செந்தாமரை





(1948ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4. திலகம்

இளங்கோ என்னைவிட ஏழு வயது பெரியவன். கல்லூரியில் படித்துப் பி.ஏ. பட்டம் பெற்றவன். நல்ல அறிவு உடையவன். என்மேல் அன்பு உடையவன். அவன் உதவி இருந்திருந்தால் பேசாமல் சென்னைக்கே போய்ச் சேர்ந்துவிட்டிருப்பேன். ஆனால், பெரியம்மா இடம் கொடுத்திருக்க மாட்டாள். மறுபடியும் ஆர்க்காட்டிற்கே துரத்தியிருப்பாள். என்னால் இளங்கோவுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம்தான் ஏற்பட்டிருக்கும்.
இங்கே வந்ததனால் ஒன்றும் கெடுதி இல்லை. ஆனால், வந்தவேலை ஒன்றும் கை கூடவில்லை. பயிற்சிப் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு வாரத்திற்குமுன் வரத் தவறிவிட்டேன். கடிதத்தை எதிர்பார்த்திருந்தபடியால் தவறினேன். அதற்கும் அந்தச் சாமியார் குறுக்கே நிற்க வேண்டுமா? அந்தக் கடிதத்தை மறைத்துவிட்டதனால் என்னைக் காப்பாற்றிவிட்டதாக எண்ணி ஏமாந்துவிட்டார். இதுவும் நல்லெண்ணமா ?
இப்போது அடிக்கடி அம்மாவின் நினைவு வருகிறது. என்ன செய்வேன்? அந்தச் சாமியாருக்கு இனிமேல் அங்கே வேலை இருக்காது. அம்மாவின் பெயர் கெடாது. அம்மா என்னை நினைத்து அழுவாளோ? வந்தவர்களைக் கேட்டால் அழுவதில்லை என்கிறார்கள். சமையலும் செய்வதில்லையாம். மாமி வேளைக்குச் சோறு அனுப்பிவிடுகிறாளாம். அதைச் சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் இருக்கிறாளாம். என்ன வாழ்வு! இப்படியா முடிய வேண்டும் ?
இங்கே வந்ததும் பழைய சமையல் அறையே வந்து சேர்ந்ததே என்று வருத்தப்பட்டேன். சமையல் செய்வதைப் பற்றிக் கவலை இல்லை. அடுப்பங்கரைப் பூச்சியாய் உலகம் தெரியாமல் அறிவும் வளராமல் மங்கிக் கிடக்க வேண்டுமே என்றுதான் கவலையாக இருந்தது. வீட்டுக்கு ஒரு சமையல் அறை இருக்கும் உலகத்தில் வேறு வழி இல்லை. ஆனால், அறிவைச் சிறிதும் வளர்க்காமல் முதலிலிருந்தே அடக்கிவிட்டிருந்தால் நல்லது. அந்தப் பழமொழி, ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு’ என்பது பொருத்தம் தான். அடுப்பு ஊதுதலே வாழ்க்கை என்று எண்ணுகின்றவர்களுக்குப் படிப்பு இடையூறுதான் செய்யும்; ‘அடுப்பை விட்டு வெளியில் வந்து போ’ என்று படிப்புத் தூண்டும். அதனால்தான் படிப்புக்குத் தடை ஏற்படுத்தினார்கள்.
எப்படியோ நாளைக்கு இந்த அடுப்பினிடம் விடை பெறப்போகிறேன். சென்னைக்குப் போகும்படி இவர்களே ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
இவர்கள் எனக்கு நன்மையே செய்வார்கள் என்று முதலிலேயே தோன்றியது. அதன்படியே எல்லாம் நடந்துவந்தது. வீணாகப் போலீசுகாரரிடம் அகப்பட்டுக்கொள்ள இருந்தேன்; காப்பாற்றினார்கள்.
போலீசு என்று நினைத்தாலும் பயமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்த அம்மையார் சொன்னது பொய் அல்ல. கணவனும் மனைவியுமாக வந்து சத திரத்தில் தங்கினால், வாயற்ற அந்தக் கணவனை யார் என்று மருட்டிக் கேட்டு அடித்து இழுத்துக்கொண்டு போலீசு நிலையத்திற்குக் கொண்டுபோய் விடுவது, இன்னும் முரடர்கள் வருவது, அஞ்சிக் கண்ணீர் விட்டுக்கொண் டிருந்த அவளை மருட்டி மயக்கிக் கணவனிடம் சேர்ப்பதாகச் சொல்லிக் கொண்டுபோய் வற்யுறுத்திக் கெடுத்துவிடுவது- என்ன கொடுமை!
ஆனால், அவனும் கோழை, அவளும் கோழை. அவன் அவளையும் வரச்சொல்லிப் போலீசு நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். அவனாவது அவளாவது ஊரெல்லாம் கதறி உண்மையை அறிவித்திருக்க வேண்டும். இப்படி முன்பின் தெரியாத ஊருக்கு வந்தவள் என்னைப் போல் ஒரு பேனாக் கத்தியாவது கையில் கொண்டுவந்திருக்க வேண்டாவா? நெருக்கடியான நிலையில் பிறனுடைய உயிரையாவது போக்கியிருக்க வேண்டாவா? நான் கோழையா? என் உயிர் எனக்கு வெல்லமா?
இவ்வளவு வம்புக்கும் இடம் தராமல் காப்பாற்றினார்கள். என்னுடைய நல்ல வேளை – நான் வந்த மோட்டாரில் இவர்களும் உடன்வந்தார்கள். “நீ யார்” என்று கேட்ட போலீசுகாரனுக்குப் பதில் சொல்ல நான் வாய் திறக்குமுன், என்னுடைய தங்கை என்றார் இந்த அம்மையார். கணவனுக்கு ஏற்ற மனைவி; மனைவிக்கு ஏற்ற கணவன்.
என்ன உண்மையான மனம்! “என்மேல் உங்களுக்கு இரக்கம் வந்த காரணம் என்ன அம்மா?” என்று கேட்டதற்கு, தம்முடைய வரலாறு முழுதும் மறைக்காமல் உள்ளவாறு சொல்லிவிட்டாரே! இதுவே பெருந்தன்மை அல்லவா?
“அப்பாவின் பெயர் தெரியாதாம்; என் தாய் வேலைக்காரியாக ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது பிறந்தேனாம்” என்று சொன்ன ஒருவனுக்கு மனமிரங்கி, அவனுடைய உண்மை ஒழுக்கத்தைப் போற்றி ஒரு முனிவர் உபதேசம் செய்தாராம்.
இந்த அம்மையார் எவ்வளவு உயர்ந்த பண்பாடு பெற்றவர்! இல்லையானால், “நான் பரத்தையர் குலத்தில் பிறந்தவள்” என்று மறைக்காமல் சொல்ல முடியுமா? மூன்று தலைமுறைக்கு முன்னே நான்காம் பாட்டி பரத்தையாக வாழ்ந்தாளாம். அவளுடைய மகள் ஒருத்தனோடு வாழ்ந்து காலம் கழித்தாளாம்.. அவளுடைய மகள் நடனம் கற்பித்துக்கொண்டு வாழ்ந்துவந்தபோது ஒருவனை மணஞ் செய்துகொண் டாளாம். இந்த வாழ்க்கையில் என்ன குறை? இரண்டு தலைமுறையாக முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள்.
எல்லாவற்றையும் மறந்துவிடலாம். ஒன்று இரக்கம், மற்றொன்று உண்மை. இந்த இரண்டு பண்பு உடையவர்களைத் தாழ்ந்த குலத்தார் என்று நினைப்பதும் பாவம் அல்லவா?
பக்கத்து வீட்டு மாடிமேல் உலாவுகின்றானே தொப்பையன், அவன் தாழ்ந்த குலத்தான். பெரிய பணக்காரனாம்; இரண்டு மனைவியராம்; ஐந்து குழந்தைகளாம்; ஊரில் பெரிய மனிதனாம். ஆனால், சுருட்டைப் பிடித்துப் புகையை என்னை நோக்கி விடுவதும், என்னைத் திருட்டுப் பார்வை பார்ப்பதும், அடிக்கடி என்னை நோக்கிக் கனைப்பதும், குரங்கு போல் தகாதன செய்வதும் என்னை மயக்குவதற்கா? இந்தப் பணக்காரக் குரங்குகளை நாடிப் பணம் சேர்க்க எண்ணி யிருந்தால், சித்தூர்ப் பள்ளிக்கூடத்தைத் தேடி வந்திருக்க மாட்டேனே!
இந்தப் பாவிப் பயல் இங்கே வந்து சேர்ந்தான். அங்கே சாமியார்; இங்கே இரண்டு பெண்டாட்டிக்காரன். அவனைப் பற்றி இந்த அம்மையாரிடம் சொல்வதில் பயனில்லை. ஒரு முறை சொன்னபோதே குறிப்பைத் தெரிந்துகொண்டு, அவன் அப்படித்தான் செய்வான்; பார்த்துப் பார்த்து விட்டுவிட்டேன். நீ அவன் சொல்வதையும் செய்வதையும் கவனிக்காதது போல் இருந்துவிடு. என்னை ஆயிரம் முறை திட்டியிருப்பான். அவனுக்கு இணங்காததுதான் காரணம். கிழக்குப் பக்கத்து வீட்டுக்காரி இப்போது இவனுக்கு மூன்றாம் பெண்டாட்டி ஆகிவிட்டாள். அவளுடைய கணவனுக்கும் தெரியும். போகட்டும் என்று இடம் கொடுத்துச் சும்மா இருக்கிறான். செல்வம் இருக்கிறது; செல்வாக்கும் இருக்கிறது. வக்கீல்கள் அவன் பக்கம்; வம்பர்களும் அவன்பக்கம். என்னைப் பார்க்கும் போதெல்லாம் யாரையோ திட்டுவது போல் ‘தேவடியாள் தேவடியாள்’ என்று கூவுவான். அதற்கும் சும்மா இருந்துவருகிறேன்” என்றார்.
“இதைவிட வேறு வீடு பார்த்துக்கொண்டு போய்விடலாம்” என்றேன். அந்த அம்மையார் உருக்கமாகப் பதில் சொன்னார்: “அவன் வேண்டும் என்றே அதன் பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கி அங்கே பொழுது போக்க வருவான். நான் என்ன அறியாதவளா? கணவனோடு வாழ்ந்து பண்பட்டவள் நான். என்னை இவன் என்ன செய்யமுடியும்? உன்னைப் போன்றவர்கள் விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும். அதனால்தான் தங்கை செந்தாமரையை விடுமுறையிலும் இங்கே வரவழைக்காமல் பட்டணத்திலேயே விட்டிருக்கிறோம்” என்றார்.
என்னைச் சென்னைக்கு அனுப்புவதற்கும் இது தான் காரணமோ என்று எண்ணினேன். இருக்கலாம்; என்னைத் தொல்லைக்கு ஆளாக்காமல் காப்பாற்ற எண்ணியே செந்தாமரைக்குத் துணையாக அனுப்ப முடிவு செய்திருக்கலாம். இங்கே இவர்களுக்குச் சமையல் செய்து போடுவதற்குப் பதிலாக, அங்கே செந்தாமரைக்கும் திருநாதனுக்கும் சமையல் செய்து போட வேண்டும்.ஆனால் பட்டணம் பெரிய ஊர்; நல்லவர்கள் பலர் இருப்பார்கள். இளங்கோவை அங்கே பார்த் தாலும் பார்க்கலாம். எப்படியோ நடப்பது நடக்கட்டும் .
திருநாதன் இந்த அம்மையார் போலவே அமைதியாக இருக்கிறார். இந்தக் காலத்தில் கல்லூரியில் எம்.ஏ.படிப்பவர்கள் இப்படி அமைதியாக இருப்பது. வியப்பாகத்தான் இருக்கிறது. இரண்டு பெண்டாட்டிக்காரர் இப்படி அலையும் உலகத்திலேயே திருநாதனைப் போல் திருமணம் ஆகாதவர்களும் இருக்கிறார்கள். திருநாதன் தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டேன் என்கிறார். அது நல்ல வழக்கம்தான். ஆனால், தமக்கையாருக்காகப் பயந்து அப்படி இருக்கிறாரோ, என்னவோ தெரியவில்லை.
திருநாதனோடு பட்டணம் போவதை எண்ணினால் மனம் ஊசலாடுகிறது. முன்பின் தெரியாத ஒருவருடன் நாளைக்கு ரயிலில் புதிய ஊருக்குப் போகப் போகிறேன். திக்கற்ற என்னைக் காப்பாற்றிய அம்மையாரின குணத்தில் ஒரு பாதியாவது அவருடன் பிறந்த தம்பிக்கு இருக்காதா? ஆர்க்காட்டிலிருந்து சித்தூருக்குத் தனியாக வந்தேன். இப்போதும் சித்தூரிலிருந்து சென்னைக்குத் தனியாகப் போவதாக எண்ணிக்கொள்ளலாம்; போய்ப் பார்க்கலாம். அவருடைய முகத்தில் அறிவு விளங்குவது போலவே அன்பும் விளங்குகிறது. இப்படிப்பட்டவர் வாழ்க்கைப் பயணத்திற்கே துணை யாக வந்தாலும் நன்மைதானே! ஆனால், எம்.ஏ.படிக்கிற ஒருவர் பத்தாவது படித்த ஏழைப் பெண்ணை மணம் செய்துகொள்வாரா?
இவரோடு பட்டணம் போக வேண்டும். ஏதோ ஒரு வகைக்குழப்பம் நெஞ்சில் எழுகிறது. ஏன்?… இப்படியே ஆர்க்காட்டுக்குப் போய்விட்டால் அதைவிட நல்ல தல்லவா? தொப்பையனின் தொல்லைக்காகத்தானே பட்டணம் அனுப்புகிறார்கள்? நம் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டால்……
ஊருக்குத் திரும்பினால் மறுபடியும் துயரம், கல கம், குழப்பம் எல்லாம் தொடங்கிவிடும். அம்மாவுக்கு மாமி சோறு அனுப்புவது நின்றுவிடும். நான் சமைய லறைக்குப் போவேன். என்னைப் பார்க்கப் பார்க்க அம்மாவின் குணம் கெடும். சாமியார் வருவார். அப்புறம்…
அல்ல, அல்ல ; இவ்வளவும் நடக்கவே நடக்காது. என்னை முதலில் எந்த வீட்டிலும் சேர்க்கவேமாட்டார்களே! தெய்வமே !
ஆர்க்காட்டிலிருந்து என்னைத் தேடிக்கொண்டு வந்தவர்கள் நேராக எதிர்வீட்டிலாவது இந்த வீட்டிலாவது நுழைந்திருக்கக் கூடாதா? வர்ணம் தீட்டிய கம்பங்களையும் மாடியழகையும் கண்டு அந்தத் தொப்பையனுடைய வீட்டில் நுழைய வேண்டுமா? அவன் அதுதான் சமயமென்று வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்று தெரிகிறது. ஆர்க்காட்டு வியாபாரிகள் அவனைத்தான் நம்புவார்கள்.
முந்தாநேற்று ஆர்க்காட்டிலிருந்து வந்த வளை யல்காரன் சொன்ன தெல்லாம் உண்மையாக இருந் தால் எல்லாம் தொப்பையன் சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். இது தாசி வீடாமே, மெய்தானா” என்று வளையல்காரன் மெல்லக் கேட்டான். “உன் கெட்ட வேளை, நீ வேறு வீட்டுக்குப் போகாமல் இவர்களிடம் அகப்பட வேண்டுமா? சித்தூர் பேர்போன தம்மா. உன்னால் இவர்கள் பணம் சம்பாதிப்பார்களே அம்மா” என்று திரும்பித் திரும்பிப் பார்த்துப் பேசி னான்.வளையல்காரனுக்கு இவ்வளவு கதை எட்டியிருந் தால், தொப்பையன் சொல்லியனுப்பியது எவ்வளவு இருக்கும்?
மாமன் தேடிக்கொண்டு வந்தாராம். வந்தவர் அப் படியே போக வேண்டிய காரணம் என்ன? என் முகத் தைப் பார்க்கவும் மனம் இல்லாமல் அவ்வளவு தவறு செய்துவிட்டேனா?
ஆமாம். அவர்களுக்குப் பெரிய மானக் கேடாகத் தான் இருக்கும். பொதுமகளிரின் கூட்டத்தில் கலந்து வாழும் ஒருத்தியை எப்படித்தான் அணுக மனம் வரும்? யார் பொதுமகளிர்? இங்கே வந்த பிறகு இந் தப் பதினைந்து நாளில் நான் பழகிய ஆண் ஒருவரே. அவரே அம்மையாரின் கணவர். அவரைப் போல் ஒழுங்காக வாழ்கின்ற ஒருவரைப் பார்ப்பதும் அருமை யாயிற்றே. நேற்று வந்தாரே திருநாதன். அவரைப் பற்றி மாசு கூற முடியுமா?
இவர்களின் பெருமையை அறியமுடியாத காமுகன் தொப்பையன் ; அவன் என் வாழ்க்கையைக் கெடுத்தேவிட்டான். நான் ஆர்க்காட்டுக்குப் போக முடியாதபடி பழி சுமத்திப் பரப்பிவிட்டான். அதுவும் நன்மையாக முடிந்தாலும் முடியும்; பார்ப்பேன்.
“உன்னைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத் தால் இந்தத் தெருவில் வீடு வீடாய்ப் பார்த்துக் கொண்டே வந்தேன். என்ன அம்மா இப்படி அவசரப் பட்டு வந்தாயே! உன் தலைவிதி! பெரிய குடும்பம்! கைவிட்டுவிட்டாய்! தலைவிதி அம்மா, தலைவிதி என்று வளையல்காரன் கண்ணீர் விட்டானே! இனி மேல் யாரும் என்னைத் தேடி வரமாட்டார்கள், வந்தா லும் அழைத்துப்போகமாட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.ஆனால் இளங்கோ என்னை மறக்கமாட் டான். என் குணம் உறுதி எல்லாம் அவனுக்குத் தெரியும். அவன் வருவான், அல்லது, நானே பட்டணத்தில் பார்த்தாலும் பார்க்கலாம்.
5. மருதப்பன்
மூன்றே நாளில் இவ்வளவு சலிப்புத் தோன்றி விட்டது. இன்னும் நான்கு நாள் இப்படிக் கழிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால். நண்பர்கள் எப்படியோ கூடிவிடுவார்கள். இல்லையான லும் இளங்கோ ஒருவனாவது என்னோடு நாள் முழுதும் இருப்பான். ஆனால், மற்றநாட்களை எப்படிக் கழிப்பது?’
வேப்பேரிக்குப் போய் இளங்கோவின் வீட்டிலேயே இந்த நான்கு நாட்களும் கழித்துவந்தால் என்ன ? அங்கே அவனுடைய தாய் சொல்லும் குறைகளைக் கேட்பதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்.குறை தீரப் போனால் பெருங் குறை வந்து நிற்கும். அவனுக் குத் திருமணமான பிறகு அவனும் அவனுடைய மனை வியுமாக வாழும்போது போகலாம். அந்த வாழ்க்கை வேறு. அது உரிமைவாழ்க்கை. இது மகன் தாயை வழிபடும் அன்புவாழ்க்கை.
நேற்று, புதிய கருத்துக்கள் அமைந்த பாட்டுக் கள் எழுதினேன். அப்படிப்பட்ட பாட்டுக்களை எழுத முடியும் என்று நானே நம்ப முடியவில்லை. இன்று என்னை அறியாமல் ஒரு கதை மனத்தில் உருவாகிக் கொண்டுவருகிறது. இன்று பொழுது போவதற்குள் இந்தக் கதை முற்றுப் பெறும். இர ரண்டையும் தென்றல்’ வார மலரில் வெளியிடவேண்டும். பாட்டை என் பெயரால்தான் வெளியிட வேண்டும். கதையை அவளுடைய பெயரால் வெளியிடவேண்டும்.
அவள் வீட்டிலிருந்தால் நேற்றுப் பாட்டு வந்திருக்காது. இன்று கதையும் வராது. அவளுடைய பேச்சும் நடையும் பார்வையும் அவ்வப்போது புதுமை விருந்து அளித்துக்கொண்டிருக்கும். கற்பனை யுலகம் என் வீடாகவே விளங்கும்போது, எனக்கு வேறு கற்பனை எதற்காக ? உயிருள்ள பதுமையின் முன்னே பாட்டும் கதையும் இடம்பெற முடியுமா ? சூரியன் இல் லாதபோது, வானம் இருண்டு விளங்கும்போது, நட்சத்திரங்கள் மினுக் மினுக்கென்று ஒளிவிடலாம். அவளு டைய குன்றாத புதுமை ஒளி இல்லாத போது, என் இருண்ட உள்ளத்தில் பாட்டும் கதையும் ஒளி வீசுகின்றன.
“செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி ” என்று அந்தப் புலவர் பாடினாரே, அதுவும் என்னைப் போல மனைவியைப் பிரிந்து எண்ணிக்கொண்டிருந்தபோது பாடிய பாட்டாக இருக்க வேண்டும். பாலைத்திணைப் பாட்டெல்லாம் அப்படிப்பட்ட மனத்தில்தான் பிறந்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், புலவர்கள் இந்த வாழ்க்கையை நன்றாகக் கண்டவர்கள் என்று தான் விளங்குகிறது.
ஆங்கிலம் முதலான மொழிகளிலும் காதலியை இழந்த புலவர்களும், பிரிந்த புலவர்களும் விழுப்பமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். டாண்டே. கீட்ஸ் போலானவர்கள் அப்படித்தான். சிறந்த பாட்டுக்களுக்குக் காரணம். யைப் பெற முடியாத ஏமாற்றம் என்று சொல்லுகிறார்கள்.
ஆகவே, வாழ்க்கையில் ஒரு சூரியன் வேண்டும். அந்தச் சூரியன் அடிக்கடி மறைய வேண்டும். அப் போது விண்மீன்கள் தோன்றி ஒளிவிட வேண்டும். உள்ளத்தில் பகலாக இருந்தால் காதல் ; இரவாக இருந்தால் காவியம். இப்போது என் உள்ளத்திற்கு இராக் காலமோ!
என்னைவிடக் காதல் குறைந்தவள் என்று அவளைப் பற்றி எண்ணியிருந்தேன். அது தவறுதான். அன்று காலையிலிருந்து மாலை வரைக்கும் முப்பது முறை என் னிடம் வந்தாள். முப்பது முறை மேசைமேல் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு என்னைப் பார்த்துக் காண்டு நின்றாள். இரண்டுமுறைதான் “போய்விட்டு வரட்டுமா?” என்றாள். சமையலறையில் இருக்கும் போது அடிக்கடி அதை விட்டு என்னுடைய அறையை நோக்கி வந்து வந்து போனாள். ‘ஒரு வாரம் பிரிந்திருக்கப் போகிறோம்’ என்ற உணர்வு அவளை அப்படி அலைத்திருக்கிறது. வாயினால் சொல்ல முடியாத உணர்வு மிகுதிதான் காரணம்.
நான் எங்காவது ஊருக்குப் போவதாக இருந்தால், யந்திரம் போல் கடமைகளைச் செய்துவிட்டுச் சொல்லாமல் நகர்ந்துவிடுகிறேன். அவளால் அது முடியவில்லை. பெண்மனம் பேதை மனம். அன்று குழந்தையிடமும் அவள் அதிகமாகக் கொஞ்சவில்லை. காரணம் இல்லாமல் அடிக்கடி என் மேசைப் பக்கம் வந்து நின்றாள். சும்மா நிற்காமல் கைகளை மேசை மேல் ஊன்றிக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டே நின்றாள். ஐம்பது அறுபது முறை நின்றிருப்பாள். அப்போது அவளுடைய மனத்தை உணர்ந்துதெரிந்து கொள்ளாமல் இருந்தேன்.
விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிக்கொண்டு போகிறது. ஆனாலும் பயன் இல்லை. மனத்தில் தோன்றும் துன்ப அலைகளையும் இன்ப அலைகளையும் அளந்து கூறும் ஒரு கருவியை இன்னும் கண்டு பிடிக்கவேவில்லை; கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியும் காணோம்.
எழுமூர் ரயில்நிலையத்தில் கால் வைத்தவுடனே என்னைப் பார்ப்பதையும் விட்டுவிட்டாள்.ரயிலில் உட்கார்ந்த பிறகு, “அப்பாவுக்குச் சொல்லு. வணக்கம் சொல்லு” என்று குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தாளே தவிர, என்னிடம் ஒன்றுமே பேசவில்லை. அந்தப் பையன் அவளிடம் இருக்காமல், வெளியே நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்துசேர்ந்தான். தூக்கிக்கொண்டு அம்மாவைக் காட்டச்சொன்னான். அவனுக்கு இந்தக் கவலை கொஞ்சமும் இல்லை. அவன் குழந்தை. அழத் தெரியும். அதன் மூலமாக அப்பாவையும் அம்மாவையும் ஆட்டிவைக்கத் தெரியும். வேலை வாங்கத் தெரியும். சிரிக்கத் தெரியும். எங்களை யும் சிரிக்கவைக்கத் தெரியும். இவ்வளவுதான்.
குழந்தையை அவளிடம் கொடுக்கப் போனபோது கண்ணைத் துடைத்துக்கொண்டிருந்தாள். குதிரை வண்டியில் வந்தபோது ஏதோ தூசு விழுந்துவிட்டது என்று பொய்யும் சொன்னாள். ரயில் நகர்ந்தபோது உண்மை விளங்கிவிட்டது. முத்து முத்தாய்க் கண்ணீர் விட்டாள். நான் மூச்சை இழுத்துப் பிடித்து அடக்கிக்கொண்டு கண்ணீரை ஒரு பாதி தடுத்து விட்டு வெளியே வந்து சேர்ந்தேன்.
இதற்குமுன் இப்படிப்பட்ட காட்சியைக் கண்டதே இல்லை. தாய்வீட்டிலிருந்து வரும்போது கண்ணீர் கலங்கி அழுது வருவாள்; ‘அடி பைத்தியமே’ என்று சொல்லித் திட்டிக்கொண்டு அழைத்துவருவேன். இங்கிருந்து தாய்வீட்டுக்குப் போவதென்றால் ஆனந்தமாய்ப் புறப்படுவாள். இப்போது ஏடு திரும்பிவிட் டது. அங்கிருந்து வரும்போது ஆனந்தமாக வருகிறாள். இங்கிருந்து போகும்போது கலங்குகிறாள்; என்னையும் கலங்கவைக்கிறாள்.
நான்கு ஆண்டுகளில் இந்த மாறுதல் ஏற்பட்டு விட்டது. மணப்பந்தலில் உட்கார்ந்தபோது காதலும் இல்லை, களிமண்ணும் இல்லை. “எப்படியோ ஏமாந்து விட்டேனே! காதலைப் பற்றிக் கணக்கற்ற புத்தகங்கள் கற்றேன். கடைசியில் பொம்மைக் கலியாணத்திற்கு ஆளாகிவிட்டேன்; ஏமாந்தேன்” என்று எண்ணிக்கொண்டே அவள் கழுத்தில் கயிறு கட்டினேன். ஒரு கயிறு அந்த நாளில் எனக்கும் அவளுக்கும் இடையே இருந்தது. உலகத்திற்கு அஞ்சி வாழ்க்கையைத் தொடங்கினோம். அம்மாவும் அத்தானும் காரணமாக இருந்து திருமணம் முடித்தார்கள்.
இப்போது அந்தக் கயிற்றை நான் நினைப்பதே இல்லை. அவள் நினைக்கிறாளோ என்னவோ தெரியாது. ஆனால் இன்று எனக்கும் அவளுக்கும் இடையில் இருப்பவன் அருள் – என் மகன் – அவளுடைய குழந்தை – எங்கள் உயிர்.
காதலர்களால் அன்பான குழந்தை வாழ்கிறது. இது ஏட்டு உலகம். அன்பான குழந்தையால் காதல் வாழ்கின்றது. இது எங்கள் உலகம்.
இந்த ரேடியோ இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. குழந்தை இருந்தால் இதை நூறு முறை திருப்பச் சொல்வான். நான் திருப்பாமல் இருந்தால் அவனுடைய சிறு கைகளால், விரல்கொழுந்துகளால் ஆனவரைக்கும் முறுக்கிவிடுவான்.
முந்தா நேற்று மாலை, ‘தென்றலிலிருந்து வீட்டுக்கு வந்தபோது பக்கத்துத் தெருவில் ‘அப்பா’ என்ற ஒலிகேட்டு அப்படியே நின்றுவிட்டேன். சுற்றிப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த உருவம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு குழந்தைதான். ‘அப்பா’ என்று தான் அழைத்தது. ஆனால் என் கண் எதிர்பார்த்த உருவம் அல்ல என்று தெரிந்ததும், என் நெஞ்சே பிளந்தாற் போல் ஆய்விட்டது. ஏதோ ஒரு நடுக்கம் இதயத்தில் காணப்பட்டது. உடல் வன்மையில் – பாதிக்குமேல் – முக்கால் பங்கும் – திடீரெனப் போய் விட்டாற் போல் ஆய்விட்டது. எலும்புருவம் நடப்பது போல் நடந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்தேன்.
அதுவும் ஒரு குழந்தைதானே! அந்தக் குரலைக் கேட்டு ஏன் மகிழ்ச்சி அடையக் கூடாது? திருமணத்திற்கு முன்னே எந்தக் குழந்தையின் பேச்சையும் கேட்டு இன்புற்றேன் அல்லவா? இந்தப் பையன் என் மனத்தைக் கொள்ளை கொண்டபிறகு, மற்றக் குழந்தைகளிடம் மனம் செல்லவில்லை. குடும்ப வாழ்க்கை தன்னலத்தை வளர்த்துவிட்டதா? ‘அப்பா’ என்ற அந்தத் தெருக்குழந்தையை மறுபடியும் பார்ப்பதாக நினைத்தாலும் நெஞ்சம் பகீர் என்கிறதே!
என் குழந்தை தவிர வேறு குழந்தையைக் கண்டாலும் குரல் கேட்டாலும் ஆறுதல் இல்லை, பொழுது போக்கும் இல்லை. என் குழந்தை வீட்டில் இருக்கும் போது மற்றக் குழந்தையோடு ஓரளவு கொஞ்சவும் முடிகிறது.ஆனால் என் குழந்தை வெளியூர்க்குப் போயிருக்கும்போது மற்றக் குழந்தையைக் கண்ணால் கண்டாலும் துன்பம் அல்லவா தோன்றுகிறது? மற்றக் குழந்தையோடு பழகவும் மனமில்லையே!
இதுதான் தூய்மையான அன்பா? அப்படியானால் காதலும் தூய்மையான அன்புதானே! காதலில் இந்தக் கணக்கு இல்லையா? அவள் வீட்டில் இருக்கும் போது மற்றப் பெண்களைப் பற்றி மனம் எண்ணுவதே இல்லை; பார்த்தாலும் உடனே என் கடமைகளைச் செய்துகொண்டு மறந்துவிடுகின்றேன். ஆனால் அவள் ஊருக்குப் போயிருக்கும்போது கண் மற்றப் பெண்களைப் பார்க்க விரும்புகின்றது; மனமும் நாட விரும்புகிறது. மற்றப் பெண்களின் பேச்சைக் கேட்பதில் பொழுதுபோக்கும் இருக்கின்றது. தவிர முன் ஒருமுறை எல்லை கடந்து போய்விடவும் இருந்தேன். எப்படியோ நெருக்கடியிலிருந்து தப்பி வந்துவிட்டேன். ஆனால் நேற்று இரண்டாவது அனுபவம். அந்தப்பெண் என் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டாளே. ஏதோ நாகரிகம் என்று ஒன்று இருக்கின்றதே. அதுதான் காப்பாற்றியதோ, அல்லது துணைவி மேல் நாளுக்கு நாள் வளர்ந்த காதல்தான் என்னைக் காப்பாற்றியதோ, தெரியவில்லை. சே! அதை மறுபடியும் நினைக்கக் கூடாது.
இத்தனைக்கும் இடையில் துணைவியின் நினைவும் அடிக்கடி வருகிறது. இப்படி மற்றப் பெண்களின் நினைவும் துணைவியின் நினைவும் மாறிமாறி வருமானால் இது தூய்மையான காதலா? குழந்தையைப் பொறுத்த வரையில் அந்தத் தூய்மையான அன்பே உள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறதே! மற்றக் குழந்தைகளுக்கு என் உள்ளத்தில் இடமே இல்லையே!
ஒருகால் இப்படி இருக்கலாம். குழந்தைமேல் அன்பு முழுமை அடைந்துவிட்டது. ஆனால் என் காதல் இன்னும் முழுமை அடையாதிருக்கலாம். அதனால் தான் நேற்று மாலை அந்தப் பெண்ணைக் கண்டு உடன்சென்றபோது மனம் அப்படி நெகிழ்ந்து உருகியது. இது காதலின் குறையா?
துணைவியிடம எள்ளளவும் அன்பு குறைவு என்று சொல்ல முடியாதே! ஆனாலும் அந்தப் பெண்ணைக் கண்டது முதல் இரண்டுமணி நேரம் துணைவியை மறந்துவிட்டேன்; துறந்துவிட்டேன் என்றும் சொல்லலாம். இந்தக் கதையே மறுபடியும் வந்து விட்டதா? சே-வேண்டா.
துணைவி என்னை விரும்புவதைவிட மிகுதியாக நான் அவளை விரும்பி வாழ்ந்துவருகிறேன். இது உண்மையான காதல்தான். அவள் வீட்டில் இல்லாத காரணத்தால் என் வாழ்க்கையே பாலைவனம் போல் ஆகிவிட்டதே. இதுவே நல்ல சான்று அல்லவா? தவிர, நேற்று அந்தப் பெட்டிக் கடையருகே போய்க் காசையும் கையில் எடுத்துக்கொண்டேன். சிகரெட் வாங்கப் போனவன் அங்கே பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்துவிட்டு நெருப்புப் பெட்டி ஒன்று கேட்டு வாங்கி வந்தேன். இரண்டு ஆண்டுகளாகச் சிகரெட் மறந்திருந்த நான், என் சோர்வைப் போக்குவதற்காக மறுபடியும் அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளத் துணிந்தேன். அதையும் விட்டு நிலையத்திற்குச் சென்றால், ஆசிரியர் பொடி போடும்போதெல்லாம் பொடியாவது கேட்கலாமா என்று எண்ணினேன். எட்டு முறை காப்பி குடித்தும் எள்ளளவும் சோர்வு போகவில்லை. என் காதல் உண்மையானது என்பதற்கு இவ்வளவு போதாதா?
இப்படியே எண்ணிக்கொண்டிருந்தபோது மணி எட்டு அடித்தது. எழுந்து ஓட்டலுக்குச் சென்றேன். சூளைத் தொழிற்சாலையைவிட ஓட்டல் எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சூளைத் தொழிற்சாலையில் யந்திரங்களும் மனிதர்களும் கலந்து வாழ்கிறார்கள். இங்கும் அப்படித்தான். ஆனால் ஓட்டலில் பரிமாறுகிற ஆட்களெல்லாம் யந்திரங்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். அந்த யந்திரங்கள வருகின்றன; “எல்லாம் சூடாக இருக்கிறது; என்ன வேண்டும்” என்று ஒரே மந்திரத்தை ஒதுகின்றன. பிறகு நேராகப் போகின்றன. நேராக வருகின்றன. மேசைப்பக்கத்தில் நின்றதும் கைகளை நீட்டுகின்றன; தட்டுகள் வெளியே வருகின்றன. அவற்றில் சிற்றுண்டி காண்கின்றோம். சென்ட்ரல் ஸ்டேஷனில் பிளாட்பாரம் டிக்கட் வாங்குவதற்கும் இதற்கும் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. போதும், போதும்! மூன்று நாளில் சலித்துவிட்டேன். யாராவது நண்பரை அழைத்துக்கொண்டு போனாலும் அவரோடு பேசிக்கொண்டே உண்ணலாம். அந்தப் பரிமாறும் யந்திரங்களை மறந்துவிடலாம். நுங்கம்பாககத்தில் நான் நிலையாக இருந்தும் இங்கே எனக்கு நண்பர் ஒருவரும் இல்லை. நண்பர்கள் வேப்பேரியிலும் தியாகராயநகரிலும் இருக்கின்றார்கள். இதுவும் ஒரு வகை நாகரிகம்; தெருவில் உள்ளவர்களைத் தெரிந்து கொள்ளாமல் அயலூரில் உறவாடுவதும் ஒரு நாகரிகம்!
எதிர்காலத்தில் வாழ்க்கையே யந்திர மயமாக மாறிவிடுமா? எல்லாம் சூளைதானா? வாய்க்கு எவ்வளவு சுவை கொடுத்தாலும் ஓட்டல் வாழ்க்கை மனத்திற்குச் சுவையாக இல்லையே! காதல் இல்லாத குடும்பங்களும் இப்படித்தானோ! உடம்பு என்னும் அளவில் இன்பமும், உள்ளம் என்னும் அளவில் துன்பமும் இருக்குமோ?
சூளைத் தொழிற்சாலையில் கொடுமை! மனிதன் இரும்போடும் பஞ்சோடும் பழக வேண்டும். ஆனால் ஓட்டல் தொழிலாளிகள் உணவுப் பொருளோடும் உண்ணும் மனிதர்களோடும் பழகுகிறார்கள். உண்கின்ற மனிதர்கள் பலர் பலவகையாகப் பல இடங்களிலிருந்து பலவகைப் பேச்சும் பலவகை எண்ணமும் உடையவர்களாய் வருகிறார்கள். ஆகையால் ஓட்டல் தொழிலாளியின் வாழ்வு பள்ளிக்கூட ஆசிரியர் வாழ்வு போல் நல்ல வாழ்வுதான்.
சிற்றுண்டி முடிந்ததும் பழையபடி வீடும், அந்த வெறுமையான அறையும், உயிரற்ற ரேடியோவும் வந்து சேர்ந்தன. நாற்காலியில் சாய்ந்துகொண்டே காலைச் செய்தித்தாளைப் பிரித்துப் பார்த்தேன்.பழையபடி அங்கங்கே நடக்கும் குழப்பங்கள் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. மேடையில் மார்தட்டிப் பேசும் பேச்சுக்களுக்கும் எதிர்க்கட்சியாரைத் தாக்கும் தாக்குதல்களுக்கும் நிறைய இடம் தந்திருந்தார்கள். இந்தப் பத்திரிகையுலகமும் யந்திரம் போல் ஆகிவிட்டது என்று வெறுப்போடு மேசைமேல் எறிந்தேன்.
இந்தப் புறமாகத் திரும்பிக் கையை நீட்டித் திமிர் விட்டேன்.இப்புறம் நீண்டு சென்ற கை என்னை அறியாமல் ரேடியோவைத் திருப்பிவிட்டது. திருச்சி நிலையத்தில் பாட்டு அந்த நிகழ்ச்சி. இசைக்கருவியாக ஆர்மோனியம் கேட்டது. இந்த ஆர்மோனியம் என் வீட்டில் நுழையக் கூடாது என்று அவளுக்குத் தடையுத்தரவு பிறப்பித்த ஆட்சிமுறை நினைவுக்கு வந்தது.பெருமூச்சு விட்டேன். பாரதியாரை நினைத்தேன். அவரால் நான் கெட்டதாக எண்ணினேன். என்னுடைய ஆட்சியின் கொடுமையை எல்லாம் எப்படியோ மறந்துவிட்டாள், எனக்காகக் கண்ணீர் விடுகின்றாள், எனக்காக வாழ்கின்றாள், என்ன அன்பு என்று உருகினேன்.
“இதுவரையில் பாடியவர்…” என்று அறிவிப்பாளரின் குரல் கேட்டது. போதும், போதும் என்று ரேடியோவைத் திருப்பி நிறுத்திவிட்டேன். அகநானூற்றையாவது படிக்கலாம் என்று அந்தப் புத்தகத்தை எடுத்து அப்படியே திறந்தேன்.
ஆதி மருதி போலப் பேதுற்று
இனைவேன் கொல்லோ
என்ற அடிகள் என் கண் எதிரே இருந்தன. ஆதி மருதி பைத்தியமானதை எண்ணினேன்.
காதல் முறிந்தால் அறிவே முறிந்து போகின்றது; பைத்தியம் பிடிக்கின்றது. உள்ளம் கெட்டு உணர்வு கெட்டு உடலும் கெடுகின்றது. காதலுக்கு இவ்வளவு ஆற்றலா? ஆம். மேனாட்டுக் கதையிலும் ஒபீலியா (Ophelia) அப்படித்தானே ஆனாள்? காதல் முறிவு பைத்தியம்; நெய்தல் திணை என்றால் வாழ்வின் முடிவு. காதலுக்கு இவ்வளவு ஆற்றலா?
குழந்தையன்பு முறிவதில்லையா? குழந்தை இறந்த பின் வாழும் தாய் தந்தையர் உலகத்தில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையே!
குழந்தையன்பு முறிந்தால் உள்ளம் கெடுவதில்லை. உணர்வு கெடுவதில்லை; உடல் கெடுவதில்லை. உள்ளத்தில் சிறு மாறுதல் நிகழ்கின்றது; சில நாட்களே அந்த மாறுதல். பிறகு பழையபடி அந்த உள்ளம், உணர்வு, உடல் எல்லாம் வாழ்கின்றன. மூளை கெட்டு அறிவு திரிவதில்லை.
குழந்தையன்பு, வாழ்க்கையில் சிறு பகுதியையே. கவர்கின்றது. காதல், வாழ்க்கை முழுதும் கவர்கின்றது. குழந்தைமேல் செலுத்தும் அன்புணர்வு உள்ளத்தில் ஓர் ஊற்று. காதல் உணர்வோ உள்ளக் கடல். ஊற்று வறண்டால் சிறிய புரட்சி; கடல் புரண்டால் பெரிய அழிவு.
குழந்தையால் வரும் இன்பமும் துன்பமும் கண்ணளவில், காதளவில். பெரும்பாலும் இவ்வளவு தான். ஆனால், காதலால் வரும் இன்பமும் துன்பமும் உடல், உள்ளம், உயிர் எல்லாம் கொள்வன.
குளிர்காலத்தில் நாக்களவில் நிற்கும் நீர்வேட்கையும் வேறுதான்; வேனிற் காலத்தில் உடல், உள்ளம், உயிர் எல்லாம் குளிர விரும்பும் நீர்வேட்கையும் வேறு தான். ஒரு குவளைத் தண்ணீர் எங்கே? ஒரு பெரும் பொய்கை எங்கே?
உடல், உடல், உடல் – இதுதான் என்னைக் கெடுப்பது, மயக்குவது! நேற்று மாலை என் காதலைக் குறைபடச் செய்தது உடல், உடல், உடல்.
உள்ளம் காதலை வழிபடுகின்றது; உயிர் காதலைத் தொழுகின்றது. ஆனால் உடல் சில வேளைகளில் காதலைப் புறக்கணிக்கின்றது. உள்ளம் காதலையே வேண்டுகின்றது; துணைவியை மறந்துவிடுகின்றது; துறந்துவிடவும் தூண்டுகின்றது. உடலைக் கடந்து உணர வேண்டும்; அதுவோ ஆவதில்லை. உடல் உள்ளத்திற்கு அடிமையாக வேண்டும்; அது எந்தக் காலத்தில் கைகூடுவது? நேற்று என்ன துடி துடித்தது இந்த உடம்பு! நான்கு ஆண்டுகள் வாழ்ந்த அருமையான வாழ்வை மறந்து-!
சே! நினைக்கக் கூடாது என்றால் அந்த நினைவே மறுபடியும் மறுபடியும் வந்து சேர்கிறது. எண்ணித் தான் பார்த்து விடுவோம், இல்லையானால் விடாது போல் தெரிகிறது.
குரங்குக் கதை – நல்ல கதை அது. மருந்து கொடுத்த வைத்தியன் சரியான பத்தியம் சொன்னான். குரங்கை நினைக்காமல் இருப்பதுதான் பத்தியம் என்று சொன்னானாம். அந்த நோயாளி என்ன செய்வான், அய்யோ! அப்போதிருந்தே குரங்கு நினைவே வந்து கொண்டிருந்ததாம். எவ்வளவு தடுத்தாலும் முடியவில்லையாம். மரத்தைப் பார்த்தால் அங்கே குரங்கு இருப்பது போன்ற பாவனை ஏற்பட்டதாம். ஓட்டைப் பார்த்தால் இங்கெல்லாம் குரங்கு ஓடுமல்லவா என்ற நினைவு வந்ததாம். கிணற்றைப் பார்த்தால் இங்கே குரங்கு வந்தால் எட்டிப்பார்க்கும் அல்லவா என்ற எண்ணம் வந்ததாம். வாசலில் உலர்த்தின் கடலையைப் பார்த்தால் குரங்கு வந்தால் இதை வாரிக் கொண்டுபோகுமே என்று நினைவு வந்ததாம். குழந்தையைப் பார்த்தால் குரங்கு ஒவ்வொரு வேளை இப்படித் தான் நிற்பதுண்டு என்று எண்ணம் வந்ததாம். எதிரில் இருந்த இராமர் படத்தைப் பார்த்தால் ஒரு குரங்குதான் இவருக்கு அவ்வளவு பெரிய உதவிசெய்தது என்று எண்ணம் வந்ததாம். எதையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டால், அக்கண்ணின் எதிரே குரங்கு மயமான கூட்டம் தோன்றியதாம். கடைசியாக எழுந்து அந்த வைத்தியரிடம் போய், “அய்யா, வைத்தியரே! என்னால் அந்தப் பத்தியம் இருக்க முடியாது. வயிற்றுநோய் தீராவிட்டாலும் போகட்டும்; பத்திய முறிவு வேண்டும்” என்று கேட்டானாம். வைத்தியர் தக்க பதில் சொன்னாராம். “உனக்கு மனநோய்தான் அதிகம். என்னிடம் வந்து போனது முதல் இதுவரையில் வயிற்று நோயே வரவில்லை அல்லவா? வயிற்றை நினைக்க நேரமில்லாமல், மனம் குரங்கையே நினைத்துக் கொண்டிருந்தது. ஆதலால் வயிற்றுநோய் வரவில்லை. இனிமேல் ஏதாவது உழைப்பும் படிப்பும் இருந்தால் உன் நோய் போய் விடும். சோம்பல் வாழ்வுதான் உன் மனத்தையும் வயிற்றையும் கெடுத்தது. போ, இனிமேல் உழை” என்று அனுப்பினாராம்.
நல்ல கதை – மனத்தின் ஆற்றலை விளக்கும் கதை. நானும் அப்படித்தான் வேண்டா வேண்டா என்று தள்ளிக்கொண்டே இருந்தாலும் அந்தப் பெண் என் நினைவில் வந்துகொண்டே இருக்கிறாள். எண்ணித்தான் பார்க்கலாம்.
எளிமையிலே விளங்கும் அழகு, பாலாற்றின் தெளிந்த ஊற்றுப்போல இருக்கக் கண்டேன். நல்ல இளமை, அறிவின் பொலிவு, எழில் மிகுந்த தோற்றம், ஒளி பெற்ற கண்கள். மென்மையான உடல் வளம் செல்வாக்காக வாழ்ந்த வாழ்வைக் காட்டியது. ஆனால் அணிந்த எளிய உடை வறுமையையே காட்டியது. அந்தக் கண்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. நான் தொட்ட அந்தக் கைம்மலர் என் உயிரையே கவர்ந்தது. இன்னொரு கையையும் தொடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், நான் உயிரோடு மீண்டு வந்திருக்க மாட்டேன்.
அந்த எழிலுருவம் எப்படி வழி தவறி வந்ததோ, தெரியவில்லை. துணைவி ஊருக்குப் போய் மூன்று நாளாயின என்று சோர்வோடு எண்ணிக்கொண்டே தளர்ந்து வந்து வீட்டெதிரே நின்றேன். திண்ணையில் அந்தத் தெய்வத்தைக் கண்டேன். என் சோர்வெல்லாம் பறந்து போயிற்று. ஆனாலும், எதிர்வீடு பக்கத்து வீடாக இருக்கலாம் என்று ஒன்றும் பேச வில்லை. பேசாமல் கதவைத் திறக்கப் போனபோது, அடக்கத்துடன் அப்புறம் திரும்பக் கண்டேன். தோளில் இரத்தக் கறை காயம் கண்டேன்.
“எந்தத் தெரு அம்மா? எங்கேயோ அடிபட்டாற் போல் தெரிகிறதே! மருந்து கொண்டு வருகிறேன்” என்று உள்ளே போய் மருந்தும் துணியும் கொண்டுவந்து எதிரே நின்றேன். நாணத்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு, “ஒன்றும் வேண்டாங்க. எல்லாம் ஆறிவிடும். வேண்டாங்க. அப்படி ஒன்றும் அடிபடவில்லை” என்றாள். “நீங்கள் எங்கே போக வேண்டும்? எங்கே அடிபட்டீர்கள்?” என்று கேட்டேன். “பட்டணத்துக்கே புதியவள். கோடம்பாக்கத்தில் தெரிந்தவர்களின் வீட்டுக்கு வந்திருக்கிறேன். பக்கத்து வீட்டுக்கார அம்மாவோடு கடைத்தெருவுக்கு வந்தேன். அந்த அம்மா எப்படியோ போய்விட்டார்கள். வழி தவறிவிட்டேன்” என்றாள். ”மருந்து போட்டுக்கொள்ளுங்கள். நான் கோடம்பாக்கத்துக்கு வழிகாட்டுகிறேன்” என்று சொல்லி இரக்கத்தோடு பார்த்தேன். கழுத்தில் தாலி இல்லாமை கண்டு திருமணம் ஆகாதவள் என்று தெரிந்து கொண்டேன். உடனே இரக்கம் மெல்ல மெல்ல அன்பாக மாறியது. என்னை அறியாமல் என் உள்ளத்தில் ஒருவகை மயக்கம் மெல்லக் குடிகொண்டது. உடலில் நரம்புதோறும் ஒருவகை நடுக்கம் எழுந்தது. இதயம் பறையடித்தது. சுற்றிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை. எதிரே இருந்த நான் தோள்பக்கமாக வந்து உட்கார்ந்து, “மருந்து போடட்டுமா, அம்மா?” என்றேன். பதில் இல்லாதது கண்டு, “எங்கே விழுந்தீர்கள்?” என்றேன்.
“யாரோ சைக்கிலில் வேகமாய்ச் சென்றவன் தள்ளிவிட்டான். இந்தக் கையில் சைக்கில் சக்கரம் ஏறியது. கால்விரலில் நல்ல அடிபட்டது. அந்த ஓரத்திலிருந்து இந்த ஓரத்திற்குத் திரும்பி அந்த வழியாகப் போகலாம் என்று வந்தேன். நடந்தால் இரத்தம் பெருகுமே என்று கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்” என்று சொல்லிக்கொண்டே இடக்கையை நீட்ட, நான் மருந்தைத் துளித்துளியாக இட்டுத் துணியால் கட்டுக் கட்டினேன். பேச்சே இல்லை. கட்டுக் கட்டியபோது அவளுடைய முகத்தைப் பார்க்க முயன்றேன். முகத்தைப் பார்க்கவில்லை. இரண்டு கண்களின் ஒளியையே கண்டேன். நான் மருந்து விட்டுக் கட்டுக் கட்டியபோது, அந்தக் கண்கள் என் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. நான் பார்க்கத் தொடங்கியபோது என் உள்ளத்தை ஒரே மயக்கத்தில் ஆழ்த்துமாறு பார்த்தாள் அவள். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
கட்டுக் கட்டுவதை முடித்தேன்.கைகள் நடுங்கிக்கொண்டே செய்தன. நான் என்னை இழந்தேன். அவளுடைய கை அந்த மருந்து புட்டியை எடுத்தது. காலை நீட்டிப் பெருவிரல்மேல் மருந்துவிடத் தொடங்கினாள். அவள் கையிலிருந்து அந்தப் புட்டியை நானே வாங்கிக்கொண்டேன். அந்த மெல்லிய கை என் கையைத் தடுத்தது; என் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பரவியது. என்னைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தாள் என்று தெரிந்தது. மெல்லிய பெருமூச்சு அவள் விட, நானும் விட, பேச்சற்று மருந்து விட்டு முடிந்த பிறகு வீட்டினுள் நுழைந்தேன். உள்ளே வருமாறு அழைக்கலாமா என்று எண்ணினேன். ‘இங்கே வா’ங்க’ என்ற சொற்கள் தொண்டை வரையில் வந்து நின்றன. நா எழவில்லை. அந்த வீட்டில் நடந்து திரிந்து வாழ்வைத் தந்த மெல்லிய கால்களை நினைத்தேன். என் உள்ளமும் உயிரும் அந்த ஒருத்திக்குத்தானே; அவளுடைய வீடு இது என்று எண்ணினேன். கூடத்தின் கம்பத்தை இரு கையாலும் பற்றிக்கொண்டு நின்றேன். உடனே கம்பத்தின் மேல் சாய்ந்தேன். அழைக்க நா எழவில்லை. அவளாக வந்துவிட்டிருந்தால் அந்த நாவை வென்று விட்டிருப்பேன். நடுங்கிக் கொண்டே இரு கையாலும் வரவேற்றிருப்பேன். ஆனால்-
திடீரென்று தூணின்மேலே இருந்த ஒரு பல்லி சொல்லியது. திடுக்கிட்டேன். யாரும் இல்லை என்று எண்ணிவிட்ட எனக்கு அந்தப் பல்லி, தான் இருப்பதை உணர்த்தியது. அங்கே சுவரில் ‘அருள்’ என்று எழுதிய எழுத்துக்களைக் கண்டேன். மகன் பெயர் அது. துணைவியின் கையெழுத்து அது. அதன் மேல்தான் எங்கள் குழந்தை இரண்டு வயதாக இருந்த – போது நிற்கவைத்து எடுத்த நிழற்படம் மாட்டியிருந்தது. அந்தப் படத்தில் அவன் மட்டும் இருக்கிறான். நானும் அவளும் இல்லை. நானும் அவளும் அந்த மேசை எதிரே உள்ள படத்தில் இருக்கிறோம். அந்த மேசையில்தான் அவள் கைகளை ஊன்றிக்கொண்டு, முப்பது முறை – ஒருநாளில் முப்பது முறை – வந்து நின்றாள். நாற்காலியில் இருந்த என்னைப் பார்த்தாளோ, படத்தில் இருந்த என்னைப் பார்த்தாளோ, தெரியவில்லை.
தூணை விட்டேன். பூட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் அவளும் எழுந்து நின்றுகொண்டிருக்கக் கண்டேன். கதவைச் சாத்திப் பூட்டிவிட்டு, “வாங்க அம்மா, போகலாம்” என்றேன்.
கோடம்பாக்கத்தை நோக்கி நடந்தேன். நான் முன்னே சென்றேன். அவள் பின்னே வந்தாள். சிறிது தூரம் அடி எடுத்து வைத்ததும் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னையே நோக்கிக்கொண்டு தொடர்ந்து வந்தமையால், என் கண்கள் அவளுடைய பார்வையில் சிக்கின. சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் பார்க்க விரும்பினேன். முன்னே போகச்சொல்வதற்கோ காரணம் இல்லை. “எந்தத் தெரு?” என்று கேட்டுத் திரும்பினேன். அதைக் கேட்டவுடன் தலையைக் குனிந்துகொண்டு, “தெருப்பெயர் தெரியாது. வீட்டு எண் தான் தெரியும், 31” என்றாள். மறுபடியும் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்கள் ஆவலோடு என்னை நோக்கின. “தெரு அடையாளம் சொல்ல முடியுமா?” என்று கேட்டுக்கொண்டு அங்கே நின்றேன். “ஒரு கோடியில் மாரியம்மன் கோவில் இருக்கும். அதன் பக்கத்தில் இரண்டு மாடி வீடுகள் கோபி தீட்டி யிருக்கும்” என்று சொல்லிக்கொண்டே மெல்ல வந்தாள். அங்கே இருந்த பூங்காவைக் காட்டி, “இங்கே கொஞ்ச நேரம் உட்காரலாமா?” என்றேன். “கால் நோகவில்லை ” என்றாள்.
அப்புறம் என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தெரியவில்லை. நடந்தேன். ஆனால், வேகமாக நடக்க மனம் இல்லை. கோடம்பாக்கம் நெருங்க நெருங்க எதையோ பெற முடியாத பொருளைப் பெற்று இழந்து விடுவது போல் தோன்றியது. திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவள் கண்களும் என் கண்களும் பேசின. நானும் நின்றேன். அவளும் நின்றாள். நெஞ்சம் படபட என்றடித்தது. வீட்டிலேயே இருக்கச் செய்யாமல் போனோமே என்று வாதாடியது. எதிரில் யாரோ வந் தார்கள். “உலகம் என்ன சொல்லும்? தவறான வழி அல்லவா?” என்ற எண்ணம் ஒரு பக்கம் சுட்டது. எதிரில் வந்தவர்களை மாரியம்மன் கோவில் முதலான அடையாளங்களைக் கேட்டுப் பார்த்தேன். அப்படி இரண்டு தெரு இருப்பதாகப் பெயர் சொன்னார்கள். மேலும் நடந்தேன்.
திரும்பிப் பார்த்தேன். அவள் ஒருவனோடு பேசிக் கொண்டு வருவது போல் கண்டேன். நின்றேன். பேச்சு இல்லை. அவன் என்னைப் பார்த்து, “ரொம்ப நன்றி. இனிமேல் நான் அழைத்துக்கொண்டு போவேன்” என்றான். “இப்படியும் ஒருவன் இருப்பானா? இரண்டு வாக்கியத்தில் என் கனவை எல்லாம் சிதறச் செய்து விட்டானே?” என்று எண்ணித் திடுக்கிட்டாற் போல் நின்றேன். அவனுக்கு, நான் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை; அவன் வணக்கம் செய்துவிட்டு நடந்தான்.
அந்த நங்கையின் அன்புக்கு எல்லை காணவில்லை; அவள் தன் கைகளைக் கூப்பிக் கண்ணீர் விட்டாள். விரல்கள் நடுங்குவதைக் கண்டேன். “போய்விட்டு வா அம்மா” என்று நாக் குழறிக்கொண்டே சொன்னேன். அவள் நடந்தாள், கால்கள் ஒன்றோடு ஒன்று பின்னினாற் போல் தளர்ந்து நடந்தாள். நொடிக்கு ஒரு முறை திருமபித் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வையில் காதலின் கனிவும் கண்டேன; ஏமாற்றத்தின் ஏக்கமும் கண்டேன். நெடுந்தூரம் சென்று விட்டாள். நான் நடப்பது போல் நகர்ந்தேன்.
மணி ஒன்று அடித்தது. கடிகாரத்தைப் பார்த்தேன். ஒன்பதரை ஆகியிருந்தது. ‘தென்ற’லுக்குப் புறப்பட உடுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.
திடீரென்று பெருங்காற்று ஒன்று அடித்தது. அந்த முருங்கை மரத்தை நினைத்துக்கொண்டேன். பெருங்காற்றால் கிளைகள் முறிந்துவிடுமே என்று எண்ணிச் சன்னல் வழியாகப் பார்த்தேன். கிளைகள் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்தன. “அய்யோ, எந்தக் கிளை எப்படி முறிந்துவிடுமோ? தெரியவில்லையே! இதைவிடச் சுற்றுப்புறத்தார் ஒடித்துக் கொண்டு போவதே நல்லதாகத் தெரிகிறதே. ஒடித்தால் சிறு கொம்புகள் போகும். முறிந்தால் பெருங்கிளைகள் போய்விடுமே” என்ற கவலையோடு முருங்கை மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கிளைகள் வடக்கும் தெற்கும் சாய்ந்து, கிழக்கும் மேற்குமாக அசைந்து ஆடுவது என் கவலையை மிகுதியாக்கிற்று. இன்றைக்கு அந்த மரத்தின்வாழ்வு அவ்வளவுதானோ என்று ஏங்கினேன். நல்ல வேளையாகப் பெருங்காற்று நிற்கத் தொடங்கியது; கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. முருங்கை மரம் முறியவில்லை; தப்பியது.
என் வாழ்க்கை – காதல் வாழ்க்கை – நேற்று முறிந்தாலும் முறிந்துபோயிருக்கும். அதுவும் ஒரு வகைப் பெருங்காற்றுத்தான். வாழ்க்கையே ஆடிக் கொண்டிருந்தது; இரண்டு மணி நேரம் ஆடியது. என் உடம்பின் நாடி நரம்பெல்லாம் ஆடி ஆடி உள்ளத்தையும் உயிரையும் ஒழிப்பது போல் இருந்தது நிலைமை. எப்படியோ தப்பினேன். இந்த வாழ்க்கை தப்பியது போல்தான் இந்த முருங்கைமரமும் தப்பியது. பெருங்காற்று ஓய்ந்தது. இனி முறியாது.
தென்னை மரத்தைப் போல் கிளையே இல்லாமல் இருக்கக் கூடாதா? இந்த மரத்திற்கு ஏன் நூறு கிளைகளும் ஆயிரம் கொம்புகளும்? இந்தக் கிளைகளாகவும் கொம்புகளாகவும் வளரும் சத்தெல்லாம் அடிமரத்தோடு சேர்ந்து நீண்டு வளர்ந்து செழித்து வயிரம் ஏறியிருக்கக் கூடாதா? அப்படி அடிமரம் ஒன்றே நீண்டு காழ்த்து வளர்ந்திருந்தால் இன்று இந்தப் பெருங்காற்று என்ன செய்ய முடிந்திருக்கும்? அந்தத் தென்னைமரம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. தன் சத்தையெல்லாம் கிளைகளுக்கும் கொம்புகளுக்கும் செலவழித்திருந்தால், இப்படி உறுதியாக நின்றிருக்க முடியுமா? உயரமாக வளர்ந்திருக்க முடியுமா?
உலக வாழ்க்கை, காதல் வாழ்க்கையை ஓங்கவிட வில்லை. சுற்றுப்புறத்தின் செல்வாக்குப் பெருகப் பெருகக் காதல் வாழ்க்கை உரம்பெற முடியாமல் போகின்றது. உலக வாழ்க்கையில் பெருங் கடமைகள், சிறு கடமைகள், நாகரிகப் பழக்கவழக்கங்கள், சடங்குகள், முறைகள்,பற்றுக்கள் எல்லாம் பெருகிப்பெருகிக் காதல் வாழ்வு உரம் பெறாதவாறு செய்கின்றன. இத்தனைக்கும் இடம் கொடுத்தும் காதல் வாழ்வு இருக்கின்றது; இன்னும் இருக்கின்றது உலகத்தில். ஓங்க முடியவில்லை; காவியக் காதல் போல் உயர் முடிய வில்லை. ஆயினும் அழியாமல் தலையெடுத்து நிற்கிறது.
காற்று ஆரவாரம் செய்தபோது இந்தக் கிளிகள் எங்கே இருந்தனவோ தெரியவில்லை. இப்போது பழையபடி வந்துவிட்டன; தென்னைமரத்தைச் சுற்றுகின்றன. ஆனால் இரண்டு கிளிகள் இருந்த மரத்தில் இத்தனை கிளிகள் இருக்கின்றனவே! அவற்றின் குஞ்சுகளோ? அல்ல, அல்ல. மனிதரைப் போல் கிளிகள் குடும்பத்தில் மற்ற உறவுக்கு இடம் தருவதில்லையே. மனிதக் குடும்பத்தில்தான், சமையலறை முதல் மருத்துவமனை வரையில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து எல்லாருக்கும் இடம் கொடுத்துப் பாழாகும் நிலைமை இருக்கின்றது. கிளிக் குடும்பத்தில் காதல் வாழ்வு, இயற்கையமைதி என்னும் இந்த இரண்டிற்குத்தான் இடம் உண்டு. மனிதன் கட்டிய வீட்டி லும் காதல் கடவுள் இந்த இரண்டிற்குத்தான் இடம் உண்டு. மற்றவை எப்படியோ நுழைந்துவிட்டன. அறிவாளிகள் இதை உணர்ந்துதான் வீடு என்னும் பெயர் கொடுத்திருக்கின்றார்கள்.
ஆறு கிளிகள் இருக்கின்றன. ஆறு கிளிகள் – மூன்று குடும்பம் – மூன்று இணை. எது எதன் துணையோ தெரியவில்லை; எல்லாம் கலந்து பறப்பதால் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்துப் பார்ப்போம்; எப்படியும் தெரிந்துவிடும்.
6. இளங்கோ
கடைசியில் இந்தக் கடிதம் வந்தது. சித்தூரில் தங்கை இல்லை என்று கடிதம் வந்த பிறகு நான் போய்ப் பார்ப்பது எங்கே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். முதல் கடிதம் வந்தவுடனே போயிருந்தால் அப்போதே பார்த்திருக்கலாம். தவறிவிட்டேன். மாதக் கடைசியில் ஆபீஸ் கிளர்க்குக்கு அவ்வளவு ஓய்வு ஏது?
அம்மா சொன்னது தான் பெருங்கவலையாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட பொய்யைக் கட்டிப் பழி சுமத்தவும் மனம் வருகின்றதே! வேசிவீட்டில் போய் வேசித்தொழில் செய்தாளாம். இப்படிப் பழி சுமத்தினார்கள் பாவிகள். அதைக் கேட்டுக்கொண்டு அறிவில்லாத அம்மா என்னிடம் சொன்னாள். அவள் தவிர வேறு யாராவது என்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அவர்களை அங்கேயே குத்திக் கொன்றுவிட்டிருப்பேன்.
தங்கையைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அப்படிச் சொன்னால் கவலை இல்லை. ஆனால் அவளைப் பற்றி நன்றாகத்தெரிந்தவர்கள், பல காலம் பழகினவர்வர்கள் இப்படி நாக்கூசாமல் கூறுவதா? அறியாமை! அறியாமை! நூறாண்டு வாழ்ந்தாலும் இவர்கள் மக்களாக முடியாது. தாமரைப் பூவைச் சுற்றிக் குதித்துக் கொண்டும் கத்திக்கொண்டும் அந்தப் பூவின் மணத்தை எள்ளளவும் அறியாமலே இருக்கின்ற தவளைகள்! மனத்தின தன்மை அறியாதவர்கள்! வயது ஏறினாலும் பட்டம் பதவி பெருகினாலும் இவர்களுக்கு மூளை மட்டும் களிமண்ணாகவே திரண்டு உருண்டு கிடக்குமா? தங்கை மற்றவர்களைப் போல் தேர்வுக்குப் பாடங்களைப் படித்து வரிவரியாக உருப்போட்டு ஒப்பு வித்துவந்தவளா? அப்படி வாந்தி எடுக்கும் தேர்வுக்காக அவள் படிக்கவில்லை. அவள் நல்ல நல்ல நூல்களைக் கற்றிருக்கிறாள். கற்றவற்றை ஆராய்ந்திருக்கிறாள். அவள் அப்படிப் பண ஆசை கொண்டோ, வயிறு வளர்க்கும் கவலை கொண்டோ அந்த இழிவான வாழ்க்கையை எண்ணிப் பார்க்கும் கீழ் மகள் அல்ல. பயிற்சிப் பள்ளியில் சேர வேண்டும் என்று போயிருப்பாள். அது மட்டும் உண்மை. பிறகு யாரும் தேடி வந்து அழைத்துப் போகாதபடியால் யார்வீட்டிலோ நின்றுவிட்டாள்.
ஒருகால் அப்படி என் தங்கை வேசித் தொழிலில் இறங்கிவிட்டிருந்தாலும் நான் அவளைப் பழித்திருக்க மாட்டேன்; சுற்றத்தாரைத்தான் பழித்திருப்பேன். அந்த மாமன் முதல் அரசாளும் மந்திரி வரையில் எல்லாரையும் பழித்திருப்பேன். உலகத்தைப் பழித்திருப்பேன். திலகத்தைப் பழித்திருக்க மாட்டேன். அப்படித் தவறிப்போயிருந்தால் அது திலகத்தின் தவறு ஆகுமா? வாழ்க்கையில் நல்ல அமைப்பு இல்லையானால் கெட்ட சூழலுக்கு அடிமையாவது யார் குற்றம்? அரசியல் அமைப்பின் குற்றமே ஒழிய ஒரு சிலரின் குற்றம் அல்ல. உலகத்தின் குற்றமே தவிர, துன்பத்துக்கு உள்ளானவரின் குற்றம் அல்ல. ஒருவனைப் பல நாள் பசியோடு வருந்த விட்டுவிட்டு, பட்டினி போட்டு வாடச் செய்துவிட்டு, பிறகு, “என் தோட்டத்தில் வந்து இவன் பழம் திருடினான், இவன் திருடன்” என்று வழக்குத் தொடுப்பது அந்தக் காலம். இந்தக் காலத்தில் இது அறிவாளிகளிடம் செல்லுமா? அறிவில்லாதவர்களுக்கு அறம் எது என்று தெரியாமல் போகும்; போகட்டும். அவர்கள் பட்டினி கிடந்தவனைத் திருடன் என்றும் சொல்வார்கள். ஆனால் அறிவாளிகள் கண் திறந்து பார்க்கும் காலம் இது. இனிமேல் வரப்போவது அதைவிட ஆற்றல் மிகுந்த காலம். திருடன் என்றும் வேசி என்றும் பழிக்கின்றவர்களுக்குச் சிறைத் தண்டனை வந்து சேரும்; தூக்குத் தண்டனை கிட்டிவிடும். “எங்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் இல்லை; அதனால் அப்படிச் சொல்லி விட்டோம்” என்று அந்தக் கோழை வஞ்சகர்கள் இனித் தப்பிப் பிழைப்பதும் அருமையாகிவிடும்.
அது போகட்டும். நான் போய்ப் பார்க்க வேண்டும். தேடிக்கொண்டு வரவேண்டும் என்றே துணிவு கொண்டேன். ஆனால் இருப்பிடம் தெரியாமல் கவலைப் பட்டேன். அம்மாவிடம் அழுதேன். அன்று இரவு உணவும் உண்ண மனம் இல்லாமல் படுத்துக்கொண்டேன். அன்னையும் என் பக்கத்தில் உட்கார்ந்து அழுதாள். “அம்மா” என்றேன். “அழாதே அப்பா” என்றாள். “அழுதவன் போய்விட்டான் அம்மா ; இப்போது வீரன் இளங்கோ வந்திருக்கிறான்” என்றேன்.
“சொல்லப்பா” என்றாள். “இனிமேல் நான் சாதி உறவு இவைகளை மதிக்க மாட்டேன், அம்மா. என் திருமணத்தைப் பற்றி உனக்கும் உரிமை இல்லை. தெரிகிறதா? நீ உயிருடன் இருக்கும் வரையில் என்னோடு இரு. உன்னை மறக்காமல் காப்பாற்றிவருவேன். திலகத்திற்குக் கலியாணமாகி எங்காவது நல்லபடி இருப்பதைக் கண்ணால் பார்த்தால்தான் நானும் ஒரு பெண்ணைத் தேடிக் கலியாணம் செய்துகொள்வேன். நீ எதுவும் பதில் பேசக் கூடாது. பதில் பேசினால் உன் முகத்திலும் விழிக்க மாட்டேன். எங்காவது போய் வயிறு வளர்த்து, கிடைத்ததை உனக்கு மணியார்டர் செய்துவிடுவேன்” என்றேன். அன்னை இத்தனையும் கேட்டுவிட்டு, “கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு அப்பா, வெறுவயிறாகப் படுக்கக் கூடாது” என்றாள்.
பொழுது விடிந்தது. ஞாயிற்றுக்கிழமை யாதலால் மருதப்பன் வருவான், வராவிட்டால் நாம் போகலாம் என்று எண்ணிக்கொண்டே படுக்கையில் புரண் டேன். எழுந்து காலைக் கடன்களை முடித்தேன். அதற்குள் “இளங்கோ” என்று அழைத்துக்கொண்டே அவன் நுழைந்தான். “எங்கே பயணம்?” என்று கேட்டேன். “கோடம்பாக்கம்” என்றான்.
வெளியே புறப்பட்டோம். எழுமூர் பஸ்ஸில் ஏறினோம். மருதப்பன் மெல்லக் கதை சொல்லத் தொடங்கினான். புதிய காதல்கதையாக இருக்கிறதே என்று கேட்டுக்கொண்டே வந்தேன். என்னை அவசரக்காரன் என்று பல நாள் இடித்துச் சொல்லியிருக்கிறான். இப்போது அவனே இப்படிப்பட்ட அனுபவத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று எண்ணினேன்.
“பட்டணத்துக்குப் புதியவளாம், வழி தவறி வந்துவிட்டாளாம்” என்றான். என் நெஞ்சு திடுக்கிட்டது. “மற்றக் கதையெல்லாம் வேண்டா; எங்கே அவள்? முன்னே பார்க்க வேண்டும்” என்றேன். “கோடம்பாக்கம், செங்கல்வராயன் தெரு அல்லது கந்தப் பிள்ளை தெரு, 31” என்றான். என் கவலைக் குறிப்பைக் கண்டதும் அவன் காதல் பேச்சை அடியோடு மறைத்துவிட்டான். திலகமாக இருக்குமோ என்று அவனுக்கு ஐயம் வந்துவிட்டது. உடனே சில அடையாளங்களைச் சொல்லத் தொடங்கினான். மெலிந்த உரு, அடர்ந்த கூந்தல், எளிய ஆடை, அறிவின் பொலிவு, நடுத்தர உயரம் என்று எல்லாம் சொல்லிக்கொண்டே வந்து வலக்கையில் பெருவிரல் பக்கத்தில் மச்சம் என்றான். என் நெஞ்சம் அதிர்ந்து அலை அலையாக எழுந்தது. “தங்கை தான் அப்பா. வேறு யாரும் இல்லை. அவள் பேனா பிடித்து அச்சுப் போல எழுதுவாள். கிறுக்கெழுத்துக்காரனான நான் அவள் எழுதுவதை அடிக்கடி பார்ப்பேன். அப்போது அந்தக் கையில் பேனா பிடித்த கட்டைவிரல் பக்கத்தில் அந்த மச்சம் பார்த்திருக்கிறேன். கைமேல் மை பட்டிருக்கிறது என்று முதலில் எண்ணி அதைத் துடைக்கப் போனது உண்டு. ‘மச்சம் அண்ணா’ என்று தடுத்துவிடுவாள்” என்றேன்.
மருதப்பன் முகம் வெளிறிவிட்டது. மேற்கொண்டு பேச வாயற்றுப் போனான். பஸ் எழுமூரில் நின்றது. அங்கே இறங்கி ரயில் நிலையத்திற்குச் சென்று கோடம்பாக்கத்தில் நுழைந்து நடந்தோம்.
மருதப்பன் நல்லவன்; மனச் சான்றைக் கொல்லாதவன். மனச்சான்று பண்படும் முறையில் வாழ்க்கை நடத்தியவன். அவன் மனத்தில் தோன்றிய குழப்பத்தைக் கண்டு எனக்கே இரக்கம் உண்டாயிற்று. “மருதப்பன்! இதைப் பற்றி ஒன்றும் வருத்தப்படாதே! நீ மட்டும் திருமணம் ஆகாதவனாக க இருந்தால் என் தங்கையை உனக்கே கொடுத்திருப்பேன். இந்தக் காதல் அனுபவத்தைக்கேட்டுப் பூரித்துப் போயிருப்பேன். இப்போதுகூட உன் எண்ணம் முடிந்திருந்தால் திலகத்தின் பாக்கியம் என்றுதான் சொல்வேன். ஆனால் எனக்கு மனம் இல்லை. உன் மனைவியை நினைத்துத்தான் வருத்தப்படுவேன்” என்று ஆற்ற முயன்றேன்.
அவளுடைய நினைவுதான் தடுத்தது. சுவரில் ‘அருள்’ என்று எழுதிய அவளுடைய எழுத்தைக் கண்டுதான் என் மனம் மாறி நின்றது. தவிர நான் செய்தது குற்றம்தானே! காதல் காதல் என்று வானளாவப் பேசிவிட்டு யாரும் இல்லாத இடத்தில் அதை மறுத்துவிடுவதா? அதுவும் தவிர ஒருத்தியோ வாழ்க்கைப்பட்டு அன்பாக வாழும்போது இன்னொருத்தியை நினைத்தது குற்றம்தானே! அது காதலாகுமா? காமம்தான் என்று கசிந்து சொன்னான். வழியில் ஒருவரைக் கேட்டோம். இதுதான் கந்தப்பிள்ளை தெரு என்று குறுக்கே போகும் தெருவைக் காட்டினார். முதலில் இருந்த வீட்டு எண் 75. எதிர்வாடையில் இருந்த வீட்டு எண் 17, சரி என்று எதிர் வாடையில் பார்த்துக்கொண்டே போனோம். 31ஆம் எண்ணுள்ள வீடு வந்தது. “திலகம்” என்று கூவினேன். யாரோ ஓர் அம்மையார் மாரியம்மன் விழாவில் வரும் பொம்மை போல் ஒரே அளவாக அசைந்துகொண்டே வந்து நின்றார். “சித்தூரிலிருந்து இங்கே யாராவது வந்திருக்கிறார்களா? என் தங்கை, திலகம் என்று பெயர்” என்றேன். முகத்தையும் உடலையும் மெல்ல மெல்லத் திருப்பிக்கொண்டே,”இங்கே யாரும் இல்லை. வருகிறவர்கள் தீரக் கேட்டுக்கொண்டு வரக் கூடாதா?” என்று சொல்லித் தம் பருத்த உடலை மெல்ல அசைத்து நடந்தார். நாங்கள் திரும்பினோம். “சோம்பேறிப் பசங்க ரொம்பப் பெருத்துப் பூட்டாங்க” என்ற வசையும் காதில் கேட்டது.
“இரண்டு தெரு ஏன் சொன்னாய்? நீ கொண்டு போய் விட்டுவிட்டு வந்த தெருவும் வீடும் உனக்குத் தெரியாதா?” என்று மருதப்பனைக் கேட்டேன். வழியில் வந்துகொண்டே இருந்தானாம். எதிரே எவனோ வந்து நன்றி கூறிவிட்டு அழைத்துக்கொண்டு போனானாம். உடனே இவன் திரும்பிவிட்டானாம். அவன் அந்தப் பெண்ணுக்கு என்ன உறவு, அவன் பெயர் என்ன, இருப்பிடம் என்ன ஒன்றுமே கேட்காமல் திரும்பி வந்துவிட்டானாம். இதுதான் மருதப்பன். “நானாக இருந்தால் தொடர்ந்து போய், வீட்டினுள் நுழைந்து, விருந்தும் உண்டு, உறவு பிடித்துக் கொண்டு தெரியாததெல்லாம் தெரிந்துகொண்டு வந்து சேருவேன்” என்றேன். “இப்படித்தான் அங்கங்கே அனுபவப்பட்டுக் குட்டும் பட்டாய். எனக்கு அனுபவம் இல்லை; குட்டும் படவில்லை” என்று அவன் சொல்லிக்கொண்டே செங்கல்வராயன் தெருவைக் கண்டுபிடித்தான்.
அவன் சொன்னதும் உண்மைதான். இந்தப் பரந்த உலகத்தில் சிலர் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருப்பார்கள். சிலர் ஏதாவது ஒரு மீன் கிடைத்ததும் அமைதி அடைவார்கள் – மருதப்பன் போல். என்னைப் போன்ற சிலர் ஒவ்வொரு மீனையும் நிறுத்திப் பார்த்து உறுமீன் கண்டுபிடிக்கும் வரையில் அலைவார்கள். அவன் சாதாரணமான ஒரு பெண்ணை மணந்து அவளைக் காதல் உலகத்தில் பண்படச் செய்து வாழ்க்கை நடத்துகிறான். நான் காதலா அல்லவா என்று சோதனை நடத்திவந்தேன்; அதனால் அகப்படும் உறவை விடாமல் பிடித்துவந்தேன்
செங்கல்வராயன் தெருவில் 31ஆம் எண்ணுள்ள வீட்டின் படி ஏறித் திண்ணையின் பக்கம் நின்றோம். முதலில் தேடிய அந்தத் தெருவின் பழைய அனுபவத்தால் பெயரிட்டுக் கூப்பிடவில்லை. வீட்டினுள்ளே தாழ்வாரத்தில் போய்க்கொண்டிருந்த ஒருத்தி எங்களை எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள். சிறிது நேரத்தில் மறுபடியும் வந்தாள். அவள் பின்னே திலகம் வருவதைக் கண்டேன். கண்ணீர் கலங்கினேன். என்னைக் கண்டதும், ‘அண்ணா’ என்று அலறினாள் திலகம். உடனே, “ஆரவாரம் செய்ய வேண்டா; சும்மா இரு அம்மா” என்று அடக்கினேன். உடன் வந்தவள் எங்களைப் பார்த்து, “உள்ளே வாங்கள்,வந்து உட்காருங்கள்” என்று அழைத்துக் கொண்டு போய் நாற்காலிகளில் அமரச் செய்தாள்.
நெடுநேரம் ஒன்றும் பேசாமல் கண்ணீர் விட்டுக் கேட்டதற் கெல்லாம் தலையசைத்துக்கொண்டு நின்றாள் திலகம். “அம்மா, திலகம்! இனிமேல் கண்ணீர் விடவேண்டிய நிலை இல்லை அம்மா! உனக்குத் துணையாக நான் இருக்கிறேன். என் உயிர் உள்ள வரைக்கும் உனக்குக் கவலை வேண்டா” என்றேன். “பட்டணத்தில் நல்ல அறிவாளிகள் இருக்கிறார்கள். எங்களுக்குப் பலர் தெரியும். அறிவுலகத்தில் இவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. இவர் தான் மருதப்பர்; ‘தென்றல்’ துணையாசிரியர்” என்றேன்.
திலகத்தின் முகத்தில் அப்போது நல்ல மாறுதலைக் கண்டேன். அவளும் இவனை விரும்பி அன்பாக இருப்பதை அறிந்துகொண்டேன். “அவர் தெரியுமே அண்ணா! அன்றைக்கு வழி தவறி நுங்கம்பாக்கத்துக்குப் போய்விட்டேன். ஒரு சைக்கில் தடுக்கி விழுந்து அடிபட்டேன். மருந்தும் போட்டு வழியும் காட்டினார்” என்றாள். நண்பன் தலை குனிந்து கொண்டே இருந்தான். திலகமும் முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டாள்.
“பெரியம்மா எப்படி இருக்கிறார்? பூங்கொடி நல்லபடி இருக்கிறாளா? என்னைக் கேட்கிறாளா?” என்று மறுபடியும் கண்ணீர் விட்டாள். “இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை இங்கே அழைத்து வரட்டுமா? நீ அங்கே வருகிறாயா?” என்று கேட்டேன். “சித்தூரார் வெளியே போயிருக்கிறார். அவரைக் கேட்காமல் நான் வர முடியாது. கொஞ்ச நேரம் இருங்கள், வந்துவிடுவார்” என்றாள்.
அதற்குள் திலகத்தோடு இருந்தவள் காப்பி வைத்துச் சுடச் சுடக் கொண்டுவந்து மேசைமேல் வைத்து, ஒரு தட்டில் இரண்டு சாத்துக்குடிப் பழமும் கொண்டுவந்தாள். “இவளுடைய அக்காதான் சித்தூரிலே என்னைக் காப்பாற்றியவர். இவள் பெயர் செந்தாமரை. அவரும் கல்லூரியில் படிக்கிறார். இவளும் படிக்கிறாள்” என்று திலகம் அறிமுகப்படுத்தினாள்.
செந்தாமரையின் முகத்தைப் பார்த்தேன். அது செந்தாமரையாகவே இருந்தது. வழக்கம் போல் நான் அவளுடைய உள்ளத்தை ஆராயத் தலைப்பட்டேன். இல்லை, வழக்கம் போல் என் உள்ளத்தைப் பறி கொடுக்கத் தலைப்பட்டேன் என்று கூறலாம். திலகத்தையும் செந்தாமரையையும் எதிரே உட்காரச் சொல்லிவிட்டுக் காப்பி குடித்தோம். காப்பி குடிக் கும்போது என் கண்கள் செந்தாமரையின் முகத்தில் இருந்தன. அவள் திலகத்தோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். திடீரென்று, “நுங்கம்பாக்கத்திலா இருக்கிறீர்கள்?” என்று மருதப்பனைக் கேட்டாள். அவனும் இனிய குரலில், “ஆமாம் அம்மா” என்றான்.
சிறிது நேரம் எந்தப் பேச்சும் இல்லை. அமைதி குடிகொண்டிருந்தது. மருதப்பன் தவிர மற்றவரின் கண்கள் எல்லாம் வேலை செய்துகொண்டிருந்தன். மருதப்பன் மட்டும் தலைகுனிந்து கண்களை இடக்கை விரலால் தடவிக்கொண்டிருந்தான். செந்தாமரை திலகத்தின் கையைத் தன் கையில் வைத்துக் கொண்டு ரேகை பார்க்கத் தெரிந்தவள்போல் நடித்து, விட்டு விட்டு என்னைப் பார்த்துக்கொண்டும் அந்தக் கையைப் பார்த்துக்கொண்டும் இருந்தாள். என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆர்க்காட்டில் சித்தியைப் பற்றியோ மாமியைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியோ பேச்செடுத்தால் திலகத்தின் துயரத்தைக் கிளறியது போல் ஆகியிருக்கும். ஆகையால் பேசுவது தெரியாமல் திகைத்தேன். நண்பன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து, “மணி என்ன இருக்கும்?” என்று கேட்டான். “ஒன்பதரை இருக்கும்” என்றாள் செந்தாமரை.
“அவரும் வருவார். பேசிக்கொண்டிருங்கள். சமை யல் செய்துவிடுவோம், சாப்பிட்டுப் போகலாம்” என்றாள் திலகம். உடனே செந்தாமரை எழுந்து “ஞாயிற்றுக் கிழமை, தெரியுமா? நீ அங்கே வரக் கூடாது” என்று சமையலறையுள் புகுந்தாள்.
“பூங்கொடியை அழைத்து வந்திருக்கக் கூடாதா” என்று திலகம் உருக்கமாகக் கேட்டாள். மறுபடியும் புதன்கிழமை வரும்போது அழைத்து வருவதாகச் சொன்னேன். பிறகு, திலகமும் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
“கவலை விட்டதா, அப்பா?” என்று சமயம் பார்த்து மருதப்பன் கேட்டான். “இல்லை; இப்போது தான் பிடித்தது” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். “அதையும் தெரிந்துகொண்டேன். கைரேகை பார்த்தால், நீ கண்ரேகை பார்க்கிறாய். அது இருக்கட்டும். வந்த கவலை விட்டதா? இனிமேல் தங்கையைப் பற்றிய துயரம் இல்லையே!” என்றான்.
அதற்குள் திலகமும் செந்தாமரையும் சண்டையிடுவது போல், “உனக்கு இங்கே இடமில்லை” என்றும் “அண்ணி ஆனபிறகுதான் அதிகாரம்” என்றும் பேசுவது கேட்டது. திலகம் புன்முறுவலுடன் வந்தாள். ஏதோ விளையாட்டாய்ப் பேசினார்கள் என்று எண்ணினேன். செந்தாமரையின் அண்ணன் பெயர் திருநாதன் என்றும், எம்.ஏ.படிப்பதாகவும் திலகத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். திருநாதனைப் பார்த்துவிட்டுப் போவது நல்லது என்றே இருந்தேன். எனக்காக மருதப்பனும் என்னோடு இருந்தான். அவன் இயற்கையான ஊக்கத்தோடு இல்லை. அடுப்பங்கரையில் இருந்த பூனையை மேசைமேல் விட்டால் இருக்க முடியாமல் தவிப்பது போல் தவித்துக்கொண்டிருந்தான்.
செந்தாமரை உள்ளேயிருந்து வந்து, “தென்றலை நாங்களும் படிக்கிறோம். அதில் நீங்கள் எழுதுவது எந்தப் பகுதி?” என்று கேட்டாள். “ஊர்வம்பு” தன் பகுதி என்றும், சில நாட்களில் “மன்” என்ற புனை பெயரோடு கதைகள் எழுதுவதாகவும் கூறினான். இந்தக் கேள்வியால் சிறிது ஊக்கமும் பெற்றான்.
பிறகு சிறிதுநேரம் மருதப்பன் என்னோடு பத்திரிகை உலகத்துச் செய்திகளை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தான். அவை சுவையாகவே இருந்தன- ஆனால் என் மனம் மட்டும் செந்தாமரை வருதலையும் போதலையும் ஆராய்ந்துகொண்டே இருந்தது. நானும் என்னுடைய ஆபீஸ் கிளர்க்குகளின் செய்தியைச் சொல்லலாம் என்றால், அவை சுவையற்றவை: யந்திரங்களின் வாழ்க்கையில் – பேனா ஓட்டும் வாழ்க்கையில் என்ன சுவை இருக்க முடியும்? ஒருகால் சுவைபடும் குறிப்பு ஏதாவது இருந்தாலும், அதை நான் ஒரு ‘ரிபோர்ட்’ ஆக்கிக் கூற முடியுமே தவிர பத்திரிகை ஆசிரியர் போல் சுவை கெடாமல் எழுதி வெளியிடவும் முடியாது; பள்ளிக்கூட ஆசிரியர் போல் தெளிவாகச் சொல்லவும் முடியாது. ஆகையால் ஏதாவது பேச வேண்டுமே என்று எண்ணி, என் அன்னையைப் பற்றியே பேசத் தொடங்கினேன்.
அவள் திலகத்தைப் பற்றிக் கவலைப்படுவது, அவளைப் பற்றித் தெய்வத்தை வேண்டுவது, பூங்கொடியை வளர்ப்பது, என் திருமணத்தைப் பற்றிக் கோட்டை கட்டுவது, அதற்காகப் பணம் சேர்க்கச் சிக்கனம் செய்வது முதலானவற்றை எடுத்துரைத்தேன். மருதப்பனும் கேட்டான்; திலகமும் கேட்டாள். இடையிடையே வந்துபோன செந்தாமரையும் கேட்காதவள் போல் இருந்து கேட்டுக்கொண்டு போனாள்.
உணவுக்கு நேரமாயிற்று.மெல்ல எழுந்து கை கருவி இலைகளைப் பார்த்து உட்கார்ந்தோம். திலகமும் செந்தாமரையுமாக மாறி மாறிப் பரிமாறினார்கள். தங்கையின் கை மச்சத்தைப் பார்த்தபோது ஆர்க்காட்டு நினைவு வந்தது. செந்தாரையின் நகக்கண்களின் ஒளியைப் பார்த்தபோது என் மனம் ஒளி இழந்தது. உணவின்மேல் நினைவு இல்லாமல் உண்டு எழுந்தேன். திருநாதன் வரவில்லை. மறுநாள் பார்க்கலாம் என்று விடை பெறலானோம். வேப்பேரி விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம். திலகம் வழிவிட வந்தாள்: செந்தாமரை தொடர்ந்து வந்தாள். “அப்புறம் வருவேன்” என்று நான் வாசற்படி கடந்தேன். “வருவேன் அம்மா! இரண்டு பேருக்கும் வணக்கம்” என்று மருதப்பனும் தொடர்ந்தான்.
புரசவாக்கம் சினிமாவுக்குப்போவதாகமுன்வாரமே உடன்பட்டிருந்தோம். அதை நினைவூட்டினான் மருதப்பன். எனக்கோ அவ்வளவு விருப்பம் இல்லை. எப்படி யாவது பொழுது போக வேண்டுமே என்று ‘சரி’ என்றேன். “போன வாரம் நீயே தூண்டினாய். இந்த வாரம் எனக்காக வருவது போல் வருகிறாயே! என்ன நினைவு? செந்தாமரையா? இது எத்தனை நாளைக்கு?” என்றான். “என்ன மருதப்பன்! பழைய கதைகளோடு சேர்த்து விட்டாயே!” என்றேன். “பொறுத்துத்தான் சொல்வேன். மறுபடியும் புதன்கிழமை போய்ப் பார்க்கலாம். உன் தங்கையைக் கேட்டுப்பார். குணம் நல்ல குணமாகத் தான் இருக்கும். கபடற்ற தன்மை என்று தெரிகிறது. நாகரிகம் விளங்குகின்றது. அறிவும் உணர்வும் நிரம்பிய வாழ்க்கை. ஆனால் உன் மேல் விருப்பம் உண்டா என்று தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே நீட்டினான்.
சினிமா தொடங்கியது. எனக்கோ அதில் சிறிதும் ஊக்கம் இல்லை. அவனுக்காக என் கண்கள் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. என்ன பார்த்தேன் என்பது தெரியவில்லை. வழக்கம் போல் நிறம், அசைவு, பலர் பலவகையாக வருவதும் போவதும் பேசுவதும் – இவ்வளவுதான் பார்த்துக்கொண்டிருந்ததாக நினைவு வருகின்றது. நண்பன் சிரித்தபோது நானும் சிரித்தேன்; சிரிப்பதாக நடித்தேன்; அவன் சும்மா பார்த்துக் கொண்டிருந்த போது நானும் சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன். மருதப்பன் இரண்டொரு முறை திரும்பி நோக்கி, “எங்கே எண்ணமெல்லாம்?” என்று கேட்டான். கொஞ்ச நேரம் கழித்து அந்தக் கூட்டத்தில் புதிய ஆரவாரம் எழுந்தது. படத்தில் கண்ட புதுமை என்னவோ என்று கவனித்துப் பார்த்தேன். ‘காமிக்’ என்னும் வேடிக்கைப் பகுதி நடந்து கொண்டிருந்தது. ஒருவன் ஒருத்தியிடம் கெஞ்சுதலும் கொஞ்சுதலும் கண்டேன். கூட்டத்தாரின் ஆரவாரத்திற்குக் காரணம் விளங்கியது. இருந்தாற்போலிருந்து அவள் அவனை நோக்கி, “காதல், காதல்; நல்ல காதல்! கண்டவுடன் காதல் அய்யாவுக்கு” என்றாள். அதிர்ந்தேன்; திடுக்கிட்டேன்; “அஞ்சாதே, இளங்கோ! இது கதை” என்று மருதப்பன் என் தோளை இறுகப் பிடித்தான். வெட்கத்தோடு தலை குனிந்தேன். படம் மேலே தொடர்ந்து நடந்தது; நண்பனுக்கு இருந்த ஊக்கத்தில் எள்ளளவும் எனக்கு இல்லை. முடிந்ததும் விடுதலை பெற்றேன்; வெளியே வந்து நண்பனிடம் விடைபெற்றேன்.
வீட்டிற்குள் நுழைந்ததும், “திலகத்தைக் கண்டேன்” என்று அன்னையிடம் சொன்னேன். அன்னையும் ஆவலாய்க் கேட்டு மகிழ்ந்தார். பூங்கொடி உறங்கிக் கொண்டிருந்தாள். “இப்படி நல்ல இடமாக இருந்தால் மறுபடி சேர்த்துக்கொள்ளலாமே! நம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து வைத்திருக்கலாம். ஆனால் மாமனை வரச்சொல்லி அல்லது தபால் எழுதிக் கேட்டால்…” என்று நிறுத்தினாள். “திலகம் இனி மேல் சேரமாட்டாளே. கல்லூரியில் படிக்கிற பிள்ளைகள் நாங்கள் எத்தனையோ காலமாய்ப் பாடுபடுகிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்று உறுதி யெல்லாம் செய்துகொண்டோம். கல்லூரியை விட்டபிறகு நான் மறந்தேன்; மருதப்பன் மறந்துவிட்டான்; மற்ற நண்பர்களும் மறந்துவிட்டார்கள். ஆனால் என் தங்கை செய்து காட்டிவிட்டாள். இனிமேலாவது நான் அவள் இருக்கிற இடத்துக்குப் போய் அந்தத் தொண்டு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அவளை இங்கே அழைத்துக்கொண்டு வருவது ஏன்? இப்படி நான்கு பெண்கள் சாதியை விட்டால் நாற்பது ஆண்களுக்குப் புத்தி வரும்” என்றேன்.
“நான் போய்ப் பார்க்கவேண்டுமே, வரட்டுமா?” என்று ஆவலாய்க் கேட்டார். “புதன்கிழமை போகலாம்” என்றேன். இருக்கிற இடம், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள், சென்னைக்கு வந்த காரணம் ஆகிய எல்லாம் கேட்டார். தெரிந்தவரைக்கும் சொல்லி உறங்கிவிட்டேன்.
மறுநாள் ஆபீசில் வேலை செய்துகொண்டிருந்த போது கோடம்பாக்க நினைவு இருந்ததே தவிர வேலை ஓடவில்லை. அவசரக் கடிதங்கள் மூன்றுக்குப் பதில் எழுதி முடிந்த பிறகு மற்றக் கட்டுகளை மேசையின் மேலே விட்டுவிட்டு, ஒரு காகிதத்தில் என்னவோ எழுதத் தொடங்கினேன். பக்கத்துக் கிளர்க், “என்ன பட்டி போடுகிறீர்கள்?” என்று கேட்டபோதுதான் நான் செய்த வேலை தெரிந்தது. அந்தக் காகிதத்தில் ஏறக்குறைய முழுப் பக்கமும் செந்தாமரை செந்தாமரை என்று எழுதியிருந்தேன். பேசாமல் காகிதத்தைச் சுருட்டிக் கசக்கிச் சட்டைப்பையில் செருகிக் கொண்டேன். நான் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பையன் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் என்று எழுதிக்கொண்டிருந்தான். ‘என்னடா, பைத்தியம்!’ என்று கேலி செய்தேன். “இதனுடைய பெருமை யாருக்கும் சொல்லக் கூடாது என்று ஒருத்தன் சொன்னான்” என்றான். எனக்கோ எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவல் மிகுதியாயிற்று. அவன் கணக்கிலே வடிகட்டின முட்டாள். எப்போதும் சைபர் மார்க்கே வாங்கி வந்தான். கணக்குக் கற்றுக் கொடுப்பதாகவும் காப்பி அடிக்கக் காட்டுவதாகவும் சொல்லிப் பார்த்தேன். முதலில் முடியாதென்று சொல்லிக் கடைசியில் ஒப்புக்கொண்டான். அவன் சொன்ன பெருமை வேறொன்றும் இல்லை. ஒரு லட்சம் முறை ஸ்ரீராம ஜெயம் எழுதி முடித்தால் தேர்வில் கட்டாயம் வெற்றி பெறலாம் என்றான். நானும் எழுதினேன். ஒரு லட்சத்து ஓர் ஆயிர முறை எழுதிவிட்டேன். ஆயிரம் மிகுதியாக எழுதியது தப்போ என்று பயந்து போனேன். ஒரு நாள் மெல்ல வீட்டுக்கே போய் அவனைக் கண்டேன். அப்படி எழுதக் கூடாது என்றும், அந்தப் பாவம் போக வேண்டுமானால் மிகுதியான ஆயிரத்தைத் தனியாகக் கத்தரித்து எடுத்து இன்னும் தொண்ணூற்றொன்பதாயிர முறை எழுதி அதனை மற்றொரு லட்சம் ஆக்க வேண்டும் என்றும் சொன்னான். அப்படியே சரியாக மற்றொரு லட்சம் ஸ்ரீராம ஜெயம் முடித்த பிறகுதான் ஆறுதலாயிற்று. தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரிவரைக்கும் வந்து பி.ஏ. பட்டமும் பெற்றேன். ஆனால் அந்த என் குரு எட்டாவதுக்குமேல் எட்டவே இல்லை.
இப்படிச் ‘செந்தாமரை’யை எத்தனை முறை எழுதினேன் என்று தெரியவில்லை. இன்னொரு கிளர்க் என்னைப் பார்த்து, “என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? தலைவலியா, ஏதாவது கவலையா?” என்றார். “தலைவலிதான்; அரைநாள் விடுமுறை எழுதிவிட்டுப் போகலாம் என்றிருக்கிறேன்” என்று சொல்லி அவரிடத்திலேயே எழுதிக்கொடுத்து இரண்டு மணிக்குப் புறப்படலானேன்.
அதற்குள் மருதப்பனுடைய நினைவு வந்தது.. டெலிபோனில் கூப்பிட்டேன். ‘தென்ற ‘லிலிருந்து பேசினான். “கோடம்பாக்கம் போகிறேன், வருகிறாயா?” என்று கேட்டேன். “சரி, தெரிந்துகொண்டேன், நீ மட்டும் போய்வா. அவசரப்படாதே. பொறுமையாக நடந்துகொள். புதன்கிழமை துணைவியோடு வருவேன்” என்றான். நேராகப் போனால் மூன்று மணிக்கெல்லாம் போய்ச் சேரலாம்; திலகம் மட்டும் தனியாக இருப்பாள்; செந்தாமரையைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைந்து விரைந்து சென்றேன்.
திலகம் தனியாக இருந்தாள்; உள்ளொளி படித்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், “பூங்கொடியை ஏன் அண்ணா அழைத்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டாள். ஆபீசிலிருந்து நேரே வந்ததைக் கூறி வீட்டுக்கே வந்து பூங்கொடியைப் பார்க்குமாறு அழைத்தேன். புதன்கிழமை மருதப்பன் மனைவியோடு வரப்போவதாகத் தெரிவித்தேன். திருநாதரின் குடும்பத்தாரின் தொழில், குணம், மற்றநிலை எல்லாம் கேட்டேன். மனமகிழ்ச்சியான பதில்களே கூறினாள். “சித்தூரில் அந்தக் குடும்பத்துக்கும் வேசித்தொழிலுக்கும் தொடர்பு உண்டா?” என்று கேட்டேன். தூய்மையான வாழ்க்கை என்றும், நாலாம் பாட்டியின் காலோடு அந்தத் தொழில் அற்றுவிட்ட தென்றும் கூறினாள். திருநாதனைப் பற்றியும் புகழ்ந்து பேசினாள். அதே மூச்சில் மருதப்பனுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டதும் கேட்காததுமாய்ச் சமையலறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரம் கழித்து வந்தாள்.
அப்போது செந்தாமரையைப் பற்றிக் கேட்டேன்.. ஓடிப்போய் ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு வந்து காட்டினாள். அதில் மருதப்பனும் நானும் உட்கார்ந்திருந்த நிலை ஒவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. மருதப்பன் என்னைவிடப் பொலிவாக அமைந்திருந்தான். நான் ஏதோ ஒருவகைக் குழப்பம் நிறைந்த முகத்தோடு இருந்தேன். இந்தப் படத்தைத் திலகமே எழுதினாளோ என்று ஐயுற்றேன். ஆனால் படத்தின் கீழே “செந்தாமரை” என்று எழுதி ஒரு கேள்விக் குறி இடப்பட்டிருந்தது. செந்தாமரை ஓவியப்புலமை உடையவள் என்றும், களங்கமற்ற உள்ளத்தினள் என்றும் அறிந்தேன். உணர்வு வேண்டும் என்று மருதப்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. மேலுக்குப் பொய்யாக நடிப்பதில் வல்லவளோ எனக் கேட்டேன். அதைத் திலகம் அடியோடு மறுத்து, “எனக்குக் கோபம் வந்தால் கால்மணி நேரம் பொறுத்து வரும்; பொறுத்தே நீங்கும். அவளுக்கு உடனே வரும், உடனே நீங்கும். என்னைவிட அவள் நல்லவள்” என்றாள். என் மனம் ஆறுதல் அடைந்தது. திலகம் காப்பி வைக்கச் சென்றாள். நான் தனியே எண்ணக் கடலுள் ஆழ்ந்தேன்.
யாரோ வருவது தெரிந்தது; எதிர்பார்த்தேன். செந்தாமரை வரக் கண்டேன். என் இரு கைகளையும் நீட்டி ஏந்தினேன். கையில் இருந்த இரண்டு புத்தகங்களை அப்படியே கொடுத்துவிட்டு நேரே சமையலறைக்குச் சென்றுவிட்டாள். புத்தகங்களைத் திறந்து பார்த்தேன். அவற்றில் ஒன்றும் இல்லை. செந்தாமரை அவற்றில் இல்லை. முதல் பக்கம் பார்த்தேன். சி.செந் தாமரை என்று எழுதியிருந்தது. நான் அதன் கீழே அதே போல் இ.செந்தாமரை என்று எழுதினேன். அதற்குள் சிற்றுண்டி வந்தது. திலகம் எடுத்து வந்தாள். முதல்நாள் போல் செந்தாமரையை எதிர் பார்த்தேன். இவள் போனபின் அவள் வருவாள் என எண்ணினேன். காப்பியும் திலகமே கொண்டு வந்தாள். சமையலறையை விட்டு அவள் வரவில்லை. மருதப்பனுடைய அறிவை மெச்சினேன். காதல், உள்ளத்தின் ஆழம் காண்பதுதான்; மேலே மிதப்பது அல்ல.
– தொடரும்…
– செந்தாமரை, முதற் பதிப்பு: 1948, பாரி நிலையம், சென்னை.