சிறுகதைகள் புனைய சில உத்திகள்




சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன்
உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா?
ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல் எழுத்தாளனாக ஆகிவிட்டால் என்ன?
அந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான்.
தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது எழுதிவரவும். ஒரே பத்திகூட போதும். இன்ன தலைப்புதான் என்பதும் முக்கியமல்ல. எழுத வேண்டும். அவ்வளவுதான்.
அவ்வளவுதானே! எந்தப் பெண்ணையாவது நினைத்துக்கொண்டு தினம் ஒரு காதல் கடிதம் எழுதினால் போயிற்று!
உதாரணம்: `வெள்ளை’ என்ற தலைப்பில் நான் எழுதியது: ஐஸ்க்ரீம் வெள்ளையாக இருக்கிறது. பனியும், முகத்துக்குப் பூசும் ஸ்நோவும்கூட வெள்ளைதான். அதற்காக ஸ்நோவைச் சாப்பிடவா முடியும்!
சுத்த பேத்தலாக இருக்கிறதே!
கற்பனை என்பது இதுதான். தடை போடக்கூடாது. வருவதையெல்லாம் யோசிக்காது எழுதிவாருங்கள். பிறகு அடித்துக்கொள்ளலாம். அப்போதுதான் தங்குதடையின்றி எழுதவரும்.
ஒரு வரி எழுதிவிட்டு, `இதை இப்படி எழுதியிருக்கலாமோ?’ என்று மாற்றி மாற்றி அமைத்தால், கதை எப்படி முன்னேறும்?
அதுதான் எனக்கு ஒரு காதல் கதைகூட உருப்படியாக எழுத முடியவில்லையோ!
கரு
நீங்கள் எம்மாதிரி கதைகளைப் படிக்க விரும்புகிறீர்கள்? அம்மாதிரியான கதைகளை எழுத முயலுங்கள்.
கேக்கணுமா! காதல் கதைதான்!
ஒருவனுக்குத் தன்னால் — அதாவது, அவனது செயல் அல்லது எண்ணத்தால்; பிறரால்; இல்லையேல் இயற்கை மற்றும் சந்தர்ப்பவசத்தால் தொல்லைகள் நிகழ்கின்றன.
எனக்குத் தொல்லையெல்லாம் இந்த அப்பாவால்தான். இயற்கையாலும்தான். இல்லாவிட்டால், பதினெட்டு வயதுவரை நன்றாக இருந்தவன் இப்போது ஏன் பித்துப்பிடித்தவன்போல் ஆகிவிட்டேன்?
இத்தொல்லைகளை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான், இறுதியில் அவைகளைச் சமாளித்து வெற்றி காண்கிறானா, இல்லை, அவைகளால் வீழ்த்தப்படுகிறானா என்று விளக்குவதுதான் கரு.
கரு என்றால், அம்மா வயிற்றில் இருப்பது இல்லையோ?
ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு, `இது எதனால் ஏற்படுகிறது?’ `ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று பலவிதமாக அலசுங்கள். கதைக்கு எடுத்துக்கொண்ட விஷயம் ஆழமானதாக இருந்தால்தான் கதையில் வலுவிருக்கும். இல்லாவிட்டால், படிப்பவர்கள் மனதில் படியாது போய்விடும்.
நான் ஏன் ஒரு பணக்கார அப்பாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக்கூடாது? இந்தக் கரு ஓகேவா?
கதாசிரியருக்கே எல்லாவித பிரச்னைகளும் ஏற்படும் என்பதில்லை. பிறர் அனுபவிப்பதை தாங்களே அனுபவித்ததுபோல் கற்பனை செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வீண்வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ளச் சொல்கிறீர்கள்! பார்க்கலாம்! எனக்கு இருக்கிற பிரச்னைகள் போதாதா?
இதற்காகப் புதிய அனுபவங்களைத் தேடிப் போகவேண்டும். நான் சில பிரபலங்களைப் பேட்டி கண்டதுடன், பல்வேறு இல்லங்களுக்குப் போய் தகவல் சேகரித்திருக்கிறேன். நோய் முற்றிவிட்ட நிலையில், பூட்டியிருந்த அறைக்குள் அடைபட்டிருந்த தொழுநோயாளிகளுடன் பேட்டி, வீட்டைவிட்டு ஓடிப்போன பதினெட்டுவயதுப் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடம், கணவன்மாரால் வதைபட்ட பெண்களுக்கான ஆதரவு இல்லம் இப்படி பல்வேறு இடங்களுக்குள் பலத்த சிபாரிசுடன் நுழைந்திருக்கிறேன். (சாதாரணமாக, வெளிமனிதர்கள் இங்கெல்லாம் அனுமதிக்கப்படுவதில்லை).
அடடே! எல்லாம் உங்கள் சொந்தக்கதை என்று எண்ணியல்லவா, `பாவம்! வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டிருக்கிறாள் இவள்! என்று பரிதாபப்பட்டுக்கொண்டிருந்தேன்!
பிறருடன் பேசும்போது அவர்களுடைய முகபாவம், குரல் தொனி இதெல்லாம் எனக்கு முக்கியம்.
எனக்கும்தான்.
கற்பனைத்திறன் வளர
மூளைக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான அலுவல்களைக் கவனித்தால், மூளைக்கு அலுப்பு ஏற்பட்டுவிடுமே!
சத்தியமான வார்த்தை! `செல்’லுடன், இல்லாவிட்டால் டி.வி முன் மணிக்கணக்காக உட்கார்ந்து எனக்கும் போரடித்துவிட்டது.
உடற்பயிற்சி, யோகா, அதிகாலையிலோ, மாலையிலோ அமைதியான இடங்களில் உலவுதல் இதெல்லாம் கற்பனையை வளர்க்கும். உலவுவதில்கூட ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாதையில் சென்றால், மூளை அச்செயலை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும்.
அதற்காகத்தானே டவுனில் நிறைய பார்க்குகள் இருக்கின்றன! எல்லா வயதுப் பெண்களும் வருவார்கள், இல்லையா?
எழுத்தாளரின் தன்மை
பல்வேறு பொருள்களைப்பற்றியும், கதாபாத்திரங்களையும் பற்றியும் எழுதவேண்டிய நிலையில், மொழிப்புலமை மட்டும் போதாது.
நீங்க வேற! அதுவே ஒதக்கிதே!
அறிவும் விசாலமாக இருக்கவேண்டும். அனுபவத்தைப் பெருக்கிக்கொள்ள, படிப்பது ஒரு வழி. பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமின்றி, சமூக இயல், உளவியல் இரண்டையும் பொழுதுபோக்காகப் படிக்கலாம். பிறரைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
கல்லூரியிலேயே படிக்க வேண்டியதைப் படிக்காதவன் நான். என்னைப்போய்..! பெண்களை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்காக தனியாக ஏதாவது புத்தகங்கள் இருக்கா?
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். நாம் அதிகம் பேசாதபோதுதான் நமது கண்ணும், காதும் இன்னும் கூர்மையாக வேலை செய்யும்.
எனக்கு அந்தப் பிரச்னையே கிடையாதுப்பா. பஸ்ஸில் போகும்போது பெண்கள் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன்.
பிறருடன் பேசும்போது, அவருடைய கருத்து உங்களுடையதிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அவருடைய நிலையில் உங்களை வைத்துப்பார்த்தால் பிறரது மனப்போக்கு புரியும். நாளடைவில், எவரையும், எந்தச் சூழ்நிலையையும் பகுத்து அறியும் ஆற்றல் பெருகும்.
நான் ஒரு சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பக்கத்து மேசையிலிருந்த ஓர் இளைஞர், `நான் அழகான பொண்ணைக் கட்டமாட்டேம்பா. அவ எனக்கு உண்மையா இருக்காளான்னு யோசிச்சே மூளை குழம்பிடும்!’ என்று தன் நண்பர்களிடம் கூறியது எனக்கும் கேட்டது. நான் சிரிக்காமலிருக்கப் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது.
சே! ஒட்டுக்கேட்பது எவ்வளவு கேவலம்! அப்படியே கேட்டாலும், இதையெல்லாம் போய் யாராவது வெளியே சொல்வார்களோ!
பல வருடங்களுக்குப் பின்னர், அந்த வரிகளே என் மூளையில் சுற்றிச் சுற்றி வர, தி.தி பிறந்தது. sirukathaigal.com-ல் வெளியாகிய இக்கதையை ஒன்றரை வருடத்தில் 17,901 வாசகர்கள் படித்துச் சிரித்திருக்கிறார்கள்.
அடேயப்பா! சந்தடி சாக்கில், எப்படி எல்லாரையும் தன் கதையைப் படிக்க வைக்கிறா!
எதற்கும், எல்லாருக்கும் பயந்தவரா நீங்கள்?
சேச்சே!
`இதைப் படித்துவிட்டு, பிறர் என்னைப்பற்றிக் கன்னாபின்னாவென்று நினைத்தால்?’ என்று அஞ்சுபவர்கள் எழுதுவதில் என்ன புதுமை இருக்க முடியும்? இத்துறையில் நீடித்திருக்க வேண்டுமானால், ஒரு பெண்ணுக்கு அச்சம், நாணம் இதையெல்லாம் சற்றுத் தள்ளிவைக்க வேண்டியிருக்கும்.
இப்போது எந்தப் பெண்ணுக்கு இதற்கெல்லாம் அர்த்தம் புரிகிறதென்கிறீர்கள்?
எழுத்தில் எதற்கு ஆண், பெண் பேதம்? நமக்கு நாமே தடை விதித்துக்கொள்வது கற்பனையைக் கொலை செய்வதுபோல்தான்.
புனைப்பெயரில் ஒளிந்துகொண்டால் ஆயிற்று! அப்பாவின் பெயரில் பாதியை என்னுடையதோடு இணைத்துக்கொண்டு! அப்போதாவது இந்த அப்பா என்னைப் பாராட்டுகிறாரா என்று பார்க்கவேண்டும்.
`நான் எழுதினால், என் கணவர் மகிழ்ந்துபோவார்!’ என்றாள் ஒரு தோழி.
`நீ எழுதவே போவதில்லை!’ என்றேன், தீர்மானமாக.
`பிறர் பாராட்டவேண்டும்!’ என்ற ஒரே குறிக்கோளோடு எழுதிவந்தால், இத்துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.
இவ்வுலகில் எதுதான் நிரந்தரம்!
அடேயப்பா! எனக்குத் தத்துவம்கூட வருகிறதே! மேலே படிப்போம்.
கதை மாந்தர்
உண்மைச் சம்பவம் ஒன்றை அப்படியே நடந்ததுபோலவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை வைத்தோ எழுதினால் சுவை குன்றிவிடும். இங்கேதான் கற்பனை புக வேண்டும். உங்களுக்குத் தெரிந்த நாலைந்து பேர்களின் குணாதிசயங்களைக் கலந்து ஒரு புதிய பாத்திரத்தைச் சிருஷ்டி செய்யுங்கள்.
அப்பா, அப்பா, அப்பா, அப்பா! அவருக்குத்தான் ஒரேமாதிரியான குணம் கிடையாதே!
எழுத ஆரம்பிக்குமுன் உங்கள் கதை மாந்தர்களைப்பற்றி நிறையச் சிந்தியுங்கள்.
ஐயோ!
அவர்களுடைய தோற்றம், முகபாவம், உடலசைவு, பழக்கவழக்கங்கள், எதனால் ஆத்திரம் அல்லது மகிழ்ச்சி அடைகிறார்கள், எந்தப் பின்னணியால் ஒருவர் அப்படி நடக்க நேர்கிறது — இப்படி, பலவற்றையும் யோசியுங்கள். எல்லாவற்றையும் உபயோகிக்க முடியாது. ஆனாலும், உங்கள் கதைகளில் உலவுவோர் உயிர்பெறுவர்.
இப்பவும் உயிரோடதான் இருக்கார். அப்பாவுக்குத் தான் அதிகம் படிக்கவில்லை என்று குறை. யோசிக்காமலே எனக்குத் தெரியும்.
கதாபாத்திரங்கள் சுவாரசியமானவர்களாக, மனோதிடம் கொண்டவர்களாக இருந்தால் கதை படிப்பவருடைய மனதைத் தாக்கும்.
அப்பா என்னைத் தாக்குவது போலவா?
நடை
நடக்கக்கூடவா சொல்லிக்கொடுப்பார்கள் இந்த வயசிலே?
வாக்கியங்கள் ஒரே மாதிரி இல்லாது, நீளமும் குட்டையுமாக மாறி மாறி அமையவேண்டும்.
ஓ! அந்த நடையா!
அதிகம் உபயோகிக்கப்பட்ட வர்ணனைகளைத் தவிர்க்கவும்.
நடைமுறைக்கு ஏத்ததா சொல்லுங்க, மேடம்! பெண்களை வர்ணிக்காம எப்படிக் கவரமுடியுமாம்?
எல்லா நடப்பையும் வெளிப்படையாகச் சொல்லாது, கதாபாத்திரங்களின் உணர்ச்சி, செய்கைவழி காட்டுங்கள்.
எனக்குக் கோபம் வந்தா, சாப்பிடாம வெளிநடப்பு செய்வது போலவா?
உதாரணம்: அங்கே ஒரே குளிர்! (இதில் கதாசிரியரின் குரல் கேட்கிறதே! மிகவும் அவசியமானாலே ஒழிய, தவிர்க்கப்பட வேண்டியது)
நான் கஷ்டப்பட்டு எழுதறேன். என் குரல் கேட்கக்கூடாது என்பது என்ன நியாயம்?
சூடான தேனீரை உறிஞ்சிவிட்டு, கைகளைப் பரபரவென தேய்த்துக்கொண்டாள் (செய்கை). ஸ்வெட்டர் எடுத்துவராமல் போய்விட்டோமே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் (எண்ணம்).
உரையாடல்
அப்பாவைப்போல மகன் பேசுவாளா?
பேசுபவரின் தனித்தன்மை, அதாவது அவரது வயது, சூழ்நிலை, ஆணா, பெண்ணா என்பதெல்லாம் வெளிப்படுமாறு உரையாடலை அமைக்க வேண்டும். இது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
அப்பா என்னை, `தண்டச்சோறு’ என்பார். நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேம்பா.
உதாரணம்: “பெங்களூர் தக்காளிமாதிரி தளதளன்னு இருந்தா!’ என்று ஒரு பெண்ணை வர்ணிப்பவர் சாப்பாட்டுப் பிரியராகவோ, தோட்டக்கலையில் ஈடுபாடு உள்ளவராகவோ இருப்பார்.
PUNCTUATION
கதைகளுக்கு நிறுத்தற்குறிகள் மிக முக்கியம். தலைகீழான காற்புள்ளிகள் (INVERTED COMMAS) ஒருவர் பேச்சுக்கு முதலிலும், இறுதியிலும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால், கட்டுரைபோல் ஆகிவிடும்.
உரையாடல் நீளமாக இருந்தாலும், சுவை குன்றிவிடும்.
அம்மா தொலைபேசியில் பேசுவதை இவ எப்போ கேட்டா?
ஒருவர் நீளமாகப் பேசுவதைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
உதாரணம்: `நல்ல பிள்ளை’ என்ற எனது கதையிலிருந்து:
“பொம்பளையாப் பிறந்துட்டேயில்லே? நீ படவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு!” என்று சமாதானப்படுத்தினாள் பாட்டி. “நேத்து டவுனிலேருந்து ஒரு பெரிய மனுசன் வந்து, வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டுட்டு இருந்தாரு. காடி போட்டுட்டு வந்தாரு!” அழுத்திச் சொன்னாள்.
தன் தலையிலேயே அட்சதை போட்டுக்கிறது என்கிறது இதுதான்!
`கூறினாள்’, `சொன்னாள்’ என்றே எழுதாமல், ` சமாதானப்படுத்தினாள்,’ `விரட்டினாள்’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப எழுதுவது நன்று.
அதாவது, பார்த்தான் என்பதற்கு லுக்கு விட்டான், சைட் அடிச்சான் என்பதைப்போல!
`அவன் ஆச்சரியப்பட்டான்’ என்பதை, `புருவம் மேலே எழுந்தது’ என்றால் இன்னும் தெளிவாகப் புரியும். கேள்வி, ஆச்சரியம் இரண்டிற்கும் புருவம் மேலே போகுமே!
இப்பல்லாம் பொண்ணுங்க புருவத்தை திருத்திக்கிறதால எப்பவும் ஆச்சரியப்படறமாதிரிதான் இருக்குங்கோ!
திருத்தி எழுதுதல்
எப்படியோ ஒரு கதையை எழுதி முடித்துவிட்டீர்கள். அதை அப்படியே வைத்துவிடுங்கள். அதைப்பற்றிக்கூட நினைக்காதீர்கள்.
மத்தவங்ககிட்ட சொல்லிட்டுப்போறேன். பெருமையா இருக்குமே!
அதைப்பற்றிப் பேசுவது கூடவே கூடாது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாகத்தான் ஏதாவது சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஃப்ரெண்ட்ஸ்கிட்டதான் காட்டுவேன். `நல்லா இருக்குடா!’ன்னு புகழாதவன் என் ஃப்ரெண்டே இல்லே.
ஒரு வாரத்துக்குப்பின், அதே கதையைப் படிக்கும்போது, யாருடைய கதையையோ படிப்பதுபோல் அதிலுள்ள குறைகள் புலப்படும். கருவுக்குச் சம்பந்தமில்லாத சமாசாரங்கள் மற்றும் வர்ணனைகளைக் கூசாமல் வெட்ட வேண்டும்.
பாடுபட்டு எழுதினதை வெட்டச் சொல்றது என்னங்க நியாயம்?
பொதுவாக, முதல் மூன்று பக்கங்கள் விறுவிறுப்பாக அமையாது. ஏனெனில், நாம் `மூடு’க்கு வர அவ்வளவு தாமதமாகும். ஆகவே, மூன்றாம் பக்கத்தை ஆரம்பமாகக்கொண்டு, முதல் பக்கத்தை எங்காவது செருகுங்கள்.
முதலில் ஒரு பக்கமாவது எழுதிவிட்டு, அப்புறம் இதையெல்லாம் யோசிக்கலாமே!
நீங்கள் தேர்ந்தெடுத்த பிரச்னை உண்மையிலேயே வாசகருடைய மனதைப் பாதித்திருந்தால், அவரும் அதற்குத் தீர்வு என்னவென்று யோசிப்பார். அதுவே உங்கள் வெற்றி.
எல்லாப் பையன்களுக்கும் என் கதை பிடிக்கும். பரிசும், பணமும் கொட்டப்போகிறது! அப்போ இருக்கு, அப்பாவுக்கு!
`எழுத்தினால் பணம் பண்ண முடியுமா? என்ற கேள்விக்குப் பதில்:
சீக்கிரம் சொல்லுங்க. எப்படியாவது அப்பாகிட்டேயிருந்து தப்பிச்சா போதும்.
விரைவாகப் பணம் பண்ண வேண்டுமானால், பிசினஸ்தான் சிறந்த வழி.
இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருக்க வேண்டியதுதானே! பரீட்சைக்குப் படிப்பதுபோல, நீங்க அறிவுரைன்னு நினைச்சுக் கொடுத்ததை எல்லாம் கஷ்டப்பட்டுப் படிச்சேனே!
இல்லை, அரசியல்வாதியாகவோ, நடிகனாகவோ ஆகலாம். நடிகன் ஆவதற்கு அழகில்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் சற்றுத் திறமை வேண்டியிருக்கும்.
கெடுத்தாளே கதையை! எனக்குத் திறமையோ, அழகோ கிடையாது என்று இவளுக்கு எப்படித் தெரிந்தது?
இனிமேல் இவள் கதைகளை நான் படிக்கவே போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டான் தண்ட ஸோமாஸ். (அப்பா பெயர் தண்டபாணி).
கதை எழுதுகிறானோ, இல்லையோ, புனைப்பெயர் தயார்!
எழுத்தாளராக ஆசை. “உம் உத்தி” உதவும் என்று நம்புகிறேன்… நன்றி ☺
அற்புதம் . இவ்வளவு சுவாரஸ்யமாகவும் கதை சொல்லித் தர முடியுமா?
சிலர் இந்த தளத்தில் என் கதைகளைப் படித்து எழுதக் கற்பதாக எனக்குத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதையே கதையாக்கி உள்ளேன்.
கதாநாயகனின் பிதற்றல்களை புறம் தள்ளிவிட்டுப் படித்தால்,கதை எழுதும் வழிகள் புலன்படும்.
சிறுகதைகள் புனைய சில உத்திகள் என்ற சிறுகதையானது சிறுகதையா ? கட்டுரையா ? என படிக்கும்போது எழுகிறது. இருப்பினும் கதை எழுதுபவர்களுக்கு இச் சிறுகதை மிகவும் உதவியாக இருக்கும். கதாசிரியரின் கற்பனை, எளிய இயல்பான நடை. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை