சொந்தம்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 125
1

நேற்று இருந்த மழையில் அறிகுறிகளை முற்றிலும் தொலைத்த வானம் மேகங்களின் உறசல்களின்றி, அழகான வெளிர் நீலநிறமாய், காலை இளம் வெயிலில் மின்னியது. வேலைக்குச் செல்பவர்களின் நடமாட்டமும் குறைந்து தாமதமாய் செல்லும் ஓரிருவர் மட்டும் பணியகங்களை நோக்கி விரைவதைக் காண முடிந்தது.
இந்நேரம் நந்தினி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேர வேலையையும் முடித்து ஒரு தேனீரையும் குடித்திருப்பாள். இந்தப் பழக்கத்தை எப்போது தான் விடுவாளோ, தினமும் காலையில் பசியாறுவதுமில்லை; என்னோடு சேர்ந்து, அவள் கணவனும் சொல்லிச் சொல்லிப் பாவம், ஓய்ந்து தான் போனான்.
இருவருக்குமே வேலை ஜூராங் வட்டாரமென்பதாலேயே நந்தினி புதிய வீட்டை உட்லாண்ஸ் வட்டாரத்தில் வாங்கியிருந்தாள். புதிய வீட்டில் குடி வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடியப் போகின்றன். பழைய வீட்டை விற்ற போது நந்தினி அப்பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாள். அது என் உழைப்பில் வாங்கி பின் விற்ற வீடாம். அந்தப் பணத்தை அப்படியே என் பெயரில் வங்கியில் போட்டுவிட்டாள்.
கையைப் பிடித்து என்னை தரதரவென்று இழுத்துச் செல்லும் அனிதாவுக்கும் ‘நாசி லிமா’ என்றால் அவள் அம்மாவைப் போலவே உயிர். வீட்டிலேயே அதை நான் செய்து தருகிறேன் என்றால், வேண்டாமே பாட்டி, ஹாக்கர் செண்டர்ல போயே பசியாறுவமே, இன்னிக்கி ஒரு நாளைக்கி, ப்ளீஸ், பாட்டி ப்ளீஸ், என்று கெஞ்சிக் கொஞ்சி எப்படியும் வாரம் ஒரு முறையாவது சாலையின் மறுபுறம் உள்ள சாப்பாட்டுக் கடைக்கு போகாவிட்டால் அனிதாவுக்கு திருப்தியாக இருக்காது. இதே தேங்காய் சாதத்தை நானே வீட்டிலேயே செய்வதுண்டு. சுவையில் எந்தக் குறையும் இராது. என்ன இருந்தாலும் நானே மாஜி சமையல்காரி தானே! இருப்பினும், அவளுக்கு அங்கு வேடிக்கை பார்த்தவாறு உண்ணப் பிடிக்கும். மதியம் பள்ளி என்பதால் பசியாறுவதற்குக் கிளம்பிவிட்டாள்.
இன்னும் ஓரிரு வருடங்களில் சிறுமியின் தோற்றம் மெல்ல மறைந்து குமரியின் லட்சணங்கள் தொடங்கும் போது இவள் நானே வற்புறுத்தி உடன் அழைத்தாலும் இங்கெல்லாம் வருவாளோ சந்தேகமே.
சாலையைக் கடக்க வேண்டும். “வாங்க, வாங்க சீக்கிரமா நடங்க பாட்டி, கிரீன்மேன் வந்தாச்சு பாத்தீங்களா,” என்று இரண்டடி முன்னால் நடந்த வண்ணம் என்னை இழுத்தாள் அனிதா. சிங்காரச் சிங்கையில் குறைந்தது ஒரு நாளில் ஒரு முறையேனும் ஏதாவது சாலையைக் கடப்பது என்பது மனிதன் மூச்சு விடுவதைப் போலவே இயல்பானது மட்டுமல்லாது தவிர்க்க முடியாததும் கூட. எங்கானாலும், எப்போதானாலும் அந்த கொடூரச் சம்பவம் என் நினைவில் ஒரு நொடியேனும் வந்து மறையும்.
இன்று நடந்தது போல இருக்கிறது. அதிலும் அனிதாவைக் காணும் போதெல்லாம் எனக்கு அன்று நந்தினியைப் பார்த்தது போலவே ஏற்படும் உணர்வு ஆச்சரியமாக இருக்கும். இதில் அலாதி என்னவென்றால் இத்தனை வருடங்களில், ஆயிற்று அனிதாவுக்கும் பதினோரு வயது முடியப் போகிறது, எண்ணிலடங்கா தடவைகள் நான் இவ்வாறு உணர்ந்தது தான். அனிதாவின் முகத்தில் நந்தினியின் ஜாடை தெரிய ஆரம்பித்த அந்த இரண்டு வயது முதலே நதினியைப் பார்த்தது போலவே நான் வியப்பதுண்டு.
எல்லாமே ஏதோ ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல நடந்து முடிந்திருந்தது. நாடகத்தில் செவ்வனே நடித்து முடித்த முக்கியக் கதாபாத்திரமேற்ற நடிகையின் ஆயாசம் சமீப காலங்களில் எனக்கேற்படுவதை உணர்கிறேன். பெற்ற பிள்ளைகள் இருக்கும் போதே வயதானவர்கள் நாதியற்று முதியோர் இல்லங்களில் அவதியுறும் கதைகளையெல்லாம் கேட்டும் படித்தும் இருந்த எனக்கு திருமணம் என்ற ஒரு அத்தியாயமே இல்லாமல் ஒரு மகள், மருமகன் மற்றும் ஒரு பேர்த்தி என்று அமைந்திருப்பது அதிர்ஷ்டமென்று சொல்வதா, இறையருள் என்பதா, தெரிவதில்லை.
இதைப் பற்றியெல்லாம் நந்தினியோடு பேசத் தொடங்கினால், அவள், “நான் தாம்மா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும், எங்கயோ அனாதையா இருக்க வேண்டிய எனக்கு நீங்க அம்மாவா கிடைச்சீங்க,” என்று சொல்வாள்.
இதே நந்தினி எட்டு வயதில் தன் பெற்றோருடன் இருந்த போது தன் அம்மாவின் சொல் கேட்டு அடுத்த வீட்டில் வசித்த என்னை உதாசீனப் படுத்தியதுண்டு. தன்னைப் பெற்றவளின் கர்வத்தின் சாயம் அவளிடம் துளியும் ஒட்டிக் கொள்ளவில்லை. அதெல்லாம் இந்த இருபத்தெட்டு வருடங்களில் அவள் நினைவில் கூட இல்லை. அவற்றையெல்லாமே நந்தினி தன் பத்து வயதில் ‘அம்மா’ என்றென்னையழைத்து, என்னோடு வாழ ஆரம்பித்ததுமே மெல்ல மறந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“வாங்க பாட்டி சாப்பிடுவோம்,” அனிதா கூப்பிட்டதும் தான் நான் நனவுலகிற்கு வந்து, இருவரும் சேர்ந்து உண்ண ஆரம்பித்தோம்.
2
கணினியில் பொத்தாங்களைத் தட்டித் தட்டிக் கைகள் இரண்டும் சோர்ந்து போய் ஓய்விற்காகக் கெஞ்சின. தோழி கொண்டு வந்து கொடுத்த தேநீர் கோப்பையை கையில் எடுத்து வாய் வரை கொண்டு சென்று குடிக்கவும் ஆயாசமாய் இருந்தது. யாராவது வாய் வரை கோப்பை எடுத்து குடிக்கச் செய்தால் பரவாயில்லையென்று அல்பமாகத் தோன்றிய எண்ணத்தை நினைத்து சிரிப்புத் தான் வந்தது. ஓரிரு மணி நேர தட்டச்செல்லாம் எனக்கு சர்வ சாதாரணம். ஆனால் திங்கள்கிழமை மட்டும் விதிவிலக்கு. சோர்வு எனக்கு சீக்கிரம் வருவதுடன், அது சண்டித்தனமாய் உற்சாகத்தை விரட்டவும் செய்யும். இது பெரும்பாலும் எல்லோருக்குமே இருக்கும் ‘திங்கள் ஜூர’ அவஸ்தை சுற்று முற்றும் நோக்கினால் எல்லோர் முகங்களிலும் துல்லியமாய்த் தெரிந்தது.
இந்நேரம் அனிதா அம்மாவை அன்பாகத் தொல்லைப்படுத்திக் கொண்டிருப்பாள். திங்கள் ஜூரம் அவளையும் விடுவதில்லை. அம்மாவும் அப்பாவும் இரண்டு நாட்கள் உடனிருந்து விட்டு திங்களன்று அவள் எழு முன்னரே வீட்டிலிருந்து வெளியாகி விட்டால், அவளுக்கு சொல்லத் தெரியாத ஓர் எரிச்சல்
வருவதுண்டு. அப்போது, பாவம் அம்மா தான் அவளிடம் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுவார். அதையும் அம்மா என்னவோ சுகமாகவே அனுபவிப்பார். அவர் வயதில் என்னை என் பேர்த்தி இப்படிப் படுத்தினால் அனுபவிப்பதாவது, சகிப்பேனா என்பதே சந்தேகம் தான்.
சுளையாக வெள்ளி சம்பளமும் குளுகுளு அறையில் நல்ல வேலையும் மட்டுமில்லாமல் ஐந்தறை வீடும் வைத்துக் கொண்டு, இன்று நான் வசதியாக இருக்கிறேன் என்றால அதற்கு அன்று அடுப்படியில் வெந்த பதார்த்தங்களுடன் சேர்ந்து நானும் வேகாத குறையாக அம்மா உழைத்ததல்லவோ காரணம். அதை இன்று நினைத்தால் கூட கண்கள் பனித்துத் தான் விடுகின்றன. இதைச் சொன்னால் ஏதோ நான் அவர்கள் வாழ்வில் வந்திராவிட்டாலும் உழைத்திருப்பார்களென்று அம்மா சொல்வார்கள். என்னை விட தானே அதிர்ஷ்டசாலி என்று சாதிப்பார்கள். அவரைப் போன்ற அன்புள்ளத்தைக் காண்பதரிது என்பதே நிதர்சனமான உண்மை.
கல்லாங்கில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் தொடக்கப்பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த ஆண்டு, வீட்டில் திருடன் புகுந்து இருந்த ஒரு சில சாமான்களையும் எடுத்துச் சென்று விட்டிருந்தான். ஏழ்மையில் உழன்ற எங்களையும் விட அவனுக்கு மிகுந்த கஷ்ட ஜீவனம் போலும்! பெரிதாய் எதிர்பார்த்து, ஏமாந்த கோபத்தில் வீட்டை அலங்கோலப் படுத்தியிருந்தான்.
சம்பவத்தன்று முதலில் அம்மா வீடு திரும்பி, திருடன் வீட்டினுள் புகுந்து இருந்த ஒரு கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வானொலியையும் திருடிச் சென்றதை உணர்ந்து அதிர்ந்து, அறையினுள் அலமாரியும் அலங்கோலமாய் கிடக்க, அதனுள் இருந்த இரண்டோ மூன்றோ பவுன் தங்கச்சங்கிலியையும், ஒரு சில நூறு வெள்ளிகளையும் காணாமல் மேலும் அதிர்ந்து, செய்வதறியாது தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சமயம் தான் பள்ளியிலிருந்து வந்தேன். கொள்ளைப் போனவை அக்காலத்திலேயே மற்றவருக்கு சொற்பப்பணமாய் தெரிந்த போதிலும் எங்களுக்கு என்னவோ அது மிகப் பெரிய தொகையாய் தான் இருந்தது. திருடனுக்கும் அப்படித்தான் போலும்!
என்னம்மா செய்யிறது, போலீஸ் கூப்பிடுவோமா? என்று கவலையே உருவான அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டதும் நான் தான், அம்மாவுக்கு அடுத்த வீட்டிற்குச் சென்று தொலைபேசியில் காவலரை அழைக்க வேண்டுமென்றே தோன்றியது. தொலைபேசியும் கூட சொந்தமாய் வீட்டில் இல்லாமல் இருந்த காலம் அது. இப்போது ஒன்றுக்கிரண்டு தொலைபேசிகள் இருக்கின்றன வீட்டில். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரண்டு.
வானொலியோ வகைக்கு ஒன்று, நகைகளின் எண்ணிக்கை எனக்கே நினைவில்லை. பதிவு செய்ததோடு சரி, அம்மா துளியும் சோர்ந்து விடவில்லை. என்னம்மா இப்படியாயிடிச்சி? என்று பலமுறை நான் புலம்பிய போது அம்மா மட்டும், ‘கவலைப்படாத நந்தினி, இதுக்கு நாம என்ன செய்ய முடியும்? நீயிருக்கீல்ல எனக்கு, அதுவே போதும், சாமானமெல்லாம்மா, எனக்கு கைகாலெல்லாம் நல்லா தானே இருக்கு, நீ கவலையே படாமப் படிம்மா, நல்லாப் படிக்கிறது மட்டுமே உன் கவலையா இருக்கணும், உம்… என்ன சரியா?” என்று சொல்லியே பல முறை என்னைத் தேற்றுவார்.
