கொலைப்பித்தன்






(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1
கோடித் தீவு

சுற்றிலும் ஹோவென்ற கடல் இரைச்சல் கேட்டது.
அதன் நடுவே அனாதியான தீவு!
அங்குள்ள நிர்மானுஷ்யமான மலையின் உச்சியை நோக்கி, செல்லையா மெதுவாக ஏறிச் சென்றான்.
அவனது அழகிய முகத்திலும் வாலிப விழிகளிலும் சிந்தனை தேங்கி நின்றது.
பாதி நிலா அப்போதுதான் கீழ்த்திசையில் தலையை நீட்டி, எட்டிப்பார்க்கத் தொடங்கியது.
பொழுது விடிவதற்குள் செல்லையா அந்தக் கோடித் தீவை விட்டுப் புறப்படவேண்டும். அங்குள்ள அநாகரிகமான பழங்குடி மக்கள் அவனுக்குப் பரிவோடளித்த பிரிவுபசார விருந்தை அருந்தி, அவன் வெளியே வந்தான். உடனே என்னென்னவோ எண்ணங்கள் தோன்றி அவன் இதயத்தைக் குழப்பின. தனியே உட்கார்ந்து ஆர அமரச் சிந்தித்து ஒரு முடிவுக்குவரத் தீர்மானித் தான். அக்குன்றின்மீது ஏறினான்.
கோடித் தீவு என்பது, இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையி லுள்ள ஒரு சிறு தீவு. சுமார் 400 சதுர மைல் விஸ்தீரணமுள்ளது. அடர்ந்த வனங்களும் மலைகளும் நிறைந்தது. அதன் ஜனத் தொகை ஏறக்குறைய ஆயிரத்திருநூறு இருக்கலாம். காட்டு மிராண்டிகளைப்போல் தோற்றமும் களங்கமற்ற உள்ளமும் படைத்த அந்த மக்கள், பெரும்பாலும் வேட்டையாடியும் மீன் பிடித்துமே வாழ்க்கை நடத்தி வந்தனர்.
கடலில் அனாதியாகத் தனித்துக்கிடக்கும் அந்தத் தீவை நாகரிக உலகத்தோடு ஓரளவு தொடர்புபடுத்த, அந்தத் தீவின் ஒரு மூலையில், சிறிய ரேடியோ நிலைபமொன்றிருந்தது. அந் நிலையத் திற்கு மாற்றுச் சிப்பந்திகளையும் உணவுப் பண்டங்களையும் ஏற்றிக் கொண்டு, இந்திய அரசாங்கத்தினரால் அனுப்பி வைக்கப்படும் ஒரு நீராவிக் கப்பல், அங்கு மூன்று மாதங்களுக்கொருமுறை தான் வந்து போவது வழக்கம்.
குன்றின் உச்சியில் போய், தன் உள்ளங் கையை முகவாய்க் கட்டையில் அழுத்தியவண்ணம் உட்கார்ந்திருந்தான் செல்லையா. அத் தீவெங்கினும் தெள்ளிய பால் போன்ற நிலவை வீசி நின்றது
அரை வட்டச் சந்திரன். குன்றின் அடிவாரத்தில், கடந்த பன்னிரண்டு வருஷ காலமாக அவன் குடியிருந்த குடிசை யும், குறுங்காட்டின் ஊடே சென்ற ஓர் ஒற்றையடிப் பாதையும், அதற்கப்பாலுள்ள அந்தக் குக்கிராமமும் அவன் கண்ணெதிரே காட்சியளித்தன. அவனை இந்தியாவிற்குக் கொண்டு செல்வதற் காக வந்திருந்த சிறிய ஹைட்ரோ விமானமொன்று கடற்கரை யருகே நிறுத்தப்பட்டிருந்தது. தீவின் வேறொரு மூலை.பில், நெடுந் தூரத்தில் ஒரு நக்ஷத்திரம்போல் மினுக்கிக்கொண்டிருந்தது ரேடியோ நிலைப்பத்தின் விளக்கு.
முதன் முதலில் செல்லையாவும் அவன் தந்தையும் அத்தீவுக்கு வந்து சேர்ந்தபொழுது, அவன் ஒரு பத்து வயதுச் சிறுவனாபிருந் தான். அதன்பின் இப்போது பன்னிரண்டு வருஷங்களாகிவிட் டன. இந்த இடைக்காலத்தில், பெரும்பாலும் அங்குள்ள பழங் குடி மக்களைத் தவிர வேறு யாருடனும் அவன் பழகியறியான். அந்தச் சிறுவர்களுடன் விளையாடுவது, சண்டை போடுவது, காட்டில் வேட்டையாடுவது, கடலில் நீந்துவது, முத்துக் குளிப்ப வர்களுடன் சேர்ந்து ஆழ நீரில் நெடுநேரம் முத்துக் குளித்துப் பழகுவது, இவையே அவனது முக்கியப் பொழுதுபோக்குகளா யிருந்தன. வெயிலிலும் பனியிலும் காற்றிலும் கடலிலும் அடி பட்டு, வைரம்போல் உரமேறியிருந்தது அவன் உடம்பு எனினும், அவனது பரம்பரைச் சொத்துக்களாகிய மதி நுட்பமும் வசீகரத் தோற்றமும், அவ் வனவாசத்திலும் அவனைவிட்டு அகலாது நின்றன.
செல்லையாவின் தந்தை செந்தில் நாதர் ஒரு காலத்தில் சென்னைக் கல்லூரி யொன்றின் பிரின்ஸ்பாலாயிருந்தவர். மிக அடக்கமான மனிதர். அவர் அதிகமாகப் பேசியதையோ, சிரித் ததையோ, செல்லையா பார்த்ததில்லை. அவர் கோடித் தீவில் தங்கி யிருப்பதே ஒரு மர்மமாக இருந்தது. அவனுக்கு ஆங்கிலம், தமிழ் கணிதம் இம்மூன்றிலும் அவர்தான் ஓரளவு பயிற்சியளித்திருந் தார். இரண்டு வருஷங்களுக்கு முன்பு, அவனுக்கு ஒரு புதிய தோழன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் பழனியப்பன். அவ னும் செல்லைபாவைப்போல் தமிழ் நாட்டைச் சேர்ந்தவனே. பர்மாவுக்குப் போகும் வழியில், அவன் ஏறி வந்த கப்பல் கவிழ்ந்துவிடவே, அவன் மட்டும் ஒரு மரக்கட்டையைப் பற்றிக் கொண்டு கோடித் தீவின் கரைப் பக்கமாய் மிதந்து வந்தான். அவனுயிரைக் காப்பாற்றினான் செல்லையா. அதுமுதல் இருவரும் இணைபிரியா நண்பர்களானார்கள். இந்தியாவைப் பற்றியும், குறிப்பாகத் தமிழகத்தைப் பற்றியும் பழனியப்பனிடம் செல்லையா குடைந்து குடைந்து விசாரிப்பான். அப்போது அவனுக்குக் கிடைக்கும் சில அரைகுறைத் தகவல்களைத் தவிர, வெளியுலகத்தைப் பற்றி ஏதுமே அறியாதிருந்தான் அவ்வாலிபன்.
குன்றின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு, பன்னிரண்டாண்டு களுக்கு முன்னர் தான் விட்டுவந்த பழைய உலகை நினைவிற் கொண்டுவர முயன்றான் செல்லையா. ஜனப் பெருக்கமுள்ள நாகரிகத் தெருக்களும் கடைகளும், அவன் அகக் கண்முன் மங்க லாக வந்து மறைந்தன. ஒரு பெரிய வெள்ளை மாளிகையும், அதில் அவனோடு விளையாடித் திரிந்த சிறுமி யொருத்தியின் வடிவ மும், கனவில் கண்ட காட்சிகள்போல் தோன்றின. நாளைக் காலைபில் அந்த வெள்ளை மாளிகையை நோக்கி அவன் புறப்படப் போகிறான். அங்கு அவனுக்காக எத்தகைய எதிர்காலம் காத் திருக்குமோ?
எல்லாம் வெகு சுருக்காக நடந்துவிட்டன. திடீரென்று அவன் தந்தை உடல் நலிவுற்றார்; ஒரு மணி நேரத்திற்குள் இறந்துவிட்டார். சாகப் போகும் தருவாயில் அவர் கூறிய சில துன்பகரமான வார்த்தைகள், இன்னும் அவன் செவியில் எதிரொலித்துக்கொண்டிருந்தன.
“மகனே ! என் முடிவுகாலம் நெருங்கிவிட்டது. இது எனக் குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பே தெரியும். நீ தாயகம் போக விரும்பினால், ரேடியோ நிலையத்தின் மூலமாக என் பழைய நண் பரும் ஓவியருமான கிருஷ்ணமூர்த்திகுக் தகவல் அனுப்பு. அது சம்பந்தமான விவரங்களெல்லாம் தெளிவாக எழுதி ஒரு பைக் குள் போட்டு, அதோ அந்த மேஜையில் வைத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ஆலோசனையை நீ கேட்பதாயிருந்தால், அந்தக் கவரைக் கிழித்தெறிந்துவிட்டு, இந்தத் தீவிலேயே நீ தங்கி விடுவதுதான் உத்தமம் !
“உலகத்தைவிட்டு ஒதுங்கிக்கிடப்பதாய், அநாகரிகமாய்த் தோன்றினாலும் இந்தத் தீவில்தான் அமைதி உண்டு; ஆனந்தம் உண்டு; பயமற்ற இயற்கையான சாவு உண்டு! நாகரிக உலகத்தில் நாசகாரர்களின் தொகைதான் அதிகமிருக்கும்!”
