கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 2,420 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

அந்த பிரதான சாலையில் மாதாக்கோவிலும் லுார்து அன்னை ஆங்கில மேனிலைப் பள்ளியும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பரந்து விரிந்து இந்த மாதாக்கோவிலுக்குச் சொந்தமான இடத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. இன்றைக்குப் பரந்து விரிந்து இந்த பெரிய நகரத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பேர் சொல்லும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது

மழலை வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கு படிப்பு. ஒவ்வொன்றிலும் ஏ, பி பிரிவுகள். எல்லா வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். முப்பது ஆசிரியைகளும், முப்பத்திரண்டு வயதில் ஒரு ஆண் உடற்பயிற்சி ஆசிரியரும், இருபது காவி புடவை ஜாக்கெட் சீருடை அணிந்த கன்னிகாஸ்திரிகள் ஆசிரியைகளாகப் பணிபுரிகிறார்கள். கன்னிகாஸ்திரிகள் எல்லாருமே முப்பது வயதுக்கும் குறைவு. இதே சீருடை அணிந்த கன்னிகாஸ்திரி தலைமை ஆசிரியைக்கு நாற்பது வயது. இது இல்லாமல் இவர்களுக்கெல்லாம் தலைவியாய் வெள்ளுடை அணிந்த மதர் சுப்பீரியர். அந்த அம்மாவிற்கு மட்டும் வயது அறுபது. நல்ல தாட்டிகமான உடல். அமைதியின் பிறப்பிடமாய் அருள் வடியும் முகம்.

மதர் சுப்பரீயர், தலைமை ஆசிரியை ஏஞ்சல், கன்னிகாஸ்திரி ஆசிரியைகள் எல்லாருக்கும் தங்குமிடம் பள்ளி வளாகத்தினுள்ளேயே மாதாக்கோவில் சுற்றுச் சுவரை ஒட்டி இரண்டு மாடிக்கட்டிடம். அங்கு சமையலுக்கு இரண்டு ஆயாக்கள். இவர்கள் மாதாக்கோவிலுக்குச் செல்ல வசதியாய் கட்டிடத்தை ஒட்டி ஒரு சின்ன கேட்.

மதர் சுப்பிரீயர், தலைமை ஆசிரியைக்கு மட்டும் கீழே அறைகள். மற்ற எல்லா கன்னிகாஸ்திரி ஆசிரியைகளுக்கும் மேல் மாடியில் அறைகள். பள்ளிக்கட்டிடங்கள் உச்சி இந்த ஆசிரியைகள் அறைகளின் ஜன்னல்களிலிருந்து பார்த்தால் மாதாக்கோவிலும் அதற்கு முன்னுள்ள பாதிரியார் தங்குமிடமும் சரியாகத் தெரியும்.

இரண்டு அறைகள், ஒரு ஹால், அதை அடுத்து முன் பக்கம் இரண்டு சதுர அளவிற்கு நீள வராண்டா உள்ள மேல் மாடிதான் சாமியாரின் இருப்பிடம். கீழே கோவிலுக்குத் தேவையான பொருட்கள் உள்ள பெரிய அறை. இரும்புக் கதவில் பெரிய பூ ட்டு. எல்லா சாமியார்களும் வீட்டினுள்ளே அடைந்து கிடப்பதில்லை. பூ சை, வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் வாசல் வரண்டாவில் உட்கார்ந்து வெளிகாற்று வாங்குவார்கள். புத்தகம், தினசரி, வார, மாத சஞ்சிகைகள் படிப்பார்கள். பொது மக்கள் குறைகள் கேட்பார்கள். முக்கியமானவர்கள் வந்தாலும் உட்கார வைத்துப் பேசுவார்கள்.

சென்ற மாதம் திருச்சியிலிருந்து திடுதிப்பென்று ஒரு பெரிய சாமியார் வந்தார். கோயில் சாமியாரும் அவரும் இந்த வரண்டாவில் அமர்ந்துதான் பேசினார்கள். ஆசிரிய கன்னிகாஸ்திரிகளெல்லாம்… அவர்கள் அறை சன்னல் வழியாகத்தான் அவரைத் தரிசித்து பரவசமடைந்தார்கள். காரணம் இவர்கள் வாழ் நாளிலேயே காணாத சாமியார் அவர்.

ஞாயிறு. மாலை மணி 5.45.

மாதாக்கோவிலில் செபத்திற்கு பொதுமக்கள் கூட்டம் சேர சேர… பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஏஞ்சலுக்கு இருப்பு கொள்ளவில்லை. காரணம், சமையலுக்குக் காய்கறிகள் வாங்க ஆட்டோவில் புறப்பட்டுச் சென்ற பிலோமினா, அவளுக்குத் துணையாக சென்ற காதரீனை கன்னிகாஸ்திரிகள் இன்னும் திரும்பவில்லை. காணோம்.!

சரியாய் ஆறுமணிக்கெல்லாம் அவர்கள் செபத்தில் அமர்ந்துவிட வேண்டும். தாமதமாக வந்தால் சாமியார் கோபிப்பார்.

“நாமதான் இறைவனுக்குத் தொண்டு செய்யுற முதல் ஆள். அவருக்கு நம்மை அர்ப்பணிச்சிருக்கோம். அவருக்காக நாம காத்திருக்கனுமேத் தவிர நமக்காக அவர் காத்திருக்கக் கூடாது. பூசைக்குச் சரியான நேரத்துல வந்து மத்தவங்களுக்கு நாம முன்னோடியாய் இருக்கனும், வழிகாட்டியாய் நிக்கனும். அப்போதான் நம்ம மத பாமர மக்களுக்கு நம்ம மேல மதிப்பு மரியாதை வரும். கர்த்தருக்கும் நாம தர்ற மரியாதை அதுதான்.” சொல்வார்.

சென்ற மாதம் இப்படிதான் ஏதோ ஒரு காரணத்திற்காக பூசை நேரத்திற்குப் போய் அமர… அவளைப் பழைய சாமியார் பிடித்து விட்டார். ஒரு பிடி பிடித்தும் விட்டார்.

இன்றைக்கு புது ஆள். எப்படி இருப்பார், குணநலம் என்ன, என்கிற உதுவும் தெரியாத அறிமுகமில்லாத புது முகம். அப்படி இருக்கும் போது தாமதாமாகச் சென்றால்..? ஏஞ்சலுக்கு நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

‘கர்த்தரே ! முதல் கோணல் முற்றும் கோணலாகிடக் கூடாது. வெளியில போனவங்க சீக்கிரம் வரணும். எங்களைக் காப்பாத்தனும்!’ வேண்டினாள்.

தன் அறைக்கும் வாசலுக்கும் நடையாய் நடந்து தவித்தாள்.

இவள் வேண்டுதல் பலித்தது போல ஆட்டோ பள்ளிக்கூடத்தின் பிரதான கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது.

‘அப்பாடி!’ என்று உயிர் பிழைத்த ஏஞ்சல் அதை நோக்கி ஓடினாள். அதற்குள் அது இவர்கள் இருப்பிட வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து பிலோமினாவும் காதரீனும் குதித்தார்கள்.

“ஏன் இவ்வளவு தாமதம் ?”

“வழியில ஆட்டோ கோளாறு. சரி பண்ணிக்கிட்டு வர்றோம்.”

“சீக்கிரம் ஓடுங்க பூசைக்கு நேரமாயிடுச்சு”.

அவர்கள், இவள் சொல்வதற்கு முன்பே அறைகளை நோக்கி ஓடினார்கள்.

“நீ கறிகாய் மூட்டையை இறக்கி வைச்சுட்டுப் போப்பா.”

ஏஞ்சல் ஆட்டோக்காரனுக்கு உத்தரவிட்டு திரும்பி விடுதிக்குள் உள்ளே நுழைந்தாள்.

ஆட்டோக்காரன் அவள் சொன்னதைச் செய்துவிட்டு வெளியே பறந்தான்.

நல்ல வேளையாய் இவர்கள் மூவரும் தங்கள் கூட்டத்தோடு போய் அமர்ந்தும் பூசை ஆரம்பிக்கவில்லை. சாமியார் மக்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு பீடத்திலிருக்கும் மாதா அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் கடைசியாய் வந்ததும் அவருக்குத் தெரியாது.

இவர்கள் மண்டியிட்டு கண்களை மூடி கர்த்தரை நினைக்க ஆரம்பித்தார்கள்.

எல்லாம் சரி பார்த்து திரும்பிய சாமியார் லாரன்ஸ் மாதா முன் மண்டியிட்டிருக்கும் மக்களைப் பார்க்கத் திரும்பினான்.

முப்பது வயது. மழமழவென்று மழிக்கப்பட்ட நல்ல களையான முகம். வெள்ளை அங்கியும், அதன்மேல் கழுத்தில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட சுருவமும் அவன் உருவத்திற்கு எடுப்பாக இருந்தது. மொத்தத்தில் அவன் தெய்வீக களையில் இருந்தான்.

மக்கள் பய பக்தியுடன் கண்களை மூடி பூ சைக்குத் தயாராய் இருந்தார்கள்.

“பரலோகத்திலிருக்கும் பரம் பிதாவே!” லாரன்ஸ் கணீரென்ற குரலில் செபத்தை ஆரம்பித்தான். அவன் உருவத்தைப் போலவே குரலும் எடுப்பாக இருந்தது.

“பரலோகத்திலிருக்கும் பரம பிதாவே!” மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போல் மக்கள் குரலும் அவன் உச்சரிப்பிற்குப் பிறகு வெளியே வந்தது.

“உங்கள் நாமம் அர்ச்சிக்கப்படுவதாக…”

“உங்கள் நாமம் அர்ச்சிக்கப்படுவதாக…” செபம் தொடர்ந்தது.

மேரிஅன்னை… ஏசுவான தன் அருள் வடியும் குழந்தையுடன் புன்னகை ததும்பும் முகத்தோடு செபத்தை ரசித்து மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரத்திற்கும் மேல் செபம் தொடர்ந்தது. அதற்கு அடுத்தப்படியாய் பூ சை தொடங்கி முடிந்தது. மக்கள் எழுந்து சாமியாரிடம் தீர்த்தமும் அப்பமும் வாங்க தயாரானார்கள். வரிசையாய்ப் போய் ஒவ்வொருவராய் வாயில் வாங்கி நகர்ந்தார்கள்.

லாரன்ஸ் கொஞ்சமும் வாடாமல், வதங்காமல், புன்னகை மாறாமல் எல்லாருக்கும் அப்பமும் தீர்த்தமும் கொடுத்துக் கொண்டிருந்தான்.

மக்கள் கூட்டம் கரைய கரைய…. இந்த பள்ளிக்கூடத்து மக்களும் தயாரானார்கள். முதலில் மதர் சுப்பீரியர், அடுத்து… தலைமை ஆசிரியை ஏஞ்சல், எலிசபெத்… தொடர்ச்சியாய் மற்றவர்கள்.

கடைசியாக சென்ற பிலோமினா ஆளைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

லாரன்சுக்குள்ளும் அதே இடி!

அதிர்ச்சியின் தாக்கம் பூசை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பிய பிலோமினா யாருடனும் பேசவில்லை. சரியாய்ச் சாப்பிடவும் இல்லை. அறையில் துாக்கம் வராமல் புரண்டாள். கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து எழுந்தாள். ‘எப்படி?’ உலவினாள்.

‘லாரன்சுதானா?’ அவளுக்குள் சந்தேகம் எழுந்தது நெஞ்சுக்குள் கொண்டு வந்து பழைய முகத்தையும் இன்று கண்ட புது முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

‘சந்தேகமே இல்லை.’ தெளிவாகத் தெரிந்தது.

‘எப்படி? எப்படி?’ மறுபடியும் மறுபடியும் மனசுக்குள் போராட்டம், கேள்விகள்.

லாரன்சுக்கும் உறுத்தலாகத்தானிருந்தது.

கல்லுாரி நாட்கள் அவன் மனசுக்குள் விரிந்தது.

அத்தியாயம் – 2

பிலோமினாவும். லாரன்சும் ஒரே ஊர்க்காரர்கள். அடுத்தடுத்தத் தெரு. இன்னும் சொல்லப் போனால்… பிலோமினாதான் பூர்வீகம். ஊரில் பெரிய பணக்காரர், கரை வேட்டிக்காரர்.

லாரன்சு வாடகைக்குக் குடி வந்த வெளியூ ர் குடும்பம். அப்பா தாலுகா அலுவலகத்தில் உதவி தாசில்தார். பூ ர்வீகம் திருச்சியை அடுத்து ஒரு குக்கிராமம்.

அப்பா மாற்றல் சம்பந்தமாக இங்கே வாடகை. முதலாண்டு பட்டப்படிப்பில் கல்லுாரியில் சேர்ந்த அன்றே…..

இவன் பிலோமினா அழகைப் பார்த்து சொக்கி விட்டான். வயசு கோளாறு, மோப்பம் பிடித்து பின்னாலேயே சென்று நோட்டமிடும் போதுதான் தன் தெருவிற்கும் இவள் அடுத்தத் தெரு என்று தெரிந்து போக…. மனம் மிகவும் கொண்டாட்டம் போட்டது.

அடுத்த நாளிலிருந்து அவளுடன் பேச, பழக ஆசை. “எக்ஸ்கியூ ஸ் மீ !” கல்லுாரி வளாகத்திலேயே மறைத்தான்.

“எஸ்!” நின்றாள்.

“நான் உங்க தெருவுக்கும் பக்கத்துத் தெரு”.

“அப்படியா?!” அவள் ஆச்சரியப்பட்டு கண்களை விரிக்கவில்லை. மாறாக…

“சந்தோசம்.” மெல்ல சொன்னாள். அதிலேயே அவள் அடக்கம், அமர்த்தல் தெரிந்தது.

“அப்பா உதவி தாசில்தார்.”

“மகிழ்ச்சி“

“எனக்கு உங்க தமிழ் புத்தகம் வேணும்.”

“எதுக்கு?”

“படிக்க“

“உண்மையிலேயே படிக்க வேணுமா?. இல்லே என்கிட்ட பேச, பழக கேட்குறீங்களா?” இப்படி அவள் தடாலடியாய்க் கேட்பாளென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அதிர்ந்தான்.

“இல்லே. வாங்கலை.” சமாளித்தான்.

“ஏன்?”

“கெடைக்கலை.” ஒரு பொய்யை மறைக்க அடுத்தும் பொய்.

“உங்களுக்கு ஆம்பளைங்க கிட்ட வாங்கிப் படிக்கும் பழக்கம் இல்லையா?”

‘மட்டையடி! தலையில் அடுத்த கொட்டு!’ சென்றாள்.

இவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு திரும்பினான். இரண்டு நாட்கள் அவள் முகத்தில் விழிக்கவே வெட்கம். பார்க்கவே தெம்பு இல்லை.

பிலோமினா யாரையும் லட்சியம் செய்யும் சாதியாய் இல்லை.

“எல்லாம் பணத் திமிர்!” அவள் அலட்சியப் பார்வையில் அடிபட்ட எத்தனையோ மாணவர்கள் முணுமுணுத்தார்கள். லாரன்சு மறுபடியும் கொக்கிப் போட்டான்.

“அன்னைக்கு நீங்க தப்பாப் பேசிட்டதாய் என் மனசுக்குப் படுது.” வழி மறைத்து சொன்னான்.

“‘இல்லியே சரியாய்த்தானே பேசினேன்.”

“புத்தகம் இருக்கு, இல்லே, கொடுக்க முடியாதுன்னு சொல்லாம எதுக்கு அநாவசியப் பேச்சு?”

“அநாவசியமா நடக்கிறவங்ககிட்ட அப்படித்தானே பேசனும் ?”

“….”

“பேச்சு, பழக்கம் நட்பாகும். நட்பு காதலாகும். படிக்கிற வயசுல மனசுல அநாவசிய கனவுகள், சுமைகள் தேவை இல்லேங்குறது என் எண்ணம். மனம் சுத்தமாய் இருந்து தேவைப்பட்ட போது போது தேவையானதை எழுதினா.. எழுத்துப் பளிச்சுன்னு தெரியும்! எனக்கு இப்போ நல்லா படிக்கத்தான் விருப்பம்.”

“என்னவோ தத்துவம் பேசறாப் போல தோணுது?!”

“யோவ்…! போய்யா போ!”

“ஜெயம். சுதா நெனப்புடி உனக்கு.” முணுமுணுத்து திரும்பினான்.

அடுத்த சந்திப்பில்….

“ஏன் பிலோமினா உன் மனசுல காதலே இல்லியா?”

“இல்லை!”

அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“உங்க அந்தஸ்த்துக்கும் என் அந்தஸ்த்துக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. என் அப்பா நான் ஒரே பொண்ணுங்குறதுனால பெரிய இடத்துல சம்பந்தம் போட்டு நல்லா வாழ வைக்க பெரிசா கனவு கண்டுக்கிட்டிருக்கார். அந்த கனவு கலைஞ்சா தாங்க மாட்டார். அதனால காதல்ங்குற வார்த்தையையே மனசுலேர்ந்து எடுத்துட்டேன். ஆண்கள் பழக்க வழக்கத்தையும் வெறுத்துட்டேன்.”

“வேடிக்கையாய் இருக்கு.”

“வேடிக்கை இல்லே. அருமையாய்ப் பெத்து வளர்த்தவங்களுக்கு நம்மால கஷ்டம் வரக்கூடாது என்கிற ஜாக்கிரதை.”

பிலோமினா மனசு பிடித்துப் போக இவனுக்குள் அவள் அடர்த்தியானாள். தாடிமீசை வளர்க்க….

“மச்சி! உனக்கும் அல்வாவா?! மனசைத் தேத்திக்கோ. அடுத்த ஆள்… பாரு. நம்ம மாலா வழியறா. கண்ணாலேயே ஆட்களைக் கலக்குறாள், கவுக்கிறாள். நமக்கெல்லாம் அவதான் லாயக்கு. காதல் ஒரு வழி பாதையல்ல. பல வழிப் பாதை. அஞ்சு வயசுலேர்ந்து ஆயுசு முடியற வரை பலமுறை வரும்.” பாதிக்கப்பட்டவர்கள் புத்தி சொன்னார்கள்

“என்ன அதிர்ச்சியாய்ப் பார்க்குறே? காதல் அனிச்சப் பூ இல்லே. அல்லிப் பூ. நிலவு விதவிதமாய் முகம் காட்ட அது மலரும். புரியலையா? பவுர்ணமியில மட்டும் அல்லிப்பூ பூக்கிறதில்லை. வளர்பிறை, தேய்பிறை.. நிலவு எப்படி அது தலை காட்டினாலும் பூக்கும். அல்லி நிலவுக்கு மட்டும் சொந்தமில்லே மச்சி. சூரியனையும் அது கைக்குள்ள போட்டு வைச்சிருக்கு. பகல்லேயும் பல்லை இளிச்சிக்கிட்டுப் பூத்து இருக்கும். ”

லுாரன்ஸ் எவன் பேச்சையும் கேட்கவில்லை, துவளவில்லை.

அடிமேல் அடி அடித்து அம்மியை அசைத்துவிட்டான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *