சார், நிச்சயமா நாளைக்கு!




(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள்
திருவிசாரம் பிள்ளை – சென்னையில் காலம் தள்ளும் ஒரு ஐந்து.
வள்ளியம்மை -வியாதியாகப் படுத்திருக்கும் மனைவி. கமலாம்பாள் – கஷ்டத்தைப் பார்க்காமல் பிறந்த குழந்தை.
கடன்காரர்கள்
(சென்னையில் முப்பது ரூபாயில் குடித்தனம் நடத்துவது ஒரு செப்பிடு வித்தை. இது யதார்த்தவாத உலகம் என்றாலும் பட்டணத்தில் இந்த மாதிரியான செப்பிடு வித்தைக்காரர்களே நிறைய இருக்கிறார்கள். திருவிசாரம் பிள்ளை அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்லவென்றா லும், அவர்களின் ஓர் அம்சம்.
மாரிசெட்டித் தெரு. 71-ஆம் நெம்பர் வீட்டில் அவர் ஒட்டுக் குடித்தனம் செய்கிறார். பகல் முழுவதும் சேட் கடையில் வேலை. முப்பது ரூபாய் சம்பளம். அவர் குடியிருக்கும் பகுதியில், தெருவுக்கு அடுத்தாற்போல் இருக்கும் ஓர் அறையும் அதற்கு எதிரில் இருக்கும்-சிறு கூடமும் காற்றுப் போகாத சின்ன அடுப்பங்கரையும் இருக்கின்றன. காலையில் மனைவிக்கும் குழந்தைக்கும் சிச்ருஷை செய்து விட்டுப் புறப்பட்டால் மாலை 7மணிக்குத்தான் திரும்பு வார். அவர் வந்த பின்பே வீட்டுக் காரியங்கள் கவனிக்கப் படும்.
மாலை ஏழுமணி. தெருவில் உள்ள மின்சாரக் கம்பத்தின் வெளிச்சந்தான் அறையில். வள்ளியம்மை பாயில் படுத்திருக்கிறாள். குழந்தை ஜன்னலருகில் வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு ஒரு வெண்கலத் தம்ளரில் கரண்டியைப் போட்டு ஆட்டிச் சப்தத்தை ரசித்துக்கொண்டிருக்கிறது. வெளியில் போவோர் வரு வோர் பேச்சுக் குரல்; மோட்டார் சப்தம்; ‘இரும் படுப்பு’ என்று சுமை வியாபாரியின் அலறல்; கதம்பம் விற்கும் பெண் குரல்.
(வள்ளியம்மை பலமாக இருமிக்கொண்டிருக்கிறாள். இருமல் இரண்டொரு வினாடி நீடிக்கிறது. பிறகு கபத்தைப் ‘பேசினி’ல் துப்பும் சப்தம்.)
வள்ளி : அம்மாடி! அப்பா! ஏட்டி! அதெ அடக்கி சும்மாத் தான் இரியேன்!
கமலா: சும்மாத்தானேம்மா இருக்கேன்.
வள்ளி : அந்தத்தம்ளரிலே தண்ணி கொஞ்சம் எடு. அப்பா இன்னும் வரலே?
(கதம்பம் விற்கும் பெண்குரல் ஜன்னல் ஓரமாகக் கேட்கிறது.)
கமலா: அம்மா, பூ!
வள்ளி : தண்ணியெக் குடிச்சிட்டு அவளெக் கூப்பிடு. (குழந்தை கதவைத் திறந்து அடைத்துக்கொண்டு படபடவென்று ஓடுகிறது. தூரத்தில், கதம்பம்!” என்ற குழந்தையின் கீச்சுக் குரல். சில வினாடிகள் கழித்து)
கமலா: மோந்து பாரம்மா,பூ,நல்ல வாசனையா இருக்கு. துட்டுக் கேக்கா.
வள்ளி: அந்தச் சோப் பொட்டீலே காலணா இருக்கும் எடுத்துக் குடு.
(குழந்தை பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு, “இல்லியே” என்கிறது.)
வள்ளி: ஆமாம்! தீப்பெட்டி வாங்கினமே. நீ போய்க் கோமதியத்தெகிட்டே காலணா வாங்கிக் கொண்டாந்து குடு.
(வெளியிலிருந்து பூக்காரியின் ‘அம்மா!’ என்ற குரல்.)
வள்ளி: உம்! சீக்கிரம்.
(சில வினாடிகள் கழித்து)
குழ: அவ கிட்டே துட்டில்லியாம்!
வள்ளி: ஏ கதம்பம், இப்படி உள்ளே வந்துட்டுப் போ. ஒங்கிட்டே ரூபாய்க்குச் சில்லறை இருக்கா?
பூ: எங்கிட்டே ஏதம்மா? இதுக்கா இத்தினி நேரம் காக்க வச்சீங்க?
வள்ளி: நாளைக்குத்தான் வாங்கிக்கியேன்.
பூ: என்னம்மா நல்ல வேலையா இருக்கே! போணி பண்ணலே; பூ வாங்கறவளெப்பாரு, பூ வாங்கற வளே! அத்தெ இப்படிப் போடு.
குழ: அம்மா, எனக்குப் பூவூ.
வள்ளி: ஏட்டி, பேசாமே இருக்கலியா; அப்பா வரட்டும்.
(இருமுகிறாள்).
(வெளியில் கதம்பக்காரியின் குரல், தூரத்தில் மங்குகிறது.)
(சில வினாடிகள் கழித்துச் செருப்புச் சப்தம். கதவுதிறக்கிறது. திருவிசாரம் பிள்ளை உள்ளே வந்து, சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டுகிறார். கையிலிருந்த ரூபாயும் சில்லரையும் கீழே விழுந்து சிதறுகின்றன.)
குழ: அப்பா எனக்குத் துட்டு.
வள்ளி: ஏன் எவ்வளவு நேரம்? சம்பளம் போட்டாச்சா?
பிள்ளை: நாளைக்குத்தான் போடுவார்களாம். நம்ம கோவிந்தன் கிட்டே கைமாத்தாப் பத்துரூபா வாங்கிட்டு வந்தேன். மருந்துக்குப் பணம் வாண்டாமா? நீ மத்தியானம் அந்த மருந்தெச் சாப்பிட்டியா? எப்பிடி இருக்கு?
வள்ளி: எப்படியிருக்கும்? வீட்டுக்காரன் வாடகைக்கு வந்துட்டுப் போனான். கடைக்காரப் பிள்ளை பாக்கி கேட்டு ஆள் அனுப்பிவிட்டார். ரெண்டு பேரும் ஒம்பது மணிக்கு வருவார்களாம்.
பிள்ளை: வந்தா வெறுங்கையாகத் திரும்ப வேண்டியது தான். இத்தினி நாள் பொறுத்தவனுக்கு ஒரு நாளைக் குள்ளே என்ன அவசரம்? இந்தா, பால்ப் பொடி காச்சித்தரேன்; சாப்புடு.
(ஸ்டோவ் பற்றவைக்கும் சப்தம்.)
குழ: அப்பா, எனக்குக் காப்பி.
பிள்ளை: இப்போ என்ன காப்பி? பால் சாப்பிட்டுத் துச்சணம் பண்ணாமேப் படுத்துக் கிடக்கணும் தெரியுமா?
(ஸ்டோவ் பம்ப் செய்யும் சப்தம்)
வள்ளி: என்ன பத்து ரூபாயா வாங்கிக்கிட்டு வந்திய?
பிள்ளை: வர்ர வழியிலே காப்பி சாப்பிட்டேன். அப்புறம் நம்ம ராமசாமியெ வழிலே கண்டேன்; அவனுக்குத் தான் நாம் போனமாசமே ஒரு ரூபா குடுக்கணுமே ; அதெக் குடுத்துட்டேன். பொட்டியிலே ரெண்டு ரூபா கெடந்துதே, அதெயும் சேத்தாப் பத்து. நாளைக்கு மருந்து வாங்க, டாக்டருக்குக் குடுக்கச் சரியா இருக்கும்.
வள்ளி: அதுவும் நல்ல கூத்துத்தான்! மத்தியானமே வண்ணாத்தி வந்தாள்; பால்காரி வந்தாள். நாக்கிலே நரம்பில்லாமேப் பேசினாளுக. கெடக்குற கெடை யிலே அது வேறயா கேக்கணும்! ஆளுக்கு ஒரு ரூபாயெக் குடுத்தேன்.
பிள்ளை: அதுவுஞ் சரிதான். எம் பெட்டியை ஏன் தொட்டே? நான் இல்லெண்ணு சொல்லப்படாதா? ஏட்டி கமலம், அந்தப் பாத்திரத்தெக் கழுவிக் கொண்டு வா சீக்கிரம்.
குழ: ஆவட்டும் அப்பா.
(வெளியிலிருந்து “திருவிசாரம்! திருவிசாரம்!’ என்ற ஆண் குரல்.)
வள்ளி: என்ன, ராமுவா? ஒரு நிமிஷம், உள்ளே வாயேன்.
(உள்ளே வரும் செருப்புச் சப்தம்; கதவு திறக்கும் சப்தம்.)
ராமு: ஒரு நிமிஷம்! அந்த மருந்து பேர் சொல்லுகிறேன் னியே; கேட்டுண்டு போகலாம் என்று வந்தேன். இங்கே வா! இன்னும் ஒரு ரூபா இருக்குமா? நாளைக்கு அவசியம் தாரேன் ரொம்ப அவசரம்.
பிள்ளை: உனக்குத்தான் தெரியுமே. நாளைக்குக் காலம் பர ஏழு மணிக்குள்ளே டாக்டரெப் பார்க்கணும். வேறே எங்கிட்டே சில்லரை இல்லையே! அந்த மருந்து பேரு அன்டன். இப்பொ கெடைக்காது. நானும் கடைலெ இண்ணைக்குத்தான் விசாரிச்சேன். ராமு: ரொம்ப அவசரண்டா. மானம்போயிடும். கடெசியிலே நீதான் கெதியின்னு வந்திருக்கேன்.
குழ: அப்பா இந்தாப்பா, பால் சட்டி.
பிள்ளை: உள்ளே கொண்டுவை… இதோ வர்ரேன்.
(சில்லரை குலுங்கும் சப்தம்.)
ராமு: ரொம்ப தாங்க்ஸ்! நாளைக்கு எப்போப் பாக்கலாம்?
பிள்ளை: அதுக்கென்ன பரவாயில்லை; நான் எப்படியும் சமாளித்துக் கொள்ளுகிறேன்.
(உள்ளிருந்து, “அப்பா! அப்பா!’ என்ற குழந்தையின் குரல்.)
வள்ளி: உங்களெத்தானே! கொஞ்சம் இப்படி வந்துட்டுப் போங்க.
பிள்ளை: ராமு போயிட்டானே! நாந்தான் இதோ இருக்கேனே.என்ன வேணும்! இரு. பாலெ அடுப்பிலே வச்சுப்பிட்டு வாரேன்.
வள்ளி: துட்டுக்குடுத்து வாங்கின மண்எண்ணெ இப்பிடியா வீணா எரிஞ்சுபோகணும்! என்ன, அவுகளுக்கு எவ்வளவு குடுத்திய?
(பாலைப் பாத்திரத்தில் ஊற்றும் சப்தம்)
பிள்ளை: ராமுவுக்கா? ஒரு ரூபா குடுத்தேன், அதுக் கென்ன? நாளைக்கு டாக்டரெப் பாக்க முடியுமாண்ணு தானே கவலெப்படறே? அதுக்கு ஒண்ணும் பயப்பட வேண்டாம். இருக்கறதெ வச்சு நான் இல்லா கூட்டிக் கிட்டுப் போறேன்?
(வெளியிலிருந்து ”ஐயா, சார், சார் ஐயா!” என்ற குரல்.)
பிள்ளை : யாரது?
(ஸ்டோவுக்குப் பம்ப் செய்கிறார்).
குரல்: லக்ஷ்மி ஸ்டோர் சார்,
பிள்ளை: சுந்தரமா1 இந்தா. இந்த நடைகிட்ட இப்படி வா. நாளைக்குச் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தா, பாக்கி யில்லாமெக் கணக்கெ முடிச்சுடறேன். ஐயரு கிட்டே, இன்னும் சம்பளம் போடலியாம். அதனால் தான் தாமசமாம், நாளைக்கு நிச்சியமாக் கொடுக்கிறேன்னு சொல்லு.
சுந்த: அதென்னமோ சார். ஐயரு வந்திருக்காரு. நீங்களே சொல்லிடுங்க.
பிள்ளை: எங்கே? உள்ளே வரச்சொல்லு. ஏன் அப்பவே சொல்லலே.
குரல்: (வெளியிலிருந்து) நான் இங்கேயே இருக்கேன்; கொஞ்சம் வந்துட்டுப் போயிடுங்க.
(பிள்ளையும் வெளியில் சென்று பேசுகிறார். தூரத்திலிருந்து சப்தம் கேட்கிறது.)
பிள்ளை : நாளைவரைக்கும் பொறுத்துக்குங்க, சார் நாளைக்கு நிச்சயம் சம்பளம் போட்டுடுவா. சாயங்காலம் ஆபீஸிலிருந்து வரும்பொழுது அப்படியே வந்து குடுத்துட்டு வர்ரேன்.
கடைக்: என்ன சார், போங்க; மூணு மாசமா இப்படித் தான் சொல்றேள். எங்களுக்கும் வந்தாத்தானே போட்டுப் பெரட்ட முடியும்?
பிள்ளை : அது எனக்குத் தெரியாதா?
கடைக்: தெரிஞ்சு என்ன பண்ண?
பிள்ளை : உங்களுக்குத் தெரியாதா வீட்டு நிலைமை? கொஞ்சம் சிரமம்.
கடைக்: வீட்டுக்கு வீடு வாசப்படிதான்; அவாளவாளுக் குத் தெரியும் அவாளவாள் கஷ்டம். மூணுமாசமாயும் மூ ணேவீசம் பாக்கி..கணக்கெ ஏத்திண்டேபோனா யாருக்கு லாபம்?
பிள்ளை : நாளைக்கு ஓர் அஞ்சுரூபா தர்ரேன்; வரவு வச்சுக்கிங்க. மீதியை மூணுநாளைக்குள்ளேயே பைசல் பண்ணிடறேன்.
கடைக் : இன்னிக்கி ஏதாவது சில்லரையா ரெண்டு ஒண்ணு இருந்தாக் குடுங்களேன்.
பிள்ளை : கையிலே தம்பிடி இல்லே, வச்சுக்கிட்டு ஒங்ககிட்டெ இல்லேம்பேனா?
கடைக்: சரி. நாளைக்காவது அஞ்சு ரூபா வரட்டும். இல்லாட்டி அப்பறம் கணக்கே முடிச்சிக்க வேண்டியிருக்கும்.
பிள்ளை : என்ன சார்! நீங்கள்ளாம் அப்படிச் சொல்லலாமா? நாளைக்கு வீட்டுக்குச் சாமான் வாங்க வேண்டியிருக்கும். அதையும் கொஞ்சம் ஏறக்கொறையப் பாத் துக்கணும். இன்னும் ஒரு மாசம் கொஞ்சம் முடை.
(உள்ளிருந்து, “அப்பா! அப்பா பால் பொங்குது! ஐயோ, இங்கே வாயேன்” என்ற குழந்தையின் குரல்.)
பிள்ளை : (வெளியிலிருந்தே) இதோ வந்துட்டேண்டா …நாளைக்குக் கட்டாயமா வர்றேன். (உள்ளே வந்த பின்) அந்த ஓவல்டின் டின்னை எடு. இந்தா. பாரு; தூங்கிட்டே? ஓவல்டின் போட்டுத் தாரேன்; சாப்பிடு. மெதுவா எழுந்திருச்சு கொஞ்சம் சாஞ்சுக்கோ. பாப்பா, அந்தச் சக்கரை டின்னை எடம்மா.
(வள்ளியம்மை இருமிக்கொண்டே எழுந்திருக் கிறாள். இருமல் பலமாகி வாந்திக்கு முன்னெச் சரிக்கையான ஓங்காரமாகிறது.)
ஒன்னைத் தானே! அதக்குள்ளயா. இந்தா. பாரு;
பிள்ளை : என்ன, வாந்தி வருதா? பேசினை எடுத்து வைக்கிறேன்.
(வள்ளியம்மை இருமிக் கபத்தைப் பேசின் ஜலத்தில் துப்பும் சத்தம்)
வள்ளி : (இளைப்புடன்) அவருக்கு என்ன சொன்னிய?
பிள்ளை: அதெப்பத்தி இப்ப என்னத்துக்குக் கவலை? இந்தா, இதெ ஆத்தித் தாரேன்; கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு.
(தம்ளரில் ஒவல்டினை ஆற்றும் சப்தம்; வெளியி லிருந்து “சார், பிள்ளே,…அம்மா! அவரு வந்துட்டாரா?” என்னும் குரல்.)
வள்ளி : வீட்டுக்காரச் செட்டியாரு வந்திருக்காரு போங்க.
பிள்ளை : செட்டியாரா? வாருங்க உள்ளே. எங்க வீட்டுக்குள்ளே வரதுன்னா என்ன கூச்சம்? வாருங்க.
(வெளியில் நின்று கொண்டே, “வூடுமாச்சு, வாசலுமாச்சு! நீங்க என்ன ஒவ்வொரு மாசமும் இப்படிப் பண்ணா, இது நண்ணா இல்லே; நமக்கு இந்தச் சள்ளே ஆவாது. இந்த மாசமே வீட்டெக் காலி பண்ணிடுங்க” என்று செட்டியார் இரைகிறார். பிள்ளையவர்கள் ஓவல்டின் ஆற்றும் சப்தம் அவர் காதில் படுகிறது,)
பிள்ளை : என்ன செட்டியார்? என்னெ மின்னெப் பின்னெத் தெரியாதது மாதிரி பேசுறீர்! என் கஷ்டம் உங்களுக்குத் தெரியாதா?
செட்டி : எங் கஷ்டத்தையும் மறந்து பூட்டாயே; நாளைக்கு வீட்டு வரிக்கு ஜெண்டா கட்டிப்பிடுவான் – என்ன இப்பத்தான் காப்பி ஆவுதா?
பிள்ளை : இல்லெ. வீட்டிலே கொஞ்சம் ஓவல்டின் போட்டுக் குடுக்கறேன். இப்பத்தான் ஆபீஸிலே இருந்து வந்தேன். கொஞ்சம் ஓவல்டின் சாப்பிடுவீரா.
செட்டி: எங்கே, கொஞ்சம் குடுங்கோ, தாகமாத்தான் இருக்கு. எங்க கடலே இருக்கறப்ப, வரிக்காரன் வந்து மெரட்டிப்புட்டுப் போயிட்டான். நாளைக்குக் காலம்பர வருவானாம். என்ன பண்ணுறதுண்ணு தெரியலே. அம்மாவுக்கு எப்படி இருக்குது?
பிள்ளை : என்ன? கொஞ்சம் குணம்னுதான் சொல்ல ணும். இந்தாருங்க; உக்காந்து வெத்திலெ போடுங்க. அதுக்கென்ன பரவாயில்லே-அவ அங்கேதானே படுத்திருக்கா?
குழ : அப்பா, எனக்கு…
பிள்ளை: அம்மாளுக்குக் குடுத்துட்டு ஒனக்குத் தாரேன். ஒன் கெண்டியை எடுத்துக்கிட்டு வா…இந்தா நீ இதெச் சாப்பிடு; நல்லா ஆறிப் போச்சு.
செட்டி: இலும்பலுங்களா? ரொம்ப நாளா இருக்குதே; மார்லே ரொம்ப நோவுதுங்களா, அம்மா – ஊரெவுட்டு ஊருவந்தா தண்ணி புடிக்காது, சீமெ டாக்டருங்களே நம்பாதே; தண்ணியெத் தண்ணிய ஊத்திக் குடுப்பான்.
பிள்ளை : இல்லெ. இவரு பெரிய டாக்டரு. நாளைக்கு ஊசி குத்தப் போராரு. இதுவரை பத்து ஊசி போட்டாச்சு.
செட்டி: அதுக்குப் பணம்?
பிள்ளை : நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் கிட்டே கடன் வாங்கிகிட்டு வந்தேன். நாளைக்குச் சம்பளம் போட் டுடுவாங்க; குடுத்துப்புடனும்.
செட்டி : எவ்வளவு?
பிள்ளை : பத்து ரூபா.
செட்டி : அப்போ, ஒரு அஞ்சுரூபா குடேன்.
பிள்ளை : டாக்டருக்கு வேணும், மருந்துக்கு வேணும்.
செட்டி: இதுவரைக்கும் அவன் கிட்டயேதானே ஊசி குத்திக்கிட்டே, சாயங்காலம் குடுத்தாப் போவுது.
பிள்ளை : இல்லெ, செட்டியார். எனக்கு அவரு அவ்வளவு பழக்கமில்லை.
செட்டி: பின்னே ஒரு மூணு ரூபாயாவது குடு.
பிள்ளை : என்ன செட்டியார், தெரிஞ்சுகிட்டு இப்படிக் கேட்கிறீரே. முடிஞ்சாத் தரமாட்டேன்?
செட்டி: என்னா, எங்கிட்டியே வேலெ உட்றியே! மூணு மாசமா நடையா நடந்துகிட்டு இருக்கேன்; இப்போ அப்போண்ணு தகல்பா ஜித்தனம் பண்றே – எங்கஸ்டம் ஒனக்குத் தெரியுதில்லே.
குழ: எனக்குக் காப்பீ…
பிள்ளை: இரு.
செட்டி: காசெ வக்காதெ போனா சாமானெத் தூக்கி வெளியே எறிவேன்-ஹும்! எங்கிட்டியே வேலெ உட்றியே!
வள்ளி: மூணுரூபாய் எடுத்துக்குங்க; செட்டியாரே, இந்த மாசமே நாங்க பணத்தெக் குடுத்துப்புட்டுக் காலி பண்ணிப் புடுறோம். ராத்திரிலே வந்து மானெத்தெ வாங்காதியும்.
(தட்டி எண்ணுவதால் ரூபாய் குலுங்கும் சப்தம்; பிறகு சில வினாடிகள் மௌனம். வெளியில் தூரத்தில் செட்டியின் குரல் “என்ன பயமுறுத்திரியெ, காலி பண்ணானா ஆளு வராதோ?”)
பிள்ளை: இந்தா, காப்பி காப்பின்னு கத்தினியெ; பாலெக் குடிச்சுப்புட்டுப் போய்ப்படு.
வள்ளி: நம்ம கஷ்டத்துக்கு அவமேலே ஏன் விளுகிறக? பசலைக்கு என்ன தெரியப்போவுது! இங்க வாடி கண்ணூ- படைக்கப்பவே அதுந்தலேலே அப்படி எழுதிப்புட்டான்,
(மௌனம்; வெளியில் “கட்டு வெத்லெ பைசா! கட்டு வெத்லே பைசா!” என்ற குரல் கேட்டு மங்குகிறது.)
சில வினாடிகள் கழித்து வெளியில் பிச்சைக்காரன் குரல்:
“அம்மா தாயே! சந்திப்பிச்சை! ரெண்டுநாள் பட்டினி அம்மா.”
கர்ணகடூரமான குரலில் பிச்சைக்காரன் பாடுகிறான்:
“பொய்திகழும் உலகநடை
என்சொல்கேன் என் சொல்கேன்
பொழுது போக்கே தென்னிலோ
பொய்யுடல் நிமித்தப் புசிப்புக் கலைந்திடல்
புசித்தபின் கண்ணுறங்கல்”.
(மறுபடியும் அதே அடிகளைப் பிச்சைக்காரன் பாடுகிறான்.)
பிள்ளை : யாரது? வேலையில்லே; போடா, தடிச்சோம்பேறி!
பிச்சைக்காரன்: (வெளியிலிருந்து) இல்லெண்ணாப் போரேன்! என்னமோ ரொம்ப எரிஞ்சு விளுறியே!
(அதே சமயத்தில் வெளியிலிருந்து பதற்றத் துடன் “திருவிசாரம்! திருவிசாரம்!’ என்ற குரல்.)
பிள்ளை: (உள்ளிருந்தபடியே) யாரது? கோவிந்தனா? என்ன இந்த ராத்திரியிலே.
கோவிந்தன்: (உள்ளே வந்து) வீட்டிலே அபார்ஷன் ஆரம்பிச்சுட்டது. டாக்டரெப் பார்க்கணும். பத்து ரூபா குடுத்தேனே; அதெக் கொஞ்சம் தந்தாத் தேவலை. நெலமெ அப்படியாயிப் போச்சு.
பிள்ளை: அஞ்சு ரூபாதான் இருக்கு. மீதிக்கு மருந்து வாங்கினேன்…அதெ வேணும்னா-
வள்ளி: வேணாம்னாவா? மொதல்லே எடுத்துக் குடுங்க.
பிள்ளை : டாக்டரெப் பாத்தியா?
கோவி: போற வழி?
பிள்ளை: எப்படி இருக்குது? நாளைக்கு வந்து பாக்கறேன்
(சில வினாடிகள் நிசப்தம்.)
பிள்ளை: விதி விளையாடுது!
வள்ளி: அண்ணெக்கி எழுதினவன் அழிச்சி எழுதப் போகிறானா?
(இதே சமயத்தில் வெளியில் “ரோஜாப்பூ ஆரம் அரையணா” என்ற குரல்)
குழ: அப்பா; பூவூ!
வள்ளி: ஏட்டி நீ இன்னந் தூங்கலே?
பிள்ளை : கண்ணே, அது பொணத்துலே போட்ட பூவா இருக்குண்டா-ஒனக்கு நான் நாளைக்கு நல்ல கதம்பம் வாங்கிட்டு வாரேன்.
வள்ளி: கதம்பந்தான் ஒண்ணு கொறே!
(இரும ஆரம்பிக்கிறாள். இருமல் பலமாகிக் கொண்டே வருகிறது. மூச்சுத் திணற ”அம்மாடி” என்று மறுபடியும் இருமல்.)
பிள்ளை: ஏ வள்ளீ! வள்ளி! என்னமாடா வருது? முதுகெத் தடவட்டா? கொஞ்சம் தலகாணிலே சாஞ்சு உக்காந்துக்கோ-டாக்டரை ஓடிக் கூட்டியாரேன்,
பாப்பா! அம்மா பக்கத்துலே உக்காந்துக்கம்மா; இதோ வாரேன்.
(விரைவாக நடக்கும் செருப்புச் சப்தம் தூரத் தில் மறைகிறது.)
– ஏப்ரல் 1953, அவளும் அவனும்.
– புதுமைப்பித்தன் படைப்புகள் (2ஆம் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை.
![]() |
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க... |