சினமாறுதல்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மனமொவ்வாத தொன்றை ஒருவன் செய்யக் கண் டாலும், பேசக் கேட்டாலும் மனக் கடுப்பும், ஒத்ததைச் செய்தால் மன உவப்பும் உண்டாவது மக்கள் இயற்கை. மனக்கடுப்பு சினத்தையும், மன முவப்பு தயையையும் உண்டாக்கும். சினத்திலும் ஒருறுதியுண்டு; தவற்றையும் தீங்கையும் அஃது எதிர்க்கின்றது. நமது மதிப்புக்குரிய ஒருவரை வேறொருவர் வருத்தினாலும், அல்லது அவருக் குத் தீங்கிழைத்தாலும் நமக்குச் சினம் மூள்கின்றது. இத் தன்மை யில்லாத ஒருவரைப்பற்றி நாம் வருந்தவேண்டியதே!

தக்க செவ்விகளிற் சினங்கொள்வது ஒவ்வுமே யாயி னும், அது பகுத்தறிவுக்குப் பொருந்தியதாகவு மிருக்க வேண்டும். அது முன்பின் பாராமல் பழிக்குப் பழிவாங் குதலைத் தூண்டும் செயலுக்கு இடந்தரல் கூடாது. அத் தகைய சினத்தை நாம் மனத்தைவிட்டு நீக்கிவிடவேண்டும். சினமூட்டுபவனுடைய சொற் செயல்களின் குற்றத்தை அவனுக்கு அமைதியும் உறுதியுமான சொற்களால் காரணங்காட்டி எடுத்துச் சொல்லி, அவன் இனியும் அக் குற்றம் செய்யாதவாறு திருத்துவதே உண்மைச் சின மாகும்.
நம் மனமொவ்வாத செயல்கள் எண்ணிக்கையற்றவை உலகத்தில் நடந்துகொண்டே யிருக்கின்றன. ஒவ்வொன் றுக்கும் நாம் சினமுஞ் சீற்றமுங் கொண்டிருந்தால், நமது வாழ்க்கையே ஒன்றுக்கும் உதவாமற் போய்விடும். நம்மைச் சார்ந்துள்ளோர்க்கும் அது நம்மீது வெறுப்பை யுண்டாக் கும். பிறர் தம் வெடுவெடுப்புச் சொற்களையும், வெறுக்கத் தக்க செயல்களையும் அமைதியோடு பொறுத்துக்கொள்ளுங் தன்மையுடைமையே சிறந்த குணமாகும்.
பிறர் செய்யுங் குற்றத்தையோ அல்லது தீங்கினையோ பராமுகஞ்செய்து மன்னிப்பதே அமைதியின் அறிகுறி யாகும். தவறுத லென்பது மக்கட்கு இயல்பே. அதைப்போலவே மன்னிப்பென்பது மக்கட்குரிய குண மாகும். பழிக்குப் பழிவாங்குதல் குற்றத்தை மிகுக்கும்; மன்னிப்போ அதனைக் குறைக்கும்; மன்னிப்பு பகை. மையை நட்பாக்கும். இஃதே உலகில் நற்கோரிக்கையை யும் நல்ல மதியையும் உண்டாக்கும்.
1. சாக்கரத்தீசர்
கிரேக்க தேயத்துச் சாக்கரத்தீசர் என்பவர் பேரறிவாளர்; ஆயினும் பெருவெகுளி கொண்டவர். அவர் அதனை அடக்கிக் கொள்ளும் வல்லமையுமுள்ளவர். அவர் தாம் சினங்கொள்ளும் காலத்தில் தமக்கு அறிவிக்கும்படி தம் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தார். அவர்கள் அவ்வாறு அவருக்கு அறிவிக்கும். போதெல்லாம் அவர் உடனே அடைந்த சினத்தை அடக்கிக் கொள்வார்.
ஒருநாள் அவரை ஒருவன் தலைமேல் குட்டினான்; அப்போது அவர் புன்சிரிப்போடு, “நான் தலைமூடி போட்டுக்கொள்வதற்கு மறந்து வந்துவிட்டேனே!” என்று சொல்லிக்கொண்டே போய் விட்டாராம்.
இன்னொருநாள் சாக்கரத்தீசர் வழியே போய்க்கொண்டிருந் தார். எதிரில் ஒரு பெரிய மனிதர் வந்தார். அவரைக் கையெடுத் துக் கும்பிடுபோட்டார். வந்தவர் அதனைச் சட்டைபண்ணாமலே. போய்விட்டார். அதனைக் கண்ட அவருடைய நண்பர்கள் சினங் கொண்டு அதனை அவருக்குத் தெரிவித்தனர். அவர், “இச்சிறு செய்திக்கே உங்கட்கு இவ்வளவு சினம் பெருகினால், ஒருவன் உங்களைத் திட்டியடித்தால் என்செய்வீர்களோ!” என்றாராம்.
சாக்கரத்தீசர் மனைவி அந்திப்பாவை என்பவள் ஒரு பெருஞ் சண்டைக்காரி; கடுமையாய்ப் பேசுவாள்; கணவனாருக்கும் சிற்சில வேளைகளில் தீங்குகள் செய்வாள். ஒருநாள் இருவரும் தெரு வழியே போய்க்கொண்டிருக்கும்போது, யாதோ பேச்சின்பேரில் அவள் சினங்கொண்டு கணவனார் சட்டையைக் கிழித்துப்போட் டாள். அதனைக் கண்ட அவர் தம் நண்பர்களிற் சிலர் பெருஞ் சினங்கொண்டு மிக வருந்தி அவரைப் பார்த்து, “ஐயா! இஃதென்ன வேலை இவ்வம்மணி செய்தது ? இவரை நன்றாக அடித்துப் புடைக்கவேண்டும்!” என்றார்கள். அதற்கு அவர், “நானும் என் மனைவியும் சொற்போர் செய்துகொண்டிருந்தால் நாங்கள் ஒருவரை யொருவர் அடித்துக்கொள்ளும்படி சினமூட்டி விடுவீர்போலும்!” என்றாராம்.
ஒருநாள் சாக்கரத்தீசரும் அந்திப்பாவையும் மாளிகை மேன் மாடியில் பேசிக்கொண்டிருக்கும்போதே சொற்போர் வந்துவிட் டது. அப்போது அந்திப்பாவை கடுஞ்சினங்கொண்டு கணவனா ரைக் கண்டபடி திட்ட, அவர் ஒன்றும் பேசாமல் இறங்கிவந்து தெருவாயிற்படியண்டை உட்கார்ந்துகொண்டு மௌனமாக இருந் தார். அவர்தம் மௌனமே மனைவியின் சினத்தை மிகுக்க, அவள் ஒரு குண்டுசட்டி நிறைய அழுக்கு நீரை மேலிருந்தே அவர்தம் தலைமேல் கொட்டினாள். அப்போது அவர், “மட்டற்ற இடிக்கு மழை பெய்யாமல் விடுமா?” என்று சிரித்தாராம்.
2. அபரதர்
ஜெனீவா நகரில் அபரதர் என்பார் ஒருவர் இருந்தார்; அவர் வெகுளி யென்பதையே யறியாத பெரிய அறிவாளி. அவர்தம் வேலைக்காரிகூட அவர் வெகுளிகொண்டதைக் கண்டதே யில்லை. அவரைத் தேர்வு செய்யப் பேரவாக்கொண்ட அவர்தம் நண்பர், அந்த வேலைக்காரிக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவரை எப்படியாவது வெகுளிகொள்ளச்செய்யத் தூண்டிவிட்டனர். படுக்கை துப்புரவாகவும் அழகாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்கொள்கை. அவ்வேலைக்காரி ஒருநாள் அப்படுக்கையைத் தட்டி அவர் மனப்பான்மைப்படி செய்யவில்லை. அபரதர் அவ்விரவு பேசாமல் இருந்துவிட்டு, மறுநாள் அதனைப்பற்றி அவ்வேலைக்காரி யைக் கேட்டார். அதற்கு அவள் தான் மறந்துபோய்விட்டதாக மறுமொழி கூறினாள். மறுநாளும் அவள் படுக்கையைத் தட்டிப் போடாமல் இருந்துவிட்டாள். அடுத்தநாட் காலை அதனைப்பற்றி அபரதர் கேட்டபோது, அன்றும் ஏதோ சாக்குப்போக்கொன்றைச் சொல்லிவிட்டாள். அன்றும் அவர் ஒன்றுஞ் சொல்லவில்லை.. மூன்றாநாளும் அவள் அப்படியே செய்ய, அதற்கு மறுநாள் அவர் கேட்டதற்கு அவள் மிக அமைதியோடு முன்போலவே ஏதோ வொன்றைச் சொன்னாள். அதனைக் கேட்ட அவர், “அம்மா! உன் மனத்தில் ஏதோ ஓரெண்ணமிருக்கின்றது; அதனால்தான் படுக் கையின் கிட்டப்போகிறதென்றால் உனக்கு மனம் வரவில்லை. ஆனாலுங் குற்றமில்லை; அழுக்குப் படுக்கையிற் படுப்பது எனக்குப் பழக்கமாய்விட்டது,” என்றார். அதனைக் கேட்ட வேலைக்காரி மனமிளகிப்போய் நிலந்தோய அவர்தம் கால்களில் விழுந்து வணங்கி அவரிடம் உள்ளதைச் சொல்லி, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மளமளவென்று கண்ணீர் விட்டு அழுது நின்றாள்.
3. சீனநாட்டு மன்னர்
சீனப் பெருநாட்டின் மன்னர் ஒருவர் ஒருதடவை தமது நாட் டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தார். அப்போது ஒரு நகரில் ஒரு செல்வர் மன்னனுக்குத் தமது மாளிகையில் விருந்து வைத் தார். அக் குடும்பத்தில் அப்பெருமகனார், தம் மனைவி மக்கள் அண்ணன் தம்பியர், அவர்தம் மனைவிமக்கள், மருமக்கள்மார்கள் முதலாகிய எல்லோருடனும் ஒன்றுபட்டு வாழ்ந்துவந்ததைக் கண்டார். பெரு வியப்புக்கொண்டு, அக் குலமகனாரை நோக்கி, ”இத்தனை மக்களுள்ளும் ஒற்றுமையும் அமைதியும் எப்படி யுண்டாயிருக்கின்றது எனக் கேட்டார். அவர் உடனே ஏடெழுத்தாணிகொண்டு,
பொறுமை, பொறுமை, பொறுமை
என்று முக்கால் எழுதிக்காட்டினார். மன்னர் எக்களிப்புடன் விடை பெற்றேகினர்.
4. உலுவலனும் நாயும்
உவேல்சு நாட்டில் உலுவலன் என்னும் ஒரு சேனைத்தலை வன் இருந்தான். அவன் நாயொன்று வளர்த்துவந்தான். அதற் குச் சலரதன் என்று பெயரிட்டு அழைத்து வருவது வழக்கம். அவன் ஒருநாள் அந்நாயுடன் காட்டுக்கு வேட்டையாடப்போனான். காட்டிடத்திற் சலரதன் என்னும் தன் நாய் காணாம
காணாமற்போகவே பல தடவை குழலூதிக் கூப்பிட்டான்; சலரதன் வரவேயில்லை. உலுவலன் அன்று காட்டில் அரைமனதாகவே வேட்டையாடித் திரும்பிவிட்டான். உலுவலன் அரண்மனையைக் கிட்டினபோது சலரதன் வாலாட்டி மகிழ்காட்டி அவனுக்கெதிரில் ஓடிவந்தது. சலரதன் உதட்டிலும் பற்களிலும் செந்நீர் ஒழுகக்கண்டு, அவன் திடுக்கிட்டு நின்றான். அஃதோ அவனுடைய கால்களை நக்கி நக்கிப் பெருமகிழ்ச்சியுடன் அவன்மேல் தாவித் தாவி விளையாடியது.
பிறகு சலரதன் உடன்வர, அவன் அரண்மனைக்குச் சென் றான். பார்த்தவிடமெல்லாம் உறை செந்நீர்ப் பொட்டுக்களைக் கண்டு மனக்கலக்கங் கொண்டான். இன்னும் பார்த்துக் கொண்டே. உட்செல்லக் குழந்தையின் போர்வை துண்டு துண்டாகக் கிழிச்சல்பட்டுச் செந்நீர்மயமாக இருக்கக்கண்டு,நடுக்க மடைந்து, குழந்தையைப் பேரிட்டுக் கூப்பிட்டுக்கொண்டு அரண் மனையிடம் முழுதும் அல்லாடியும், எங்குஞ் செந்நீர் கண்டானே -யொழியச் செல்வச் சேயைக் கண்டானில்லை !
சினவெறிகொண்ட உலுவலன் சலரதனைப் பார்த்து, ‘கேடு கெட்ட சலரதனே! நீயே என் குழந்தையைக் கொன்று தின்றாய்!” என்று சொல்லிக்கொண்டே தன் வாளை உருவி அதனை விலாப் புறத்தில் ஆழக் குத்திவிட்டான். அப்போது சலாதன், ‘ஐயோ அரசே! என்னை வீணே கொலைசெய்தனையே!’ என்று சொல்வது போல் இரக்கங்காட்டுஞ் சாக்குரல் கூவி உயிர்விட்டது. அக்குரல். உலுவலன் மனத்தை அலைக்கழித்தது.
சலரதன் சாக்குரல் கேட்டுக் குழந்தை சரேலென அழுங் குரல் கேட்டது. உலுவலன் இங்குமங்குந் தேடிப்பார்க்க, ஓரிடத் திற் செந்நீர்க்கந்தைக் குப்பையினடியிற் செல்வச் சேயை யாதோர் ஊறுபாடுமின்றி யிருக்கக்கண்டான். அப்போது அவனுக்குண்டான அகமகிழ்ச்சிக்கு அளவுண்டோ! உடனே அவன் அக் குழந்தையை யெடுத்து முத்தமிட்டுக் களித்தான்.
அடுத்தாற்போல் அக்குப்பையின் மற்றொரு பக்கத்தடியில் அச்சங்கொடுக்குமொரு ஓநாய் கடிபட்டுச் செந்நீர்க்காடாய்ச் செத் துக்கிடப்பதையுங் கண்டான். கண்டவன் யாவும் விண்டான். தன்னுடைய வீரச் சலரதன், தன் சேயைக் காப்பாற்ற, அதனைக் கொன்று தின்னவந்த ஓநாயைத் தான் கடித்துக்கொன்றது எனத் தெரிந்து கொண்டான், தேர்ந்தறியாத உலுவலன். என்ன அறிந்தும் என்ன பயன்! போன சலரதன் உயிர் வந்து பொருந் துமோ? ”அறிவுற்ற சலரதனே! என் அறிவற்ற செயலுக் கென் செய்வேன்! பதைத்த மனம் பாழ்பட் டொழிக! ஆராத சிந்தை சீர்கெட்டழிக!” என்று பெருங்குரல் கொண்டு ஓ! வென்றலறி மனம் உருகி மண்ணில் வீழ்ந்தழுதான்.
பிறகு உலுவலன் சலரதன் உடலைச் சவக்குழியிற் புதைத்து, அதன்மேலோ ரழகிய கல்லறை யெழுப்பி, அதன் மேல் சலரதன் வீரச்செயலை மெச்சிப் பொறித்துவைத்தான்.
5. தீமைக்கு நன்மை
நாகரிகமில்லாத முன்னாளில் இத்தாலி நாட்டின் ஒரூரில் உடலுரங்கொண்டவ னொருவனிருந்தான். அவன் தன் பகை யாளி யொருவனுடன் கடுஞ்சண்டையிட்டு அவன் கண்களிரண் டையுங் குத்திவிட்டான். அதனால் அவன் குருடனாகவே போய் விட்டான். அவன் பிழைக்க வேறு வழிகாணாமல் ஒரு துறவோர் ஞ் சேர்ந்து தன்னாலான அறச்செயல்கள் செய்துகொண்டிருந்தான். அவனைக் குருடாக்கிய பகைவன் சிலநாட்களில் தீரா நோயாளியாய் அந்த மடத்துக்கே வந்து சேர்ந்துவிட நேர்ந்தது குருடன் மற்றவர்களுக்குச் செய்வதுபோலவே இந்நோயாளிக்கும் இரவும் பகலும் வேண்டிய பணிவிடைகள் செய்துவந்தான். இரண் டாரு நாட்களில் நோயாளி தனக்குப் பணிவிடை செய்பவன் தான் குருடாக்கிய பகைவனேயென் றறிந்துகொண்டு, தன்னை அவன் என்செய்துவிடுவா ே என்கிற அச்சத்துடனே அங்கி ருந்து வந்தான். குருடன் அவன் குரலால், இன்னானென்றறிந்து கொண்டு, நோயாளி தனக்குச்செய்த ஊறுபாட்டை மனத்திற் கொள்ளாமலே தன் கடமையைச் செய்துவந்தான். குருடனின் இந் நற்றன்மை கண்ட நோயாளி கழிவிரக்கங்கொண்டு அவனு டன் நட்பாக இருந்துவந்தான். மடத்தாரின் மருத்துவத்தினாலும், கண்கெட்டான் கருத்துடன் செய்த கருணைப் பணிவிடை லும் நோயாளி முற்றுங் குணப்பட்டு, மடத்தாருக்கும் மாற்றானுக் கும் மனமார்ந்த நன்றிகூறித் தன் மனை போய்ச் சேர்ந்தான்.
மிகுதியான் மிக்கவை செய்தார் நாணத் தகுதியால் நன்னயஞ் செய்வதற்கு இதனைக் காட்டிலும் எடுத்துக்காட்டு வேறொன்று வேண்டுமோ!
6. அடிமைகொள்வோரை ஆட்கொண்டது
அடிமை வாணிபம் நடந்துவந்த காலத்தில் ஓர் ஆங்கிலக் கப்பல் பல மக்களுடன் மத்தியதரைக்கடல் வழியாக இங்கிலாந் துக்குப் போய்க்கொண்டிருந்தது. வழியில் பத்துத் துருக்கிய அடிமை வாணிபர் அக்கப்பலில் வந்து புகுந்துகொண்டனர். அவர்தம் நோக்கம் என்னவெனில், அக் கப்பலைக் கொண்டுபோய் ஆப்பிரிக்காக் கரை கரைசேர்த்து ஆங்கிலேயரையெல்லாம் அடிமை களாக விற்றுவிட வேண்டுமென்பதே.
அன்றிரவு துருக்கியர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவர்தம் போர்க்கருவிகளை யெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து மறைத்து வைத்துவிட்டான் ஆங்கிலக் கப்பலோட்டி. அதனைக் கண்டுகொண்டார்கள் துருக்கியர்கள். ஆங்கிலக் கூட்டம். அக் கப்பலில் பெரிதாக இருந்தபடியால், தம்மால் ஒன்றுஞ் செய்ய முடியாமல் துருக்கியர் அக்கப்பலிலேயே உடனிருந்துகொண் டிருந்தனர். கப்பல் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரை சேர்ந்தபோது அந்நாட்டார் துருக்கியர் எல்லோரையும் தங்களிடம் ஒப்பித்து விடக் கேட்க, ஆங்கிலேயர் அதனை மறுத்துவிட்டனர்.
பிறகு அக்கப்பல் ஆப்பிரிக்கா கரைசேர்ந்து, பார்பரி மாகா ணத்தில் அத்துருக்கியர் எல்லோரையும் இறக்கிவிட்டு, இங்கி லாந்து போய்ச் சேர்ந்தது. இந்நற்செய்தி ஆங்கில நாடெல்லாம் பரவிவிட்டது. அரசன் அக்கப்பற் றலைவனை யழைத்து, “அவர் களை ஏன் இங்குக் கொண்டுவந்து சேர்க்கக்கூடாது” எனக்கேட் டான். அதற்குத் தலைவன் “அவர்கள் ஊரிலேயே அவர்களை விட்டுவிடுவது நலமென்று நினைத்தேன்,” என்றான்.
7. உபரதன்
இத்தாலி நாட்டில் ஜினோவா மாகாணத்தில் ஒரு காலத்தில் பெருமக்கட்கட்சி பொதுமக்கட்கட்சி யென இரண்டு கட்சிகள் இருந்தன. ஒருகால் பொதுமக்கட் கட்சி தோற்றுப்போய், பெரு மக்கட் கட்சி அரசியல் நடத்த நேர்ந்தது. அப்போது பொது மக்களின் தலைவனாகிய உபரதன் என்னும் வாணிபச் செல்வன் அந்நாட்டிலிருந்து துரத்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. அத் தீர்மானத்தை நிறைவேற்றியவன் அதாரணன் என்னும் ஒறுப்பு நீதிபன்.
உபரதன் கிரேக்கநாட்டைச் சார்ந்த ஒரு தீவினில் சேர்ந்து அங்குச் சிறுகச்சிறுக வாணிபஞ் செய்து ஒரு பெரிய வணிகனாய் விட்டான் உபரதன் ஒரு தடவை வாணிப வேலையாய்த் தியூனஸ் நகர் சென்றிருந்தான். அந்நகர் மகம்மதியருடையது. அங்கு ஓரி டத்தில் அடிமைகள் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர் களில் ஓர் இத்தாலியப் பையன் விலங்குக் கட்டுடன் இளைப்புங் களைப்புமாகக் குற்றேவல் செய்துகொண்டிருந்தான். உபரதன் அவன் வரலாற்றினைக் கேட்டபோது அவன், தான் ஜினோவாவிலி ருந்து அடிமையாகக் கடற்கொள்ளைக்காரராற் பிடித்துக்கொண்டு வரப் பட்டதாகவும், தான் ஒறுப்புத்தலைவன் அதாரணன் பிள்ளை யென்றும் அழுதுகொண்டே சொன்னான்.
உபரதன் அவனுடன் ஒன்றும் பேசாமற்போய் அடிமை களின் தலைவனைக் கண்டு, அவன் கேட்ட பெருந்தொகையைக் கொடுத்துவிட்டு, அந்தப் பையனைத் தன்னிருப்பிடத்திற்குக் கொண்டுபோய், அவனைக் குளிப்பாட்டி நல்லுணவும் நல்லுடையுங் கொடுத்துப் பாதுகாத்துவந்தான்.
ஒருநாள் இத்தாலிக்கு ஒரு கப்பல் அத்தீவிலிருந்து புறப்பட்டது. உபரதன் அவனுக்குச் செலவுக்கு வேண்டிய காசு கொடுத்து, ஒறுப்புத் தலைவனுக்கொரு கடிதத்துடன் ஜினோவா வுக்கு அனுப்பிவிட்டான்.
பையனின் பெற்றோர் அவனைக் கடலில் மூழ்கிவிட்டதாக எண்ணியிருந்தனர். திடீரென்று தங்கள் பிள்ளை சுகமாக வீடு நுழைந்தபோது அவர்கள் அடைந்த பெருவியப்புக்கு அள வுண்டோ!
பிறகு அப்பையன் போன வரலாற்றையும் புகுந்த வரலாற் றையும் மீண்டுவந்த வரலாற்றையும் விளங்கச் சொல்லிக் கடிதத்தை யுந் தந்தையின் கையிற் கொடுத்தான். அதனடியில் ஊர் துரத் தப்பட்ட உபரதன் எனக் கையொப்பமிட்டிருந்தது. இந்த வெட் கக்கேட்டை நீதித்தலைவன் மனம் தாங்கமுடியவில்லை. அவன் தன் செல்வாக்கினால் உபரதன் திரும்பத் தன் நாடு சேர்ந்தான். அவனிடம் நேர்முகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிறகே அதாரணனுக்கு மனதமர்ந்தது.
கருணையின் தன்மை
க. கருணை கட்டுப்படாதது-மழைபோல் மக்கள் மேல் விழுவது.
உ. கொடுப்போன் கொள்வோன் இருவரையும் வாழ்த்துவது.
ங. வல்லோனிடம் வல்லமை பெறுவது.
ச. முடிமன்னர்க்கு முடியாவது; செங்கோ லுக்குச் செங்கோலாவது.
ரு. அரசர் உள்ளம் அரியணை அதற்கு; படைத்தோ னுக்கே பண்பாவது.
மண்ணரசு நீதிக்கு மணத்தைக் கொடுத்து விண்ணரசாக்கி வீறச் செய்வது. – ஷேக்ஸ்பியர்.
எ. வெகுளியையுஞ் சினத்தையும் விட்டொழி; கடுங் துன்பத்தினால் எரிச்சல்கொண்டு பிறர்க்குத் தீமை செய் யாதே. -சங்கீதங்கள்.
அ. தயை காட்டுகிறவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள் ; அவர்கள் தயை பெறுவார்கள். பகைவருக்கு அன்பு காட்டுங்கள், வசைமொழி கூறுவோர்க்கு வாழ்த்துமொழி கூறுங்கள். வெறுப்போருக்கு விருப்பங் காட்டுங்கள். புண்படுத்துவோருக்காகப் போற்றி செய்யுங்கள்; அவ் வாறு செய்தால் நீங்கள் விண்ணுலகத் தந்தைக்குப் பிள்ளை கள் ஆவீர்கள். உம் உடன்பிறந்தார் குற்றத்தை ஏழு தடவையன்று ஏழெழுபது தடவை மன்னிக்கவேண்டும். -இயேசுநாதர்.
க. ஆறாச் சினத்தையும் பழிக்குப் பழிவாங்குதலை. யும் உன் மனத்தைவிட்டு ஓட்டிவிடு; காலைச் சினம் மாலைக் குள் ஒழியவேண்டும். – மேசன்
க. உன் உள்ளத்தில் மன்னிப்பை எழச்செய்த குற்றவாளியை மார்போடணைத்துக் கட்டிக்கொள். -இளவேதர்.
கக. மன்னிப்புக் கொடாதவன் தான் தாண்டும் பாவத்தைத் தானே உடைத்துத் தள்ளுகின்றான். -ஹெர்பர்ட்.
க௨. ஆறுவது சினம். -ஔவையார்.
கங. நகையும் உவகையும் கொல்லும் சினம். -திருவள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |