சிதறும் வியூகங்கள்





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பற்றை பற்றிப் போன காவோலைகளைப் பிய்த்தெறிந்து கொண்டு பனங்காய்கள் நிலத்தில் ‘தொப்’பென விழுவதும், ஆங்காங்கே சுடலைக் குருவிகள் அந்த மயான அமைதியைக் குலைத்துக் கொண்டு குரலெழுப்புவதும் பிள்ளையார் கோவில் ‘மேக்கியூரிப் பல்ப்’பினை வீட்டு யன்னலினூடாக வெறித்துப் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்திருக்கும் புவனத்திற்கு மிகத் துல்லியமாகவே கேட்கிறது. ஆதவன் மறைந்து ஆறு மணித்தியாலங்கள் கடந்திருந்தாலும், அவளை நித்திராதேவி இன்னமும் அரவணைக்கவில்லை. அவளது உள்ளம் ஓர் நிலையில் நில்லாது, எதையெதையோ எண்ணி ஏங்கியவண்ணமிருந்தது.
நீண்டு கொண்டிருக்கும் இந்த இரவு விடிந்து விட்டால்…….
நாளை வெள்ளிக்கிழமை, அவள் வாழ்வில் புத்தொளி வீசப் போகிறது. தனக்குப் பிறக்கும் விடிவினை எண்ணி அவளது உள்ளம் உள்ளூர மகிழ்ந்தாலும், நாளை வீட்டில் நடக்கப் போகும் சம்பவங்களைத் தீர்க்கதரிசனமாக எண்ணிய போது ஏக்கப் பெருமூச்சென்றே எஞ்சியது. அவள் எழுதி வைத்த காகிதத்தை வாசித்துவிட்டு தகப்பன் கொதித்தெழுவார். “அறுவாளுக்கு அப்பவே சொன்னனான். நெசவுக்கு வெளிக்கிட வேண்டாமெண்டு. இப்ப வந்த வாழ்மானத்தைப் பாத்தியே?” என்று தாயைப் பார்த்துக் கறுவிக் கொள்வார். “சீச்சீ இது என்னடா பவுசு கெட்ட கதையாப் போச்சு, இவள் என்ன வேலை செய்தவள். இனி என்னெண்டு ஊருக்குள்ளை உலாவுறது? வழி தெருவிலை கண்டு எல்லாரும் நையாண்டி பண்ணப் போயினம்” என்று தாயார் அலுத்துக் கொள்வாள்.
இப்படி இவர்கள் வைக்கும் ஒப்பாரிகளும், ஓலங்களும் அவளுக்கு….. அவளது ‘அந்த’ பிரச்சனைகட்கு தீர்வைத் தருமா? “கட்டி வைச்சால் சரி. மாப்பிளை எப்படிப்பட்டவன் எண்டாலும் பறவாயில்லை. கொழுத்த சீதனமாக குடுப்பம்” என்று பெருமையடிப்பவர்களா…… அவளது பிரச்சினைக்கு வழி பிறப்பிப்பார்கள்?
கனவு போல் நடந்தேறிய அவளது திருமண ஏற்பாடுகள்….. கலியாண எழுத்து முடிந்து வீட்டிற்கு வந்த ‘மாப்பிளை’யை வெறுத்தொதுக்கிய அவளது மானப் பிரச்சனைகள்….. எல்லாமே ஒரு வருஷத்திற்குள் நிகழ்ந்தவைதான்.
புவனம், புனிதம், புஷ்பம் என அடுக்கடுக்காக மூன்று பெண்கள் பெற்ற முருகேசர் ஒரு கரைச்சி வேளாண்மைக்காரன். தனது பொடிச்சியள் நல்ல இடத்திலை வாழ்க்கைப்படவேணும் என்பதற்காக உத்தியோக மாப்பிளை தேடி பாவம் மனுசன் ஏறி இறங்காத படிகள் இல்லை. அதனாலேயே அவர் அரைக் கிழவனாகிவிட்டார். நடைகூடத் தளர்ச்சி கண்டுவிட்டது.
நல்ல ‘பிளானான’ ஒரு அமெரிக்கன் ‘பாஷன்’ வீட்டைக் கட்டி முடித்திருந்தும் இருபது, இருபத்தைஞ்சென்று ‘டிப்போசிற்’ பண்ணியிருந்தும் நல்ல ஒரு ‘கவுண்மேன்ற்’ உத்தியோகத்து மாப்பிள்ளைக்காக பல பேரிடம் பல்லிளிச்சும் பலனில்லாது போகவே, இறுதியாக மனைவி பாக்கியத்தின் தலையணை மந்திரப்படி ‘கடை முதலாளியை எண்டாலும் பறவாயில்லை கட்டிவைப்பம்’ என்ற தீர்க்கமான முடிவெடுத்திருந்த நேரத்தில் தான் ‘ஓவிசியர்’ வளவாரின், அந்தச் சம்பந்தம் வந்தது.
“பொடியன் ‘கொம்பனிக் கிளறிக்கல’. ‘எக்கவுண்டன்’ சோதனையும் ஆவணிக்கு எடுக்கிறான். குடி, கூத்தி, சோலி சுரட்டு ஒண்டுமில்லை. நாங்கள் கீறீன கோட்டை எங்கடை பிள்ளை ஒரு நாளும் தாண்டாது” என்ற அடைமொழிகளுடன் கூட வந்த மாப்பிள்ளை மகேசனின் தாய், தேப்பன் பேச்சில் மயங்கி முருகேசர் புவனத்தைக் கேக்காமலே ‘ஓம்’பட்டுவிட்டார்.
சீதனப் பேச்சு எழுந்த போது முருகேசர் கூறினார். “எங்களுக்கும் பாருங்கோ, இது தலைப்பிள்ளையின்ரை காரியம். ஏதோ எங்களாலை இயண்டதுகளை நாங்கள் எங்கடை பிள்ளைக்குக் குடுக்கிறம். ஏழரைப் பரப்புக் காணியிலை இந்த வீடு வளவு. இருபத்தையாயிரம் காசோடை இனிப் பதினையாயிரத்துக்கு நகை நட்டு அதோடை குளங்கரையில் தோட்டத்தறை ஐம்பது பட்டி….. எங்களுக்கும் என்னும் இரண்டு பெடிச்சியளெல்லோ…”
“இந்த நாளையில புழுத்த பொயிலைத் தோட்டத்தறையை வைச்சு நாங்களென்ன மாரடிக்கிறதே? கதையை விட்டுட்டு கரைச்சி வயலிலை ஒரு அஞ்சேக்கரையாவது எழுதுங்கோ. அதுக்கு உங்களுக்குப் புறியம் இல்லாட்டி இந்தப் பேச்சை இத்தோடை விட்டுடுவம்” என மருட்டி…… மிரட்டி ‘ஓவசியர்’ வளவார் சீதனப்பேச்சில் வலு மும்முரமாய் நின்று சட்டுப்புட்டு என்று கலியாணப் பேச்சை முடித்து, கலியாண எழுத்திற்கு நாளையும் குறித்துவிட்டனர்.
‘விசயம்’ புவனத்திற்கு எட்டியபோது அவள் அதற்குச் சம்மதிக்கவேயில்லை.
“இருக்கிற சொத்துபத்துகளெல்லாத்தையும் எனக்கு தந்திட்டு தங்கச்சிமாருக்கு என்னேயப் போறியள்?” புவனம் கேட்டாள்.
“அதுகளுக்குத் தானே பிள்ளையாரேயெண்டு கொய்யா இருக்கிறார். அதுகளைப் பற்றி நீ யோசியாமல் உன்ரை முடிவைச் சொல்லு பிள்ளை!” தாயார் தான் மன்றாட்டமாய் கேட்டாள்.
“என்னை மதியாமல் சீதனத்தை நம்பிவாற உங்கடை மாப்பிள்ளையும், சம்மந்தமும் எனக்குத் தேவையில்லை” அவள் கூற்றில் உறுதி தொனித்தது.
உள்ள சொத்துகள் யாவற்றையுந் தானே அபகரிக்கின்றேனே என்ற அந்த உணர்ச்சிமேலிட்டதும் தனக்குப் பின்னால் இரண்டு குமர் இருப்பதையும், வயது போன வேளையில் வயலை நம்பி ஆண் துணையே அற்ற தனது தந்தையையும் எண்ணிய போது தான் புவனத்திற்கு அந்த முடிவை எடுக்க வேண்டிய வலுக்கட்டாயம் ஏற்பட்டது. புவனத்தின் கொள்கைகள் (சீதனத்தை எதிர்பாராது நல்வாழ்வை எதிர்நோக்கி வரவிருக்கும் இலட்சியக் கணவன்) யாவும் முருகேசரின் முரட்டுப் பிடிவாதத்தின் முன் தோல்வி கண்டன.
‘ரெஜிர்ஷ்டேஷன்’ அன்று தனது வருங்காலக் கணவரைக் கண்ட புவனம் கச்சேரியால் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டதும், சாப்பிடாததுமாய் முகக்கிடை கிடந்து விட்டாள். “என்னாலை அந்தாளைக் கட்டேலாது.” தாயார் பாக்கியத்திற்கு தான் புவனம் விசயத்தை முதலில் சொன்னாள்.
“என்னடி நீ நோடாலம் கொத்துறாய்?” பாக்கியத்திற்கு அது பேரிடியாய் இருந்தது.
“அந்தக் கிழவனுக்கு நானே பொம்பிளை?”
“பு…புவனம்.”
“அந்தாளைப் பாத்தால் ஐம்பது வயதாள் போலை கிடக்கு. என்னாலை முடியாது…..” அருகிலிருந்து இதைக் கேட்ட முருகேசருக்குப் பெருந்தலையிடியாகிவிட்டது.
“மாப்பிள்ளைக்கு வயது ஒல்லுப்போலை ஏற்றந்தான். முப்பத்திநாலு முடிஞ்சு முப்பத்தைஞ்சு நடக்குதெண்டு சொல்லிச்சின. இனி ஆளும் தேப்பனைப் போல கொஞ்சம் நெடுவல். தலையிலும் மயிர் கொஞ்சம் உதிர்ந்து போச்சு தான். ஆள் கறுப்பொண்டாலும்….. உவர் சிற்றம்பலத்தார் எடுத்த மாப்பிள்ளையை விட நானெடுத்த மாப்பிள்ளை குறைஞ்சு போச்சே?” முருகேசர் மனம் விட்டே மகளைக் கேட்டு விட்டார்.
“வயதிலை என்னடி பிள்ளை? எனக்கும் கொய்யாக்கும் அப்பிடித்தானே? பத்து வயது வித்தியாசம். இது என்ன….. பன்ரண்டு வயசு தானே?’
“உந்தக் கிழட்டுப் பிள்ளைக்கே இந்தக் கொழுத்த சீதனம்?” பற்றிவரும் எரிச்சலைப் புவனம் வார்த்தைகளாக வடித்தாள்
கொள்கைகள், இலட்சியங்கள் நிறைவேறாத பட்சத்தில் தனது இளமைக்கும், அழகுக்கும் ஒத்த கணவனாவது தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்….. வன்மமாக வடிவெடுத்த அந்த வேளையில்….. “ஐயா! ஐயா! அத்தான் சைக்கிளிலை வாறார்…..” முருகேசரின் கடைசி மகள் புஷ்பம் தான் இளைக்க இளைக்க ஓடிவந்தாள்.
“அத்தான் கண்டறியாத அத்தான்…சீதனப் பிசாசு!” புவனத்தின் புலம்பலிது.
“நீங்கள் முதல் போங்கோவன். அவரோடை கதைச்சுக் கொண்டிருங்கோவன்.” மனைவி மந்திரப்படி முருகேசர் ‘ஹோலிற்கு’ குதித்து ஓடுகிறார்.
“ஓ! வாருங்கோ தம்பி!” முருகேசர் மாப்பிள்ளையை வரவேற்பது பாக்கியத்திற்கும் தெளிவாகவே கேட்கிறது.
“எழும்பு பிள்ளை. போய் கால் முகத்தைக் கழுவிப் போட்டு, காலம்பற கச்சேரிக்குடுத்த சிங்கப்பூர் ‘நைலைக்சை’ உடுத்துக் கொண்டு வா பிள்ளை. நான் போய் தேத்தண்ணி போடுறன். கொண்டு போய்க் குடுத்திட்டுக் கதைச்சுக் கொண்டிரன்.”
“என்னாலை ஏலாது.”
“என்ரை ராசாத்தியெல்லே…..”
“என்னாலை முடியாதெண்டுறன். வேணுமெண்டால் நீ கொண்டு போய்க் குடுத்திட்டு அந்தாளோடை கதைச்சுக் கொண்டிரு…..’ அப்பாடா! இப்படியும் மகளிடம் தாய் கேட்க வேண்டிய நிலை! பாக்கியத்திற்கு என்னசெய்வதென்றே புரியவில்லை.
“என்ன புவனத்தை….. காணேல்லை?” வந்த அரைமணி நேரமாக ஹோல் கதவையே பார்த்துப் பார்த்து களைத்துப் போன நிலையில் மாப்பிள்ளை முருகேசரை மனம் விட்டுக் கேட்பது பாக்கியத்திற்கு மிகத் தெளிவாகவே கேட்கிறது.
“ஓ!…. அவளுக்கு….. பாருங்கோ சரியான தலையிடி, படுத்திருந்தவள்…. இருங்கோ நான் போய் வரச்சொல்லுறன்.” அறைக்குள் ஓடி வந்தவர் அவசரத்துடன் மகளை அழைக்கிறார்.
“என்னாலை அந்த சீதனப் பிசாசோடை கதைக்கேலாது. புவனத்தின் கூற்றில் உறுதி தொனித்தது.
“இப்ப என்னப்பா செய்யிறது?” மகளின் பிடிவாதத்தால் மரத்துப் போய்நின்ற பாக்கியத்தின் ஏக்கம் இது!
“எல்லாத்துக்குமா பிறகு வாறன். இப்ப நீ ஊத்தி வைச்ச தேத்தண்ணியையும், நாலைஞ்சு பணியாரத்தையும் எடுத்துக் கொண்டுவா!” முருகேசர் சற்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு நகருகிறார்.
“தம்பி! வேறையொண்டுமில்லை. காலம்பற கருக்கலோடு முழுகினாப் போலை தலைக்கை ஓரட்டா அம்மிப் போட்டுது. தலை நிமித்தேலாமல்……. பாவம்…புவனம்…… படுத்திருக்கிறாள்.” முருகேசர் நாகூசாது சொல்வது புவனத்திற்கும் தெளிவாகவே கேட்கிறது.
மாப்பிள்ளை சென்றதும் முருகேசர் மகளிற்கு இரண்டு மணித்தியாலங்களாக ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து விட்டார். வீடு வாசலின்றி இருக்கிற குமர்கள் வாழ வழியின்றி வாழுகிற குமர்கள் உடுக்க உடையின்றி…….. ஒரு வேளை சோற்றுக்கே அல்லற்படுவோர் ஆகியோர் அப் பிரசங்கத்தில் கருப்பொருளாக இருந்தார்கள்.
அடுத்த நாள் அதே நேரம் மாப்பிள்ளை வந்திருந்தார். அன்று முருகேசர் பாடு தலையம்மல். அவர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அடுப்படி மூலைக்குள் அம்மிக்கருகில் குந்திவிட்டார். பாக்கியந்தான் ‘அரிச்சந்திர’ படலத்தில் இறங்கி நின்றாள்.
“அது பாருங்கோ தம்பி! புவனத்திற்கு தலையிடி இண்டைக்கும் குறையேல்லை. அதுதான் தேப்பன் அரோகராப் பரியாரியாரட்டைக் கூட்டிக் கொண்டு போட்டார். இப்பான் வெளிக்கிட்டுப் போயினம்.”
அடுத்த இரண்டு நாட்களாக மாப்பிள்ளை வரவில்லை. ஐந்தாம் நாள் மாப்பிள்ளையின் தாயார் மீனாட்சிதான் வந்திருந்தாள்.
“புவனத்துக்கு சுகமில்லையெண்டு தம்பி சொல்லிச்சுது. அதுதான் பாத்துக் கொண்டு போவம் எண்டு வந்தனான்.”
புவனம் எதுவுமே பேசவில்லை.
“இப்ப எப்படிப் பிள்ளை”.
“இப்ப பரவாயில்லைப் பாருங்கோ.” பாக்கியம் பதிலுரைத்தாள்.
“ஏதுஞ் சாட்பிட்டனியே பிள்ளை?”
“சொன்னால் நம்பமாட்டியள். நாலு நாளா தண்ணி வென்னி கூட இல்லை”.
காரணம் சரியோ என்னவோ பாக்கியத்தின் அந்தக் கூற்று மட்டும் உண்மை.
“பாக்கத் தெரியுது. பொடிச்சி வலுவாக் கொட்டுப்பட்டு போச்சு.” மீனாட்சி கவலை கொண்டாள்.
எத்தனை நாளைக்கென்று தான் தலையம்மல் வருவது? அன்று மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபோது முருகேசர் ஊரில் இல்லை. அவர் கரைச்சிக்குப் போய்விட்டார். வழமைபோல் ‘ஹோலில்’ வந்திருந்த மாப்பிள்ளை கதவு நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மாவிலைகளை எண்ணிக் கொண்டிருந்தார்.
“உந்தாள் ஏன் மாறி மாறி வருகுது. என்னாலை தான் கட்ட முடியாதெண்டு சொல்லிப் போட்டேனே!” உள்ளிருந்து சொல்லிக் கொள்வது (?) மகேசனுக்குக் தெளிவாகக் கேட்கிறது.
“புவனம் கேக்கப் போகுதடி!” அது பாக்கியத்தின் அதட்டல்.
“கேக்கட்டும், நல்லாக் கேக்கட்டும்” மீண்டும் அதே குரல் அது….? புவனம்!
அப்படியானால்…… புவனத்திற்கு இந்த சம்மந்தத்தில் சம்மதமில்லையா? இது….. வேண்டாவெறுப்பா நடக்கிற கலியாணமா?
தலையிடி…..
இப்போ…… மாப்பிள்ளைக்கு வந்துவிட்டது!
அடுத்த நாள் கருக்கலோடையே ‘ஓவசியர்’ வளவார் வந்துவிட்டனர். ஆள்விட்டனுப்பியதில், தமிழ்த் திரைப்படத்தில் கற்பழிப்பு முயற்சியை முறியடிக்க எங்கிருந்தோ வந்து குதிக்கும் கதாநாயகனைப் போல், அதே சமயத்திற்கு முருகேசரும் ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
“சாய்! நாங்கள் தெரியாமல் வந்து மாட்டுப் பட்டுப் போனம்.உது தான் ஊர்மாறி கலியாணம் செய்யக் கூடாதெண்டு சொல்லுறது. நல்லவேளை இந்தளவோடு விஷயம் போனது. வேறையென்ன? கலியாண எழுத்தைத் தள்ளுறதுக்கு அடுக்கு நிரையளைப் பாருங்கோ.” ‘ஒவசியர்’ கூறிச் சென்றார்.
சுடலைக் குருவியொன்று பெருங்குரல் எழுப்பியது. எங்கிருந்தோ ஓர் ஆந்தை அலறியது. கலங்கிய கண்களை ‘பெட் ஸீற்’றினால் துடைத்தவாறே புவனம் திரும்பி மறுபக்கம் படுத்தாள். பிள்ளையார் கோவில் ‘மேக்கியூரிப் பல்பின் ஒளி இப்போ பன்மடங்கு அதிகரித்துவிட்டது!
விவாகரத்து நடந்ததன் பின்பு பிள்ளையார் கோவில் பூங்காவனத் திருவிழாவிலன்று புவனத்தின் வீட்டிற்கு வந்த அவளது பள்ளிச் சிநேகிதி மலர்தான் அந்த ‘ஐடியா’ சொன்னாள். அதன் பிரகாரம்
பிரகாரம் முருகேசரினதும், பாக்கியத்தினதும் ஏகோபித்த எதிர்ப்புகட்கு மத்தியில் புவனம் நெசவுக்குப் போய்வர ஆரம்பித்தாள்.
நெசவாலை அவளிற்கு ஓர் புது உலகமாக திகழ்ந்த அந்த வேளையில் தான் நெசவு வாத்தியார் மூர்த்தியின் கொள்கைகள் அவளது சிந்தைக்கு எட்டின.
மூர்த்தி அந்த கிராமத்தில் பிறந்தவன்தான். அவனது தாயார் முருகேசருக்கு தூரத்து உறவு. இளமையில் அவள் தமக்கையுடன் கமத்தில் இருக்கும் போது அங்குள்ள ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளியுடன் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவனே மூர்த்தி. அதனால் அவனது தாயார் மட்டுமல்ல அவனும் ஊரவரால் ஒதுக்கப்பட்டான்.
ஊரவர்களின் கவனத்திற்காளாகாது விட்டாலும் மூர்த்தியின் உள் மனம் மிக்க விசாலமானது. அவனது முற்போக்கான சிந்தனைகளும், வாழ்க்கையில் ஏதாவது புரட்சியை செய்ய வேண்டும் என்ற மனத்திடமும், சுமாரான அவனது உடல் வசீகரமும் புவனத்தை ஆட்கொண்டன.
கருத்துக்கள், சந்தர்ப்பங்கள் யாவும் சங்கமித்து அந்த ஊற்றில் மலர்ந்த காதல் மலர் விரிவதற்கு வேண்டிய புத்தொளியினை நல்குவதற்கு….. சமுதாயக் கட்டுகள் என்ற போலி மேகம் சூழ்ந்து நின்றது.
“தேடித்தந்தவர் என் மனதைக் கவரவில்லை. என் மனதைக் கவர்ந்தவரை நான் தேடிக் கொள்கிறேன்… இது தவறா?”புவனம் தன் தோழி மலரிடம் அடிக்கடி இப்படிக் கேட்க ஆரம்பித்தாள்.
சென்ற புதன்கிழமை புவனத்துடன் நெசவுக்கு வந்த போது கட்டைப்புளியடிப்புலவில் வைத்து மலர் அந்த விஷயத்தைச் சொன்னாள்.
“உனக்குப் பேசின மாப்பிள்ளைக்கும், எங்களோடை படிச்ச சாந்தத்துக்கும் கலியாணம் முடிவாப் போச்சாம். வாற வெள்ளிக்கிழமை காலமைக்கு சோறு குடுப்பிக்கப் போயினமாம்.” மலர் சொன்ன சேதி புவனத்திற்கு அப்போது எந்தவித அதிர்ச்சியையுந் தரவில்லை என்பதை வழமைபோல அவள் சரளமாகப் பழகியதிலிருந்து அறிய முடிந்தது.அன்று வீட்டிற்கு வந்தபோது……
“செல்லையற்றை சாந்தத்துக்கு என்ன வயது? அவள் பொடிச்சி ஓம்படேல்லையே? இந்த ஊரிலையே செய்து காட்டிறன் எண்டு அண்டைக்கு சொல்லிப்போட்டுப் போச்சினம். செய்தே காட்டிப் போட்டினம். இஞ்சைதான் எல்லாத்துக்கும் தத்துவமும் தாரைவாப்பும்….. அடுத்து இரண்டு குமருக்கு நிக்குது எண்ட நினைப்பே இல்லாமல்….. அதுகளுக்கு இனி ஊருக்கை மாப்பிள்ளை எடுக்கலாமோ? எங்கட பொடியன் வர ஒளிச்சு விளையாடித் திரியப் போறியளோ? எண்டெல்லே இனி வாறவை கேக்கப் போயினம். என்ன சீரழிஞ்ச பிள்ளை பெத்தன்? எனக்கெண்டு இந்தச் சீலக்கேடு வந்து துலைஞ்சுது?”
பாக்கியத்தின் பேச்சின் எதிரொலி? நெசவு முடிந்ததன் பிறகு இறுதியாக மூர்த்தியுடன் எடுத்த அந்த முடிவு.
“காலம் பூரா கன்னியாயிருந்தாலும் குறைஞ்ச சாதிக்காறரை கலியாணஞ் செய்யிறதை கேவலமா எண்ணுற இந்த ஊருக்கை…….. நானும், நீயும் எப்படி புவனம் கலியாணஞ் செய்ய முடியும்?”
“மூர்த்தி நீங்களா……. இப்பிடி!”
“எங்கடை கொள்கைகள் கருத்துக்களுக்கு மேலாலை யதார்த்தம் எண்டும் ஒண்டு இருக்குது புவனம். அதுதான் சொல்லுறன். எங்களை வாழவைக்கிற அளவுக்கு இந்த சமூகம் இன்னும் முன்னேறேல்லை.”
“அப்படியெண்டா…..”
“இந்த ஊரை விட்டொதுங்கி நாம் வாழ வேணும்.”
புவனத்தின் நீண்ட நேர மௌனத்தை சம்மதமாக்கி மூர்த்தி தொடர்ந்தான்.”அதற்கு நீ தயாரென்றால்…….இந்த ஊரைவிட்டு…… இந்த பதவியை விட்டு…… வன்னியிலை இருக்கிற என்ரை சொந்தக்காறருடன் போயிருந்து கமஞ் செய்யலாம்…….. வன்னிமண் ஒண்டுதான் எங்களை வாழ வைக்கத் தக்கது. புவனம்…… இதுக்கு நீ தயாரா?”
“மூர்த்தி…”விழிகளில் ஆவல் புரள ஓர் புத்துணர்வுடன் புவனந்தான் அழைத்தாள்.
“அப்பிடியெண்டால் நாளை வெள்ளிக்கிழமையே நான் உன்னை ஏற்கத் தயார்.” நெஞ்சம் விம்ம மூர்த்தியின் பரந்த மார்பில் புவனம் சாய்ந்து கொள்கிறாள்.
‘டாண்! டாண்!!’ உதய
உதய காலப் பூசைக்காக அடிக்கப்படும் பிள்ளையார் கோவில் மணி ஓசை புத்தொலியாக அவள் காதுகளை வந்தடைகிறது.
படுக்கையை விட்டெழுந்தவள் புதுவாழ்வில் காலடி வைக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். ஆயத்தமாக வைத்திருந்த சூட்கேசை கையிலெடுத்துக் கொண்டவள் மீண்டும் ஓர் முறை மேசை மீது பெற்றோர்க்கென எழுதிவைத்த காகிதத்தை வாசித்துப் பார்த்தாள்.
‘……. இங்ஙனம்; என்றும் உங்கள் அன்பு மகள் புவனம்.’
குடும்ப சொந்த பந்தங்களின் கட்டுகளிலிருந்தும் விடுபட்டு, வீட்டு வாசலை விட்டு, தெருவில் காலடி எடுத்து வைக்கும் அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு சேவல் கூவுகிறது.
ஆலய வடக்கு வீதியில் உள்ள அந்த புன்னை மரத்தடியில் புன்சிரிப்புடன் காவல் நிற்கும் மூர்த்தியின் விம்பம் கலங்கிய கண்களினூடும், தெளிவாகவே புவனத்தின் விழிகளில் திரையிட்டது.
அந்த ஆலய மின்விளக்கின் ஒளி புத்தொளியாக எங்கும் பிரகாசிக்கின்றது.
– 09.03.1980, வீரகேசரி வாரவெளியீடு.
– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.