சினிமா மோகம்!




நிகனுக்கு சினிமா என்றால் வெறி என்றே கூறலாம். அதனாலேயே நித்யானந்தன் என்ற பெயரை நிகன் என மாற்றிக்கொண்டான். தனக்குப்பிடித்த கதாநாயகன், கதாநாயகி நடித்த படங்களை பல முறை பார்த்தவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிகனோ எந்தப்படம் ஓடினாலும் தங்கள் மளிகைக்கடையருகே உள்ள திரையரங்கில் பள்ளி விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் அனைத்துக் காட்சிகளையும் பார்த்து விடுவான்.

இவனது செயலைக்கண்டு பெற்றோர் வருத்தப்பட்டனர். எவ்வளவோ கண்டித்தும் கேட்கவில்லை. பள்ளியில் படிப்பில் படு சுட்டி. முழு மதிப்பெண்களைப்பெற்று முதல் மாணவனாக வந்ததால் பெற்றோரும் ஓரளவு கண்டித்து விட்டு பின் விட்டு விட்டனர். ஆனால் உறவுகள் இவனை தவறாக பேசியவுடன் வருத்தப்பட்டவன் தன் படம் பார்க்கும் போக்கை மாற்றினான்.
தியேட்டர் முதலாளியிடம் பேசி தங்கள் மளிகைக்கடையில் இருக்கும் மிக்சர், முறுக்கு போன்ற திண்பண்டங்களை தியேட்டருக்குள் விற்றால் வருமானத்துக்கு வருமானம். சினிமாவும் இலவசமாகப்பார்த்துக்கொள்ளலாம் என தோன்றிய சிந்தனையைச்செயல் படுத்தியபோது உறவுகள் “இவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான்” என பேச ஆரம்பித்து விட்டனர். தியேட்டர் வியாபாரத்தில் வந்த பணத்தை உண்டியலில் போட்டு சேமித்தான்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் இதுவரை நடிகர்களின் நடிப்பை திரையில் ரசித்தவன் தானே நடிகனாகவேண்டும் எனும் எண்ணம் மனதில் ஊற்றெடுக்க, கோவையை விட சென்னையில் உள்ள கல்லூரியில் படித்தால் படிப்பு முடித்தவுடன் வேலை கிடைக்குமென பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கி சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான்.
விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவதற்கு பதிலாக சென்னையில் உள்ள சினிமா கம்பெனிகளுக்குச்சென்று சிறிய வேடங்களிலாவது நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டான். சிலர் கண்டு கொள்ளவில்லை. சிலர் விரட்டியடித்தனர். சிலர் அலுவலக வேலையைச்செய்தால் வாய்ப்பு தருவதாக சொல்லி அடிமட்ட வேலை கொடுத்தனர். சிலர் பணம் பெற்றுக்கொண்டு அடுத்த வாரம், அடுத்த மாதம் என இழுத்தடித்தனர். ஒரு வாரம் உள்ள அலுவலகம் அடுத்த வாரம் இருந்த சுவடே இல்லாமல் போயிருந்தது.
ஒருமுறை செட்போட பயன்படும் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆந்திரா சென்ற லாரியில் ஏற்றி அனுப்பியதோடு அங்கே உணவு கூட வாங்கித்தராமல் வேலையை வாங்கிக்கொண்டு வெறுங்கையுடன் விரட்டி விட்டனர். லாரி ஓட்டுனர் உதவியுடன் சென்னை வந்தான். சினிமா ஆசை சிறிது சிறிதாக மனதிலிருந்து கரைந்தது. சினிமாவில் வசனம் பேசுவதற்கேற்ப்ப உண்மை வாழ்வில் யாரும் வாழ்வதில்லை. எல்லாமே எதிர்மறையாக இருப்பதையறிந்து வேதனைப்பட்டான். சினிமாவை நம்பி வந்து தங்களது வாழ்வையே மொத்தமாக இழந்தவர்கள் பலரைச்சந்திக்கும் வாய்ப்பும் கிடைந்தது.
ஒரு முறை சிறப்பான வேடம் இருப்பதாகவும், அதற்க்கு பெரிய தொகை கொடுக்க வேண்டும் எனவும் ஒரு இயக்குனர் கூறக்கேட்டு அந்த வருடம் கல்லூரிக்கு கட்டவேண்டிய மொத்த கட்டணத்தையும் கொடுத்து விட்டு பணம் தொலைந்து விட்டதாக வீட்டில் சொல்லி மறுபடியும் பெற்று கட்டணத்தைக் கட்டினான்.
பணம் கொடுத்து நடித்த படம் பொங்கலுக்கு தங்களது மளிகைக்கடை அருகே உள்ள திரையரங்கில் வெளியானபோது, தமது கடைக்கு முன்னே தான் நடித்த முதல் படம் என ப்ளக்ஸ் வைத்து விட்டு உறவுகள், நட்புகளுடன் முதல் காட்சி பார்த்த போது தான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறாதது கண்டு மனமுடைந்து கதறி அழுதே விட்டான். இயக்குனருக்கு போன் செய்த போது சுவிட்ஜ் ஆப் என வந்தது.
நேரில் அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது எடிட்டிங்கில் வினியோகஸ்தருக்கு அந்தக்காட்சி பிடிக்காததால் கட்டாகி விட்டது என்றும் அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு உண்டு எனக்கூறியதை நம்ப, ஏற்க இயலாமல் மனச்சோர்வுடன் கல்லூரி விடுதிக்கு சென்றவன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த, கடைசி வருடமே ஒரு வெளிநாட்டுக்கம்பெனியில் வேலை கிடைக்க, தனது மாமா மகளை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்று வேலை பார்த்தவன், அங்கு சம்பாதித்த பணத்தில் உள்ளூரில் சொத்து வாங்க முற்பட்ட போது சிறு வயதில் தான் படம் பார்த்த தியேட்டர் விலைக்கு வர மகிழ்ச்சியுடன் வாங்கி நவீனப்படுத்தி புதிய படங்களை வெளியிடச்செய்தான்.
சினிமா அவனை கைவிடவில்லை. அவனது ஆர்வத்தை ஏற்று காலம் கடந்தாலும் நன்றியுடன் அரவணைத்துக்கொண்டது தியேட்டர் முதலாளியாக.
‘சின்ன வயசுல எது மேல அதிகமா ஆசைப்படறமோ அது தான் கடைசில கிடைக்கும்னாலும், நம்ம அமைப்புக்கு ஏற்ற மாதிரி, நாம வாழற சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி நினைத்த அதுவே கிடைக்கா விட்டாலும், அது சம்மந்தப்பட்டது ஏதாவது ஒன்றைக்கொடுத்து நாம் விரும்பிய அமைப்பானது நம்மை சாந்தப்படுத்துகிறது’ என்பது மட்டும் நிகனுக்கு நன்றாகப்புரிந்தது.