத் தாலும் வாங்கிக் கொள்கிறதில்லையா? அதையொத்த மனித ஜீவன்கள் தான் ஈழநாட்டின் மலைத் தோட்டத் தொழி லாளர்களோ! 

கண்டக்டராக அவர் அந்தத் தோட்டத்தைப் பொறுப் பேற்று ஒரு வாரமாவதற்குள்ளாகவே அவரது கவனத்தில் விழுந்துவிட்டான் செம்பத்தேவன். அதற்குள்ளாகவே அவனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார் மாணிக்க சாமி. 

கறுப்பு நிறம்; கட்டுமஸ்தான உடம்பு; கட்டைக் குரல்; காதிலே சிறு வளையம்; கறுத்து அடர்ந்த மீசை. 

முதற்பார்வையில் யாரையும் அச்சுறுத்தும் தோற்றம் அவனுடையது. ஆனால், அங்கு வருவதற்கு முன்னால் அவனைப் போல எத்தனையோ பேரை மாணிக்கசாமி பார்த் திருக்கிறார்; மனித உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ முரடர்களோடு மோதியிருக்கிறார்; நியாய அநியாயத்தை நினைத்துப் பார்க்க விரும்பாத குண்டர்களோடு மல்லுக்கு நின்றிருக்கிறார். 

தொழிலாளர்களின் எழுச்சியைத் திசை திருப்பிக் கொண்டும், துரைமார்களின் நச்சரிப்பைப் பொறுத்துக் கொண்டும் உத்தியோகம் வகிப்பதென்பது, அதுவும் மனச் சாட்சிக்கு மதிப்புக் கொடுக்கிற அவருக்குச் சிரமமாகவே இருந்தது. அதனாலேயே இருபத்தைந்து வயது இளைஞ ரான மாணிக்கசாமி இதற்குள்ளாகவே ஏழெட்டுத் தோட்டங் களை விட்டு மாறி வந்திருக்கிறார். 

சாவதற்கு முன்னால் தன் மகளை மஞ்சள் குங்குமத் தோடு பார்க்க விரும்பிய தாயின் ஆசையை (தனது போராட்டம் மிக்க வாழ்க்கையின் மேடுபள்ளங்களை நன்றாக உணர்ந்த) மாணிக்கசாமி பூர்த்தி செய்யாமலே இருந்தார். இறுதிவரை அது பூர்த்தியாகாமலே போய்விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், அவரது அன்னையும் கண்ணை மூடிவிட்டாள். 

தன்னை நம்பி யாருமில்லையென்று ஆகிவிட்ட அன்று தொட்டே வாழ்க்கைப் போராட்டத்தை வெகு திரமாக எதிர் நோக்க ஆரம்பித்துவிட்டார் மாணிக்கசாமி. 

“என்ன இருந்தாலும் இவ்வளவு வேகம் கூடாதுங்க. நீங்க இந்த இடத்துக்குப் புதிசு. அதனால சொல்றன்’ இருள் படர்கிற நேரம்; ஒரு நாள், பங்களாவுக்கே அவரைத் தேடிக்கொண்டு வந்த செம்பத்தேவன் சொன்னான். 

அவன் உரத்து விடுகிற சொற்களின் உற்பத்திஸ் தானத்தைத் தேடுவதுபோல, அவனையே உற்றுப் பார்த் தார் மாணிக்கசாமி. அவரது பார்வையின் ஊடுருவலைச் செம்பத் தேவனால் நிமிர்ந்து எதிர் நோக்க முடியவில்லை; அவன் மருண்டு போனான். 

“என்னவோ, உங்க நன்மைக்குச் சொல்லிவிட்டேன்!” என்று கூறி வெளியேற ஆரம்பித்தவனை மாணிக்கசாமியின் நிதானமான சொற்கள் தடுத்து நிறுத்தின. 

”செம்பத் தேவா! என் ஒருத்தனுடைய நன்மைக்காக நீ இவ்வளவு பிரயத்தனப்பட வேண்டாம். உனக்கு முடியு மானால், நினைக்கவும் பேசவும் தெரியாது விழிக்கிற சமுதா யத்தைச் சேர்ந்த உன் சக தொழிலாளர்களின் நன்மைக்காக நியாயக்குரலை முழு வலுவோடு எழுப்பு, போ!'” 

அவரது சொற்களில் எந்த அளவு அர்த்தத்தை அவன் புரிந்து கொண்டானோ? 

தனது உடலமைப்பையும், உரத்த குரலையும் வைத்து தொழிலாளர்களை வயப்படுத்திக்கொண்டு, இதற்கு முன் பிருந்த கண்டக்டர்களிடமும், சின்னத் துரைமார்களிடமும் ‘சபாஷ்’ எடுத்த செம்பத்தேவனுக்கு மாணிக்கசாமியின் போக்கு எரிச்சலை ஊட்டியது. 

அவர் இளைஞராயிருக்கலாம்! அதற்காக, இப்படியா எடுத்தெறிந்து பேசுவது? பார்த்துவிடுகிறேன் அதையும். 

அவரை அவன் நிழல்போல் தொடர்ந்து கவனித்தான். அவரது ஒவ்வொரு செய்கைக்கும் விசேஷ அர்த்தத்தைக் கற்பித்து, அவரை பாதிக்கக் கூடியதாக ஒன்றேனும் அமை யாதா என்று அவன் எதிர்நோக்கியிருந்தான். 

ஆளுக்கு முதலாகப் பேருக்கு நூற்றியெழுபது மரங்களைக் கால்வாத்துப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வருபவன் செம் பத்தேவன்தான். முள்ளுக்குத்தா? முதலாளாய் நிரையி லிருந்து இறங்கி வருபவன் அவனாகத்தானிருப்பான். 

காணு வெட்டா, கன்று நடவா; பில்லு வெட்டா, பிடுங்கு நடவா? எதுவாயிருந்தாலும் முதலில் முடிப்பவன் செம்பத்தேவன் தான். 

இப்போது அந்த விரைவெல்லாம் எங்கே போயிற்று? இயலாதவனாகிவிட்டானா அவன்? என்னதான் நடந்து விட்டது அவனுக்கு? 

அன்று வேலை செய்த அதே செம்பத்தேவன்தான். ஆனால் அவர் புதிதாக வந்தவர்! அவனுக்குப் ‘பொசு பொசு’ வென்று வந்தது. 

இரண்டு மணியாகப் போகிறது. வெயிலின் கடுமை இன்னும் குறைந்த பாட்டைக் காணோம். தொழிலாளர்கள் அசந்து போய்விட்டனர். காலை உணவுக்குப் பின்னர் அவர் கள் கண்டது, ஒரு போத்தல் சாயத்தண்ணீரும், இரண்டு வாய்க்கு வெற்றிலைச் சருகும்தானே! 

இன்னும் எட்டே மரங்கள், செம்பத்தேவன் ஒருவித அலட்சியத்தோடு முப்பது நாற்பது மரங்கள் பின்னால் வெட்டிக் கொண்டிருக்கும் தன் சக தொழிலாளர்களைத் திரும்பி பார்த்தான். 

கவ்வாத்துக் கத்தி கையில் பாய்ந்தாற்போல ‘சுரீர்’ என்றது அவனுக்கு. சரியாக, அவனுடைய நிரையிலேயே தேயிலைச் செடிகளுக்கு மேலாகப் பின்னிக் குவிந்து கிடந்த மிலாறுகளைக் கைப்பிரம்பால் அப்புறப்படுத்தியவாறு ஏறி வந்து கொண்டிருந்தார் கண்டக்டர். 

அவரைத் தான் கவனிக்காததைப் போல வேலையிலீடு பட்டான் செம்பத்தேவன். அவன் கிட்டே வந்து நின்று, அவன் கவ்வாத்துப் பண்ணுகிறதையே கவனித்துக் கொண் டிருந்தார் மாணிக்கசாமி. அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை; அவரும் வாய் திறந்து பேசவில்லை. 

அந்த மரத்தைக் கவ்வாத்துப் பண்ணி முடித்து நிமிர்ந் தானோ இல்லையோ, இவ்வளவு ஒழுங்கா வெட்டத் தெரிந்த நீயா, இத்தனை மரங்களையும் இவ்வளவு மோச மாக கவ்வாத்துப் பண்ணியிருக்கிற” -ஆத்திரத்தோடு கேட்டார். 

அவன் அவரை நிமிர்ந்து பார்த்தான், கத்தியால் கொத்தி விடுவேன் என்று சொல்லுவது போல. 

“இயன்ற வரைக்கும் தொழிலை ஒழுங்காகச் செய்வது தான் மனிதனுக்கு அழகு. விரைவாக முடிக்க வேணுங்கிற தற்காக நடுவாதுகளைக் கலைத்து அப்புறப்படுத்தாமலேயே விட்டு வந்திருக்கிற நீ” 

“சுண்ணாம்பு தண்ணியில கழுவுறது தானுங்கள…” அவன் இடை மறித்தான். ”அது எனக்குத் தெரியும்! லைம் வாஷிங் இந்த முறை பண்ணுவது இல்லையென்பதற்காகத் தான் கலைச்சு வெட்டணும்னு ஆரம்பத்திலிருந்து சொல்லி வர்றன்… நீ கவ்வாத்து பண்ணியிருக்கிற நிரையில மீனா புல்லு எடுக்க மட்டும் குறைந்தது மூணு ஆளாவது வேணும் போல இருக்கு” 

“நீங்க சொல்லுறபடி பார்த்தா நூத்தியிருபது மரங்கள் தான் வெட்ட முடியும்” அவன் சடக்கென்று பதில் சொன்னான். 

“இது உன்னுடைய சொந்தத் தோட்டமில்ல. உனக்கு முடிஞ்சதை பேருக்கி வெட்டச்சொல்ல, உனக்கு முடிய லேன்னா சொல்லிவிட்டு இறங்கு, ஏன் மத்தவங்களுக்கும் சேர்த்து நீ பேசுற… “அவருடைய குரலின் கடூரம் தொழி லாளர்கள் அத்தனை பேரையும் அதிரவைத்தது. 

நித்திரைக்கு முன்னால் அன்றைய சம்பவங்களை நினைவுபடுத்தி, அதன் நியாய அநியாயங்களைக் கோவை பண்ணிப் பார்ப்பதென்பது மாணிக்கசாமிக்குப் பழக்கமாகி விட்ட ஒன்று. 

நாளை கவ்வாத்துக் காட்டில் என்ன நடைபெறவிருக்கிற தென்பதைப் பற்றிய சிந்தனையிலேயே இரவு கழிந்தது மாணிக்கசாமிக்கு வாய்ச் சொல் முற்றிக் கைகலப்பில் முடிந்த பல நிகழ்ச்சிகள் அவரது நினைவில் வந்து போயின. 

உஷ்ணம் ஏறாத கதிர்க்கீற்றுக்கள் தேயிலைத் தளிரில் படிந்து உறவாடுகிற பனித்திவலைகளை முற்றாக இன்னும் அகற்றவில்லை. கொழுந்துக் காட்டில் நின்று, காலை நிறுவையைக் கவனித்துவிட்டு, கல்வாத்துக் காட்டுக்கு வந்த கண்டக்டரின் கண்கள் செம்பத்தேவனைத் தேடின. பார்வை யில் படாதவாறு கூட்டத்தோடு கூட்டமாய் நின்றாலும், அவரது கூர்மையான கண்களுக்கு அவன்அகப்படாமலில்லை அவனும் அவர் வருவதைக் கவனித்தான். 

என்ன நடக்கப் போகிறதென்றறிய அவன் துடித்தான். என்ன நடந்திருக்கிறதென்றறிய அவர் முயன்றார். 

பார்வையின் கூர்மை அவரிடம்; பதற்றத்தின் மறைப்பு அவனிடம். 

பார்வையின் கூர்மையில் பதற்றத்தின் மறைப்பு பட்டு வீட்டது. நின்ற இடத்திலிருந்தே காலை கவ்வாத்து தொடங்கிய இடம் வரைக்கும் ஓடவிட்ட ஒரே பார்வையில், என்ன நடந்திருக்கிறதென்பதை அவர் அறிந்து கொண்டார். 

வெகு மந்த கதியில் வேலை நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. தன்னருகே வந்து நின்ற கங்காணியை ஏறிட்டுப் பார்த்தார் மாணிக்கசாமி. அவனது தோற்றம் பரிதாபமாக இருந்தது. நடுங்கியும் விழித்தும் நின்ற அவனது இயால மையை அவர் உணர்ந்துகொள்ளாதது போலப் பேசினர். 

“பத்து மணியாகிறது வெங்கடாசலம்! ஆகக் கூடுதலாக வெட்டியிருப்பவன் ஐம்பது மரங்கூட வெட்டியிருக்க மாட்டான் போலிருக்கே…” 

“அம்பத்திரெண்டுங்க?” செம்பத்தேவன் நிரையில அது போதுமா?” அவர் அதட்டினார். “காலை நேரத் திலேயே இப்படியென்றால், வெயில் ஏற ஏற இன்னும் வேகம் குறையும். நூற்றியெழுபது மரத்தை வெட்டி முடிப்பது எப்ப?”

“இன்னைக்கு என்னன்னு தெரியலீங்க. இப்படி மெதுவா வெட்டுறானுங்க” – கங்காணி சலித்துக் கொண்டான். 

“ஏன் தெரியாது? வெட்டுகிறவன் வரம்பு கட்டுனாப் போல ஐம்பத்திரண்டு மரத்தை வெட்டுவதற்குள் ஆயாசப் பட்டு நின்றா, அடுத்து வெட்டுகிறவர்கள் அவனுக்குப் பின்னால் நிற்க வேண்டியதுதான…” உரத்தே பதில் சொன்னார், செம்பத்தேவன் காதில் விழும்படி. அவன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். 

“அத்தனை பேருக்குஞ் சொல்லுறன். நூற்றியெழு பதுக்கு ஒரு மரம் குறைச்சு வெட்டுகிற யாருக்கும் பேர் கிடைக்காது. அரைப் பேர்தானும் இல்லை. ஞாபகம் வச்சி கிட்டு வேலை செய்யுங்க.” 

“நீங்க சொல்ற அளவுக்கு கலைத்து வெட்டனும்னா அப்படி முடியாதுங்க ஐயா” – செம்பத்தேவனுக்குநாலைந்து நிரைகள் தள்ளி வெட்டியவன் பதில் சொன்னான். 

“மனதில் ஒண்ணை வைத்துக் கொண்டு மரத்தைப் பார்த்தால் கவ்வாத்துப் பண்ண கைவராது தான்” குத்திப் பேசினார் அவர். 

“இவ்வளவு கண்டிப்பா வெட்டணும்னு எங்களால முடியாதுங்க, நாளையிலிருந்து நாங்களெல்லாம் வேற வேலைக்குப் போயிர்றம்” முதலில் பேசிய அவனே பேசி னான். மாணிக்கசாமி பார்வையைச் சுழல விட்டார். அத் தனை தொழிலாளர்களும் அவனது பேச்சை அங்கீகரிப்பது போல, மலையை விட்டு இறங்கத் தயாராயினர். 

விளங்கிக்கொள்ளும் சக்தியை இழந்துவிட்ட வீசை யொடிந்துபோன சமுதாயம்! முன்னே வழி நடக்கும் துணிச் சல் ஒருத்தனுக்கிருந்தால் விளைவை எண்ணிப் பாராது அவனைத் தொடர்ந்து நடக்கத் தயாராயிருக்கும் செம்மறிக் கூட்டம்! இடையில் தடைபட்டுப் போன திருமண வீடாய் வெறிச்சோடிக் கிடக்கிற கவ்வாத்துக் காட்டில் மாணிக்கசாமி நின்று கொண்டிருக்கிறார், சிந்தனையில் வாழ்ந்தவராய். 

வயலில் பயிர் செழிக்க, களை எடுக்கிறோம்; செடியில் தளிர் துளிர்க்க, கவ்வாத்து வெட்டுகிறோம்; வாழ்வில் நெறி தழைக்க ……? 

இவ்வளவு நேர்த்தியாகவும், விரைவாகவும் வெட்டுவார் களென்று எதிர்பார்க்கவே இல்லை. எதிர்பார்த்ததற்கும் மேலாகவே செய்திருக்கிறார்கள். 

மாணிக்கசாமி திருப்திப்பட்டுக் கொண்டார். காலையி லிருந்து கவ்வாத்துக் காட்டிலேயே நிற்க வேண்டியதாகி விட்டது. 

தவறான தூண்டுதலுக்குட்பட்ட தொழிலாளர் களின் தாக்குதலைத் தவிர்க்க வேண்டுமே! 

மக்கள் தொகை அதிகமாகி விட்ட அளவுக்கு, அவர்களுக் குக் கொடுப்பதற்கு வேலை இல்லை. தோட்ட நிர்வாகம் வாரத்தில் நான்கு நாட்களே ஆண்களுக்கு வேலை என்று முடிவு செய்தது. பக்கத்துத் தோட்டத்தின் நிலைவரம் மாணிக்கசாமிக்குக் கைகொடுத்த உதவியது. கவ்வாத்தும் பண்ணத் தெரிந்த தொழிலாளர்களுக்கெல்லாம் தானிருக்கும் தோட்டத்தில் கவ்வாத்துவெட்ட வழி பண்ணிக் கொடுத்து விட்டார். 

செம்பத்தேவன் சவுக்கு மரத்தடியிலிருந்து கவ்வாத்துக் காட்டையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே இன்னும் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். அவர் களது பார்வையில் கலவரம் நிறைந்திருந்தது. அவர்கள் அத்தனை பேரும் கவ்வாத்துக் காட்டையும் செம்பத் தேவனையும் மாறி மாறிப் பார்த்தனர். 

“என்ன அண்ணே, இப்படி ஆயிருச்சு அவர்களில் ஒருவன் கேட்டான். 

“ஆமாம்டா, நாம் நினைத்த மாதிரி மனுஷன் அப்படி ஒண்ணும் இலேசுப்பட்ட ஆளு இல்லை” செம்பத்தேவன் தொடர்ந்தான். ”ஆனா, அவருக்குத் தொழில் மாத்திரந்தான் தெரியும். எனக்கு இந்த மண்ணையே தெரியும். இது நான் பொறந்த மண்ணு. இதோட மூலை முடுக்கெல்லாம் எனக்குத் தெரியும்” ஏதோ தீர்மானித்து முடித்தவன் போலப் பேசி முடித்தான் செம்பத்தேவன். 

மலையிலிருந்து தங்கள் வேலையை முடித்து விட்டு இறங்கிக் கொண்டிருந்தவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார் மாணிக்கசாமி. மூன்று நாட்கள். மூன்று யுகமாக நகர்ந்தது அவருக்கு. கவ்வாத்து பண்ண மறுத்த. தொழிலாளர்களுக்கு வேறு சில்லறை வேலைகளும் கொடுக்காமலிருக்க, துரையிடம் கூறி வழிபண்ணிவிட்டார் அவர். ஒரு கிழமையில் நான்கு நாட்கள் உழைத்துக் கிடைத்த பத்து ரூபாய் அதையும் இழந்துவிடத் தொழி லாளர்கள் எத்தனை நாள் சம்மதிப்பார்கள்? 

மூன்று நாட்களுக்குள்ளாகவே முணுமுணுப்பு பெரியதாகி விட்டது. செம்பத்தேவன் திகைத்துப் போனான். 

இருள் உலகை ஆளத் தொடங்குகிற நேரம். ஐந்தாறு பேர் வீட்டு வாசலில் வந்து நிற்பதை அவதானித்தார் மாணிக்கசாமி. அவர்களனைவருமே கவ்வாத்து வெட்ட முடியாதெனக் கூறிச் சென்ற தொழிலாளர்கள். 

தயங்கித் தயங்கி அவர்கள் நிற்பதை அவதானித்த மாணிக்கசாமி “ஏன், என்ன விஷயம்? உள்ளே வந்து வெளிச்சத்தில் நின்று பேசுங்களேன்” என்று அழைத்தார். 

உள்ளே வந்த அறுபேரும் கைகட்டி வெகு அடக்கமாக நின்றனர். மாணிக்கசாமி மனத்திற்குள் சிரித்துக் கொண்டார். “அவ்வளவு விரைவில் அடங்கிவிடக்கூடியதா, அவர் களின் வீறாப்பு?” 

“என்னமோங்க ஐயா, கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போயிட்டாங்க. சாப்பாட்டுக்கு மிச்சம் கஷ்டமாயிருக்குங்க. நாளையில இருந்து கவ்வாத்துக்கு வந்துர்றங்க” – முதலாமவன் பேசினான். 

“அவ்வளவு சுலபத்தில் முடியுமா? மூன்று நாட்களுக்கு. முன்னால் தனி ஒருத்தனது பேச்சைக் கேட்டு மலையிலிருந்து அத்தனை பேரும் வேலை செய்ய முடியாதென்று இறங்கினீர் களே. அப்போது எங்கே போயிற்று, குடும்பத்தை பற்றிய நினைவுகளும், பிள்ளைகள் பற்றிய கவலைகளும்?’’ 

அவர்கள் மௌனமாய் நின்றனர். 

“பிறரொருத்தருக்கு ஆதரவாயிருக்க வேண்டுமென் பதற்காகத் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் அநியாய மாகப் பட்டினிபோட்டுவிடத் துடிக்கிற அளவுக்கு ஏமாளியா யிருக்கிற சமூகத்தைச் சேர்ந்த நீங்கள் மிகவும் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டாமா?”-அவர் கேட்டார். 

“இந்த ஒருமுறை ஏதோ தெரியாம செய்திட்டோங்க. நீங்களே பார்த்துக்கிட்டிருங்க இனி இந்த மாதிரி விஷயங் களிலெல்லாம் தலையிட மாட்டோம்”- மூன்றாவதாக நின்றவன் பேசினான். 

