டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……





“என்ன செல்வம்!…பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?….”
“ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள் பெருகி விட்டன…என்று காவல் துறை அடிக்கடி சொல்கிறது!…அது தொடர்பாக ஏன் எப்படி என்று ஒரு சின்ன ஆராய்ச்சி நடத்திப் பார்த்தேன்…ரிசல்ட் ரொம்ப ஆச்சரியமா இருக்கு!..”
“என்ன நீ கண்டு பிடிச்சே?.” என்று கிண்டலாகக் கேட்டான் நண்பன் சங்கர்.
“அதை நான் அப்புறம் சொல்கிறேன்!…ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பத்திரிகையில் வந்த சாலை விபத்துக்கள் பற்றிய ‘கட்டிங்’கள் இவை …..அதை நீ வரிசையாகப் படி!…அப்புறம் நான் உனக்கு விபரம் சொல்கிறேன்!..”
சங்கர் அவைகளை வாங்கி வரிசையாகப் படித்தான்.
ஜனவரி 2. பெங்களூர் போன லாரி, தர்மபுரி அருகில் அரசு பஸ் மேல் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. 5 பேர் சாவு. படுகாயம் அடைந்த 17 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்கள். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது!
ஜனவரி 3 உளுந்தூர் பேட்டை அருகில் பாழும் கிணற்றில் இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து விட்டது. சாவு 3 படுகாயம் 9 உயிர் பிழைத்த டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஜனவரி 5 துடியலூர் அருகே பைக் மோதி பள்ளிச் சிறுவன் பலி. பைக்கில் வந்த கல்லூரி மாணவனை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
ஜனவரி 7 வடவள்ளியில் ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் கார் புகுந்து விட்டது. கடையில் இருந்த பெண் படுகாயம். காரில் வந்த இளைஞனை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
அவைகளைப் படித்து விட்டு சங்கர் சிரித்துக் கொண்டே, “.சரி!…நான் படித்து விட்டேன்!…இது விஷயமா நீ என்ன கண்டு பிடிச்சே!…அதைச் சொல்லு!..” என்று கேட்டான்.
“ இந்த விபத்துக்கள் தொடர்பான போலீஸ் விசாரணை முடிவை கேட்டுத் தெரிந்து கொண்டேன்….எனக்கே ஆச்சரியமாகப் போய் விட்டது..இந்த நான்கு சாலை விபத்துக்களுமே ஒரே காரணத்தால் தான் நடந்துள்ளது!..”
“என்ன காரணம்…சீக்கிரம் சொல்லடா!..”
“ லாரி டிரைவர், பஸ் டிரைவர், கார் ஓட்டியவர், பைக் ஓட்டியவர் எல்லோரும் ஒரே தவறைத்தான் செய்திருக்கிறார்கள்!…சமீபகாலத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்பட அந்த தவறு கூட முக்கிய காரணமாக இருக்கலாம்!..”
“ அது என்ன காரணம் என்று முதலில் சொல்லுடா!…”
“ அவர்கள் எல்லோரும் செல்போனில் பேசிக் கொண்டே, வாகனங்களை ஓட்டியது தான் விபத்துக்கு காரணமாம்!…”
– அக்டோபர் 2016