இதற்கு என்ன பதில் சொல்வதென்றே செல்லையாவுக்குப் புரியவில்லை. அவன் தந்தையோ, தன் கண்களை மூடிய வண்ணம் சிறிது நேரம் மௌனமாய்க் கிடந்தார். பிறகு அவர் மறுபடியும் பேசினார்.
“செல்லையா, நீ போகத்தான் விரும்புவாய் என்பது எனக் குத் தெரியும். அதில் தவறொன்றும் இல்லை. மகராஜனாகப் போ. ஆனால் யாரையும் அதிகமாக நம்பாதே. முக்கியமாக உன் நண்பர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரு. ஏனெனில், உன்னை சுலபமாக மோசம் செய்யும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்குத்தான் அதிகம்!”
அவர் அன்று கூறிய அந்த வார்த்தைகளை செல்லையா இன்று ஆழ்ந்து சிந்தித்தான். இந்தியாவுக்குத் திரும்புவோமா வேண் டாமாவென்று ஊசலாடத் தொடங்கியது அவன் உள்ளம்.
பின்புறத்தே யாரோ வந்துகொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அடுத்த நிமிஷம் செல்லையாவுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் பழனியப்பன்.
பீப்பாய் போன்ற வயிறும், வழுக்கைத் தலையும், பருத்த உடலும், தாழ்ந்த நெற்றியும், அகலமான சப்பட்டை மூக்கும், பூனைக் கண்களும் வாய்ந்த அந்த விகார புருஷனைக் கண்டதும். செல்லையாவின் முகம் சிறிது விகசமடைந்தது.
“ஏன் செல்லையா, ஏதோ விசாரம் பிடித்தவன்போல் உட் கார்ந்திருக்கிறாய்?” என்றான் பழனியப்பன், தன் இயல்பான கனத்த குரலில்.
“ஆம், பழனி. நாளைக்கு நம் பயணத்தை ரத்து செய்து விடுவதென்றே சற்று முன்பு நான் முடிவு செய்துவிட்டேன். ஆனால் அது சரியல்ல. நான் போகத்தான் வேண்டும். அங்கு போய்ப் பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ளவேண்டியிருக் கிறது! ” என்றான் செல்லையா.
“அங்கு எல்லாமே உனக்குப் புதுமையாயிருக்கும், செல் லையா ! சினிமாக்கள், டிராமாக்கள், ஹோட்டல்கள், பெண்கள் இவற்றையெல்லாம் நீ ரொம்ப ரஸிப்பாய். அத்துடன், நீ ஒரு பெரிய பணக்காரனும் ஆகிவிடப்போகிறாய். உனக்குப் பிரிய மானதை யெல்லாம் நீ தடையின்றி அடையலாம். விமானத்தின் கேப்டன் சொன்னதைக் கேட்டாயல்லவா?”
“ஆம்; அங்கு என் தந்தையாருக்குச் சொந்தமான அளவற்ற ஐசுவரியங்கள் எனக்குக் கிடைக்கப் போவதாய் அவர் கூறினார். ஆனால் அவ்வளவையும் அங்கே விட்டுவிட்டு என் தந்தை ஏன் இங்கு வந்தார்? இத்தனை வருஷங்களாக இந்த அநாகரிகமான கோடித் தீவில் தங்கியிருந்தார்?” என்று கேட்டான் செல்லையா.
“அதுதான் எனக்கும் புரியவில்லை!” என்றான் பழனியப்பன்.
செல்லையா எழுந்து நின்றான். “நாளை நான் போகத்தான் போகிறேன். எனக்கு இந்தக் கோடித் தீவு சலித்துப்போய் விட்டது. நாளை நான் தமிழ் நாட்டை நோக்கி விமானத்திலே பறந்துவிடுவேன். அங்கே கமல வனத்திலே, அங்குள்ள அந்த வெள்ளை மாளிகையிலே, எனக்காக எத்தகைய அதிருஷ்டங் களும் ஏமாற்றங்களும் காத்திருக்கின்றன என்பதைப் பார்க்கத் தான் போகிறேன். என் நண்பர்கள் யார், விரோதிகள் யார் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவர்களை நான் எப்படிப் பகுத்தறிந்து கொள்வது ?”
“இப்போதே ஏன் அப்பா, விரோதிகளைப் பற்றிக் கற்பனை பண்ணிக்கொள்கிறாய்?” என்று சிரித்தான் பழனியப்பன். உனக்கோ வயது இருபத்திரண்டுதான் ஆகிறது. நல்ல முறுக் கான வாலிபம். ஏராளமான பணமும் கிடைக்கப் போகிறது. இனி எந்தெந்த வகைகளில் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க லாம் என்று சிந்திப்பதைவிட்டு…” என்று குரலை இழுத்தான் பழனியப்பன்.
“என் தகப்பனாரின் கடைசி வார்த்தைகளைத் தவிர, வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை”, என்றான் செல்லையா. “யாரையும் அதிகமாக நம்பாதே என்றார் அவர். தன் பகைவன் என்று அறியாமல், யாரையோ நண்பன் என்று நம்பி அவர் மோசம் போயிருக்கிறார்!”
“அதனாலென்ன?” என்று வெடுக்கெனக் கேட்டான் பழனியப்பன். “அதெல்லாம் பன்னிரண்டு வருஷங்களுக்கு முந்தி நடந்த பழைய கதை, அப்பா! அப்போது உன் தகப்பனாருக்குச் சில விரோதிகள் இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். அவர்கள் ளெல்லாம் இன்னுமா உயிருடனிருந்து உன் வருகையை எதிர் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்?”
“அப்படி அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். என்றே நான் விரும்புகிறேன்! அவர்களை நேருக்கு நேர் சக் திக்கவே நான் ஆசைப்படுகிறேன் ! என் தந்தை கோடித் தீவிலே வந்து பயந்து ஒதுங்கும்படியாக அவருக்கு ஜன்ம சத்ருக்களாக விளங்கியவர்களை நான் பழி தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். மகனிடமும் சொல்லத் தயங்கிய என் தந்தையைச் சுற்றியுள்ள மர்மங்களை அவருடைய மரணத்திற்குப் பிறகாவது நான் கண்டு பிடித்துவிட விரும்புகிறேன் !” என்றான் வீர உணர்ச்சி பொங்கிய செல்லையா.
அத்தியாயம் – 2
மாறாத வடு
சுற்றிலும் நாகரிகத்தின் இரைச்சல்!
ஜனக்கும்பல் அதிகமான இந்தியா தேசத்திலே, தமிழகத் திலே… ஒரு பங்களாவிலே….
“ஏண்டி பவானி, அவன் எப்படியடி இருப்பான்? கோடித் தீவிலிருந்து வரப்போகிறானே, அசல் காட்டுமிராண்டியாக இருப் பானோ? நம்மைப்போல சாதம், கறி, குழம்பெல்லாம் சாப்பிடு வானா, அல்லது காட்டு மிருகங்கள் மாதிரி, ஆடு கோழிகள்மேலே பாய்ந்து, கடித்து, பச்சையாய்ச் சாப்பிடுவானா ? ‘ என்று சிரித் தாள் நாகரிக யுவதியான லலிதா.
“எனக்கு இன்னொரு சந்தேகமடீ,’ என்று ஆரம்பித்தாள் பவானி “அந்தத் தீவிலே ஸலூனும் இருக்காது; ஸேப்டி ரேஸரும் கிடைக்காது. ஒரே கரடிக் குட்டி மாதிரி அவன் இங்கே வந்து காட்சியளிக்கப் போகிறான்! நீயும் நானும் பயந்து அலறப் போகிறோம்!”
“போடி ! நாமதான் நம்ப அப்பாவைத் தினசரி பார்த்துப் பழகிப்போயிருக்கிறோமே? இனி நிஜக் கரடியே வந்தாலும் நாம் பயப்படவா போகிறோம்?” என்று சிரித்தாள் குறும்புக்காரியான லலிதா தன்னுடைய இரட்டைச் சடையை அழகாகப் பின்னிக் கொண்டே.
இதையெல்லாம் கேட்டு மனத்திற்குள் சிரித்தவாறே அடுத்த அறையில் உடையணிந்து கொண்டிருந்தார் அப்பெண்களின் தந்தையாகிய ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
லலிதாவும் பவானியும் இரட்டைக் குழந்தைகள். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்தவர்கள். அவர்களை மிகவும் ஷ்கடப் பட்டு அருமையாக வளர்த்தார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. இப்போது இருவரும் தக்க பருவம் வாய்ந்த எழில் மங்கையராக விளங்கினர். தங்கள் தந்தையிடமே தமாஷ் பண்ணி அவரைத் திணற அடிப்பார்கள் அந்தக் குறும்புக்காரிகள். மகாவாயாடிகள்; ஆனால் நல்ல குணவதிகள்; பருவ அழகிகள்.
“ஏண்டி லலிதா! அவன் நம்மை நினைவு வைத்திருப்பானா? சிறு வயதில் பார்த்தது!” என்றாள் பவானி ஒரு பெருமூச்சோடு.
“என்னை நினைப்பு வைத்திருக்காவிட்டாலும் நிச்சயம் உன்னை நினைப்பு வைத்திருப்பானடி, பவானி! ஏனெனில் சதா நீதான் அவனைப்பற்றி நினைக்கிறாய்! கேள்வி கேட்கிறாய்! அதனால் அவனுக்கு அடிக்கடி புரைபோயிருக்கும்!” என்றாள் லலிதா. பவானி நாணத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.
இருவரும் ஒரு சி ய பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்து காலையுணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். வங்காளக் குடாக் கடலின் கருநீலப் பரப்பு, அவர்கள் கண்ணெதிரே கதிரவன் ஒளிக் கற்றைகளோடு கலந்து காட்சிபளித்தது. பக்கத்து அறை யின் கதவைத் திறந்துகொண்டு வெளிவந்தார் ஓவியர் கிருஷ்ண மூர்த்தி, கலைஞருக்கு உரிய வெண்ணிறத் தாடியைக் கை விரல் களால் கோதிக்கொண்டே.
“அடியே, அப்பாவைப் பார்த்தாயா? தாடி, மீசையெல் லாம் ஜோரா வாரி விட்டிருக்கிறாரடீ!” என்று கைகொட்டினாள் லலிதா.
“ஏன் அப்பா, அந்தத் தாடிக்குள்ளே யிருந்து ஏதாவது புதைபொருள் கிடைத்ததா? ஐந்தாறு நாளாய் என் பென்சில் கிளிப்பைக் காணோம்….” என்று கண்ணைச் சிமிட்டினாள் பவானி.
“சுத்தப் போக்கிரிக் குரங்குகள்! பெற்ற தகப்பனாச்சே, அவனைப் போய் நையாண்டி பண்ணலாமா என்ற ஞானம் கொஞ்சமாவது இருக்கிறதா?” என்று சிரித்துக்கொண்டே, அவர்கள் பக்கத்தில் வந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி,
கிருஷணமூர்த்திக்கு வயது ஐம்பதிருக்கும். பருத்த, ஆனால் உறுதி வாய்ந்த, சரீரம். எப்போதும் புன்னகை பொலிவுறும் களையான முகம். களங்கமற்ற நெஞ்சத்தைக் காட்டும் ஒளி படைத்த கண்கள். செல்லையாவின் தங்கையாகிய செந்தில் நாத ருக்கு அவர் அந்தரங்க நண்பராயிருந்தவர். செந்தில்நாதர் கோடித் தீவிற்குப் போய்விட்டபிறகு, கமலவனத்திலுள்ள அவரது ஆஸ்திகளனைத்தையும் ஓவியர் கிருஷ்ணமூர்த்திதான் பராமரித்து வந்தார். அது விஷயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர், செந்தில்நாதரின் குடும்ப வக்கீலாகிய லாயர் வேதாசலம்.
“பவானி! கோடித் தீவிலிருந்து செல்லையா விமானத்தில் வந்து மீனம்பாக்கத்தில் இறங்கிவிடுவான். நான் இன்னும் இருபது நிமிஷத்தில் புறப்பட வேண்டும் எனக்குச் சீக்கிரம் காபி கொண்டுவா,” என்று கூறியவாறே, மேஜைமேல் அடுக்கி வைக் கப்பட்டிருந்த அன்றைய காலைத் தபால்களை யெடுத்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. முதற் கடிதம் ஆயிற்று. இரண்டாவது கடிதமும் முடிந்தது மூன்றாவது கடிதத் தைக் கண்ணுற்றதும், அவர் முகமே மாறியது. அவரது செழித் தடர்ந்த புருவங்கள் சினத்தால் நெரிந்தன. அவர் எதிரே காபி யைக் கொண்டுவந்து வைத்தாள் பவானி. அவர் முகத்தைப் பார்த்ததும், அவளது இதழ்களில் குலவி நின்ற குறுநகை மறைந்தது.
“என்ன அப்பா அது? அந்த சமாச்சாரம் தானா?”
“ஆம்!” என்று வெறுப்போடு அக் கடிதத்தைத் தன் பெண்கள் பக்கமாக வீசினார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. சுத்த மாகத் தமிழ் டைப்ரைட்டர் மிஷினில் டைப் செய்யப்பட்டிருந்த அக் கடிதத்தின் வாசகம் பின் வருமாறு காணப்பட்டது :
“பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு, செந்தில்நாதன் என்பவன், தன் பெரிய தந்தையின் மகன் முத்தையா முதலியாரை, அவருடைய பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் படுகொலை செய்தான். போலீஸாரின் திறமைக் குறைவால், அந்தக் கேஸில் அவன் தண்டனையடையாமல் விடுதலையடைந்தான். ஆனால், அந்தக் கொலையினால் அடைந்த ஆஸ்தி அவனுக்கு சுகத்தை அளிக்கவில்லை. தன் அவமானத்தை மறைத்துக்கொள்வதற்காக, தொலைதூரத்திலுள்ள ஒரு தீவை நோக்கி அவன் ஓடிப்போனான். இப்போது அவன் இறந்துபோய் விட்டான். ஆனால் அவனுடைய மகன் ஒருவன் இருக்கிறானாம். தன் தந்தையின் பேரிலுள்ள மங்காத மாசை மறந்துவிட்டு, இந்தக் கமலவனத்திற்குத் திரும்பி வரத் துணிந்திருக்கிறானாம் அந்த மானங்கெட்ட மகன். வந்தால் அவனுக்குப் பணம் கிடைக்கலாம்; அதையொட்டி சில நண்பர்களும் கிடைக்கலாம். ஆனால், அவன் ஒரு கொலைகாரன் மகன் என்ப தையோ, அவன் கைப்பட்ட ஒவ்வொரு தம்பிடியும் கறைபடிந்த காசு என்பதையோ, இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் மறக்கவே மாட்டார்கள்!”
கடிதத்தின் அடியில் கையெழுத்து எதுவும் காணப்படவில்லை. அது ஒரே மாதிரி டைப் அடித்துப் பொதுஜனம் எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப்படும் சுற்றறிக்கை மாதிரி இருந்தது.
“என்ன அருவருப்பான மொட்டைக் கடிதம்!” என்று பெருமூச்செறிந்தாள் பவானி. இதை யார் எழுதியிருக்கக் கூடும்? ஒருவேளை இதுகிழட்டு வெறியன் கனகப்பன் வேலையாக இருக்குமோ?”
”சேச்சே! அவனில்லை. வெள்ளை மாளிகையிலிருந்து அவனை நான் விரட்டித் துரத்திவிட்டதிலிருந்து அவனுக்கு க்ஷத்திரம் அதிகமாகிவிட்டது என்பது வாஸ்தவன்தான். ஆனால் அவன் சுத்தப் பித்துக்கொள்ளிப் பயல்! இது யாரோ நன்கு படித்தவன் வேலை இக் கடிதத்தைக் கவனித்தாயா? ஒழுங்காக டைப் செய்யப்பட்டு, நகலெடுக்கும் யந்திரத்திலிருந்து வந்திருக்கிறது. இதைப்போல் நூற்றுக்கணக்கான நகல்கள் வெளியே அனுப்பப் பட்டிருக்கலாம்!” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
“பாவம், இதைச் செல்லையா பார்க்க நேர்ந்தால் ரொம்ப வருத்தப்படுவான்!” என்று உருக்கத்துடன் கூறினாள் பவானி. அவன் கோடித் தீவிலிருந்து வந்து இங்கே நம் வீட்டில் தங்கி யிருக்கும் இரண்டொரு நாட்களிலாவது, இம்மாதிரிக் கடிதங்கள் அவன் கைக்குக் கிட்டாமல் நாம் கவனித்துக்கொள்ளவேண்டும்!”
“அது சாத்தியமில்லை!” என்றார் கிருஷ்ணமூர்த்தி.”ஏனென் றால் அவன் இங்கே நம் வீட்டில் தங்கப் போவதில்லை!”
“தங்குவானென்று சொன்னீர்களே நேற்று?” என்று வெடுக்கெனப் பவானி கேட்டாள்.
“நேற்று சொன்னேன் ; அதற்கப்புறம் நிகழ்ச்சி நிரல் மாறி விட்டது. நானும் வக்கீல் வேதாசலமும் இப்போது பட்டிணத் துக்குப்போய் அவனை இங்கு அழைத்துவரப் போகிறோம். மத்தி யானம் நம் வீட்டில்தான் அவனுக்குச் சாப்பாடு. சாப்பிட் டானதும் அவன் தனக்குச் சேரவேண்டிய பங்களாவான வெள்ளை மாளிகைக்கே போய்விடுவான்….” என்று சொல்லிக் கொண்டே வந்த ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, ‘ஓ ! ஒரு முக்கிய மான விஷயத்தை உங்களிடம் தெரிவிக்க மறந்துவிட்டேனே !” என்றார் திடீரென்று.
“என்ன?”
“இப்போது நான் வெளியே போகப்போகிறேன்!- விமானத் திடலிலிருந்து செல்லையாவைக் கூட்டிவரத்தான். அந்தச் சமயத்தில், என்னைத் தேடி வேறொரு விருந்தாளி வருவார். அவரைச் செவ்வையாய் உபசரியுங்கள்!” என்றார்.
“யாரப்பா அவர்?” என்று ஆவலோடு கேட்டாள் பவானி-
“வேறு யாராக இருக்கப் போகிறார்? சித்திரக்கலையைப் பற்றிய ஒரு பத்திரிகை விமர்சகராயிருப்பார். அப்பாவுக்குத்தான் இத்தனை வயசாகியும் பெர்னார்ட்ஷா மாதிரி விளம்பரப் பைத்தியம் விட்டபாடில்லையே!” என்று குறும்பாய்ப் பதிலளித்தாள் லலிதா.
“அப்பப்பப்பா! என்ன உளறல்! என்ன உளறல்!!” என்று தன் கன்னப் பொட்டுக்களில் கையை வைத்து அழுத்திக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. “அட நான் பெற்ற அருமை அசடு களே ! வரப்போகிறவர் சித்திரக்கலை விமர்சகரல்ல….!”
“பிறகு?”
“இந்தியாவிலேயே மிகப் பிரசித்தி வாய்ந்த ஒரு துப்பறியும் நிபுணர்.”
“ஆ?” என்று வியப்படைந்தார்கள் சகோதரிகள் இருவரும். “அவர் எதற்காக அப்பா, இங்கு வருகிறார்? இந்த விஷமக் கடிதங்களை எழுதுவது யார் என்பதைக் கண்டுபிடிக்கவா?” என்று கேட்டாள் பவானி.
“அதுமட்டுமல்ல; பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு முத்தையா முதலியாரைக் கொலை செய்தவன் யாரென்பதையும் அவர் கண்டுபிடிக்கப் போகிறார்!”
“அது எப்படியப்பா முடியும்…?” என்று ஆரம்பித்தாள் லலிதா.
“துப்பறியும் கேசவனால் முடியாதது எதுவுமே இல்லை!” என்று முடித்தார் கிருஷ்ணமூர்த்தி.
“துப்பறியும் கேசவனா?” என்று வாயைப் பிளந்தாள் லலிதா.
“ஆமாம் அவர் முதன் முதலாகச் சந்திக்கவரும் சமயத்தில் நான் வீட்டில் இல்லாமலிருப்பது வருந்தக்கூடிய விஷயந்தான்! அது அவர் மனதில் படாதபடி நீங்கள் தான் அவரை நன்றாக உபசரிக்க வேண்டும்! அத்துடன் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை யெல்லாம் அவரிடம் ஒளிக்காமல் சொல் லுங்கள்!” என்று ஓவியர் கிருஷ்ணமூர்த்தி விமானத் திடலுக்குப் புறப்பட்டார்.
“அடியே ! துப்பறியும் கேசவன் எப்படியடி இருப்பார் ?” என்று ஆவலோடு லலிதா கேட்டாள்.
“அடியே! கோடித் தீவிலிருந்து வரப்போகும் செல்லையா எப்படிக் காட்டுமிராண்டியாக இருப்பான் என நான் பார்க்கிறேன் ! நீ கேசவன் எவ்வளவு பெரிய கொம்பேறி மூக்கனா யிருப்பார் எனப் பாரடி !” என்று சிரித்தாள் பவானி.
அத்தியாயம் – 3
பணமும் பழியும்
கம்பீரமான ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் வண்டியைக் கிருஷ்ணமூர்த்தியின் பங்களா வாசலில் நிறுத்தி விட்டுப் புன் சிரிப்புடன் கீழே இறங்கினார் துப்பறியும் கேசவன். அவரைக் கண்டதும், தாழ்வாரத்தில் துப்பறியும் நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த லலிதா, சட்டென்றெழுந்து வாசற் படிக்கு வந்து அவரைப் புன்முறுவலுடன் வரவேற்றாள். அவள் பருவ உடலில் பொங்கி வழியும் மினுமினுப்பு முழுதும் அவளு டைய மைதீட்டிய விழிகளில் அவல் குறுகுறுப்பாகப் பிரகாசித்தது.
“நீங்கள்தான் மிஸ்டர் துப்பறியும் கேசவனா ?” என்று அவரை ஏற இறங்கப் பார்த்தபடியே கேட்டாள் லலிதா.
“ஆம்,” என்று சற்று புன்னகையோடு அவர் தலையை ஆட்டினார்.
“உங்களைப் பார்த்தால் ஒரு துப்பறியும் நிபுணர் மாதிரித் தோன்றவில்லையே ?” என்று சிரித்தாள் லலிதா. கேசவனின் ரோல்ஸ்ராய்ஸ் காரை வியப்போடு நோக்கின அவளுடைய கருவிழிகள். “இது உங்களுடைய சொந்தக் கார்தானா? அல்லது…. இரவலா ?” என்று அவள் குறும்பாகக் கண்ணைச் சிமிட்டினாள்.
“இரவலில்லை! இதை நான் திருடிக்கொண்டு வந்திருக்கிறேன்! தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன்.
இதற்குள், எங்கேயோ வெளியே சென்றிருந்த பவானியும் வந்து சேர்ந்தாள்.
“வாருங்கள் உள்ளே. இவள் என் சகோதரி. பெயர் பவானி. இவளோடு நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். உங்களுக்கு நேரம் போவதே தெரியாது ! உயிர் போவதுகூடத் தெரியாது! நான் இரண்டே நிமிஷத்தில் காபி போட்டுக்கொண்டு வருகிறேன்!” என்று கூறிக்கொண்டே சமையற்கட்டை நோக்கி மான்குட்டி போல் துள்ளி ஓட முயன்றாள் லலிதா.
“அவளுடைய அகராதியில் இரண்டு நிமிஷம் என்பது இரண்டு மணி நேரம் என்று அர்த்தம்! அவள் தயாரித்துக் கொண்டு வரும் காப்பியைச் சாப்பிட்டால் உங்களுக்கு உயிரே போய்விடும்!” என்று சிரித்தாள் பவானி.
“துப்பறியும் கேசவனின் உயிர் போய்விட்டால் அப்புறம் அந் தக் கொலையைக் கண்டுபிடிக்க இன்னொரு துப்பறியும் கேசவன். பிறக்கமாட்டான் ! மேலும் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த கொலையைத் துப்பறிந்து கண்டுபிடிக்க உங்கள் அப்பா விற்கு வேறு ஆசாமியும் அகப்படமாட்டான்….! சரி; லலிதா! நீ காபி போட்டுக் கொண்டு வா! அதில் விஷம் கலந்திருந்தாலும் பரவாயில்லை!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன்.
“இந்த லலிதா, உங்கள் உயிரைக் கவர காபியில் விஷம் வைக்க மாட்டாள்! கண்ணில்தான் விஷம் வைப்பாள்! உங்களைப் பார்க்க வேண்டும் என்று இவளுக்கு நிறைய ஆசை!” என்றாள் பவானி.
“இவளுக்குக் கோடித்தீவு காட்டுமிராண்டியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை!” என்று லலிதா ஓடிவிட்டாள்.
தாழ்வாரத்தில், கேசவனும் பவானியும் எதிரெதிரே இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
“அப்பா உங்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லச் சொன்னார். நாங்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் உங்களுக்குச் சொல்லிவிடுகிறோம். அல்லது, உங்களுக்கு ஏற்கெனவே எல்லாம் தெரிந்திருக்குமானால்….” என்று நிறுத்தினாள் பவானி.
“எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது !” என்றார் துப் பறியும் கேசவன். “உன் தந்தை எனக்குக் கடிதம் எழுதினார். பிறகு டெலிபோனிலும் பேசினார். யாரோ சில விஷமமான கடிதங்களை எழுதியிருக்கிறார்களாம். அதையும், சுமார் பன்னி ரண்டு வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலையையும் துப்புத் துலக்குமாறு உங்கள் அப்பா என்னைக் கேட்டிருந்தார். இவ்வி ரண்டு விஷயங்களும் ஏதோ ஒரு தீவிலிருந்து இன்று இங்கே திரும்பிவரப் போகும் ஒரு வாலிபனுக்குச் சம்பந்தப்பட்டவை யெனவும் அவர் கூறினார்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“ஆம்; அவன் பெயர் செல்லையா. அவனை அழைத்து வருவதற்காகத்தான், எங்கள் அப்பாவும் வக்கீல் வேதாசலமும் பட்டிணத்துக்குப் போயிருக்கிறார்கள். சற்று நேரத்தில் எல் லோரும் இங்கு சாப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்!” என்ற பவானி, “அதிருக்கட்டும். பன்னிரண்டு வருஷங்களுக்கு முந்தி நடந்த முத்தையா முதலியாரின் கொலையை நீங்கள் கண்டுபிடித்து விட முடியுமா?” என்று சவால் கேட்டாள்.
“இனிமேல் நடக்கப்போகிற கொலையைக் கண்டுபிடிப்பதை விடப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த கொலையைக் கண்டுபிடிப்பது சுலபந்தான்!” என்று கூறினார் துப்பறியும் கேசவன்.”இருந்தாலும் கொஞ்சம் கஷ்டந்தான். நாம் சிறிது முயற்சி செய்வதில் தவறில்லையல்லவா? உன் அப்பாவின் கடிதம் கிடைத்தவுடன், நான் கோர்ட்டுக்குப் போய் பழைய கேஸ் கட்டுகளைப் புரட்டிப் பார்த்தேன். உண்மையாகவே, அந்தக் கேளில் கொலையுண்ட முத்தையா முதலியாரின் சிற்றப்பா புதல்வரான செந்தில்நாத முதலியார், அதாவது செல்லையாவின் தந்தை விடுதலையடைந்தது மிக மிக அதிருஷ்டவசந்தான். ஒன்று ஜூரர்கள் மகாபுத்திசாலிகளாக இருந்திருக்கவேண்டும்; அல்லது, அவர்களைச் சுத்த முட்டாள்கள் என்றே தீர்மானிக்கவேண்டும்!”
“அப்படி யென்றால் என்ன அர்த்தம்?”
“அதை விளக்கிச் சொல்வது சற்று சிரமமான காரியம். அதாவது, சாட்சிகளின் வாக்கு மூலங்களை நாம் படிக்கும்போது, அவர்கள் கூறிய வார்த்தைகளைத்தான் நாம் பார்க்கமுடியுமே தவிர, அந்த வார்த்தைகளின் தொனிபையோ, பாவத்தையோ, நாம் யூகிக்க முடிவதில்லை சில சமபங்களில், குற்றவாளியின் மீது ஒருவித அனுதாபமும், பிராஸிகூஷன் தரப்பு சாக்ஷிகள்மீது வெறுப்பும் ஜூரர்கள் மனத்தில் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப் போது அவர்கள் கூறும் தீர்ப்பானது, சாக்ஷிபங்கள் அனைத் திற்கும் முரண் பட்டாற்போல் காணப்படும். இந்தக் கேஸில்கூட, விசாரணை பெல்லாம் முடிந்து நீதிபதி ஜூரர்களுக்கு விளக்கிக் கூறும் தருவாயில், சாட்சியங்களை உத்தேசித்து அவர் குற்ற வாளிக்குப் பாதகமாகவே பேசவேண்டிய நிமித்தம் ஏற்பட்டிருப் பினும், குற்றவாளிக்குச் சாதகமாகவே ஜூரர்கள் பேசியிருக் கிறார்கள். ஆனால், நீ அப்போது இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத குழந்தையாய் இருந்திருப்பாய்!”
“ஆம்,” என்று ஒப்புக்கொண்டாள் பவானி. “ஆனால் இந்தக் கமலவனத்திலுள்ள பொதுமக்களில் பெரும்பாலோர், செந்தில்நாதரே உண்மைக் குற்றவாளி பென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் அப்பா ஒருவர்தான் அப்படி நினைப்பதில்லை!” என்றாள் மேலும் அவள்.
“அப்படித்தான் உன் அப்பாவும் சொன்னார். மேலும் முத்தையா முதலியாரின் மரணத்தால் அவருடைய சிற்றப்பா மகனான செந்தில்நாத முதலியார் ஒரு பெரிய ஜமீனுக்கு அதிபதி யாக நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஜமீனைப் பற்றிய விவரங்கள் உனக்குத் தெரியுமா?”
“உண்மையில் அது ஒரு ஜமீனேயல்ல!” எனத் தொடங் கினாள் பவானி. “ஏனெனில், ஜமீந்தார்களுக்கெல்லாம், நிலத் தின் மேல்வாரத்தில் மட்டும்தான் உரிமை பிருந்தது. பிற்காலத்தில் அதையும் அரசாங்கம் பறித்துக்கொண்டுவிட்டது. ஆனால், இந்தச் சொத்துக்கள் இருவாரப் பாத்தியதையோடு கூடியவை. சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு, ரங்கநாயகியம்மாள் என்ற ஒரு கிழவிக்கு அவை சொந்தமாயிருந்தன. அவளுக்குக் குழந்தை யில்லை; ஆனால் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். அம்மூவரும் ரங்கநாயகியம்மாளுக்கு முன்பே காலமாகி விட்டனர். எனினும், அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தன. காலஞ்சென்ற முத்தையா முதலியார், செந்தில்நாத முதலியார் இருவரும், ரங்கநாயகியம்மாளது சகோதரர்களின் பிள்ளைகள். கிழவியின் சகோதரிக்கு, பத்மாவதியென்று ஒரு பெண்ணுண்டு. இம் மூவருக்கும் பகிர்ந்து கொடுப்பதானால் சொத்து சிதைந்து விடுமே யென்று, ரங்கநாயகியம்மாள் பயந்தாள். அதற்காக ஒரு யுக்தி செய்து, தான் இறக்கும் தருவாயில், அவள் ஓர் உயில் எழுதி வைத்தாள். அந்த உயிலின்படி, அவள் இறந்து ஐம்பதாண்டுகள் முடிவடையும் வரையில், அந்தச் சொத்துக்கள்மீது யாருக்கும் பரிபூரண பாத்யதை கிடையாது. ஆனால், அதன் வரு மானத்தை மட்டும் முத்தையா முதலியார் அனுபவித்துக்கொள்ள லாம். முத்தையா முதலியாரும் வார்சின்றி இறந்துவிட்டால், அது செந்தில்நாதரை வந்தடையும். செந்தில்நாதரும் மனைவி மக்களின்றி இறக்க நேர்ந்தால், பத்மாவதியும் அவள் வார்சு களும் சொத்துக்களின் பாத்யதையைப் பெறுவார்கள். ஆனால், முத்தையா முதலியார், செந்தில்நாதர், பத்மாவதி இம்மூவருமே, தமக்கு இஷ்டப்பட்ட நபர்களுக்கு சொத்தின் உரிமையை உயில் எழுதிக் கொடுத்துவிடலாம். அப்படி உயில் மூலம் அல்லது வேறு விதமாக அதை அடைபவர்கள், குடும்பத்துக்கு அன்னியமானவர் களாகவோ, ஏதேனும் கிரிமினல் வழக்கில் தண்டனையடைந்தவர் களாகவோ, அல்லது தண்டனையடைந்தவர்களின் வார்சுகளா கவோ இருக்கக்கூடாது என்பது ஒரு முக்கியமான நிபந்தனை!”
“இந்தமாதிரி உயில்களைச் சில பெரிய குடும்பங்களில் நான் பார்த்திருக்கிறேன்!” என்றார் கேசவன். “பாகப் பிரிவினையால் சொத்துக்கள் சிதறிச் சிறுத்துவிடாமலும், குடும்பத்தைவிட்டு அவை பராதீனமாகிவிடாமலும், தீயவர்கள் கையில் அவை சிக்கி விடாமலு மிருப்பதற்காகவே இப்படிப்பட்ட உயில்கள் எழுதப் படுகின்றன. அதிருக்கட்டும்; அந்த உயிலில் குறிப்பிட்ட ஐம்பது வருஷத் தவணை எப்போது முடிவடைகிறது?”
“இன்னும் நான்கு மாதங்களில்!” என்றாள் பவானி. “அதற் கப்புறம், சுமார் ஒரு கோடி ரூபாய் விலை மதிப்புள்ள அந்தச் சொத்துக்கள் எல்லாம், செல்லைபாவின் பரிபூரண சுவாதீனத் திற்கு வந்து விடும்”
“அதாவது அதற்குள் அவன் சிறைக்குள் அனுப்பப்படாம லிருந்தால்,” என்று குறுக்கிட்டார் துப்பறியும் கேசவன்.
“அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் பவானி.
“வேறொன்றுமில்லை. அந்த உயிலின் ஷரத்து அப்படி யல்லவா? அதற்காகச் சொன்னேன். அப்படியானால் முத்தையா முதலியாருக்கு சந்ததி இல்லையல்லவா?”
”இல்லை! மனைவியும் இல்லை! கட்டினவனுக்கு ஒரு பெண் ஜாதி, கட்டாவிட்டால் பல பெண் ஜாதிகள் என்று நினைக்கக் கூடியவர் முத்தையா முதலியார் ! ஆனால் செந்தில்நாதர் உத்தமர். அவருக்குச் செல்லையா பிறந்து குழந்தையாக இருக்கும்போதே மனைவி இறந்துவிட்டாள்! இன்னொரு வாரிசான பத்மாவதிக்கு மஞ்சுளா என்று ஒரு புத்திரி உண்டு. இருவரும் உயிரோடிருக்கிறார்கள்.”
“அது போகட்டும். செந்தில்நாத முதலியார், முத்தையா முதலியார் இவ்விருவரது குணாதிசயங்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன்.
” ஏதோ கேள்விப்பட்டவரையில் சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்தாள் பவானி.
“செந்தில்நாதர் ஒரு பெரிய படிப்பாளியாம். பரம சாது. மகா சங்கோஜ குணமுடையவர்.. ஆனால் மிக வைராக்கியசாலி. அவரைப்போல் ஒரு தங்கமான மனிதரை எங்குமே காணமுடி யாது என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். முத்தையா முதலி யாரோ அதற்கு நேர் எதிரிடையான குணம் படைத்தவராம். மகாக் கர்வி. தமக்கு ஒரு பொருளின்மீது விருப்பம் விழுந்து விட்டால், நீதி அநீதிகளை யெல்லாம் பொருட்படுத்தாது அதை எப்படியும் அடைந்தே தீருவாராம். அவர் மகா முரடர்; முன் கோபி. சட்டென்று எதையும் செய்துவிடுவார். வேலைக்காரர் களை, அற்பக் குற்றங்களுக்கெல்லாம் கூட அடிப்பாராம், திட்டு வாராம். ஆனால் அதே சமயத்தில், நல்ல தயாள சிந்தையும், விருந்தினர்களைப் பரிவோடு உபசரிக்கும் தாராள குணமும் அவ ரிடம் இயற்கையிலேயே அமைந்திருந்தனவாம். அதனால்தான் அவரிடம் எவ்வளவோ தடவைகள் அடிபட்டு வந்தும் சமையற் காரக் கனகப்பன் அவரிடம் விசுவாசமாகவே இருந்து வந்திருக்கிறான்!”
“அப்படியானால், அவருக்கும் செந்தில்நாதருக்கும் எப்போ துமே அவ்வளவு பிடிக்காது போலிருக்கிறது?” என்றார் கேசவன்.
“அப்படியில்லை. இருவரும் நெடுநாள்வரை நல்ல நண்பர் களாகவே இருந்தார்கள். கிழவியின் சொத்தை, உயில்படியே அனுபவிக்க வேண்டிய முத்தையா முதலியார் வெள்ளை மாளி கையில் இருக்கும்போது, கல்லூரியில் ஆசிரியர் வேலை பார்த்து வந்த செந்தில்நாத முதலியார், தம் ஒன்றுவிட்ட தமையனைப் பார்க்க வெள்ளை மாளிகைக்கு வருவதுண்டு. கடைசி காலத்தில் அத்தைமகள் பத்மாவதியின் விஷயமாகத்தான் அவர்களுக்குள் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டதாக வதந்தி. அப்போதுகூட, செந்தில்நாதர் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லையாம்.! அவ்வளவு அடக்கமானவர் ! முத்தையா முதலியாரோடு சண்டை பிடிப்பதற்காகக் கொலைநடந்த இரவு அவர் வெள்ளை மாளிகைக்கு வந்திருக்க மாட்டார்!”
“அப்படிச் சொல்லிவிட முடியாது! இதற்கு முன்னால் செந்தில்நாதர் வரும்போதெல்லாம் வெள்ளை மாளிகைக்குத் தம் சிறு மகனையும் கூட்டி வந்திருக்கிறார் தன் தமையனாரைப் பார்ப்பதற்காக! ஆனால் கொலை நடந்த இரவு அவர் தனியாகத் தான் வந்திருக்கிறார்.
அந்த விஷயத்திற்கு அப்புறம் வருவோம். முதலில் கொலை நடந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை எனக்குக் கொஞ்சம் விவரமாகச் சொல்.”
பவானி கூறத் தொடங்கினாள்.
“கொலை நடந்த இரவு, முத்தையா முதலியாரின் வெள்ளை மாளிகைக்கு யார் யாரோ விருந்தினர்கள் வந்திருந்தார்கள். தற்செயலாகச் சென்னையிலிருந்து அன்று செந்தில்நாதரும் வந் திருந்தார். விருந்தினர்களெல்லாம் விடைபெற்றுச் சென்ற பிறகு, முத்தையா முதலியாரின் அந்தரங்க அறையில், அவருக் கும் செந்தில்நாதருக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடப்பது போல் சப்தம் கேட்டது…”
“அப்போது அந்த வீட்டில் வேறு யாரார் இருந்தார்கள்?” என்று இடைமறித்துக் கேட்டார் துப்பறியும் கேசவன்.
“கனகப்பன் என்ற ஒரு சமையற்காரன், பத்மாவதி, அவள் மகள் மஞ்சுளா, அருளானந்தசாமி யென்னும் ஒரு சாமியார், செந்தில்நாத முதலியார் இந்த ஐவரும் அங்கிருந்தனர். முத்தையா முதலியாரைப் பார்க்கச் செந்தில்நாத முதலியார் பிற்பகலில்தான் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அத்தை மகளான பத்மாவதி அம்மாளும், அவளுடைய பெண்ணான மஞ்சுளாவும் இரண்டு நாளுக்கு முன்பே வெள்ளை மாளிகைக்கு வந்து தங்கியிருந்தார் கள்: அருளானந்த சாமியாரோ தம்முடைய வேதாந்தப் புத்த கங்களோடு அங்கே குடியேறியிருந்தார்.
நடுராத்திரி மணி சுமார் பன்னிரண்டு இருக்கும். எல்லோரும் படுக்கச் சென்றுவிட்டனர். ஆனால் அருளானந்த சாமியாருக்குத் தூக்கம் வரவில்லை. ஏதாவது படிக்கலாமென்று நினைத்து, ஒரு புஸ்தகம் எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். ஹாலில் ஒரே இருட்டாயிருந்தது. படிக்கட்டின் பாதியில் அவர் வந்துகொண்டிருந்தபோது, கீழே முத்தையா முதலியாரது அந்த ரங்க அறையின் கதவு திறக்கப்படுவது அவருக்குத் தெரிந்தது. கதவைத் திறந்துகொண்டு அவ்வறையிலிருந்து வெளிவந்தார் செந்தில்நாதர். வெளிவந்ததும், அக்கதவை அவர் சட்டென்று மீண்டும் சாத்திவிட்டார். ஆனால் அந்த ஒரு க்ஷணத்திற்குள், உள்ளிருந்து வீசிய ஒளிக் கற்றையின் உதவியால், அந்த ஹாலில் மாட்டப்பட்டிருந்த ஒரு சுவர்க் கடியாரமானது சாமியாரின் பார்வையில் பளிச்சென்றுபட்டது. மணி பன்னிரண்டைத் தாண்டி ஐந்து நிமிஷங்களாயிருந்தது. இந்த அகால வேளைக்கு மேல் படிக்கவேண்டுமா?’ எனச் சற்று தயங்கினார் அவர். அதற்குள், அறையைவிட்டு வெளியே வந்த செந்தில்நாதர், படிக் கட்டிலேறிச் சாமியாரைத் தாண்டி மாடியை நோக்கிச் சென்றார். அப்போது அவர் முகத்தில் ஓர் அசாதாரணமான கடுகடுப்புக் காணப்பட்டது. விஷயம் இன்னதென்று புரியாமல், சாமியாரும் தம் படுக்கையறைக்குச் சென்றார்…”
“சாமியாருக்கும் செந்தில்நாதருக்கும் ஏதேனும் பழைய மனஸ்தாபங்கள் உண்டோ?” என்று துப்பறியும் கேசவன் இடைமறித்துக் கேட்டார்.”
“கிடையவே கிடையாது!” என்று அழுத்தமாகக் கூறினாள் பவானி. “சாமியார் அந்தக் குடும்பத்துக்கே பழமையான கண்பர். மற்றெல்லோரையும்விட, செந்தில்நாதரிடத்தில் அவ ருக்கு ஓர் அலாதியான அன்பு எப்போதுமே உண்டு ! இருவரும் தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்வதுமுண்டு.
“ஆனால் கோர்ட்டில் சாமியார் கொடுத்த வாக்குமூலம்தான், செந்தில்நாதரைத் தூக்குமேடைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்தியது,” என்றார் துப்பறியும் கேசவன்.
”அதற்கென்ன செய்வது? சந்தர்ப்ப சாட்சியங்கள் அப்படி அமைந்துவிட்டன. பன்னிரண்டு மணி, ஐந்து நிமிஷத்திற்குச் சில வினாடிகளே முன்பின்னாக, முத்தையா முதலியார் ஒரு கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இறந்திருக்கவேண்டும் என்று, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறினார்கள். அவர் டெலி போனைக் கையிலெடுத்து, போலீஸ் ஸ்டேஷனைக் கூப்பிட்டு, ‘ஐயோ! என்னைக் குத்திவிட்டான்…’ என்று சொல்லி முடிப்ப தற்குள், அவர் பிரக்ஞையற்றுக் கீழே பிரேதமாய்ச் சாய்ந்துவிட்டிருக்கிறார். அந்த டெலிபோன் வந்த நேரத்தை, மணி 12, திமிஷம் 5 என்று போலீசார் கச்சிதமாய்க் குறித்து வைத்திருக் கிறார்கள். அதற்கும், டாக்டர் கூறியதற்கும், சாமியார் சாட்சி யத்திற்கும் சரியாக இருக்கிறது!”
“ஆமாம்,” என்று ஆழ்ந்த அலோசனையோடு தலையை ஆட்டிய துப்பறியும் கேசவன், “அப்புறம்?” என்று கேட்டார்.
“அப்புறம் சில நிமிஷங்களுக்கெல்லாம் போலீஸார் வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்டார்கள். முத்தையா முதலியார் தன் அந்தரங்க அறையில் கொலையுண்டுகிடப்பதைக் கண்டார்கள். அவர் மேஜைமுன் இருந்தவாறே குத்துப்பட்டுச் சாய்ந்து கிடந் தார். அவர்முன் புஸ்தகம் ஒன்று பிரித்தபடி கிடந்தது. பலமாகக் குத்தப்பட்டதால், மேஜையிலுள்ள டெலிபோனை எடுத்து இரண்டு வார்த்தை மட்டும் பேசும் அளவிற்குத்தான் அவருக்குப் பலம் இருந்திருக்கிறது. அவர் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் ஒரு பத்திர நகல் கிழித்தெறியப்பட்டிருந்தது. அவ்வறையின் வாசற்படியருகில், சமையற்கார கனகப்பன் பிரக்ஞையற்று மயங்கிக்கிடந்தான். முதலில், அவன்மீதுதான் எல்லோருக்கும் சந்தேகம் வீழ்ந்தது. டாக்டர்கள் அவனது மூர்ச்சையைத் தெளி வித்து, அவனை நினைவு நிலைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால் அந்த நிமிஷம் முதல் அடிக்கொருதடவை அவன் சித்தம் தன் சுவாதீனத்தைவிட்டு நழுவத் தொடங்கியது. செந்தில்நாதரும் முத்தையா முதலியாரும் சச்சரவிட்ட சப்தம் என் காதில் வீழ்ந் தது. அறையின் கதவைத் திறந்துகொண்டு செந்தில்நாதர் வெளியே சென்றதையும் நான் தூரத்திலிருந்து பார்த்தேன். என் எஜமான் தனியே இருந்ததால், அவருக்கு ஏதேனும் தேவையா என்று கேட்பதற்காக, வழக்கம்போல் நான் படுக்கப்போகுமுன் அவர் அறைக்குச் சென்றேன். அதற்கப்புறம் எனக்கு ஒன்றுமே நினைவில்லை’ யென்றான் கனகப்பன். ”
“சரிதான். தன் எஜமான் பிணமாய்க் கிடக்கும் காட்சியைத் திடீரென்று பார்க்க நேர்ந்த அதிர்ச்சியால் அவன் மூளை பேத லித்துவிட்டதுபோலும்!” என்றார் கேசவன்.
“ஆமாம். அப்படித்தான் டாக்டர்களும் அபிப்ராயப்பட் டார்கள், என்று சொல்லிக்கொண்டே கைபில் காபித் தம்ள ருடன் காட்சியளித்தாள் லலிதா. “மேலும், அந்தச் சமையற்கார கனகப்பன் இருபத்தைந்து வருஷங்களாய் அந்த வீட்டில் வேலை பார்த்து வருபவன். முத்தையா முதலியாரிடத்தில் அவன் மிக வும் விசுவாசமுடையவன். அவனே அவரைக் கொன்றிருக்கக் கூடுமோ வென்று சந்தேகிப்பதற்கு, எவ்வித முகாந்திரமுமே ஏற்படவில்லை! முத்தையா முதலியார் குத்தப்பட்டாரே என்று அவன் சித்த வெறிபிடித்து கொலையாளியின் வம்சத்தையே பழி தீர்க்கக் கருவிக்கொண்டிருக்கிறான். விசாரணையின்போது செந் தில்நாதர்மீது க்ஷாத்திரங்கொண்டு தாறுமாறாக எவ்வளவோ சீறினான்; சபித்தான்!”
லலிதா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, ஒரு சிகரெட் டைப் பற்றவைத்தார் கேசவன். உள்ளே போய் ஒரு ‘ஆஷ்-டி ரே’யை எடுத்து வந்து, மேஜைமேல் அவர் எதிரில் வைத்தாள் பவானி.
“சரி. இப்போது எனக்கு அந்தப் பத்மாவதியம்மாளைப் பற்றிக் கொஞ்சம் விவரமாகக் கூறுங்கள்,” என்றார் அவர்.
“தயவு செய்து அதைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்கா தீர்கள். அவள் பேச்சைப் பேசுவதற்கே எனக்குப் பிடிக்கவில்லை!” என்று முகத்தைச் சுளித்தாள் பவானி.
“அவள் என்ன அவ்வளவு பொல்லாதவளா?” என்று புன் னகை செய்தார் துப்பறியும் கேசவன்.
“பொல்லாதவளா? அப்படி வார்த்தைகளால் எல்லாம் அவளை வர்ணித்துவிட முடியுமா? மகா நயவஞ்சகமான நாக சர்ப்பம்! பஞ்ச பா தகங்களுக்கும் அஞ்சாத பழையனூர் நீலி!….” என்று படபடத்தாள் பவானி.
“அவள் எவ்வளவோ நல்லவள் என்கிறேன் நான்!” என்று குறுக்கே பேசினாள் லலிதா.
“அதாவது, அவள் மகள் மஞ்சுளாவோடு ஒப்பிடும்போது!” என்று திருத்தமளித்தாள் பவானி. “அவ்விருவரையும் நீங்கள் நேரில் சந்திக்கவேண்டும்; நெருங்கிப் பழகவேண்டும். அப்போது தான் நாங்கள் கூறுவதன் உண்மை உங்களுக்குச் சரிவரப் புரியும்!”
“நீ ஒரு பைத்தியமடி ! நெருங்கிப் பழகினால், இவரை வெகு சுலபமாகத் தன் வலையில் வீழ்த்திவிடுவாளே அந்த மஞ்சுளா!” என்று குறும்பாகக் கண்ணைச் சிமிட்டினாள் லலிதா.
“அப்படியொரு பெண்ணைத்தானே நான் ஆவலோடு தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்று சிரித்தார் துப்பறியும் நிபுணர்; ”அவள் அவ்வளவு வசீகரமாயிருப்பாளோ?” என்றும் கேட்டு வைத்தார்.
“அது என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் கண்ணன் கண்களுக்கு அவள்தான் மிஸ். இந்தியா !” என்று சிரித்தாள் லலிதா.
“அவன் யார் கண்ணன்? நான் கேள்விப்படாத புதுப் பெயராயிருக்கிறதே?” என்று கேட்டார் கேசவன்.
“வக்கீல் வேதாசலத்தின் மகன். விமான நிலையத்தில் பைலட் டாக வேலை பார்க்கிறான். கோடித் தீவிலிருந்து செல்லையாவை அழைத்துவரச் சென்றிருப்பவன் அவன்தான்.’
“ஓஹோ!… அந்தப் பத்மாவதியும் அவள் மகளும் இப்போது எங்கிருக்கிறார்கள்?”
“வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒரு விடுதியில் குடியிருக் கிறார்கள்.”
“அதெப்படி? முத்தையா முதலியார் கொலை வழக்கில் அவள் செந்தில்நாதனுக்கு விரோதமாக சாட்சியம் கூறியிருக் கிறாள்….”
“அப்படியிருந்தும் அவளை அந்த வீட்டைவிட்டு அப்புறப் படுத்தாமலிருப்பதுதான் செந்தில்நாதரது பெருந்தன்மையின் விசேஷம். அதுமட்டுமா? அவளுடைய குடும்பக் காலட்சேபத் துக்குப் போதுமான ஒரு குறிப்பிட்ட தொகையையும் மாதா மாதம் அவளுக்குக் கொடுத்து வருமாறு அவர் ஏற்பாடு செய் திருக்கிறார்! ” என்றாள் பவானி.
“பத்மாவதி கிடக்கட்டும்; அவளாவது ஒருவிதத்தில் அவருக் குச் சொந்தக்காரி ! அவளை அவர் மன்னித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் அந்தக் கனகப்பன் இருக்கிறானே! அப்பப்பா! அவன் கோர்ட்டில் மட்டுமா அவருக்குப் பாதகமாகச் சாட்சியமளித்தான்?….” என்று லலிதா சொல்லிக்கொண்டு வரும்போதே, கேசவன் குறுக்கிட்டு “கோர்ட்டில் அவன் கன்னாபின்னாவென்று உளறியிருக்கிறான். அதை நான் கேஸ் கட்டில் பார்த்தேன்!” என்றார்.
“இன்றைக்கும் அவன் அதேமாதிரிதான் உளறிக்கொண் டிருக்கிறான். செந்தில்நாதரை நேரிலேயே அவன் வாயில் வந்த படி திட்டினான். அப்படியிருந்தும் அவர் அவனை வேலையைவிட்டு விலக்கவில்லை. ‘பாவம்! ஏதோ பைத்தியத்தில் பிதற்றுகிறான்’ என்று மன்னித்துவிட்டார்!” என்றாள் பவானி.
“அந்தக் கனகப்பனை நான் நேரில் பார்த்தபிறகுதான் முடிவு கட்டவேண்டும்,” என்று தம் டைரியை எடுத்து ஏதோ குறித்துக் கொண்டார் துப்பறியும் கேசவன். “இன்னும் அவன் வெள்ளைமாளிகையில்தான் இருக்கிறானா?” என்று அவர் கேட்டார்.
“போனவாரம் வரையில் அவன் அங்குதான் இருந்தான். நாலைந்து நாட்களுக்கு முன்புதான் அப்பா அவனை வெளியே அனுப்பினார்.”
“ஏன் அப்படி?”
“அவன் எப்போதுமே செந்தில்நாதரைச் சதா திட்டிக் கொண்டிருந்தான். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் வரவர அவனுடைய பைத்தியம் அதிகரித்துவிட்டது. முத்தையா முதலியாரின் ஆவியை வெள்ளை மாளிகைக்குள் தான் அடிக்கடி சந்திப்பதாகக் கூறலானான். கோடித் தீவிலிருந்து செல்லையா திரும்பி வரப்போவதாகக் கேள்விப்பட்டவுடன், ‘ அந்தக் கொலைகாரன் மகனா வரப்போகிறான் ? அவனை நான் பார்க்கிறேன் ஒருகை அந்தக் கொலைகாரன் மகன் வெள்ளை மாளிகையில் எப்படி மிதிக்கிறான் எனப் பார்ப்போம்!’ என்று கூச்சல் போட ஆரம்பித்துவிட்டான். அதற்கு மேலும் அவனை வெள்ளை மாளிகையில் விட்டுவைப்பது சரியல்லவென்று, அப்பா அவனை விலக்கிவிட்டார்!” என்றாள் பவானி.
“அதுபோகட்டும். பத்மாவதி விஷயமாக, முத்தையா முதலி யாருக்கும் செந்தில்நாதனுக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்ட தாகக் கூறினாயே, அது என்ன?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன்.
“அது ஒரு சிறு கதை,” என்று ஆரம்பித்தாள் பவானி. “பத்மாவதி தன் யௌவன வயதில் ஒரு பட்டாளத்தானைக் கூட் டிக்கொண்டு சிலோனுக்கு ஓடிப்போனவள்! அங்கே அவர் களுக்குக் கலியாணம் நடந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைதான் மஞ்சுளா. மஞ்சுளா பிறந்த நாலைந்து வருஷங்களுக்கெல்லாம், அவள் தந்தை இறந்துவிட்டார். உடனே தன் மகளை அழைத்துக்கொண்டு, நிர்க்கதியாய்ச் சென்னைக்குத் திரும்பி வந்தாள் பத்மாவதி….
“சென்னைக்கு வந்ததும் அவள் செந்தில்நாதரைப் போய்ப் பார்த்தாள். அவர் அப்போது ஒரு கல்லூரியின் பிரின்ஸ்பாலாக வேலைபார்த்து வந்தார். பத்மாவதியைக் கண்டதும், அவள்மீது அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவளையும் அவள் குழந்தை யையும் தம் வீட்டிலேயே வைத்து ஆதரித்தார். நாளடைவில், அவருடைய இரக்கமானது காதலாகத் தளிர்விட ஆரம்பித்தது…”
“ஏன், அப்போது அவருக்கு மனைவியில்லையா?”
“அவருடைய மனைவியும் எங்கள் தாயாரும் ஒரே நாளில் மோட்டார் விபத்தில் இறந்துவிட்டார்கள்!” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டாள் லலிதா.
“சரிதான். செந்தில்நாதருக்கு மனைவி இல்லை, ஓர் ஆண் குழந்தை இருந்தது. பத்மாவதிக்குக் கணவனில்லை, ஒரு பெண் குழந்தையிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், இருவருக்கும் காதல் ஏற்படுவது சகஜந்தானே?” என்றார் துப்பறியும் கேசவன்.
“காதலாவது, களிமண்ணாவது? அத்தகைய கௌரவமான வார்த்தைகளை யெல்லாம் அவள் விஷயத்தில் கண்மூடித்தனமாகப் பிரயோகிக்காதீர்கள்!” என்று கடிந்துகொண்டாள் லலிதா
“அப்படியானால் சந்ததியில்லாத முத்தையா முதலியாரின் காலத்திற்குப் பிறகு உயிலின் ஷரத்துப்படி செந்தில்நாத முதலி யாருக்குத்தான் வெள்ளை மாளிகை வந்து சேரும் என்று அறிந்து அவர்மீது ஆசைவலை வீசினாளா?”
“சுத்தக் காசாசை பிடித்த பிசாசல்லவா அவள்? இல்லா விட்டால், கொஞ்சமேனும் நன்றியில்லாமல் செந்தில்நாதரை அப்படித் திடீரென்று புறக்கணித்துவிட்டு முத்தையா முதலியாரிடம் வந்து சேருவாளா?”
“அதென்ன மூன்றாவது காதலனா?”
“ஆமாம்! மூன்றாவது வலை! பத்மாவதி அதற்கு முன்னால் ஒரு தடவைதான் சிறுவயதில் எப்போதோ முத்தையா முதலி யாரைப் பார்த்திருக்கிறாள். செந்தில்நாத முதலியாரோடு அவள் வெள்ளை மாளிகைக்கு வந்தபோது முத்தையா முதலியாரை அடையத் திட்டமிட்டாள். அந்தக் கிழவரையே வலைவிரித்துப் பிடித்தால் சுலபமாக சொத்துரிமை அடைந்துவிடலாம் என்று நினைத்தாள். செந்தில்நா தருக்குப் பதிலாகத் தன்னைவிட இருபது வருஷங்கள் வயதில் மூத்த அந்தக் கிழவரையே மணக்கத் திட்ட மிட்டாள். அதன் பிறகு…. ஒரு நாள் இரவு யாரும் இல்லாத சமயத்தில் வெள்ளை மாளிகைக்கு வந்து கிழவரோடு தங்கியிருந்தாள்….”
“அப்புறம்?”
“அந்தக் கிழவரும் வெட்கமில்லாமல் விதவையான பத்மாவதி குழந்தையுள்ளவள் என்றும் பார்க்காமல் பகிரங்கமாகவே கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டார்…”
“அவள் பேருக்கே தனக்கு வந்து சேரப்போகும் சொத்துக் களையெல்லாம் உயில் எழுதி வைப்பதற்கு முத்தையா முதலியார் பத்திர நகல்கூடத் தயாரித்துவிட்டார் போலிருக்கிறதே?” என்றார் துப்பறியும் கேசவன்.
“அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வியப்போடு கேட்டாள் பவானி.
“எல்லாம் அந்தப் பழைய கேஸ் கட்டுகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டவைதான். முத்தையா முதலியார் இறந்துகிடந்த அறையிலுள்ள குப்பைத் தொட்டியில் அந்த உயிலின் பத்திர நகல் கிழிபட்டுக் கிடந்ததாம் அதுவே செந்தில்நாதர் மீது அதிக சந்தேகத்தைக் கிளப்புவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது. முத்தையா முதலியார் அந்த உயில் நகலைச் செந்தில்நாதரிடம் காட்டியிருக்க வேண்டும்; அவர் ஆத்திரப்பட்டு அதைக் கிழித் திருக்க வேண்டும்; அதன்மேல் இருவருக்கும் வாக்குவாதம் வலுத்திருக்க வேண்டும்; முடிவில் அந்தக் கொலை நடந்திருக்க வேண்டும்…. இவ்வாறெல்லாம் அப்போது போலீசார் அனுமா னித்திருக்கிறார்கள். அதற்கு அனுசரணையாக அருளானந்த சாமியார், சமையற்காரன் கனகப்பன், அத்தைமகள் பத்மாவதி யம்மாள் மூவரும் சாட்சியம் கூறியிருக்கிறார்கள்!” என்றார். துப்பறியும் கேசவன்.
“பத்மாவதி என்ன சொல்லியிருக்கிறாள்?” என்று ஆவ லோடு கேட்டாள் லலிதா.
“வேறொன்றுமில்லை. கொலை நடந்த இரவு, மாடியிலிருந்த தன் அறையில் அவள் தூக்கம் பிடிக்காமல் படுத்துக்கொண்டிருந் தாளாம். பக்கத்து அறை செந்தில்நா தருடையது. அந்த அறை யின் கதவைத் திறந்துகொண்டு அவர் உள்ளே நுழையும் சப்தம் அவள் செவியில் பட்டதாம். உடனே அவள் தற்செயலாகக் கடிகாரத்தைப் பார்த்தாளாம். மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிஷம் ஆகியிருந்ததாம். இவ்வளவுதான் அவள் வாக்குமூலம். தனியாகப் பார்க்கும்போது இதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அருளானந்த சாமியாரின் சாட்சி யத்தை இது ஊர்ஜிதப்படுத்தி விட்டது!” என்றார் கேசவன்.
“சாமியார் உண்மையிலேயே மிக உத்தமமான மனிதர். அவர் பொய் சொன்னாரென்று யாருமே நினைப்பதற்கில்லை. ஆனால் செந்தில்நாதரும் பொய் சொல்லத் தெரியாதவரே. முத்தையா முதலியாரின் அறையைவிட்டு அவர் வெளியே வரும் போது, சாமியார் பார்த்த அதே ஹால் கடிகாரத்தைத் தானும் பார்த்ததாகவும், அப்போது சரியாகப் பதினோரு மணி ஐம்பத்தைந்து நிமிஷம்தான் ஆகியிருந்ததாகவும் அவர் கூறுகிறார். இருவரும் ஒரே கடிகாரத்தில் ஒரே சமயத்தில் மணி பார்த்தபோது ஐந்து நிமிஷம் வித்தியாசமாகச் சொல்கிறார்கள் ! இதில் எதை நாம் உண்மையென்று நம்புவது?” என்றாள் பவானி.
துப்பறியும் கேசவன் இந்தக் கேள்விக்கு உடனே பதிலளிக்க வில்லை. கண்ணை மூடியவண்ணம், சுமார் 3 நிமிஷ நேரம் ஏதோ சிந்தனையிலாழ்ந்திருந்தார். கடைசியாக, “இதில் ஏதோ ஒரு தவறு நேர்ந்திருக்கிறது!” என்று ஒரு நெடு மூச்சுவிட்டார்.
“அதைத்தான் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. செந்தில்நாதர் தெய்வாதீனமாய் விடுதலையடைந்தார்.- எனினும், கமலவனத்துப் பொதுமக்கள் அவரை நிரபராதி யென்று நம்ப மறுத்தார்கள். வாழ்க்கையிலேயே மிக வெறுப் புற்று அவர் கோடித் தீவுக்குப் போய்விட்டார். பன்னிரண்டு வருஷங்கள் ஓடி மறைந்துவிட்டன. போனவாரம்தான், செந்தில் நாதர் இறந்துவிட்டதாகக் கோடித் தீவிலிருந்து எங்கள் அப்பா வுக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதன்மேல், செல்லையாவை அங்கிருந்து இங்கே அழைத்து வருவதற்காகக் கண்ணனை அனுப்பினோம். செந்தில்நாத முதலியார் மகன் செல்லையா வரப் போகிறான் என்ற செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான விஷமக் கடிதங்கள் இவ்வூர் மக்களிடையே விநியோகிக்கப்படலாயின….”
“கடைசியாக வந்த அக்கடிதத்தை எடு, பார்க்கலாம்!” என்றார் துப்பறியும் கேசவன்.
பவானி அதைத் தன் தந்தையின் டிராயரிலிருந்து எடுத்து வந்து கொடுத்தாள். அதைக் கேசவன் நெடுநேரம் கூர்ந்து கவனித்துவிட்டு, “இது வெறும் குரோதத்தினால் எழுதப்பட்ட கடிதம் அல்ல. ஒரு புதிய சதியின் சாதுர்யமான அங்குரார்ப் பணம் இது ! அதாவது இப்போது வரப்போகும் செல்லையா விற்கு எதிராகச் சதி நடக்கிறது என்பதற்கு இது ஆரம்பக் குறி ! என்று புன்னகை புரிந்தார்.
பவானியின் முகம் வெளிறியது.
“ஆமாம்! முத்தையா முதலியாரின் காலமும், செந்தில் நாதரின் காலமும் முடிந்துவிட்டது. இனிமேல் வெள்ளை மாளி கைக்கு உரிமை கொண்டாடக்கூடியவர்கள் எத்தனைபேர் மிஞ்சி இருக்கிறார்கள்?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன்.
“செல்லையா, பத்மாவதி அம்மாள், மஞ்சுளா இம் மூவருக்கு மட்டும்தான் உயிலின் பிரகாரம் பாத்தியதை கொண்டாட உரிமையுண்டு. ஆனால் ஏதாவது குற்றத்திற்குத் தண்டனை பெற்ற வர்கள் உரிமை கொண்டாட முடியாது ! செல்லையா இன்னும் நான்கு மாதத்தில் வெள்ளை மாளிகையின் பூரண உரிமை அடை யும் வரை, அவன் ஏதாவது குற்றத்தில் அகப்படாமல் இருக்க வேண்டும்!” என்றாள் பவானி.
– தொடரும்…
– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.