டஞ்சணக்குத் தாஜ்மஹால்
மகுடேஸ்வரனும் மினிமோளும் ஓடிப்போவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.
காதல் திருட்டுக் கல்யாணங்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடுவதற்காகவே பூமியில் அவதரித்திருக்கிற தோழர் தோழிகள் துணையோடு, மன்மத மலை எனச் சுற்று வட்டாரக் காதலர்களால் போற்றவும், கள்ளக் காதலர்களால் உபயோகிக்கவும்படுகிற, மரப்பாலம் அமணலிங்கேஸ்வரர் மலையில் சிம்பிளாகத் தாலிகட்டு; மத்தியானம் காந்திபுரம் தலைப்பாக்கட்டி பிரியாணிக் கடையில் தடபுடலாகக் கல்யாண விருந்து என்று திட்டம்.
அங்கிருந்து ஜிப்ஸியோ, கால் டாக்ஸியோ பிடித்து, மாலையும் கழுத்துமாக மாப்பிள்ளை வீடு வந்து பார்க்கலாம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
“எங்களைய மீறி அந்த ஈளுவப் புள்ளையக் கீது இளுத்துட்டு ஓடி கலியாணம் மூய்க்கறதா இருந்தீன்னா, இன்னைக்குச் செத்தா நாளைக்கு மூணா நாளுன்னு, அன்னைக்கே தலை முளுகி, மறுச்ச நாளே தேனேரி போயிக் கருமாதி பண்ணீட்டு வந்துருவேன். அப்பாறு சொத்து பேரனுக்குங்கற சட்டத்துனால மட்லுமல்லொ; உன்னையப் பெத்து வளத்துன பாவத்துக்குஞ் சேத்தி, காட்டுல பாகத்த வேண்ணாலும் பத்தரமெளுதிப் பிச்சையா வீசீர்றேன். ஆனாட்டி, நீயி இந்த ஊட்டு வாசல மிதிக்கப்படாது. நாளைக்கு நாஞ் செத்த பிறப்பாடும் நீயோ, அவளோ, உங்குளுக்குப் பொறக்கற சாதி கெட்ட வித்துகளோ, எம்பட பொணத்து முஞ்சீல கூட முளிக்கப்படாது. அனாதைப் பொணமாப் போனாலும், அசல் சாதிக்காரனுக ஆராச்சும் போடற கொள்ளீலதான்டா என்ற நெஞ்சாங்கறி வேகும்!” நாச்சிமுத்துக் கவுண்டர் வீறாவேசமாகச் சொல்லிவிட்டார்.
அவரது நாடி நரம்புகளில் அஞ்சு வகை வாயுக்களும், ஓ பாஸிட்டிவ் ரத்தமுமல்ல; ஜாதியும், சுய கௌரவமும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மினிமோள் வீட்டில் அவளது அம்மா தாக்ஷாயணி, ஆலாத்தி எடுத்து வரவேற்பாள். அவளின் சம்மதத்துக்குப் பிறகே இந்தக் காதல்; அவளது ஆசீர்வாதத்தோடுதான் கல்யாணம். எனினும், அங்கே தங்க முடியாது. வீட்டு மாப்பிள்ளை என்பதே இவனுக்கு ஏற்பற்றது என்பதிருக்க, உள்ளூரிலேயே வசித்தால் நாச்சிமுத்துக் கவுண்டரின் பார்வையில் பட்டு, இரு தரப்புக்கும் சங்கடங்கள், வம்பு – தும்புகள் வருத்துவதாகிவிடும். அதனால்தான் வாடகை வீடு பிடிப்பில் முனைந்திருந்தான்.
