சுட்டும் விரல் – திருக்குறள் கதை (448)
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2013
பார்வையிட்டோர்: 12,344
தவறு எங்கே நடந்தது ?. இந்த வருட விற்பனையும் லாபமும் கடந்த ஐந்து வருடங்களை விட குறைந்திருந்தது. வீட்டில் மனைவியிடம் என் குழப்பத்தை பகிர்ந்து கொண்டேன்.
மனைவி ஆரம்பித்தாள் ” ஒரு வேளை நீங்கள் எல்லா டிபார்ட்மெண்டுக்கும் டார்கட் சரியாக … … அதற்குள் இடை மறித்து சொன்னேன் எல்லா டிபார்ட்மெண்டுக்கும் டார்கட் நிர்ணயித்ததே நான் தானே. கடந்த ஒரு வருடமாகவே பிளானிங், உற்பத்தி, விற்பனை, மார்க்கட்டிங் எல்லோரையும் விடாமல் வேலை வாங்கி இருக்கிறேன்.
மனைவி மீண்டும் ஆரம்பித்தாள் ” ஒரு வேளை முழு ஒத்துழைப்பு கொடுக்காமல்……..என்றவுடன் மறித்து சொன்னேன். மீட்டிங்கிலேயும் எல்லாரும் ஒத்துழைத்தார்கள், என் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். யாரும் எதிர்த்துப் பேசினதே இல்லையே ? என்றேன்.
ஒரு வேளை அனுபவம் இல்லாமல்……… என்ற மனைவியை மேலே பேச விடாமல் சொன்னேன் ” எல்லோரும் சுமாரான அனுபவம் உள்ளவர்கள்தான், . நான் டெக்னிகலாக சொல்லுவதை மறுத்துப் பேசும் அளவு யாரும் முதிர்ந்தவர்களோ, அனுபவசாலிகளோ கிடையாது . ஆனாலும் நான் தான் கிட்டத்தட்ட எல்லா டிபார்ட்மெண்டிலும் அனுபவம் உள்ளவன் ஆச்சே ? என்றேன்.
சிரித்துக் கொண்டே “வீட்டைப் போல்தான் ஆபீசிலும் இருப்பீர்களோ” ? என்றாள் ஒரு உள் அர்த்தத்துடன். .
புரியவில்லையே ! என்றேன்.
என்னை ஒரு முறை கூட முழுசாகப் பேசவே விடவில்லை. நான் என்ன கருத்தை சொல்லப் போகிறேன் என்பதை நீங்களாகவே யூகித்து ஒரு முடிவுக்கும் வந்து விட்டீர்கள். இதில் என்னுடைய கருத்துக்கோ அல்லது மாற்றுக் கருத்துக்கோ எங்கே இடம் கொடுத்தீர்கள் ?
உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் ஆனாலும் உங்கள் முடிவுகளில் உள்ள தவறுகளைச் நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் ஒரு சூழ் நிலையை நீங்கள் உருவாகித் தரவில்லை.. பலர் கூடி வேலை பார்க்கும் இடத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு மரியாதையும் மறுத்துப் பேசுபவர்களுக்கு மதிப்பும் இல்லையென்றால் இப்படித்தான் ஆகும் என்றாள்.
இதைத்தான் திருவள்ளுவர் 448 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் ( 448 )
பொருள் : குறையை எடுத்துச் சொல்லுவோர் அருகில் இல்லாத போது, கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் கூட மன்னன் கெட்டுப் போவான்.
இதில் எனக்குப் புரிந்தது ஒன்று புரியாதது ஒன்று
புரிந்தது : இந்த தாடி வைத்த வள்ளுவக் கிழவன் எப்படியெல்லாம் யோசித்திருக்கிறான்.
புரியாதது : மனதில் பட்டதை பளிச்சென்று, பட்டவர்த்தனமாய்ச் சொல்லும் இந்த மேலாண்மைத் தத்துவத்தை இந்த மனைவிமார்கள் எங்கிருந்து கற்றார்கள் ?