கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 55 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலை முடிந்தது. 

தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். 

சிகறட் கம்பனித் தொழிற்சாலைக்கு சற்று தூரத்தில் பஸ் தரிப்பிடம். 

நான் பஸ்ஸிற்காகத் காத்து நிற்கின்றேன். 

கணப்பொழுதில் தரிப்பிடத்தில் மக்கள் பிரவாகம். 

வந்தவர்களில் பெரும்பான்மையினர் இளம் யுவதிகளும் வாலிபர்களும். 

வேகமாக வந்த பஸ் மூச்சுவிட பஸ் தரிப்பிடத்தில் நிற்கின்றது. 

சிகறட் தொழிற்சாலை ஊழியர்கள் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுகின்றனர். 

என்னால் பஸ்ஸில் ஏற முடியவில்லை. 

‘சரி அடுத்த பஸ் வரட்டும்’ 

நான் நினைக்கின்றேன். 

மனதில் எரிச்சல். திரும்பிப் பார்க்கின்றேன். 

தனியாய் ஒரு நவநாகரீக இளசு. தன் உடுப்பு நலங்கிவிடுமோ என்ற நினைவில் அவள் பஸ்ஸில் ஏறவில்லைப் போலும். 

கப்பல் போன்ற ஒரு பெரிய மோட்டார் மெதுவாக வந்து தரிப்பில் நிற்கிறது. அவள் முன் ஆசனத்தில் இருக்க முயற்சிக்கின்றாள். 

‘பின் சீற்றில்’. அவன் விழிகளால் சைகை. 

யந்திரமாய் அவள் மோட்டாரில் ஏறுகின்றாள். 

பகல் பதினொரு மணி. 

இளவெய்யில். 

வெய்யிலின் வெதவெதப்பை அனுபவித்தவர்களாய் விடுதியின் முன்புற முள்ள புற்தரையில் நாங்கள் ஏழெட்டுப்பேர் அமர்ந்திருக் கின்றோம். 

ஒரு மோட்டார் வந்து நிற்கிறது. கோட் சூட்டுடன் ஒருவர் மோட்டா ரிலிருந்து இறங்குகின்றார். எடுப்பான தோற்றம். 

‘யாரோ ஒரு பெரிய அரசாங்க அதிகாரியோ அல்லது பெரும் பிர முகராகவோ இருக்கலாம்’. 

எங்களுக்கு குழப்பம். 

கல்கத்தா “டம் டம் எயாப்போட்டிலை இருந்து இங்கை பரக்பூருக்கு வர எவ்வளவு காசு?’. பிரமுகர் கேட்கின்றார். 

“இருநுாறு ரூபா” 

புத்தம்புதிய நுாறு ரூபாத் தாள்கள் இரண்டை மோட்டார் சாரதிக்குக் கொடுக்கிறார். 

48 சிறுகதைகள் 

‘எங்களுக்கு இரண்டுமாத கல்லுாரிக்கட்டணம், விடுதி, உணவுக் கட்டணங்கள் எல்லாவற்றிற்கும் போதுமான தொகையை மோட்டார் வாகனக் கூலியாகக் கொடுக்கின்ற இவர் யார்?’. 

என்மனதில் கேள்வி. 

“விடுதி வாடனைப் பார்க்கவேணும், எங்கை இருக்கிறார்?” 

அதிகாரத்தொனியில் கேட்கிறார். 

எங்களுக்கு மனக் கடுப்பு. 

விடுதி வாசலை நான் சைகையால் காட்டுகிறேன். 

உள்ளே செல்கின்றார். சிறிது நேரத்தில் விடுதி வாடனுடன் வெளியே வருகின்றார். 

“விடுதி போயைக் கூப்பிட்டு என்ரை சூட்கேசை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே வைக்கச் சொல்லுங்கோ”. வாடனுக்குக் கூறுகின்றார். 

“அப்பிடி ஒருத்தரும் இங்கேயில்லை. உமது சூட்கேசை நீர்தான் எடுத்து வைக்கவேணும்” 

வாடன் கூறுகின்றார் கடுப்பாய். 

“எல்லா அறைகளும் கொடுக்கப்பட்டு விட்டன. 

முன்பக்கமாயுள்ள அந்த சிறிய அறைதான் இருக்கு. நீர் அங்கைதான் தங்கவேணும்.” வாடன் அவருக்குக் கூறுகின்றார். 

புதிதாக வந்தவர் வேண்டாவெறுப்புடன் தனது சூட்கேசை சிறிய அறைக்குள் கொண்டுபோய் வைக்கிறார். மற்றைய அறைகள் ஒவ்வொன்றிற்குள்ளும் நாங்கள் இருவரிருவராக இருக்கின்றோம். 

நாங்கள் இருக்கின்ற ஒவ்வொரு அறையும் விசாலமான காற்றோட்ட முள்ளவை. 

புதிதாக வந்தவர் டேவிட் சகாயம் என்ற முதலாம் ஆண்டு மாணவன். வந்து இரண்டு வாரங்களுக்குள் சுரம் கண்டுவிட்டது டேவிட்டுக்கு. 

டாக்டர் வந்து பரிசோதனை செய்கின்றார். 

“இவருக்கு கொப்புளிப்பான் தொற்றுநோய். இவரைத் தனிமைப்படுத்த வேண்டும். அல்லது அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும்”. டாக்டர் கூறுகின்றார். 

“ஐயோ பாலா என்னை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டாம். நீதான் வாடனிட்டைச் சொல்லி நான் இங்கேயே இருக்க தயவு செய்து ஏற்பாடு செய்”. 

மன்றாட்டமாய் என்னைக் கெஞ்சிக் கேட்கின்றான். 

“பாலா எனக்கு வங்காள பாஷையும் தெரியாது. நான் ஆஸ்பத்திரிக்குப் போனால் தனிச்சுப்போவன். செத்துப்போவன். தயவு செய்து நீ வாடனிட்டை விளக்கிச் சொல்லி நான் இங்கேயே தங்குவதற்கு ஒழுங்கு செய்”. கைகூப்பி மன்றாடுகின்றான் டேவிட். 

நோயாளிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் அத்தனையையும் நான் தினசரி செய்து வந்தேன். 

டேவிட்டின் அறையைக் கூட்டி படுக்கை விரிப்பை மாற்றி, வேப்பிலைக் கொத்தால் அறைமுழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளித்து, சாப்பாட்டுக் கோப்பை கிளாஸ் என்பவற்றை சுடுதண்ணீரில் கழுவி டேவிட்டின் சகல வேலைகளையும் செய்து முடித்தபின்தான் நான் என்னைச் சுத்தம் செய்துவிட்டு கல்லுாரி செல்வேன். இது காலையும், மாலையும் தொடரும் எனது தினசரிக்கடமை. 

குசினிக்குள் வந்து குழப்பம் செய்கின்றார் என்று சமையல்காரர்கள் வாடனுக்கு முறைப்பாடு. 

பாலா என்னை ஒருநாளும் கவனிப்பதில்லை எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில்லை என்று வாடனுக்குக் கூறுகின்றான் டேவிட். எனக்கு எல்லாம் தெரியுமென்று ஒரு புன்சிரிப்புடன் வாடன் பாலாவுக்கு கூறிவிட்டுச் செல்கிறார். 

டேவிட் எமது விடுதியிலுள்ள எவருடனும் சேர்வதில்லை அவன் தனிப் போக்கு. 

எங்கள் பற்பசை, பவுடர், சீனி, கோப்பித்துாள் அடிக்கடி காணாமல் போகின்றன. 

வாடனிடம் நாங்கள் முறைப்பாடு. பலனில்லை. 

இது டேவிட்டின் திருவிளையாடல் என்று எல்லோருக்கும் தெரியும். 

இதுபற்றி நாங்கள் அவனைக் கேட்கின்றோம். அவன் கைவிரிப்பு. 

மாதம் முன்னுாறு எடுக்கிற நான், மாதம் எழுபத்தைந்து அல்லது நுர்று ரூபா எடுக்கிற உங்களின் பொருட்களை ஏன் திருடப்போறன் என்றுகூறி எங்களை மடக்கிறான். 

டேவிட் திறமையான டென்னிஸ் ஆட்டவீரன். கல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல ரெனிஸ் கிளப்பில் டேவிட் உறுப்பினன். மாதாமாதம் கணிசமான கட்டணம் செலுத்தினால்தான் உறுப்பினராக இருக்கமுடியும். அரசாங்க உயரதிகாரிகள், வர்த்தகப் பெரும் புள்ளிகள், பிரமுகர்கள்தான் இந்த ரெனிஸ் கிளப்பில் உறுப்பினராக முடியும். 

டேவிட்டிற்கு ஆஜானுபாகுவான உடல்கட்டு, எடுப்பான கம்பீரத்தோற்றம், பெறுமதிகூடிய கோட்சூட் உடை. அவன் கவர்ச்சிகரமாக ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவான். இப்பண்புகள் அனைத்தும் டேவிட் சமூகத்தில் உயர்ந்த மட்டத்தைச் சார்ந்தவன் எனப் பறைசாற்றுகின்றன. 

சனி ஞாயிறுகளில் முழுநாளும் விடுதியிலிருக்கமாட்டான். இரவு பத்துமணிக்குத்தான் விடுதிக்கு வருவான். வந்ததும் அவன் தண்ணீர் கொதிக்க வைத்து தன் ‘அண்டவியரை’ சோப் போட்டு துவைப்பான். டேவிட் கல்கத்தாவிலுள்ள பிரபல தியேட்டர்களில் ஓடுகின்ற ஆங்கிலப்படம் ஒன்றையும் விடமாட்டான். படம் பார்க்கும்போது அவன் பக்கத்தில் ஆங்கிலோ இந்தியன் மங்கை இருக்கும். 

சிலநாட்களில் நவநாகரிக மங்கையுடன் போல்றூாம் டான்ஸ். டான்ஸ் முடிந்ததும் அந்த மங்கையுடன் டின்னர் பிரபலமான ஹோட்டலில். டேவிட்டிடம் ஒரு நல்ல அம்சம். அவன் ஒருநாளும் மதுவைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. 

பரீட்சை காலங்களில் நாம் தீவிரமாகப் படிப்போம். ஆனால் டேவிட் அக்கறையுடன் படித்ததை நாங்கள் ஒருபொழுதும் பார்த்ததில்லை. 

“என்ன டேவிட் எல்லோரும் பரீட்சைக்காக தீவிரமாகப் படிக்கின்றார்கள், நீ மட்டும் எந்த நேரமும் ஹௌடா ஸ்டேசனில் அல்லது சௌறங்கியில் நிற்கிறாய்?”. 

எமது பொருளியல் பேராசிரியர் ஒருநாள் டேவிட்டைக் கேட்கின்றார். 

பதிலேதும் கூறாமல் அவன் மெதுவாக நழுவிச் சென்றுவிட்டான். பரீட்சை இறுதி விடைத்தாள் எழுதி முடிந்து மண்டப வாசலுக்கு டேவிட் வந்துகொண்டிருக்கின்றான். 

“டேவிட் எப்பிடிப் பேப்பர்? நீ நல்லாய் எழுதினியா?”. 

கரிசனையுடன் நான் டேவிட்டைக் கேட்கின்றேன். 

“வாழ்க்கை ஒரு கேலிக்கூத்து “, 

அவன் அநாசயமாய் கூறிவிட்டு சென்று கொண்டிருக்கிறான். 

டேவிட் பைசிக்கிள் றிக்ஷோவில் சரம்பூர் ஸ்டேசனுக்குச் சென்று கொண்டிருக்கின்றான். அவன் கையில் ஒரு சிறிய ப்றீவ்கேஸ்’ மாத்திரம் தான். 

டேவிட் இலங்கைக்குப் பயணமாகின்றான் என்று அவனுடைய நண்பன் மத்தியூ கூறியதும் எமது விடுதிச் சிற்றூாழியன் சரம்பூர் ஸ்ரேசனுக்கு விரைகின்றான். இதையறிந்த, எங்கள் விடுதிக்குப் பின்னாலுள்ள சாலையில் சிற்றுண்டி வைத்திருக்கின்ற கார்த்திக்கும் சரம்பூர் ஸ்ரேசனுக்கு விரை கின்றான். 

நல்ல காலம் ஹொறா எக்பிறஸ் இன்று லேற். 

நாராயணன் தனக்கு சேரவேண்டிய ஒரு மாத இடியப்பம், இட்லி, தோசைக் கட்டணக் கடன் நாற்பது ரூபாக் காசை டேவிட்டிடமிருந்து வசூலிக்கிறான். டேவிட் உட்பட நாங்கள் நாட்களில் முதல்நாளே நாராயணனிடம் ஓடர் கொடுத்து சில காலைவேளைகளில் இடியப்பம் அல்லது இட்லி அல்லது தோசை வாங்கிச் சாப்பிடுவோம். 

கார்த்திக் என்ற சிற்றுண்டிச் சாலை முதலாளி, பாண் ரோஸ்ட், ஓம்லட், தேனீர், சிகறட் கட்டண நிலுவை நாற்பத்தேழு ரூபாவை டேவிட்டிடமிருந்து மிரட்டி வாங்குகின்றான். 

பாவம் கணேஸ் இரண்டு மாதமாக டேவிட்டின் உடுப்புக்களை கழுவிய கூலிக்கட்டணம் ஐம்பது ரூபாவை பெறமுடியாமல் போய்விட்டது. காரணம் டேவிட் இன்று பயணம் செய்கிறான் என்று கணேசிற்கு தெரியாது. 

டேவிட் இன்று பயணம் செய்கின்றானா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அவனுடைய அறைக்குச் செல்கின்றோம். 

டேவிட்டின் அறை பூட்டப்படாமல் திறந்து கிடக்கிறது. அவனின் பெரிய சூட்கேஸ்கூட திறந்தே கிடந்தது. ஏழெட்டு விலையுயர்ந்த கால்சட்டைகள், பிளேசர் கோட்டுடன் மூன்று பெறுமதிமிக்க கோட்கள், நான்கைந்து கழுத்துப்பட்டிகள், பத்துப்பதினைந்து வெளிநாட்டு மான்ஹட்டன் சேட்டுக்கள், மூன்று ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பிரிட்டிஷ் விலையுயர்ந்த சப்பாத்துக்கள் எல்லாமே அலங்கோலமாய் சிதறிக் கிடக்கின்றன. 

டேவிட்டின் பழையஹாட் சரத்தில் பொட்டுப்பொட்டாய் சிகறட்டால் எல்லா இடங்களிலும் சுடப்பட்டு பொத்தல்கள் கிடக்கின்றன. 

டேவிட்டின் குஷன், மெத்தை, தலையணைகள் போட்டது போட்டபடியே கிடக்கின்றன. 

மூன்று பக்கச் சுவர்களிலும் கட்டில் உயரத்திற்கு பெண்களின் ஆபாச நிர்வாணப் படங்கள் பென்சிலால் வரையப்பட்டுள்ளன. 

தனது படிப்பை அரைகுறையில் விட்டு பத்து வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்த டேவிட், என்முன் அதே கம்பீரத்துடன் நிற்கின்றான். கோட்சூட் கழுத்துப்பட்டியுடன் நிற்கின்றான். விலையுயர்ந்த பென்ஸ் மோட்டார் வாகனத்துடன். என்னால் நம்பமுடியவில்லை. 

இது பிரமையா? 

“பாலா நீ……?”. டேவிட்தான் என்னை அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைக்கின்றான். 

இவனுக்கு இவ்வளவு ஞாபக சக்தியா?. எனக்கு ஆச்சரியம். 

“என்ன பாலா என்னைத் தெரியேல்லையா? நான்தான் படிப்பை அரைகுறையில் விட்டுவிட்டு பத்துவருடங்களுக்கு முன்னர் கல்கத்தாவி லிருந்து ஓடி வந்த அதே டேவிட்”. 

“எனக்கு இப்ப நல்லாய்த் தெரியுது டேவிட். நாங்கள் இப்பிடிச் சந்திப்போம் எண்டு நான் எள்ளளவும் நினைக்கேல்லை.” 

டேவிட்டுக்கும் வியப்பு. “எப்பிடி இருக்கிறாய் பாலா?”. 

“நான் நல்லாய்த்தான் இருக்கிறன்.நீ?” 

“நானும் நல்லாய்த்தான் இருக்கிறன், இதோ பாக்கிறியே.” 

“வேலை செய்யிறியே டேவிட்? என்ன வேலை?” 

“நான் சிகறட் கொம்பனியின் இரண்டு பாட்ணர்களில் ஒருவன். நினைச்ச நேரம் போவன் வேலையள் எல்லாத்தையும் என்ரை பாட்னர் பார்த்துக்கொள்ளுவார்.” 

“அப்பிடியா?” 

“அதோடை வெள்ளவத்தை பஸல்ஸ் லேனிலை எனக்கு ஐஞ்சு வீடுகள். ஓண்டிலை நானிருக்கிறன். நாலு வீடுகளும் வாடகைக்கு விட்டிருக்கிறன்.” 

“பாலா நீ என்ன செய்கிறாய்?’ 

“நான் ஆசிரியராய்க் கடமையாற்றிறன்”. 

“கல்யாணம் கட்டீட்டியா?”‘ 

“ஓ, ஆறு வருஷத்தக்கு முந்தி கட்டிட்டன். இரண்டு பிள்ளைகள். ஆண் நாலு வயது, பெண் இரண்டு வயது. என் மனைவியும் ரீச்சர். டேவிட். நீ கல்யாணம் கட்டீட்டியா? எத்தினை பிள்ளையள்?” 

“ஓ, நாலு வரியத்துக்கு முந்தி அப்பா எனக்கு ஒருத்தியைக் கட்டி வைச்சார். அவள் மூண்டு மாதத்திலை என்னை விட்டிட்டு வேற ஒருத்தனோடை ஓடிட்டாள்.” 

“அட பாவமே!’ 

நான் வேதனையுடன். 

“அதுவும் நல்லதுக்குத்தான் பாலா. இப்ப நான் இரண்டு மூன்று மாதத்துக்கொருமுறை ஒரு புதிய இளசை வைச்சிருக்கிறன். அங்கை பார் பின்னுக்கொண்டு இருக்கு. ஒரு மாதம்தான். அடத்தது இன்னும் இரண்டு மாதங்களிலை வரும்.” அநாயசமாய் கூறுகின்றான் டேவிட். 

“சரி பாலா. நீ இப்ப எங்கை போறாய்?” 

“நான் தெஹிவளைக்குப் போறன் டேவிட்.” 

“சரி ஏறு, நானும் அந்தப்பக்கம் தான், கதைச்சுக்கொண்டு போவம்.” நான் முன் சீற்றில். 

“டேவிட் எப்பிடி காலம் கழிக்கிறாய்?” 

“நான் தனிமரம். நல்ல வருமானம். நாலு வீடுகளின்ர மாத வாடகை மொத்தமாக நாப்பதினாயிரம். சிகரட் கொம்பனி பங்கு வேற.” 

“எப்பிடி தனிய காலங்கழிக்கிறாய் டேவிட்?” 

“பகலிலை சீட்டாட்டம். இரவிலை நைற் கிளப்பிலை போற்றுாம் டான்ஸ், டின்னர்கள். இதோ பின்னுக்கிருக்கே ஒண்டு இதைப்போல இரண்டு முன்று மாதத்துக்கொண்டோடை ஊர் சுத்திறது. நுவரேலியா, கண்டி, பதுளை போன்ற இடங்களுக்குச் சென்று ஆடம்பர ஹோட்டல்களில் தங்கல்.” எதுவிதமான கிலேசமுமின்றி அவன் கூறுகின்றான். பத்து வரியத்திற்கு முந்தி இருந்தானே அதே டேவிட் தான் இன்றும். 

“டேவிட் அப்பா அம்மா சுகமாக இருக்கிறார்களா?” 

“ஆறு வரியத்துக்கு முந்தி அப்பா கண்மூடிட்டார். அவற்ரை ஆஸ்பத்திரியும் கைமாறிட்டுது. அவற்ரை பாட்ணர் அவருக்குத் தொப்பி போட்டிட்டான். அந்த ஆஸ்பத்திரிலைதான் அவர் ஹாட் அற்றாக்கிலை போய்ச் சேந்திட்டார்.” 

எதுவித கவலையுமின்றி அவன் கூறுகிறான். 

“அம்மா?” 

“பாவம் அம்மா அவ கிறிஸ்தவ துறவியாகிட்டா, நான் திருந்தி வாழவேண்டுமெண்டு இப்பவும் யேசுவிடம் இறைஞ்சி செபம் செய்து கொண்டிருக்கிறா கிறிஸ்தவ மடத்திலை. ஆவவை நினைக்கத்தான் எனக்கு பெரிய கவலையாய்க் கிடக்கு பாலா. அப்பரை நினைக்கத்தான் எனக்கு இப்பவும் ஆத்திரமாயும் கடும் கோபமுமாய் கிடக்கு.” 

“ஏன் டேவிட்?” 

“அவர் ஓர் இதய நோய் நிபுணர். ஆனா அவருக்கு இதயமேயில்லை.” “ஏன் அப்பிடிச் சொல்லுறாய் டேவிட்?” 

“அவர் குடிக்கிறதில்லை. நான்கூட ஒருநாளும் மதுவைத் தொட்டுப்பார்த்த தில்லை.’ 

“மது வெறியினால்தான் அவர் தவறுதலாய்ப் பிழைவிட்டாரென்று நினைக்கலாம். ஆனா அவர் சுயநினைவோடை அந்தக் கேடுகெட்ட செயலை தொடர்ந்து செய்தார் என்பதை நினைக்க எனக்கு இப்பவும் அவரிலை கடும் கோபமாய்க் கிடக்கு.’ 

“ஏன் அவரிலை கோபப்படுகிறாய் டேவிட்?” 

“அவர் தன்ரை ஆஸ்பத்திரியில வேலை செய்யிற எத்தனை இளம் தாதிப் பெட்டையளை நாசப்படுத்தினார் தெரியுமா?” 

அவன் வார்த்தைகளில் கோபாசேம் தெறிக்கிறது. 

“அவர் பாதையில்தான் நானும்.” 

“என்ன டேவிட் சொல்றாய்?” 

அதிர்ச்சியாய் நான். 

“என்னையும் அந்த இளம் தாதிப் பெட்டையளில மூண்டு நாலு பேர்……” 

“அப்ப என்னை என்னால கட்டப்படுத்த ஏலாமப் போச்சு. இப்பவும் நான் அதே பாதையிலதான்.” 

“இது அவருக்கும் அப்பவே தெரியும். ஆனா அவராலை எப்பிடி என்னைக் கட்டுப்படுத்த ஏலும்? இந்த விசயம் அம்மாவுக்கும் தெரியும். ஆனா அவவாலை ஒண்டுமே செய்யேலாமல் போச்சு. ஏனெண்டால் அவ ஒரு வாயில்லாப் பூச்சி. அழுவதையும், நாங்கள் திருந்தி நல்ல வழியை மேற்கொள்ள வேண்டுமென்று இறைவனை இராப்பகலாய் இறஞ்சிக் கொண்டிருக்கின்றா.” 

“டேவிட் அப்பாதான் போட்டார். ஆம்மாவுக்காக அந்தப் புனித ஆத்மாவுக் காக நீ திருந்தி ஒரு சீரிய நல்ல வாழ்க்கையை மேற்கொள்ள முயற்சி செய்யவேண்டும் டேவிட்.” 

நான் டேவிட்டை மனறாட்டமாகக் கேட்கின்றேன். 

“பாலா என் அம்மாவின்ரை பிரார்த்தனைக்காகவும், உன் அன்பான வேண்டுகோளுக்காகவும் இந்தக் கணத்திலிருந்தே நல்வாழ்கையை மேற்கொள்ள முடிவெடுத்திட்டன் பாலா. இது சத்தியம்..” அடித்துக் கூறுகின்றான் டேவிட். 

பம்பலப்பிட்டி சந்தி கழிகின்றது 

“பாலா இஞ்ச எனக்கொரு சின்ன வேலை கிடக்கு. நீ இந்த பஸ் ஹோல்ட்டிலையிருந்து பஸ் எடுத்துப் போறியே?’ வினயமாகக் கேட்கின்றான் டேவிட். 

“ஓ, தாரளமாய் நான் பஸ் எடுத்துப் போறன் டேவிட்.” 

நான் டேவிட்டின் மோட்டார் வாகனத்திலிருந்து இறங்குகின்றேன். 

ஒரு நல்ல காரியத்தைச் செய்து சாதனை புரிந்துவிட்டதாக எனது மனப்பூரிப்பு. 

எம் ஜி.எம் நைற்கிளப். டேவிட்டின் மோட்டார் உள்ளே செல்கிறது. 

‘முட்டாள் அம்மாவிற்காக நான் திருந்த வேண்டுமாம், அம்மா இப்ப உயிருடனிருந்தாத்தானே?’ 

“அம்மா பதினைந்து வருடங்களுக்கு முன்பே பரலோகம் சென்றுவிட்டாவே!”.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *