ஜ்வல்யா
அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம்.
ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால் என் மீது பட்டது. துணி மாற்றிய போது. என் அருகில் இருந்த அத்தனை பேரும் வாங்கிக் கொஞ்சி விட்டார்கள். என்னைத் தவிர.
எனக்கொன்றும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்ளக் கூடாதென்றில்லை.
முதலில் ஏதோ ஒரு வித தயக்கம். பிறகு நானே விரும்பிய போது அது என் பக்கம் திரும்பவே மறுத்தது.
‘வாடா செல்லம்.’
அடுத்த நபரிடம் போனது. பூக்குவியல். அவர் கைகளில். என்ன ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
“என்ன பேர் “
“ஜ்வல்யா”
“அழகான பேர் “
ஜ்வல்யா. நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்று புறப்பட்டபோது .. புது நபர்கள் வந்தபோது.. அதுவரை பயணித்தவர்கள் இறங்கிப் போனபோது.. ஜ்வல்யாவை விட்டுப் பிரிகிற .. சேர்கிற நபர்களின் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
“ஏதாச்சும் சாப்பிடறியா “
அவர்தான் கேட்டார். அவரிடமும் ஜ்வல்யா கொஞ்ச நேரம் இருந்தாள்.
“வேணாம் .. “
“நீ வச்சுக்கிறியா.. ஜ்வல்யாவை”
அவரையே பார்த்தேன். கண்ணில் ஜலம் தளும்பி நின்றது.
“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. ” என்றார் கிசுகிசுப்பாய்.
சட்டென்று ஜ்வல்யாவை கை நீட்டி வாங்கிக் கொண்டார் . என் மடியில் விட்டார்.
முழுமை பெறாத என் இடது கையும் சற்றே துவண்ட என் வலது கையும் அந்த நிமிடம் முழுமையாய் ஜ்வல்யாவை ஸ்பர்சித்து..
என்ன அழகான சிரிப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு.. பாதுகாப்பாய் அவர் பிடித்துக் கொள்ள..
என் மடி நனைந்து போனது அப்போது..
– டிசம்பர் 2010