உள்ளூர் வாசம் வேண்டாமென முடிவான பிறகு, ஐயனின் பார்வையில் படாதபடியான ஊருக்குப் போய்விடுவதே சாலச் சிறந்தது என்று பட்டது. வேலந்தாவளத்திலோ, அவ் வழியே வந்து போகக்கூடிய ஊர்களிலோ தங்கினால், மண்டிக்கும் மற்ற காரியங்களுக்கும் வேலந்தாவளம் வருகிற
அவரது பார்வையில் அடிக்கடி படவேண்டியிருக்கும். எனவே, இவன் பணிபுரிகிற பிச்சனூரிலும், அடுத்துள்ள வீரப்பனூரிலும் தேடிப் பார்த்தான். குக்கிராமங்களான அவற்றில் தற்போது காலி வாடகை வீடுகளோ, அறைகளோ இல்லை. அடுத்தடுத்த குக்கிராமங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தனர். வாளையார், எட்டிமடை, திருமலையாம்பாளையம், செட்டிபாளையம் பிரிவு, பிச்சனூர் எனச் சுற்று வட்டார ஊர்கள் தோறும் கல்லூரிகளாகிவிட்டன. தங்கும் விடுதிகளை விரும்பாத வெளியூர் மாணவர்கள் பலரும் குழுக் குழுவாக சேர்ந்து, கிடைக்கிற ஊர்களில் அறை பிடித்துத் தங்குகின்றனர். இதனால் வாடகை இரட்டிப்பாகிவிட்டதோடு, வீடு கிடைப்பதும் பாடாகிவிட்டது.
இன்று மகுடேஸ்வரனும் கொடுக்காப்புளியும் வேலை கைமாறிய பிறகு சாவடிக்கு வந்திருந்தனர். காக்கா சாவடி எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் க.க.சாவடியான கந்தே கவுண்டன் சாவடியில், அலையாத தெருக்கள், சந்து பொந்துகள் இல்லை. கடைசியில், காரை பெயர்ந்து சிதிலமடைந்த, குளிப்பிட – கழிப்பிட சௌகரியங்கள் குறைந்த, ஒரு பழங்காலத்து ஓட்டு வீடே அகப்பட்டது.
“எப்புடியோடா அப்புக்குட்டி, ஆத்தர அவசரத்துக்கு இந்த டஞ்சணக்குத் தாஜ்மகால்னாலும் கெடைச்சுதே! ஒரு வாரத்துல ஒளிச்சோட்டத்த (ஓடிப்போறத) வெச்சுட்டு, இன்னி ஊரூரா ஊடு தொளாவி அலைஞ்சிட்டிருக்கறக்கில்ல. கெடைக்கும்ங்கறக்கு கேரண்டி – வாரண்டியும் கெடையாது. அந்நேரத்துல இதுக்கும் எவனாவது இம்ப்ளீசுக பூந்துட்டானுகன்னா, அப்பறம் ‘அத்தை புள்ளையும் போச்சுடா சொத்தை வாயா’ன்னு ஆயிரும். மங்கிலியம் – ஜவுளி மாலை ஏற்பாடுக வேற பாக்கி. வேலைக்கும் போயிட்டு, இதையும் பாக்கறக்கு நேரமும் வேணுமல்லோ! கொஞ்ச நாளைக்கு நீயும், உன்ற மும்தாஜ் தம்புராட்டியும், இந்த டஞ்சணக்குத் தாஜ்மகால்லயே அஜீஸ் பண்ணி அப்பா – அம்மா வெளையாட்டு வெளையாடீட்டிருங்கொ. அப்பற மேலு ஜஞ்சணக்குத் தாஜ்மகாலுக ஏதாச்சு காலியானா, குத்தைக்கே புடிச்சுக்குலா” என்றான் கொடுக்காப்புளி.
டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.
சாவடிக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான கோழிப் பண்ணை நிறுத்தத்தில் இருக்கும் நூற்பாலையில்தான் இவனது மும்தாஜ் தம்புராட்டி, பஞ்சு கடைகிற வேலை செய்துகொண்டிருக்கிறாள். அவளும் சக ஊழியைத் தோழிகளும் அவ்வப்போது பேருந்தில் வருவர். சில சமயம் ஆலை வேனோ, ஜிப்ஸியோ அவர்களை அழைத்து வரவும், கொண்டுபோய் விடவும் செய்யும். கல்யாணத்துக்குப் பிறகு டஞ்சணக்குத் தாஜ்மகாலிலிருந்து தம்புராட்டி பொடி நடையாகவே நூற்பாலைக்குப் போய் வந்துவிடலாம்.
அவளைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இரண்டு வருடங்களாக பேருந்து முன் படிக்கட்டில் வந்து போய்க்கொண்டிருந்த மகுடேஸ்வரன், பைக் வாங்கியதிலிருந்து சில மாதங்களாக அதில் வந்து போய்க்கொண்டிருக்கிறான். தம்புராட்டிக்கு இதில் ஸ்ருங்காரப் பிணக்கம் (ஊடல்). “என்னைக் கணக்குப் பண்றதுக்கு வேண்டியே ரெண்டு வருசம் பஸ்ல
கொரங்காட்டம் தொங்கீட்டு வந்துட்டிருந்தீங்க. நான் கணக்காயிட்டதும், காத்து நிக்கறது, பின்னாடியே வர்றது, பஸ்ல தொங்கறது எல்லாத்தையும் விட்டுட்டு, பைக்ல ஜாலியாப் போயிட்டிருக்கறீங்க. பாக்கணும்னு நெனைச்சாக் கூட கண்ணுலயே தட்டுப்பட மாட்டீங்கறீங்க” என்பாள்.
கல்யாணத்துக்குப் பிறகு, தன்னுடன் பைக் சவாரியைக் கனவு கண்டுகொண்டிருக்கும் அவளுக்காக பைக்கைத் தானே வைத்துக்கொள்வதா; ஸ்பான்ஸர்ட் பை நாச்சிமுத்துக் கவுண்டர் என்பதால், தனது தன்மானத்தைக் காட்டுவதற்காக வீட்டிலேயே விட்டுவிட்டு ஓடி வருவதா என்பது இன்னும் தீர்மானமாகவில்லை.
அது பற்றிய யோசனையோடே பைக்கை ஓட்டிக்கொண்டிருக்கையில் நூற்பாலை நெருங்கியது. மினிமோள் இப்போது வேலை கைமாறி வீடு போய்ச் சேர்ந்திருப்பாள் என்றாலும், அவள் பணிபுரிகிற இடம் என்கிற காதலோடு அதைப் பார்த்துக் கடந்தான்.
வீரப்பனூர் பள்ளிக்கூடம் தாண்டி சென்றுகொண்டிருக்கும்போது மகுடேஸ்வரனின் அலைபேசியில் குறுஞ்செய்தி ஒலிப்பு.
“தம்புராட்டி வரப்போற நேரம் – பத்தாயரம் டாலர் ப்ரைசு தீது உளுந்திருந்தாலும் உளுந்திருக்குமுடா” என்றான் கொடுக்காப்புளி.
அந்த மாதிரி ஏய்ப்புச் செய்திகளாகவோ, வேறெதும் மோசடி விளம்பரங்களாகவோ இருந்தாலும் இருக்கலாம். அல்லது வீடு பார்க்கப்போன காரியம் என்னாயிற்று என்று மினிமோள் கேட்டிருந்தாலும் இருக்கலாம். பைக்கை நிறுத்தாமல், வேகத்தை மட்டும் குறைத்து, எடுத்துப் பார்க்கையில், செய்தி அவளிடமிருந்துதான்.
பைக்கை நிறுத்தி, திறந்து பார்த்தான். ‘முக்கியமான விஷயம். நேரில் பேச வேண்டும். வீட்டுக்கு வரவும்’ என்றிருந்தது.
முன்பெல்லாம் மினிமோளிடமிருந்து அடிக்கடி தவறிய அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்துகொண்டிருக்கும். அவளது அழைப்புக்கென, ‘என்ட கல்பிலே வெண்ணிலாவு ந்நீ’ ட்யூனை ப்ரத்யேக ரிங் டோனாக வைத்திருந்தான். அதை வைத்தே இவனது காதலை பழனாத்தாள் மோப்பம் பிடித்துவிட்டாள்.
“தென்றா அப்புக்குட்டீ, எடைக்கெடை உனக்கு இந்த மலையாள மிஸ்சுடுக் காலு வந்துட்டே இருக்குது!? நீயும்மு அப்பல்லாம் அலுங்காம முட்டீட்டு வெளிய போயி, சனமில்லாத சந்துக்குள்ள நின்னு திலுப்பிக் கூப்புட்டு, மணிக்கூருக் கணக்கா குணுக்குணூன்னு கொனிஞ்சுட்டிருக்கற? அம்மத்தாகட்டப் பேசோணும், பெரும்பதிச் சித்தியூட்டுக்குக் கூப்படோணும்னு கேட்டா,… போன்ல காசில்ல, பேலன்சு தீந்துபோச்சுங்கறது. புள்ளைக மிஸ்சுடு உட்டா, திலுப்பிக் கூப்புட்டு, பேலன்சு தீர முட்டும் கள்ள
போடறக்கு மட்லும் கஜானா நொம்பியிருக்குமாக்கு?” என்று நேரடியாகவே கேட்டாள்.
சாடை – மாடை, சுத்தி வளைப்பு அவளிடம் கிடையாது. ‘நேரா வா – நேராப் போ’ ரகம்.
இவனுக்கு அது முடியுமா? வீட்டுக்குள் டவர் கிடைப்பதில்லை, நண்பர்கள் அழைப்பு, கான்ஃப்ரன்ஸ் கால் என்று ஏதேதோ மழுப்பி சமாளிக்கப் பார்த்தான்.
“பள்னாத்தாளுக்கா காது குத்தற நீயி? ராத்திரி பன்னெண்டு, ஒரு மணி முட்டும் படுத்துட்டே எஸ்ஸெம்மெஸ் உடறதுலருந்து, ப்பெசல் ரிங் டோன் செட் பண்ணி வெச்சிருக்கறது முட்டும் தெரியுமுடா உன்ற பூளவாக்கெல்லாம். சாட்டிங், டேட்டிங்லருந்து, இன்ட்டர்நெட் ஏடாகூடங்க வரைக்கும், நாட்டுல நடக்கற விவகாரமெல்லாம் தெரிஞ்சுதான் இருக்கறன் நானு” என்று கொத்தும் குலையுமாக உலுக்கிவிட்டாள்.
பழனாத்தாளும் பத்தாவது படித்தவள். அது ஒரு பொருட்டல்ல. அதற்கு மேலும் படித்த தாய்மார்கள் நாட்டு நடப்பு, உலக நடப்பு தெரியாமல் ஊட்டுக் காரியம், ஊர் வம்பு, சீரியல் கவலை என குக்கருக்குள் குருதை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடையது போன்ற விவசாயக் குடும்பம் எனில் தோட்டக் காரியங்களும் அதில் சேர்ந்திருக்கும், அவ்வளவுதான். பழனாத்தாள் இது போலன்றி, வார – மாதப் பத்திரிகைகள் வாசிப்பது, முன்னிரவுகளில் சமையல் ஆயத்தங்களோடே சேர்ந்து நாச்சிமுத்துக் கவுண்டருடன் தமிழ் – மலையாள செய்திச் சேனல்களைப் பார்ப்பது என்றிருப்பாள். அதனால் அவளுக்கு நாட்டு நடப்பு, உலக நடப்புகளில் அடிப்படை அறிவு ஒரு சாடு நெறக்க உண்டு. அதை முதலீடாக வைத்து அடுத்தவாட்டி வார்ட் மெம்பருக்குப் போட்டியிடலாமா என்றும் திட்டமிட்டுக்கொண்டிருப்பவள்.
அவளிடம் குட்டு வெளிப்பட்டதுமே மகுடேஸ்வரன் மினிமோளின் அழைப்புக்கென வைத்திருந்த ப்ரத்யேக ட்யூனைத் தூக்கிவிட்டான். குறுஞ்செய்தி ஸ்ருங்காரங்களும் குறைக்கப்பட்டுவிட்டன.
வாரண்ட் வந்த பிறகு தடயங்களை அழித்து என்ன பிரயோஜனம்? பழனாத்தாள், கவுண்டரிடம் பேசி, தங்க வேட்டைக்குக் கிளம்பிவிட்டாள்.
“அந்த ஓடுகாலன் புள்ளைய மறந்துட்டு, ஒளுங்கு மருகேதியா நாங்க பாத்து வெக்கற புள்ளைய மூய்ச்சுட்டீன்னா உனக்கும் நல்லது; குடும்பத்துக்கும் கெவுருதி. ங்கொய்யனப் பத்தி உனக்கே தெரியுமல்லோ?” என்றும் அவள் இவனிடம் ஒரு நாள் சொன்னபோதுதான், யார், எவரென்றும் அறிந்திருக்கிறாள் என்பது தெரிய வந்தது. யாரிடமாவது விசாரித்தாளா; அல்லது, இவன் அவர்கள் வீட்டுக்குப் போவது, வேலந்தாவள பேருந்து நிறுத்தங்களில் மினிமோளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பது ஆகியவற்றை யாரேனும் போட்டுக் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.
மினிமோளின் அப்பா, அவளுக்கு இரண்டோ மூன்றோ வயது இருக்கையில், ஆன்மிக நாட்டம் முற்றி, வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார்.
பரதேசம் போனவரைத் தொளாவிப் பிடிக்கவா முடியும்? 20 வருடங்களாயிற்று. இதுவரை அவரைப் பற்றி ஒரு தகவலுமில்லை. உயிருடனாவது இருக்கிறாரோ என்னவோ!
அவர் பரதேசம் போன பிறகு, தாக்ஷாயணி விவசாயக் கூலி வேலை செய்து சிசிராவையும் மினிமோளையும் வளர்த்தி, படிக்கவும் வைத்தாள். தந்தை இல்லாத குறை அவர்களுக்கு வராதபடியும், ஆண் இல்லாத வீடு என்பதால் இழுக்குகள் ஏதும் நேர்ந்துவிடாதபடியும் அவள் அவர்களை வளர்த்தியதை ஊரே அறியும். சிசிராவும் தானும் வயசுக்கு வந்தபோதே நல்லது கெட்டதுகளைச் சொல்லிக் கொடுத்து, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் வருகிற மாதிரியான காரியங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது என்று புரியவைத்ததை மினிமோளும் சொல்லியிருக்கிறாள்.
இவனுக்கே கூட சிசிராவையும் மினிமோளையும் எத்தனை விடலைகள், இளைஞர்கள் காதலிக்க முயற்சித்தார்கள் என்பது தெரியும். சிசிரா யார் மீதும் காதல் கொள்ளாமல், யார் காதலுக்கும் மசியாமல், கல்யாணம் பண்ணிப் போய்விட்டாள். அவளுக்கு இப்போது எல்.கே.ஜி. குழந்தை இருக்கிறது.
மினிமோளிடம் இவன் தனது காதலைத் தெரிவித்தபோது அவளுமே முதலில் மறுத்தாள். இரண்டாண்டுகளாகத் தொடர்ந்த கஜினிப் படையெடுப்புகளில், கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதைச் சுரண்டிச் சுரண்டிக் கொள்ளையடித்து, கடைசியில் ஒட்டுக்கா லவுட்டிவிட்டான்.
ஆனாலும் மினிமோள், அம்மாவைக் கேட்டுத்தான் பதில் சொல்வேன் என்றாள். தாக்ஷாயணி இவனை நேரில் வரச் சொல்லி, சாதக பாதகங்களை விவாதித்து, இவனது உறுதிக்கு ஐ.எஸ்.ஐ. உண்டு என்ற நம்பிக்கை வந்த பிறகே பச்சை சமிக்ஞை காட்டினாள்.
தன் வீட்டில் இது போல ஒருபோதும் நடக்காது என்பது முன்னமே தெரியும். அதனால் இவன் மினிமோளைக் காதலிப்பது பற்றியோ, அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என்கிற பேச்சையோ வீட்டில் எடுக்கவே இல்லை.
அப்படியிருந்தும் நாச்சிமுத்துக் கவுண்டர் இவனிடம் சொன்ன வசனம்தான், கதைத் துவக்கத்தில் நீங்கள் வாசித்த நான்காவது பத்தி. அப்படியிருந்தும் இவன் செய்த காரியம்தான், கதையின் முதல் பத்தியிலிருந்து, இதோ மினிமோள் வீட்டில் இப்போது வந்து நிற்கிறானே, இது வரை.
மினிமோள் நேரில் தெரிவித்த தகவல், மகுடேஸ்வரனுக்கும் கொடுக்காப்புளிக்கும் எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்தது. இருபது வருடங்களுக்கு முன்பு பரதேசம் போன அவளது அப்பா, கொல்லிமலையிலிருந்து கடிதம் எழுதியிருந்தார். இவர்களுக்கு மலையாளம்
புரியும், தமிழ் கலந்து பேசவும் தெரியும்; ஆனால், வாசிக்கத் தெரியாது என்பதால் அவளே வாசித்துக் காட்டினாள்.
சாராம்சம் இதுதான்:
இரண்டு பெண் மக்களோடு மனைவியைத் தவிக்க விட்டுவிட்டு தேசாடனம் போனதற்கு மன்னிப்பு வேண்டல் – இருபது வருட சன்யாசம் – காசி, கைலாயம் வரை தேடல் – இறுதியில் பெற்ற வெறுமை – நோய்மை – இப்போது கொல்லிமலையில் இயற்கை சிகிச்சை – இறுதிக் காலத்தைக் குடும்பத்தோடு கழிக்க வேண்டுமென்ற கடைசி ஆசை – அங்கிருந்து புறப்படும் தேதி – இப்படிக்கு, அபாக்கியவான் அச்சுதானந்த ஸ்வாமிகள்.
“அந்தாளு இருந்து செஞ்சிருக்க வேண்டிய காரியம் எதையும் செய்யாம, அப்பன்னு பேருக்கு இருக்கவாவது வேண்டிய காலங்கள்ல இல்லாம,… இப்ப வர்றாராமா. போன மச்சான் திரும்பி வந்தான் கோமணத்தோடன்னு தமிழ் ஆளுக பழமொழி சொல்ற மாதிரி…” என்றாள் தாக்ஷாயணி.
அவள் காட்டிய வெறுப்புணர்ச்சிக்குப் பின்னாலும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு ஒளிந்துகொண்டிருந்தது.
மினிமோள் அவளைப் பொருட்படுத்தாமல், “அப்பா இன்னும் பத்து நாள்ள இங்க வந்து சேந்துருவாரு. அது வரைக்கும் நாம வெய்ட் பண்ணனும். அவருகிட்ட நம்ம விஷயத்தச் சொல்லி, அவரு சம்மதிச்சாத்தான் கல்யாணம்” என்றாள் மகுடேஸ்வரனிடம்.
“அவுரு சம்மதிக்கிலீன்னா…?”
“அவரு பாத்து வெக்கற மாப்பளையத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!”
அதிர்ச்சியில் அவனால் எதுவும் பேச முடியவில்லை.
“ங்கொம்மாளக் கேட்டுத்தான் இவன நீ லவ்வே பண்ணுனீன்னா அதுல ஒரு நாயமிருக்குது மினீ! ங்கொம்மாளே சொன்னாப்புடி, உங்களையெல்லாம் வளத்து ஆளாக்க வேண்டிய காலத்துல அம்போன்னு உட்டுட்டுப் போனவரு ங்கொய்யன். இத்தன காலம் என்ன பண்ணுனீங்கோ – ஏது பண்ணுனீங்கோங்கற வெசனம் துளிக் கூட இல்லாம இருந்தவரு அவுரு. அவுரக் கேட்டு, அவுரு சம்மதிச்சாத்தான் கலியாணம்ங்கறது,… நாயமில்ல மினி! நாயமே இல்ல!!” கொடுக்காப்புளி, தலையையும் இட வலமாக ஆட்டினான்.
அதற்குப் பிறகே தன்னுணர்வுற்ற மகுடேஸ்வரன், ‘மூணேக்கர் காடு, முப்பது பவுனு, ரொக்கம் ஒரு லச்சத்தோட, பொரவிபாளையத்து சாதகமொண்ணு ரெடியா நிக்குது. அதையும் வேண்டாம்னுட்டு,… இந்தளவுக்கு என்னைய வளத்தி வாலிபமாக்கியுட்ட ஐயனாத்தாளையும் ஒதறித் தள்ளீட்டு,… உங்கூட ஓடிவாறக்கு நிக்கறனே,… நானென்ன கேனையனா?” என ஆவேசப்பட்டான்.
மினிமோள் அமைதியாக, “இருக்கறவங்களுக்கு அதோட அருமை தெரியாது, மகுடேசு. இல்லாதவங்களுக்குத்தான் தெரியும்!” என்றாள்.
ஆவணி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை, தசமி திதியும் மிருகசீரிட நட்சத்ரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மகுடேஸ்வரனின் திருமணம் இனிதே நடந்தேறியது. மணப்பெண், அந்தப் புரவிபாளையம் ஜாதகம்தான்!
– பொற்றாமரை இணைய இதழ், ஃபிப்ரவரி – மார்ச் 2024.