கிட்டத்தட்ட தனது நாற்பது வயதில் பள்ளிப்பாடத்தை ‘அ, ஆ’வென்று அரிச்சுவடி முதல் திரும்பவும் புதிதாகப் படிப்பவனின் நிலையில், உழைக்க ஆரம்பித்து ஒரு நிலையை அடைந்தார். நான் வேலைக்குச் சேர்ந்த பின்பு கிட்டத்தட்ட உண்ணாவிரதமெல்லாம் இருந்து சண்டையும் போட்டுத் தானே அம்மா வேலையை விடச் செய்தேன். அதன் பிறகு, ஒரு வருடம் வரை பொழுது போகாமல் புலம்பி, திண்டாடி பிறகு வீட்டில் இருக்கப் பழகிக் கொண்டார்.
எங்களுக்குள் சண்டை என்று அதிகம் வந்ததில்லை என்றாலும் வராமலும் இருந்ததில்லை. எட்டு வயதில் பெற்றோரைப் பறிகொடுத்து நின்று எனக்கு அம்மா மட்டும் அடைக்கலம் கொடுத்திராவிட்டால், அப்பப்பா… நினைக்கவே பயமாகத் தான் இருக்கிறது.
3
அனிதாவின் பள்ளிக்குச் சென்று அவளை விட்டுவிட்டு வீட்டை நோக்கி வந்த எனக்கு உச்சி வெயிலில் தலை கிறுகிறுத்தது. மின் தூக்கிக்கு நின்று அதனுள் நுழைந்ததும் சற்று ஆசுவாசமாய் இருந்தது. வீட்டிற்குப் போனாலும் பெரிதாய் வேலை இருக்கப் போவதில்லை. ஆனால், வெயிலில் வெளியில் தான் போக முடியாதே. மதியம் தூங்கும் பழக்கமும் எனக்கில்லை. மின் தூக்கியில் உடன் வந்த அந்தச் சீனக் குடும்பத்தின் தலைவி புன்முறுவல் பூத்தவண்னம் உணவு உண்டாயிற்றா? என்று அபிநயித்து, ‘மக்கான்?’ என்று வினவினாள் நானும் அபிநயத்திலேயே இனிமேல் தான் சாப்பிடப் போகிறேன் என்று பதில் கூறினேன்.
எனக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையே? ஆனால் அப்படி நினைக்கவும் வாய்ப்பில்லை. சீனத்திலிருந்து வந்திருந்த அவர்களுக்கு அந்தச் சொற்ப ஆங்கிலமும் பேசத் தெரியாமலிருக்கலாம். எல்லா இனத்தினருக்கும் ‘மக்கான்’ என்பது பொதுவாகியிருந்தது. இதைச் சுற்றுப் பயணிகளும் எளிதாயும் சீக்கிரமேயும் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
வீட்டை அடைந்து மின் விசிறியினடியில் சற்று இளைப்பாறிவிட்டால் சாப்பிட்டும் விடலாம். கண்ணை மூடி காற்று வாங்கியவளுக்கு நினைவுகள் காற்றை விட வேகமாய் பின்னோக்கிச் சென்றது.
மின் தூக்கியில் அப்பா அம்மாவுடன் ஏறும் போதெல்லாம் நந்தினி என் புன்முறுவலை ஏற்றதே இல்லை. அவள் அவளுடைய அம்மாவைப் போல முகத்தைத் திருப்பி கொள்வாள். அவளுடைய தந்தை மட்டும் சினேகமாய் புன்னகைப்பார். இப்படிப் பல சமயங்களில், எனக்கு மட்டும் ஏனோ அவளைப் பார்க்கும் போதெல்லாம் கோடையில் சொரியும் முதல் மழைத்துளிகளின் இன்பமாய் மனம் பூரிக்கும். அப்போதெல்லாம் யார் நினைத்திருப்பார்கள், நாங்கள் தாயும் மகளுமாகவே ஆவோமென்று.
நந்தினியின் தந்தை சொந்த வியாபாரம் செய்து வந்தார். சற்று வசதியானவர்களாகவே இருந்தனர். உடையும் வீட்டில் உள்ள பண்டங்களும் அதைப் பறை சாற்றின. பிறகல்லவா தெரிந்தது அத்தனையும் வெளி வேஷம் தானென்று. நந்தினியின் அம்மா போயும் போயும் இவளிடமா பேசுவது என்று என்னைப் பார்க்கும் பார்வை ஏழ்மையை வெறுக்கும். சாப்பாட்டுக் கடையில் சமைக்கும் இவள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிப்பதே பெரிய கௌரவக் குறைச்சல் என்று அவள் நினைத்தது மற்றவருடன் பேசுவதிலேயே தெரியும்.
ஒரு நாள் பக்கத்து வீட்டில் ஒரே அன்னியரின் கூட்டமும், சளசளப்புமாக இருந்தது. வருவோரும் போவோருமாய் இருந்தும், ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியின் அறிகுறியில்லை. நிச்சயம் ஏதும் சுபநிகழ்ச்சி அங்கு நடக்கவில்லை என்று மனதிற்குள் தோன்றியது. என்னவென்று அறியும் ஆவலை அடக்கி கொண்டாலும் சிறுமியின் அழுகை மட்டும் நெஞ்சைப் பிதிந்தது. நந்தினி ஏன் அழுகிறாள்? அவளுடைய அம்மா பார்த்து விட்டால் அவமதித்து விடுவாளென்ற பயத்தில் அவர்கள் வீட்டருகே செல்லாமலிருந்தேன்.
வெகு சீக்கிரமே அந்தப் பேரதிர்ச்சியான செய்தி என் காதுகளை எட்டியது. நந்தினியின் பெற்றோர் இருவருமே விரைவு நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மாண்டனரென்று. எனக்கு இது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அன்று காலையில் தான் எல்லோருமே வேலைக்குக் கிளம்பிச் செல்லும் போது மின் தூக்கியில் சந்தித்தோம்! நம்பவே முடியவில்லை எனக்கு. நந்தினியின் தந்தைக்கு உற்றார் யாருமில்லை. தாயின் சொந்தமெல்லாம் இந்தியாவில்! இந்நிலையில் நந்தினியை துக்கத்திற்கு வந்த நண்பர் எவருமே உடன் உழைத்துச் செல்லவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர் பொறுப்பை ஏற்பரென்று நழுவினர் போலும்.
சிறுமியை கவனிக்க ஒருவருமில்லா நிலை. நான் செய்த வேலை என்ன பெரிய வேலை, மாற்றுக்கு ஒரு வாரத்திற்கு வேறு ஆளை நியமித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்தபடியே நந்தினியைப் பார்த்துக் கொண்டேன். கடை முதலாளி கோபப்படவே வேலையையே உதறி விட்டு பிறகு வேறு வேலை தேடிக் கொண்டதெல்லாம் தனிக்கதை. என் அன்பும் நான் ஊட்டிய சோறும் நந்தினிக்கு வேண்டியிருந்தது. ஓரிரு நாட்களில் அவளுடைய அம்மாவின் ஒரே உடன் பிறப்பான தாய் மாமன் வந்தார். வந்த வேகத்திலேயே கிளம்பியும் விட்டார்.
அவர் எதிர்பார்த்து வந்தது சொத்தை, ஆனால் நந்தினியின் தந்தையின் வியாபாரம் படு நஷ்டத்தில் ஓடுகிறதென்று அறிந்ததும் அவருக்குப் பெருத்த ஏமாற்றம். கடன் கணக்குகளை மட்டும் பார்த்து அரண்டு போயிருந்தார். சொத்து ஏதும் கிடைத்திருந்தால் நந்தினியைக் கூட்டிச் சென்றிருப்பாரோ என்னவோ; ஆனால், ஏதும் இல்லையென்றானதும் தனக்கு ஏற்கனவே மூன்று பெண்கள், இதில் இவளையும் கூட்டிச் சென்றால், படிப்பு, திருமணம் என்று எப்படிச் சமாளிப்பது என்று ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினார்.
யாருமற்ற எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆனால் ஒரு பேராசையோ என்று சிறிது சந்தேகம். நந்தினியின் மாமன் எடுத்தெறிந்து பேசிவிட்டால்! மிகவும் அச்சத்துடன் அவரை அணுகினேன். நந்தினியை நானே வளர்ப்பதாய் மிகவும் தயங்கி தயங்கிக் கூறியது தான் தாமதம், உடனே ஒப்புதல் அளித்ததுடன், இரண்டு மூன்று நாட்களில் அலைந்து திரிந்து சட்டப்பூர்வமாகவே ஸ்வீகாரப் பத்திரத்தையே என் கையில் கொடுத்து விட்டு இந்தியாவிற்குப் பறந்தார். இந்த வரையில் யாரோ பொறுப்பை ஏற்றுக் கொண்டார்களோ என்று அவருக்கு பரம திருப்தி, நிம்மதி. ஓரிரு கடிதங்களுடன் அவர் தொடர்பையும் துண்டித்துக் கொண்டார்.
இதற்குள் நந்தினி என்னிடம் ஓரளவு பழகி விட்டிருந்தாள். ஆண்டி என்று என்னை அழைத்துக் கொண்டிருந்தவள் தானே என்னை அம்மாவென்று சில மாதங்களிலேயே அழைக்க ஆரம்பித்தாள். அதைக் கேட்டு மனம் பூரித்து ஆனந்தக் கூத்தாடும். உடல் சிலிர்க்கும், அச்சிலிர்ப்பு இன்றும் தொடர்கிறது. இரண்டு மூன்று வருடத்தில் பெற்றோர்கள் முகங்கள் கூட அவளுள் ரசம் போன கண்ணாடியில் தெரியும் பிம்பங்களாய் மங்கின.
4
அம்மாவுடன் அதிக சண்டை வந்தது என் திருமண விஷயத்தில் தான். அம்மா தன் வாழ்வில் திருமணமே செய்து கொள்ளாத போதிலும் திருமண விஷயத்தில் கேட்டும் பார்த்தும் தெரிந்திருந்தது ஏராளம். அதிலும் தன் மகளுக்காக அம்மா கல்யாணச் சந்தையின் அன்றாட நிலவரம் வரையில் தெரிந்து வைத்திருந்தார். கல்யாணத்திற்கு வாங்க வேண்டிய சாமான்கள் முதல் மாப்பிள்ளை பார்க்கும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள் வரை அம்மாவுக்கு ஐந்து பெண்களுக்குத் திருமணம் முடித்த அனுபவம் போல அத்துப்படி. ஜாதி இன மத வேறுபாடு இருந்தாலும் அம்மாவால் பூரண மனத்துடன் ஏற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிறிய குடும்பமாகவோ அல்லது ஒருவரும் இல்லாத தனியாளோ வேண்டவே வேண்டாமென்று மட்டும் அடிக்கடி கூறி வந்தார். நானும் ஆரம்பத்தில் அம்மாவையே மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியிருந்தேன்.
அம்மாவும் தெரிந்தவர் அறிந்தவர் என்று ஒருவர் விடாமல் சொல்லி தன் மாப்பிள்ளை வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அம்மாவுக்குத் திருப்தி தரும் வகையில் ஒரு வரனும் அமையாமலேயே இரண்டு வருடங்கள் உருண்டன. அம்மாவுக்கு நானும் அவரைப் போல திருமண வயதைக் கடந்து பிறகு திருமணத்தையே மறந்து விடுவேனோ என்ற அச்சம் தலை தூக்க ஆரம்பித்தது.
அப்போது தான் என் அலுவலகத்தில் பல பதவிகளில் இந்தியாவிலிருந்து பலர் பதவியேற்றிருந்தனர். அவர்களில் கதிர் என்றழைக்கப்பட்ட கதிர்வேல் என்பவரும் ஒருவர். அப்போது நான் கடுகளவும் நினைக்கவில்லை நாங்களிருவரும் திருமண பந்தத்தில் இணைவோமென்று, எதிர்பாராமல் நடப்பதைத் தானே விபத்து என்போம். இதனால் தானோ காதலையும் விபத்தில் சேர்க்கின்றார்கள் சில கவிஞர்கள்!
முதலில் சக ஊழியராகவும் பிறகு நல்ல நண்பர்களாகவும் நானும் என்னுடைய வாக்குச் சாதுர்யத்தால் அவரும் கவரப்படுவதை உணர்ந்தோம். அவர் யாருமற்ற அனாதையென்பதையும், வளர்ந்து படித்தது எல்லாமே இந்தியாவில் ஓர் அனாதை விடுதியில் என்பதை அறிந்த பிறகு எனக்கு நம்பிக்கை போனது. அம்மாவின் அங்கீகாரம் கிடைக்க வழியில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
அம்மாவுக்கு அப்போதெல்லாம் பயம். எனக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளை என்னைப் போலவே யாரும் இல்லது தனியே தவிக்க நேருமோ என்று. நிறைய உற்றார் உறவினர் இருந்தால் மட்டும் எல்லோரும் அரவணைத்துப் போவார்களென்று என்ன நிச்சயம்? உலகமே சுயநலமிக்கதாயல்லவோ மாறிக் கொண்டிருக்கிறது. இதை அம்மா புரிந்து கொள்ள மறுத்தார். அம்மாவுக்கு தன் நலனில் துளியும் அக்கறையில்லை. எப்போதும் என் நினைப்பும் என் எதிர்காலம் பற்றிய நினைப்பும்தான்.
எனக்கு உள்ளூர கதிரைப் போன்ற யாருமில்லாதவரை மணக்கவே ஆசை. உடன் பிறந்தவர், பெற்றோர் மற்றும் பலர் உள்ள வீட்டில் என் அம்மா நிராகரிக்கப் படுவாரோ என்ற பயமும், வேலும் அவர் வயதான காலத்தில் தனியாகவே வாழ நேருமே என்ற கவலையுமே இதற்குக் காரணம்.
வேலையை நிறுத்தச் சொல்லி அம்மாவைச் சம்மதிக்கக் கடைபிடித்த உண்ணாவிரதமெல்லாம் இப்போது சரி வராது போலத் தோன்றவே, ஒரு நாள் கதிரை வீட்டிற்கு சாதாரணமாய் கூட்டி வருவது போல் வந்து உபசரித்து அனுப்பினேன். பேருக்கு ஓரிரு வார்த்தை பேசிய அம்மா சங்கோஜம் காரணமாய் மௌனமாய் இருந்தார். கதிர் போன பிறகு, பிறகு, மெள்ள அவரை மணக்க விரும்புவதாய் சொன்னதும் சட்டென்று அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
‘கொஞ்சம் கருப்பு தான்னாலும் பார்க்க லட்சணமாத் தானிருக்கான், அம்மா அப்பா சொந்தக்காரங்க எல்லாரும் சிங்கையிலேயே தானே இருக்காங்க நந்தினி? கூடப் பிறந்தவங்க எத்தன பேரு? என்று அம்மா கேட்டதும் நான் மென்று மிடறி விழுங்கியவாறே விவரங்களை சொன்னதுமே அம்மா முகத்திலிருந்து மகிழ்ச்சி பட்டென்று விடைபெற்று விலகியது.
“வேண்டாமே நந்தினியம்மா, நான் தான் ஏற்கனவே பல தடவை உனக்குச் சொல்லியிருக்கேனில்ல, பெரிய குடும்பமா இருக்கணும்னு, அவசரப்படாத என் ராசாத்தி,” அம்மா பரிதாபமாய் கெஞ்ச ஆரம்பித்ததும் எனக்கு சற்று பேசும் தைரியம் வந்தது. அம்மா கோபப்பட்டிருந்தால் பேச்சு வார்த்தையை வேறு ஒரு நாள் வைத்துக் கொண்டிருப்பேன். அம்மாவின் அமைதியான பேச்சு என்னைப் பேச வைத்தது.
“இல்லம்மா நீங்க நினைக்கிறா மாதிரி எதுவும் ஆகாதும்மா…” அம்மா என்னைப் பேசவே விடவில்லை. விருட்டென்று அறையில் போய் படுத்தவர் மறுநாள் காலை வரையில் வெளியில் வரவே இல்லை.
உண்ணாவிரதம் இப்போது அம்மாவின் முறை. இரவு சமைத்த உணவைச் சீந்துவாரில்லை. மறுநாள் அலுவலகத்தில் வேலை நேரத்தில் தொலைபேசியில் அழைத்த போதும் அம்மா எடுக்கவில்லை. நான் மட்டும் வேறு வழியில்லாமல் மதிய உணவை உண்டேன். ஆனால் இரண்டு நாட்களாய் அம்மா உண்ண மறுத்து, யோசனையிலேயே ஆழ்ந்திருந்தது தெரிந்தது. அவருடைய நிலை என்னை மிகவும் வருத்தியது. அவரைப் பார்க்கவும் பார்க்கவும் பரிதாபமாய் பரிதாபமாய் இருந்தது. அதே சமயம் பிரச்சனைக்குத் தீர்வு என்னவென்ற குழப்பமும் இல்லாமலில்லை. திடீரென்று எனக்கு உலகம் அழகற்றதானது. கண்ணில் படுவோரிடமெல்லாம் கோபம் வந்தது.
மூன்றாம் நாள் காலையில் “பசியாறிவிட்டு புறப்படும்மா, நந்தினி” என்று அம்மா என்னைப் பார்த்து கூறியதும் மறு பேச்சில்லாமல் அமர்ந்து ரொட்டியை சாப்பிட்டதுடன், அம்மாவையும் வற்புறுத்தி ஆரஞ்சுச் சாற்றைக் குடிக்க வைத்தேன். வேறு தினமாக இருந்தால் நடப்பதே வேறாய் இருக்கும். அம்மாவிடம் ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு பசியாறாமலேயே வலையிலிருந்து நழுவும் மீனாய் நழுவிவிடுவேன். அன்று அம்மா பேசினால் போதுமென்று காத்திருந்த நான் வேலைக்கு ஒரு நாள் விடுப்பெடுக்கவும் கூடத் தயாராய் இருந்தேன்.
அம்மா பேசத் தயங்குவதை உணர்ந்து, “இப்போ பேசுவமா, சாயங்காலமா பேசுவமாம்மா?” என்று நான் கேட்டதுமே கண்களில் கண்ணீர் வழிய “உனக்கு விவரம் தெரியக் கூடிய வயசுதான்னாலும் என் மனசு கேக்கலம்மா” என்றதுமே என்னையறியாமலேயே என் கண்களும் கலங்கிவிட்டன. “ஒண்ணும் நடக்காதும்மா, நீங்க அதிகமாகவும் அனாவசியமாவும் கற்பனை பண்ணிக்கிறீங்கம்மா,” சமாதானப்படுத்தும் தொனியில் நான் கூறியதும், “சரி ஒண்ணும் நடக்காதுன்னே வச்சுக்குவமே, நெருப்புன்னா வாய் என்ன வெந்தா போகும்? நமக்கே உறவுன்னு யாருமில்லை. உன்னோட மாமன் குடும்பமும் என்னாச்சு எங்கிருக்காங்கன்னும் தெரியாத அளவுக்கு சுத்தமா தொடர்பில்லாமப் போச்சே உம்… சொல்லு, நாளைக்கு உனக்கும் உன் பிள்ளைங்களுக்கும் என் காலத்துக்கப்புறமும் உறவுன்னு நிறைய பேர் வேணும்மா அதான்…”
“ஐயோ அம்மா, நிறைய உறவிருந்தா மட்டும் ஒட்டுதல் வந்துடுமா என்ன? அப்பிடின்னு நீங்களா நினைச்சுக்கறீங்கம்மா, இப்போ உங்களுக்கும் எனக்கும் என்ன ரத்தமா உம்… சொல்லுங்க? இப்ப நானில்லையா, எனக்கென்ன கொறைன்னு சொல்லுங்க? எனக்கு நீங்க இருந்த போதும்மா. அப்பிடி என் பிள்ளைகளுக்கும் என் கதி வந்தா நீங்க இருக்கீங்க, சரி உங்க காலமும் முடிஞ்சு போச்சுன்னா கூட, உங்களையே போல ஒரு நல்ல உள்ளம் படைத்த ஒரு தாயோ தந்தையோ கிடைப்பாங்கன்னு நம்புவோம்… உம்…?”
அம்மாவின் மௌனம் கொஞ்சமே கொஞ்சம் என் வழிக்கு அம்மா வருவதைச் சொன்னாலும், சரி சரி கிளம்பு, உனக்கு லேட்டாயிடும், என்று அம்மா தப்பிப்பது தெரிந்தது.
அத்துடன் போகவில்லை. கதிரைப் பற்றி பேசும் போதெல்லாம் முகம் மாறும். அதற்கப்புறம் பல தடவைகள் வாக்குவாதங்கள் நடந்து, இருவருமோ ஒருவரோ மாற்றி மாற்றி கோபித்துக் கொண்டு சமாதானமாகி, மறுபடியும் அதே சுழற்சியில் சண்டை போட்டு சமாதானமாகி, இரண்டு வருடங்கள் ஓடின.
அம்மாவின் மாப்பிள்ளை தேடும் படலம் ஒருபுறம் தீவிரமாய் நடந்த போதிலும் நான் பிடி கொடுக்காததால் பலன் கிடைக்கவில்லை. அம்மாவிற்கு கடுப்பு அதிகமானது. கவலையும் அதிகமானது. வேறு வழியில்லாமல், மெள்ள நாளடைவில் என் வழிக்கு வந்து கதிரையே மாப்பிள்ளையாக ஏற்க முன் வந்தார். இதற்காக கதிர் பல முறை அம்மாவிடம் பேச வேண்டியிருந்தது. ஆனால், இப்போது கதையே வேறு. எனக்கும் அம்மாவுக்கும் உள்ள நட்பை விட கதிருக்கும் அம்மாவுக்கும் இருக்கு நட்புப் பாலம் அதிக பலமானதாக இருக்கிறது.
5
இன்றைக்கென்னவோ மனம் அசை போட்டு சுகம் காண்கிறதே என்று வியந்த வண்ணம் உண்ட மயக்கத்தில் கூடத்து இருக்கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு படிக்க முயற்சித்தேன். கண்கள் தன்னிச்சையாக சொற்களை மேய்ந்தாலும் மனம் மட்டும் கடிவாளமில்லாக் குதிரையைப் போல் பின்னோக்கியே போனது.
புத்தகத்தில் மனம் செல்லாது போகவே வானொலியை உயிரூட்டி ‘ஒலி’யை கேட்கலாமென்று திருகினேன். ‘வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ’ என்று பாசமலர் திரைப்படத்திலிருந்து பாடல் ஒலிபரப்பினர்.
பாடலைக் கேட்டதுமே நந்தினியின் திருமண நினைவு வந்தது. நான் காணாத அந்த மணப்பந்தலை என் மகளாவது கண்டாளே என்று நான் அன்று அடைந்த மனநிறைவுக்கு அளவே இல்லை. உறவு என்று மருந்துக்கும் ஒருவரில்லாமலேயே நண்பர்கள் கூட்டம் திருமணத்தில் நிறைவாய் அமைந்தது.
அறையினுள் சென்று சென்று திருமணப் புகைப்படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். இதுவரை ஓராயிரம் முறையாவது பார்த்திருப்பேன். ஆனாலும் எனக்கு அலுப்பதில்லை. எல்லாவற்றையும் ஆசை தீரப் பார்த்துவிட்டு அனிதாவின் குழந்தைப் பிராயத்துப் புகைப்படங்களையும் அப்படியே பார்த்துக் கொண்டே வந்த எனக்கு ஏனோ என்றுமில்லாமல் இன்று உடனே நந்தினியைக் காண ஆவல் பெருகியது. ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தேன். அவள் வேலையில் மும்முரமாய் இருப்பாள். இது அறிவிற்கு தெரிந்தாலும் பாழும் மனதிற்கு மட்டும் அது புரியவில்லையே.
தொலைபேசியில் நந்தினியின் அலுவலக எண்ணை ஒத்தி விட்டு பதிலுக்குக் காத்திருந்தேன். மறுமுனையில் யாரோ எடுத்து நந்தினி முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாய் சொன்னார்கள். ஏமாற்றத்துடன், மறுபடியும் இருக்கையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தேன்.
பொதுவாக நந்தினி எனக்கு ஒரு வேலையும் வைக்காமல் கதிரும் அவளுமாகவே வேலைகளை முடித்து விட்டு காலையில் வெளியேறுவது வழக்கம். மாலையில் தான் வந்த பிறகு தான் மாலை உணவைத்தானே சமைப்பாள். அதையும் மீறி நான் சமைத்தால் கடும் கோபமடைவாள். வாரமொரு முறை வீட்டைச் சுத்தம் செய்ய ஒரு பகுதி நேரப் பணிப்பெண்ணை அமர்த்தியிருந்தாள். பொழுது போகாவிட்டால் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்று நடந்தபடியே வேடிக்கை பார்ப்பது தான் என் வழக்கம். ஆனால், இன்று வெளியில் போகவே வேண்டாமென்று உடல் முரண்டு பிடித்தது.
ஒவ்வொரு அறையாக ஏதும் வேலை கிடைக்குமா என்று ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் மறுபடியும் இருக்கையில் அமர்ந்தேன். நந்தினியோடு இப்போது பேச முடிகிறதா பார்க்கலாமென்று மறுபடியும் நந்தினியின் அலுவலக எண்ணை அழுத்தினால், அதே நபர் நந்தினி இன்னும் அறையிலிருந்து வெளியில் வரவில்லையென்று கூறிவிட்டு நான் யாரென்ற விவரத்தை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு நந்தினியிடம் கூறுவதாய்ச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
வங்கியில் என் பெயரில் இருந்த அந்தப் பெருந்தொகையை நந்தினி ஏற்கவில்லையென்றால் என்ன அனிதாவின் பெயரிலாவது இருக்கட்டுமென்று பல முறை சொல்லியும் நந்தினி அதற்கும் மறுப்புத் தெரிவித்தே வந்தாள்.
‘அம்மா, நாம இப்போ ஒரு கொறையும் இல்லாம நல்லா தானே இருக்கோம். அனிதாவுக்கும் ஒரு கொறையும் இல்ல. அந்தப் பணத்தை நீங்க இஷ்டம் போல வேற ஏதாவது செய்யுங்கம்மா,” என்று சொல்லிவிட்டாள். “நீயே ஏதாச்சும் யோசனை சொல்லேன் நந்தினி,” என்று கேட்டதும் தான், “இந்த மாதிரி செஞ்சா என்னம்மா?” என்றாள். யோசனை அருமையாக இருக்கவே அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் அவளே செய்து விட்டாள். போன வாரம் செவ்வனே முடிந்த இந்த வேலையில் எனக்குப் பெரும் திருப்தி. பெற்றோரை இழந்து நின்ற நந்தினியைப் போல இன்னும் பல சிறார்களுக்கு என் உழைப்பு எதிர்காலத்தில் உதவப் போகிறது என்ற நினைப்பே உவகையளித்தது.
சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் கோர்வையற்ற சிந்தனைகள் அரை மயக்கத்திலும் எனக்கு விந்தயாகவே இருந்தன.
இன்று வெய்ல் வெய்ல் அதிகமாயிருந்ததால் மட்டுமில்லை, உடலில் இவரை அறிந்திருக்காத ஒரு சோர்வு இருக்கவே வெளியில் போகவும் மனமில்லை. உடல் சோர்விற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாமல் மனம் மட்டும் மறுபடியும் மறுபடியும் நந்தினியையே நினைத்து இறந்த காலத்திற்கே தாவியது. அனிதாவைப் பள்ளியிலிருந்து கூட்டிவரப் போகலாம். ஆனால் அதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே.
“ஹம் அம்மா… அம்மா… ஹ்ம்… ம்ம்ம்… மாமா, மாமா சொல்லுங்க மாமா, அம்மா அப்பா எப்போ வருவாங்க, இனிமேட்டு வரவே மாட்டாங்களா?”
பாவம், நந்தினி! ஓயாமல் அழுகிறாளே, அவள் அழுகையை நிறுத்த என்ன தான் செய்யலாம்? டிரிங் டிரிங் பக்கத்து வீட்டு தொலைபேசி ஏன் விடாமல் அடிக்கிறது?
6
அறையினுள் போன போது மணி இரண்டு, வெளியில் வந்து பார்த்தால் மணி ஐந்து, நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக இத்தனை நேரம் மீட்டிங் இருந்ததே இல்லை. யாரும் எதிர்பாராமல், இன்று வெகு நேரம் ஆகிவிட்டது. மதிய உணவு வரை ஏதேதோ நினைவுகளில் வேலை ஒன்றும் கணிசமாய் முடியவில்லை. இந்த மதிய நேரமும் இப்படிப் போனதால் வேலையைச் சரிக்கட்ட ஒரு மணி நேரமாவது அதிகமாக மாலையில் தங்கியிருந்து செய்யாவிட்டால் பிறகு இரண்டொரு நாளில் மேலதிகாரியிடம் பாட்டுக் கேட்க வேண்டியவரும். அதைவிட ஒரு மணி நேரத் தியாகமே மேல்.
இருக்கைக்கு வந்ததுமே பக்கத்து இருக்கையில் அமரும் ரமேஷ், வீட்டிலிருந்து அம்மா அழைத்ததைத் தெரிவித்தார். எனக்குச் சற்று ஆச்சரியம்! அம்மா தொலைபேசியில் அலுவலகத்திற்கு சாதாரணமாய் தொடர்பு கொள்வதே மிகமிக அரிது. என்னவாக இருக்கும். அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது, உம்… இருக்கவும் வழியில்லையே, காலையில் கூட அம்மா மறுபுறம் எடுக்கக் காத்திருந்தேன். மணியடித்ததே தவிர எடுக்கப்படவே இல்லை. எதனால்? அம்மா வீட்டில் இல்லையா?
ஒரு வேளை அனிதாவுக்கு பள்ளிக்கூடத்தில் அடி ஏதாவது பட்டிருக்கக் கூடுமோ? நினைத்த மாத்திரத்தில் என் மனம் பதைபதைத்தது. முன்பொரு முறை அனிதா அடிப்பட்டு தகவல் வந்தபோது அம்மா தானே பள்ளிக்குச் சென்று மருத்துவரிடம் காண்பித்து வீட்டிற்கும் அவளை அழைத்து வந்திருந்தார். மாலை வீடு திரும்பிய பிறகல்லவா எனக்கே விவரம் தெரிந்தது.
இம்முறை ஏதும் பலமான காயம் பட்டிருக்குமோ? அதனால் அம்மா என்னை அழைத்திருப்பாரோ? வலுக்கட்டாயமாய் நினைவை உலுக்கி ஒதுக்கினேன்.
அம்மா பக்கத்தில் கடைக்குப் போயிருப்பார். மூளைக்கே மூளைச் சலவை செய்ய முயன்றேன். தொலைபேசியில் அதுவும் இருமுறை என்னை அழைத்திருக்கிரார்களே, கடவுளே என்னவாக இருக்கும்? அதற்குமேல் என் மனம் வேலையில் ஓடுமென்று தோன்றாததால் ஒரு மணி நேரம் முன்பாகவே அனுமதி கேட்டுவிட்டு அலுவலகத்தை விட்டுக் கிளம்பினேன்.
வாடகைக் காடி ஒன்றை எடுத்து வீட்டை நோக்கிப் பயணப்பட்ட எனக்கு அனிதாவின் பள்ளியைத் தொடர்பு கொள்ளும் யோசனை தோன்றவே, கையடக்கத் தொலைபேசியில் அழைத்தால், அவர்களால் ஏதும் விவரம் கூற முடியவில்லை. இந்நேரம் கதிரும் வீட்டிற்குக் கிளம்பியிருப்பார்.
வண்டி மேலும் நகராமல் நிற்பதை உணர்ந்து வெளியே பார்த்தால் வாகன நெரிசலில் வசமாய் மாட்டிக் கொண்டிருப்பது புரிந்தது. வாகனமோட்டியிடம் கேட்டால் எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும் போக்குவரத்து சீராக போக்குவரத்து சீராக என்று நிதானமாய் சொல்கிறார். என் பதைபதைப்பு யாருக்குத் தெரியும்? நொடிகள் வினாடிகளாகவும், வினாடி மணிகளாயும் தெரிந்தன. மாலை நேர வெயில் மேற்கிலிருந்து முகத்தில் அடித்தது.
என்ன நடந்திருக்கக் கூடும் என்ற ஊகிக்கவே முடியவில்லையே. மர்மமான அந்த நேரத்தில் ஏதேதோ வேண்டாத கற்பனைகளில் எத்தனை முறை முயன்றும் தடுக்க முடியாமல் என் மனம் தவித்தது. நட்ட நடு விரைவுச் சாலையில் வரிசையாய் நின்ற வாகனங்களின் முன்னேற்றமும் வேகமும் நத்தையை விடக் கேவலமாயிருந்தது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க என் மனத்திலும் கவலை அதிகரித்தது. மறுபடியும் வீட்டிற்கே அழைத்தால் என்ன, இது அனிதா பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் நேரம், நிச்சயம் அம்மாவும் அவளும் வீட்டில் இருப்பார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது.
ஒருவழியாக போக்குவரத்து சீரானதும் வேகமாய் உட்லண்ட்ஸை அடைந்து எங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தையும் அடைந்து எங்கள் அடுக்கு மாடிக் கட்டடத்தையும் அடைந்து ஓட்டுநரிடம் பணத்தைக் கையில் திணித்துவிட்டு மீதிச் சில்லறையைப் பற்றிக் கவலைப்படாமல் ஓட்டமும் நடையுமாய் பத்தாவது மாடியை அடைந்தால் வீட்டு வாசலில் அப்பாவும் மகளும் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியபடி நிற்பது தெரிந்தது.
என்னைப் பார்த்ததுமே, “அம்மா, இன்னிக்கி பாட்டி ஸ்கூலுக்கு வரல்ல தெரியுமா? நானே வந்துட்டேன். அப்பா ரொம்ப நேரமா பெல் அடிச்சிட்டே இருந்தாரு உள்ள பாட்டி தாழ்ப்பாள் போட்டிருக்காங்க. திறக்க மாட்டேங்கறாங்கம்மா,” என்று அனிதா படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.
கதிரும் முகத்தில கவலை ரேகைகளுடன், “நந்தினி, பாரும்மா, போஸ்ட்மேன் வேற நாலு மணிக்கே ரெஜிஸ்தர், போஸ்ட் கொண்டு வந்திருக்காரு. அந்த நேரம் அம்மா வீட்டில இல்ல போல இருக்கு அதனால இங்க கதவுல இத சொருகிட்டுப் போயிருக்காரு. நாளைக்கு நான் தான் அஞ்சலத்துக்குப் போய் வாங்கணும். ஆனா இப்போ மணி ஆறரைக்கி மேல ஆவுது. அம்மா என்ன இன்னுமா தூங்கிட்டு இருப்பாங்க?”
எனக்கு படபடப்பு அதிகமானது. என படபடப்பு அனிதாவிற்கும் கதிருக்கும் தொற்றிக் கொள்ளுமே என்ற பயத்தில் நான் சிரமப்பட்டு என் பயத்தை மறைத்தேன்.
அம்மா மதியமே தூங்குவார். இத்தனை மணிக்கு தூங்குவார்களா? நிச்சயமாக இருக்க முடியாது. அம்மாவுக்கு என்னவாயிற்று? வீட்டினுள் ஏதும் விபத்து ஏற்பட்டிருக்குமோ?
மதியம் அடித்த வெயிலுக்கு ஈடு செய்ய சோவென்று மழை வேறு பலமாகப் பெய்தது.
அவலையும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. திடீரென்று என் சொந்த வீட்டுச் சுற்றுப்புறமே எனக்கு அன்னியமாகப்பட்டது. கதவை பலமாகத் தட்டிவிட்டு, “அம்மா, அம்மா” என்று கத்திப் பார்த்தேன். முகர்ந்தும் பார்த்தேன், சமையல் வாயுவின் மணம் வருகிறதாவென்று, அப்படி ஒன்றும் இருக்கவில்லை.
பெண்மைக்கே உரிய உள்ளுணர்வில் நிலைமையை ஓரளவு ஊகிக்க முடிந்தது. இருப்பினும் வாய் தான் அடைத்துப் போனது. வாய்திறந்து கதிருக்கு என்னால சொல்ல முடியவில்லை. பேசினால் குமுறி விடுவேனோ என்ற பயம்!
கதவிடுக்கில் காது வைத்து ஏதும் சத்தம் கேட்கிறதாவென்று பார்த்த போது தான் வானொலியில் பாட்டு கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல மிகவும் லேசாகக் கேட்டது.
“வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது,” உருக்கமாய் பாடிக் கொண்டிருந்தார் சௌந்தர்ராஜன்.
உண்மை என் நெஞ்சைப் பிசைந்தது. என் தொப்புள் கொடி அறுபட்டதை போல முதல் முறையாக உணர்ந்த என் உள்ளம் பாறையாய் உறைந்தது. என் புலங்கள் செயலிழந்தன. பொத்தென்று தரையில் உட்கார்ந்தேன். உலகமே இருண்டு விட்டாற்போல் இதுவரை உணராத ஓர் உணர்வு என்னை வாட்டியது. வானமே அழுதது.
– இ-சங்கமம் டாட் காம்.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மௌனத்தின் மரணம்
இரா.கலைச்செல்வி
June 6, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 6, 2026
நூலகத்தில் அம்மம்மா
அபிநந்தினி மோகன்
June 3, 2026
