ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

மேலேயிருந்து வந்தது தேவியின் குரல்தானென் பதில் அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. சிறிது நேரத்துக்கு முன்புவரை மலைக்கன்னியுடன் இரண்டுமணி நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்த அவனுக்கு இனிமையும் அதே சமயம் ஒரு அதிகார மனோபாவமும் பிரதிபலிக்கும் தேவியின் குரல் நன்கு பரிச்சயப்பட்டிருந்தது. இப்பொழுது கேட்கும் அதே குரலில் இனிமையையோ அல்லது அதிகாரத்தையோ இரண்டையும் காணோம். அதற்கு மாறாக வல்லமை பொருந்திய தேவதேவி தேம்பித் தேம்பி அழுவதைக் கேட்டு பாலாஜி அதிசயமும் ஆச்சர்யமும் அடைந்தான்.
“தேவதேவி அழுவானேன்? செல்வமும் செல்வாக்கும் சகல சௌபாக்கியங்களும் பெற்றுச் சாவையும் வென்று சிரஞ்சீவியாயிருக்கும் மலைக்கன்னி விம்மி விம்மி ஏன் அழவேண்டும்? அதிலும் அர்த்த ஜாமத்தில் நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டியவள் ஏன் இப்படி வாய் விட்டுப் புலம்புகிறாள்? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதிக்கக் கூடிய மகாசக்தி வாய்ந்த மலைக்கன்னிக்குக் கூடவா துக்கமும் துயரமும் ஏற்பட முடியும்? அவளுக்குத் துன்பம் விளைவிக்கும் அவ்வளவு துணிச்சல் மிகுந்த ஒரு ஆண் மகன் இந்த ஜகத்தில் இருக்க முடியுமா?
இவ்விதம் யோசித்துப் பார்த்த பாலாஜிக்கு சர்ப்பச் சின்னம் பதித்த மோதிரத்தைப் பார்த்து தேவதேவி பரபரப்படைந்ததும் விஜயகேசரி மறுபடியும் வருவானென்ற நம்பிக்கையோடு அவனுக்காகக் காத்திருப்பதாய் அவள் சொல்லியதும் ஞாபகத்துக்கு வந்தன.
“ஆம்! ஒரு சமயம் சர்ப்ப மோதிரத்தைப் பார்த்ததில் விஜயகேசரியின் ஞாபகம் வந்து அவனை நினைத்து தேவதேவி புலம்புகிறாளோ? மோதிரத்தைப் பார்த்தவுடன் அவள் எப்படித் திடுக்கிட்டுப் போனாள்! அரை நொடியில் எப்படி அவள் தோற்றமே மாறிப்போயிற்று! விஜயகேசரியை இதயபூர்வமாக அவள் விரும்பியதும் பல நூற்றாண்டுகளாக அவன் வருவான் வருவானென்று நம்பி ஏக்கத்துடன் காத்திருப்பதும் உண்மையில்லாத பட்சத்தில் அந்த மோதிரத்தைப் பார்த்தவுடன் மலைக்கன்னி உணர்ச்சி மேலிட்டு உருமாறவும் இப்பொழுது இதயத்தைத் திறந்து காட்டி வாய்விட்டுப் புலம்பவும் காரணம் இல்லை. சந்திரிகா எழுதி வைத்த வரலாறுகள் அவ்வளவும் உண்மையென்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?”
இவ்வாறு பாலாஜியின் சிந்தனைகள் ஓடின. தான் அங்கு ஒளித்துக் கொண்டிருந்து ஒட்டுக் கேட்பது தேவதேவிக்குத் தெரிந்தால் என்ன நேரிடுமென்பதைக்கூட அவன் தற்காலிகமாக மறந்து போயிருந்தான். செம்பவளத்தீவில் தேடிவந்த ரகசியத்தின் முழு ஆழத்தையும் கண்டு பிடித்துவிட வேண்டுமென்ற ஆவல் ”போ! போ! மேலே போ! பயப்படாமல் மேலே போய்ப் பார்!” என்று அவனைப் பிடித்துத் தள்ளியது. என்ன செய்கிறோம்? என்ற சுயநினைவுகூட இல்லாமல் அவன் படிகளின் வழியாகத் தொடர்ந்து மேலே ஏறிச் சென்றான்.
மேலும் பத்துப்படிகள் ஏறியவுடன் ஒரு திருப்பத்தில் லேசாக கம்பிபோன்ற வெளிச்சம் வருவதை அவன் கண்டான். ஒரு அறையின் கதவு வழியாகவே அம்மாதிரி வெளிச்சம் வரமுடியுமென்றும், அந்தக் கதவு சாற்றி வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டு பாலாஜி அந்தத் திருப்பத்தில் திரும்பி நடந்தான். எதிர் பார்த்ததைப் போலவே அவன் ஒரு கதவின் அருகில் வந்து சேர்ந்தான். தொட்டால்போல பொலவென்று உதிர்ந்து விழுந்துவிடும் அளவிற்கு உளுத்துப் போயிருந்த அக் கதவின் கீழே கறையான்கள் அரித்த மரத்தூள்கள் குவியலாக விழுந்து கிடந்தன. சுலபமாகவும் தெளிவாகவும் உள்ளே பார்க்கக் கூடியவாறு கதவில் பல துவாரங்கள் இருந்தன. காலமும், கறையான்களும் செய்து கொண்டிருந்த இவ்வுதவியினால் பாலாஜி உள்ளே நடப்பதை நன்கு கவனிக்க முடிந்தது.
சந்தடி செய்யாமல் கதவின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் உள்ளே பார்த்தான். அந்த இடம் தேவதேவி தனித்துப் பேசுவதற்காகப் பாலாஜியை அழைத்துக் கொண்டு போன அவளுடைய சொந்த அறையைப் போலவே மிகப் பெரியதாகவோ அல்லது மிகச் சிறிய தாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. தேவதேவியின் அறையில் பார்த்தமாதிரியான மஞ்சத்தையும் இதர ஆடம்பர அலங்காரங்களையும் அருகிலிருந்த நிலா முற்றத்தையும் இங்கு காணோம். அவற்றுக்குப் பதிலாக அந்த அறை சுத்தமாகவும், மிக மிகப் பிரகாசமாகவும் இருந்தது. அறையின் மத்தியில் ஒரு பெரிய கொசுவலை தொங்கியது. அதற்குள் ஒன்றோடொன்று இரண்டு கெஜ தூரம் விலகி இரண்டு கருங்கல் மேடைகளிருந்தன. ஒரு மேடையில் சர்வ சாதாரணமான ஒரு பாய் விரித்துத் தலைப் பக்கம் ஒரு தலையணி வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு மேடையில் பிரேதப் பெட்டியைப் போலத் தோன்றிய ஒரு நீளமான பெட்டியிருப்பதை பாலாஜி கவனித்தான். அந்தப் பெட்டி தங்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதற்கு அடையாளமாக அதில் வைத்து இழைத்திருந்த நவரத்தினக் கற்கள் விளக்கு வெளிச்சத்தைக் கிரகித்துக் கொண்டு தவலைக்குள் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
கொசுவலைக்கு வெளியில் சுவற்றின் ஓரமாக ஒரு பெரிய வெள்ளிக் குத்துவிளக்கு நான்கு முகங்கள் வைத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அந்த விளக்கின் வெளிச்சம் மாத்திரம் அவ்வறையை ஒளிமயமாக்கியிருக்க முடியாதென்று நினைத்த பாலாஜி அறையைச் சுற்றிலும் ஒரு கண்ணோட்டம் விட்டுப் பார்த்தான். சுவற்றின் பல இடங்களிலும் வட்ட வடிவமான கண்ணாடி போன்ற பொருள்கள் பதிக்கப்பட்டிருப்பதையும் இவற்றிலிருந்து மினசார விளக்குகள் போன்ற பிரகாசமான வெளிச்சம் வருவதையும் கவனித்தபொழுது தேவதேவி வானத்தில் பறந்து வந்த சமயம் கருட விமானத்தின் மூக்கிலிருந்து தொங்கிய பந்து போன்ற பொருள் பாலாஜியின் ஞாபகத்துக்கு வந்தது. இருட்டில் விளக்கு ஏதுமில்லாமல் பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுக்கும் சூரியகாந்தக் கல்லைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அந்த மாதிரி அதிசயக் கற்களே சுவற்றில் பதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று இப்பொழுது அவனுக்குத் தோன்றியது. அவற்றிலிருந்து வந்த வெளிச்சம் கிட்டத்தட்ட அவ்வறையைப் பட்டப் பகல் போலாக்கியிருந்ததைக் கண்டதும் “தெய்வாதீனமாக செம்பவளத் தீவிலிருந்து நாம் தப்பிச் செல்ல முடிந்தால் போகும்பொழுது சூரியகாந்தக் கற்களில் இரண்டு மூன்றை எடுத்துச் செல்ல வேண்டுமென்று” பாலாஜி நினைத்தான்.
