சுட்டதொரு சொல்





மிகவும் குரூரமாக வாழ்வினின்றும் தூக்கி எறியப்பட்டுக் கரை ஒதுங்கி
இருட்டில் முகம் மறைந்து வாழும், மீரா என்ற அந்த அபலைப் பெண் குறித்த வாழ்க்கை வழக்கு நீதி கேட்டுச் சபை ஏறி வென்று விடக்கூடிய ஒரு சாதாரண வழக்கல்ல நித்திய சோகமாகிவிட்ட , அவளின் கண்ணீருக்கும் அதுவே முடிவாகிப் போன இந்த வாழ்க்கை வழக்கிற்கும் உண்மை அறிந்த ஒரு நேரடி சாட்சியாக வந்து பேசக்கூடியவர் கடவுள் ஒருவர் மட்டும் தான். அப்படித் தான் அவர் நேரில் வந்து சாட்சி சொல்ல முடிந்தாலும் இது ஒரு வழக்காக எடுபடக் குற்றவாளி கிடைக்க வேண்டுமே.
கண் முன்னாலேயே கொலை செய்து விட்டு ஓடுகிறவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை இந்த மானஸீக மனம் பற்றிய உணர்வுக் கொலைகாரனா பிடிபடப் போகின்றான்? கொலைகாரனல்ல கொலைகாரி. மீராவோடு ஒன்றாகப் படித்தவள் பண்பட்ட ஒரு கல்லூரி மாணவியாகத் திகழ வேண்டிய அந்தச் சுபா, கேவலம் அழகு மயமான உலகில் கொடிகட்டிப் பறக்கும் பிரமை மாறாமலே கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்ட பாவத்தால் நேர்ந்த கொடுமை இது. இதனால் மீராவுக்கு வாழ்க்கை போனது மட்டுமல்ல அவளைப் பெற்றெடுத்த அம்மாவும் தான் சதா தீக்குளித்து மாய்ந்து போகின்றாள். தினமும் மீராவுடன் போராடிப் போராடியே அவள் மனமும் செத்து விட்டது. உயிர் வாழ்க்கையெல்லாம் வெறும் பொய்யாகிப் போன கனவு போல் பட்டது.. எதை உண்மையென்று நம்பினாளோ அதுவும் வீழ்ந்தது,. அவள் கண் முன்னாலேயே ,பற்றியெரிந்து, வேரோடு கருகி உயிர் மறைந்து கிடக்கிற மீராவை உண்மையென்று நம்ப வைத்த வாழ்க்கை மீதான தன் அறிவு மயக்கத்தை எண்ணி அவள் தன்னையே நொந்து கொண்டாள். சுபாவின் ஞாபகம் நெஞ்சைச் சுடும் போது, அது கூடத் தவறென்றே படும். அவள் மட்டும் குறுக்கிடாவிட்டால் மீரா எப்படியெல்லாம் படித்து முன்னுக்கு வந்திருப்பாள்.. அவள் கனவு கண்ட மாதிரி ஒரு கணித மேதையாகக் கூட வந்திருப்பாளே!
தன் படிப்புக் கனவை நிறைவேற்றுவதற்காகத் தன் நோஞ்சான் உடம்போடு அவள் வெகு தூரம் களைக்கக் களைக்கச் சைக்கிள் ஓடி வரும் போது அவளுக்கு வெகுவாக மூச்சு வாங்கும்
இணுவிலிருந்து கந்தர் மடம் சந்தி வரை என்றால் எவ்வளவு தூரம்? பஸ் ஓடின காலமென்றால் பரவாயில்லை தட்டாதெருச் சந்தியில் இறங்கி அப்பால் கொஞ்சத்தூர நடைதான். இவ்வளவு கஷடங்கள் பட்டும் கடைசியில் வாழ்க்கையில் அவள் எதையுமே சாதிக்க முடியாமல் இப்படிச் சிறகொடிந்து போனாளே!
இழந்தது சிறகல்ல மனம் .அது சிதறிச் சின்னாபின்னமாகி உடைந்து போன பின் மருந்து மாத்திரைகள் கூடப் பலனளிக்காமல் , வெட்ட வெளிச் சூனியத்தில் விடப்பட்டது போல், அவள் வெகுவாக மனம் குழம்பி எண்ணங்களால் அலைக்கழிக்கப் பட்டுக் காலக் காற்றால் அள்ளுண்டு மறைந்து போன சிறு துரும்பு போலானாள் அவள் சராசரி மனிதர் போல் வாழ முடியாமல், அவள் புதையுண்டு மறைந்து போன இந்த நரகம் அம்மாவின் கண்களில் மட்டும் தான் நிழல் தெறித்து நிற்கும். அவளை உயிரோடு விழுங்க வந்த ஒரு பாழும் வாழ்க்கை விதி. விதியல்ல வழக்கு. மீராவை இப்படி உயிருடனேயே சமாதி கட்டி விட்டு , வாழ்க்கையில் களித்திருக்கும் , முகம் மறைந்து போன சுபாவை எங்கு என்றுதான் தேடிக் கண்டு பிடிப்பது? அப்படிக் கண்டு பிடிக்க முடிந்தாலும், இந்த வழக்கு எடுபடுமா?அவள் அதை நினைவில் கொண்டிருப்பாளா. அவள் உலகமே வேறு உடல் மாயையான அழகில் வேடம் கட்டி ஆடியே , முடி சூடிக்கொண்டு விட்ட அவளுக்கு, மண்ணோடு மண்ணாய் மறைந்து போகும் மீரா போன்ற இந்த அபலை மனிதர்கள் குறித்துக் கவலை தோன்றுமா?
அம்மாவைப் பொறுத்தவரை சுபா வாய் திறந்த அன்றே மீரா உயிர் எரிந்து போன வெறும் நடைப் பிணம் தான். அவளுக்கு உயிர் கொடுக்க அம்மா எவ்வளவு தடவைகள் தீக்குளித்தே எழுந்திருப்பாள்.
சராசரிப் பெண்களைப் போல கல்யாணமாகிக் குழந்தை குட்டிகள் பெற்று, ஒரு நிறைவான வாழ்க்கையை அடைய முடியாமல்,,தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் ஏதுமின்றி வெறும் சூனிய இருப்பிலேயே நிலைகுலைந்து கருகிப் போய்க் கொண்டிருக்கும் மீராவைத் தன் கண்முன்னாலேயே காட்சி வெறுமையாய்க் கண்டு கொண்டு அம்மாவால் எப்படித்தான் உயிர் வாழ முடிந்ததோ?
நிழல் தட்டி வெறிச்சோடிப் போன இவர்களின் வாழ்க்கை வெறுமை அவலங்களுக்கு அப்பால் வெகு தொலைவிலல்ல, துருவத்திலேயே மறை பொருள் ஒளிப் படலங்களாய் கண்களைக் குத்திக் கவிழ்த்து விட்டுப் போகும் துன்ப இருளின் சுவடறியாத அல்லது முற்றாகவே மறந்து போன சந்தோஷ வாழ்க்கை மனிதர்களின் உயி செறிந்த நடமாட்டச் சுவடுகள் மறுபுறம். இதில் அள்ளுப்பட்டு வாழ்வைக் களிக்க முடியாமல் காலத் திரை மூடி மறைந்து போன குரூரம் வெறித்த வெறும் நிழலாய்க் கூடவல்ல மீரா அதிலும் கேவலமாய் உயிர் மரணித்துப் போன வெறும் ஜடமாய் அவள் இங்கு நிழல் தட்டி வெறுமை கொண்டு நிற்பதைக் காணப் பொறுக்காமல் அம்மாவின் பெற்றவயிறு பற்றியெரியும்.
அம்மாவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. மீரா ஒரு பள்ளி மாணவியாய் சிறகு விரித்துப் பறந்த காலம். கொடூர வறுமையினால் தடம் புரண்டு வீழ்ந்து கிடக்கும் தன் வாழ்க்கைத் தேருக்கு உயிரூட்டி அதை ஓட வைக்கவே அவள் விரும்பினாள் அ.தற்காகவே புற உலகப் பிரக்ஞை மறந்து அவள் படிப்புத் தவம் செய்தாள். சுபாவின் தலையீட்டனால் உயரத்தில் பறக்க விரும்பிய அவளின் சிறகே முறிந்து போனது. பொன்னான சிறகுகள்.
இனி அந்தச் சிறகுகள் மீண்டு வருமா? அவள் எழும்பி நடப்பாளா? பறப்பாளா? ஒன்றும் நடக்கப் போவதில்லை. சாத்தான் குடியேறி விட்ட வேதம் போலானது அவளின் கதை சுபா கூறி விட்ட அந்த வேதமே தினமும் அவள் ஓதும் சாத்தான் வேதம்.. அழகு! அழகு!.
டீச்சர் இல்லாத நேரங்களில் சுபாவின் குரலே வகுப்பறையெங்கும் வியாபித்துக் கனதியாய் கேட்டுக் கொண்டிருக்கும். டீச்சரின் மேஜை மீது ஏறிக் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவாறு ராஜாங்கம் நடத்துவாள் அப்போது உலகையே மறந்து போன ஏகாந்த நினைப்பில் முகம் பிரகாசித்து ஒளி விட்டுச் சிரிக்க அவள் தன்னை மறந்து பேசுவதையெல்லாம், கேட்டு ரசித்து மகிழ்ச்சி கொண்டாட, அவளுக்கென ஒரு ரசிகர் கூட்டமே அவளின் காலடியில் ஒன்று திரண்டு காத்து நிற்கும்..அவளின் நிழல் கூடப் படாத வெகு தொலைவில் மீரா. அவள் தனிமை கொண்டிருக்கும் அந்த மேலான படிப்புலகம்.
இவைகளையெல்லாம் புறம் தள்ளி , மறந்து விட்டுச் சுபா தான் வாழ்கின்ற அழகு மயக்கமான கனவுலகிலேயே இன்னும் நிலை கொண்டு பிரமை வெறித்துத் தன்னை மறந்து வாய் வம்பு அளந்து கொண்டிருந்த நேரத்திலேதான் எதிர்பாராத விதமாக மீரா புத்தகப் பையோடு வகுப்பறையை வந்து அடைந்திருந்தாள்.
அவளைப் பொறுத்தவரை மிகவும் துக்கம் தரக்கூடிய ஒரு கரி நாள் அது. சுபா இருப்பதையே அடியோடு மறந்து விட்டவள் போல் அவசரமாக வாசலைக் கடந்து தன் மேசையருகே போனவள்., புத்ஹகப் பையை இறக்கி வைத்து விட்டு வீட்டுக் கணக்கைச் சரி பார்ப்பதற்காகப் பையைத் திறந்து கொப்பியை இழுத்து எடுக்கும் போது, அதனுள்லிருந்து, ஒரு கவர் தவ்றிக் கீழே விழுந்தது. அது வெறும் கவரல்ல அடையாள அட்டை பெறுவதற்காக அவள் அவள் எடுத்துக் கொண்ட படம் அதற்குள் இருந்தது.. குனிந்து அதை எடுக்கப் போனவளைச் சுபாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
“ஏய் மீரா! என்னது என்வலப்புக்குள்ளை. கொண்டு வாரும் பார்ப்பம்”
கொடுக்காவிட்டால் வீண் வம்புதான் அவளே வந்து பறித்தெடுப்பாள் எதற்கு வீண் வம்பு? என்று யோசித்து,, மீரா மெளனமாக அதை எடுத்து அவள் கையில் திணித்து விட்டுத் தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டபோதுதான் அந்த விபரீதம் நடந்தேறியது. அவளின் படத்தை வாங்கிப் பார்த்து விட்டுப் பெருங்குரலில் கொக்கரித்துச் சிரித்து விட்டு நையாண்டியாக மீராவைப் பார்த்துக் கூறினாள் சுபா.
“நல்ல வடிவாயிருக்கு சோமாலியாப் பிள்ளை மாதிரி பிரேம் போட்டுக் கொண்டு போய் ஷோக்கேஸ் மேலை வையும் எல்லோரும் பார்த்து ரசிப்பினம்.”
அவள் சிரித்தபடியே கூறிய அப்பகிடி வார்த்தைகளைக் கேட்டுக் கூடி நின்ற எல்லோரும் கை தட்டி விழுந்து விழுந்து சிரித்தார்கள் இதை மெளனமாகக் கேட்டவாறே கரை ஒதுங்கிப் போய் அமர்ந்திருந்த மீராவுக்கு.த் திடீரென்று உலகமே இருண்டு விட்டாற் போல் வாழ்க்கை பொய்த்துப் போய் சுபா கூறி விட்ட மாதிரிக் குரூரமாக அழகின்றி வெறிச்சோடிக் கிடக்கிற தன் முகமே, தன்னைச் சிலுவை அறைந்து கொன்று தீர்த்து விட்டாற் போல் தன்னுள் வெறுமை கனத்து , முற்றாகவே நிலை அழிந்து போன அவளின் நிலைமையைப் பொருட்படுத்தாமல் , சுபா முகத்தில் கடுப்பேறி, அவளைப் பார்த்து மேலும் சொன்னாள்.
“என்ன மீரா! டியூப் லைட் மாதிரி நிற்கிறீர்! நான் சொன்னதுகாதிலை விழேலையே? உதைக் கொண்டு போய்ப் பிரேம் போட்டு ஷோக்கேஸிலை வையும்”
அதற்கு மீராவிடமிருந்து பதில் வரவில்லை. அதைத் தொடர்ந்து டீச்சர் வந்து விட்டதால் வேறு கவனமின்றி எல்லோரும் படிப்பில் மூழ்கினார்கள் சுபா எப்படியோ.. மீராவுக்கு அன்று முழுவதும் படிப்பிலேயே மனம் செல்லவில்லை. வீட்டுக் கணக்கு ஞாபகம் கூட அடியோடு மறந்து போனது.. பிறரை நேர் கொண்டு பார்க்கவே மனம் கூசியது உண்மையில் தான் யார் என்பதையே, அவள் அறியாமல் போனது தான் பெரிய கொடுமை. அவள் யார்? அவள் பெரிதாய் எண்ணி மோசம் போன அவளின் முகமா? அது தான் வாழ்க்கையா?
முதுமை வந்தால், இந்த முகம் எங்கே? அதில் ஒளி விட்டுக் கண்ணை மயக்கிய அழகு எங்கே? மரணம் வந்து எரிந்து போனால்,, மனிதன் வாழ்ந்த கதையே வெறும் கனவாகிப் பொய்த்துப் போகும்.. இப்படியொரு பொய்க்காகவா மீரா உயிரை விட்டாள்?
இப்போது அவள் கானலில் எரிந்து போன வெறும் ஜடம் தான்.. அவளின் புத்திக்கெட்டாத வெகு தொலைவில், வாழ்க்கை வெளிச்சமும் அதன் மனிதர்களும் நிழல் கொண்டு வெறிச்சோடிக் கிடப்பதாகப் படும். புற வாழ்க்கையே மறந்து போன இருட்டில் நடமாடும் சூனிய உலகம் அவளுடையது. அவளோடு ஒரு நாள் கழிவதே அம்மாவுக்கு ஒரு யுகம் போலத் தோன்றும். இதெல்லாம் அனுபவமாகி எப்படித் தீக்குளிக்க நேர்ந்தாலும், வாழ்க்கையை விட முடியவில்லை மீராவை இப்படிச் சுமை தாங்குவதற்கே வாழ்வில் நிலைத்துத் தான் நீண்டகாலம் உயிரோடு இருக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள்.. எப்படி கழுவாய் சுமந்து மனம் புண்பட்டுக் கருவறுந்து போனாலும் மீண்டும் மீண்டும் அந்த ஜடத்திலேயே உயிர்த்தெழுந்து புடம் கொண்டு வாழப்பழகிவிட்ட அவளுக்கு மீராவை இப்படிப் பாரம் சுமப்பது கூட ஒரு சுமையாகப்படவில்லை. அவளை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக வாழ விடாமல் முழுவதும் ஜடமாக்கி வாழ்வினின்றும் முகம் மறைந்து கரை ஒதுங்கி வாழச் செய்து விட்ட அந்தக் கொடூரச் சம்பவம் ஒரு வழக்காக எடுபடாமல் இருட்டில் மறைந்து போனதே.
அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வழியின்றித் தான் மெளனமாக இருப்பதே பெரும் தார்மீகக் குற்றமாக அம்மாவை வதைத்தது எனினும் மிகவும் துயரமளிக்கின்ற இம் மெளனச் சிறையிலிருந்து விடுபட்டு வெளியேறவும் அவளால் முடியவில்லை திரை மறைவாகிப் போன இவ்வழக்கைப் பகிரங்கப் படுத்தவும் வார்த்தைகள் கிடைக்கவில்லை அன்பிற்குச் சமாதி கட்டி வாழப் பழகியவர்களுக்கு இது புரியப் போவதுமில்லை.
அப்படிப் புரியாவிட்டாலும் கூட மகள் உயிருடனேயே கருகிப் போன தன்னை எரிக்கும் அவளுக்கே வாழ்வாகி மயானப் பாலைவனமாகி விட்ட இந்தச் சாம்பல் மேட்டு வாழ்க்கையின் மீது ஏறி நின்று உரத்துக் கூறுவதாய் அவள் உணர்ந்தாள் என்னவென்று சொல்லி? சொல் வேதம்! அன்பு நிறைக்கும் அருள் வேதம்! சுட்டெரிக்காத சொல்லே வேதம்! ஆம்! அதுவே வேதம்!
– வீரகேசரி 12.08.2007