சிநேகிதனே!.. சிநேகிதனே!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 5,408 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் – 3

இந்து வீட்டிற்குள் நழைந்தபோது கோலாகலமாக இருந்தது. சோபா நாற்காலிகளில் நாலைந்து புது மனிதர்களிருந்தார்கள். வாசலில் கார் நின்றது.

‘யார் இவர்கள்?!’ – யோசித்துக்கொண்டே வாசலோரம் செருப்பை விட்டாள்.

இவளுக்காகவே காத்திருந்தவள் போல் அண்ணி வந்தாள். ‘‘சீக்கிரம் வா இந்து. உனக்காகத்தான் எல்லாம் இருக்காங்க.” – என்று குசுகுசுத்து அவளை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

‘‘ஏன் அண்ணி?!”

‘‘அப்புறம் சொல்றேன். மொதல்ல நீ முகத்தை அலம்பி புதுப்புடவையைக் கட்டு” அவசரப்படுத்தினாள்.

வந்திருப்பவர்கள் உட்கார்ந்திருக்கும் தோரணையும், அண்ணி அவசரப்படுத்துவதிலிருந்துமே இந்துவிற்கு ஓரளவிற்குப் புரிந்தது.

“அண்ணி!” திகைப்பாய்ப் பார்த்தாள்.

‘‘நாங்க எதிர்பார்க்கவே இல்லே. திடீர்ன்னு வந்துட்டாங்க.” – குண்டைப் போட்டாள்.

‘‘எப்படிண்ணி?” திடுக்கிட்டாள்.

‘‘உன் அண்ணன் தரகர்கிட்ட ஜாதகம் குடுத்து ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு மத்தியானம் அவர் திடீர்ன்னு போன் பண்ணி பொண்ணு பார்க்க வர்றோம்ன்னு சேதி சொன்னார். எங்களுக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. மாப்பிள்ளை துபாய்ல வேலை பார்க்கிறாராம். மூணு மாச விடுப்புல வந்திருக்கார். உடனே கலியாணம் முடிக்கணுமாம். ஜாதகம் நல்லா பொருந்தி இருக்காம். சொஜ்ஜி, பஜ்ஜின்னு வீண் ஆடம்பரம் வேணாம். நாங்க பொண்ணைப் பார்க்கிறோம். பிடிச்சிருந்தா மத்ததெல்லாம் பேசலாம்ன்னாங்க. நீயும் கல்லூரியில இருந்து திரும்புற நேரம்தானேன்னு நாங்களும் கம்முன்னு இருந்துட்டோம். சீக்கிரம் ரெடியாவு. வந்தவங்களுக்கு நான் காப்பி மட்டும் போட்டிருக்கேன். போய் எடுத்து வர்றேன்.” – சொல்லி ஓட்டமாய் ஓடினாள்.

இந்த திடீர் அதிர்ச்சியில் இந்துவிற்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. உடனே முகத்தை அலம்பி தயாராவதா என்றும் தெரியவில்லை. குழம்பினாள்.

அதற்குள் அண்ணன் சந்திரசேகரன் வந்து, ‘‘இந்து ரெடியா?” – குரல் கொடுத்தான். ‘‘அவுங்க வந்து அரைமணி நேரமாகுது சீக்கிரம் ரெடியாவு” – சொல்லி அகன்றான்.

கழுத்தில் கத்தி வைக்காத குறை. வீட்டில் விருந்தாளிகளை வைத்துக் கொண்டு இப்போது எப்படி வேண்டாமென்று முரண்டு பிடிக்க முடியும். அதற்கு இது நேரமில்லை என்று நினைக்கும் போதே அண்ணி தமயந்தி மீண்டு;ம் அறைக்குள் நுழைந்தாள்.

‘‘என்னம்மா இப்படி மசமசன்னு நிக்கிறே. எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். மொதல்ல வந்தவங்ளை அனுப்பனும் சீக்கிரம்” – சொல்லி அலமாரியிலிருந்து தன்னுடைய பட்டுப்புடவையை எடுத்துப் போட்டாள்.

இந்துவிற்குத் தயாராவதைத் தவிர வேறு வழியில்லை. கொல்லையில் போய் முகத்தைக் கழுவினாள். வந்து கண்ணாடியைப் பார்த்து தலைவாரி ஒழுங்கு படுத்தி, முகத்தில் பவுடர் பொட்டு இட்டு, அவங்காரத்தை முடித்துக்கொண்டு அண்ணி பட்டுப் புடவையைச் சுற்றினாள்.

இவள் தயாராவதற்குள் தமயந்தி அடுப்படிக்குச் சென்று ஒரு தட்டில் ஐந்து டம்பளர்கள் நிறைய காபி எடுத்து வந்தாள்.

இந்துவின் கையில் திணித்து, “எல்லாருக்கும் குடுத்துட்டு கொஞ்ச நேரம் அங்கேயே நில்லு. அம்மாவோட உட்கார்ந்திருக்கிறதுதான் மாப்பிள்ளை சரியாப் பார்த்துக்கோ” அனுப்பினாள்.

இந்து பலிகடாவாக கையில் தட்டுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னும் பவ்வியமாய்க் குனிந்து தட்டை நீட்டினாள். ஆளுக்கொரு டம்ளர் எடுத்துக் கொண்டார்கள். கைகூப்பி ‘வணக்கம்’ சொன்னாள்.

‘‘இப்படி என் பக்கத்துல வந்து நில்லு.” சந்திரசேகரன் அழைத்தான்.

கையில் தட்டுடன் அவன் பக்கத்தில் நின்றாள்.

தமயந்தி அவளுக்குப் பின் வந்து நின்று வந்தவர்களை நோட்டமிட்டாள்.

காபியைக் குடித்துக் கொண்டே பெண்ணை நன்றாகப் பார்த்த பெரியவர் முகத்தில் லேசாக திருப்தி படர்ந்தது.

காபி டம்ளரை கீழே வைத்து விட்டு, “இதோ பார்ம்மா!” என்று இந்துவை நேரடியாகவே அழைத்தார்.

இவள் அவரைப் பார்த்தாள்.

‘‘நான் பையனோட அப்பா தணிகாசலம். இவள் என் மனைவி. காமாட்சி. அதாவது நீ வாழ்க்கை பட்டால் உன் வருங்கால மாமியார். எங்களுக்குப் பெண்ணு கெடையாது. ஒரே பையன்தான். பேர் வெங்கடேஷ். கம்ப்யூட்டருக்குப் படிச்சுட்டு துபாய்ல வேலையில இருக்கான். மாசம் லட்சம் சம்பளம். அங்க உள்ள காசுக்கு எவ்வளவோ சொன்னான். எனக்கு புரியலை. இதுவரைக்கும் அவனுக்கு போதை, புகைன்னு எந்த கெட்ட பழக்கமும் கெடையாது. நல்ல பையனாய் இருக்கான். கலியாணம் முடிஞ்சதும் உடனே ஊருக்குப் புறப்பட்டுடுவான். மனைவியை உடனே அங்கே அழைக்க.. விசா ஏற்பாடெல்லாம் செய்யப் போறான். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிக்கும்ன்னு நெனைக்கிறேன். உனக்கும் பிடிச்சிருந்தா உடனே சம்மதம் சொல்லு. சட்டுபுட்டுன்னு கலியாணத்தை முடிப்போம்!” – மனிதர் மனதில் எதையும் வைக்காமல் கடகடவென்று சொல்லி முடித்தார்.

அவர் இப்படி வெளிப்படையாய் பேசியது எல்லோருக்கும் பிடித்திருந்தது, எதிரிலிருந்த சந்திரசேகரன் தமயந்தியைப் பார்த்து தொடர்ந்தார்.

“என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். நீங்க வரதட்சணை, சீர்வரிசை அதிகம் செய்ய வேணாம். உங்களால முடிஞ்சதை செய்தா போதும். இதுவும்கூட எங்களுக்குத் தேவையில்லே. என்ன இப்படி திடீர்ன்னு விழுந்துட்டாங்க. மாப்பிள்ளைக்கு ஏதோ குறைன்னு சந்தேகப்படுவீங்க. அப்படி சந்தேகப்பட்டா நீங்க நல்லா விசாரிச்சு, யோசனைப் பண்ணியே குடுக்கலாம். ஆனா முடிவைச் சீக்கிரம் சொல்லுங்க.” – நிறுத்தினார்.

‘எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!’ – சந்திரசேகரன் தங்கையைப் பார்த்தான்.

அவள் தலைகுனிந்தபடி இருந்தாள். அவனுக்குள் சின்ன உறுத்தல் தோன்றியது,

‘‘பெண்ணைக் கண்டிப்பா துபாய்க்கு அழைச்சிப் போவீங்கலா?” – சந்திரசேகரன் கேட்டான்.

‘‘ஏன் கேட்குறீங்க?” – ஏறிட்டார்.

“வெளிநாட்டுல வேலைப் பார்க்கிறவங்க, ராணுவத்துல வேலை செய்யிறவங்களெல்லாம் பெண்ணைக் கட்டி இங்கே விட்டுவிட்டு அவுங்கவுங்க வேலையைப் பார்க்க புறப்பட்டு போயிடுவாங்க. பெண் கலியாணம் முடிச்சும் பொறந்த வீட்டிலேயோ புகுந்த வீட்டிலேயோ தனியா இருப்பாள். இது பெண்ணுக்கும் கஷ்டம். வைச்சு காபந்து பண்றவங்களுக்கும் சிரமம்.. பேசாம ரிக்ஷா வலிக்கிறவனுக்குக் கட்டிவைச்சாலும் பெண் கால் வயித்துக் கஞ்சி குடிச்சாலும் புருஷனோட சந்தோசமா இருப்பாள்.” – உலக நடைமுறையைச் சொன்னான்.

“கண்டிப்பா அழைச்சிக்கிட்டுப் போறதுக்குத்தான் இத்தனை அவசரம், ஏற்பாடு. உடனே திருமணம் முடிச்சா பையன் விடுப்பிலேயே பாஸ்போர்ட், விசாவெல்லாம் எடுத்து கையோட கூட்டிப்போவான். ஒரு மாசம் பத்து நாள்கூட தள்ளிப் போகலாம். அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லே. பையன், பொண்ணு சாதகமெல்லாம் சரியா இருக்கு. நீங்க சரின்னு சொல்றதுலதான் காலதாமசமிருக்கு. என்னம்மா சொல்றே?” – பெரியவர் நேரடியாகவே பெண்ணிடம் பாய்ந்தார்.

இந்த நேரடி தாக்குதலில் இந்து கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனாள். காதலன் இருக்கும் போது எப்படி கழுத்தை நீட்ட முடியும்?

‘‘நாங்க அவளைக் கேட்டு முடிவு சொல்றோம்” சந்திரசேகரன் பொதுவாக பேசி அவள் சங்கடத்தைத் தவிர்த்தான்.

“சரி நாங்க புறப்படுறோம்!‘‘ தணிகாசலம், வந்தவர்கள் எழுந்தார்கள்.

சந்திரசேகரனும் தமயந்தியும் வாசல்வரை வழியனுப்ப அவர்களுடன் சென்றார்கள்.

இந்து அவர்கள் செல்வதையேப் பார்த்தாள்.

வெங்கடேஷ் காரில் ஏறும் போது அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் சிகப்பாய் அழகாய் இருந்தான். முகம் களையாய் இருந்தது.

அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த தமயந்தி, “நீ அதிர்ஷ்டக்காரி எங்களுக்குப் புடிச்சிருக்கு. உனக்கு சம்மதமா?” ‘கேட்டாள்.

“நாளைக்குச் சொல்றேன்!” இந்து ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

அத்தியாயம் – 4

காலையிலேயே இந்து பரபரப்பாக கல்லூரிக்குக் கிளம்பினாள்.

‘‘இந்து! என்ன சேதி சொல்லட்டும்?” – சந்திரசேகரன் கேட்டான்.

“அண்ணே! எனக்கு இன்னைக்கு கல்லூரியில முக்கியமான வேலை. என் கவனமெல்லாம் அதிலேயே இருக்கு. முடிச்சிட்டு வந்து சொல்றேன்.” சொல்லி வேகமாக நடையைக் கட்டினாள்.

பேருந்து நிலையம் வந்து அருகிலுள்ள பொது தொலைபேசி நிலையத்திற்குள் நுழைந்தாள். கொஞ்சம் பதட்டம் படபடப்பாக எண்களைச் சுழற்றினாள்.

‘‘ஹலோ!” எதிரில் வசந்த் எடுத்தான்.

“வசந்த் ! நான் இந்து பேசறேன் சிக்கிரம் வாங்க. ஒரு முக்கியமான சேதி. பார்க்ல இருக்கேன்.” – வேறெதுவும் சொல்லாமல் சட்டென்று ஒலிவாங்கியை வைத்துவிட்டு கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு உடன் பேருந்து ஏறி பூங்கா வந்தடைந்தாள்.

காலை நேரம். அதிக கூட்டமில்லை. சில வெட்டி விருதாக்கள் மட்டும் அங்கே இங்கேயென்று நின்று, உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிமெண்ட் பெஞ்ச் வசதியாய் இருக்க இன்னும் சிலர் வசதியாய்ப் படுத்து கண் மூடியிருந்தார்கள். காக்கை குருவிகள் எச்சமிடாதிருக்க ஒருவன் முகத்தை புத்தகத்தால் மூடியிருந்தான். மருந்துக்கூட பெண்களில்லை.

இந்துவிற்கு ஏன் வந்தோம் பயமாக இருந்தது. கண்களைச் சுழலவிட்டாள்.

பூங்காவைப் பராமரிக்கும் பெண்ணொருத்தி குழாய்ப் பிடித்து செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்தாள்.
இந்துவிற்குள் இருந்த பயம் விலகி கொஞ்சம் நிம்மதி மூச்சு வந்தது. படிக்கும் பாவனையில் ஒரு புத்தகத்தை விரித்தபடி ஒரு மரத்தடியில் அமர்ந்தாள்.

எந்த சேதியும் சொல்லாமல் விட்டதால் வசந்த் கண்டிப்பாக வருவான். அவளுக்குள் நம்பிக்கை இருந்தது.

வசந்த்திற்கும் போனைத் தொட்டதிலிருந்து மூளைக்காய்ச்சல்.

எதற்காக இத்தனை அவசரமாய் வரச்சொன்னாள். என்ன சேதி? சிந்தித்துக் கொண்டே காரை ஓட்டினான்.
இத்தனை அவசரமென்றால் இந்துவிற்கு என்னவோ ஆபத்து! – நினைக்க திகிலாய் இருந்தது. சாண்ட்ரோவை நிதானமாக ஓட்டி பூங்கா வாசலில் நிறுத்தி உள்ளே நுழைந்தான்.

‘‘என்ன இந்து?” எதிரிலமர்ந்தான்.

“குடி முழுகிப்போச்சு!” – புத்தகத்தை மூடினாள்.

“புரியலை. விபரமாச் சொல்லு?”

‘‘மொதல்ல நாம உங்க வீட்டுக்குப் போகனும்.”

‘‘ஏன்ன்ன்??!” இவனுக்குள் சட்டென்று திகில்.

‘‘உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லி கலியாணம் முடிக்கனும்.”

‘‘என்ன அவசரம்?!”

“எனக்கு வீட்டுல மாப்பிள்ளைப் பார்த்தாச்சு.”

‘‘விளையாடுறீயா?”

“நான் விளையாடலை. நீங்கதான் விளையாடுறீங்க. நேத்திக்கு நான் வீட்டுக்குப் போனதுமே மாப்பிள்ளை வந்தாச்சு.” – நடந்ததைச் சொன்னாள்.

வசந்த்திற்குள் இந்து கை நழுவிப் போவது புரிந்தது, நிலையை மாற்றி எப்படி இவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவது…? மூளைக்குள் சிந்தனை.

‘‘என்ன யோசனை?”

‘‘வீட்டுக்குப் போய் பிரயோசனமில்லே இந்து” – நல்ல பிள்ளையாய் அடக்கமாய்ச் சொன்னான்.

‘‘ஏன்?”

“அப்பா ஊர்ல இல்ல”

‘‘எங்கே?”

“அமெரிக்கா போயிருக்கார்.”

‘‘எப்போ?”

‘‘ரெண்டு நாளைக்கு முன்னால.”

‘‘எப்போ திரும்புவார்?”

‘‘தெரியலை.”

‘‘அம்மா?”
இது சமாளிக்க முடியாது – “இருக்காங்க”

“அவுங்ககிட்டேயாவது நாம சேதியைச் சொல்லி ஏற்பாடு பண்ணணும்.”

‘‘முடியாது.‘‘

‘‘ஏன்?”

“அம்மா ரொம்ப மடி. அப்பா சம்மதிக்காம சரி சொல்ல மாட்டாங்க”

விழித்தாள்.

“நம்ம விசயத்துல சாதி, மதம், அந்தஸ்த்துன்னு நிறைய சமன்படுத்த வேண்டியிருக்கு. அப்பா அம்மாவை சேர்த்து சமாளிக்க ஒரு வழி இருக்கு.” – அடிக்கண்ணால் பார்த்தான்.

‘‘என்ன?”

“நீ என் குழந்தையைச் சுமக்கனும்.”

“இது நடக்காத காரியம்!”

‘‘ஏன் இந்து?”

“கற்பு போன பின்னாடி பெண்ணோட மதிப்பு என்னன்னு எனக்கு தெரியும். ஆண்கள் மிதிச்சித்தள்ள நிறைய வாய்ப்புகளிருக்கு. நல்லா இருக்கிற மனுசன்கூட நாறிப் போனா மனசு மாறுவான்.‘’

“நீ என்னை நம்பளையா இந்து?”

‘‘நம்பறேன். ஆனா இந்த வழியில நம்பலை.”

‘‘…வேற வழி?”

“பிரிஞ்சடலாம்!”

“இந்து!” – இந்த பதிலை வசந்த் எதிர்பார்க்கவில்லை.

“உங்களுக்கு அங்கே சங்கடம். எனக்கு வீட்டுல நெருக்கடி. வேற வழி?”

“இந்து! உனக்கு நேத்து வந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கு. முடிச்சிருக்காங்க. அதனால இப்புடி பேசுறேன்னு நெனைக்கிறேன்”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே. நான் உட்பட வீட்ல யாரும் சம்மதம் சொல்லலை. என் கழுத்து வெறுமனே இருக்கு. நீங்க முடிக்கலாம்ன்னு சொல்றேன்.”

‘மவளே! இந்த மாதிரி கழன்றுக்கத்தான் இவ்வளவு எச்சரிக்கையா இருந்தியா?’ இவன் மனசுக்குள் ஓடியது.

மறைத்துக்கொண்டு, “நீ அவசரப்படற மாதிரியெல்லாம் உடனே காரியம் நடத்த முடியாது இந்து.” என்றான்.

“அப்போ மறந்துடலாம். நண்பர்களாப் பிரிஞ்சுடலாம்.‘‘

“ரொம்ப சாதாரணமா சொல்றே?”

“அழுதுகிட்டு வேணுமின்னாலும் சொல்ல தயார். வசந்த்! என் அண்ணன் சிரமப்படாம, அவர் வருத்தப்படாம நான் பிரியனும…”

“நம்ம காதலை இழக்கிறதுல உனக்கு வருத்தமில்லியா இந்து..?”

“இருக்கு. நாளடைவுல மறைஞ்சிடும். வசந்த்! முடிவா என்ன சொல்றீங்க?”

“உன் விருப்பம் என் விருப்பம்” – சொன்னான்.

“நல்லது நண்பர்களாய்ப் பிரிவோம்!” – இந்து எழுந்து நடந்தாள்.

‘என் ஆசை நிறைவேறாம உன்னை விடமாட்டேன் இந்து!’ – வசந்த் மனதிற்குள் மெல்ல சொன்னான்.


இந்து திருமணத்திற்குச் சம்மதம் சொன்னது எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது.

சந்திரசேகரன் உடனே போன் செய்து தங்கள் விருப்பத்தைச் சொன்னான்.

“ரொம்ப மகிழ்ச்சிங்க” என்ற தணிகாசலம், “அடுத்தவாரம் அஞ்சாம் தேதி நாள் நல்லா இருக்கு. தேதியெல்லாம் முன்கூட்டியே பார்த்து ரெடியா இருக்கோம் முடிச்சுடலாமா?” – கேட்டார்.

“எனக்கு ஆட்சேபனை இல்லே.” இவனும் திருப்தியாக சொன்னான்.

உடன் அடுத்தடுத்த வேலைகள் நடந்தது.

இந்து குடும்பத்திற்கு எந்த வேலையுமில்லை. எல்லாவற்றையுமே தணிகாசலமே பார்த்துக்கொண்டார்.

இந்துவின் நகை நட்டுவிற்காக மட்டும் சந்திரசேகரன் கொஞ்சம் பிரயாசைப்பட்டான். மனைவியின் பழைய நகைகளை வாங்கி அழித்து புதிதாக்கினான். காது, கழுத்து, மூக்குப் பொத்தி கைகளுக்கும் வளையல் செய்து போட்டான். மாற்றுக்குக் கொஞ்சம் துணிகள் எடுத்தான். இந்துவிற்கு அண்ணனின் ஏற்பாடுகள் திருப்தியாகவே இருந்தது.

இரண்டே நாளில் தணிகாசலம் ஆயிரம் பத்திரிக்கைகள் கொண்டு வந்து கொடுத்தார். பத்திரிக்கைகள் பெரிய அளவில் ஆடம்பரமாக இருந்தது.

வசந்தைத் தேடிக் கொண்டு வந்த ராமுவிற்கு அவன் மேசைமேலிருந்த திருமணப் பத்திரிக்கையைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

‘‘ஏய்! என்ன இது?‘‘ எடுத்து விரித்து நண்பனைப் பார்த்தான்.

‘‘இந்துவுக்குக் கலியாணம்.” – வசந்த் ஏறக்குறைய நாற்காலியில் நன்றாக சாய்ந்து சிகரெட் புகையை வட்டமாக விட்டு சாதாரணமாக சொன்னான்.

“நீ நெனைச்சதை முடிச்சுட்டியா?!”

“இன்னும் இல்ல.”

“பின்னே?” – ராமு அவனைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“பட்சி பறந்துடுச்சு.”

‘‘புரியலை?”

“அதுவும்கூட வசதிதான்.”

“என்னடா சம்பந்தா சம்பந்தமில்லாம உளர்றே?”

“திருமணம் முடிச்சுக்கிறேன்னா முடிச்சுக்கோ சொல்லிட்டேன்.”

ராமுவிற்குக் குழப்பமாக இருந்தது. பார்த்தான்.

‘‘என்னடா வசந்த் எடுத்த காரியத்தை முடிக்காம விடமாட்டான். இப்போ ஏமாந்துட்டான்னு நெனைக்கிறீயா..?”

“….”

“நான் விடலைன்னா அவ என்னை விடமாட்டா ராமு. எனக்கு குத்தகை தேவையில்லே. அதான் விட்டேன்”

“ஆனாலும் காரியம் முடிக்காம?!”

‘‘முடிப்பேன்! நிச்சயம் முடிப்பேன். அதனாலதான் இப்ப விட்டுக் குடுத்திருக்கேன். ராமு அவ உஷார் பார்ட்டிடா. எனக்கு சவாலா இருக்கா. சந்தோசமா இருக்கு.”

“யார் பத்திரிக்கை வைச்சா?”

“அவளே கொண்டு வந்து கொடுத்தா. நாங்க நாலு நாளைக்கு முன்னாடியே நண்பர்களாய்ப் பிரிஞ்சுட்டோம்.”

“மாப்பிள்ளை எந்த ஊர்?”

“பக்கம்தான். துபாய்ல கம்ப்யூட்டர் இன்ஞ்னியர். கைநிறைய சம்பளம். ஆள் பார்க்கவும் நல்ல அழகா இருக்கான். அதிர்ஷ்டவசமா வந்து அவளுக்கு மாட்டியிருக்கான். ஆனாலும் அற்ப ஆயுசு.”

“டேய்! என்னடா சொல்றே?!” – ராமு துணுக்குற்றான்.

“நடக்கப் போறதைச் சொல்றேன்.”

ராமுவிற்கு நண்பனுக்குள்ளிருக்கும் மிருகம் தெரியும். கலக்கமாகய் ஏறிட்டான்.

வசந்த் தொடர்ந்தான். “திருமணம் முடிஞ்சு புருசன் பொண்டாட்டி துபாய் பறக்கிறதா திட்டம்; நான் எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன்.”

“நீ திருமணத்துக்குப் போகப் போறீயா?”

“கண்டிப்பா போவேன். அச்சதை போடுவேன். மொய் வைப்பேன். அவள் முன்னாடி நான் யோக்கியன் போல நல்லவனாகவே நடிப்பேன். அப்போதான் நாம் விசம் கக்கினாலும் அவளுக்குத் தெரியாது.”

ராமு அவனைத் திகிலாய்ப் பார்த்தான்.

“தெரிஞ்சா சுதாரிச்சுடுவாள், தப்பிடுவாள். நான் நெனைச்சதை முடிச்சபிறகுதான் என் சுயரூபம் அவளுக்குத் தெரியனும்.”

‘‘திருமணம் முடிச்சபிறகும் அவளைத் துரத்துறேன்னு சொல்றது எனக்கொன்னும் நல்லதாப் படலை.” – ராமு தன் மனதில் பட்டதைச் சொன்னான்.

“அணில் கடிச்சபழம் இனிக்கும் ராமு..!”

“கசக்கும்! எச்சில் பட்டதுன்னு நினைச்சாலே குமட்டனும்”

“எனக்கு குமட்டலை ராமு. நான் தொட்டு முடிச்சபிறகுதான் எனக்கும் அவ குமட்டுவாள். அவளும் குமட்டுவாள்.”

“நீ எப்போ திருந்தப் போறே வசந்த்?”

“நீ எதிரியான பிறகு.”

“என்னடா சொல்லறே?” – ராமு திடுக்கிட்டான். திகிலாய் நண்பனைப் பார்த்தான்.

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.” – வசந்த் சிகரெட் புகையைவிட்டு நக்கலாகச் சிரித்தான்.

அதுவே ராமுவை என்னவோ செய்தது.

எழுந்தான்.


திருமணம் முடித்த மறாவது நாளே வெங்கடேஷ் பம்பரமாக சுழன்றான். முதலிரவைத் தள்ளி வைத்துவிட்டு திருமணத்தை முறைப்படி பதியவைத்து பாஸ்போர்ட் ஏற்பாடுகள் செய்தான். ஐந்து நாட்கள் மூச்சுமுட்டும் வேலையை முடித்தபிறகுதான் தேன்நிலவு கொண்டாட கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
கொடைக்கானல் குளிர் இளம் தம்பதியர்களுக்குக் குதூகலமாய் இருந்தது. அறையை விட்டு அவர்கள் நகரவேயில்லை. போர்வையை விலக்கவில்லை. பத்து நாட்கள் போனதே தெரியவில்லை. திரும்பி வரும்போதுதான் அசம்பாவிதம். திண்டுகல்லை நெருங்கும்போதுதான் அந்த கோர விபத்து.

வெங்கடேஷே காரை ஓட்டிச் சென்றான். திண்டுகல்லை நெருங்குவதற்கு முன்னாடியே மலைப்பாதை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்க இறங்கினான். இந்து காரில் இருந்தாள். ஓரம்போய் முடித்துவிட்டு காருக்கு வரும்போது எங்கிருந்தோ வந்த லாரி மோதி…

இந்து வீலென்று கத்தி அடுத்த வினாடியே மயக்கமானாள்.

பின்னால் வந்த அரசு போக்குவரத்து பேருந்து ஸ்தம்பித்தது. பயணிகளெல்லாம் இறங்கி வந்து…

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *