கோழி மொட்டு கம்பெனி…
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 97

கோவையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், பல்லடத்திற்கு அருகில் சுக்காம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது ‘ஆரண்ய ஹாட்சரி’. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த முட்டை குஞ்சு பொரிப்பகத்தை (Hatchery) ஊர் பொதுமக்கள் என்ன பெயரில் அழைக்கிறார்கள் என்று கேட்டால் அதன் உரிமையாளருக்குச் சற்று கோபம் வரும். பொதுமக்கள் அதற்கு இட்ட பெயர் ‘கோழி மொட்டு கம்பெனி’. கொங்குப் பகுதி கிராமங்களில் முட்டைக்குப் பெயர் ‘மொட்டு’.
இங்கு மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிபவர்தான் டாக்டர் விக்ரம். அவருக்கு நிறுவனம் சார்பில் இலவச குடியிருப்பும், பல்வேறு இடங்களுக்குச் சென்று வர ஒரு காரும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மகிழுந்தை (கார்) ஓட்டும் சாரதிதான் சரவணக்குமார். பொதுவாகவே டாக்டர் விக்ரமுக்குக் குஞ்சு பொரிப்பகத்தில்தான் அதிக வேலை இருக்கும். அங்கு அவருக்கு உதவியாளராகச் சுப்பிரமணியம் பணியாற்றுகிறார்.
டிரைவர் சரவணக்குமார் அதிகம் பேசாதவர்; ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருப்பவர். ஆகவே, சுப்பிரமணியத்திற்கும் டாக்டர் விக்ரமுக்கும் இடையே தோழமை நன்றாகவே இருக்கும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
எப்பொழுதும் போலவே அன்றும் காலை ஆறு மணிக்கு டாக்டர் விக்ரம் குஞ்சு பொரிப்பகத்திற்கு வந்து சேர்ந்தார். வழக்கமாகவே பண்ணைக்குள் நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்த பின் உள்ளே செல்வதைப் போலவே, அவரும் கிருமிநாசினி அறைக்குள் நுழைந்து, கிருமிநாசினி தெளித்துக் கொண்டு உள்ளே சென்றார். தன்னுடைய வழக்கமான பணிகளான தடுப்பூசி போடுதல், பொரிக்காத முட்டைகள் அல்லது பலவீனமான குஞ்சுகளைப் பரிசோதித்து ஏதேனும் நோய்த்தொற்று உள்ளதா என்று அறிதல், முட்டை அடைகாக்கும் இயந்திரங்களின் (Incubators) வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தைக் கணினி மூலம் தொடர்ந்து கண்காணித்தல், முட்டைகளின் தரப் பரிசோதனை போன்றவற்றைச் சரிபார்த்துத் தன் அறைக்குள் நுழைந்தார்.
இந்த வேலைகளைச் செய்து முடிப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதன் பின்னர்தான் அவரும் சுப்பிரமணியமும் தொழிற்சாலைக்கு உள்ளே இருக்கும் உணவகத்திற்குச் சென்று காலை உணவைச் சாப்பிடுவது வழக்கம். இந்த மாதிரி நேரங்களில்தான் சுப்பிரமணியம் டாக்டரின் வாயைக் கிண்டுவார். அது சில சமயங்களில் வாய் துடுக்கு அல்லது வாக்குவாதமாக முடிந்தாலும், டாக்டருக்கும் இது மிகவும் பிடித்துப்போனது.
குடும்பத்தைப் பிரிந்து எங்கோ பணி செய்துகொண்டிருக்கிறவர்களுக்குச் சுப்பிரமணியன்கள் ஒரு வேடந்தாங்கல் தானே! இதை இழப்பதற்கு யாருக்குத்தான் மனம் வரும்?
“வணக்கம் டாக்டர்! இன்னைக்கு வடையா, ஆமை வடையா, அவிச்ச கடலையான்னு முதலிலேயே சொன்னால்தான் சூடாகக் கிடைக்கும்.”
“போய் சொல்லிட்டு வரப்போறியா சுப்பிரமணி?”
“எதுக்கு டாக்டர் அவ்வளவு தூரம் போகணும்? கம்பெனி தான் இலவசமா போன் கொடுத்திருக்குதே! ஒரு போன் அடிச்சு, ‘ஐயா வர்றாரு… எல்லாம் ரெடியா இருக்குதா?’ன்னு கேட்கலாம். நாம ஏன் நடந்து போகணும்?”
“என் பெயரை ஏன் யூஸ் பண்ற?”
“ஓ… ஓ… அப்படி நினைச்சிட்டீங்களா? ‘ஐயா’ என்று சொன்னது ஐயா சுப்பிரமணியமே தவிர டாக்டர் விக்ரம் இல்லை, சரிங்களா?” – என்றவாறு இன்றைய தொடர்கதைக்கு முன்னுரை எழுதினார் சுப்பிரமணியம்.
அவர் உள்ளூரைச் சார்ந்தவர்; கோயம்புத்தூர் குசும்பு கொஞ்சம் அவரிடம் எப்பொழுதும் அதிகம் இருக்கும். கேட்டால், “இந்த வாய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாயும் நரியும் எப்பொழுதோ உன்னைத் தூக்கிக்கொண்டு போயிருக்கும்” என்று அவரின் அம்மா சுப்பாத்தாள் அவரிடம் சொன்னதாகச் சொல்வார். அதுவும் உண்மைதான், அரசியல்வாதி முதல் ஆசிரியர் வரை வாய்தானே முதலீடு!
இருவரும் அறையை விட்டு வெளியே வந்து உணவகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு முன்பே அங்குச் சரவணக்குமாரும் வந்து அமர்ந்திருந்தார். சரவணக்குமார் வழக்கமாக டாக்டர் சாப்பிடும் உணவுப் பண்டங்களைத் தயார் செய்து வைக்குமாறு உணவகத்தின் காப்பாளரிடம் சொல்லியிருந்தார். அதனால் இன்று ஆமை வடை இல்லை.
உணவு பரிமாறப்பட்டது. “என்ன சுப்பிரமணி, முட்டை பப்ஸ் (Egg Puffs) இல்லாமல் வெறும் இட்லி, வடை சாப்பிடுகிறாய்? ஏன், சைவத்திற்கு மாறிவிட்டாயா?” என்று டாக்டர் விக்ரம் வம்பை ஆரம்பித்தார்.
“இல்லைங்க டாக்டர், நேத்து ஒரு கனா கண்டேன்…”
“கனவா? அதுல என்னப்பா ஸ்பெஷல் கனா?”
“அது வந்துங்க… தினம் ஆயிரக்கணக்கான முட்டையையும் குஞ்சையும் பார்த்துட்டு இருக்கேனா, அதனால நேத்து ராத்திரி கனவுல ஒரு முட்டை வந்து என்கிட்ட பேசுச்சுங்க. அதைக் கேட்டதிலிருந்து மனசு என்னமோ மாதிரி ஆயிப்போச்சுங்க டாக்டர். அதான் இன்னைக்கு முட்டை வேண்டாம்னு நினைச்சேன்.”
“என்னது, முட்டை பேசுச்சா?”
“ஏனுங்க… பேசாதுங்களா? உங்க கனவுல சில்க் ஸ்மிதா வந்தா ‘அப்படி இருக்காங்க’, சந்திரபாபு வந்தார் ‘இப்படி இருக்காங்க’ன்னு சொல்றீங்க. நாங்க ஏதாச்சும் எப்பயாச்சும் உங்களைக் கேள்வி கேட்டு இருக்கோமா? அது என்னங்க டாக்டருக்கு ஒரு நியாயம், கம்பவுண்டருக்கு வேற நியாயமா? எந்த ஊர்ச் சட்டமுங்க இது?” என்றவாறே, டாக்டர் விரும்பும் நையாண்டியை ஆரம்பித்தார் சுப்பிரமணி.
கடந்த ஒரு சில மாதங்களாகச் சுப்பிரமணி ஒரு சிறிய பதவி உயர்வுக்காகக் கால்நடை மருத்துவத்தைப் பற்றி கொஞ்சம் படித்துக்கொண்டிருக்கிறார். சென்ற வாரம் ‘In-ovo sexing’ (முட்டைக்குள் பாலினத்தைக் கண்டறியும்) ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தார். இந்தத் தொழில்நுட்பம் முட்டை பொரிப்பதற்கு முன்பே, அதற்குள் இருக்கும் குஞ்சு ஆண் அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது. முட்டையை உடைக்காமல் இமேஜிங் (Imaging) மூலமாக அல்லது முட்டையின் உள்ளே இருக்கும் திரவத்தைச் சிறிதளவு எடுத்து ஹார்மோன்களைப் பரிசோதிப்பதன் மூலம் பாலினத்தைக் கண்டறிகிறது. முட்டை அடை வைக்கப்பட்டு 9 முதல் 12 நாட்களுக்குள் ஆண் முட்டைகள் கண்டறியப்பட்டுத் தனியாகப் பிரிக்கப்படுகின்றன.
கோழிப்பண்ணைகளில் ஆண்களுக்குச் சற்று மரியாதை குறைவுதான். அவர்கள் முட்டையிடுவதில்லை (ஈனுவதில்லை). ஆகவே, அந்த ஆண் குஞ்சுகளைப் பிறப்பதற்கு முன்பே கொன்றுவிடுகிறார்கள். ‘ஆண் சிசுக்கொலை’ என்று பாரதிராஜா இருந்திருந்தால் ஒரு படமே எடுத்திருக்கக்கூடும்; பாவம் அந்த ஆண் முட்டைகள்!
சமீபகாலமாக ஆண் முட்டைகளை அழித்துப் புரதச்சத்துள்ள விலங்குத் தீவனங்கள் தயாரிப்பதைச் சர்வதேச நாடுகள் விரும்புவதில்லை. ஆகவே, இவை கருவிலேயே அழிக்கப்படுகின்றன. தற்போது சில சர்வதேச பிராண்டுகள் குஞ்சுகளை அழிக்காத முட்டைகளை (No-kill eggs) சூப்பர் மார்க்கெட் அலமாரிகளுக்குக் கொண்டு வந்துள்ளன. இந்த முட்டைகளுக்கு அதிகமான விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதைப் பற்றிச் சுப்பிரமணி டாக்டர் விக்ரமிடம் விவாதித்திருந்தார். அதனால் சுப்பிரமணிக்குக் கனவில் முட்டை வந்ததை நாமும் நம்புவோம்.
“சரி சுப்பிரமணி, கனவில் வந்து முட்டை என்ன சொல்லுச்சு?”
“அது வந்து டாக்டர், அந்த முட்டை ஒரு பாட்டு பாடுச்சு…”
“பாட்டா? என்ன பாட்டு?”
“என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே… கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேன்! தலை எழுத்து என்ன, என் முதல் எழுத்து என்ன சொல்லுங்களேன்… அப்படின்னு பாடுச்சு டாக்டர்.”
“இது என்ன பாடல்? புதுக் கதையா இருக்குது!”
“உண்மைதானுங்க, நம்புங்க. பாடாமல் என்ன? நான் சொல்றது உண்மைதான் டாக்டர்… உண்மை, உண்மையான உண்மை! உங்களுக்கு டாக்டர் அறிவொளி பாணியில்தான் இதுக்குப் பதில் சொல்லணும். அதான் உண்மையான உண்மை.”
“அதென்னப்பா உண்மையான உண்மை?” சரவணக்குமாருக்கு வியப்பு மேலிடக் கேட்டே விட்டார்.
“ஆமாங்க, உண்மை வந்து மூன்று வகையாக இருக்குது. ஒண்ணு பொதுவான உண்மை, இரண்டாவது பொய்யான உண்மை, மூணாவது உண்மையான உண்மை. விளக்கம் தரட்டுங்களா?”
“அடேங்கப்பா… விளக்கமா?”
“இருங்க, இந்த ரெண்டு இட்லியைச் சாப்பிட்டுட்டு அப்புறம் பேசுவோம். இட்லி வேற சூடு ஆறிப்போகுது” என்றவாறு இருவரும் இட்லி, வடை சாப்பிட்டு முடித்தனர். வழக்கமாகவே காபி வருவதற்குச் சற்று நேரம் ஆகும். இந்த நேரத்தில் உண்மையைப் பற்றிச் சுப்பிரமணி விளக்கத் தொடங்கினார்.
“இந்த உலகம் நிலத்தாலும் தண்ணீராலும் ஆனது என்பது பொதுவான உண்மை, சரிங்களா?”
“சரி…”
“ஆனா, முக்கால் பாகம் தண்ணீராலும் கால் பாகம் நிலத்தாலும் ஆனது என்று பொதுவாகவே எல்லோரும் சொல்கிறார்கள். இது பொய்யான உண்மை. உலகம் எழுபது சதவீதத்திற்கு மேல் தண்ணீராால் சூழப்பட்டுள்ளது என்பதுதான் அந்தப் பொய்யான உண்மை.”
“சரி… அப்புறம்?”
“நீங்க ஒரு பொருளைக் கடலில் கொண்டு போய் போட்டால்… கரைக்கு அருகில் போட்டால் அலை கொண்டு வந்து கரையில் சேர்க்கும். நடுக்கடலில் போட்டால் அது கடலின் அடியில் இருக்கும் நிலத்தில்தான் போய் அமரும். அப்படி என்றால் உலகம் முழுவதும் நிலத்தால் மட்டுமானது என்பதுதானே உண்மையான உண்மை!”
“அப்பா சுப்பிரமணி, போதும்!”
சுடச்சுடக் காபி வந்தது. மூவரும் காபி சாப்பிட்டு முடித்த பின் அலுவலகம் நோக்கித் திரும்பி நடந்து வந்தார்கள்.
“சரி, இதோட மீதி கதையை நாளைக்குச் சொல்லு. நாளைக்கும் இன்ட்ரஸ்டிங்கா அந்த நாள் போகணும் இல்ல?” என்றவாறே அவரவர்கள் தங்களுக்கு இட்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் கலைந்து சென்றார்கள்.
மறுநாள் காலை உணவகத்தில்….
முட்டை என்ன சொல்லுச்சுன்னா , டாக்டர் ,”அண்ணா, இது உங்களுக்கே நியாயமா சொல்லுங்க? தினம் ஆயிரக்கணக்கான முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. ஆனால், அங்கே ஒவ்வொரு நாளும் எங்க ஆளுங்க ஒருசில பேரோட இதயம் ‘லப்-டப், லப்-டப்’னு வழக்கத்துக்கும் அதிகமா துடிக்குது, உங்களுக்குத் தெரியுமா?
வெளியே போற உலகம் எங்களுக்கானது இல்லை அப்படிங்கிறது அந்த ஒருசில பேருக்கும் (ஆண் குஞ்சுகளுக்கும்) தெரியும். ஏன்னா, இங்க ஆண் குஞ்சுகளுக்குப் பிறந்த அன்னைக்கே சாவுதான்! அதுங்களை ‘கல்’ (Cull) பண்ணி, அரைக்கும் இயந்திரத்தில் தள்ளிவிடுவாங்க. ரெக்கை முளைக்கிறதுக்கு முன்னாடியே கதையை முடித்துவிடுவார்கள். இது என்ன அண்ணா நியாயம்?
எங்களுக்காகத்தான் அந்தப் பாட்டு எழுதினாங்களோ… ‘என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே… கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேன்!’ எங்க தலையெழுத்தைப் பார்த்தீங்களா அண்ணா?
டாக்டர், இதைக் கேட்டதற்குப் பின்னால் எனக்குத் தூக்கமே வரவில்லை. அது எனக்கே நியாயமாப் படுது, உங்களுக்கு எப்படி?” என்றார் சுப்பிரமணியம்.
இதைக் கேட்ட டாக்டர் விக்ரமுக்குக் கொஞ்சம் தலைசுற்றியது. ‘விஞ்ஞானம் ஒரு சராசரி மனிதனை எந்தெந்த விதத்தில் ஆட்கொள்கிறது!’ என்று வியந்தார்.
சரி. எதுக்கும் யோசிச்சு நாளைக்கு ஒரு பதில் சொல்கிறேன் என்றவாறே டாக்டர் அன்றைய விவாதத்தை முடித்தார்.
இதற்கு என்ன செய்யலாம் என்று இரவு முழுவதும் யோசித்தார் . புதிய வழிகள் பற்றி ஒரு மீள் வாசிப்பு செய்தார் ..
அடுத்த நாள் ..
“சுப்பிரமணி, நீ சொல்றது நியாயம்தான். நான் இந்த மாசம் நடக்கப்போற ‘போர்டு மீட்டிங்’ல (Board Meeting) மரணங்கள் இல்லாத முட்டைகளைத் (No-kill eggs) தயாரிப்பதற்கு ஒரு புரொபோசல் (Proposal) கொடுக்கப்போறேன். அதுதான் ‘In-ovo sexing’ தொழில்நுட்பம். நீ கூட இதைப் பத்திப் படிச்சிருப்பியே… இந்த மெத்தட் மூலமா முட்டை பொரிவதற்கு முன்பே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிடலாம். ஆண் முட்டைகளை முன்கூட்டியே பிரித்து, அதைக்கூடப் பதப்படுத்தி மற்ற விலங்குகளுக்குப் புரதச்சத்துள்ள தீவனமாகப் பயன்படுமாறு அனுப்பிவிடலாம். இனிமே எந்த ஒரு ஆண் குஞ்சும் பிறந்து, அந்த அடுத்த நிமிஷமே சாக வேண்டிய அவசியம் வராது, சரியா?”
அடுத்த சில மாதங்களில், அந்தப் பண்ணையின் முட்டைகள் சர்வதேச பிராண்டுகளின் லேபிள்களோடு, ‘மரணங்கள் இல்லாத முட்டைகள்’ என்ற பெருமையோடு சூப்பர் மார்க்கெட் அலமாரிகளுக்குச் சென்றன.
அடுத்த நாள் சுப்பிரமணியத்தின் கனவில் அந்த முட்டை மீண்டும் வந்து நன்றி சொல்லி இருக்குமா?
“அடுத்த நாள் சுப்பிரமணியத்தின் கனவில் அந்த முட்டை வந்ததா என்பது தெரியாது. ஆனால், அந்த இரவு, டாக்டர் விக்ரமுக்குத் தூக்கம் வரவில்லை.”
தொடர்புள்ள சிறுகதைகள்
மலை வாழை அல்லவோ கல்வி
எஸ்.மதுரகவி
August 4, 2026
பிணவறைக் கோபுரங்கள்!
மா.சித்திவினாயகம்
August 4, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
August 4, 2026