கொசுவலைக்குள் பாலாஜி கூர்மையாக உற்றுக் கவனிந்த பொழுது பிரேதப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மேடையினருகில் ஒரு பெண்மணி முழந்தாளிட்டு உட்கார்ந்து விக்கி விக்கி அழுவது தெரிந்தது. அந்த முகம்…. திரையோடிருந்த அந்த முகம்… தேவதேவியேதான். அதில் வழக்கமான கவர்ச்சியையும் சோபையையும் இப்பொழுது காணோம். இதற்கு மாறாக அவள் சோகமே உருவெடுத்தாற் போலிருந்தாள். பெட்டியின் மீது ஒரு கையும் மேடையின் மீது ஒருகையும் ஊன்றிக் கொண்டிருந்த தேவ தேவி திடீரென்று எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில் ஏதோ பேச ஆரம்பித்தாள். கதவின் இடைவெளியில் காதை வைத்து பாலாஜி கவனமாக அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.
”விஜயகேசரி! நீ எப்பொழுது தான் என்னை ஆட் கொள்ள வரப்போகிறாய்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னை எண்ணியெண்ணி இப்படியே நான் உருக வேண்டும்! எவ்வளவு இரவுகள் இந்தக் கருங்கல் மேடையிலே நான் காலம் கழிக்க வேண்டும்? ஆண்டுகள் ஒவ்வொன்றாக பத்துப் பத்தாக, நூறு நூறாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கால வெள்ளம் உன் நினைவை மறக்கடிப்பதற்குப் பதிலாக என்னைப் பயித்தியகாரியாக்கி வருகிறது. உன் வரவிற்காக இரண்டாயிரமல்ல, கல்பகோடி ஆண்டுகளுக்கு இதே இடத்தில் இதே உருவத்தில் நான் காத்திருப்பேன். சாவை வென்று சகல சுகபோகங்களையும் பெற்ற என் வாழ்வு இப்படித்தான் கண்ணீரில் கரைந்து போக வேண்டுமா? நீ எங்கிருக்கிறாய்? எங்கு எப்படியெல்லாம் பிறந்து வாழ்ந்தாய்? எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் நிச்சயம் என்னைத் தேடிக்கொண்டு இங்கு வருவாயென்ற நம்பிக்கையுடனேயே இந்த உயிரைப் பல நூற்றாண்டுகளாகச் சுமந்து கொண்டிருக்கிறேன். சித்தர் வாக்குப் பொய்த்துவிடுமா? எப்படியும் நீ இங்கு வந்தே தீருவாய் என்று என் குருநாதர் சொல்லிய அருள் வாக்கு பொய்யாகி விடுமா?…
பாலாஜிக்குக் கேட்டதைக் கொண்டு அவன் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வளவுதான். சரிவரப் புரியாமல் அவள் இன்னும் என்னென்னவோ சொன்னாள். அன்று சர்ப்ப மோதிரத்தைப் பார்த்து தன்னை ஆட்கொள்ள விஜயகேசரி வந்து விட்டதாக எண்ணி ஏமாற்றத்தையும் அவள் மறைமுகமாகக் குறிப்பிட்டாள். பிரேதப் பெட்டியை ஒரு முறை வலம் வந்து வணங்கிவிட்டு கருங்கல் மேடையில் போய்ப் படுத்துக் கொண்டாள். பட்டு மெத்தை விரித்த மஞ்சத்தைவிட்டு இரவுதோறும் அவள் அங்கு படுத்து உறங்குகிறாளென்று பாலாஜிக்குத் தோன்றியது. சுமார் அரைமணி நேரம் வரையில் பாலாஜி அங்கேயே காத்திருந்தான். தேவதேவி அங்கு தான் இரவைக் கழிக்கப் போகிறாளென்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் சந்தடி செய்யாமல் வந்த வழியாகவே அவன் திரும்ப ஆரம்பித்தான்.
மையிருட்டில் அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு மெதுவாக நடக்க வேண்டியதாயிருந்தது. ஆனால், அவன் மனம் மட்டும் அதிவேகமாக ஓடியாடிக் கொண்டிருந்தது. தங்கப் பெட்டியில் விஜயகேசரியின் பிரேதத்தை தேவதேவி பக்குவப்படுத்திப் பத்திரமாக வைத்திருக்க வேண்டுமென்றும் அவனிடம் கொண்ட காதல் உறுதியின் பயனாக இரவு தோறும் ஒருகுரல் அழுதுவிட்டு அதன் பக்கத்திலேயே உறங்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியது. எவ்வளவுதான் ரசாயன முறைப்படி பக்குவம் செய்தாலும் ஒரு மனிதப் பிரேதம் 250 ஆண்டுவரையில் கெட்டுப் போகாமல் இருப்பது சாத்தியமா என்று எண்ணிய பொழுது எகிப்திய பிரமிட்டுகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக பரோவா மன்னர்களின் பிரேதங்கள் உருக்குலையாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பது அவன் ஞாபகத்துக்கு வந்தது.
தேவதேவியிடம் ஆரம்பத்திலிருந்த பக்திக்கும் பயத்துக்கும் மாறாக இப்பொழுது கருணையும் பச்சாத்தாபமும் பாலாஜிக்கு ஏற்பட்டது. எவ்வளவோ செல்வாக்கும் அமானுஷ்யமான சக்தியும் படைத்த ஒரு பெண்மணி பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காதலித்த ஒருவனுக்காக ஏங்கி ஏங்கி விரதமிருப்பது சவத்தின் அருகில் இரவைக் கழிப்பதும் என்றால் அவளுடைய மன உறுதிக்கும் வைராக்கியத்துக்கும் நீண்ட மனித வரலாற்றில் முன் மாதிரி ஏது? கதைகளிலும் காவியங்களிலும் கூடக் கேள்விப்பட்டிராத அதிசயக் காதலாக அல்லவா இருக்கிறது தேவதேவியின் காதல்! இத்தனை வைராக்கியத்துடனிருப்பவள் கைக்கு எட்டிய காதலனை தனக்குக் கிட்டவில்லையென்ற ஏமாற்றத்தின் அறிவை இழந்து விஜயகேசரியைக் கொன்றிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. இக்குற்றம் செய்தவள் உண்மையில் அனுதாபத்துக்கு உரியவளேயன்றி அருவருப்புக்கோ அல்லது தண்டனைக்கோ உரியவளல்லவென்று பாலாஜிக்கு இப்பொழுது தோன்றியது. மனம் வரித்து ஒருவனுக்காக ஆயிர்மாயிரமாண்டுகளாகக் காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு கற்பரசியென்ற பெயர் பொருத்தமில்லாமல் அவளைக் கொலைகாரியென்று அழைப்பதானால் கற்பரசி என்ற வார்த்தைக்கே மதிப்பில்லையென்று அவன் எண்ணினான். இடையிடையில் இவைகளெல்லாம் நனவா அல்லது கடுமையான பித்தத்தால் ஏற்படும் ஒரு குரூரமான கனவா என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டது.
குழம்பிய மனதுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டு அவன் தன்னுடைய அறையை அடைந்தபொழுது விடியற் காலை நான்கு மணியாகியிருந்தது. பரபரப்பான சூழ்நிலை மையில் இரவு முழுவதும் கண் விழித்திருந்ததினால் அவன் சரீரம் முழுவதும் அணு அணுவாக வலித்தது. கட்டிலில் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் கண்ணயர்ந்து விட்டான்.
அறையில் முனிசாமி குய்யோ முறையோவென்று ஒப்பாரி வைக்கும் சத்தத்தைக் கேட்டு பாலாஜி கண் விழித்த பொழுது காலை எட்டரைமணியாயிருந்தது. எழுந்ததும் ‘ஜோதிவர்மனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ’ வென்ற பயத்துடன் “என்ன முனிசாமி! சின்ன எஜமானுக்குப் புதிதாக ஒன்றுமில்லையே!” என்று அவன் கேட்டான்.
ஜோதிவர்மன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகி விட்டதாயும் இன்னும் சில மணி நேரத்துக்குமேல் அவன் பிழைக்கமாட்டானென்று அரண்மனை வைத்தியர் சொல்லி விட்டுப் போனதாயும் முனிசாமி ஒரு துக்ககரமான செய்தியைச் சொல்லிவிட்டுப் புலம்பினான்.
“அப்படியா? அரண்மனை வைத்தியர் அப்படியா சொன்னார்?” என்று கேட்டுக் கொண்டே பாலாஜி ஜோதிவர்மனுடைய அறைக்கு வந்த பொழுது மரக்கட்டை போல மல்லாந்து படுத்திருந்த ஜோதிவர்மனின் முகத்தைப் பார்த்ததும் “அய்யோ ஜோதி! உன் கதி கடைசியில் இப்படியா முடிய வேண்டும்!” என்று வாய்விட்டு அலறினான் பாலாஜி.
“ஜோதி இனிப் பிழைக்கமாட்டானென்று அரண்மனை வைத்தியர் சொல்லிவிட்டார் அய்யா! கை கால்களெல்லாம் சில்லிட்டுப் போய் விட்டன. நாடியும் ஒடுங்கிப் போய் விட்டது. இனி மகாராணி தேவி ஒருவளால்தான் என் ஜோதியை உயிர்ப்பித்து எழுப்ப முடியும். தயவு செய்து தேவியிடம் போய் முறையிடுங்கள் அய்யா. ஒவ்வொரு வினாடியும் இவர் இறந்து கொண்டேயிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? சீக்கிரம் போங்கள் அய்யா? தேவதேவியின் கையில் காலில் விழுந்து எப்படியாவது அவளை இங்கு அழைத்து வராவிட்டால் உங்கள் பிள்ளையை உயிரோடு பார்க்க மாட்டீர்கள்?” என்று அழுகையும் விக்கலுமாக மன்றாடினாள் சித்ரா.
“ஆமாம் சித்ரா ! இதோ போகிறேன். இப்பொழுதே போய் தேவியை அழைத்து வருகிறேன்!” என்று சொல்லி விட்டு பாலாஜி எழுந்திருக்கையில் “எங்கே போகிறீர்கள்” என்று கேட்டுக் கொண்டு உள்ளே வந்தார் உக்கிரசேனர்.
உக்கிரசேனரைக் கண்டதும் ஜோதியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்ரா பாய்ந்து போய் தகப்பனைக் கட்டிக் கொண்டு “இனி ஜோதி பிழைக்கமாட்டாராம் அப்பா!” என்று சொல்லி விட்டு சிறு குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதாள்.
“ஜோதி இனிப் பிழைக்கமாட்டானென்று அரண்மனை வைத்தியர் சொல்லிவிட்டுப் போனாராம். இதைத் தேவியிடம் சொல்லி அவளை அழைத்து வருவதற்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்!” என்றான் பாலாஜி.
“தேவதேவியின் சந்நிதானத்துக்கு அழைத்துப் போகவே நானும் வந்தேன். உங்களை உடனே அழைத்து வர வேண்டுமென்பது தேவியின் ஆக்ஞை. மகாராணி அந்தப்புரத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறாள்” என்றார் உக்கிரசேனர். பிறகு தனது பெண் சித்ராவை ஆதரவாகத் தடவிக்கொடுத்து “கவலைப்படாதே சித்ரா! ஜோதியை நிச்சயம் தேவதேவி பிழைக்க வைத்துவிடுவாள். உனக்காக இல்லாவிட்டாலும் நமது நண்பர் பாலாஜியை முன்னிட்டாவது ஜோதிவர்மனை மகாராணி குணப்படுத்துவது நிச்சயம்! தேவி நினைத்தால் நடக்காதது ஒன்றுண்டா?” என்றார்.
சித்ராவைத் தைரியமாக இருக்கச் சொல்லிவிட்டு உக்கிரசேனருடன் பாலாஜி வெளியே வந்தார். அவருக்காகக் கொடுத்திருந்த மூன்று அறைகளையும் மறைத்தவாறாயிருந்த சுவற்றைத் தாண்டி அவர்கள் மண்டபத்தை அடைந்ததும் அங்கே பாசறைகளிலே அணிவகுத்து நிற்கும் சிப்பாய்களைப் போல ஈட்டி வீரர்கள் இரண்டு வரிசைகளாக பிரிந்து நின்றார்கள். பக்கத்துக்கு நூறு பேர்கள் வீதமிருந்த அந்த வீரர்கள் ஆடாமல் அசையாமல் சுவற்றில் எழுதிய வர்ண ஓவியங்களைப் போல தலை நிமிர்ந்தும் மெளனமாகவும் நின்றது அவர்களுடைய பாராட்டத் தகுந்த கட்டுப்பாட்டைச் சிறப்பித்துக் காட்டுவதைப் போலிருந்தது! இந்த வீரர்களுக்குப் பின்னால் ஆண்களும் பெண்களுமாக சுமார் நானூறு பேர்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் அவ்வளவு பெரிய கூட்டமிருந்தும் அவர்கள் மூச்சுவிடும் சப்தம் கூடக் கேட்காமல் பரிபூரண அமைதி நிலவியது பாலாஜிக்கு எங்கும் கண்டிராத ஆச்சர்யமாயிருந்தது.
மண்டபத்தைத் தாண்டி அதன் இடதுபுறமிருந்த ஒரு அறையின் வாசலை அடைந்ததும் “கன்னிமாதா தங்கள் விருத்தாளி வந்திருக்கிறார்” என்று வெளியிலிருந்து கொண்டே உக்கிரசேனர் சொன்னார்.
தேவதேவி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் உக்கிரசேனரைப் பார்த்து “நீ போகலாம்! கைதிகள் கொலுமண்டபத்துக்குக் கொண்டு வரப்படட்டும்” என்றாள். உக்கிரசேனர் போன பிறகு “நேற்றிரவு நிம்மதியாகத் தூங்கினீர்களா?” என்று பாலாஜியிடம் அவள் விசாரித்தாள்.
முந்திய நாளிரவு நெடுநேரம் வரையில் கண்விழித்திருந்த தேவதேவி சிறிதும் வாட்டமின்றி அன்றலர்ந்த செந்தாமரையைப் போல பொலிவு குன்றாமலிருந்தது பாலாஜிக்கு வியப்பாயிருந்தது.
பிரேதப் பெட்டியினருகில் கண்ணீரும் கம்பலையுமாக உட்கார்ந்திருந்து புலம்பிய அதே மலைக்கன்னியைத் தான் இப்பொழுது கண்ணெதிரில் காண்கிறோமா என்றுகூட அவன் சந்தேகித்தான்.
“இரவு நல்ல தூக்கமில்லை தேவி. ஏதேதோ பயங்கரமான கனவுகள் வெருட்டிக் கொண்டிருந்தன. விடியற் காலையில்தான் சற்று கண்ணயர்ந்தேன்” என்று உண்மையை வெளியிடாமலும் அதே சமயம் முழுப்பொய் சொல்லாமலும் அவன் மழுப்பினான்.
“இரவு நானும் உறங்கவேயில்லை. உங்கள் விரலில் பார்த்த சர்ப்ப மோதிரம் நேற்றிரவு என் மன அமைதியை அடியோடு குலைத்துவிட்டது” என்றாள் தேவதேவி. இந்த விஷயத்தைப் பற்றி மேற்கொண்டு பேசவிரும்பாமல் “வாருங்கள் கொலுமண்டபத்துக்குப் போவோம்! உங்கள் நண்பரைப் படுகொலை செய்த மகாபாவிகள் விசாரிக்கப்படுவதை நீங்களும் பார்க்க வேண்டுமென்று” சொல்லிவிட்டு தேவதேவி அறைக்கு வெளியில் வரவே, பாலாஜியும் அவள் பின்னால் வந்தான்.
கொலுமண்டபத்தில் தேவதேவி நுழைந்த மாத்திரத்தில் அங்கிருந்த ஈட்டி வீரர்களைத் தவிர பாக்கி அவ்வளவு பேர்களும் தரையில் விழுந்து வணங்கிவிட்டு மாதா கோவிலில் தொழுகை நடத்தும் பக்தர்கள் மண்டியிட்டு உட்காருவதைப்போல உட்கார்ந்திருந்தனர். மண்டபத்தின் மத்தியிலிருந்த ஒரு மேடையின்மீது வைக்கப்பட்டிருந்த பீடத்தில் திரிசூலத்துடன் தேவதேவி நின்ற காட்சியை பாலாஜி அவனுடைய வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது. விரிந்த தாமரைபோல இருந்த அந்தப் பீடத்தில் தேவதேவி ஒரு கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டும், மற்றொரு கையை இடையில் ஊன்றிக் கொண்டும் கம்பீரமாக நின்றது ஆலயத்தின் அழகான ஒரு அம்மன் விக்கிரகத்துக்கு நேத்திரானந்தமாக அலங்காரம் செய்து வைத்திருப்பதைப் போலிருந்தது.
மேடையின் ஒரு பக்கத்தில் வயதான ஒரு மனிதர் வாய்பொத்தி கை கட்டிக் கொண்டு நின்றார். மற்றொரு புறத்தில் ஒருவீரன் உருவிய வாளுடன் சிலைமாதிரி நின் றான். தேவதேவி பாலாஜியைப் பார்த்து “மேடையின் கீழ் உட்கார்ந்து பாருங்கள். இந்த நாட்டில் தர்ம பரிபாலனம் எப்படி நடக்கிறதென்பதைக் கவனியுங்கள்!” என்று சொல்லிவிட்டு மறுபக்கம் திரும்பி, “மகாமந்திரி! குற்றவாளிகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றாள்.
மந்திரியென்று வர்ணிக்கப்பட்ட வயோதிப மனிதர் இரண்டு தடவை கையைத் தட்டினார். தளபதி உக்கிரசேனர் முன்னால் வர, அவருக்குப் பின்னால் இரும்புச் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்ட ஐவரை இரண்டு ஈட்டி வீரர்கள் சங்கிலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து தேவதேவியின் முன்னால் நிறுத்தினார்கள். உக்கிரசேனர் குகையிலிருந்து கட்டி இழுத்து வரப்பட்ட அதே மனிதர்கள் தான் இப்பொழுது சபையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருப்பவர்களென்பதை பாலாஜி பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டு விட்டான். குற்றவாளிகளைக் கொண்டு வரச் சொல்லியவுடன் உக்கிரசேனரும் சபைக்கு வரவேண்டும்? அவர் மீதும் குற்றஞ்சாட்டி தண்டிக்கப் போகிறார்களா என்று பாலாஜி யோசித்தான்.
இதை மகாராணியிடம் கேட்பதற்கு அவன் வாயெடுத்த பொழுது தேவதேவி பேச ஆரம்பித்துவிட்டாள். அவள் உக்கிரசேனரைப் பார்த்து “உக்கிரசேனா? கைதிகளின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை சபைக்கு எடுத்துச் சொல்லு” என்றாள்.
“மகாராணியின் விருந்தினர்களில் ஒருவரை இவர்கள் தூரத்கிரமாகத் தூக்கி ஈட்டிகளினால் குத்திக் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டார்கள். கொலை செய்யப் பட்ட மனிதர் மகாராணியின் விருந்தினர் என்பது தெரிந்து அவர் மீது துவேஷம் பாராட்டியது முதல் குற்றம். ஈட்டிகளினால் தாக்கியது இரண்டாவது குற்றம். கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டது மூன்றாவது குற்றம். இம் மூன்று குற்றங்களுக்கும் உரிய தண்டனையைப் பெறவே இவர்கள் தேவியின் முன் ஆஜர் செய்யப்பட்டிருக்கின்றனர்!” என்று உக்கிரசேனர் சொன்னார்.
மலைக்கன்னி குற்றவாளிகளைப் பார்த்து “இம்மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் உங்கள் பதில் என்ன என்று வினவினாள்.
கைதிகளில் யாரும் பேசவில்லை. மரணத்தின் தலைவாசலை மிதித்துக்கொண்டிருந்த அவர்களுக்குப் பேச நாவெழவில்லை.
“குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்னவென்று கேட்கிறேன்!” என்று மலைக்கன்னி மீண்டும் உரத்த தொனியில் கேட்டாள்.
ஐந்து கைதிகளில் ஒருவன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பேசினான். “குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கவில்லை கன்னிமாதா! வெள்ளை மனிதனை நாங்கள் கொலை செய்தது உண்மைதான். வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஜன்மப்பகைவர்கள் என்பது பொதுவான அபிப்பிராயம். ஆகையால் அந்த மனிதர் தங்கள் விருந்தாளியாயிருக்க முடியாதென்ற எண்ணத்தில் தவறு இழைத்துவிட்டோம். எங்களை மன்னித்துக் காத்தருளவேண்டும்!” என்றான் அவன்.
“மன்னிப்பா? என் விருந்தாளியைத் துடித்துத் துடித்துச் சாகடித்தவர்களுக்கு மன்னிப்பா? இல்லை! உயிருக்கு உயிர்! இரத்தத்திற்கு இரத்தம்! இதுதான் என் நீதி, இந்த நாட்டில் உயிரைப் போக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. வெள்ளையனாயினும் கறுப்பனாயினும் அல்லது வேறு எந்த நிறத்தவனாயினும் சந்தேகப்படுவோர்களை திக்குப் பாலகர்களிடம் ஒப்படைப்பது பிரஜைகளின் கடமை. நீதி செலுத்த நாம் இருக்கிறோம். இதைத் திக்குப் பாலகர்கள் மீண்டும் தங்கள் பகுதி ஜனங்களுக்கு அறிவுறுத்தட்டும். நாட்டு நடப்பை மீறி சட்டத்தைத் தங்கள் கையிலெடுத்துக் கொண்டு படுகொலை செய்யத் துணிந்த இந்தக் கயவர்கள் என்ன தண்டனையடைந்தார்கள் என்பதையும் திக்குப் பாலகர்கள் பறைசாற்றட்டும். குற்றவாளிகள் ஐவரையும் புலிக் குகைக்குள் தள்ளுங்கள். நரமாமிசத்தை ருசித்துப் பல வருடங்களாகிய புலிகள் இவர்களை அங்கம் அங்கமாகப் பிய்த்துத் தின்னட்டும்!” என்று உத்தரவிட்டாள் மலைக்கன்னி.
இந்த உத்தரவு பிறந்தபொழுது அந்த மண்டபத்தில் குண்டூசி கீழே விழுந்தால் கிணீரென்று சப்தம் கேட்கும்படி அவ்வளவு நிசப்தம் நிலவியது. மரண தண்டனை விதிக்கப் பட்ட ஐவரும் ஏற்கனவே குற்றுயிராகி விட்டவர்களைப் போல தரையில் விழுந்தார்கள். அவர்களில் முன்பு பேசிய அதே மனிதன் மாத்திரம், “கன்னி மாதா! தெரியாமல் தவறு இழைத்துவிட்டோம்! இந்த ஒரு தடவை மாத்திரம் எங்களை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுக்கவேண்டும் தாயே!” என்று அழுது கொண்டே புலம்பினான்.
இதற்குமேல் பாலாஜியினால் பொறுக்க முடியவில்லை. அவன் பளிச்சென்று எழுந்து, “தேவி! தவறு இழைப்பது மனித சுபாவம். ஏதோ தெரியாத்தனமாக வில்லியத்தை இவர்கள் கொன்றுவிட்டார்கள். இவர்களுடைய உயிர்களைப் பலிவாங்குவதினால் வில்லியம் பிழைத்து எழுந்து விடப்போவதில்லை. கருணை கூர்ந்து இவர்களை மன்னித்து விடுங்கள்” என்று மன்றாடினான்.
”இல்லை! இவர்களை மன்னிப்பதற்கில்லை. கொண்டு போங்கள் குற்றவாளிகளை! சபை கலைந்து போகலாம்!” என்று கண்டிப்புடன் சொன்னாள் தேவதேவி.
மறு நிமிடமே ஈட்டி வீரர்கள் குற்றவாளிகளைத் தர தரவென்று இழுத்துக்கொண்டு போய் விட்டார்கள். மண்டபம் நிறைய இருந்த ஜனங்களும் சிப்பாய்களும் ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராகச் சென்றபின் மந்திரியும் தலை குனிந்து வணங்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
எல்லோரும் மண்டபத்தைக் காலி செய்து விட்டுப் போகும் வரையில் பீடத்தின் மீது அசையாமல் நின்ற தேவதேவி பிறகு கீழே இறங்கி வந்தாள். அந்தக் காட்சி சினிமாப் படங்களில் கடவுள் சிலையிலிருந்து தெய்வம் பிரசன்னமாகி மனித உருவில் இறங்கிவரும் காட்சியைப் போலிருந்தது பாலாஜிக்கு.
தேவதேவி பாலாஜியைப் பார்த்து, “நண்பரே! உங்கள் பேச்சைக் கேட்கவில்லை யென்று வருத்தமா?” என்றாள்.
“தேவி! நீங்கள் சர்வ வல்லமை பொருந்திய மகாராணி! என் வருத்தமும் கோபமும் உங்களை என்ன செய்யும்?” என்றான் பாலாஜி.
“உங்களுக்குத் தெரியாது இநதக் காட்டு ஜனங்களை அடக்கியாளுவது எவ்வளவு கஷ்டமென்று! இரத்த வெறி பிடித்த இவர்களைப் பயமுறுத்தி வைக்கா விட்டால் இந்த நாட்டில் அராஜகம் தலைவிரித்து ஆடும். சில சமயங்களில் என்னுடைய நீதி பரிபாலனம் எனக்கே அருவருப்பாகவும் மனக்கஷ்டமாகவும் இருப்பதுண்டு. ஆயினும் ஆட்சிப் பொறுப்பை வகிப்பவாகள் தவிர்க்க முடியாத சில கடமைகளைச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. கண்டிப்பு இல்லாவிட்டால் மகா முரடர்களான இத்தீவு மக்களை ஒரு சிறு பட்டாளத்தை வைத்துக் கொண்டு என்னால் ஆட்சி புரிய முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றாள் தேவதேவி.
“கண்டிப்பு இல்லாத இடத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காதென்பது உண்மைதான் தேவி. அதற்காக இந்த ஐந்து குற்றவாளிகளையும் இவ்வளவு கொடுமையாகத் தண்டித்திருக்க வேண்டாம்!” என்று பாலாஜி சொல்லவே, “கொலைகாரனுக்கு மரண தண்டனைக்குக் குறைந்த எந்தத் தண்டனையும் சரியான தண்டனையாகாது. இந்த ஐவருடைய உயிர்களையும் போக்குவது வருங்காலத்தில் அநேகருடைய உயிர்களுக்குப் பாதுகாப்பாயிருக்கு மென்பதையும் நீங்கள் மறந்து பேசுகிறீர்கள்!” என்றாள் அவள்.
”தேவி! என் மகன் ஜோதிவர்மன் படுகிடையாகக் கிடக்கிறான். இன்னும் சில நாழிகை நேரத்துக்கு மேல் அவன் பிழைக்க மாட்டானென்று அரண்மனை வைத்தியர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாராம். என் மகனுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்க வேண்டும் கன்னிமாதா! நீங்கள் மனது வைத்தால் அவன் குணமடைந்து விடுவானென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயவு செய்து அவனை வந்து பார்க்கவேண்டும்” என்றார் பாலாஜி.
“அரண்மனை வைத்தியர் என்னிடமும் சொன்னார்கள். கவலைப் படாதீர்கள். நீங்கள் முதலில் போங்கள். நான் விரைவில் மருந்து தயாரித்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் தேவதேவி.
தேவதேவி நேரில் வந்து ஜோதியைக் குணப்படுத்தப் போகிறாள் என்ற சந்தோஷச் செய்தியை சித்ராவுக்குச் சொல்ல ஓட்டமும் நடையுமாக ஜோதி படுத்திருக்கும் அறையை நோக்கிச் சென்றான் பாலாஜி.
ஜோதியின் அறைக்கு பாலாஜி வந்தபொழுது சித்ரா, உக்கிரசேனர், முனிசாமி ஆகிய மூவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு மூலைக்கொருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் இருந்த நிலையைக் கண்டவுடனேயே ஜோதியின் காரியமெல்லாம் முடிந்து போயிருக்க வேண்டுமென்று பாலாஜிக்குத் தோன்றியது. தன்னையும் அறியாமல், “ஐயோ ஜோதி! கடைசியில் உன் கதி இப்படியா ஆகவேண்டும்?” என்று வாய்விட்டு அலறிக் கொண்டே ஜோதியின் அருகில் சென்று அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். தொட்டுப் பார்த்தவர் சட்டென்று அழுகையை நிறுத்திக்கொண்டு பரபரப்புடன் ஜோதியின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “ஜோதி இறக்கவில்லை. என் ஜோதி இறக்கவில்லை! அவன் பிழைத்து விடுவான்!” என்று ஆனந்தக் கண்ணீர் பெருக உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார்.
“பாவம், மனிதன் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டேயிருக்கும் பொழுது என்ன ஆனந்தம் ஐயா உங்களுக்கு? பிள்ளையென்ற பாசம் கூட இல்லாமல் இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள்?” என்று சீறினாள் சித்ரா. அழுது அழுது வீங்கிப்போயிருந்த அவள் முகம் இப்பொழுது பார்ப்பதற்கே பயங்கர மாயிருந்தது.
“நான் எங்கே போயிருந்தேன் என்ற கேட்டாய். என் ஜோதியைப் பிழைக்க வைக்கப் போயிருந்தேன். மகாராணியிடம் இங்கிதமாகப் பழகி நயமாகப் பேசி அவளை இங்கு அழைத்து வரப் போயிருந்தேன். மகத்தான சக்தி வாய்ந்த கன்னிமாதா ஜோதியை நிச்சயம் பிழைக்க வைத்து விடுவாள். ஒளஷதம் தயாரித்துக் கொண்டு அவள் இதோ வந்துவிடுவாள்” என்று சொல்லிய வண்ணம் ஜோதியின் கழுத்திலிருந்த சர்ப்பச் சின்னம் பதித்த தங்கச் சங்கிலியை பாலாஜி மெதுவாகக் கழற்றினான்.
“அந்தச் சங்கிலியை ஏன் கழட்டுகிறீர்கள்?” என்று கேட்டாள் சித்ரா.
“காரணம் பிறகு சொல்கிறேன். தேவதேவி வரும் பொழுது அவ்விடம் இந்தச் சங்கிலியைப் பற்றி ஒன்றும் சொல்லாதே!” என்று சொல்லிய வண்ணம் அந்தச் சங்கிலியைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார் பாலாஜி.
“ஏன்?” என்று கேட்டார் தளபதி.
“உங்கள் பெண்ணின் புருஷன் பிழைக்கவேண்டுமானால், ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காமல் நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்றார் பாலாஜி.
“மகாராணி உடனே வருவதாகச் சொன்னார்களா?” சித்ரா கேட்டாள்.
“ஆமாம்! மருந்து தயாரித்துக்கொண்டு வருவதாகக் கூறி என்னை முதலில் போகச் சொன்னாள். அவள் வந்து பார்த்தால் ஜோதி பிழைத்துவிடுவானென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மூலிகைகளின் ஆச்சரியமான சக்திகளை யெல்லாம் தேவதேவி தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.”
”கன்னிமாதா வந்து பார்த்தால் ஜோதி பிழைப்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், மகாராணி இங்கு வரவேண்டுமே!” சந்தேகப்படுவது போல சித்ரா கூறவும், “இன்னும் ஏன் சந்தேகப்படுகிறாய். கொஞ்ச நேரத்தில் மகாராணி இங்கு வருகிறாளா இல்லையா என்று நீயே பாரேன்!” என்று பாலாஜி சொல்லிக் கொண்டிருக்கையில் அறைக்கு வெளியில் திரிசூலத்தைக் கீழே தட்டிக் கொண்டு கன்னிமாதா வரும் சப்தம் அவர்களுக்குக் கேட்டது. அவர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் வழக்கமான முகத்திரையுடனும் ஒரு கையில் சூலாயுதமும் மற்றொரு கையில் மண் கலயமுமாக உள்ளே நுழைந்தாள் தேவி.
”கன்னிமாதா! தக்க சமயத்தில் வந்தீர்கள். இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால் என் மகன் மறுபடி நான் பார்த்திருக்கமுடியாத இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பான். வினாடிக்கு வினாடி அவன் உயிர் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மரணத்துடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறான் தாயே!” என்றார் பாலாஜி எழுந்து நின்றுகொண்டு.
“நான் வந்துவிட்டபிறகும் உங்களுக்கு ஏன் கவலை? உங்கள் மகன் இறக்காம லிருந்தால் நிச்சயம் அவனை நான் காப்பாற்றுவேன். இறந்து போயிருந்தால் அவனுக்குத் திரும்ப உயிர் கொடுக்க என்னால் முடியாது. வேறு எவராலும் முடியாது” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை அவள் சுற்றிப் பார்த்தாள்.
அறையின் ஒரு மூலையில் சித்ராவும் உக்கிரசேனரும் தரையில் படுத்து கரங்குவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு மூலையில் வெட வெடவென்று உடல் நடுங்க முனிசாமி ஒடுங்கி உட்கார்ந்திருந்தான்.
“உக்கிரசேனா! எழுந்திரு!” என்றாள் தேவதேவி. அவன் எழுந்ததும், “அது உன் மகளா?” என்றாள் தேவதேவி.
“ஆமாம் தாயே! என் மகள் சித்ரா!” என்று நாக்குழறப் பதிலளித்த உக்கிரசேனருக்கு சித்ரா வந்திருப்பதை ஏன் அறிவிக்கவில்லையென்று மலைக்கன்னி மறுபடியும் சீறி விழுவாளோ என்று பயமாயிருந்தது.
“உன் மகள் அரண்மனைக்கு வந்திருப்பதை எனக்குத் தெரிவிக்காதது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? இந்த மனிதர் மாத்திரம் உனக்காகப் பரிந்து பேசியிரா விட்டால் இப்பொழுது உன் தலை உன் கழுத்திலிருக்காது. மறுபடியும் இது மாதிரித் தவறு செய்தால் நீ பிழைக்க மாட்டாய். ஞாபகமிருக்கட்டும்” என்றாள் தேவதேவி. பிறகு பாலாஜியைப் பார்த்து, “அந்த மூன்று பேர்களையும் வெளியே போயிருக்கச் சொல்லுங்கள். என் சிகிச்சை முறை எவருக்கும் தெரியக் கூடாது” என்று சொல்லிவிட்டு ஜோதிவர்மன் படுத்திருந்த கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள் மலைக்கன்னி.
“உங்களையெல்லாம் தேவி வெளியே போகச் சொல்லுகிறாள்” என்று பாலாஜி சொல்லிய மாத்திரத்தில் முனிசாமி எப்படியாவது அந்த இடத்தை விட்டுப் போனால் போதுமென்று நினைத்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். அவனைப் பின்பற்றி உக்கிரசேனரும் சென்றார். சித்ராவோ தரையிலிருந்து எழுந்து ஒரு மூலையில் ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள்.
“சித்ரா! நீயும் போ! தேவதேவி உன்னையும் தான் போகச் சொல்கிறாள்” என்றார் சித்ராவிடம் பாலாஜி.
“நான் மட்டும் இருக்கிறேனே” என்று சித்ரா மன்றாட்டமாகச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதேவி பளிச்சென்று அவள் பக்கம் திரும்பி, “என்ன? என்ன சொன்னாய்? என் உத்தரவுக்குப் பதில் பேச்சா?” என்று கண்களில் தீப்பொறி பறக்க முழங்கினாள்.
தேவியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் சித்ரா அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டாள்.
“இந்தக் காட்டு ஜனங்களிடம் கண்டிப்பாயில்லா விட்டால் அரைக்கணம் இங்கு நான் வாழ முடியாது என் உத்தரவை உதாசீனம் செய்தால் என்ன கதி ஏற்படுமென்பதற்கு இன்று காலையில் தான் இவர்களுக்கு நல்ல பாடம் படித்து வைத்தேன். அதற்குள் இந்த நாய் என் ஆக்ஞையை மீற முயற்சிக்கிறது” என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய் திரிசூலத்தை சுவற்றின் ஓரமாகச் சாற்றி வைத்து விட்டு மீண்டும் ஜோதியின் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள் தேவதேவி. பிறகு கையிலிருந்த ஒளஷதக் கலயத்தைப் பாலாஜியிடம் கொடுத்து விட்டு ஜோதியின் கையைப் பிடித்து நாடியைப் பரிசோதித்தாள்.
”நல்ல நேரத்தில் நான் வந்தேன். நாடி ரொம்பவும் விழுந்து போய் விட்டதே” என்று சொல்லியவள் ஜோதியின் கையைப் பிடித்துப் பார்த்து விட்டு, “எவ்வளவு அழகான கை! உங்கள் மகன் நல்ல அழகாயிருப்பான் போலிருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே மறு பக்கமாகத் திரும்பியிருந்த ஜோதிவர்மன் முகத்தை அவள் லேசாகத் தன்னுடைய பக்கமாகத் திருப்பிப் பார்த்தாள்.
ஜோதியின் முகத்தை அவள் பார்த்ததுதான் தாமதம், படம் விரித்தாடும் கொடிய சர்ப்பத்தை மிதித்தவள் எப்படி அலறியடித்துக் குதிப்பாளோ அதே போல அந்த மலை முழுவதும் திடுதிடுத்துப் போகும் படியான கூச்சலிட்டுக் கொண்டு துள்ளியெழுந்தாள் மலைக்கன்னி. எங்கும் எந்தக் காலத்திலும் கேட்டிராத அந்த அதி பயங்கரமான கூச்சல் அமரகிரி மலை முழுவதிலும் எதிரொலித்திருக்க வேண்டும். திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மாகாளியைப் போல ரௌத்ராகாரத்துடன் பாலாஜியை நெருங்கி வந்தாள் தேவதேவி. திடீரென்று அவள் இவ்விதம் ஆக்ரோஷமடைந்து அடியோடு உருமாறிப் போனது பாலாஜிக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. முன் கோபத்தில் மலைக்கன்னி என்ன செய்வாளோ என்று அவன் பதைபதைத்துப் போய் நின்றான்.
“தேவி கன்னிமாதா! இந்த ஏழையை ஏன் இப்படிப் பயமுறுத்துகிறீர்கள்? என் நினைவு தெரிந்து நான் உங்களுக்கு ஒரு அபசாரமும் செய்யவில்லையே அம்மா!” என்று வாய்விட்டுக் குழறி ஒன்றும் புரியாமல் புலம்பினார் பாலாஜி.
“ஒரு அபசாரமும் செய்யவில்லை? நீ ஒரு அபசாரமும் செய்யவில்லை? அடபாவி! என் ஜீவனை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விடப் பார்த்தாயே மகா பாவி! இதை விட எனக்கு இன்னும் வேறு என்ன அபசாரமும், துரோகமும் நீ செய்யவேண்டும்? எவருக்காக இரண்டாயிரத்து ஐந்நூறுஆண்டுகளாக இங்கு நான் கடும் தவமிருக்கிறேனோ, எவர் ஒருவருக்காக பல நூற்றாண்டுகளாக ஏங்கி ஏங்கிப் புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கிறேனோ இந்த உத்தம புருஷன், ஆணழகன். என் உயிருக்கினியவன் இங்கு வந்திருப்பதை ஏன் முன்பே எனக்குச் சொல்லவில்லை?” என்று ரௌத்ராகாரத்துடன் முழங்கிய தேவதேவி பாலாஜியைக் குத்திப் பிளந்து அங்கமங்கமாகப் பிய்த்தெறியத் திரிசூலத்தைச் சுழற்றிக் கொண்டு நெருங்கினாள்.
பாலாஜியின் நாக்கு உலர்ந்துபோய் அவரின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. உடல் வெலவெலத்து விழிகள் பிதுங்க, அவர், “ஐயோ ஜோதி!” என்று அலறினார். அவர் மீது பட்டதும் படாததுமாக நின்ற திரிசூலத்தைத் தேவதேவி பளிச்சென்று தூரத்தில் வீசி யெறிந்தாள். கருங்கல் தரையில் சூலம் விழுந்து கணீரென்று சப்தம் கேட்ட பொழுதுதான் பாலாஜிக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போலிருந்தது.
“கன்னிமாதா! அரைக்கணத்தில் எவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிடப் பார்த்தீர்கள்? ஒரு பாபமுமறியாத என்னைக் கொன்று விடப் பார்த்தீர்களே! இது தர்மமா தேவி?” என்று கண்களில் கண்ணீர் பெருக முற்றிலும் பயம் தெளியாமல பாலாஜி கேட்டார்.
அவரின் முறையீடு தேவியின் செவிகளில் பட்டதாகவே தெரியவில்லை. உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அவளுடைய மிருதுவான சரீரம் கடுமையான குளிர்க்காய்ச்சல் கண்டதைப்போல நடுங்கியது. கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா! திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் அறிவைப் பறிகொடுத்துவிட்டேன். பாவம்! உங்களுக்கு என்ன தெரியும்? இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெறியிலே மிலேச்சத்தனமாக நான் படுகொலை செய்த அதே விஜயகேசரிதான் உங்களுடைய வளர்ப்புப் பிள்ளை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? ஐயோ கேசரி! சர்வ வல்லமை படைத்தவளென்று பெருமிதத்துடனிருக்கும் எனக்கு, காலத்தையும் கடல்களையும் கடந்து சித்தரின் சத்தியவாக்கை மெய்ப்பிக்க நீ இங்கு வந்திருப்பதை அறியாமல் போனேனே! ஐயோ! நீ வந்தவுடன் இங்கு வந்து பார்த்திருக்கக் கூடாதா? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ? என் தெய்வங்களே! மறுபடியும் சதி செய்து என் பதியை என்னிடமிருந்து பிரித்துவிடாதீர்கள்! காத்துக் காத்துக் கணக்கில்லாத ஆண்டுகளாகக் காத்திருக்கும் என்னை மறுபடியும் கைவிட்டுப் போய் விடாதே கேசரி! ஐயோ நான் என்ன செய்வேன்? என் அன்பரின் முகத்தைப் பாருங்கள் ஐயா! பால் வடியும், நிஷ்களங்கமான அந்த முகத்தைப் பாருங்கள் ஐயா! கடுமையான நோயிலும் கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கும் விஜயகேசரியின் முகத்தை நன்றாகப் பாருங்கள் ஐயா! என் அரண்மனையில், என் அருகிலேயே என் பதி வந்திருந்தும் அவரை அறியாமலும் கவனியாமலும் இருந்து விட்ட இந்தப் பாபியை, நீங்களாவது வலுக் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வந்திருக்கக்கூடாதா?’ ஐயோ என் விஜயகேசரி! என் விஜயகேசரி!”
தேவதேவி தன்னை மறந்து உணர்ச்சி வெறியில் உலகத்தையே மறந்து முகத்திலும் மார்பிலும் பளார் பளார் என்று ஓங்கி அடித்துக்கொண்டு அலறித் துடித்தாள். அகங்காரமும் அதிகார மமதையும் அமானுஷ்யமான சக்தியும் படைத்த கன்னிமாதா பச்சைக் குழந்தையைப்போல அவ்விதம் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் கலங்கிப் போய் நின்ற பாலாஜிக்கு ஜோதிவர்மன் உயிர் வினாடிக்கு வினாடி ஊசலாடிக் கொண்டிருக்கும் ஞாபகம் வந்தது.
“கன்னிமாதா! நீங்கள் இப்படி மனம் தளர்ந்து புலம்பிக் கொண்டிருந்தால் என் மகன் பரலோகம் போய்ச் சேர்ந்து விடுவான். நீங்கள் நினைப்பதைப் போல என் மகன் ஜோதி விஜயகேசரியாகவே இருந்தாலும் முதலில் அவனைப் பிழைக்க வைத்துவிட்டுப் பிறகு மற்றதைக் கவனியுங்கள் தேவி” என்றான்.
“ஆம்! ஆம்! காலத்தை யெல்லாம் கடந்து வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் என் பிராணபதியை முதலில் உயிர்ப்பிக்க வேண்டும். என் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போவதன் முன்னால் கடவுளின் அருளோடு அவரைக் குணப்படுத்த வேண்டும். அதை இந்தப் பேதைக்கு நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தினீர்கள் ஐயா!” என்று சொல்லிக் கொண்டே கயிற்றுக் கட்டிலின் தலைப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, “அந்த மருந்துக் கலயத்தைத் தயவு செய்து இப்படிக் கொடுங்கள்!” என்றாள்.
மருந்துக் கலயத்தைக் கையில் வாங்கிக்கொண்டவுடன் ஒரு கையினால் ஜோதியின் உதடுகளைப் பிரித்துக்கொண்டு இன்னொரு கையினால் கலயத்திலிருந்த மருந்தை அவன் வாயில் ஊற்ற முயற்சித்தாள் தேவதேவி. ஆனால், அவள் முயற்சி பலிக்கவில்லை. கலயத்தைப் பிடித்திருந்த கரம் வெட வெட வென்று நடுங்க உள்ளேயிருந்த திராவகமும் ததும்பி ஜோதியின் மேலெல்லாம் சிந்தியது.
வெடவெடவென்று நடுங்கும் அவளுடைய விரல்கள் மலைக்கன்னியின் பதட்டத்தை எடுத்துக் காட்டுவதாயிருந்தது. குமுறிக் கொண்டு அனல் கக்கும் கோரமான எரிமலையைப் போல சில நிமிடங்களுக்கு முன் நெருப்பைக் கக்கிய அதே மலைக்கன்னி இப்பொழுது ஒரு சாதாரண கிராமியப் பெண்ணைப் போல அஞ்சி நடுங்கிக் கலங்கிப் போயிருந்தது பாலாஜிக்கு ஆச்சர்யமாயிருந்தது உணர்ச்சியின் பிம்பமாக உட்கார்ந்திருந்த தேவதேவியையும் உணர்ச்சியற்ற மரக்கட்டையைப் போல உயிருக்கு மன்றாடிக் கொண்டு படுத்திருக்கும் ஜோதிவர்மனையும் இமைகொட்டாமல் பாலாஜி பார்த்துக் கொண்டு நின்றார்.
“ஐயா! கொஞ்சம் இப்படி என் அருகில் வாருங்கள்” என்று அழைத்தாள் தேவதேவி. விக்கலுடனும் விம்மலுடனும் அழைத்த அந்தக் குரல் ஜீவனை இழந்து கிணற்றுக்குள் இருந்து பேசுவதைப் போலிருந்தது.
“இந்த மருந்தைத் தயவுசெய்து இவர் வாயில் ஊற்றுங்கள் ஐயா! என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. என் ஸ்வாமிக்கு மருந்து கொடுக்கக்கூட என்னால் முடியவில்லை. என் கை பதறுகிறது. சீக்கிரமாக இந்த மருந்தை அவர் வாயில் ஊற்றுங்கள் ஐயா!” என்று சொல்லிய பொழுது மாலை மாலையாக அவள் கண்களின் வழியாகக் கண்ணீர் வழிந்து ஜோதியின் நெற்றியிலும் முத்து முத்தாக விழுந்தது. நான் எவ்வளவு சக்திவாய்ந்த மகாராணியாயிருந்தாலும் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாயிருந்தாலும் எல்லாப் பெண்களையும் போல நானும் ஒரு சாதாரண பெண்தான் என்று தேவதேவி சொல்லாமல் சொல்லிக்காட்டி பாலாஜியின் உதவியை நாடுவதைப் போலிருந்தது அவளுடைய கம்மிய தொனியும் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரும்.
பாலாஜி, அவள் கரத்திலிருந்த கலயத்தைத் தன்னுடைய கையில் வாங்கிக் கொண்டான். ஜோதியின் இரு உதடுகளையும் தேவதேவி லேசாகப் பிரிக்க சொட்டுச் சொட்டாக ஒளஷதத்தை ஜோதியின் வாயில் பாலாஜி ஊற்றினார். சுமார் முப்பது சொட்டு ஊற்றியவுடன் “போதும் ஐயா! கலயத்தை அப்படிக் கீழே வைத்துவிட்டு வெளியேபோய் உக்கிரசேனனைக் கொஞ்சம் அழைத்து வாருங்கள்” என்றாள் மலைக்கன்னி,
பாலாஜி அறைக்கு வெளியே வந்தபொழுது அங்கு உக்கிரசேனரும் சித்ராவும் மட்டுமல்ல ராஜகுருவும் அரண்மனையைச் சேர்ந்த வேறு பல முக்கியஸ்தர்களும் ஒரு டஜன் ஈட்டி வீரர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் கூடியிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த மலைச் சிகரமே கிடு கிடுத்துப் போகும்படி மலைக்கன்னி போட்ட கூக்குரலைக் கேட்டு அவர்கள் அங்கு கூடியிருக்கவேண்டு மென்று பாலாஜிக்குத் தோன்றியது. கூச்சலைக் கேட்டு அவர்கள் பரபரப்போடு வந்து கூடிய பொழுதிலும் தேவியின் உத்தரவில்லாமல் உள்ளே நுழையக் கூடாதென்பதற்காக வெளியிலேயே கலவரத்துடனும் கவலையுடனும் காத்திருந்தார்கள். பாலாஜியைக் கண்டவுடன், “என்ன ஐயா! என்ன நடந்தது? கன்னிமாதா ஏன் அப்படிச் சப்தம் போட்டாள்?’ என்று ராஜகுரு முதலில் வினவினார்.
“தயவு செய்து என்னிடம் ஒன்றும் கேட்காதீர்கள். தேவியின் சொந்த விஷயங்களைப்பற்றி அவளுடைய அனுமதியில்லாமல் நான் ஏதும் பேசக்கூடாது. சொல்ல வேண்டிய நேரம் வரும்பொழுது தேவதேவி தானாகவே எல்லாம் சொல்லுவாள்!” பிறகு உக்கிரசேனரைப் பார்த்து தேவி உங்களை அழைக்கிறாள் என்றார் பாலாஜி.
பாலாஜியுடன் உக்கிரசேனர் உள்ளே நுழைந்த பொழுது ஜோதியின் கட்டிலில் அவள் கண்ணீர் சிந்தியவாறு உட்கார்ந்திருப்பதையும் அவள் உடுப்பெல்லாம் கண்ணீரில் தொப்பலாக நனைந்து போயிருப்பதையும் பார்த்து உக்கிரசேனர் திகைத்துப் போனார். அந்த நிலைமையில் தேவ தேவியை அவர் பார்ப்பது இதுவே முதன் முறையாதலால் அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தூரத்தில் மண்டியிட்டு வணங்கிய வண்ணம் “கன்னிமாதா! இதோ உங்கள் ஊழியன் வந்திருக்கிறேன்” என்றார் உக்கிரசேனர்.
“எழுந்திரு உக்கிரசேனா! இனி என் முன் நீ மண்டியிட்டு வணங்க வேண்டாம். இந்த வினாடியிலிருந்து நீ என்னுடைய ஊழியனுமில்லை. நீ என் ஆப்த நண்பன். உன் மகாராணிக்கு நீ எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா? நொந்து போய்க் கிடந்த என் வாழ்வில் ஒரு புதிய ஒளியை ஏற்படுத்தி மலரச் செய்த உத்தம நண்பன் நீ. போ! சீக்கிரம் என் அந்தப் புரத்துக்கு ஓடிப்போய் மயில் விசிறியை எடுத்துக் கொண்டு ஓடிவா” என்றாள் தேவதேவி.
தன்னுடைய 60 வயது வாழ்க்கையிலே கனிவான மொழியை தேவதேவியின் வாயிலிருந்து கேட்டறியாத உக்கிரசேனருக்குத் தான் காண்பது கனவா அல்லதுநனவா என்றே புரியவில்லை. “நீ என் ஊழியனில்லை. என் ஆப்த நண்பன்” என்று தேவதேவி சொல்லியது உக்கிரசேனருக்கு சொப்பனம் போலிருந்தது. மண்டியிட்டு உட்கார்ந்திருந்தவர் ஒன்றும் புரியாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்தார்.
”கன்னிமாதா சொல்லுவது காதில் விழவில்லை? சீக்கிரம் போய் விசிறியைக் கொண்டு வாருங்கள்” என்று உக்கிரசேனர் அருகில் வந்து பாலாஜி சொல்லிய பொழுது தான் உக்கிரசேனருக்கு கனவிலிருந்து கண் விழித்ததைப் போலிருந்தது. அவருடைய திக்பிரமையின் காரணத்தை உணர்ந்து கொண்ட தேவதேவி “என்னிடம் ஏற்பட்டிருக்கும் இந்த ஆச்சரியமான மாறுதலைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறான். பாவம் அவனுக்கு என்ன தெரியும்!” என்றாள். பிறகு உக்கிரசேனர் பக்கம் திரும்பி “பிறகு எல்லாம் சொல்லுகிறேன் உக்கிரசேனா! முதலில் மயில் விசிறியை சீக்கிரம் எடுத்து வா!” என்றாள்.
இந்த சமயம் பார்த்து “வெளியே ராஜகுருவும் அரண் மனைப் பிரதானிகளும் கவலையோடு கூடியிருக்கிறார்கள் தேவி!” என்றான் பாலாஜி.
“அவர்கள் யார்? இங்கு அழைத்துவா உக்கிரசேனா! போகும் பொழுது வெளியில் கூடியிருப்பவர்களையும் நான் போகச் சொன்னதாகச் சொல்லிவிட்டுப் போ! அழையாம லிருக்கும் பொழுது அவர்களுக்கு இங்கு என்ன வேலை!” என்றாள் தேவதேவி.
தளபதி உக்கிரசேனர் மயில் விசிறியை எடுத்துவர தேவியின் அந்தப்புரத்துக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். போகும் பொழுது ராஜகுருவையும் மற்றவர்களையும் போகச் சொல்லி விட்டு அவர் தலைதெறிக்க ஓடுகையில் மற்றவர்கள் ஆச்சரியத்துடன் அவர் ஓடுவதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா ஜோதிக்கு ஏதேனும் அபாயம் நேரிட்டிருக்க வேண்டுமென் றெண்ணி விஷயம் தெரிந்து கொள்ளுவதற்காக உக்கிரசேனரைப் பின்பற்றி ஓடினாள்.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.