கோஷமும் வேஷமும்





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(‘கைத்தல நிறைகனி யப்பமொடவல் பொரி
கப்பிய கரிமுகனடி பேணிக்
கற்றிடு மடியவர் புத்தி யிலுறை பவ
கற்பக மெனும் வினை கடி தேகும்”

அன்பர்களே, எல்லாம் வல்ல இறைவியின் துணை கொண்டு மாயா தத்துவமென்னும் பொருள் பற்றிக் கதாப்பிரசங்கம் செய்ய முனைகின்றேன். மாயத்தைக் கூற முனைகின்ற போது இங்கு இளம் பெண்கள் அதிக மாக இருக்கின்றார்கள். நேற்று, பெண்களை இங்கு காணவில்லை. காரணத்தைப் பின்புதான் அறிந்தேன். நேற்று செவாய்க்கிழமை எல்லோரும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம் போய்விட்டார்களாம். அது நல்லதுதான். பெண்களுக்கும் மாயத்துக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பெண்ணாய்ப் பிறந்த மாயம்… வேண்டாம். பெண்கள் கோவிப்பார்கள்.(சனங்கள் சிரிப்பு) மாயை என்றால் என்ன என்பதை ஆத்ம சாதகர்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்தச் சொல்லை மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் பத்தொன்பது தடவைக்கு மேல் கையாண்டுள்ளார்.)
அது பஸ் நிலையம். எப்போதும் சனக் கூட்டத்தின் காலடிகளுக்குள் அகப்பட்டுக்கொண்டும், பஸ் வண்டிகளின் இரைச்சல்களில் திக்குமுக்காடிக் கொண்டும் இருக்கும். பஸ் நிலையத்துக்கெதிரே அந்தக் கடை இருந்தது.
பரபரப்பாக இயங்கும் பஸ் நிலையத்துக்கு எதிரே அந்தக் கடை இருந்தபடியால் எந்நேரமும் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். கடை வேலையாட் கள் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
காலை எட்டு மணியளவில் கடை முதலாளி ஸ்ரீமான் சுந்தரம் அவர்கள் கடைக்கு வருவார். காரை நிறுத்தி விட்டு அவர் கடையினுள் புகும்போது அங்கு வேலை செய்யும் வேலையாட்களில் சட்டென்று ஒரு மாறுதல் உண்டாகும்.
தன்னுடைய இடத்தில் அவர் அமர்ந்து கொண்டு கடையைச் சுற்றிப் பார்வையிடுவார். அந்த ஒரு சுற்றுப் பார்வையிலேயே கடையின் குறைநிறைகள் எல்லாம் அவர் விழிகளில் பதிந்து விடும். அதன் – பின்னர்தான் கணக்குப்பிள்ளையைப் பார்ப்பார்.
ஏதாவது குறைகள் இருந்தால் அவ்ர் சத்தம் கர்ண கடூரமாக வெளிப்படும். அன்றைக்கு அவர் கடையில் வந்து அமர்ந்ததும், கடையில் சில்லறை வேலை செய்யும் கந்தசாமியைக் கண்டார்.
அடுத்த வினாடி,
“டேய் கந்தசாமி…” என்று கத்தினார்.
கந்தசாமி பயந்தபடி அவர் முன்னால் வந்தான். “ஏன்டா….நேற்று என்னடா நடந்தது?” என அவர் கேட்டார்.
கந்தசாமி தடுமாறினான்.
“சுகமில்லை முதலாளி”
“என்னடா சுகமில்லை?”
“இல்லை முதலாளி…வயிற்றுக்குத்து…”
“ஏன்டா டூப் அடிக்கிறாய்? கழுதைப் பயலே, ஒழுங் காக வேலை செய்யிறதெண்டால் வேலை செய் இல்லாட்டி பேசாமல் வேறை எங்கேயும் வேலையைப் பார். நான் இஞ்ச தர்மசத்திரம் வைச்சிருக்கேல்லை. உங்களுக்கெல்லாம் சும்மா சம்பளம் தர…”
“சத்தியமாய் முதலாளி……சுகமில்லாததால்தான் வரேல்லை…”
“ஒரு நாளையோடை உனக்குச் சுகம் வந்துட்டு தோடா..?”
“இல்லை முதலாளி. இன்னும் சுகமாகேல்லை. உங்களுக்குப் பயத்திலதான் வந்தனான்…”
சுந்தரம் சிரித்தார்.
“நல்லாய்க் கதையளக்கிறாயடா கந்தசாமி. கையில் காசிருந்தால் வேலைக்கு வாறஞாபகம் வராது தானெடா கூட்டாளிமார் சேர நல்ல கொண்டாட்டந் தான். ஆனால்… ஒன்டை மாத்திரம் சொல்லிப் போட்டன். இனிமேல் உப்பிடி நிண்டால் அடுத்த நாள் கடைக்கு வராதை. அப்பிடியே நின்டுவிடு…” என கோபத் துடன் சுந்தரம் சொல்ல பயமாகத் தலையாட்டினான் கந்தசாமி.
“கந்தசாமி ஒழுங்காய் வேலை செய்ய வேணும்டா… ஒழுங்காய் உழைச்சால்தான் பலன் இருக்கு எண்டதை மாத்திரம் மறந்து போகாதை…” என்று மறுபடியும் சுந்தரம் சொன்னார்.
(மாயா என்னும் சமஸ்கிருதப் பதத்திலேயே அதன் அர்த்தம் அடங்கியிருக்கிறது. யா-யாதொன்றும் மா-ஒரு கணத்துக்கு முன்பு இருந்தது போன்று பின்பு இல்லையோ மாயா – மாயை. ஓயாது மாறி அமையும் தன்மை எதனிடத்திருக்கிறதோ அது மாயை -ஆக மாயை என்பது பிரபஞ்சம். அது ஓயாது தன் வடிவத்தை மாற்றியமைத்து கொண்டிருக்கிறது. நிலைபேறு ஒன்றையும் அதனிடம் காண முடியாது. இவ்வுலகம் மாயை. இதில் தாம் வசித் திருப்பது மாயை. நாம் பிறப்பது, வளர்வது, வாழ்ந்திருப் பது, தேய்வது, மாய்வது ஆகிய எல்லாம் மாயை. நாம் முன்னேற்றம் அடைவது மாயை, உலகம் தோன்றி வந்து நிலைபெற்றிருக்கிறது. அது மாயை. நாளைக்கு உலகம் தேய்ந்து மறைந்து போகிறது. அது மாயை. அண்டகோடி கள் அனைத்துமாய் இருப்பது மாயை. ஜீவகோடிகள் அனைத்துமாய் இருப்பது மாயை. சிற்றுயிர்கள் பேருயி ராய்ப் பரிணமித்து வருவது மாயை. உயிர்கள் பந்த பாசத் தில் திருப்தியடைந்து உழல்வது மாயை.)
ரெலிபோன் மணி அடித்தது. கணக்குப்பிள்ளை றிசீவரை எடுத்தார்.
“ஹலோ…”
“….”
“ஓமோம்…இருக்கிறார்…இப்பதான் வந்தவர்…” என்று பதில் சொல்லி விட்டு, சுந்தரத்தைப் பார்த்தார். கணக்குப்பிள்ளை. அவர் பார்வையின் பொருளை உணர்ந்த சுந்தரம் றிசீவரை தான் வாங்கிக் கொண்டார்.
“ஹலோ…”
“….”
“நான் சுந்தரம்தான் பேசிறன்…ஆர் பேரம் பலமோ…?
“….”
“என்ன பேரம்பலம்… என்ன நடந்தது..? நேற்று ராத்திரி எட்டு மணி வரை லொறியைப் பார்த்துக் கொண்டு இஞ்சை கடையில்தான் நிண்டனான்…”
“….”
“அதுசரி பிரச்சினை விளங்குது… இண்டைக்கும் லொறி வராதே…?”
“….”
“என்ன அரை லோட்தானோ? என்னப்பா இப்ப அதுக்குத்தானே மார்க்கெட். வாற கிழமை அது விலை ஏறப் போறதாகக் கேள்வி… ஓமோம்… நான் பெலத்துக் கதைக்கேல்லை. இப்ப கடையிலை ஆட்கள் இல்லை…சரி சரி விசயத்துக்கு வர். அரை லோட் காணாது. எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவையும் அனுப்பு. நாள் போகப் போக எல்லாம் பிரச்சினையாகப் போகும். இப்ப ஸ்ரொக் பண்ணினால்தான் பிறகு…எல்லாம் சரியாய் முடியும்…”
“….”
“சரி சரி…எப்படியும் இண்டைக்கு அனுப்பிப் போட வேணும். ஓமோம்…என்ரை வீட்டைதான் அனுப்ப வேணும். எத்தினை மணியென்டாலும் பரவாயில்லை. நான் பார்த்துக் கொண்டிருப்பன்…”
“சரி, அப்ப வைக்கிறன்…. இண்டைக்கு அனுப்பினால் நாளைக்கு நான் கணக்கைத் தீர்த்துப் போடுறன் சரிதானே…” எனப் பேசி முடித்த சுந்தரம் றிசீவரை வைத்தார்.
முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. அதனைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு
“அந்தச் சாமான் இண்டைக்கும் வாறது கஷ்டம் போலக் கிடக்கு. இஞ்சை கடையில இருக்கிறதை இப்ப விற்க வேண்டாம். பின்னேரமாய் வீட்டை அனுப்பி விடுங்கோ. வாற கிழமை மட்டிலதான் விலையேறும் போலக் கிடக்கு. அதுவரை வீட்டை இருக்கட்டும். செக்கிங் அமளியாய் இருக்கு…” என்று கணக்குப்பிள்ளையிடம் சொன்னார்.
கணக்குப்பிள்ளை தலையை அப்பிடியும், இப்பிடியுமாக அசைத்தார் “சங்கரன் காசை அனுப்பிப் போட்டானா” என மீண்டும் கணக்குப்பிள்ளையிடம் சுந்தரம் கேட்டார்.
“இல்லை, நாளை…க்…கு அனுப்புறதாக அப்போதை ரெலிபோன் பண்ணினார்.
“அதுக்கு நீர் ஓம் எண்டு சொல்லிப் போட்டீரா…? அவன் என்ன மனிசன்? சொன்ன தவணைக்குக் காசு தராமல் இப்ப ரெலிபோனை எடுத்து; இன்டைக்குப் பின்னேரம் கொண்டு வரச் சொல்லும்…”
(என்ன இது எல்லாமே மாயை என்று சொல்லுகிறாரே என நீங்கள் நினைக்கலாம். உண்மை யிலே எல்லாம் மாயைதான். அதனால்தான் மாணிக்க வாசகர் தன்னுடைய சிவபுராணத்தில் பின்வருமாறு கூறு கின்றார்.
“ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி”
என்று சொன்னார். இதன் கடைசி வரியைக் கவனிக்க, அதில் சொல்லுகின்றார். மாயையின் விளைவு ஆகிய பிறப்பு, இறப்பு என்னும் மாறுபாட்டை அகற்றுகிற இறைவனது திருவடிக்கு வணக்கம். ஆக பிறப்பு, இறப்பு எல்லாமே மாயை. இதை நம்மில் எத்தனை பேர் உணரு கின்றார்கள். ஏதோ தாங்கள்தான் பூமியில் பிறந்தவர்கள் என்றும், சாகாவரம் பெற்றவர்கள் போலவும் நடந்து கொள்ளுகின்றார்களே. நிலையில்லாத உடல், நிலையில் லாத வாழ்க்கை, நிலையில்லாத ஐம்புலன்களின் செய்கை கள் எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார் கள். பெண்களைப் பாருங்கள். நிலையில்லாத இந்த உடம் புக்காக, அதாவது அலங்காரப் பொருளுக்காக எவ்வள வைச் செலவழிக்கிறார்கள்? பௌடர்கள், கிறீம்கள், கண் களுக்குக் கறுப்பு, உதடுக்குச் சிவப்பு என்று பூசி இப்படியே சேலைத் தலைப்பை போட்டு (தோளில் துண்டைப் போட்டுக் காட்டுகிறார்) பிறகு லெதர் யாக்கை இப்படியே கொழுவி (ஒரு பையைக் கையில் கொழுவிக் காட்டி) கொஞ்சம் இடுப்பைக் காட்டிக் கொண்டு அசைவார்கள், (பிரசங்கியர் பெண்ணைப் போல நடிக்க, கூடியிருந்த பெண்கள் சேலைத் தலைப் பால் இடுப்பைப் பொத்த ஆரம்பித்தார்கள்) ஏன் இந்தக் கோலம்? ஒருவேளை நிலையில்லாத இந்த உடம்பை ஏன் மறைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமுமாக இருக்க லாம்.(ஆண்கள் பலமாகச் சிரித்தார்கள்) ஆண்கள் கூட அப்பிடித்தான். ஹிப்பி வேஷத்துடன் இடுப்பில் பெல்ட், நிலத்தைக் கூட்டும் உடையுடனும், உதட்டில் புகை யுடனும்தான் திரிகிறார்கள். அவர்களுக்குத் தேவாரங்கள் பிடிக்காது. சூராங்கனி சூராங்கனி பாடல்கள்தான் பிடிக்கும்.)
சுந்தரம் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார். நான்கு பேர்கள் கடை வாசலில் வந்து நின்றார்கள். கடைப்பெடியன் தலையை நீட்டினான்.
“ஐயா வாருங்கோ… வாருங்கோ என்ன வேணும்?” எனக் கேட்டான்.
“நாங்கள் சாமான் வாங்க வரேல்லை. உங்கடை முதலாளி நிற்கிறாரோ…?” என நால்வரில் ஒருவர் கேட் டார்.
கடைப்பெடியன் தடுமாறிப் போனான். யாராவது முதலாளியைத் தேடி. வந்தால் வழக்கமாக முதலாளி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலாளி கடையில் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த சுந்தரம் கடைப் பெடியனை அர்த்தத்துடன் பார்த்தார்.
“முதலாளி இல்லை வெளியில் போட்டார்” என்று அவன் சொன்னான்.
“மனேச்சர் நிற்கிறாரே” என வந்தவர்கள் விடுவ தாக இல்லை.
கடைப்பெடியன் இதற்கு மறுக்க முடியவில்லை.
“ஓ நிற்கிறார்” என்றான்.
நால்வரும் கடைக்குள் புகுந்தார்கள். முதலாளி சுந்தரம் மனேச்சராக நடிக்க முனைந்து கொண்டிருந்தார்.
“வாருங்கோ… வாருங்கோ… முதலாளி வெளியில் போட்டார். நீங்கள் இருங்கோ” என நால்வரையும் வரவேற்றார் மனேச்சர் வேடம் போட்ட முதலாளி சுந்தரம்.
கடைப்பெடியன் கதிரைகளைக் கொண்டு வந்து நால்வருக்கும் வைத்தான்.
“சொல்லுங்கோ, உங்களுக்கு என்ன வேணும்…?” என மனேச்சர் வேடம் போட்ட முதலாளி சுந்தரம் கேட்டார்.
வந்த நால்வரில் ஒருவர் பேச்சைத் தொடங்கினார்.
“நான் ஞானஸ்கந்தன், அவர் குகேந்திர மோகன், அவர் யோகேந்திரன், இவர் ரஞ்சித். நாங்கள் நாலு பேரும் கொழும்பில இருந்து இஞ்சை வந்திருக்கிறம். அனாதைகள் பாதுகாப்புச் சபையில் அங்கத்தவர்கள். அனாதைகள் தொடர்பான நிதி சேகரித்துக் கொண்டிருக்கிறம். ஏதோ உங்களால் ஆன உதவியைச் செய்ய வேணும்” என்று ஞானஸ்கந்தன் சொன்னார்.
“நல்ல காரியம். ஆனால் இப்ப ஒரு பிரச்சினை பாருங்கோ. முதலாளி வெளியில் போட்டார். அவர் இல்லாமல் நான் ஒண்டும் செய்ய முடியாது. அவர் கட்டாயம் உதவி செய்வார். உதவி செய்யிறது அவருக்கு பிடிக்கும். ஆனால்…” என்று மனேச்சர் வேடம் சுந்தரம் சொன்னார்.
“இல்லை பாருங்கோ. இப்ப நீங்கள் தந்திட்டு பிறகு முதலாளியிட்டைச் சொல்லுங்கோவன். நாங்கள் றிசீற் தருவம் என்றார் குகேந்திரமோகன்.
“தாறதில் ஒண்டுமில்லை…ஆனால் அவரைக் கேட் காமல் ஒண்டும் செய்யிறதில்லை” எனச்சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கடைப்பொடியன் சோடா விநியோகம் செய்தான்.
“சோடாவைக் குடியுங்கோ. என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை, முதலாளி இப்ப வருவார், எண்டாலும் பரவாயில்லை. அதுவரை உங்களை இருக்கச் செய்யலாம். ஆனால் இப்ப அவர் வரமாட்டார்…ம்…என்று இழுத்துக் கொண்டு போனார் சுந்தரம்.
“அப்ப பரவாயில்லை…நாங்கள் போயிட்டு இன்னு மொரு நாளைக்கு வாறம்…” என நால்வரும் விடைபெற முனைந்தார்கள்.
“குறைநினையாதேங்கோ நாங்கள் சம்பளத்திற்கு நிக்கிற ஆட்கள் தானே…”
”சீச்சீ… நாங்கள் குறை நினைக்கேல்லை. போயிட்டு வாறம்…” என்று சொல்லிக் கொண்டு ஞானஸ்கந்தன், குகேந்திர மோகன். யோகேந்திரன், ரஞ்சித் ஆகியோர் விடைபெற்று வெளியேறினார்கள்.
(இந்த மாயை உடம்புக்கும், உலகுக்கும் ஏன் தான் இந்த சனங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ தெரியாது. இந்த நிலையில்லாத வாழ்க்கையில் யார் ஐயா ஒழுங்காக இருக்கிறார்கள்? பொய், கோபம், காமம், ஏமாற்று என்று எத்தனை குளறுபடிகளை செய்கின்றனர். வீட்டில் ஒரு பெண்சாதி, வெளியில் ஒரு பெண்சாதி, பொக்கற்றில் ஒன்று. (சனங்களின் சிரிப்பு) இந்த ஊரில் அப்பிடி இருக்காது என்று நான் நினைக்கிறன். கலியாண வயதில் ஒரு ஆள் இருந்தால் கலியாணம் ஆச்சே என்று கேட்பார்கள். கலியாணம் முடிந்தால் பிள்ளை ஆச்சா என்று கேட்பார்கள். இதுதான் நம்மவர்கள் வழக்கம். சுவையான பலகாரங்களை பேஷ் என்பார்கள். தயிர்க் குழம்பு, பால், பழம் எல்லாவற்றையும் பேஷ் பேஷ் என்று சுவைப்பார்கள். கோயிலில் யாராவது சரி பிழை கதைத் தால் என்ன துணிவில் கதைக்கிறார்கள். கோயிலுக்கு ஏதாவது வாகனம் செய்து வைத்தார்களா? கோயில் திருப்பணி வேலை செய்கிறார்களா? என்று கேட்பார்கள். இதற்குக் காரணம் மனித மனங்கள்தான். மனிதனிடத்து மனதாய் மிளிர்வது மாயை. இந்த மனதை ஒரு விதமான ஜாலவித்தைக்காரனென்று சொல்ல வேண்டும். ஏனென் றால் மனது தோற்றத்துக்கு வரும்போது மனிதன் பிரபஞ் சத்தைக் காணுகின்றான்)
“கணக்குப்பிள்ளை ஸ்டூடியோவுக்குப் போன் பண்ணி பின்னேரம் ஆறு மணிக்கு கமெராக்காரர் ஒருவர்ரை இஞ்சை கடைக்கு அனுப்பச் சொல்லும். அதோட அந்த பேப்பர் றிப்போட்டரையும் நான் தேடினதாகச் சொல் லும்” என்று சுந்தரம் சொல்லிக் கொண்டு போக கணக்குப்பிள்ளை தலையாட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன காணும், எல்லாத்துக்கும் தலையாட்டுறீர், சொன்னது எல்லாம் ஞாபகமே…!”
அதற்கும் தலையாட்டினார் கணக்குப்பிள்ளை.
“கொஞ்சம் பொறுத்து கந்தசாமியை கந்தவனத்தின்ரை புடவைக்கடைக்கு அனுப்பி அந்தப் பார்சலை எடுத்து வைத்திரும். நான் வீட்டைபோட்டு ஆறு மணிக்குக் கடைக்கு வர கமெராக்காரர், அந்தப் பார்சல் எல்லாம் ரெடியாக இருக்க வேணும்” என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார் சுந்தரம்.
சரியாக மாலை ஆறு மணிக்குக் காரில் மீண்டும் கடைக்கு சுந்தரம் வந்தபோது கமெராக்காரர், பார்சல எல்லாம் ரெடியாக இருந்தன.
கமெராக்காரரும், பார்சலுடன் கணக்குப்பிள்ளையும் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.
(மாயை உணராதவன்தான் வாழ்க்கையையும், உலகையும் பெரிதாக நினைக்கிறான். சில பேரைப் பாருங்கள். தங்கள் பெயருக்கு முன்னால் பட்டங்களைச் சூட்டுவது பிடிக்கும். அடைமொழிகள், பட்டங்கள் ஆகா துங்க. நிலையில்லாத இந்த உடம்புக்கு இவை எல்லாம் எதற்கு. சாதாரண சண்முகம், மயில்வாகனம், சிவகாமி சாதாரண மனிதர்களாவே இருக்கட்டுமே. எதற்காகப் பட்டங்கள், அடைமொழிகள். உயிர் இருக்கும் வரைக் கும்தான் ஐயா உடலுக்குப் பெயர். உயிர் போய் விட்டால் பிரேதம்தானே. பிறகு ஏன் ஐயா பட்டங்களும், பதக்கங்களும், அடைமொழிகளும் மாய உடம்புக்கு இவை தேவை தானா…? மாயையின் தோற்றங்கள் அனைத்திற்கும் இகம் என்று பெயர். இதற்கு அப்பால் இருக்கும் பெரு நிலைக்கு பரம் என்று பெயர். இந்த மாயையில் கட்டுண்டு கிடப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அன்று. பரமனைச் சார்ந்திருந்து மாயையைக் கடந்து அப்பால் போவது தான் குறிக்கோள். இதனையே
“ஐய நின்னது அல்லது இல்லை
மற்று ஓர் பற்று வஞ்ச வேன்
பொய் கலந்தது அல்லது இல்லை
பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க
வந்து நின் கழல்களே
மெய் கலந்த அன்பர் அன்பு
எனக்கு ஆக வேண்டுமே.”
என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது ஐயனே எம்பிரானே, கண்ணில் மை தீட்டியுள்ள உமாதேவியாரின் வலப் பாகத்தில் இருப்பவனே பொய்யான உடல் வாழ்க்கையில் பற்று வைத்தால் நான் வஞ்சகன் ஆவேன். அப்படி நான் பொய்மையில் மூழ்கேன். மெய்ப் பொரு ளாகிய உன்னிடத்தே உன் அன்பர்கள் பற்று வைத்திருக் கின்றனர். நான் வேண்டுவதும் அப்பேரன்பேயாம். ஆகவே பரமனை நாடுவோம். மாயத்தைக் கடப்போம்)
கோயிலடிக்கு சுந்தரம் காரில் வந்து இறங்கியபோது பிரசங்கியாரின் பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. சிலர் பரபரப்புடன் வந்து சுந்தரத்தை வரவேற்றார்கள்.
கோயிலடியில் பிரசங்கத்தை ரசிக்கும் கூட்டத்தினரும் மற்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு விமர்சனம் செய்வோருமாகப் பலர் காணப்பட்டார்கள்.
பலர் புடைசூழ விமர்சனங்களைத் தாண்டிக் கொண்டு சுந்தரம் மேடையை அடைய பிரசங்கம் முடிந்தது.
“இப்போது எமக்குப் பிரசங்கம் மூலம் இனிய கருத் துக்களைச் சொன்ன திருவாளர்………….அவர்களுக்கு பிரபல வர்த்தகர், கொடைவளளல் சுந்தரம் அவர்கள் கதாப் பிரசங்க மாமேதை என்ற பட்டத்தை வழங்கி அன்பளிப்புச் செய்து பொன்னாடை போர்த்தி கௌரவிப் பார்” என யாரோ அறிவிக்க……..
அவர் அறிவித்த காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. சுந்தரத்துடன் வந்த கமெராக்காரர் படமெடுக்க ஆரம்பித்தார்.
– வீரகேசரி 16-11-1980.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.