சரண்





அவன் யார்?
“”என்ன பேரோ தெரியலீங்க. சுருக்கமா அறம்னு எல்லாரும் சொல்றாங்க. வேலை, மேல்படிப்பு, ஆராய்ச்சின்னு வெளிநாட்ல தங்கிட்டு இப்ப திரும்பியிருக்கிறாராம். வயசு நாப்பத்தஞ்சு இருக்கலாம்…” பெரியநாயகிக்கு விவரம் தரத் தொடங்கினார் உத்ரா.
“”பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் கூடுது. எல்லா விஷயமும் இவருக்குத் தண்ணிபட்ட பாடுன்னு பெருமையா பேசிக்கிறாங்க. தத்துவம், தன்னம்பிக்கை, சாஸ்திரம், விஞ்ஞானம் எதைப்பத்தியும் இவரைப்போல பேசமுடியாதுன்னு சொல்லிக்கிறாங்க”
“”கேட்டிருப்பீங்களே…”
அடிக்குரலுடன் பேசிய உதவியாளரைக் கவனித்தாள்.
“”ஆமாங்க. கூட்டத்தை வசப்படுத்திக் கட்டிப்போடற மாதிரி பேச்சில கவர்ச்சி. பல நாள் தொடர்ந்து பேச ஏற்பாடாம்”
பெரியநாயகிக்குப் பிடி கிடைத்துவிட்டது.
ஒலிபெருக்கிச் சத்தம் எட்டுகிற தூரத்தில் தான் அந்தக் கல்யாண மண்டபம். ஓய்ந்து கிடந்த இடத்தில் இப்பொழுது ஒலி-ஒளி பிரவாகம்.
“”புதுசா ஏதோ திருவிழா நடக்கிற மாதிரி ஒரே கலகலப்பா இருக்குங்க. நம்ம பேட்டையில இதுக்கு முன்னாடி இல்லாத வித்தியாசமான காட்சி…” இவளைத் தேடி வருபவர்களும் வியக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தான் முதல்முறையாக அந்தக் குரல் பெரியநாயகியின் செவியில் மோதியது. மூடிக்கிடந்த கல்யாண சத்திரத்துக்கு இப்படி ஒரு புது யோகமா?
காரை மெதுவாகச் செலுத்தச் சொன்னாள்.
காதில் மிகத் துல்லியமாக குரல் விழுந்தது.
“”சரணாகதி தத்துவம் ரொம்ப விசாலமானது. இப்ப அது புது தத்துவமா உருமாறிப் போயிருக்கு. மானுடம்னு நம்ம பெரியவங்கள் சொல்லியிருக்காங்க. பாடி வச்சிருக்காங்க. அது வேற ஒண்ணுமில்ல.மனிதத்தன்மை…மனிதாபிமானம்…மனிதரை மனிதரா மதிப்பது. சுயமதிப்பைப் புரிஞ்சிக்கிறது. சுருக்கமா சொல்றதுன்னா காசுக்காக, காரியத்துக்காக, சோத்துக்காக, சுகத்துக்காக மத்தவங்க கால்லே விழுந்து தன்மானம், மரியாதையை இழக்காமல் இருப்பது…இதை மாத்த முடியுமா? முடியாதா?”
ஒரு தீக்குண்டை வீசியதுபோல் இருந்தது.
“”நம்ம பெரியவங்க இதை ஊக்கப்படுத்தல. சரணாகதி தத்துவத்தைப் பத்தி நம்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கு. பரம்பொருளுக்கு நம்மை அர்ப்பணிக்கணும். அதுதான் சரணாகதி. அன்னவர்க்கே சரண் நாங்களேன்னு சொல்லலையா? ஆதாயத்துக்காக ஆசாமிகள் கால்லே விழுந்து புரளுங்கன்னு சொல்லப்படல. வெளிநாட்டு வாசத்தில் இதைப்பத்தி நிறையப் படிச்சேன், சிந்திச்சேன்…”
“”காஞ்சி பரமாச்சாரியாரை ஒரு சமயம் வாரியார் சாஷ்டாங்கமா விழுந்து வணங்க முயற்சி செய்தப்ப…பெரியவர் தடுத்து நிறுத்திட்டார். ஏன்? வணக்க வழிபாட்டில் பழுத்த ஒருத்தர் அப்படிச் செய்யக் கூடாதுன்னு அவர் சொன்னார். உதாரணத்துக்கு இதைச் சொல்றேன். ஆனா, இன்னிக்கு நடக்கிறது என்ன?”
அது, முதல் நாள் அனுபவம்.
சிந்தாமணிப்பேட்டையில் இப்படி ஒரு சந்தைக் கடையா? சகித்துக் கொள்ள முடியவில்லை. இவள் அறியாமல் இங்கு எதுவும் நடந்ததில்லை. மறுநாள் அதே சாலையில் வர நேர்ந்தபோது எடுப்பான அதே குரல்.
“”அக்கிரமமும் கேவலமும் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இதைப்பத்தி கடவுள் கவலைப்படறதா தெரியலயேன்னு பரமாச்சாரியார் கிட்ட வெள்ளைக்காரர் ஒருத்தர் கேட்டார்”
“”இல்லை. பொறுமை தேவை. அன்பு வேணும். எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஆத்ம சக்தி ஒளிஞ்சிட்டிருக்கு. அந்த சக்தி முடிவில எல்லாரையும் கடவுள்கிட்ட கொண்டு போகும். மனித சக்திக்கு மேல சக்தி ஒண்ணு இயங்கிறதை அவரவரும் ஒரு சந்தர்ப்பத்தில உணரத்தான் செய்வாங்க. உணர்ந்தாகணும். பெரியவர் இப்படிச் சொன்னார். என்ன அர்த்தம்? எவ்வளோ இருக்கு. உங்க சக்தியை நீங்க புரிஞ்சுக்கணும். உங்ககிட்ட புதையல் மறைஞ்சிருக்கிறப்ப இன்னொருத்தர் கிட்ட எதுக்கு கையேந்தணும்? கையேந்தினா என்ன, கால்ல விழுந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்…”
உபதேசமா, உபந்நியாசமா?
உறுத்தல், உபத்திரவம், அது ஓய்வதாக இல்லை.
அவன் முகத்தைப் பார்க்கவில்லை. குரலே போதும். நிச்சயம் கூட்டம் சேரும். இன்னும் எத்தனை நாள் இவன் பேசுவான்?
அடுத்த நாள் அந்தக் கல்யாண சத்திர சாலைச் சந்திப்பை பெரியநாயகி கடக்கவில்லை. வீட்டில் நடையாய் நடந்தாள். விடை தேடும் வேட்கை. வேட்டையாடும் வேகம்.
“”அம்மா…தண்டபாணி வந்தாச்சு, வாசல்ல நிக்கிறார்”
உத்ராபதி குரல் கொடுத்தார். உள்ளே அழைத்து வரச் சொன்னாள். அந்த ஒற்றை நாடி உடம்புக்காரர் அடக்கமாக கை கட்டாத குறையாக எதிரில் வந்து நின்றார்.
“”அந்தக் கல்யாணச் சத்திரம் உங்களோடது தானா?”
பெரியநாயகியின் முதல் கேள்வி வந்தவரை நிமிர்த்தியது.
“”ஆமாங்கம்மா…அது குடும்ப சொத்து…ஆனா இப்ப”
“”சிரம தசையில இருக்கறீங்க போல”
தண்டபாணி மெüனமாக தலையசைத்தார்.
“”அதனாலதான் போன வாரம் வரைக்கும் அதைப் பூட்டி வெச்சிருந்தீங்க போல…போகட்டும். அந்தக் கவலை இனிமே இருக்காது…”
“”கடவுள் புண்ணியத்துல இப்ப…”
“”இங்க வந்துட்டீங்க…சந்தோஷந்தானே?”
“”அம்மா எதுக்குக் கூப்பிட்டு அனுப்பினீங்கன்னு தெரியல…”
“”அப்பிராணியா இருப்பீங்க போல…அந்தக் கல்யாண சத்திரத்தைப் பத்தி பேசணும்தான். அங்க புதுசா ஒருத்தன் பேசிக்கிட்டிருக்கான் இல்லியா, அதுக்கு வாடகை வசூலிப்பீங்க தானே?”
“”இல்லை” என்றார் தண்டபாணி.
பெரியநாயகி இளப்பமாகச் சிரித்தாள்.
“”சிரமத்தில் இருக்கிறதா சொன்னீங்க. சில்லறை வசூலிக்கலேன்னா எப்படி? அதெல்லாம் இப்ப எதுக்கு? நேரா விஷயத்துக்கு வந்திடுவோம். அந்த கல்யாண சத்திரத்தை நான் எடுத்துக்கிறதா முடிவு செய்திட்டேன். அடுத்த வாரமே ரிஜிஸ்டர் பண்ணிடலாம்”
“”அம்மா, அது…இப்ப எனக்கு…”
“”அதுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கப் போறேன். கவலை வேண்டாம் தண்டபாணி”
அவர் தயங்கியபடியே நின்றார்.
“”என்ன யோசிக்கிறீங்க?”
“”இப்ப என்னால ஆகக்கூடியது எதுவும் இல்லீங்க அம்மா!”
போன மாதமே அந்தக் கல்யாண சத்திரத்தை விற்றுவிட்டதாக தண்டபாணி சொன்னபோது பெரியநாயகி பிரளய தேவதையாக மாறினாள்.
விவரம் கிடைக்க நேரம் பிடிக்கவில்லை.
“”அந்தப் பிள்ளையே அதை வாங்கிவிட்டது. தர்ம காரியங்களுக்கு உதவறதுக்கு அது தேவைன்னு சொன்னதும் நம்ம கஷ்டம் தீருதேங்கிற நிம்மதியில வித்துட்டேன்…”
விசாரணை முடிந்தது. வேறென்ன?
நல்ல விலை கொடுத்து அறம் அந்த இடத்தை வாங்கியிருக்கிறான். சக்தி இருக்கலாம். அவன் ஜாதகம் கொஞ்சம் தெரிந்ததுதானே! ஆனால் இது தோல்வி அல்லவா?
“”வில்லங்கம் ஏதும் இல்லாமல் போகாது” என்றார் உதவியாளர்.
பெரியநாயகி நிமிர்வதற்கு நேரம் பிடித்தது.
“”சத்திரத்தில் கூட்டம் குறைவதாக இல்லை” என்று உத்ரா சொன்னார்.
சரணாகதி தத்துவத்தைப் பற்றி இன்னமும் அவன் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
என்ன பெரிய தத்துவம்? இன்னொருத்தர் காலில் விழக்கூடாது. கை கட்டி நிற்கக் கூடாது என்பதைத் தவிர வேறென்ன பேசிவிடப் போகிறான்?
சும்மா வார்த்தை ஜாலம். வாய்ச்சொல் வீரம்.
உத்ராவின் வர்ணனை சித்திரம் வரைந்து காட்டியது.
பெரியநாயகியிடம் அசைவு தென்படவில்லை. அனுபூதி நிலையில் ஆழ்ந்த மாதிரி.
வெகுநேரத்துக்குப் பிறகு அவள் வாய் திறந்தாள்.
“”நானும் அதைத் தாம்மா நினைச்சேன்”
மறுபேச்சு இல்லை.
**************
வரவேற்பு சற்று பலமாகவே இருந்தது.
அறம் எதிர்பார்க்கவில்லை. பெரிய நாயகியின் அழைப்பு முதலில் வியப்பைத் தந்தது. தன்னை அழைக்கும் அளவுக்கு ஒரு பேட்டைச் சீமாட்டிக்கு என்ன வந்தது என்பதை பல பரிமாணங்களில் யோசித்தான்.
மழைத் தரையில் சிந்திய பெட்ரோல் துளியாக ஒரு வண்ணக் கலவை விசித்திரம் ஒரு சித்திரம் தெரிந்தது.
அப்புறம் தயக்கம் இல்லை. கலக்கம் இல்லை. ஒரு பெரிய மனுஷியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏன் இழக்க வேண்டும்?
பங்களா வாசலில் காத்திருந்த உத்ராவின் பற்கள் பளிச்சிட்டன.
“”வாங்க…வாங்க. நொடி பிசகாம சரியான நேரத்தில வந்திட்டீங்க. ரொம்ப சந்தோஷம்”
தாமதிக்காமல் எதையும் செய்வது தனக்குப் பழகிப்போன விஷயம் என்று உத்ராவிடம் இவன் சொன்னான்.
இருவரும் உள்ளே வந்தார்கள்.
“”அம்மா வருவாங்க…அதுவரைக்கும் நீங்க இப்புடி…”
இருக்கையைச் சுட்டிக் காட்டினார்.
அறம் விழி கொட்டாமல் இடத்தை அளந்தான். பெரியநாயகியின் செல்வாக்கை அளந்து காட்டும் சின்னங்கள். வண்ணச் சித்திரக் கோலங்கள்…எங்கெங்கு காணினும் சக்தியடா! எந்தப் பெரியநாயகிக்கு அந்தப் பாட்டு என்பது புரியவில்லை.
சுவரையும் சுற்றுப்புறத்தையும் வட்டமிட்டவன் தரையைப் பார்த்தான். சலவைக் கற்களில் முகத்தைப் பார்க்கலாம்.
பார்க்க அவசியம் இல்லாதபடி ஒரு விசித்திர ஆக்கிரமிப்பு.
பெரியநாயகி எந்த நேரத்திலும் வரலாம். வயதில் இவனை விடப் பெரியவள். வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதா, அல்லது இதே நிலையில் இருப்பதா?
இடம் புதிது. முதல் சந்திப்பு. சடங்கு, சம்பிரதாயம் இருக்கிறது. என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வி.
பதிலைத் தேடவில்லை. இது என்ன நாடகமா, ஒத்திகை பார்ப்பதற்கு? பழக்கம் இல்லை. முகத்துக்கு முகம் கண்ணாடி. ஒலிக்குத் தகுந்த எதிரொலி. பேச வேண்டியவள் பெரியநாயகி. எதையும் அவள் கேட்கலாம். இதமாக பதில் சொல்ல வேண்டும். அந்த நயமும் நாகரிகமும் இவனிடம் உண்டு. பிறகு என்ன? பிரமைகள் எதற்கு?
சலவைக்கல் தரையில் சற்றைக்கெல்லாம் நிழல் தட்டியது.
மாடிப்படிகளில் இறங்கி வருவது யார்? நிமிர்ந்து பார்க்கத் தேவையில்லாதபடி நிழலின் சாயல்.
சந்தேகம் இல்லை.
பெரியநாயகி படியிறங்கி வருவதைக் கட்டியம் கூறுகிறது. சலவைக் கல் நிழல் சித்திரம்.
நிழல் நெருங்கியபோது அறம் நிமிர்ந்தான்.
பெரியநாயகியின் தரிசனம்.
நிழல் அல்ல நிஜம்.
இவனைவிட பெரிய உருவம். அனிச்சையாக அறம் எழுந்துவிட்டான்.
அவன் கையிலிருந்த காகித உறை தவறி விழுந்தது. சத்தமில்லாமல் அது விழுந்த நேரத்தில் எதிர்மாறான கனத்த ஒலி. தடம் பெயர்ந்து விழும் சத்தம்.
அறம் ஆடிப் போனான். அவன் காலடியில் காகித உறை மட்டுமல்ல…
பெரியநாயகி?
விரைந்து வந்த வேகத்தில் சலவைக்கல் தரை வழுக்கி விழுந்தவள் எழ முடியாது தவிப்பதைப் பார்க்கப் பொறுக்கவில்லை இவனுக்கு.
என்ன செய்யலாம்?
அம்மா…அம்மா…
உத்ரா ஓடி வந்தார். தொட்டுத் தூக்கி நிமிர்த்தத் தயங்கினார்.
பெரியநாயகியின் கைகள் அறத்தின் காகித உறையில் படிந்திருந்தன.
அறம் கை கொடுக்க முனைந்தபோது மறுப்பாகத் தலையசைத்தாள்.
நிதானித்து மெதுவாக அவள் எழுந்தாள்.
பெரியநாயகி கையில் கிடைத்த காகித உறையை அவனிடம் நீட்டினாள்.
“”அது உங்களுக்குத்தான்…அந்தக் கல்யாணச் சத்திரத்தின் பத்திரம்…விருப்பத்தைக் கேள்விப்பட்டேன். குறுக்கே நிக்க விரும்பல…அதனால…”
பெரியநாயகிக்குக் கலக்கம்.
“”எனக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிட்டது. உங்க பொருள் உங்களுக்குத்தான் சொந்தம்”
“”அம்மா, டாக்டரை அழைக்கட்டுமா? உடம்பிலே வலி எதுவும்…”
“”வேணாம்…உத்ரா. வைத்தியம் தேவையில்ல…”
பெரியநாயகியிடம் ஆசுவாசம் தென்பட்டது.
“”எதுக்காக நிக்கிறீங்க? நிக்க வேண்டியவர் இல்லே. உக்காருங்க”
உட்கார்ந்தான்.
“”உங்க பேச்சைக் கேக்க இன்னிக்கு நான் வர்றேன்”
சரணாகதி பேச்சைக் கேட்கவா?
ஆத்ம சக்தியின் நிசர்சனத்தை அறம் தரிசித்தான்.
– ஜூன் 2012