சோணகிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 398 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூர்த் தலைமை அஞ்சல் நிலையம்.

அஞ்சல் நிலைய ஐந்தடியில் உள்ள தூண் மறைவில் கடலை வியாபாரி கருப்பையா கடலைத் தட்டுடன் அமர்ந்திருந்தார்.

“நிலக்கடலை ஐந்து காசுக்குக் கொடுங்க”

“பட்டாணி பத்துக் காசுக்குக் கொடுங்க”

“முந்திரிப் பருப்பு இருபது காசுக்கு…”

“இதோ இந்தக் கடலையில் பத்துக் காசுக்குக் கொடுங்க”

கருப்பையா பரபரப்புடன் தாளைச் சுருட்டிக் கை நிறையக் கடலையை அள்ளினார். கையில் அள்ளிய கடலை யில் மூன்றில் ஒரு பகுதி மட்டும் சுருட்டிய தாளுக்குள் விழுந்தது. நிறைய அள்ளி குறையக் கொடுக்கும் அந்தத் தந்திரம் வாடிக்கையாளர் சிலருக்குத் தெரியாது.

மடித்துக் கொடுப்பதும், காசை வாங்கிப் பைக்குள் போடுவதுமாக இருந்தார்.

சற்று நேரத்திற்குள் வியாபாரம் குறைந்து விட்டது. வியாபாரம் மிதமாக இருக்கும்போது தாளைச் சுருட்டியபடி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும் சுருட்டிய தாள் கோபுரமாக வளர்ந்து கொண்டிருந்தது.

இருந்தது இருந்தாற்போல் வியாபாரம் சூடு பிடித்துவிட்டது. கருப்பையா விரைந்து விரைந்து சுருட்டி வைத்திருந்த தாள்களில் கடலையை மடித்துக் கொடுத்தார். என்னுடன் பேசுவதற்குக் கூட அவரால் முடியவில்லை.

கருப்பையாவின் உடம்பும் வியர்த்துக் கொட்டியது இடையிடையே தோளில் கிடந்த சிறு துவாலைத் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

நல்ல வியாபார நேரத்தில் சாலையில் ஒரு மூடுந்து (வேன்) வந்து நின்றது. மூடுந்தைக் கண்டதும் பரபரப்புடன் கடலைத் தட்டைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடினார். கடலை வாங்கியவர்களில் சிலர் ‘த்சு, த்சு’ சொட்டை அடித்தனர். கடலை வாங்கியவர் சிலர் கொடுப்பதற்காக காசுகளைக் கையில் வைத்திருந்தனர். ஆனால் கருப்பையா தலை மறைந்ததும் கடலை வாங்கியவர்களின் கைகளிலிருந்த தத்தம் காசுகளைப் பைகளுக்குள் போட்டுக் கொண்டடனர்.

மூடுந்தில் வந்திறங்கிய அங்காடிகள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஐந்தடியில் யாரும் வியாபாரம் செய்கிறார்களா என்று வலைபோட்டு அரித்தனர். யாரும் அவர்கள் கண்களில் படவில்லை.

சற்று முன், “சட்டை இரண்டரை வெள்ளி, ஒரு சட்டை இரண்டரை வெள்ளி நல்ல சட்டை, பால் பாயிண்ட்பேனா வெள்ளிக்கு மூனு! மூனு!” என்று கூவியவர்களும், மற்றும் கடலை, அது, இது என்று வியாபாரம் செய்தவர்களும் மூடுந்தைக் கண்டதும் பஞ்சாய்ப்பறந்து விட்டனர். இந்த இடம் வெறுச்சோடிச் கிடந்தது.

வந்த அதிகாரிகள் கடுகடுத்த முகத்துடன் ஆளுக்கொரு பக்கமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து போய்விட்டனர்.

இத்தனையும் ஒருசில நிமிடங்களில் நடந்த நிகழ்ச்சிகள்.

நான் பரபரப்பு மிக்க இந்த உலகத்தை நினைத்து மெல்லச் சிரித்தபடி நடந்தேன். எனக்கு இந்த உலகமே என் கண்முன் தெரிவது போன்ற உணர்வு.

மறுநாள், வழக்கம் போல் பெரிய அஞ்சல் நிலைய ஐந்தடியில் பலர் வியாபாரம் செய்து கொண்டிந்தனர். கடலை வியாபாரி கருப்பையாவைக் காணவில்லை. நான் “ம்…இன்று கடலை கிடைக்கவில்லையே” என்று பெரு மூச்சு விட்டபடி அங்கிருந்து அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.

கருப்பையாவிடம் கடலை வாங்கித் தின்றவர்கள் கருப்பையாவிடமே கடலை வாங்கித் தின்ன வேண்டும் என்று அங்கு வருவதுண்டு. கருப்பையா வறுக்கும் பக்குவோமோ என்னவோ அவர் கடலைக்குத் தனிச்சுவை!

நடந்துகொண்டிருக்கும் போது எதிரே சற்று வளர்ந்து இடையிடையே நரைத்திருந்த தாடிக்காரர் வந்தார். அரைக்கால் சட்டையின் பெரும் பகுதியை அரைக்கை மேல் சட்டையின் கீழ்த்தலைப்பு மறைத்துக் கொண்டிருந்தது. அரைக்கால் சட்டையும் முழங்கால் பகுதியில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்தும் இருந்தது.

யார் என்று சற்று கவனித்துப் பார்த்தேன்.

அவர் வேறு யாருமில்லை கடலை வியாபாரி கருப்பையாவேதான்.

என்னருகில் வந்ததும் கூனிக்குறுகியபடி வல முழங்கையைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள பணிவாகக் கையை நீட்டினார்.

“ஐயா, இரண்டு நாளா வியாபாரம் போடவில்லை. அன்றைக்கு ஒரு நாள் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க இந்த இடத்தில் வியாபாரம் செய்ததற்காக ஐம்பது வெள்ளி தெண்டம் போட்டுட்டாங்க. இருந்தக் காசைப் போட்டடுச்சுத் தெண்டப் பணத்தைக் கட்டிட்டேன். இப்பக் கடலை வாங்கக் கையில் செப்பால் அடிச்ச காசு கூட இல்லே. யாரிடமும் கேட்க மனமும் வரலே சொந்த ஊருக்காரவங்க இருக்கிறாங்க. அவங்கக்கிட்டே காசு கேட்க வெட்கமாக இருக்கிறது. கேட்டாலும் கொடுத்துவிட்டு ஊருக்கு வேற கடிதம் எழுதிப் போட்டு என் மானத்தையே வாங்கிப்புடுவாங்க. இன்றைக்குச் சாப்பிடக்கூடக் கையில் காசு கிடையாது. இளகிய மனம் படைத்த உங்கக்கிட்ட இருக்கும் என்று நினைத்துக் கேட்கிறேன். ஏதோ பார்த்துக் கொடுங்க வியாபாரம் போட்டதும் முதலில் உங்க காசைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று கெஞ்சினார்.

அவர் நிலையைப் பார்க்கும் போதும். கேட்கும் போதும் எனக்கு இரக்கமாக இருந்தது.

“எத்தனை வெள்ளி வேண்டும்?”

“இருபத்தைந்து வெள்ளி இருந்தாக் கொடுங்க, எப்படியும் கடலை வாங்க இருபது இருபத்தைந்து வெள்ளி வந்திடும்”.

“என்னிடம் இருப்பதே ஐந்து வெள்ளிதான். அதில் மூன்று வெள்ளி தருகிறேன். அதைச் சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்க. பிறகு பார்த்துக்கொள்வோம். இந்த வெள்ளியை வியாபாரம் போட்டதும் மறந்து விடாமல் கொடுத்துடுங்க” என்றேன்.

“சரிங்க! இந்த உதவிக்கு நன்றிங்க” என்று சொல்லி விட்டு மூன்று வெள்ளியையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.

நான் ஒருவனுக்கு உதவி செய்த மனநிறைவோடு நடந்தேன்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து வழக்கம்போல் கருப்பையா வியாபாரம் செய்யும் இடத்திற்குச் சென்றேன். அன்று கருப்பையா வியாபாரம் போட்டிருந்தார்.

என்னைக் கண்டதும். “வாங்க! வாங்க!” என்று புன்னகை பூத்த முகத்தோடு வரவேற்றார்.

நான் சிரித்தபடி அவர் அருகில் போய் நின்றேன்.

“பாருங்க இரண்டு மூன்று நாளா அலையா அலைந்து நேத்துத்தான ஓர் இடத்தில் இருபது வெள்ளி வாங்கினேன். நேற்றே கடலையும் வாங்கி வறுத்து இன்று வியாபாரம் போட்டிருக்கேன்” என்று சொல்லியபடி என்னிடம் மூன்று வெள்ளியை நீட்டினார்.

“அப்படியா?” என்று கேட்டபடி நான் கடனாகக் கொடுத்த வெள்ளியை வாங்கிக் கொண்டேன். என் மனம் அவர் நாணயத்தை மெச்சியது.

“ஆமாங்க”

“உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்’

“என்ன?”

“நீங்க ஒவ்வொரு நாளும் இங்கேதான் வியாபாரம் போடுறீங்க. அஞ்சல் நிலையமும் இதுதான். நாள்தோறும் ஒன்றோ இரண்டோ கையில் கிடைத்ததைச் சேமிப்புப் பேங்கில் போட்டு வைத்தால் சமயத்தில் உதவும் பாருங்க. சிறு துளிதானே பெருவெள்ளம்” என்றேன்.

“நானும் அப்படி நினைக்கிறதுதான். ஆனால் ‘நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நாள் ஓடிவிடுதுங்க! வியாபாரத்தைப் போட்டுட்டு போகவும் முடியலே. போனாலும் இந்த அங்காடிப் பிரிவு அதிகாரிகள் வந்திடுவாங்க என்ற பயமும் இருக்கும். காசு கையில் இருந்தாலும் செலவாகி விடுகிறது என்னங்க செய்யுறது?”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மூடுந்து (வேன்) வந்து நின்றது. அங்காடிப் பிரிவு அதிகாரிகள் விரைவாக மூடுந்துக் கதவைத் திறந்துகொண்டு கடலை வியாபாரி (கச்சாங் பூத்தே) கருப்பையாவை நெருங்கி விட்டனர். அவர்கள் எதிர்பாராமல் திடுதிப்பென்று வந்துவிட்டதால் கருப்பையா அன்றொருநாள் ஓடியதைப் போல் இப்போது ஓட முடியாமல் திருடன் விழிப்பதைப்போல் அதிகாரிகளைப் பார்த்து மேலும் கீழுமாக விழித்தார்.

அதிகாரிகளில் ஒருவர் கருப்பையாவின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து ஏதோ எழுதிக்கொண்டார். பிறகு பாதுகாப்புத் தொப்பி அணிந்திருந்த பணியாட்களிடம் ‘எடுத்து வையுங்கள்’ என்றார் அவர் சொல்லியதும் பணியாட்கள் இருவரும் கடலைத் தட்டை வண்டியில் தூக்கி வைத்தனர். அதிகாரி கருப்பையாவை வண்டியில் ஏறச் சொன்னார்.

கருப்பையா மூடுந்தில் ஏறி அமர்ந்தார். அவர் முகம் வாடியிருந்தது.

அவர் என்னைப் பார்த்து, “ஐயா இன்றைக்குக் குறைந்தது இருபத்தைந்து, முப்பது வெள்ளி தெண்டப் பணம் கட்டச்சொல்லுவாங்க. இல்லேனா குறைஞ்சது நாலஞ்சு நாளைக்கு அடைச்சுப் போட்டு விடுவாங்க”. என்று அழாக்குறையாகச் சொன்னார்.

அவர் சொல்லியது என் உள்ளத்தை உருக்கியது.

உதவி செய்ய வேண்டும் போல் தோன்றியது. பைக்குள் கையை விட்டேன். சம்பள உறை கையில் பட்டது. உறையிலிருந்த சம்பளப் பணத்தில் முப்பது வெள்ளியை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அவர் சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டு, “நன்றீங்க! நான் வியாபாரம் போட்டதும் முதலில் உங்க பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்று சொல்லி முடிப்பதற்கும், மூடுந்து புகையைக் கக்கிவிட்டு விரைவதற்கும் சரியாக இருந்தது.

அன்று மாலை கருப்பையா என் வீட்டிற்கு வந்துவிட்டார். நான் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.

அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

“ஏன் ஒரு வகையாய் இருக்குறீங்க?”

“முப்பது வெள்ளியையும் அவனுக்கு அழுது தொலைச்சாச்சு. நாளை கடலை வாங்கி வியாபாரம் போடக் கையில் ஒரு காசுகூடக் கிடையாது. ஏதாகிலும் இருந்தா…” முகத்தில் இரக்கம் இழையோட இழுத்தபடி சொன்னார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவரைப் பார்க்கவேறு இரக்கமாக இருந்தது. ‘மளிகைக் கடைக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய வெள்ளியை இக்கட்டிலிருக்கும் இவரிடம் கொடுத்து விட்டால் மளிகைக் கடைக்காரர் வந்து கத்துவாரே.’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.

“இந்த உலகத்திலே உழைத்து நாலுகாசு சம்பாதிக்கிறவங்களுக்கு இடமில்லேங்க. ஐந்து காசுக்கும் பத்துக் காசுக்கும் விற்கும் வியாபாரத்திலையும் இப்படி இருக்கு. வேற இடம் கிடைக்கவும் மாட்டேங்கிறது. ஐந்து ஐந்து காசா சேத்து இப்படி மொத்தமா கொடுக்க வேண்டியது இருக்கு. நீங்க பார்த்துக்கிட்டுத்தானே இருந்தீங்க. எதுக்குங்க காலம்… இல்லாதது பொல்லாததைச் சொல்லி ஊரை ஏமாற்றுகிறவங்களுக்குத் தானுங்க இது காலம். நல்லவங்களுக்குக் காலமே இல்லேங்க” என்று நொந்த உள்ளத்தோடு சொன்னார்.

அவர் நிலையைப் பார்த்துவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. மளிகைக்கடைக்கு இரண்டு மூன்று நாள் கழித்துக் கொடுக்கலாம் எனும் முடிவிற்கு வந்தேன்.

பையிலிருந்து இரண்டு சிவப்புத்தாள்களை எடுத்துக் கருப்பையாவிடம் கொடுத்தேன். அவர் இருபது வெள்ளியையும் வாங்கிக் கண்களில் ஒற்றிவிட்டுத் தன் பைக்குள் திணித்துக்கொண்டார். என்னை நோக்கியபடி, “நல்லதுங்க, இந்த உதவியை நான் செத்தாலும் மறக்கவே மாட்டேங்க. முதலில் வாங்கிய முப்பது வெள்ளியையும் இந்த இருபது வெள்ளியையும் சேர்த்து மொத்தமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேங்க” என்று சொல்லிவிட்டுத் தோளில் கிடந்த சிறு துவாளையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். பிறகு “வருரேங்க” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

அடுத்தநாள் நான் வழக்கம்போல் கருப்பையா வியாபாரம் செய்யும் இடத்திற்குச் சென்றேன். வியாபாரம் வழக்கம்போல் சுறுசுறுப்பாக நடந்தது. ஐந்து நிமிடத்தில் குறைந்தது இரண்டு மூன்று வெள்ளி விற்றிருப்பார். நான் அதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மளிகைக்கடையின் நினைவுவேறு வந்துவிட்டது.

“இன்று ஏதாகிலும் தோதுப்படுமா?” என்று மெல்லப் பீடிகை போட்டேன்.

“இரண்டு மூன்று நாள் போகட்டுமுங்க. நான் ஐம்பது வெள்ளியையும் மொத்தமாகக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

எனக்கு என்னவோபோல் இருந்தது. கையிலுள்ள வெண்ணெய்யைக் கொடுத்துவிட்டு நெய்க்கு அலைந்த கதையாகப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டேன். மனத்திற்குள் ஒருபக்கம் வேதனையாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ‘சரிங்க’ என்றேன். பிறகு பத்துக்காசை அவரிடம் கொடுத்தபடி. ‘நிலக்கடலை’ என்றேன்.

அவர் “காசு வேண்டாம்” என்றார்.

“சும்மா வாங்கிக்கிட்டுக் கடலையைக்கொடுங்க. வியாபாரம் பாருங்க. வியாபாரம் வேறு; நட்பு வேறு” என்றேன்.

அவர் சப்புக்கொட்டிவிட்டுப் பத்துக்காசைப் பையில் போட்டார். பிறகு கொஞ்சம் தாராளமாகக் கடலை மடித்துக்கொடுத்தார். நான் நிலக்கடலையை வாங்கிய படி நல்லதுங்க என்றேன்.

“அதுக்கென்ன” என்றார்.

நான் கடலையைக் கொரித்தபடி அங்கிருந்து அகன்றேன்.

கொஞ்சதூரம் சென்றதும் எனக்குத் தெரிந்த நெருங்கிய-நண்பர் வந்தார். அவர் என் அருகில் வந்ததும் அவரிடம் கடலைப் பொட்டலத்தை நீட்டியபடி, ”நலமா?” என்று கேட்டேன்.

“நலம், நீங்க நலந்தானே!’

“ம் இருக்கு”

அவர் கடலைப்பருப்பில் இரண்டு பருப்பை வாயில் எடுத்துப் போட்டுக்கொண்டு, “கருப்பையாவிடமா வாங்கினீங்க?” என்று கேட்டார்!

“கண்டு பிடித்து விட்டீங்களே!”

“அவரிடம் நேற்று இன்றா கடலை வாங்கிப் பழக்கம். எவ்வளவோ நாட்களாகக் கடலை வாங்கித் தின்றிருக்கிறேனே. அவர் கடலை கொஞ்சங்கூட கருகல் நாற்றமடிக்காது. தின்பதற்கு நல்லா நொறுநொறு என்று இருக்கும்.”

“ஆமாம், நீங்க சொல்வது சரிதான்”

“காசு கொடுத்துக் கடலை வாங்கித் தின்பதோடு வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் வைத்துக்கொள்ளாதீங்க. அவர் கடலையைப் போல் அவர் நாணயம் அவ்வளவு நல்லா இருக்காது”

எனக்குத் திகீர் என்றது. “ஏன்?” என்று விரைந்து கேட்டேன்.

“அவர் கடலை வியாபாரம் மட்டும் செய்யவில்லை. நாகரிக முறையில் ஒவ்வொருவருக்கிட்டேயும் காசு கரப்பதில் மிகக் கெட்டிக்காரர். அவர் காசு கேட்டுவாங்கும் முறையே ஒரு தனிக் கலை. அந்தப் புதுமையான கலையைச் சிங்கப்பூரில் அவர் மட்டுந்தான் கையாள்கிறார். ‘நேத்துப் புடுச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. கடலை வாங்கக்காசு இல்லே. வியாபாரம் போடலே. சாப்பிடுவதற்குக்கூட காசு கையில் இல்லே. ஏதாகிலும் கொடுங்க. பிறகு கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லுவார். காசு வாங்கிய பிறகு அவரிடம் திரும்ப வாங்குவது முடியாதது. ‘அது இது’ என்று சொல்லி மேலும் நம்மிடமே காசு கரந்துவிடுவார்”

“அப்படியா? என்னிடம்கூட ஐம்பது வெள்ளி பற்றி விட்டாரே. ஆனால் முப்பது வெள்ளி தெண்டப்பணம் கட்டியது எனக்குத் தெரியும்.”

“கட்டியது பத்து வெள்ளியாக இருந்தாலும் அவர் முப்பது நாற்பது என்றுதான் சொல்லுவார்”.

“எனக்கு இது தெரியாதே”

“தெரிஞ்சுக்கங்க”

“ம்……”

“நான் முன்கூட்டியே சொல்லிவைக்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு மாதப் பழக்கத்தில் இப்படி கொடுப்பிங்க என்று தெரியாமல் போய்விட்டது. ‘வெளுத்ததெல்லாம் பாலு’ என்று நினைக்கலாமா? இனி வாங்கக்கூடிய வழியைப்பாருங்க. முள்மேல் துணியைப் போட்டால் அதைக் கிழியாமல்தான் எடுக்கவேண்டும். எனக்கு நேரமாச்சு நான் வருகிறேன்” என்று சொல்லி விட்டு விரைந்தார்.

நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். என் மூளை குழம்பியது. அந்த ஐம்பது வெள்ளியில் மளிகைக்கடை காரருக்கு இருபத்தைந்து வெள்ளி கொடுக்கவேண்டுமே. நாளைக்குச் சனிக்கிழமையாச்சே. மளிகைக்கடைகாரர் வந்துவிடுவாரே என்று எண்ணியபடி நடந்தேன்.

மறுநாள். சனிக்கிழமை கருப்பையா வியாபாரம் செய்யும் இடத்திற்குச் சென்றேன். அவர் அங்கில்லை. நானும் கால்கடுகடுக்க அங்கேயே காத்து நின்றேன். அவர் வரவே இல்லை. சனிக்கிழமை அரைநாள்- ஒரு வேளை வரமாட்டாரோ என்று எண்ணியபடி வீட்டிற்குத் திரும்பிவிட்டேன்.

இரவு மணி ஏழரை. சுவர்க்கடிகாரம் ‘டாங் டாங்க’ என்று ஒலி எழுப்பியது.

கடிகார ஒலி அடங்குவதற்கும் மளிகைக்கடைகாரர் வீட்டு வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. நான் “வாங்க” என்று வரவேற்றேன்.

“இன்றைக்கு வருவதாகச் சொல்லீட்டு வந்தீகளே, ஏன் வரலே?” என்று கேட்டார்.

நான் அச்சத்தோடு, “வரலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் நீங்களே வந்துட்டீங்க” என்றேன்.

“அப்படியா?”

“இன்றைக்குத் தோதுப்படலே. திங்கட்கிழமை காசோடு கடைக்கு வருகிறேன்” என்று நயமாகச் சொன்னேன்.

இதைச் செவிமடுத்ததும் அவர் முகம் திடீர் என்று இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப்போல் மாறியது.

“மன்னிச்சுடுங்க, திங்கட்கிழமை எப்படியும் தந்து விடுகிறேன்” கெஞ்சும் தோரணையில் சொன்னேன்.

“சரி சரி மறந்திடாதீங்க. எனக்குக் காசு தேவைப் படுது. சரக்கு எடுக்கணும்” என்று கடுகடுத்த முகத்தோடு சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

கடலை வியாபாரி கருப்பையா வீடு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தாலும் போய் இருப்பேன். வீடு தெரியாததால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது. மனம்வேறு எதையோ பறிகொடுத்து விட்டதைப்போல் இருந்தது.

திங்கட்கிழமை ஒரு மணிக்கெல்லாம் கருப்பையாவைப் பார்க்க வெயிலையும் பொருட்படுத்தாமல் விரைந்தேன்.

சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது கடலை வாங்கக் கூட்டம் கூடி நின்றது தெரிந்தது. அதைப் பார்த்ததும் நெஞ்சில் பால் வார்த்ததுபோல் இருந்தது – எனக்கு. மகிழ்ச்சியோடு நடந்தேன். இன்று எப்படியும் அவரிடம் பாதிப் பணமாகிலும் வாங்கி மளிகைக்கடை காரருக்குக் கொடுத்தே தீரவேண்டும் என்று என் மனத்துக்குள் நினைத்துக்கொண்டு நெருங்கிவிட்டேன்.

அருகில் சென்று பார்க்கும்போது என் கண்களை நானே நம்பவில்லை. நெஞ்சம் ‘படக்படக்’ என்று அடித்துக்கொண்டது. நான் நினைத்துக்கொண்டு வந்ததெல்லாம் தகர்ந்தன.

கருப்பையாவை அங்கு காணோம். அவர் வியாபாரம் செய்யும் அந்த இடத்தில் மற்றொருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் திகைத்துப்போய் நின்றேன். மனம் ஒரு நிலைக்கு வர ஐந்து நிமிடங்கள் பிடித்தன.

ஒருவாறு உடல்நிலை காரணமாக வியாபாரம் போடாமல் இருந்தாலும் இருக்கலாம் என்று என் மனம் எண்ணியது. புதிய கடலை வியாபாரியை நோக்கி, “கருப் பையா வரவில்லையாங்க? அவருக்குப் பதில் நீங்க வந்திருக்கிறீங்களா?” என்று கொஞ்ச-நஞ்சம் இருந்த நம்பிக்கையோடு கேட்டேன்.

“ஆமாங்க! அவருக்குப் பதில்தான் வந்திருக்கி றேன்” என்றார்.

“அவர் சொந்தக்காரர் போலிருக்கு. அதுதான் அவருக்குப் பதிலாக நீங்க வியாபாரம் போட்டிருக்கிறீங்க இல்லையா?”

“அவர் சொந்தக்காரர் இல்லேங்க. ஆனா ஒரே ஊர்க்காரருங்க. ஆமாம், நீங்க ஏன் அப்படிக் கேட்கிறீங்க?”

“சும்மா கேட்டேன், நீண்ட நாளா அவருக்கிட்டே கடலை வாங்கித்தின்ற பழக்கம். அதனாலேதான் கேட்டேன். வேறே ஒன்றுமில்லே” என்று வாயளவில் சொன்னேன்.

“அப்படியா?”

“ஆமாம்”

“அப்படினா உங்கக்கிட்டே சொல்லறதுலே என்ன வந்திடப்போகுது.”

“என்னங்க?” ஆவலாகக் கேட்டேன்

“அவர் எங்க ஊரிலே ஏறக்குறைய இருபதாயிரம் ரூபாய்க்குப் புதுசா கூட்டுக் குழுமம் (சீட்டுக் கம்பெனி) திறக்கப்போறாருங்க. அதனாலேதான் அவர் சனிக்கிழமை ஏழரைமணி ஏர் இந்தியாவில் ஊருக்குப் போயிட்டாருங்க. இனி இந்த ஊருக்கே வரக்கூட மாட்டாருங்க. தொழிலைக் கவனிச்சுச்கிட்டு அங்கேயே இருந்திடுவாருங்க” என்றார்.

“அப்படியா?” வியப்போடு கேட்டேன்.

“ஆமாங்க. இனி அவருக்கு எதுக்குங்க இந்த ஊரு. நல்லா சொத்துப்பத்து வேறே தேடிக்கிட்டாருங்க…ம்…” என்று பொறாமைக் குறி முகத்தில் தோன்றச் சொன்னார்.

கருப்பையாவைப் பற்றி நினைக்கும்போது அவருக்குப் பொறாமையாக இருந்தது; எனக்கோ தலையே சுற்றியது. கடலை வியாபாரம் செய்துக்கிட்டே பலருக்குக் கடுக்காய் கொடுத்த கருப்பையா கூட்டுப் பிடித்து எத்தனை பேருக்கு வாயில் மண்ணள்ளிப் போடப் போறாரோ என்று எண்ணியபடி நின்றேன். என் மனம் ஏமாற்றம் அடைந்து விட்டோமே என்று வருந்தியது.

என் மனநிலையைத் தெரிந்துகொள்ளச் சற்றும் முயலாத புதிய கடலை வியாபாரி “நான்கூட இந்த இடத்திற்காகக் கொஞ்சம் ‘கோப்பிக்காசு’ கொடுத்திருக்கிறேங்க” என்றார்.

எனக்கு மேலும் வேதனையாக இருந்தது. குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து நடந்தேன்.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *