ஜாதக விசேஷம்
கதையாசிரியர்: கொனஷ்டை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 92
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாவது வகுப்பில் ரெயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். முந்தின இரவு முழுவதும் நித்திரை இல்லை. பிரயாணத்தின் முடிவில் ஒரு முக்கியமான சபை சம்பந்தமாக நடக்கப் போகும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது எனது கருத்து. ஆகையால், இப்பொழுது பகலிலாவது வண்டியிலேயே சற்று உறங்கி, தேகச் சோர்வை நீக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சௌகரியமாக ஒரு மூலையில் வீற்றிருக்க இடம் கிடைத்தது. இந்த மட்டும் அதிருஷ்டம் என் பக்கத்தில் இருந்தது. ஆனால் தூக்கத்தில் பிரக்ஞையை இழக்கும் சமயத்தில், ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கவே, அதிகச் சந்தடியுடன் சிலர் என் அறையில் ஏறினார்கள்.
முதலில் கம்பீரமான ஒரு ஸ்திரீ. பிறகு அவளில் பகுதி கம்பீரமுள்ள ஒரு புருஷன், பாங்கான உடுப்பு தலைப் பாகையுடன் அவர் சோபித்தாலும், சுயமாகவே அவளிடத்தில் பொங்கின அதிகார சக்தி அவரிடத்தில் காணப்படவில்லை. அவர்களைப் பின்பற்றி ஏறின குமாஸ்தாவுக்கும், வில்லை போட்ட சேவகனுக்கும் அவளே வேலையிட்டாள். ‘அந்தப் பெட்டியை இந்த சீட்டுக்குக் கீழே!” – “படுக்கை மூட்டை இங்கே என்னத்திற்காக, இடத்தை அடைத்துக்கொண்டு?’ – “சாய்ந்து கொள்வதற்கா? ஒன்றும் வேண்டாம். வேண்டுமானால் நான் சொல்லமாட்டேனா? எனக்கு வாய் இல்லையா?” – “கூஜாவை என் கையண்டை வைக்க வேண்டாமா? இது கூடச் சொல்லித்தர வேண்டுமா?”
‘எலக்டிரிக் ‘பான்’ எதற்காக மத்தியைப் பார்த்துச் சுற்றிக் கொண்டிருக்கிறது? என் பக்கமாய் திருப்புங்கள்!’ – ‘மற்றவர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள். இந்த வெயிலில் நான் என்ன உருகிப் போக வேண்டுமென்றா உங்களுடைய எண்ணம்?” இம்மாதிரி. அநேகம்.
சேவகன் எனக்குச் சமீபத்தில் வந்த ஒரு க்ஷணத்தில், “இவர் யார்?” என்று ஜாடை யாகக் கேட்டேன். கையால் வாயைப் பொத்தினபடியே, “தாசீல்தார்வாள்” என்று அவன் ரகசியத்தை வெளியிட்டான். கடைசியில் வண்டி புறப்படப் போகும் சமயத்தில் குமாஸ்தாவும் சேவகனும் வண்டியை விட்டுக் குதித்துத் தங்களுடைய மூன்றாம் வகுப்பு அறையைப் பிடிப்பதற்கு ஓடினார்கள்.
ஜன்னலால் எட்டிப் பார்த்தேன். அவ்விருவரும் எப்படியோ தாவிப் பிடித்து அறைக்குள் ஏறிக்கொண்டார்கள். என்னுடைய கவலை நீங்கிற்று. அந்த மட்டும் க்ஷேமந்தான். ஆனால் இந்தச் சந்தடியில் என் தூக்கமும் போய்விட்டது. தம்பதிகளின் பேச்சு ரெயில் வண்டியின் ஓசைக்கு மேலிட்டு வந்து என்னுடைய காதைத் துளைத்தது. அடுத்த ஸ்டேஷனில் வண்டி மாற்றலாமா என்று ஆலோசித்தேன்.
வண்டி நிற்கவே, குமாஸ்தா ஆஜாராகிக் கதவண்டை ஒன்றும் சொல்லாமலே நின்றான்; ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அவ்விதம் செய்யும்படி அவருக்கு உத்தரவு போலும்! இப்பொழுது அவருக்குக் கட்டளையிட ஒரு வேலையும் அகப்படவில்லை. அந்த அம்மாள் சுற்று முற்றும் பார்த்தாள். கடைசியாகப் பங்களாவைக் காட்டி, “இதோ பாருங்கள்! நீங்கள் திருப்பிவைத்த ‘பான்’ வண்டி ஆட்டத்தில் நகர்ந்து மறுபடியும் மத்தியைப் பார்க்கிறது. இதெல்லாம் சரியாக இருக்கிற வண்டியாகப் பார்த்து எங்களை ஏற்றியிருக்கக் கூடாதா?” என்று கேட்டாள். மேலும், ‘உங்களுக்காக அக்கறை இருந்தால்தானே? நான் சொல்லி என்ன பிரயோஜனம்? எனக்கு வாய் வலிதான் மிச்சம்’ என்று முடித்தாள். பாவம்! அந்தக் குமாஸ்தா பதில் பேசவில்லை. ஆனால் வாயில்லா ஜந்துக்கள் வேதனைப்படும் சமயத்தில் அவற்றின் கண்களில் காணுகிற மாதிரி, மௌனமான துக்கம் அவர் முகத்திலும் தோன்றிற்று. என்னால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவர் இறங்கும் பொழுது நானும் இறங்கி, அவருடைய மூன்றாம் வகுப்பு அறையில் நானும் ஏறி நுழைந்துகொண்டேன்.
வண்டி புறப்பட்டுச் சிறிது நேரத்திற்கெல்லாம், டிக்கெட் இன்ஸ்பெக்டர் வந்தார். ஒவ்வொருவரும் டிக்கட்டை நீட்டினோம். ‘என்ன ஐயா! இரண்டாம் கிளாசு டிக்கெட்டை வைத்துக்கொண்டு மூன்றாம் கிளாசில் போகிறீர்களே? மற்றவர்கள் செய்யப் பார்க்கிறதற்கு நேர் எதிராக இருக்கிறது!” என்றார். நான் ஏதோ முணுமுணுத்தேன். எனக்கு எதிராக உட்கார்ந்திருந்த சாஸ்திரிகள் ஒருவர் சிரித்தார் ‘எல்லாம் ஜாதக விசேஷம்! எப்போ இன்னிக்கு மூன்றாம் கிளாசில் போக வேண்டுமென்று எழுதிப் போட்டிருக்கிறதோ, அப்போ, அதற்காக முதல் கிளாஸ் டிக்கெட்டை வாங்கினாலும் அதைத் தப்பிக்க முடியுமா?” என்று கேட்டார்.
“என்ன சாஸ்திரிகளே! இன்றைத் தினத்தைச் சேர்ந்த இந்த அற்ப விஷயங்கூடவா, என் ஜாதகத்தில் எழுதியிருக்கும்?” என்று கேட்டேன்.
“சந்தேகமென்ன? ஒன்று விடாமல் எல்லாந்தான் எழுதியிருக்கும் உங்களுக்கு ஒரு திருஷ்டாந்தம் கொடுக்கிறேன், கேளுங்கள், எனக்குக் கொஞ்சம் ஜோசியம் வரும். அது என்னுடைய விருத்தி என்றே சொல்லலாம். (சரி இலவசமாய் இங்கே ஒரு பிரசுரம் கிடைக்கிறது, சாஸ்திரிகளுக்கு’ என்று நினைத்துக்கொண்டேன்) 4 நாளைக்கு முன்பு ஒருவர் என்னிடம் வந்தார். ஜாதகத்தைப் பார்த்தேன். ‘ஜாதகத்தில் வாகனாதிபதியாகிய குரு பாக்கியத்தில் இருக்கிறான். உங்களுக்குச் சொந்த வாகனம் இருக்குமே?’ என்றேன். ‘ஒரு கார் இருக்கிறது எனக்கு’ என்று ஒப்புக்கொண்டார். ‘ஆனால் சனி கர்ம ஸ்தானத்தில் இருக்கிறான். அவன் பாவி. ஏதாவது வேலையில் உழைக்கச் செய்யும் சுபாவம் அவனுக்கு அவன் இப்போது மூன்று மாசமாகக் கோசாரத்தில் ரொம்பக் கெட்டவன். மோட்டார் கார் ஓட்டுகிற தொழிலைக் கூடக் கொடுப்பான்’ என்றேன். ‘ரொம்ப சரி, மூன்று மாசமாக நல்ல டிரைவர் அகப்படவில்லை. நானே தான் என் வண்டியை ஓட்ட வேண்டியிருக்கிறது’ என்றும் ஒப்புக் கொண்டார். பார்த்தீர்களா? ஜாதகத்தின் பலம் ஒரு அம்சமும் வீண் போகாது. ஒரு கார் வைத்துக் கொள்ளும் அந்தஸ்து இருந்தாலும், வண்டி ஓட்டும் தொழிலிலிருந்து தப்ப முடியவில்லை’
என் சிநேகிதர்களில் பலர், ஏன், சில ஸ்திரீ மணிகள் கூட ‘செல்ப்- டிரைவ்’ பண்ணுகிற பெருமையுடன் தங்களுடைய வண்டியை ஒட்டுவதைப் பற்றி நினைத்துக் கொண்டேன். சாஸ்திரிகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குமாஸ்தாவின் முகத்தில் அப்பொழுதுதான் அல்பப் புன்சிரிப்புத் தோன்றி அவர் பேச ஆரம்பித்தார்:
“நானும் ஒரு திருஷ்டாந்தம் கொடுப்பேன். ஏன், இரண்டு திருஷ்டாந்தமென்றே சொல்லலாம். என்னுடைய ஊரில் இரண்டு பையன்கள், சகோதரர்கள், எனக்குத் தெரியும் ஒரு நாள், இந்தச் சாஸ்திரிகள் மாதிரி ஒரு ஜோசிய வித்துவான் ஊருக்கு வந்தார். அவரிடம் அந்தப் பிள்ளைகளின் ஜாதகங்களைத் தகப்பனார் காண்பித்தார்.
“அவர் சொன்னார்: ‘மூத்த பையனுடைய ஜாதக விசேஷம் எப்படியென்றால், ‘அவன் யத்தினம் பண்ணுகிற காரியம் கைகூடும். ஆனால், அதனால் அவனுக்குத் திருப்தி ஏற்படாது. இளையவனுக்கோ, அவன் எண்ணுகிற காரியம் கைகூடாது. ஆனால், அவன் எண்ணாத காரியங்கள் பலித்துக்கொண்டே இருக்கும். அதனால் அவன் சௌக்கியமாய் வாழ்வான்’ என்று.
‘சில வருஷங்களுக்குப் பிறகு, இருவரும் சம்பாதித்துப் பிழைக்கவேண்டிய வயசும் நிலைமையும் உண்டாயின. தாலுக்கா குமாஸ்தாவின் வேலை காலியாயிருந்தது. இம்மாதிரி வேலைகளுக்காகப் ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ தங்களுடைய பரீக்ஷையை நடத்தினார்கள். இரண்டு பேரும் அதற்குப் போனார்கள். மூத்தவன் இராப்பகலாகப் படித்தான்; ஜயித்தான்; வேலையும் கிடைத்தது. சாதாரணச் சம்பளந்தான். ஆனால் தம்பியையும் காப்பாற்றவேண்டிய கடமை இல்லாதபோனால், தன்னுடைய குடும்பத்தின் வயிறு வளர்ப்பதற்குப் போதும்.
“இளையவனோ, உழைத்துப் படிக்கவில்லை. பரீக்ஷையில் அபஜயம்; வேலைகிடைக்கவில்லை. ஆனால் அவனுக்குக் கவலை இல்லை. தமையன் ஆபீசுக்குப் போயிருக்கும் பொழுது அவனுடைய உடுப்புகளைத் தானாகவே இரவல் எடுத்துக்கொண்டு சௌடாலாக ஊர் திரிந்துகொண்டிருப்பான்.
‘இந்தச் சந்தர்ப்பத்தில் ஊரிலுள்ள பெரிய மிராசுதாரரின் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்தார்கள். பிரபலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்யாணத்திற்கு முந்தின நாள் – என்ன காரணமோ தெரியவில்லை, பணத்தகராறு என்று சிலர் சொன்னார்கள்; கல்யாணப் பிள்ளைக்குக் காக்கா வலிப்பு கண்டது என்று சிலருடைய அபிப்பிராயம்- அந்தக் கல்யாணம் நின்றுவிட்டது.
‘ஆனால் பந்தல், சாமான்கள், சமையற்காரர், மேளகாரர்-எல்லாம் தயார். அதிதிகளும் அநேகமாய் வந்து விட்டார்கள். இனிமேல் கல்யாணம் நடக்காமற் போனால் பரிகாசத்திற்கு இடமாயிருக்கும். மிராசுதார் நெஞ்சு துணிந்தவர். இரண்டாவது யோசனை செய்யவில்லை. தாலுக்கா குமாஸ்தாவின் தம்பி என்கிற மேன்மையுடன் சௌடாலாக ஊரில் திரிந்துகெண்டிருந்த பையன்தான் அச்சமயம் கண்ணில் அகப்பட்டானாகையால் அவனுக்கே தம் மகளை விவாகம் செய்து வைத்தார். இவ்விதம் தமையன் குமாஸ்தாவாயிருக்க தம்பி மிராசுதாரின் மாப்பிள்ளையானான்.
‘பிறகு, மிராசுதார் வேலை செய்யத் தொடங்கினார். செல்வாக்குக்காரர்; அஸெம்பிளியில் நாலைந்து மெம்பர்கள் இவர் சொன்னபடியே ‘வோட்’ செய்வார்கள். ஆகையால் ஒருவரும் இவரை அலக்ஷியம் செய்ய முடியாது. சென்னைப் பட்டணத்திற்குப் போனார். பொம்மலாட்டம் செய்வித்தார் சரியான கயிறுகளைப் பிடித்து இழுத்தார். சரியான பொம்மைகள் ஆடின. சரியான இடத்தில் கையெழுத்துப் போடப்பட்டது. இவருடைய மாப்பிள்ளைக்கு முதலடியில் டெபுடி தாசில்தார் வேலை ஆயிற்று.
‘பொம்மலாட்டம் நின்று விடவில்லை. ஆறு மாதத்தில் தாசில்தார் வேலைக்குப் பிரமோஷனும் உத்தரவாயிற்று. இதுவரை தம்பியின் ஜாதக விசேஷம் இதற்கு மேல் தமையனுடைய ஜாதக பலனும் சேர்ந்துகொண்டது. தமையன் குமாஸ்தாவாக இருக்கிற தாலூக்காவிற்கே தம்பி தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்கே மாமனார் வீடாகையால் தம்பிக்கு மிகவும் சௌகரியம். அவர் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் தம்பியின் கீழாகத் தமையன் வேலை செய்ய வேண்டி வந்தது.
‘தன்னுடைய புருஷன் தோல்வியடைந்த பரீஷையில் தன்னுடைய மைத்துனன் ஜயித்தான் என்பதைத் தாசில்தாரின் சம்சாரம் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை. இது இப்படியிருக்க, தமையனுடைய சம்சாரமோ, ஆதியில் தான் எப்படியும் ஓர் உத்தியோகஸ்தனுடைய பார்யை என்று சற்றுப் பெருமையாகவே இருந்தவள் தன்னுடைய ஓர்ப்படியின் கௌரவத்தைக் கண்டு பொறாமை கொண்டு, தன்னுடைய பர்த்தாவிடம் அவமதிப்பைக் காண்பிக்கிறாள்-‘
அச்சமயம், அவருடைய பக்கத்தில், தூக்கத்தினால், உட்கார்ந்தபடியே ஆடிக்கொண்டிருந்த ஸ்திரீயின் கைகள் தளர அவள் மடியிலிருந்த சிறு குழந்தை கீழே நழுவி விழும் க்ஷணத்தில் அவர் அதிவேகமாகக் குழந்தையைப் பிடித்துக் காப்பாற்றினார்.
“குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். இப்பொழுது கீழே விழுந்து மண்டை உடையத் தெரிந்தது!” என்று அவர் எச்சரிக்கை செய்தார்.
பதிலுக்கு அவள் சீறினாள்: “எல்லாம் ஜாக்கிரதையாத்தான் பாத்துண்டிருக்கேன். நீங்களுந்தான் செத்தே பாத்துண்டால் என்ன? சாமர்த்தியம் இருந்தால் தம்பி மாதிரி ஒரு தாசீல் உத்தியோகமாவது இருக்காதா? அப்போன்னா குழந்தையைப் பார்த்துக்க ஒரு வேலைக்காரி இருப்பா. நானே ராப்பகல் முழித்துண்டு வேலை செய்யவேண்டியிருக்கு. இந்த அழகுக்கு எனக்குப் புத்திமதி வேறே கொடுக்கணுமா?”
நான் திடுக்கிட்டேன். என் மனக்கிளர்ச்சியின் வேகத்தினால் இரண்டாம் வகுப்பில் கண்ட உத்தியோகஸ்தரின் முகம் என் மனக் கண்ணில் தெளிவாகத் தென்பட்டது. சொக்காய் தலைப்பாகைகளின் உதவியில்லாமல் உள்ளது உள்ளபடியே தெரிந்தது. குமாஸ்தாவின் முகத்தை உற்று நோக்கினேன். இருவருடைய முகச்சாயலின் ஒற்றுமையைக் குறித்துச் சந்தேகிக்க இடமில்லை. இவர் இதுவரை வர்ணித்த இருசகோதரர்கள் எவர் என்று நன்றாய் விளங்கிற்று. இந்த அம்மாள் பேசும் பேச்சைக் கேட்ட பிறகு, இவள் இருக்கும் அறையில் இருப்தைக் காட்டிலும், அந்த அம்மாளின் மயூரத்வனி ஒலிக்கும் இரண்டாம் வகுப்புக் கூடத் தேவலை என்று தோன்றிற்று. வண்டி அப்பொழுது நிற்கவே நான் இருக்கும் பக்கத்தின் கதவைத் திறந்து வெளியே இறங்கினேன்.
ஆனால் அந்தப் பக்கம் இல்லை ப்ளாட்பாரம். ஆகையால் நான் பள்ளத்தில் இறங்கி அந்த அறையைத் தேட வேண்டியிருந்தது. இந்தக் கஷ்டத்தில் என் மனத்தடுமாற்றமும் சேர்ந்து கொண்டது. நான் அந்த அறையைக் கண்டுபிடிப்பதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது. இவ்விதம் அவ்விரண்டு தேவிகளுடைய தரிசனமும் இல்லாமல், சிறிது நிமிஷங்களுக்குள் இருப்புப் பாதைகளின் மத்தியில் நின்றேன்.
அடுத்த வண்டி இரவு மூன்று மணிக்குத்தான் என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். அதற்காகக் காத்திருந்ததால் அன்றிரவும் தூக்கம் கிடையாது. எப்படியாகிலும் சபையில் ஆஜராக முடியாது. திரும்பிப் போவதே நலம். அதற்கு டிக்கெட்டுக்கு மாத்திரந்தான் கையிலிருந்தது காசு போதுமானது அதற்கு அதிகப்படியாகப் பலகாரப் பேச்சுக்குக்கூட இடம் கொடுக்க வில்லை.
ஆகையால், ப்ளாட்பாரத்தில் உலாவிக்கொண்டு, ஆகாரத்திற்குப் பதிலாக ஆழ்ந்த சிந்தனையில் காலத்தைக் கழித்தேன். இரவு எட்டு மணிக்குத் திரும்பிப் போவதற்குரிய வண்டி கிடைத்தது. காலையில் நான் விடை பெற்றுப் பிரிந்த சிநேகிதனுடைய வீட்டுக்கதவை ராத்திரி பத்து மணிக்குப் பட்டினியின் சோர்வுடன் தட்டினேன்.
‘என்னப்பா சமாசாரம்? நீ போனதென்ன, திரும்பி வந்ததென்ன!” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான். ‘எல்லாம் ஜாதக விசேஷம்!’ என்று சாஸ்திரிகளின் குரலிலே அவனுக்கு எடுத்துரைத்தேன்.
– முல்லை – 13, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.