சோறு





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘படைக்கப்பட்ட பொருளின் தன்மையைப் பொறுத்தல்ல, படைக்கப் பட்ட பாவனையைப் பொறுத்துத் தான் ஆண்டவன் அவற்றை ஏற்றுக் கொள்ளுகிறான்….’

அரசடிப் பிள்ளையாருக்கு அன்று பென்னம்பெரியதொரு படையல். பல்லாயிரக் கணக்கான மோதகங்கள்; கொழுக் கட்டைகள்! பல நூற்றுக்கணக்கான வடை மாலைகள்! பல அண்டாக்கள் நிறைய அவல்-கடலை முதலியன! தேங்காய்கள் மலைமலையாகக் குவிந்து கிடந்தன!
பூஜையை நடத்திப் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க இருகைகளும் போதவில்லையே என்ற அவதி குருக்களுக்கு!
இந்தத் தடபுடலுக்குக் காரணம், பல்கலைக்கழகப் பரீட்சைகளின் பெறு பேறுகள் அன்றுதான் வெளியாகி யிருந்தன. பிள்ளையாருடைய அருட்சுரப்பிலே நம்பிக்கை பூண்டு நேர்ச்சை வைத்தவர்கள், நன்றி நவில நள்ளும் போட்டியினால் ஏற்பட்ட வினை!
அப்பிரமாண்டமான படையல்களைப் பார்த்தபடி நின் றான் ஒரு சிறுவன். பக்திக்கும், வேதனை உந்திய பரிவுக்கு மிடையில் அவன் மனம் ஊசலாடிற்று. யோசனைகள் பல அவனுடைய பிஞ்சு மனத்தைப் பிறாண்டலாயின. அவ னுடைய பக்குவத்திற்கு ஏற்ற யோசனை ஒன்று பிரகாசித்தது.
அதன் செயற்படுத்தலாக அவன் தன் வீடு சென்று திரும்பி, தன்னுடைய காணிக்கைப் பொருளைப் பிள்ளையாருக்கு முன்னாற் படைத்தான்.
இதனை அவதானித்த குருக்கள், ‘என்னடா அது?” எனச் சிறுவனை அதட்டினார்.
‘நம்ம பிள்ளையாருக்கு இஞ்சி படைத்திருக்கிறேன்…. என்றான் சிறுவன் பயபக்தியுடன்.
‘பிள்ளையாருக்கு இஞ்சி படைக்கலாமென்று யாரடா சொல்லித் தந்தது?’ என்று குருக்கள் ‘பாய்’ந்தார்.
குழுமி நின்ற பக்தர்கள் சிறுவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள்.
அவமான உணர்ச்சி மேகங்கள் சிறுவனின் உள்ளத்திற் கவியலாயின.
குரல் கேவலில் நசிவுற,‘நீங்கள் படைத்திருப்பது முழுவதையும் நம்ம பிள்ளையார் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படாதா? பாவம், அவரை நாம் இப்படிக் கஷ்டப்படுத்துதல் முறையா? எனக்கு வயிற்றுக் கோளாறு வந்தால், அம்மா இஞ்சிதான் தருவாள்….” என்றான்.
அவனுடைய விளக்கத்தைக் கேட்ட எல்லோரும் ‘கொல்’ லென்று சிரித்தார்கள்!
‘படைக்கப்பட்ட பொருளின் தன்மையைப் ‘பொறுத்தல்ல, படைக்கப்பட்ட பாவனையைப் பொறுத்துத்தான் ஆண்டவன் அவற்றை ஏற்றுக்கொள்ளுகின்றான்….’ என்று பிள்ளையார் சொல்ல உன்னிய போதிலும், கல்லுப்பிள்ளையாராக அரசமரத்தின் கீழ்க் குந்தியிருப்பதில் அவர் இன்பங் கண்டார்!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.