சென்னையில் 24 மணி நேரமும் சூரியன்





காலை 6 மணியளவில், சென்னையின் மேயருக்கு வான் கண்ணாடிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஒரு அவசர பிரஸ் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார்.
8 மணிக்கு பிரஸ் மீட்டிங்கில் பேசிய மேயர் சென்னை சந்திக்கவிருக்கும் பிரச்சனையை விவரித்தார். “சென்னை மாநகருக்கு மேலே வானில் ஐந்து மைல் தொலைவில் நிறுவப்பட்டிருக்கும் மாபெரும் கண்ணாடிகள் மூலம் நமது நகரம் கடந்த இருபது ஆண்டுகளாக சூரிய ஒளியை 24 மணி நேரமும் அனுபவித்து வருகிறது. நமது நகரத்தின் மேல் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் பெரும்பாலான இந்தக் கண்ணாடிகள் தீடீரென்று சேதமடைந்து விட்டன. இன்று மாலை சூரியன் மறையும் போது இது நம் நகரத்தை இருளில் ஆழ்த்தும். உலகில் வேறு எந்த நகரமும் இந்த கதியை இதுவரை சந்தித்ததில்லை. உடனடியாக கண்ணாடிகளைப் பழுது பார்த்து மாலைக்குள் இந்த பிரச்சனையை தீர்க்குமாறு நான் ஆணை பிறப்பித்திருக்கிறேன்.”

பேசி விட்டு, நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் அறையை விட்டு வெளியேறினார் மேயர்.
மதியம் 12 மணிக்கு துணை மேயர் மேயரின் அறைக்குள் அவசர அவசரமாக நுழைந்தார். “சார், இந்தக் கண்ணாடிகளை ரிப்பேர் செய்வது விஷயமாக…” என்று இழுத்தார்.
“என்ன, சொல்லுங்கள். ரிப்பேர்க்கு எல்லாம் ஏற்பாடு செய்தாய்கி விட்டதல்லவா?”
“கொஞ்சம் மெதுவாக ரிப்பேர் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஒன்றும் அவசரப்படத் தேவையில்லை, சார்.”
“என்னய்யா சொல்கிறீர்கள்? இன்னும் ஏழு மணி நேரத்தில் சென்னை இருளில் மூழ்கப் போகிறது. அந்த அவசரம் புரியவில்லையா?”
துணை மேயர் அறையின் கதவைச் சாத்தி விட்டு வந்தார். பின் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “சார், கடந்த இரண்டு மணி நேரத்தில் இந்த கண்ணாடி விஷயம் உலகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவி விட்டது. பல்வேறு நாட்டு மக்கள் சென்னை நகருக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். விமானங்கள் நிரம்பி வழிகின்றன, ஹோட்டல்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. நட்சத்திரங்கள் நிறைந்த அழகான இரவு வானத்தைப் பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள். அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் சூரியனில்லாத ஒரு இரவைப் பார்த்ததே இல்லை.”
“ஓ, அப்படியா?”
“ஆமாம் சார். கண்ணாடி ரிப்பேரை சில நாட்கள் தாமதப்படுத்தினால், நமது நகரத்திற்கு கோடிக்கணக்கான சுற்றுலா டாலர்கள் கிடைக்கும்.”
காலையிலிருந்து இறுக்கமாக இருந்த மேயரின் முகத்தில் முதல் முறையாக புன் முறுவல் தோன்றியது.