செலக்ஷன்
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 3,281
“திவ்யா….” கனிவாக மகளை அழைத்தார் ராகவன்.
“என்னப்பா…” விழிகளை உயர்த்தினாள் திவ்யா.
“ஒண்ணுமே சொல்லாம இருக்கியே…”
“என்ன சொல்லணும்?”
“எங்க செலக்சன் உனக்குப் பிடிச்சிருக்கா இல்லியான்னு…” இழுத்த கணவனை இடைமறித்தாள் மல்லிகா.
“என்னங்க நீங்க… அவக்கிட்ட போய் கேட்டுக்கிட்டு, சின்ன வயசிலேர்ந்து நாமதான் பாத்து பாத்து செய்யறோம். அவளுக்கு எது நல்லதுன்னு நமக்கு தெரியாதா…?”
“அம்மா…” அதட்டினாள் திவ்யா. “நான் ஒண்ணும் இப்ப சின்னக்குழந்தை இல்ல. எனக்கு இப்ப 21 வயசாச்சு.”
“உன்ன பெத்தவ நான். உனக்கு என்ன வயசுன்னு என்கிட்ட சொல்றியா…”
“ஷ்ஷ்ஷ்…” மனைவியை அமைதிப் படுத்திய ராகவன் மகளிடம் திரும்பினார்.
“நீ சொல்லுமா… உனக்கு பிடிச்சிருக்கா இல்லியான்னு…”
“எனக்கு பிடிக்கலப்பா…”
“ஏம்மா என்ன காரணம்?”
“அது வந்து வந்து…”
“எதுவா இருந்தாலும் சொல்லுமா பரவாயில்லை…”
“என் மனசில ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டேன்”.
ராகவனும் மல்லிகாவும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.
பெருமூச்செறிந்த ராகவன், “இதுதான் உன் முடிவாம்மா?” என்று கேட்டார்.
“ஆமாம்பா…” உறுதியுடன் தலையாட்டினாள் திவ்யா.
“சரி இப்ப நாங்களும் எங்க முடிவ சொல்றோம் கேட்டுக்க. உன் ஆசைக்கு குறுக்க நாங்க நிக்கல. அதே நேரத்துல எங்க ஆசையையும் நீ தடுக்கக்கூடாது. அதனால். உனக்கு பிடிச்சதும் எங்களுக்குப் பிடிச்சதும் சேர்த்து ரெண்டாக…”
திக்கென அதிர்ந்தாள் திவ்யா. “என்னப்பா மடத்தனமா பேசறீங்க. எப்பவும் என் பர்த்டேவுக்கு நீங்க செலக்ட் பண்ற டிரஸ்தான போடுவேன். இந்த பர்த்டேவுக்கும் அம்மாவும் நீங்களும் செலக்ட் செஞ்ச பச்சை நிறப்புடவைதான் என்னோட சாய்ஸ். இவ்ளோ நேரம் சும்மா உங்களோட விளையாடினேன்…” கண்சிமிட்டி சிரித்த திவ்யாவின் காதுகளை செல்லமாக நிமிண்டினர் ராகவனும் மல்லிகாவும்.
– 21.4.2018, தினமலர், பெண்கள் மலர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நீ என் மகனல்ல
என்.ஸ்ரீதரன்
July 29, 2026
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026