கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 186 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மன் கோவில் உதயகால மணியோசை நல்லதம்பியை விழிப்புக்கொள்ள வைத்தது. திண்ணையில் கிடந்தவர் எழுந்து, தடுக்கைச் சுருட்டி வைத்தார். மாணிக்கம் கிழக்குச் சாய்வில் படுத்துக் கிடந்தான். அவன் குளிர் தாங்காமல், குறண்டியபடி கிடந்தது அவருக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘இளந்தாரி இரெண்டொரு வருஷத்தில குடும்பம் நடத்தப் போறான், இப்படியா குழந்தை மாதிரி…!’ அரும்பிய சிரிப்பு மாறாமலே அவனைத் தட்டி எழுப்பினார். 

அரைச் சுவர் வைத்து, பனை மட்டைகளால் வரிந்த அறையை – வாசல் தட்டியை நகர்த்தி – எட்டிப் பார்த்தார். அவரது செல்ல மகள் சிவகாமி இருட்டோடு இருட்டாக படுத்துக் கிடப்பது தெரிந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவளைக் குழப்பாமல், வெளியே வந்தவர், மேற்கு நோக்கி நடந்தார். 

தெற்குப் பக்கமாக, அவரது குலதெய்வம் ஞானவைரவரது பீடம். கோயில் முன்பாக வந்து, வைரவரை மனமுருகி வணங்கினார். வணங்கியவர், மேலே நடந்தார். 

கிழக்கே இருக்கும் பொதுக்கிணத்தில் அவர் குளிப்பதில்லை. முத்துமாரியம்மன் கோயில் தீர்த்தக் குண்டுக்கு அப்பால், வடகிழக்காக உள்ள திருவடியில் தான் அவர் தினமும் நீராடுவது வழக்கம். 

நீரில் கால் பட்டதும் குளிர் தெரிந்தது. ஐப்பசி மாதக் குளிர். அவரை லேசாக நடுங்க வைத்தது. கையோடு எடுத்து வந்த சாம்பலைப் புற்று மண்ணோடு கலந்து – கோவணத்தோடு நின்றபடி – தனது ஆடைகளைச் சுத்தம் செய்தார். அவரது ஆடைகளென்பது; ஒரு நாலுமுழ வேட்டி, அரையில் கட்டிக் கொள்ளும் காடித்துண்டு, அவர் அணிந்திருக்கும் கோவணம் அவ்வளவுதான். என்னதான் துவைத்தபோதும் நீர்க்காவியேறிய அவ்வாடைகளின் பழுப்புநிறம் போனபாடாயில்லை. 

துவைத்த ஆடைகளைக் குளக்கட்டில், உலர விட்டார். 

சாம்பல் எடுத்து பல் விளக்கியவர், நீரில் இறங்கி முக்குளித்தார். ஆரச்சோர நீராடியவர், சிறிது உலர்ந்த நாலு முழத்தை அரையில் சுற்றிக் கொண்டு, வீடு நோக்கி நடந்தார். 

இளஞ் சூரியனின் ஒளித்திரள் அவரைத் தழுவியது. அது அவருக்கு இதமான வெதுவெதுப்பைத் தந்தது. 

அம்மன் கோயிலை நெருங்கியவர், சந்நிதிக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தார். 

அப்பொழுது அந்தக் குரல் கேட்டது: 

“நல்லான் நில்லும்… பெட்டை சிவகாமின்ரை ருதுசாந்தி எப்ப… ? பெட்டை சமைஞ்சு மூண்டு மாசமிருக்குமா…? அம்மனைப் போல ஆடிப்பூரத்தில சமைஞ்ச பெட்டை… ஆச்சியின்ரை கிருபை அவளுக்கு இருக்கும். அசப்பில அவளைப் பார்க்கிற மாதிரி வேற இருக்கிறாள். வாற திங்கள் நல்ல நாள்; விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் கூடுது. காலமை ஏழுமணிக்கும் பத்து மணிக்குமிடையில சடங்கைச் செய்யலாம். மாப்பிளை கையுக்கை இருக்கேக்க உனக்கென்ன கவலையடா. ஆனாலும், சாந்தி கழியாமல் கன்னிகாதானம் அது இதெண்டு ஏதும் கூடாது…” 

‘இந்தத் தீண்டத் தகாத குடிமையை, புலையனை என்னமாதிரி மதிச்சு இந்த மனிசன் கதைக்குது… இதுகள் எல்லாம் கடவுள் மாதிரி… காலில பூப்போட்டுக் கும்பிடவேண்டிய பிறவியள்…’

மனதில் அடர்ந்து பரவும் பரவசம் நல்லதம்பியின் முகத்தில் தெரிந்தது. 

“தாவாடிப் பக்கமும் தாழிபுலப் பக்கமும் என்ரை கமக்காரர்களைப் போய்ப்பார்… அதுசரி ஆரோடை தோட்டப்பங்கு… கனகரோடையா…? நல்லது பொல்லாதது தெரிஞ்ச மனிசரவர்…” 

“உங்களைப்போல அவரும் தங்கப்பவுண். மனிசரை மனிசரா மதிக்கிறவர். அவரோடை இப்ப இல்ல. போன வருஷத்தில இருந்து மூத்தையர் வளவு முருகேசரோட மருமோன் மாணிக்கம்தான் கனகரோட…;” 

“சிடுமூஞ்சி முருகேசனா… ? கருமி, ஏதாவது தருவானா…?” 

“மரியாதைக்கு அவரைத்தான் முதலில பார்க்கப் போறன்…”

“சரி உன்ரை விருப்பம். அதோட கனகர், அவற்றை சகலன் மணியத்தார்… சிவசம்பு வாத்தியாரையும் பார்…” 

“தாழிபுலத்தில வைத்தியர் இரத்தினத்தார், கொழும்புக் கடை வல்லிபுரத்தாரையும் பார்க்கப் போறன்…”

“சரியடா…! மனக்கிலேசப்படாமல் எல்லாரையும் போய்ப்பார். இது உன்ரை கடமை மட்டுமல்ல. அவங்கட கடமையுந்தான். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சு மூண்டு வருசமாகியும் – ஏழைபாளையள் வல்லவனில் சார்ந்துதான் நிக்க வேண்டியிருக்கு…” 

“மெய்… மெய்யான வார்த்தை சாத்திரியாரையா…!” 

“எல்லாருக்கும் இந்தப் பெருங்குளத்து முத்துமாரி வழிகாட்டுவாள். போடா… போய் ஆகவேண்டியதைப் பார்.” 

சாத்திரி கந்தசாமியாரிடம் விடைபெற்றுக் கொண்ட நல்லதம்பி வீட்டைப் பார்த்து நடந்தார். 


“மாப்பிளை கையுக்கை இருக்கேக்க உனக்கென்னடா கவலை….”

“சாத்திரியார் கூறினது நூற்றிலொரு வார்த்தை…”

நல்லதம்பி மனம் குளிர்ந்து போனார். 

மச்சான் சங்கரலிங்கத்துக்கும் அவருக்கும் மாற்றுச்சடங்கு தான் நடந்தது. சங்கரலிங்கமும் பாறுப்பிள்ளையும் அக்காலத்தில் போனதால் அவர்களது மகன் மாணிக்கத்தின் பாடுகள் இவருடையதாகியது. 

நாப்பதுகளின் ஆரம்பத்தில் சரஸ்வதியில் மருமகனையும் மகள் சிவகாமியையும் சேர்த்துப்படிக்க வைத்தார். தாழ்த்தப்பட்ட பிள்ளைகளென அவர்களும் அவர்களது வயதையொத்த உறவுகளும் இன்னும் சில ஒடுக்கப்பட்ட சாதிப்பிள்ளைகளும் வெறும் தரையில் இருந்துதான் கல்வி கற்றார்கள். மாறாக, உயர்சாதி வெள்ளாளப் பிள்ளைகள் வாங்கு மேசைகளில் இருந்து படித்தார்கள். அந்த இளம் வயதிலேயே – கீறலாய் விழுந்துவிட்ட, சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வு, மாணிக்கத்துக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவன் தனது எதிர்ப்பினை – மூன்றாம் வகுப்புடன் பாடசாலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டதன் மூலம் காட்டிக் கொண்டான். காரணத்தை அறிந்த நல்லதம்பி, சகலதையும் புரிந்து கொண்டவராய்ப் பேசாமல் இருந்தார். முதலாம் வகுப்பில் கல்வி பயின்ற சிவகாமி மட்டும் மேலும் மூன்றாண்டுகள் தொடர்ந்து படித்தாள். 

‘ஏதோ இந்த மட்டிலாவது இந்தப் பிஞ்சுகள் படிக்க முடிந்ததே…!’ 

நல்லதம்பி தன்னளவில் திருப்திப்பட்டுக் கொண்டார். 

அந்தத் திருப்திக்கு மேலாக, மாணிக்கமும் சிவகாமியும் வயிறு காய்ந்துவிடக் கூடாது என்ற கவனமே அவருக்கு எப்பொழுதும் இருந்தது. அவரும் அவரது துணைவி நாகாத்தையும் தங்களை ஒறுத்துப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டார்கள்.

தோட்டச் செய்கையில் பங்குக் கூலிமுறை வராத காலமது. குடிமை முறை உழைப்புத்தான் நடைமுறையில் இருந்தது. செய்த வேலைக்குக் கூலியாக வரகோ, குரக்கனோ, மொண்டியோதான் கிடைத்தது. அதுவும் இரண்டொரு கொத்துத்தான் தேறும். கமக்காரர்கள் நெல்லைக் கண்ணில் காட்டமாட்டார்கள். சில சமயம் வருஷக் கூலியாக கால் பறை கிடைக்கும். அல்லது, அதன் பாதியான நாலு கொத்துக் கிடைக்கும். 

சிறங்கையளவு தானியமெடுத்து நாகாத்தை கஞ்சி காய்ச்சி பிள்ளைகளுக்குத் தருவாள். அவளும் நல்லதம்பியும் கிடைக்கக்கூடிய முசுட்டை இலை, குப்பைக் கீரை, அறக்கீரை என ஆயந்தெடுத்து, உப்பிட்டு இலைக்கஞ்சி காய்ச்சிக் குடிப்பார்கள். பிள்ளைகளுக்கும் அதில் பங்கு இருந்தது. 

மாசி முடிந்து, பங்குனி மாதம் ஆரம்பித்த கையோடு வயல் அரிவு வெட்டு முற்றுப் பெற்றுவிடும். அப்பொழுது பூதன் கிணத்தடி ஏழைகள் தாவாடி, கெம்மில், மடத்தடி, சிலுந்தா என வயல் வெளியை நாடுவார்கள். குறிப்பாகப் பெண்களும் சிறுவர்களும் தான் அங்கு கூடுவார்கள். வயல்களில் சிறுமணிகளாய் சிந்திக் கிடக்கும் நெல்லைப் பறவைகளின் பரபரப்புடன் சேகரித்து, தம்முடன் எடுத்து வந்த வட்டப் பெட்டிகளில் நிரப்புவார்கள். தசை உருக்கும் வெயில் அவர்களை எதுவும் செய்து விடுவதில்லை. கால் வயிற்றுக்கும் அரை வயிற்றுக்கும் இப்படி ஆலாய்ப் பறப்பதைத் தவிர அவர்களுக்கு வழி ஏதும் தெரியவில்லை. எலிப்புற்று ஏதாவது கண்ணில் பட்டுவிட்டால், அவலாதிப்பட்டு, புற்றை நோக்கிப் பாய்ந்து செல்வார்கள். பக்கம் பக்கமாய் இருந்து புற்றைக் கிளறி, அகப்படும் நெற்கதிர்களை எடுத்துப் பெட்டிகளில் போட்டுக் கொள்வார்கள். 

அப்படி ஒரு சந்தர்ப்பம் – நெல் பொறுக்க வந்த நாகாத்தைக்குக் கிடைத்தது. அவசரம் ஏதுமில்லாமல் நிதானமாக, புற்றுவாயில் கைவைத்து நெற்கதிர்களை அவள் எடுத்தாள். புற்றை வெட்டுவதற்கு ‘புத்துவெட்டி’ ஏதும் கைவசம் இல்லாதலால், சற்று ஆழமாகவே தனது வலது கரத்தை புற்று வாயினுள் நுழைத்தாள். சுரீரென, முள்ளின் நெருடலாய் அவளது புறங்கையை ஏதோ பதம்பார்த்தது. கையை வெளியே எடுத்துப் பார்த்தாள். அரை அங்குல இடைவெளியில் இரு இடங்களில் இரத்தக் கசிவு. “எலிகிலியா இருக்குமோ…?” என அவள் அரட்டையாக இருந்துவிட்டாள். 

சேர்த்த நெல்மணிகளுடன் பெட்டியைத் தூக்கியபடி நடந்த நாகாத்தைக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. பக்கத்தில் வந்த மகள் சிவகாமியை இறுகப் பற்றியபடி நிலத்தில் சரிந்தாள். மூச்சுமுட்ட, நெஞ்சு அடைத்துக் கொண்டது. லேசாக வாயில் இருந்து நுரை தள்ளியது. இரத்தக் கசிவும் இருந்தது. “என்ரை… என்ரை ஆச்சி…!” என்று சிவகாமி அலறினாள். புதறன் வேலிக் கரையில் நின்ற கனகருக்கு அவளது அலறல் கேட்டது. 

வயல் பரப்புக்கு விரைந்து வந்த கனகர். நாகாத்தை மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டார். அவளது வலது கரத்தைப் புரட்டிப் பார்த்தார். விஷ ஜந்து தீண்டிய இடத்தைப் பார்த்ததும் அவருக்குப் ‘பெரிசு’ தான் என்று தோன்றியது. 

“செட்டி நாகம் பிள்ளையள்…” என்று நின்ற பெண்களுக்கு கூறியவர். தனது இடுப்பில் செருகி இருந்த வில்லுக்கத்தியை எடுத்துப் பாம்பின் பல்லுப்பட்ட இடத்தைக் கீறினார். விஷம் கலந்த இரத்தம் நிலத்தை நனைத்தது. 

“கூப்பிடு தூரத்திலதான் விஷகடி வைத்தியர் தம்பிமுத்து இருக்கிறார்… இவளை அவரிட்ட கொண்டு போங்க… விஷம் தலையில் ஏறப்போகுது.” 

கனகர் கூறியதைக் கேட்ட பூதன் கிணத்தடிப் பெண்கள், பதகளிப்புடன் நாகாத்தையை வைத்தியர் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். 

வெளியே வந்த வைத்தியர், அப் பெண்கள் படலை திறந்து வருவதைக் கண்டு, ஒரு வகை எதிர்ப்புடன் அவர்களைப் பார்த்தார். 

‘நாளும் கிழமையுமாய் இந்த சாதி கெட்ட நாத்தரியள் இஞ்ச இப்ப ஏன் வாறாளவை… ஆரத் தூக்கிக் கொண்டு வாறாளவை… நல்லான்ரை பெண்டிலையோ… விஷகடியா…?’ 

முத்தர் உணர்வெதனையும் வெளிக்காட்டாது மௌனமாக நின்றார். 

வந்த பெண்கள் நாகாத்தையை நடுமுற்றத்தில் கிடத்தினார்கள். 

கிட்டவாக வந்த வைத்தியர், உறைந்துபோன முகத்துடன், மயங்கிக் கிடந்த நாகாத்தையைப் பார்த்தார். அவளைத் தொட்டுப் பார்வை பார்க்கும் எத்தனம் ஏதும் அவர் செய்யவில்லை. அங்கு நின்ற பெண்களைப் பார்த்துக் கூறினார். 

“சோமவார விரதம்… உவளைத் தொட்டுப் பார்வை பார்த்துத் தீட்டுப் படேலாது… அவளின்ரை நாடி விழுந்திட்டுது போலக் கிடக்கு… என்னாலை ஒண்டும் செய்யேலாது… கடவுளில பாரத்தைப் போட்டிட்டுத் தூக்கிக் கொண்டு போங்க…” 

விஷயம் அறிந்து அங்கு ஓடோடி வந்த நல்லதம்பி, தனது அருமை மனைவி உயிருடன் போராடுவதைக்கண்டு. வைத்தியரின் காலில் விழுந்து மன்றாடினார். 

“சடலத்தை எடுத்துக் கொண்டு போ நல்லான்… என்னால ஒண்டும் செய்யேலாது. 

‘சடலமா… சடலமா…. ? உயிரோட இருக்கிற என்ரை நாச்சியாரைச் சடலமாக்கிப் போட்டானா இந்த வைத்தியன்…’ 

முத்தருக்கு எதிராக மனதளவில் கிளர்ந்த குரோதத்தை கட்டுப்படுத்தியவராய், நாகாத்தையைச் சுமந்தபடி, பூதன் வளவு நோக்கி நடந்தார். உறவுப் பெண்கள் இழுபட்டபடி அவர் பின்னால்… 

வளவில் அவர் காலடி எடுத்து வைத்தபொழுது, தனது அருமந்த மனைவியின் உயிர் பிரிந்து விட்டதை உணர்ந்து கொண்டார். 

நாகாத்தையின் மரணச்சடங்கு, மிக எளிமையாக நடந்தது. அவளுக்குக் கொள்ளி போட்டபோது, சிதையில் பற்றிப் படர்ந்த தீ நாக்குகள் அவரையும் பொசுக்கி அவரது உயிர் ஒளியையும் அழித்தது. 

தாரையாய் கண்களில் நீர், விக்கித்து நின்றவர், மூப்பன் இராமன் வருவதைக் கண்டு, மரியாதையாய் ஒதுங்கி நின்று கொண்டார். 

“நல்லதம்பி! பிள்ளையின்ரை சடங்கு எப்ப… எங்களுக்கும் விருந்து உண்டா…?” 

“விருந்தா…! வயிறாரச் சாப்பாடு போட்டாலே எனக்கு மகிழ்ச்சி மூப்பனார். கையில மடியில சேரட்டும். சொந்தம் பந்தம் எண்டு ஆரையும் விடாமல் அழைத்துத்தான் அவளின்ரை சாமத்தியச் சடங்கு நடக்கும்…” 

“நல்லது… நல்லது…” கூறிய மூப்பன் அவரைக் கடந்து செல்ல, அவர் வீட்டை நோக்கி நடந்தார். 

வீட்டில் அவர் கண்ட காட்சி அவர் மனதைக் குளிர வைத்தது. முகத்தில் அடர்ந்த மகிழ்ச்சியுடன், முன்னால் விரிந்த நாடகத்தை ஒதுக்கமாக நின்று ரசித்தார். 

“இஞ்ச வா பிள்ளை…” 

மாணிக்கத்தின் பரவசம் மிகுந்த அழைப்பு. 

குடிசையின் வெளியே, மேற்காக நின்ற சிவகாமி ‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள். 

“கிட்டவாருமன்…” எனக் குழைந்த மாணிக்கம் தனது மடியிலிருந்து எடுத்த, கடதாசிப் பொட்டலத்தை விரித்தான். அவனது கரங்களில் செட்டான வேலைப்பாடுடன் கூடிய இரண்டு பாதசரங்கள். 

சிவகாமியின் கண்கள் மலர்ந்து. பட்டாம் பூச்சியாய்ப் படபடத்தன. உதடுகளில் உடைந்த சிரிப்பில் இசைவான கனிவும் பரவசமும். 

“நீயே காலில கட்டிவிடு…” பட்சமுடன் கூறியவள். அவன் காற்சங்கிலிகளைக் கட்டுவதற்கு வாகாகத் தனது கால்களைத் திண்ணையில் தூக்கி வைத்துக்கொண்டாள். 

அவளது பாவாடையை நீவி, லேசாக மேலே தூக்கிய மாணிக்கம் கணுக்கால்களை நன்றாகத் துடைத்தான். அவனது ஸ்பரிசம் பட்டதும் அவள் சின்னதாய்ச் சிலிர்த்த மாதிரி இருந்தது. சிறிது உணர்ச்சி வசப்பட்ட அவனும் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டு அவளது கால்களில் சங்கிலிகளை அணிவித்தான். 

வலது காலை லேசாகத் தூக்கி உதறிய சிவகாமி, சங்கிலியின் ஒலி கேட்டுக் கலீர் எனச் சிரித்தாள். 

“கள்ளப் பெட்டை… இதென்ன குதிப்பும் கும்மாளமும்.” 

அவனில் விழுந்த கண்களை எடுக்காமலே அவள் “என்ன வெள்ளியா..?” என்று கேட்டாள். 

“இல்ல… முலாம்பூசினது.” 

“ப்பூ… இவ்வளவுதானா.” உதட்டைப் பிதுக்கியவள், அவனது முகமாற்றத்தைக் கண்டதும் அவனது கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். 

அவளது தொடுகை அவனைப் பொங்க வைத்தது. லேசாகக் குலுங்கினான். அதைக்கண்டு மாளாத சிவகாமியின் கண்களிலும் நீர்! தனது புறங்கையால் கண்ணீரைத்துடைத்துக் கொண்டவள், துயரம் கரைந்த குரலில் சொன்னாள்: 

“இது… இது போதும் அத்தான். ஏழைப்பட்டதுகளுக்கு இதுக்குமேல எதுவுமே வேண்டாம்…” 

தொடர்ந்து பேசவிடாது, அவளது உதடுகளை தனது விரல்களால் அழுத்தமாக மூடியவன், நெருக்கமாக இழைந்த அவளை இழுத்து அணைத்துக் கொள்ளவும் செய்தான். 

நெருக்கத்தில் அவளது வதங்கிய உடலும் வட்டமுகமும் பூசியது போன்ற சிறிய உதடுகளும் வெளிறிய பூமொட்டு மூக்கும் அரும்பத் துடிக்கும் மார்பின் விம்மலும் அகலித்த கண்களும் அவனுக்கு வெறியூட்டின. 

“இந்த ஒல்லிப் பாச்சானை, சவளல் தண்டை நாலாக மடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு, நாலிடம் போய்வரலாமா…?” 

நினைத்தவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. குலுங்கிச் சிரித்தான். 

“என்ன…? என்ன சிரிப்பு… என்னைப் பிடிக்கேல்லையா…?” 

“எல்லாமே பிஞ்சு பிஞ்சாய்… அழுத்தித் தொட்டாலே கையோட வழிஞ்சு வாறமாதிரி இருக்குது… இருந்தாலும் பிடிக்காமலா உனக்குப் பின்னாலை இப்படி இழுபடுறன்…” 

குழைந்து நின்ற மாணிக்கத்தை நல்லதம்பியின் செருமல் நிதானப்படுத்தியது.

“அப்பு…” என்று நுனி நாக்கைக் கடித்த சிவகாமி, குடிசைக்குள் ஓடினாள். அவள் வெளியே வந்தபோது, இரண்டு தகரப் பேணிகளில் வெறுந்தேத்தண்ணி எடுத்து வந்தாள். 

நல்லதம்பியும் மாணிக்கமும் தேநீரை வாங்கிக் கொண்டார்கள். 

தேநீரைப் பருகியதும் – எழுந்த நல்லதம்பி “தாவடிப் பக்கம் போயிற்று வாறன்…” என்று துண்டை உதறி இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டார். 

“ஏன்… எதற்கு…?” வாயுன்னி வந்த கேள்வியைச் சிவகாமி கேட்காமலேயே அடக்கிக் கொண்டாள். 

“முருகேசரையும் கனகரையும் பார்க்கப் போறார் போல… நேற்று முழுவதும் இதே நினைப்பில் பிசத்தியபடி இருந்தவர்…” 

மாணிக்கம் உரத்துக்குரல் தராமல் சிவகாமிக்கு மட்டும் கேட்கிற மாதிரிச் சொன்னான். 

படலை வரை வந்த மாணிக்கமும் சிவகாமியும் அவர் வடக்குப் பார்த்து நடப்பதைப் பார்த்தபடி நின்றார்கள். 


அம்மன் கோவிலுக்கு மேற்குப் பக்கமாக வீதியால் வந்த நல்லதம்பி, பெருங்குளத்தில் இறங்கி, ஆழம் குறைவான பகுதியால் நடந்து, கட்டுவயல் பக்கம் ஏறினார். 

அழகரின் கட்டுவயல் பச்சைப்பசேல் என்று இருந்தது. மடல் வெடித்து, குடலை தள்ளிக்கிடந்த நெற்பயிர்கள் காற்றில் அசையும் அழகு அவர் மனதை வருடியது. அவரது அந்த அழகுணர்ச்சியை மழுங்கடிப்பது போல வயிற்றைப் பிசையவைக்கும் விஷயம் அவரை அலைக்கழித்தது. 

‘அரிசிச் சோறு சாப்பிட்டு எத்தனை மாதம்…! சிவகாமியின்ரை சடங்கிலாவது நாலு பேருக்குச் சோறு போட்டு, நானும் பிள்ளையளும் வயிறுகுளிரச் சாப்பிடவேணும்…’ 

நெருடலான நினைவுகள் அவரை விடுவதாயில்லை. 

உயரப்புலப் பக்கம் போகாமல், புளியடிப் பக்கமாக நகர்ந்தார். வங்களாவடியில் சிற்றம்பலத்தார் கடையில் – பவ்வியமாக ஒதுங்கி நின்று சில்லறை தந்து வெற்றிலை பாக்கு, மஞ்சள் என வாங்கிக் கொண்டார். 

முருகேசரையும் கனகரையும் சந்திக்கும்போது, வெத்திலை வைத்து மரியாதை செய்யவேணும்… சின்னத்தனமா கையேந்தி நிக்கப்படாது. அது வடிவில்லை…’ 

தொடர்ந்து நடந்தவர் பட்டவேம்படி வயிரவர் கோயில் வந்ததும் கரம்குவித்து வயிரவரை நெக்குருக வணங்கினார்: 

“அப்பு…! என்ரை செல்வதிக்கு நல்லது நடக்கவேணும்… அவளின்ரை காரியம் தடங்கலேதுமில்லாமல் ஒப்பேறவேணும்.” 

அருவியாய் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, நொக்கிக்காட்டு ஒழுங்கையில் இறங்கினார். 

முருகேசருடைய வீடு ஒழுங்கையின் தொங்கலில் இருந்தது. 

‘முருகேசர் ஏடா கூடமாய் நடந்துவிடுவாரோ…’ பயந்தபடி அவரது வீட்டுச் சங்கடப் படலையை அண்மித்த நல்லதம்பி. 

“செல்ல உடையார்… அம்பலவாணயுடையார். ராச உடையார்… அப்பு..!” என்று மென்குரல் எடுத்து அவரை அழைத்தார். அழைப்பு முருகேருக்குக் கேட்ட மாதிரித் தெரியவில்லை. 

படலையைத் திறந்த நல்லதம்பி, ஒரு வகைப் படபடப்புடன் முருகேசரது வளவினுள் கால் வைத்தார். 

இடுப்பில் இருந்த துண்டு இயல்பாகவே அவரது கக்கத்துக்கு வந்தது. 

அவரது அரவம் கேட்டதும் சடையன்தான் குரைத்துக் கொண்டு முதலில் அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது. 

தொடர்ந்து வந்த முருகேசரின் குரலில் இருந்த மிருகம் அவரை நடுங்க வைத்தது. 

“ஆரடா அது…? வெள்ளணை வந்து கழுத்தறுக்கிற கழிசடை! தெற்கு காட்டானா…?” பற்களை நறும்பியபடி தடதட என நடந்து முருகேசர் முன்னால் வந்தார். 

ஒதுக்கமாக நின்ற நல்லதம்பிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எண்சாண் உடம்பை ஒரு சாணாக ஒடுக்கிக் கொண்டார். 

“என்ரை பெட்டை சிவகாமி சமைஞ்சிட்டா… அது தான் ஐயாவைப் பார்த்து…” 

கூறிய நல்லதம்பி. வெற்றிலை பாக்குடன், மஞ்சள் துண்டையும் பொதிந்து முருகேசரிடம் தருவதற்கு அவரை நெருங்கினார். முருகேசர் உருவேறியவர் போல சன்னதங்கொண்டு, நல்லதம்பியின் கையில் இருந்த வெற்றிலைச் செல்வத்தைத் தனது புறங்கையால் தட்டிவிட்டார். அடுத்தகணம், அவரது பலமான கைமுஷ்டி நல்லதம்பியின் முகத்தில் உரமாக இறங்கியது. பின் கழுத்திலும் பலமான அடிகள் விழுந்தன. நிலைதடுமாறிச் சரிந்த நல்லதம்பியை, தலைமயிரில் பிடித்து உலுப்பிய முருகேசர், அவரது இடது நாரியில் பலமாக உதைக்கவும் செய்தார். தூரப்போய் அலக்க மலக்க விழுந்த நல்லதம்பியை அவர் விடுவதாயில்லை. விசர் நாயின் வெறியோடும் வேகத்தோடும் ஓடிச்சென்று இடது கையையும் வலது கையையும் பின்பக்கமாக வளைத்துப் பிடித்தபடி முதுகில் இன்னொரு உதை தந்தார். காய்ந்து, கலடு தட்டிய தரையில் முகம் கவிழ விழுந்த நல்லதம்பியின் மூக்கு உடைபட்டு ரத்தம் அருவியாய்க் கொட்டியது. நெற்றியிலும் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. உதடுகள் கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட்டது. 

வலது கையை அசைக்கமுடியாது அவஸ்தைப்பட்ட நல்லதம்பி, டதுகையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க முயற்சித்தார். அவரால் முடியவில்லை. 

நெஞ்சு கருகித் துடித்தபடி கிடந்த நல்லதம்பி, தனது ஈன நிலைக்குத் தான் வணங்கும் தெய்வங்களும் காரணமா எனக் கவலை கொண்டார். அதைத் தாங்கமுடியாதவராய்ப் பெருங்குளத்தானையும் பட்ட வேம்பானையும் கூவி அழைத்தார். அழுதார். 

பக்கத்தில், அஞ்ஞாத் தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்த கனகருக்கு அந்த அவலக்குரல் கேட்டது. முருகேசருடைய வீட்டுப் பக்கமாக ஓடிவந்த கனகர், செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நின்றார். 

துண்டுவேறு துணிவேறாக் கிடந்த நிலையிலும் நல்லதம்பியை விடாக்கண்டரான முருகேசர் உருட்டி உருட்டி உதைப்பது கனகருக்கு மிகுந்த துயரைத் தந்தது. அடி உதைபட்ட நிலையில், அந்த ஐப்பசி மாதக் குளிரில் நல்லதம்பி தரையில் கிடந்து அரைந்து அரைந்து நடுங்கியது கனகரை உசுப்பியது. அவரது மனிதம் அழுத்தமாய் அப்பொழுது விழித்துக் கொண்டது. 

“என்னடா இது சண்டாளத்தனமா இருக்கு. அவனைக் கொலை செய்யப்போறாயா…? அப்பிராணி. அவனைப் போய் அடிக்க உனக்கு… உனக்கு அதிகாரம் தந்தது ஆர், பாவபுண்ணியமெண்டு எதுவுமில்லையா…? கடவுளுக்கு அடுக்காத செயலைத்தான் உன்னாலை எப்பொழுதும் செய்யமுடியுமா…? நல்லது கெட்டது தெரிஞ்சு நடப்பதுதானே மனிசனுக்கு அழகு! அவன்ரை வீட்டில விஷேசமெண்டால் அவன் எங்கபோவான். தலைமைக் கமக்காரனெண்டு உன்னட்டைதான் வருவான். வந்தால் சந்தோஷமாக ஐஞ்சோ, பத்தோ கொடுக்க வேண்டியதுதானே…! அதைவிட்டிட்டு, கொடுக்குக் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிண்டால்…! சாதிக் கொழுப்பும் தடிப்பும் இப்படி சீலையால வடிய வடிய நீ நிக்கிற கோலத்தை எதில சேர்ப்பது… எங்களைச் சார்ந்து நிக்கிற இந்தச் சீவன்களை அந்தரிக்க விடப்படாது முருகேசு…!” 

முருகேசரைப் பிடித்துத் தள்ளிய கனகர், அவரது எதிர்வினை எதனையும் கவனம் கொள்ளாது நல்லதம்பிக்குக் கை கொடுத்தார். நிமிர்ந்து பார்த்த நல்லதம்பிக்குக் கனகரது கண்களில் இருந்த கனிவும் கருணைப் பொழிவும் அவரது துயரமனைத்தையும் துடைத்தெறிந்துவிட்ட தெம்பைத் தந்தது. எழுந்தவர் கிழிந்து கிடந்த நாலுமுழ வேட்டியை எடுத்து, நாரியில் சுற்றிக் கொண்டார். கனகரின் பின்னால் நடந்தார். 

கனகரோடு அவரது வீடுவரை வந்த நல்லதம்பிக்கு, முதல் வேலையாக அவர் தனது பழைய நாலுமுழ வேட்டியொன்றைத் தந்து உடுத்திக் கொள்ளச் செய்தார். அடுப்படியில் இருந்த மனைவி பவளத்துக்கும் – நல்லதம்பி வந்து இருப்பது பற்றித் தகவல் தந்தார். 

இயக்கம் கெட்டு அயர்ந்து போய் குத்துக்காலில் இருந்த நல்லதம்பியை, பிஞ்சுக்கரமொன்று ஸ்பரிசித்தது. “யாரது…?” என்று திரும்பிய நல்லதம்பிக்குக் கண்கள் பனித்துவிடுகின்றன. அருகாக நின்ற குழந்தையை ஒருவகைப் புல்லரிப்புடன் பார்த்தார். அது ரகு. கனகருடைய மகன். ஏழு வயதுகூட நிரம்பாத பாலகன். 

நல்லதம்பியின் நாடியை நிமிர்த்திய ரகு “மாமாவா அடிச்சவர்…?” என்று கேட்டான். பின்னர், ஏதோ நினைத்துக் கொண்டவனாய்க் குடுகுடு என அடுக்களைப் பக்கமாக ஓடினான். வெளியே வந்தபோது, இலையில் இரண்டு கோதம்பை ரொட்டியும் தொட்டுக் கொள்வதற்கு சம்பலும் கொண்டு வந்தான். 

“சாப்பிடுங்க…” என்று தந்தவன். “ரகு!” என்று குரல் கேட்டதும் மீண்டும் உள்ளே ஓடினான். 

உள்ளே இருந்து வந்தவனின் கைகளில் இருந்த சிறுசெம்பில், பால் தேத்தண்ணி! 

தட்டியில் செருகிஇருந்த தகரப்பேணியை நல்லதம்பி எடுத்தபோது ரகுவின் அம்மா செம்பிலிருந்த தேநீரை பேணியில் ஊற்றினாள். 

“செம்போட குடன் அம்மா…!” 

ரகுவின் பேச்சுக்கு உடன் ஏதும் சொல்லாத அம்மா, “நீ அங்கால போடா… முகாந்திரம் பண்ணாமல்… எனக்கு எல்லாம் தெரியும்.” என்று கூறினாள். கூறியவள் இன்னுமொரு ரொட்டியைக் கொண்டுவந்து நல்லதம்பியின் இலையில் வைத்தாள். 

“மகராசி நல்லாயிருக்கவேணும்… உங்களைப் போல உங்க அண்ணர் இல்லையே…” நல்லதம்பி கூறியதற்கு அம்மாவின் பதில் ஏதுமில்லை. மௌனமே பதிலா…? 

அம்மா ஊற்றிய நீரால் கைகளை அலம்பி, வாய் கொப்பொளித்த நல்லதம்பி, மெதுவாக எழுந்து கனகரைப் பார்த்தார். 

கனகர் தனது மடியில் இருந்து இருபது ரூபாயை எடுத்துத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்ட நல்லதம்பி குவித்த கரம் விலகாமல் நின்றார். 

“பொறு நல்லதம்பி கைமாத்தா இன்னும் கொஞ்சக் காசு தாறன். மகளின்ரை சடங்குக்கு உதவியா இருக்கும். கைமாத்துக் காசை கையில மடியில இருக்கேக்கை திருப்பித்தா… அது போதும்.” 

கூறிய கனகர், உள்ளே சென்று ஐம்பது ரூபா தாளுடன் வந்தார். 

அப்பணத்தையும் மிகுந்த மரியாதையுடன் பெற்றுக்கொண்ட நல்லதம்பியிடம் கனகர் சொன்னார்: 

“மகளின்ரை சாமத்தியச் செலவுக்கு இது போதும். அங்க இங்க கையேந்தாமல் நேரா வீட்டுக்குப் போ…..” 

“கண்மண் தெரியாமலா அடிப்பது… இவன் என்ரை தம்பி இல்லை… எங்கட வம்சத்தில இப்படி ஒரு சென்மமா…?” 

அடுப்படியில் இருந்து பவளத்தின் புறுபுறுப்புக் கேட்டது. 

அவளது மௌனம் கலைந்துவிட்டதா என்ன…? 

கனகரிடம் விடை பெற்றுக் கொண்ட நல்லதம்பி, ”நாச்சியார்… அப்ப நான் வரட்டுமே…” என்று பவளத்துக்கும் குரல் கொடுத்தார். அப்பொழுது அவள் சொன்னாள்: 

“பார்த்துப்போ நல்லதம்பி. அந்த அறுவான் கொம்பன் யானை மாதிரி கறள் வைச்சு மீண்டும் உன்னைத் தாக்க வந்தாலும் வருவான். சாதித் தடிப்பும் தாவடிக்காரனெண்ட குட்டி மிதப்பும் அவனைப் பாடாய்ப்படுத்தும்போது யாரென்ன செய்யேலும்…” 

நல்லதம்பி கையில் இருந்த எழுபது ரூபாயையும் துணியில் இறுக முடிந்தபடி நடந்தபொழுது, வீட்டுக்கு உள்ளே இருந்து ஓடிவந்த ரகு, அவரது கையில் இரண்டு கப்பல் வாழைப்பழங்களைத் தந்தான். 

குழந்தையின் நினைப்புத் தந்த பூரிப்பில் நனைந்த நல்லதம்பி, எல்லா வலியையும் சிறுமையையும் மறந்தவராய்த் தாவடித் திட்டில் இறங்கி, கையொழுங்கையைத் தொட்டு நடந்தார். 

அருமை மகள் சிவகாமியின் சாமத்தியச் சடங்கின் சோபனம் மட்டுமே அப்பொழுது அவரது மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அந்த லயிப்பில் கவலைகள் ஓரளவு நீங்க, முகத்தில் லேசான மகிழ்ச்சி ரேகை படர அவர் அடி அளந்து நடந்தார். 

பூதன் வளவு வெகு தொலைவில் இருப்பது போல அவருக்கு அப்பொழுது தோன்றியது. 

– 2010, கலைமுகம், 50ஆவது சிறப்பிதழ்.

– தகவம் பரிசுக்கதைகள் – தொகுதி 3, பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பு, முதலாம் பதிப்பு: மார்ச் 2016, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கொழும்பு.

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *