சிகிச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 4,582 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். கொடி மாதிரி உடல்வாகு, அதற்காகவே மலர்க்கொடி என்று பெயர் வைத்திருப்பார்கள் போல் இருக்கிறது.

ராஜம் அப்படித்தான் நினைத்தாள்.

மலர்க்கொடியை அவளுக்குப் பிடித்துவிட்டது. தாய்க்குப் பிடித்தால் சேகருக்கும் பிடித்த மாதிரி தான். மறுக்கமாட்டான். தாய் சொல்லைத் தட்டக் கூடிய பிள்ளை இல்லை.

இரண்டு மூன்று மாதமாகவே ராஜத்திற்கு இதே வேலை. மகனுக்குப் பெண் பார்க்கும் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறாள். டாக்டராகத் தொழில் புரியப் போகிற மகனுக்கு பொருத்தமான பெண்ணைத் தேடுகிறாள்.

பெண்ணைப் பார்க்க வரச் சொல்லி சிங்கப்பூரில் மட்டுமல்ல மலேசியாவிலும் பலர் அழைத்தார்கள். ராஜம் அவ்வப்போது போய் வந்தாள். சில நிபந்தனைகளில் ஒத்து வராததால் இது வரை ஏழெட்டு இடங்களை உதறித் தள்ளிவிட்டாள்.

இதில் எல்லாம் சேகர் தலையிடவில்லை அம்மாவின் விருப்பத்துக்கு விட்டு விட்டான்.

படிப்பு முடியும் வரை வேறு எதிலும் அவன் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. தலைக்குமேல் பொறுப்பு இருப்பதாக அவனுக்கு நினைப்பு.

சில ஆண்டுக்கு முன்பு அப்பா கண்ணை மூடிவிட்டார். அந்த நிகழ்ச்சி அவன் கண்ணை அகலத் திறந்து வைத்துவிட்டது.

வெகு சிரமப்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துக் கொடுத்தவர் அவர்தான். எவ்வளவோ சிரமங்களை அவர், தாங்கிக் கொண்டிருந்தார், மகனுக்காக.

“சேகர், எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் உனக்கு இருக்கக் கூடாது. நீ செழிப்பா இருக்கறதைப் பார்த்துட்டா எனது இலட்சியம் பூர்த்தி அடைஞ்சிட்டதா நினைப்பேன்… உன்னை டாக்டர் ஆக்கிப் பார்க்கணும்கிறது தான் என் குறிக்கோள்…!” என்பார்.

அப்பாவுக்குப் பிறகு ராஜம்தான் அவனுக்கு எல்லாம். அம்மா கிழித்த கோட்டை சேகர் தாண்டியது இல்லை. மலர்க்கொடியை மேலும் ஒரு முறை ஊடுருவிப் பார்த்தாள். நல்ல பெண். தனக்கு மருமகளாக இருக்கத் தகுந்தவள். இவளைப் பார்த்தால் சேகர் சந்தோஷப்படுவான்.

இந்த இடத்துக்கு வரச் சொன்னதே அவன் தானே! முகவரியைக் கொடுத்து பெண்ணைப் பார்த்துவிட்டு வரச் சொன்னான்.

ராஜத்துக்கு வியப்பாக இருந்தது.

“அம்மா… ஒருத்தருடைய நச்சரிப்பு தாங்க முடியவில்லை இந்த விலாசத்திலே உள்ள பெண்ணைப் பார்த்துட்டு வரச் சொல்லி அம்மாவை அனுப்பு அப்படீன்னு அரிச்சுக்கிட்டிருக்கார். விருப்பம் இருந்தால் பாத்துட்டு வாங்கம்மா!” என்றான்.

“நீயும் வாயேன். உனக்கும் அந்தப் பெண் பிடிக்கணும், இல்லையா?”

“நீங்கள் பாத்துட்டு வந்தால் போதும்…. நான் கல்யாணத்துக்கு அவசரப்பட்டுக்கிட்டா இருக்கேன்?” என்று பேச்சை முடித்துக் கொண்டு விட்டான், பிள்ளை.

அந்த அங்மோகியோ முகவரியில் தான் மலர்க் கொடியை இப்பொழுது ராஜம் பார்த்துக் கொண்டிருக் கிறாள். இவளும் சேகரும் இனிமையான ஜோடியாக இருப்பார்கள். என்று நினைத்துக் ஜோடிப் பொருத்தம் சரி, மற்ற பேரங்கள் ஒத்து வரவேண்டுமே!

மலர்க்கொடியை உள்ளே அனுப்பிவிட்டு வீட்டுப் பெரியவர்களுடன்பேச ஆரம்பித்தாள், ராஜம்.

அவர்கள் பெரிய வசதியுள்ளவர்களாய்த் தெரியவில்லை. அதனால் என்ன? இருப்பு பெண்ணுக்கு ஏராளமாக நகை வைத்து வசதியுள்ளவர்களாய் இருப்பார்கள். தாராளமாகத் செய்ய வேண்டியதைச் செய்வார்கள்.

ராஜம்மனக்கணக்குப் போட்டாள்.

பிறகு அந்தக் கணக்கை ஒரு வாத்தியாரம்மாவைப் போல எடுத்துச் சொன்னாள்.

பெண் வீட்டுக்காரர்கள் அதிகமாகப் பேசவில்லை. அது சம்மதத்தின் அடையாளமாகத் தோன்றியது,

“டாக்டர் மாப்பிளைக்கு என்ன செய்யணுமோ, அதைச் சொல்லி விட்டேன். சீக்கிரமா முடிவைச் சொல்லி அனுப்புங்கள். வசதிப்படலேன்னு தெரிஞ்சா நான், வேற இடம் பார்க்கத் தோதுப்படும் இல்லியா?”

சுருக்கமாகப் பேசிவிட்டு ராஜம் திரும்பிவிட்டாள்…

சேகர் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தான்.

“மலர்க்கொடியைப் பாத்துட்டு வந்தேன், சேகர்!”

“அதுக்குள்ளே போய் விட்டு வந்துட்டீங்களா, அம்மா?”

“எத்தனையோ,இடத்தைப் பார்த்தேன். ஆனால், இந்த மலர்க்கொடியைப் பாத்ததும் ரொம்ப அசந்து போயிட்டேன்…”

“ஏன், ரொம்ப அழகோ?”

“அழகு மட்டுமில்லே… அடக்கம். இது கடவுள்போட்ட முடிச்சு. அப்படீன்னு நினைச்சுக்கிட்டேன். மலர்க்கொடிதான் எனக்கு மருமகளா வரணும்னு ஆசை ஆனால்..”

“என்னம்மா சொல்றீங்க?” என்று சற்றே ஆவலோடு கேட்டான், சேகர்.

“ஜோடிப் பொருத்தம் சரிதான். ஆனால், மத்த விஷயங்கள்…!”

“எதைச் சொல்றீங்க?”

“நான் போட்ட நிபந்தனைகளுக்கு ஒத்து வரணுமே!”

அவன் நிபந்தனைகளைக் கேட்டான்.

“ரொக்கமா தரவேண்டிய வெள்ளி!”

“அப்பறம்?”

“நூறு சவரனுக்குக் குறையாமல் பெண்ணுக்கு நகை போடணும்!”

“பிறகு?”

“சீர்வரிசை, பண்டம், பாத்திரம், அப்பறம் உனக்கு கிளினிக் வைத்துத் தரணும்னு சொல்லியிருக்கேன்…!” “சம்மதிச்சிட்டாங்களா? என்று சேகர், கேட்டான். “சம்மதிக்கலேன்னா, எப்படிச் சம்பந்தம் பண்ணிக்க முடியும்?”

“அதுக்கெல்லாம் அவங்க கிட்டே வசதி இருக்காம்மா?”

“இல்லேன்னாலும் கடனோ உடனோ வாங்கிக் காரியத்தை முடிச்சிட மாட்டாங்களா? காலம் இப்ப எவ்வளவோமாறிட்டது இல்லையா? அதுக்குத்தகுந்த மாதிரி நாமும்:”

“ஆமாம்மா… காலம் ரொம்பத்தான் மாறியிருக்கு… இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி இல்லே…”

“அது என்னப்பா இருபத்தஞ்சு வருஷம் புதுக் கணக்கு மாதிரி சொல்றியே?”

“ஆமாம்மா… அப்பா உங்களை அப்பத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு சொல்லியிருக்கிறீங்க…”

“இப்ப எதுக்கு அந்த நினைப்பு உனக்கு?”

“மனதிலே அப்படியே பதிஞ்சு போயிருக்கும்மா நீங்கள் சொன்னது எல்லாம்…!”

ராஜம் எவ்வளவோ சொல்லியிருக்கிறாள்.

இவன் அப்பா ஒரு டாக்டரிடம் குறைந்த சம்பளத்தில் கம்பவுண்டராக இருந்தார். கண்ணியமான இளைஞன் என்று பெயர் எடுத்திருந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில்மாதப்பணம் கொடுத்து ஒரு விதவைத் தாயிடம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். இன்னும் சில பேரும் அதே வீட்டில் சாப்பிட்டார்கள். அந்தத்தாய்க்கு திருமண வயதில் ஒரு மகள் சோற்றுக் கவளத்தை விழுங்கியபடி அந்த வயதுப்பெண்ணை யும் பார்வையால்விழுங்கிக் கொண்டு இருந்தார்கள்பல பேர். கம்பவுண்டருக்கு இது சங்கடமாக இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகவே சிராங்கூன் ரோடு வட்டாரத்திலுள்ள சிலர் சாப்பிட வருகிறார்கள் என்று நினைத்தார். ஒரு வசதியும் இல்லாத அந்தப் பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்தார் இதைக் கேட்ட போது, தாயும் மகளும் கண்ணீர் விட்டார்கள், மகிழ்ச்சிப் பெருக்கில். “என்னம்மா யோசிக்கிறீங்க?” என்றான், சேகர்.

ராஜம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

“காலம் மாறியிருக்குன்னு சொன்னீங்களே… உண்மைதான் ஒரு காசு வரதட்சணை, சீர்வரிசை அது இதுன்னு கேட்காமல் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி அப்பா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இப்ப எனக்கு இலட்சம் இலட்சமா விலை கேட்கறீங்க? பாவம், ‘மலர்க்கொடி’ அவளுக்கு இவ்வளவு பெரிய அபராதத் தொகையா விதிக்கிறீங்க?”

ராஜம், தலைகுனிந்து விட்டாள்.

“அம்மா… நான் அப்பா பிள்ளை அவரைப் போல மனிதாபிமானம் உள்ளவன். இரக்கம் உள்ளவன். மலர்க் கொடியை ஒரு காசு வாங்காமல் கல்யாணம் பண்ணிக்கிறதா நான் எப்பவோ முடிவு பண்ணிவிட்டேன் எனக்குப் பிடிச்ச பெண்ணை நீங்களும் ஒரு தரம் பாத்துட்டு வரணும் என்கிறதுக்காகத்தான் உங்களை அனுப்பி வச்சேன்”

“சேகர்…. மலர்க்கொடிதான் என் மருமகள் நிபந்தனை விதிக்கிற அருகதை எனக்கு இல்லேப்பா நான் உன்னோட அம்மா மட்டுமில்லே ஒரு சமையல்காரப் பெண்ணின் மகள். தாய்க்கே அதிர்ச்சி வைத்தியம் பண்ணி தெளிய வச்சிட்டேப்பா.. எனக்குப் பெருமையா இருக்கு!” என்றாள், ராஜம்.

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *