செந்துகிற் சிறுமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2025
பார்வையிட்டோர்: 1,350 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிற் சிறுமியொருத்தி, இருந்தாள். அவ ளுக்கு அவளுடைய பாட்டி சிவப்புநிறக் கம்பளித் துண்டு ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தாள். அத் துண்டை அச்சிறுமி எப்பொழுதும் தன் தலையிற் கட்டிக்கொண்டிருப்பாள். அதனால் அவளை ஊரார், “செந்துகிற் சிறுமி” என்றே அழைப்பார்கள். 

ஒருநாள் அவளுடைய தாய் அவளைக் கூப்பிட் டாள்; கூப்பிட்டு, “குழந்தாய்! உன் பாட்டியார் நோயாய் இருக்கிறார்களாம். நான் ஒரு கூடையிற் சில பழங்களும், மருந்தும் வைத்துத் தருகிறேன். அதை நீ உடனே எடுத்துக்கொண்டுபோய், அவர்களிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும். வழியில் பூவையோ காயையோ பார்க்கிறேனென்று பார்க்கக் கூடாது; யாருடனும் பேசிக்கொண்டும் காலங் கடத்தக்கூடாது; தெரியுமா !” என்று கூறினாள். 

செந்துகிலாள் கூடையைக் “கையில் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். வழியில் அவள் ஒரு சிறு காட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அக் காட்டிலோ எங்கும் பல நிறமான பூக்கள் பூத்திருந் தன. அவற்றின் அழகு அவள் கண்களைக் கவர்ந்தது. “ஏன் நாம் இவற்றிற்சிலவற்றைப்பறித்துக்கொண்டு போய் நம் பாட்டிக்குக் கொடுக்கக்கூடாது?” என்று அவள் கருதினாள்; தன் தாயார் பூவோ, காயோ ஒன்றும் பறிக்கக்கூடாதென்று எச்சரித்ததை மறந்து விட்டாள்; கூடையைக் கீழே வைத்துவிட்டு, கைக் கெட்டிய நீலநிறப் பூக்களைப் பறிக்கத் தொடங்கினாள். 

அப்பொழுது அங்கே ஓநாய் ஒன்று வந்தது. தனியே நின்றுகொண்டிருந்த சிறுமியை அது கண்டது. 

“யார் அது ! செந்துகிற் சிறுமியா? காலை வேளையில் எங்கே புறப்பட்டாய்?” என்று அது சிறுமியைக் கேட்டது. 

“என் பாட்டியார் நோயாயிருக்கிறார்கள். அவர்களுக்கு மருந்தும், பழமும் கொண்டு போகிறேன்,” என்று சிறுமி விடை கூறினாள். 

“யார்? உன் பாட்டியாரா? அவள் எங்கே இருக்கிறாள்?” என்று ஓநாய் கேட்டது. 

“இந்தக் காட்டின் தென்கோடியிலுள்ள சிறு வீட்டில்,” என்று சிறுமி விடை அளித்தாள். 

“ஓ, ஓ! அந்த வீடுதானா? எனக்கு அதைத் தெரியுமே. நான் கூட அங்கேதான் போகப் புறப்பட்டேன். நீ இந்த வழியாகவே போ! நான் சாலையைச் சுற்றிக்கொண்டு வருகிறேன். யார் தான் முதலில் போய்ச் சேருகிறார்கள் பார்க்கலாம்!” என்று ஓநாய் கூறிற்று. 

அன்பு கனியப் பேசிய அந்த ஓநாயைப் பார்த்து, அவள் அச்சங் கொள்ளவில்லை. ஆகவே, “சரி பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு அவள் ஓட்டம் பிடித்தாள். ஓநாயும் சாலையைச் சுற்றிக்கொண்டு பாய்ந்து ஓடிற்று. 

ஓநாயின் பாய்ச்சல் எங்கே! சிறுமியின் ஓட்டம் எங்கே! ஒரு நொடிப்பொழுதில் ஓநாய் கிழவியின் வீட்டையடைந்தது; அடைந்து கதவைத் தட்டிற்று. “யார் அங்கே?” என்று பாட்டி உள்ளிருந்து வினவினாள். 

“நான் தான் செந்துகிற் சிறுமி !” என்றது வஞ்சக ஓநாய். 

“கண்ணே! வா உள்ளே !” என்று அழைத்தாள் பாட்டி. 

கதவைத் திறந்துகொண்டு ஓநாய் உள்ளே நுழைந்தது. அதன் காலடி ஓசையைக் கவனித்த பாட்டிக்கு உள்ளே வருவது சிறுமி அன்று எனத் தோற்றிற்று. ஓநாயாகத்தான் இருக்கவேண்டும் என அவள் எளிதில் ஊகித்துக் கொண்டாள்; சட்டெனக் கீழே இறங்கிக் கட்டிலின் அடியிற் புகுந்து மறைந்து கொண்டாள். 

அறையின் உள்ளே வந்த ஓநாய் சுற்று முற்றும் பார்த்தது; கிழவியைக் காணவில்லை; அவள் போர்வை மட்டும் கட்டிலின்மேற் கிடக்கக் கண்டது; உடனே அது கட்டிலின்மேற் பாய்ந்து படுத்துப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டது. 

சிறிது நேரத்திற் செந்துகிற் சிறுமியும் வந்து கதவைத் தட்டினாள். 

“யார் அங்கே?” என்று பாட்டி கேட்டதைப் போன்றே, ஓநாயும் கேட்டது. 

“நான் தான் செந்துகிற் சிறுமி,” என்றாள் குழந்தை. 

“கண்ணே! வா உள்ளே!” என்று அவ்வஞ்சக ஓநாய் கூப்பிட்டது. 

கூடையுடன் சிறுமி உள்ளே வந்தாள்; வந்தவள், “பாட்டி! உடம்பு எப்படி இருக்கிறது?” என்று வினவினாள். 

“அதை ஏன் கேட்கிறாய்? வரவர நோய் முற்றுகிறது,” என்று ஓநாய் மெலிந்த குரலில் கூறிற்று. 

தன் பாட்டி பேசுவதிலும், படுத்திருப்பதிலும் ஏதோ வேறுபாடு இருப்பதாகச் சிறுமிக்குத் தோன்றிற்று; எனினும், உடல்நலக் குறைவினால் அவ்வாறு இருக்கலாம் போலும் எனத் தனக்குள் கூறி, அவள் தன் மனதைத் தேற்றிக்கொண்டாள். 

“குழந்தாய்! கம்பளியை அவிழ்த்து வைக்கக் கூடாதா?” என்று மெல்லிய குரலிற்கேட்டது ஓநாய்.

கூடையைக் கீழே வைத்துவிட்டுக் கம்பளியைச் சிறுமி அவிழ்த்தாள். அவிழ்த்துக்கொண்டே, “பாட்டி உங்களுக்கு எவ்வளவு பெரிய கண்கள்” என்று அவள் வியப்புடன் கேட்டாள். 

“எல்லாம் உன் அழகைப் பார்க்கத்தான்.”

“காதுகள்கூடப் பெரியனவாக இருக்கின்றனவே!” 

“எல்லாம் உன் பேச்சைக் கேட்கத்தான்.”

“உங்களுக்கு ஏது இவ்வளவு நீண்ட பற்கள்?”

“எல்லாம் உன்னைப் பிடித்துத் தின்னத்தான்” என்று சொல்லிக் கொண்டே, ஓநாய் போர்வையை உதறிவிட்டுக் கீழே குதித்தது. அதே சமயத்தில், அறைக்கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே ஓடிவந்தார்; வந்தவர் தம் கையில் இருந்த கோடரியால், ஓநாயை ஒரே வெட்டாய் வெட்டி வீழ்த்தினார். 

வந்தவர் யார் தெரியுமா? அவர் செந்துகிற் சிறுமியின் தந்தையே! காலையில் விறகுவெட்ட அவர் காட்டிற்கு வந்திருந்தார். தம் குழந்தை ஓநா யுடன் பேசிக்கொண்டு செல்வதை அவர் தொலைவி லிருந்து பார்த்தார். பார்த்ததும் ஓநாயின் வஞ்சகக் கருத்தை அவர் உணர்ந்துகொண்டார்; உடனே விரைந்தோடி வந்து நல்ல சமயத்தில் ஓநாயைக் கொன்றார். 

கிழவியும் சிறுமியும் காப்பாற்றப்பட்டனர். சிறுமி தன் தந்தையுடன் பின்னர் வீடு சேர்ந்தாள். 

– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *