செலக்சன் – ஒரு பக்க கதை





“என்ன சேர், உங்க ஃபிரெண்ட்ஸ் இரண்டு பேர் ஒரே மாசத்துல இப்படி ஆயிடிச்சே?” அவன் கணேஷின் உதவி இயக்குனராக இருந்து பலநாள் பழகியிருப்பினும் தயக்கத்துடன் வினவினான்.
“யெஸ், அவங்க அவங்க விதி இல்லையா?”
“யெஸ் சேர் பட் நீங்க கொஞ்சம் வருத்தப்படுவீங்க என்டு நினைச்சேன் அதான் கேட்டேன்”
“என்ன பண்ண சொல்லுற கார்த்திக் நேற்று கூட அவனுங்கள நினைச்சு அழுதேன் ஆனாலும் 40 வயசுல போனதுக்காக இல்ல நாங்க மூண்டு பேரும் சேர்ந்து அடிக்கிற கூத்த நினைச்சு தான்; நாங்க எது செஞ்சாலும் ஒன்னாதான் செய்வோம் நல்லதோ கெட்டதோ” பதற்றமின்றி ஈரிரு துளி கண்ணீர் துளிகளை தட்டிவிட்டவாரே பதிலுரைத்தான் கணேஷ்.
“சேர் நீங்க கெட்டது செஞ்சிறுக்கீங்களா? நலன்புரி சங்கம், ஊனமுற்றோர் சங்கம், கல்விக் கரம், ஏன் உங்கட படமெல்லாம் கூட கொம்யூனிஸம்(Communism),நியோபொட்டிஸம்(Nepotism) நிறைஞ்சு கிடக்குமே!”
“நோ கார்த்திக். ரோஜான்னா முள்ளும் கிடக்கும், இதழும் கிடக்கும். நானும் கெட்டது பாதி, நல்லது பாதி ஆனா இரண்டும் சேர்ந்து தான்டா அவங்க.(திடீரென கதறி அழத் தொடங்கினான்) சின்ன வயசுல இருந்து பழகினோன்டா!. அவங்க இரண்டு பேரையும் யாரு கொலை செய்ய முடியும்?, ச்ச! எங்க பார்த்தாலும் ரவுடிங்க, எதுக்கு கொலை செஞ்சாங்களோ தெரியா?”
“ஓகே சேர். ஐ ஆம் வெரி சொரி. ஏற்கனவே நிறைய குடிச்சாச்சு வீடு போய் சேரனும், நாளைக்கு மிச்ச ஸ்கிரிப்ட வந்து எழுதி தாரேன், இந்த படம் எப்படியும் ஹிட் தான். பாய் சேர்” அவனும் பணிதீர்த்து விடைபெற்றான்.
“தங்க் யூ டா, போகும் போது அப்படியே கதவ மூடிட்டு போயிடு. குட் நைட்” கணேஷ் கையில் போத்தலுடன் எழும்பி தள்ளாடியபடி போத்தலை இலுப்பறையினுள் பதுக்கி வைத்துவிட்டு குளிக்க துவாலையுடன் சென்றான்.
‘டொக்! டொக்!” யாரொ கதவை தட்டினர்.
“யார்ரா அது இந்த டைம்ல” என்று முனுமுனுத்தவாறே கதவைத் திறந்தான்.
“ஹூ ஆர் யூ?” வினா எழுப்பினான்.
“ஹாய் சேர் நான் உங்களோட படங்களுக்கு ரொம்ப பெரிய நேயர் ஆனா ஒரு சின்ன வேதன… நீங்க இப்படி ஒருத்தரா இருப்பீங்க என்டு எதிர்பார்க்கல” அவன் உரைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன் கணேஷின் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.
“ஆஆஆஆஆ!!!…(கீழே விழுந்து அலறினான்) ஏன்டா குத்தினாய்?”
“நீங்க ஏன் சேர் என்னோட இல்லத்தரசிய தற்கொலை பண்ண வச்சீங்க?. அவ பாட்டுக்கு வந்து கடிதம் எழுதி வைச்சிட்டு குதிச்சிட்டா. ஹீரோயின் செலக்செனுக்கு போரேன் என்டு சொன்னா வேலை முடிஞ்சு வீட்ட போய் பார்த்தா அவ எழுதின காகிதமும் ஒரு பிணமும் மட்டும் தான் கிடந்திச்சு(அழுகை அணைகடந்து பாய்கிறது), ஒருத்தன் இல்ல உன்னோட பிரெண்ட்ஸ் 2 பேர் வேற இல்ல!” என்று கதறியவாறு கத்தியை திருகி மீண்டும் பாய்ச்சினான்.