டஜன் என்றால் பதின்மூன்று?
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 4,474
ஆம்ஸ்டர்டாம் நேர்மையான ஒரு ரொட்டிக் கடைக்காரர், ஒவொரு நாள் காலையிலும், முதல் வேலையாக அவர் தனது தராசைச் சுத்தம் செய்வார். அதன் இரு தட்டுகளும் சமமாக இருக்கிறதா, நடுவில் உள்ள முள் நேராக நிற்கிறதா என்று பார்த்துக் கொள்வார். எடைக்கற்களைப் பார்ப்பார். வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்துக்கு உரிய அளவு பொருளை வழங்குவார்; கூடுதலோ குறைவோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்.
அவர் கடையில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் நல்லவர். வியாபாரத்தில் நேர்மையானவர், குறிப்பாக நிக்கொலாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) விழா கொண்டாடும் நாளன்று, இனிப்பைச் சுற்றி வரும் ஈக்கூட்டம் போல், மக்கள் அவர் கடையை சூழ்ந்து கொள்வர்.
விழாவுக்குத் தேவையான கேக்குகள் கிறிஸ்துமஸ் தாத்தா வடிவத்தில் ஏராளமாய் செய்து வைத்துக் கொள்வார். இன்றும் தேவையான எல்லா சரக்குகளையும் தயாராக வைத்திருப்பார்.
ஒரு நாள் காலையில் விழாவுக்கான சரக்குகளுடன் அவர் ரொட்டிக் கடையைத் திறந்தார். கடையைத் திறந்ததும், போர்வையால் தன்னை மூடியபடி ஒரு கிழவி உள்ளே நுழைந்தாள்.
“எனக்கு ஒரு டஜன் கேக் கொடும்” கிழவி கேட்டாள்.
அவர் ஒரு தட்டை எடுத்து அதில் பன்னிரண்டு கேக்கை எண்ணி அடுக்கினார். அவர் அதை கட்ட முயன்றபோது அவள் தடுத்தாள்.
“நான் ஒரு டஜன் கேட்டேன். ஆனால் நீர் பன்னிரண்டு கேக்கை மட்டும் வைத்திருக்கிறீர்” என்று குறை சொன்னாள் கிழவி.
“அம்மா, நீ என்ன பேசுகிறாய்? ஒரு டஜன் என்றால் பன்னிரண்டு…இது உனக்குத் தெரியாதா?” என்றார் அவர்.
“நான் சொல்லுகிறேன், டஜன் என்றால் பதின் மூன்று! நீர் எனக்கு ஒரு கேக் அதிகமாகத் தாரும்.”
ஒரு டஜன் என்றால் பதின்மூன்று கொடுப்பதற்கு அவர் என்ன முட்டாளா? “என் வாடிக்கையாளர்களுக்கு நான் சரியாகக் கொடுக்கும் வழக்கம் கொண்டவன். எவரையும் ஏமாற்றி எனக்குப் பழக்கம் இவலை. எண்ணிக்கை என்றால் எண்ணிக்கைதான். அது கூடுதலாகவும் இருக்காது குறைவாகவும் இருக்காது. என்னைப் பற்றி எல்லாருக்கும் தெரியும் ”
“அப்படியானால் அதை நீரே வைத்துக் கொள்ளும், எனக்கு தேவையில்லை”. அந்தக் கிழவி வாசல் பக்கம் திரும்பினான். பின்னர் நின்றவள், “ஆம்ஸ்டர்டாம், நீர் நேர்மையானவராய் இருக்கலாம். ஆனால் உமது இதயமோ சுருங்கி இருக்கிறது. உமது கைகளில் தாராளப் போக்கு இல்லை . நீர் வீழ்ச்சி அடைவீர்! பின்னர் எழுவிர்! ஒரு டஜனை எப்படி எண்ணுவது என்று கற்றுக் கொள்ளும்” என்று சொல்லி அவள் விரைந்து சென்றாள்.
அன்று முதல் அவர் வியாபாரம் தலைகீழாக மாறியது. அவர் அடுப்பில் வைத்து எடுத்து ரொட்டிகள் கரிந்து போயின. கேக்குகள் முதிர்ந்து போயின. எந்த சரக்கும் சரியாக அமையவில்லை . வாடிக்கையாளர்கள் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டனர். பலர் வேறு கடைக்கும் சென்றனர்.
‘அந்தக் கிழட்டுப் பெண்தான் என் வியாபாரத்தைக் கெடுக்கும்படி ஏதோ செய்து விட்டாள், கடவுளே, இதுதான் எனது நேர்மைக்குக் கிடைத்த பரிசா?’ அவர் தனக்குள் சொல்லி அலுத்துக் கொண்டார்.
ஓர் ஆண்டுக்குள் அவர் ஏழையானார். அவர் கடையில் மிகக் குறைவான வியாபாரமே நடந்தது. கடைசியாக சில வாடிக்கையாளர்களும் சில நாட்களில் போய்விட்டனர். அவரது கடையின் தட்டுகள் சரக்கு இல்லாமல் காலியாக இருந்தன.
அந்த ஆண்டு நிக்கொலாஸ் விழாவுக்கான ஆரம்ப வேலைகள் தொடங்கின. அவர் சரக்கை வைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்திருந்தார். அந்த கிறிஸ்துமஸ் தாத்தாவே தாத்தாவே (நிக்கொலாஸ்) எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினார். பின்னர் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று படுத்தார்.
நள்ளிரவில் அவர் கனவு கண்டார். அவர் சிறு பையனாக சிறுவர் கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர்கள் நடுவில் கிறிஸ்துமஸ் தாத்தா; அவர் தனது கூடையில் இருந்து பரிசுப் பொருட்களை எடுத்து குழந்தைகளுக்கு வழங்குகிறார்.
அப்போது அவர் ஓர் அற்புதமான சம்பவத்தைப் பார்த்தார். கிறிஸ்துமஸ் தாத்தாவின் கூடை நிரம்ப பரிசுப் பொருட்கள். அவர் அதை எடுத்து குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடையில் இருந்த பொருட்கள் குறைவாகத் தெரியவில்லை! கூடை எப்போதும் நிரம்பியே இருக்கிறது!
தாத்தா, ஆம்ஸ்டர்டாமுக்கும் ஒரு பரிசு கொடுத்தார். அது கிறிஸ்துமஸ் தாத்தா வடிவம் கொண்ட கேக், அடுத்த வினாடி அவர் தாத்தாவைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தார். அவர் தாத்தா அல்லர். ஒரு நாள் ரொட்டிக் கடைக்கு போர்வையால் தன்னை மூடிக் கொண்டு வந்த கிழவி! அவரைப் பார்த்து சிரித்த கிழவி, சில நொடிகளில் மறைந்தாள்.
ஆம்ஸ்டர்டாம் அதிர்ச்சி அடைந்தார். அதே நொடியில் விழித்துக் கொண்டார். “நான் எப்போதும் சரியான அளவு சரக்குகளையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு அது மிகச் சரியாக இருந்தது. கூடுதலோ குறையோ இல்லை. ஆனால் நான் கூடுதலாக ஒன்றும் கொடுக்கவில்லையே ஏன்?” அவர் சிந்தித்தார்.
அன்று நிக்கொலாஸ் விழா. அவர் அதிகாலையில் எழுந்தார். மாவைப் பிசைந்தார். கிறிஸ்துமஸ் தாத்தா வடிவிலான கேக்குடன் அனைத்து வகைகளையும் செய்தார். அடுப்பில் வைத்து எடுத்தார். சிவப்பு வண்ணத் தொப்பியுடன் அந்த கேக்குகள் அழகாய் இருந்தன; ‘கமகம’ வென மனம் வீசின.
அவர் ரொட்டிக் கடையைத் திறந்தார். கடையைத் திறந்ததும், போர்வையால் தன்னை மூடியபடி ஒரு கிழவி உள்ளே நுழைந்தாள்!
“எனக்கு ஒரு டஜன் கேக் கொடும்” கிழவி கேட்டாள்!
அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை . ஒரு தட்டை எடுத்து அதில் பன்னிரண்டு கேக்கை எண்ணி அடுக்கினார். அத்துடன் பதின் மூன்றாவதாக இன்னும் ஒரு கேக்கையும் சேர்த்து வைத்தார், “இன்று முதல் எனது கடையில் ஒரு டஜன் என்றால் பதின்மூன்று!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
“நல்லது! நீர் சரியாக எண்ணக் கற்றுக் கொண்டீர். உமக்கு நிச்சயமாக பரிசு கிடைக்கும்” என்று சொன்ன கிழவி பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.
அந்தக் கிழவி சொன்னபடி அவருக்கு பரிசு கிடைத்தது. ஒரு டஜனுக்கு, அவர் பதின்மூன்றாகத் தருவதைக் கண்டு ஏராளமான மக்கள் அவரிடம் வந்தனர்! அவருக்கு வியாபாரம் பெருகியது! சில மாதங்களில் அவர் பணக்காரர் ஆனார்.
ஆம்ஸ்டர்டாம் செய்தது போல் மற்ற ரொட்டிக் கடைக்காரர்களும் டஜனுக்கு பதின்மூன்று என்று கொடுத்தனர். அதனால் அவர்களுக்கும் வியாபாரம் சூடு பிடித்தது! ‘டஜனுக்கு பதின்மூன்று’ என்ற வழக்கம் மற்ற நகரங்களுக்கும் பரவியது. மேலும் சில நாடுகளிலும் அவ்வழக்கம் பின்பற்றப்பட்டது. அது இப்போதும் சில நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.