”காலத்துக்குக் காலம் யார் யாரையோ நம்பிக் கெட்டுப் போய்விட்ட வம்சத்தைச் சேர்ந்த நீங்கள் இந்த மண்ணை மாத்திரம் நம்ப மறுக்கிறீர்கள், உங்களுடைய மக்களை நம்பி நேசிக்கிற அளவுக்கு இந்த மண்ணையும் நம்பி நேசிக்கப் பழகியிருப்பீர்களேயானால். இவ்வளவு மோசமான நிலைமையில் உங்கள் வாழ்க்கை இராது.” 

மேடையில் நின்று பேசுகிற தலைவரின் பேச்சைக் கேட்பது போல, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந் தனர் அந்த அறுவரும். 

அறுவரது முகங்களையும் உற்று நோக்கினார் மாணிக்க சாமி. சோர்வில் வதங்கிப் போன அந்த வதனங்களில் ஆர்வ எதிர்பார்ப்பின் இரேகைகள் படர்ந்து கிடந்தன! 

மேசை ‘டிராயரைத் திறந்து முப்பது ருபாயை எண்ணி எடுத்து முதலாவதாக நிற்பவனிடம் கொடுத்து விட்டுத் தொடர்ந்தார். “முத்து ரெங்கா! கவ்வாத்து வேலை இன்னுமிரண்டு நாளில் முடிந்துவிடும். அது முடியும் வரை உங்களில் யாருக்கும் வேலை கொடுப்பதில்லையென்று துரை தீர்மானித்துவிட்டார். இரண்டு நாட் கழித்து உங்களுக்கு வேலை தரலாம். அதுவரைக்கும் இதை வைத்துக் கொள்ளுங்க. இனி புத்தியா பிழைத்துக் கொள்ளுங்க. என்று முடிக்க வந்தவருக்குச் செம்பத் தேவனைப் பற்றிய நினைப்பு எழுந்தது. 

“ஆமா, செம்பத்தேவனை, எங்கே ஆளையே காணோம்” அவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவர் அவர்களிடம் கேட்டார். 

“வேண்டாங்க ஐயா உங்களைப் போன்ற தங்கமான மனசு உள்ளவங்களுக்கு அவனைப் பற்றிய நெனப்பே வரக் கூடாதுங்க. அவன்கிட்ட எதற்கும் ஜாக்கிரதையாகப் பழகுங்க’ ‘முத்து ரெங்கம் சொன்னான். 

மாணிக்கசாமி வாய் விட்டுச் சிரித்தார். 

“என்ன முத்துரெங்கம்! அப்படிச் சொல்லிவிட்ட உங்கள் எல்லாரையும் எனக்கு அவன் மீதுதான் விருப்பமதி கம், தனக்குச் சரி என்று பட்டதை அவன் செய்தான். அவனுடைய செய்கைதான் எனக்குப் பிடிக்கவில்லை மற்றும்படி அவனது தைரியம் யாருக்கு வரும்…” அவர் கேட்டார். 

எப்படிச் சொல்வதென்று தெரியாததால், ஏதோ ஒன்றை மறைத்தார்கள் அவர்கள். 

“ஆமாம், அவனோட தங்கச்சியை எங்கே இரண்டு நாளாகக் கொழுந்து காட்டில் காணோம். அவளுக்கேதும் சுகவீனமா.” 

“ஆமாங்க, காய்ச்சலா படுத்துக் கிடக்கிறா…” அவர்களில் ஒருத்தன் பதில் சொன்னான். 

“அப்படியா!…” அவர் வேதனைப் பட்டார். “மாதக் கடைசியாயிருக்கிறது. பணத்துக்கு என்ன செய்வான்? முத்து ரெங்கம், அவனைக் கண்டால் நான் வரச் சொன்னதாகச் சொல். சரியா? மறந்துவிடாதே.” 

அவர்கள் வெளியேற ஆரம்பித்தனர். 

அவ்வளவு நேரமும் அங்கு நடந்த அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, வெளியே வருகிறவர்களின் பார்வையில் பட்டுவிடக் கூடாதே என்று பயந்து தலை தெறிக்க ஓடுகிறது ஓருருவம். 

அதன் கையிலிருந்து கவ்வாத்துக் கத்தி அவ்வளவு இருளிலும் பளபளக்கிறது! 

– 1965

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *