சுமையும் வறுமையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,538 
 
 

ஒரு காவடித் தண்டு. அதன் ஒரு முனையில் பதலை தொங்குகிறது. மற்றொரு முனையில் குடமுழா தொங்குகிறது.

அந்தக் காவடித் தண்டைத் தூக்கிக் கொண்டு, தன் சுற்றத்தாரோடு, புரவலரை நாடிப் பரிசு பெறச் சென்ற விறலி , வெயில் காரணமாய் ஒரு காட்டிடையே தங்கியிருந்தாள்.

அதியமானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒளவையும் அக்காட்டிடையே வந்து தங்கினாள்.

விறலியும் ஒளவையும் ஒருவரை யொருவர் கண்டு அளவிளாவினர். விறலியோ மிகவும் வருந்தினாள்.

“ஒளவை! என் காவடித் தண்டிற்கு இருபுறமும் சுமை. அது போன்றே எனக்கும் இரு புறமும் சுமை. ஒன்று என் சுற்றம். மற்றொன்று, வறுமை. என் மட்பானை வறண்டு கிடப்பதைப் பார், என்று காட்டினாள் ! விறலி.

ஒளவைக்கு உள்ளம் பதைத்தது.

“விறலி! நான் சொல்வதைக் கேள் ! அதியமான் தூரத்தில் இருக்கிறான் என்று கருதி விடாதே!

அதோ பார்! பகைவர் குடியிருப்பைச் சுடுவதால் எழும் புகையை…. அதுதான் போர்க்களம்… யானைகள் நிற்பது கூட நம் கண்களுக்குத் தெரியும்…. மலையைச் சூழும் மேகம் போல், யானைகளைப் புகை சூழ்ந்து கொள்கின்றது. அதனால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!

போ, போர்க்களத்திலும் அதியமான் புரவலனாகவே காட்சி தருவான். உன் மட்பானை என்றும் நிறைந்து வழிய அவன் அருள் புரிவான்.

உலகத்தின் வறுமையைத் தீர்க்கும் செல்வம் படைத்த அவனுக்கு, உன் வறுமையைத் தீர்ப்பதா கடினம்?

மகனே, உன்னை வாழ்த்துகிறேன், போ என்றாள் ஒளவை.

விறலி, காவடித் தண்டைத் தூக்கினாள், அவள் கை வளைகள் கிளு கிளுத்தன; ஒளவையின் உள்ளம் குளுகுளுத்தது.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *