கொலைப்பித்தன்





(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4
சதிகாரக் கும்பல்

வெள்ளை மாளிகைக் காம்பவுண்டுக்குள் ஒருபுறம் தள்ளி இருந்த ஒரு விடுதியின் அறை ஒன்றில், தேனீர் அருந்தியவண்ணம் உரையாடிக்கொண்டிருந்தனர் இரு ஸ்திரீகளும் ஓர் ஆடவனும்.
ஸ்திரீகளில் மூத்தவளுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். எனினும் கட்டுத் தளராத உடல். ஒரு யுவதிக்குரிய வனப்பும், வசீகரமும் அவள் முகத்தில் வாய்ந்திருந்தன. மத்திய வயதுள்ள தாசிகளின் முகத்திலுள்ள ஓர் அனுபவக் கவர்ச்சியும், களையும்தான் அந்த அம்மாளுடைய முகத்திலும் இருந்தன. அவள் பேசும் தொனியும், சொற்களும் மிகவும் நயமாக விளங்கின. அவள் அணிந்திருந்த கவர்ச்சிகரமான உடைகளின் தோற் றத்தையோ, அல்லது உடல் வாகோடு கூடிய அவளது விழி களின் ஒளியையோ கொண்டு, அவள் கலியாணமாகி விதவை யாகி ஒரு பருவப் பெண்ணையும் பெற்றவளாயிருப்பவள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. அவள்தான் பத்மாவதி!
அவளுடைய புதல்வி மஞ்சுளாவுக்கு, வயது பதினெட்டுக்கு மேலிராது. ஆனால் ஒருமுறை கண்ணுற்ற மாத்திரத்திலேயே, வாலிபர்களின் உள்ளத்தைவிட்டு அகல மறுக்கும் கவர்ச்சிகர மான உடற்கட்டு அலங்காரத்திலும் ஆடம்பரத்திலும் தன் அழகைப் பற்றிய அகம்பாவத்திலும் அவளுக்கிருந்த அளவற்ற ஆசையை வெளிப்படுத்தி நின்றன அவளது ஆடைடகள். பகட்டான பாவாடையும், மெல்லிய தாவணியும், உடல் பூரிப்போடு இறுக்கமாகவுள்ள பட்டு ரவிக்கையும் அணிந்திருந்தாள் மஞ்சுளா. அவள் விரும்பினால், தன் தாயைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான விநய ரஸந்ததும்ப அவளால் சிரித்துப் பேச இயலும். ஆனால் அன்றைய தினம் அவள் சற்று வெடுவெடுப்பாகவே பேசிக்கொண்டிருந்தாள். அதற்குக் காரணம், அங்கு கூட இருந்த கோதண்டராமன்!
கோதண்டராமனுக்கு வயது ஏறக்குறைய நாற்பத்தைந்து இருக்கலாம். நல்ல உயரமான ஆகிருதி; சிறிது படாடோபமான உடைகள் எப்போதும் போதையிலிருப்பவனைப் போன்ற ஒரு பார்வை ; வாயில் ஒரு முரட்டுச் சுருட்டு ; இவ்வளவே அவன் லக்ஷணங்கள். அவன் பெரிய சூதாடி எல்லப்பபிள்ளை கடையில் குமாஸ்தா வேலை பார்ப்பதினால் கிடைக்கக்கூடிய சம்பளம் அவ னுடைய சுருட்டுச் செலவுக்குக்கூடப் போதவில்லை. அவனுக்கு நாலாபுறமும் கடன். சூதாடியோடு அவன் ஸ்திரீலோலன்- அவனுக்கு அடிக்கடி பெருந்தொகையான பணம் தேவைப்படும். பத்மாவதிக்கும், அவளது காலஞ்சென்ற கணவன் கந்தசாமிக்கும் அவன் நெருங்கிய நண்பனாயிருந்தவன். பத்மாவதியின்மூலம் ஒரு பெருந் தொகையைத் திரட்டிக்கொண்டு விடலாம் என்ற பேராசையில், காலம் நோக்கிக் காத்திருந்தான்.
தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போதே, பத்மாவதியின் கடந்தகால நினைவுகள் அவள் கண்ணெதிரே வந்து நின்றன. தானும் தன் மகளும் அந்த வெள்ளை மாளிகையின் அதிபதிகளாய் அதிகாரம் செலுத்திக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதற்கு வெளியே ஓர் அற்ப விடுதியில் வாழ்க்கை நடத்தும் அதிருஷ்ட யீனத்தை யெண்ணி, அவள் உள்ளம் அங்கலாய்த்தது. அந்தக் குபேர சம்பத்தானது, அதுவரையில் மூன்று தடவைகள் அவளது கைக்கருகில் வந்தும், கானல் நீரைப்போல் எட்டிப்போய்விட்டது. முதலாவது, முத்தையா முதலியாரின் வார்சு என்பதற்காக, அவள் செந்தில்நாதரைக் காதலிப்பது போல் நடித்தாள். அவரைக் கலியாணம் செய்துகொள்வதன் மூலம், அந்தச் சொத்துக்களை அடைய எத்தனித்தாள். அது கைகூடும் தருவாயில், அவளது அவசர புத்தியே அவளது திட்டங்களைக் குட்டிச்சுவராக்கிவிட்டது. அதாவது, செந்தில்நாத ருக்குப் பதிலாக முத்தையா முதலியாரையே மறு மணம் செய்து கொண்டால், தன் ஆசைகள் அதிவிரைவில் நிறைவேறும். கிழவர்தான் அதிகம் பெண் பித்தராகி வெகு சுலபமாகச் சொத் துக்களை தன்மீது அள்ளிச்சொரிவார்; சீக்கிரமும் இறந்துவிடுவார் என்று மனப்பால் குடித்தாள். அதற்காக, செந்தில்நாதரைப் புறக்கணித்துவிட்டு, அவருடைய தமையனார் முத்தையா முதலியாரை நோக்கித் தன் வலையை வீசினாள். அந்தக் கிழட்டு மீனும் சுலபமாகவே அவள் கையில் சிக்கியது. ஆனால் அவரைத் திருமணம் புரிந்து கொள்வதற்குள், எதிர்பாரா விதமாக அவர் எமனுலகுக்கு அனுப்பப்பட்டார். செந்தில்நாதர் கொலைகாரன் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலேறி நின்றார். இதுவும் ‘நன்மைக்கே!’ என்று எண்ணியவளாய், அவரை அவள் தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றாள். ஏனெனில் செந்தில்நாதர் தண்டிக்கப்பட்டால் உயிலின் பிரகாரம் சொத்து தன்னை வந்தடைந்து விடும்! அதற்காகச் சிறிது பொய் சாட்சியங் கூறவும் துணிந்தாள். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு வேறுவிதமாய் இருந்துவிட்டது. செந்தில்நாதர் விடுதலை செய்யப்பட்டார். உடனே பத்மாவதி மறுபடியும் செந்தில்நாதரை நோக்கி தன் வலையை வீச முயன்றாள். அவர் மீது தான் தனக்கு உள்ளூர ஆசை என்றும், அவருக்கு எதிராகக் கொலை வழக்கில் நிர்பந்தத்தின் பேரில்தான் தான் சாட்சியம் சொல்ல நேர்ந்தது என்றும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவரோ அவ்வளவையும் அவநம்பிக்கையோடு காதுகொடுத்துக் கேட்டுவிட்டு அவளுடைய வாழ்க்கையை விட்டே கோடித் தீவிற்குப் போய்விட்டார். ஆனால் அவளை வெள்ளை மாளிகை காம்பவுண்டிலுள்ள தனி விடுதியில் வசித்துவர அனுமதியும், சிறிது பணமும் கொடுத்துவிட்டுப் போனார்.
அதுமுதல் ஒவ்வொரு நாள் விடிந்து எழுந்து அந்தக் காம்பவுண்டிலுள்ள பிரும்மாண்டமான வெள்ளை மாளிகையைக் காணும் போதும், அதற்குத் தானே ஏகபோக எஜமானியாகும் நாளை எதிர் நோக்கி ஏங்குவாள். அந்த ஆசையே, அவளுடைய வாழ்க்கை முழுவதையும், பெண்மையையுங் கூட விஷமாக்கி விட்டது! இதெல்லாம் பழங்கதைகள். விளையாட்டுப் போல் பன்னிரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. செந்தில்நாத முதலியாரின் ஏக புதல்வனான செல்லையா இன்று கோடித் தீவிலிருந்து திரும்பி வரப்போகிறான். அவன் இந்த வெள்ளை மாளிகையின் பரிபூரண உரிமையாளனாவதற்கு, இன்னம் நான்கு மாதங்களே பாக்கி யிருக்கின்றன. அதற்குள் நாம் செய்யப் போகும் சூழ்ச்சிக ளெல்லாம் பலிதமாகுமா!’ என்று எண்ணியவளாய் அவள் பெருமூச்செறிந்தாள்.
“ஏன் அம்மா ஆழ்ந்த சிந்தனை? நீ எதற்கும் கவலைப்படாதே! முதலில் அந்த செல்லையா இங்கே வந்து சேரட்டும். அதற்கப்புறம் அவனை நான் கவனித்துக்கொள்கிறேன்!” என்றாள் மமதைச் சிரிப்புடன் மஞ்சுளா.
“முதலில் அவன் இங்கே வரப்போவதில்லையாமே? நேரே கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் போய் இறங்கப் போகிறான். அந்தத் தாடிவாலாவின் பெண்கள் அவன் புத்தியைக் கெடுத்துவிட்டால்? பவானி, லலிதா என்ற பெயர்களைப் பார்த்தே அவன் பாதி மயங்கிப் போய்விடுவான். அதல்லவா எனக்குப் பயமாய் இருக்கிறது?” என்றாள் பத்மாவதி.
“அப்படி யெல்லாம் நடக்கவிடாதபடி செல்லையாவைக் கோடித் தீவிலிருந்து கூட்டிவரும் நம் கண்ணன் கண்காணித்துக் கொள்வான். அவன் திறமையை இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையே, அம்மா!” என்றாள் மஞ்சுளா.
“அவனை நான் தான் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்!” என்று குறுக்கே பேசினான் கோதண்டம். “கண்ணனைப் போன்ற ஒரு புளுகுணிப் பயலை எங்குமே காணமுடியாது. அவன் பொய் சொன்னாலும், அது மெய்யைப்போலவே இருக்கும். -அது வியத்தில் மஞ்சுளாவும் அவனும் ஒன்று!”
மஞ்சுளாவுக்குச் சுறுக்கென்று தைத்தது இந்தச் சுடுசொல். “இருக்கலாம். ஆனால் அது விஷயத்தில், நீ எங்கள் இருவருக்கும் நே…ர் எதிரிடை, நீ நிஜத்தையே பேசினாலும் உன்னை ஒருத்தரும் நம்பமாட்டார்கள். ஏனென்றால், நீ ஓர் அசகாயப் புளுகன் என்பது, உன் மூஞ்சியில் பட்டயம் போட்டதுபோல் எழுதி ஒட்டப்பட்டிருக்கிறதே!” என்று படபடத்தாள் மஞ்சுளா.
கோதண்டத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எப்போதுமே மஞ்சுளாவுக்கும் அவனுக்கும் அவ்வளவாகச் சரிப்பட்டுக் கொள்வதில்லை.
“என்னடி சொன்னாய்? நான் அசகாயப் பொய்யனா? நான் அப்படியிருப்பது உங்கள் அதிருஷ்டம் என்று எண்ணிக்கொள், மஞ்சுளா. நீ சிறுசு! அதனால் உனக்கு ஒன்றும் புத்தியில் பட வில்லை. நான் மட்டும் பொய்யனாயில்லாமல் உண்மை பேசத் தொடங்கிவிட்டால், உன் தாயும் தந்தையும் சிலோனில் ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்த செய்தியுள்பட, உங்களுடைய பல ரகசியங்கள் வெளியாகிவிடும். அதில் உனக்கு இஷ்டம் தானா?”
இதைக் கேட்டதும், பத்மாவதியின் கண்கள் பளீரென்று சினத்தால் சிவந்தன. கோதண்டத்தை வெட்டி விழுங்கிவிடுவன போல் நோக்கின அவள் விழிகள். ஆனால் மஞ்சுளாவோ, அவன் மிரட்டலைச் சற்றேனும் சட்டை செய்யாதவளாய் மறுபடியும் பேசினாள். “இனிமேல் எங்களிடமிருந்து காசு பறிக்க முடியாது என்று தெரிந்தால்தான் அந்த ரகசியத்தை நீ வெளியே சொல்லு வாய்! அதுவரை உன் முகத்தில் நான் காரியுமிழ்ந்தாலும் எங்க ளுடைய இரகசியங்களை வெளியே சொல்லமாட்டாய். மேலும் எங்க அம்மா சிலோன் சிறையிலிருந்தாள் என்று வெளியில் சொல்ல உனக்கு தைரியமுண்டா? நீயும் அவர்களுடன் சிறை வாசம் செய்தவன்தானே? உன்னைப் பார்த்தாலே முன்னோ பின்னோ சிறையிலே இருக்கவேண்டியவன் என்று எந்த முட்டாளுக்கும் புரிந்துவிடுமே! உன்னுடைய குட்டுகள் அம்பலத்துக்குவர அப்புறம் எவ்வளவு நாழியாகும்?” என்று மஞ்சுளா கோதண்டத்தின் மீது பாய்ந்தாள்.
“மஞ்சுளா! உனக்கு நாக்கு நீளமடி! வாயை மூடு!” என்று தன் மகளை அதட்டினாள் பத்மாவதி.
பிறகு கோதண்டத்தின் பக்கம் திரும்பி, “ஏனப்பா நீ அவளோடு அனாவசியமாக வம்பிழுக்கிறாய்? எங்களுடன் சண்டை போடவா நீ இங்கே வந்திருக்கிறாய்? இப்போது உடனடியாக ஆகவேண்டிய காரியத்தைக் கவனிக்காமல்….”
“உன் மகள் மட்டும் அவ்வளவு வாய்த்துடுக்காகப் பேசலாமா? அவளை நீ கண்டிக்க மாட்டேன் என்கிறாயே?”
“அவளுக்கும் உனக்கும் இப்படி அடிக்கடி சண்டை போடுவதே சகஜமாகப் போய்விட்டது. நீ விபரம் தெரிந்தவன்! அவள் சிறுசுதானே! அது தொலையட்டும். இனி அடுத்தபடியாக நாம் செய்ய வேண்டியதென்ன? அதைச் சொல்,” என்றாள் பத்மாவதி. அவளுக்கும் மகளைப் போலவே கோதண்டத்தை உள்ளூரப் பிடிக்காது. கோதண்டத்திற்கும் அவர்கள் மீது பந்தபாசம் எதுவும் கிடையாது. ஒன்று கூடி சூழ்ச்சி செய்ய வேண்டியவையை உத்தேசித்துத்தான் நேசபாவம்!
கோதண்டம் சிறிது நேரம் மெளனமாக யோசித்தான். “அதிருக்கட்டும். நான் அனுப்பி வருகிற அநாமதேயக் கடிதங்களைப் பற்றி, உன் அபிப்பிராயம் என்ன?”
“என் அபிப்பிராயம் கிடக்கட்டும். அக்கடிதங்களில் நீ எழுதியுள்ள விஷயங்களை, இங்குள்ள பொதுஜனங்கள் நம்புகிறார்கள். பெரிய மாளிகைகள் முதல் சிறிய குடிசைகள் வரை எங்கே பார்த்தாலும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அந்தக் கொலைவழக்கு நடந்தபோது, செந்தில் நாதரை இவ்வூர் மக்கள் எவ்வளவுக்கு வெறுத்தார்களோ, அவ்வளவுக்கு அவன் மகனை இப்போது வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்குக் காரணம் உன் விஷமக் கடிதங்கள் தான். ஆனால், அதன் மூலம் நமக்கென்ன லாபம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை,” என்றாள் பத்மாவதி.
“சொல்லுகிறேன், கேள்,” என்று தொடங்கினான் கோதண்டன். “பன்னிரண்டு வருஷம் காட்டுமிராண்டி களிடையே வசித்துவிட்டு, செல்லையா இன்று திரும்பி வருகிறான். வந்ததும், என் கடிதங்களின் மகிமையால், இவ்வூரிலுள்ள எல்லோருமே அவனை வெறுப்போடு நோக்கப் போகிறார்கள். அந்தக் கிருஷ்ண மூர்த்தியும் அவன் பெண்களும் வேண்டுமானால், இதற்கு விதி விலக்காயிருக்கலாம்….
“இல்லை! என் கண்ணன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். செல்லையாவின் உள்ளத்தில் அவர்கள் மீது சம்சயமும் துவேஷமும் உண்டாகும்படி, அவன் சாதுரியமான சில சூழ்ச்சிகள் செய்யப்போகிறான். இந்நேரம் செய்துமிருப்பான்!” என்றாள் தன்னம்பிக்கையோடு மஞ்சுளா.
“அப்படியானால், செல்லையாவுக்கு இவ்வூரில் சினேகிதர்களே யாருமில்லை யென்ற நிலைமை ஏற்படும். அவனுக்குத் தன் காரியங்களைத் தானே நிர்வகித்துக் கொள்ளவும் சக்தியிராது. அப்போது, நம்முடைய துணையைத்தான் அவன் நாடிவருவான். அதற்குள், மஞ்சுளாவும் தன் சாகஸங்களால் அவனைப் பக்குவமாக மயக்கி வைத்திருப்பாள்…”.
“அதைப்பற்றி உங்களுக்குச் சந்தேகமே வேண்டியதில்லை!” யென்று தன் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்தோடு பேசினாள் மஞ்சுளா.
“பையன் நம் வலையில் வீழ்ந்துவிட்டால், அப்புறம் நம்மு டைய சூழ்ச்சிகளெல்லாம் பரம சுலபமாக நிறைவேறிவிடும்! அவனுடைய சொத்துகளை யெல்லாம் அபகரித்துவிடலாம்!” என்றான் கோதண்டம்.
“எப்படி?” என்று கேட்டாள் பத்மாவதி.
“அதற்குப் பல வழிகளிருக்கின்றன. முதலாவதாக, அவன் மீது ஏதேனும் ஓர் அபாண்டமான பழியைச் சுமத்தி, அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட நாம் ம் முயலவேண்டும். தண்டனை யடைந்து விட்டால் அவன் தானாகவே சொத்துரிமையை இழந்து விடுவான். உடனே அந்தச் சொத்துக்கள் அனைத்தும் உயிலின் ஷரத்துப்படி உங்களுக்கு வந்துவிடும்…”
“அவன் தண்டனையடையாமல், தன் தந்தையைப் போலவே தப்பித்துவிட்டால்?” என்றாள் பத்மாவதி.
“அப்போதும்தான் என்ன? அவனை ஒழித்துக்கட்டுவது அவ்வளவு பிரமாதமா ? ஒரு மோட்டார் விபத்து, நீந்தும்போது ஆற்று மடுவில் தவறிவிடுவது, அல்லது இரத்த வெறியனொருவன் கொலை செய்துவிட்டான்…. இப்படி ஏதாவது ஒரு சூழ்ச்சிசெய்து விடலாம்!” என்று சிரித்தான் கோதண்டம்.
“அது சரி,” யென்று புன்னகை செய்தாள் பத்மாவதி – “தீராப் பக்ஷத்திற்கு அப்படியும் செய்ய வேண்டியதுதான்….”
“எப்படி? எனக்கொன்றும் புரியவில்லையே?” என்று இடைமறித்தாள் மஞ்சுளா-
“இதெல்லாம் உனக்கொன்றும் புரியவே வேண்டாம். நீ பேசாமலிருடி!” என்று அவளை அடக்கினாள் பத்மாவதி.
மஞ்சுளா முகத்தைச் சிணுக்கிக்கொண்டாள்.
“அது போகட்டும், மஞ்சுளா! நீ நம் கண்ணனோடு ஒரு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாயே, அது என்ன? அந்தத் திட்டத்தை அவன் நிறைவேற்றுவானா?” என்று சந்தேகத்தோடு கேட்டான் கோதண்டம்.
“கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளைதான்! ஆனால் எனக்காக எதுவும் செய்வான்! கோடித்தீவிலிருந்து செல்லையாவைக் கூட்டி வந்ததும் எனக்கு உடனே தகவல் அனுப்பிவிடுவான்!” என்றாள் மஞ்சுளா.
“அது போகட்டும். வேலைக்காரக் கனகப்பனை நீ சந்தித்தாயா?” என்று கேட்டான் கோதண்டம்.
“நேற்றிரவு அவன் இங்கு வந்திருந்தான். கடந்த ஒரு வாரத் திற்குள் அவன் ஒரு வெறி நாய்போல் ஆகிவிட்டான். எஜமானர் முத்தையா முதலியாரைக் கொலை செய்தவன் குடும்பத்தையே பழிதீர்க்கவேண்டும் எனத் துடி துடிக்கிறான். அவன் மட்டும் செல்லையாவை நேரில் சந்திக்க நேர்ந்தால் ரொம்ப ரஸாபாசமாகி விடும்,” என்றாள் பத்மாவதி.
“நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. தக்க பக்குவம் பார்த்து, கனகப்பன் கையில் ஒரு கத்தியையோ துப்பாக்கி யையோ கொடுத்துவிட்டால் போதும்; செல்லையாவை அந்தச் சித்த வெறியனே தீர்த்துக் கட்டிவிடுவான்!” என்றான் கோதண்டம்.
“கடவுள் புண்ணியத்தால் அப்படி நடந்துவிடுமானால் நம் கவலைகளெல்லாம் தீர்ந்துவிடுமே!” என்று பெருமூச்செறிந்தாள் பத்மாவதி.
“நமக்குத்தான் இன்னும் நாலுமாத சாவகாசம் இருக்கிறதே? அதற்குள் நாம் அண்டத்தையே புரட்டி விடலாம்; கவலைப்படாதே! மேலும், பாவம் கனகப்பனுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம்! அந்தச் சித்த வெறியனைத் தக்க சமயத்தில் நான் உபயோகித்துக் கொள்கிறேன்!” என ஆறுதல் கூறினான் கோதண்டம்.
அத்தியாயம் – 5
கனகப்பன் வெறி
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, கமலவனத்தை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது ஒரு ஸ்டுடிபேக்கர் மோட்டார் வண்டி. அவ்வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஓவியர் கிருஷ்ணமூர்த்திக்குப் பக்கத்தில், முன் சீட்டில் அமர்ந்திருந்தான் செல்லையா. அவனது தோழன் பழனியப்பன், வக்கீல் வேதாசலம், அவர் மகன் கண்ணன்-இம்மூவரும் பின்ஸீட்டில் உட்கார்ந்திருந்தனர்.
கண்ணன் இடைவழியிலேயே இறங்கிக் கொண்டான். விமான இலாகாவைச் சேர்ந்த ஓர் ஆபீஸரைப் பார்த்துவிட்டு, நேரே அவன் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு வருவதாகக் கூறிச் சென்றான். அவன் போனதும், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போய் மெளனமாக உட்கார்ந்திருந்தான் செல்லையா. எதிரிகளுக்கு மத்தியில் இருப்பது போலவே அவன் ஜாக்கிரதையாகவும் விழிப் போடும் இருந்தான். காரில் யாரோடும் அவன் அதிகமாகப் பேசவில்லை! அவனுடைய அருமை நண்பன் பழனியப்பன் முகத்தில் காரணமில்லாத ஒரு கடுகடுப்புங் காணப்பட்டது.
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டை யணுகும்போது, வாசலுக் கருகில் ஒரு சிறு கூட்டம் வீதியில் கூடி நிற்பதை அவர்கள் கண் ணுற்றனர். செல்லையாவை அழைத்துவரும் காரைக் கண்டதும் கூட்டத்திலிருந்து இரண்டு மூன்று சீட்டிச் சப்தங்கள் கிளம்பின; ஓர் அழுகிய கோழிமுட்டை கிருஷ்ணமூர்த்தியின் காதோரமாக உராய்ந்து சென்றது. அது வந்த திக்கை நோக்கிப் பளிச் சென்று திரும்பினான் செல்லையா.
“காரை நிறுத்துங்கள். அந்த முட்டையை எறிந்தவன் யாரென்று நான் பார்த்துவிட்டு வருகிறேன்,” என்று கூறிய வாறே, காரை விட்டுக் கீழே குதித்துவிடத் துடிப்பவன் போல் செல்லையா காணப்பட்டான். இதற்குள் வீட்டின் வெளிக்கேட்டைத் தாண்டி, காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டது ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் கார்.
“கொஞ்சம் பொறு, தம்பி! யாரோ ஒருவன் என்னைப் பார்த்துக் கொஞ்சம் தமாஷ் பண்ண ஆசைப்பட்டிருக்கிறான். அதற்கு நாம் கோபிக்கலாமா?” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி சிரித்துக்கொண்டே.
“இல்லை. அவன் என்னைப் பார்த்துத்தான் வீசினான். எனக்கு இங்கே பகைவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று தெரிகிறது!” என்றான் செல்லையா.
“சேசே! அப்படியெல்லாம் நினைக்காதே, இங்கு உனக்கு ஏராளமான நண்பர்களிருக்கிறோம். அதாவது நீ அனுமதித்தால்!” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
“ஊஹூம்! எனக்கு நம்பிக்கையில்லை,” என்று அழுத்த மாகக் கூறினான் செல்லையா.
வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும், செல்லையாவைப் பார்க்க, கிருஷ்ணமூர்த்தியின் புத்திரிகளான லலிதாவும், பவா னியும் ஆவலோடு ஓடிவந்தனர். இவள்தான் பவானி! இவள் தான் லலிதா! இருவரும் மகாக் குறும்புக்காரிகள்!” என்று அவர்களைச் செல்லையாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கிருஷ்ணமூர்த்தி.
அந்த ஓவியரின் புத்திரிகள் என்றதும், விருப்போடு பார்த்த செல்லையா வெடுக்கென்று வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனுடைய முகத்தில் சந்தேகத்தின் நிழல் அதிகரித்தது. ஓவியர் கிருஷ்ணமூர்த்தியைத் தன்னுடைய முதல் நம்பர் விரோதியாகவும் நயவஞ்சகராகவும் அவன் உள்ளூரக் கருதினான்.
இதற்குள் துப்பறியும் கேசவனும் உள்ளிருந்து எழுந்து வந்தார். கேசவனது ரோல்ஸ் ராய்ஸ் வண்டி செல்லையாவின் கவனத்தை ஈர்த்தது.
“இது யாருடைய கார்?” என்று கேட்டான் செல்லையா.
“ஏன்? என்னுடையதுதான்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“இதேபோல் கார் வாங்குவதற்குப் போதுமான பணம் எனக்கிருக்கிறதா?” என்று வினவினான் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியை நோக்கி.
“ஒரு கார் என்ன? நீ இஷ்டப்பட்டால் ஒன்பது டஜன் கார் வேண்டுமானாலும் வாங்கலாம். பணத்தைப்பற்றி நீ கவலைப் படவேண்டியதில்லை!” என்றார் அவர்.
“அப்படியானால் நான் இரண்டு கார் வாங்கிக் கொள்கிறேன். எனக்கொன்று; பழனியப்பனுக்கு, ஒன்று. என்ன பழனீ, உனக்கு இந்தக் கார் பிடிக்கிறதா?”
“ஓ! இந்தக் காரில் ஏறிக்கொண்டு நான் ஊரெங்கும் சவாரி செய்தால் என்ன ஜோராயிருக்கும்!” என்று பல்லையிளித்தான் பழனியப்பன்.
எல்லோரும் தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி களில் போய் உட்கார்ந்தனர்.
செல்லையாவை நோக்கி, “எங்களை உனக்கு நினைவிருக்கிறதா? நான் இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறேன்!” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள் பவானி.
“அவ்வளவு தெளிவாக நினைவில்லை ! ஏதோ கொஞ்சம் நினைப்பிருக்கிறது.” என்றான் செல்லையா. “ஆனால் மஞ்சுளா என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைப் பற்றி எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு சிறு போட்டோவை அவன் வெளியி லெடுத்தான்.
பவானியின் மலர்ந்த முகம் சிறிது வாடியது. கண்களும் இலேசாகக் கலங்கின.
அது ஒரு ஏழு வயதுச் சிறுமியின் படமாகக் காணப்பட்டது. கையில் ஒரு பந்தை ஏந்திய வண்ணம், அவள் காமிராவை நோக்கிச் சிரித்துக் கொண்டு நின்றாள்.
“இவள்தான் மஞ்சுளா! சுருள் சுருளாகத் தலைமயிர்! ஆழமான கருவிழிகள்! மல்லிகைப்பூப் பாவாடை! நான் சிறுவனா யிருக்கும்போது இவளோடு விளையாடியிருக்கிறேன். இந்த போட்டோவை இவளேதான் எனக்குக் கொடுத்தாள்….” என்றான் செல்லையா, குரலில் ஆசை வடிய.
“ஐயோ பாவம்! அதைப் பன்னிரண்டு வருஷ காலமாய் நீ உன் சட்டைப் பையிலேயே சுமந்து வந்தாயா? கோடித் தீவிலிருந்து நீ கொண்டு வந்த அதிசயம் இதுதானா?” என்று சிரித்தாள் பவானி. அவளைச் சற்று சினம் ததும்ப நோக்கியவாறு, போட் டோவை வெடுக்கென மீண்டும் தன் பைக்குள் செருகினான் செல்லையா.
பவானி வெட்கத்தோடு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஆமாடி! பாவம் செல்லையாவிற்கு நம்மை எப்படி நினைப்பு இருக்கப்போகிறது ! மஞ்சுளாவைத்தான் அவன் அதிகம் பார்த் திருக்கிறான்! அந்த சின்ன வயதிலே மஞ்சுளாவிற்கு இருந்த சாமர்த்தியம்….ஹூம்!”….என்றாள் லலிதா.
எல்லோருக்கும் காபி கொண்டுவருவதற்காக உள்ளே எழுந்து சென்றாள் லலிதா.
அதே சமயத்தில், தோட்டத்தின் கேட்டைத் தாண்டி, ஒரு வயதான கிழவன் சித்தவெறியனைப்போல சைக்கிளில் வெகு விரைவாக உள்ளே வந்து கொண்டிருந்தான்.
ஒல்லியாய், உயரமாய், நரைத்த மீசையும் குழிவிழுந்த கன்னங்களும் உடையவனாய் அவன் காணப்பட்டான். அவன் கண்களில் ஒருவித வெறி ததும்பும் ஜ்வாலை சுடர்விட்டுக் கொண் டிருந்தது. மொத்தத்தில் அவனைப் பார்க்கும்போது, சோளக் கொல்லைபில் காக்கைகளை மிரட்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட் டிருக்கும் விகாரமான ஒரு பொம்மையைப்போல அவன் தோற்றமளித்தான். எனினும், அவனது முகபாவத்தில் ஏதோ ஒரு பயங்கரமான அம்சமும் கலந்திருந்தது – ஆமாம், அவன் மிதியுண்ட விஷப் பாம்பு போலவே சீறிக்கொண்டு வந்தான்.
தாழ்வாரத்தில் குழுமியிருந்த ஆட்களைக் கண்டதும், கீச்சுக் குரலில் அவன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தான். தன் சைக்கிளை விட்டுக் கீழிறங்கி, தாழ்வாரத்தின் மீது ஏறினான். “அடே கொலை காரன் மகனே!” என்று கூவியவாறு, செல்லையாவை நெருங்கினான் அவன்.
“நில் அங்கே!” என்று அதட்டிக்கொண்டே எழுந்து சென்று, அவனைத் தடுத்து நிறுத்தினார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. அவரைக் கொலை செய்து விடுபவன் போல் முறைத்துப் பார்த்தான் அக்கிழவன்.
அந்தச் சமயத்தில், ஒரு கேத்தல் நிறையச் சூடான காபியும் நாலைந்து கண்ணாடித் தம்ளர்களும் ஒரு தட்டில் சுமந்தவளாய் வீட்டினுள்ளிருந்து வந்துகொண்டிருந்தாள் லலிதா.
கிழவன் குபீரென்று அந்தக் கேத்தலைத் தூக்கி, செல்லை யாவை நோக்கி வீசுவதற்காக ஓங்கினான். அவ்வாறு ஓங்கிய கை தாழ்வதற்குள், அதைப் பாய்ந்து பற்றிக் கேத்தலைத் திறுகிப் பறித்தார் துப்பறியும் கேசவன். கிழவனது உடையிலும் தரையிலும் சிதறியோடியது செந்நிறக் காப்பி.
“அடே கொலைகாரன் மகனே!” என்று மறுபடியும் அலறினான் கிழவன். “என்ன தைரியத்திலடா இவ்வூருக்கு நீ திரும்பி வந்திருக்கிறாய்? உன் அப்பனைப்போல் நீயும் தப்பித்துவிடலா மென்று மனப்பால் குடிக்காதே! மரியாதையாய் இந்த ஊரை விட்டு ஓடிப் போய்விடு. இல்லாவிட்டால் எப்படியும் நாங்கள் உன்னைப் பழிக்குப் பழி வாங்காமல் விடமாட்டோம். அதில் உனக்குச் சந்தேகமிருந்தால், படித்துப்பார் இந்த மொட்டைக் கடிதத்தை!” என்று கூறியவாறு, தன் மடியிலிருந்து ஒரு கவரை யெடுத்து அவ்விளைஞனை நோக்கி வீசியெறிந்தான் அந்தக் கிழவன்.
“இவன்தான் கனகப்பனா? கொலையுண்ட முத்தையா முதலியாரிடம் வேலை பார்த்த பழைய வேலைக்காரனா?” என்று சாவதானமாகக் கேட்டார் துப்பறியும் நிபுணரான கேசவன்.
“ஆமாம்,” என்று கூறியவாறே, ஒரு பழந் துணியை யெடுத்துத் தரையில் சிந்திய காபியைத் துடைத்தார் ஓவியர் கிருஷணமூர்த்தி.
“இதென்ன வீடா, பைத்தியக்கார விடுதியா?” என்று முணு முணுத்த வண்ணம், கனகப்பன் விட்டெறிந்த கடிதத்தைக் கையில் எடுத்தான் பழனியப்பன்.
“அதைக் கொடு இப்படி,” என்று கையை நீட்டினான் செல்லையா.
“கொடுக்காதே!” என்று அதட்டினாள் பவானி.
அதற்குள் கைமாறி விட்டது காகிதம்!
அன்று காலையில் கிருஷ்ணமூர்த்திக்கு வந்த அநாமதேயக் கடிதத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகளில் அது. ஒன்றென் பதைக் கண்டுகொண்டார் துப்பறியும் கேசவன் — அதாவது, முத்தையா முதலியாரை அவருடைய தம்பி செந்தில்நாதர் கொன்றுவிட்டுக் கோடித்தீவுக்கு ஓடிப்போய் விட்டாரென்றும், வெள்ளை மாளிகையின் சொத்துக்களை அனுபவிக்க அந்தக் கொலைகாரனின் மகனான செல்லையா வருகிறான் என்றும் குற்றம் சாட்டும் மொட்டைக் கடிதந்தான் அது! செல்லையா அதைப் படிக்கும்போது, அவன் முகபாவம் எப்படி யிருக்கிறதென்பதை எல்லோரும் உற்று நோக்கினர். தன் உணர்ச்சிகளைச் சற்றேனும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் அதை மனதிற்குள்ளேயே படித்துமுடித்தான்; கடைசியாக, அதைத் தன் சட்டைப்பைக்குள மடித்து வைத்துக்கொண்டான்.
சித்த வெறியனான கனகப்பன் அவனை நோக்கிக் கிறீச்சிட்டான்.
“அடே கொலைகாரன் மகனே! படித்தாயா கடிதத்தை! என் எஜமானர் கொல்லப்படும்போது எப்படித் துடித்திருப்பார் என்பது உனக்குத் தெரியுமா?… வெள்ளை மாளிகையில் வந்து நீ சேரும்வரை பொறுத்திரு! அங்கே நீ அவரைப் பார்க்கலாம். உன் தகப்பனால் கொல்லப்பட்டாரே, அந்த முத்தையா முதலியாரின் ஆவியை நீ அங்கே பார்க்கலாம். அவர் உனக்காக வெள்ளை மாளிகையில் காத்திருக்கிறாரடா பல வருஷங்களாக!” என்று சீறினான் கனகப்பன்.
“என்னது? கொலையுண்ட முத்தையா முதலியாரை நீ வெள்ளை மாளிகையில் இப்போதும் பார்ப்பதுண்டா?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன்.
“ஆமாம்! அவரைப் பார்க்கிறேன்! பார்க்கிறேன்! பல தடவைகளில்! அவர் கொல்லப்பட்ட இரவில் எப்படித் தம் படிப் பறையில் உட்கார்ந்திருந்தாரோ அப்படியே இன்னம் உட்கார்ந் திருப்பதைப் பார்த்திருக்கிறேன்! அவர் திரும்பிப் பார்ப்பார். ஆனால் எதுவும் பேசுவதில்லை! நீர் வெள்ளை மாளிகைக்கு நடு ஜாமத்தில் போய், அவருடைய படிப்பறையில் பாரும். அவரை நீரும் பார்க்கலாம்!” இவ்வாறு கிறீச்சிட்ட கிழட்டுக் கனகப்பன், ஒருகணம் மெய்சிலிர்த்து உடலெல்லாம் ஜில்லிட்டுப்போய் நின்றான். அடுத்த நிமிஷம் தன் சைக்கிளில் ஏறிக்கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் வெளியே சென்று விட்டான்.
மறுபடியும் புதிதாகக் காபி போட்டுக்கொண்டு வந்தாள் லலிதா. செல்லையா அதைச் சிறிது சிறிதாக ரஸித்துக் குடித்தான். பழனியப்பன் அதை ஒரே மூச்சில் விழுங்கிவிட்டு, உதடுகளைச் சப்பிக்கொண்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் விருந்துச் சாப்பாட்டிற்கு இலை போட்டாயிற்று. தக்க சமயத்தில் குசாலாகச் சிரித்துக்கொண்டே கண்ணனும் வந்து சேர்ந்தான். அவன் சிறந்த வாசாலகன். யாரும் தன்னை நம்பும்படி பழகக்கூடியவன். அவனைக் கண்டதும் செல்லையாவின் வதனமண்டலம் தன்னையறியாமலே மலர்ச்சி யுற்றது.
“பன்னிரண்டு வருஷங்களுக்கு அப்பால், இன்றுதான் தமிழ் நாட்டு உணவை நீ ருசி பார்க்கப் போகிறாய். ஆனால், லலிதாவின் கைப்பட்ட எந்த உணவும் ருசியாகத்தானிருக்கும்,” என்று ஒரு குறும்பான புன்னகை புரிந்தான் கண்ணன்.
“இதோ பார்; லலிதா, சோறு மட்டும்தான் வடித்தாள். நான்தான் பாயஸம் பண்ணினேன். உனக்கு அதில் அரைக் கரண்டி கூட ஊற்றமாட்டேன்!” என்று சிணுங்கினாள் பவானி.
“ஓ! வந்ததா ஆபத்து! அப்படியானால் என் வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன், அம்மா!” என்று சிரித்தான் கண்ணன்.
சாப்பாடு முடிந்ததும், செல்லையாவை அழைத்துக்கொண்டு வக்கீல் வேதாசலமும் கிருஷ்ணமூர்த்தியும் ஓர் அந்தரங்க அறைக் குள் சென்றார்கள். தன்னோடு பழனியப்பனும் கலந்துகொள்ள வேண்டுமென்று செல்லையா வற்புறுத்தியதால் அவனும் அங்கு அனுமதிக்கப்பட்டான். துப்பறியும் கேசவன், லிலிதா, பவானி, கண்ணன் ஆகிய நால்வரும், மீண்டும் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தனர்.
வெற்றிலை போட்டுக்கொண்டே பவானி சொன்னாள்: “இந்தச் செல்லையாவின் வருகையை நாங்களெல்லாம் எவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம்! ஆனால் கடைசியில் பார்த்தால் அவனுக்கு ஏனோ எங்களைக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!”
“காரணம் வேறொன்றுமில்லை! அண்ணனைக் கொன்றவர் தான் அவனுடைய தந்தை என உலகம் கூறுகிறது. அதை அவன் நம்பவில்லை..”
“நாங்களுந்தான் நம்பவில்லை” என்றாள் பவானி வெடுக் கென்று.
“எனக்கு அது தெரியும்! மேலே கேள். செல்லையாவிற்குத் தன் தந்தையைக் கொலைவழக்கில் நயவஞ்சகமாகச் சிலர் மாட்டி விட்டு கோடித்தீவிற்கு விரட்டிவிட்டார்கள் என்ற எண்ணம் உறுத்திக் கொண்டிருக்கிறது. அங்கே அவன் தகப்பனார் திடீ ரென்று இறந்துபோனார். சாகும் காலத்தில், ‘யாரையும் நம்பாதே’ என்று அவனுக்கு அவர் உபதேசம் செய்தாராம். பையன் அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டுவிட்டான். கண்மூடித்தனமாக எல்லோர் மீதும் அவநம்பிக்கைப் படுகிறான். எல்லோரையும் தன் எதிரிகளென்று நினைக்கிறான்! முக்கியமாகத் தன்னுடைய தகப்ப னாரின் நண்டர்களைத்தான் அதிகமாகச் சந்தேகிக்கிறான்!” என்றான் கண்ணன்.
“ஆனால் உன்னிடத்தில் மட்டும் அவன் பிரியமாயிருக் கிறானே?” என்று கேட்டாள் லலிதா.
“அதுதான் என்னுடைய விசேஷ வசீகரசக்தி!” என்று கண்ணைச் சிமிட்டினான் கண்ணன். “எல்லாம் இன்னும் இரண் டொரு நாளில் சரியாய்ப் போய்விடும். நானே அவனுக்குத் தக்க புத்தி சொல்லி, அவனைத் திருத்திவிடுகிறேன், பார்! ஆனால் இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கவேண்டும். அவனுக்குத் தெரிந் தால் அவன் என்னையும் நம்பமாட்டான்!”
“எங்களை அவனுக்கு இயற்கைபிலேயே பிடிக்காவிட்டால், அவனது அந்த மனோபாவத்தை நீ சிரமப்பட்டுச் சீர்திருத்த வேண்டிய அவசியமேயில்லை!” என்று கூறிவிட்டு, வெடுக்கென்று எழுந்து சென்றாள் பவானி.
“பார்த்தாயா? உன் சகோதரிக்கு அதற்குள் கோபம் வந்து விட்டது!” என்று லலிதாவை நோக்கினான் கண்ணன்.
“அது கிடக்கட்டும். செல்லையா கோடித்தீவிலிருந்து வந்து விட்டான் என்று எவ்வளவோ ஆசைப்பட்டோம் ! அவனை இங்கே எங்கள் வீட்டிலே வைத்துக்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம்! அவனோ வந்த அன்றைக்கே எங்களை எதிரியாகப் பாவித்துக் குத்தலாகப் பேசுகிறான். எங்கள் அப்பாவும் முன் கோபி! நல்ல வேளை, அவன் எங்கள் வீட்டில் தங்காமல் அவனு டைய பயங்கர வெள்ளை மாளிகைக்குப் போய்விடுவதே நல்லது!” என்றாள் லலிதா.
இந்தச் சமயத்தில் துப்பறியும் கேசவனும் மெல்ல எழுந்து, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு தோட்டத்துப்பக்கம் சென்றார்.
“யார் இந்த ஆசாமி?” என்று லலிதாவைக் கேட்டான் கண்ணன்.
“இவர் ஒரு துப்பறியும் நிபுணர். கேசவன் என்று பெயர்!” என்று பெருமையுடன் புன்முறுவல் செய்தாள் லலிதா
அந்தப் பெயரைக் கேட்டதும், தன்னையறியாமலே திடுக்கிட் டான் கண்ணன். “ஓ! துப்பறியும் கேசவனா? இவர் ரொம்பப் பிரசித்தி பெற்றவராச்சே? இங்கே எதற்காக வந்திருக்கிறார்?”
“அப்பா வரச் சொன்னாராம்!” என்றாள் லலிதா.
“எதற்காக?” என்று கேட்டான் கண்ணன்.
“அது எனக்கெப்படித் தெரியும்?”
“லலிதா, பொய் சொல்லாதே! உனக்குத் தெரியாமல் உங்க அப்பா ஒன்றுமே செய்யமாட்டார்,” என்று சிரித்தான் கண்ணன்.
“எனக்குத் தெரியும் என்றே வைத்துக்கொள்ளேன். உன்னிடத்தில் அதைச் சொல்வதற்கு எனக்கு அதிகாரமில்லை!” என்றாள் அவள்.
“அது போகட்டும் ! துப்பறியும் கேசவன் என்னைத் தன் அளிஸ்டெண்டாகவோ, அமெச்சூர் துப்பறிபவனாகவோ சேர்த்துக் கொள்வாரா?”
“வேண்டுமானால் நான் கேட்டுப் பார்க்கிறேன்.”
“வேண்டாம், அம்மா. நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீ நிஜமாகவே அவரிடம் போய்க் கேட்டு வைக்காதே!” என்று விடைபெற்றுச் சென்றான் கண்ணன்.
அவன் போனதும் துப்பறியும் கேசவனிடம் லலிதா வந்து, “அந்தக் கண்ணன் உங்களின் கீழே வேலை பார்க்க ஆசைப்படுகிறான்! அவனால் உங்களுக்கு உதவி உண்டா?” என்றாள்.
“இருக்கலாம்! அவனை உனக்கு நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன்!”
“சிறு வயதிலிருந்தே தெரியும்! யாரும் பிரியப்படும்படி நடந்துகொள்ளக் கூடியவன்!”
“அவன் எப்படியோ செல்லையாவின் பிரியத்தையும், நம்பிக் கையையும் சம்பாதித்து விட்டான். அது கிடக்கட்டும். இந்தச்சித்த வெறியன் கனகப்பனைப்பற்றிச் சொல்லு! அவனுடைய எஜமானர் கொலையுண்ட பிறகுதான் அவனுக்குச் சித்தவெறி வந்துவிட்டதா? அதற்குப் பிறகுதான் சின்ன யஜமானரான செந்தில்நாத முதலியார் மீது அவனுக்கு க்ஷரத்திரம் ஏற்பட்டதா?”
“ஆமாம். வெள்ளை மாளிகையிலே அவன் பயங்கரமாக உறுமியவண்ணம் வசித்துக் கொண்டிருக்கிறான். செல்லையா அங்கு வரப்போவது தெரிந்ததும் அவன் இன்னும் மோசமாகி விட்டான்! கொலை அவனுடைய மூளையைக் குழப்பிவிட்டது என்கிறார் என் அப்பா!”
அந்தச் சித்த வெறியனைப் பற்றிச் சிந்தனையில் ஆழ்ந்தார் கேசவன்.
அத்தியாயம் – 6
துப்பறிபவரின் யுக்தி
சுமார் அரைமணி நேரத்திற்கெல்லாம், செல்லையா, பழனி யப்பன், வேதாசலம், கிருஷ்ணமூர்த்தி இந் நால்வரும் அவர்கள் ஆலோசனை புரிந்த அந்தரங்க அறைக்குள்ளிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தனர். முகத் தோற்றங்களைப் பார்க்கும்போது, அவர்களிடையே ஏதோ மனக்கசப்பு விளைந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.
வக்கீல் வேதாசலம் ஒரு தர்ம சங்கடத்தில் தத்தளிப்பவர் போல் காணப்பட்டார். பழனியப்பன் ஏதோ அசட்டு உறுதி கொண்டவனாக நெஞ்சை நிமிர்த்தி நடந்தான். சர்ப்பங்கள் வாழும் புதர்களிடையே நடமாடுபவன் போல், செல்லையாவின் கண்களில் ஒருவித ஜாக்கிரபாவம் ததும்பியது. எப்போதும் புன் முறுவல் செய்யும் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியோ, மறைக்க முடியாத கோபாவேசம் கொண்டவராய்த் தோற்றமளித்தார்.
நால்வரும் தாழ்வாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனர். வரும்போதே, “செல்லையா, உன்னை நாங்கள் இப்போதே உன்னுடைய வெள்ளை மாளிகையில் கொண்டுபோய் விடுகிறோம். உனக்குரிய சொத்துக்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்புவித்து விடுகிறோம். அதன் பிறகு இதர ஏற்பாடுகளை நீ உன் இஷ்டம் போல் செய்து கொள்ளலாம்!” என்கிறார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. இனிமேல் அவனுடைய மூஞ்சியிலேயே விழிக்க விரும்பாதவர் போல் அவர் வார்த்தைகள் தொனித்தன.
“நம்முடைய உதவியோ, யோசனைகளோ செல்லையாவுக்குத் தேவையில்லையாம்!” என்றார் அவர், துப்பறியும் கேசவனை நோக்கி. “அவனும் பழனியப்பனுமே எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்ளப் போகிறார்களாம்!”
“ஆமாம்,” என்று கடுகடுப்போடு கூறினான் பழனியப்பன். “சொத்துக்களை எங்கள் வசத்தில் ஒப்படைத்து விட்டு, நீங்கள் விலகிக்கொண்டு விடலாம். செல்லையாவும் நானும் சென்னையி லிருந்து ஒரு நல்ல வக்கீலைக் கொண்டு வந்து, எல்லாம் சரியாயிருக்கிறதா வென்று பரிசோதித்துக் கொள்கிறோம்!”
ஓவியர் கிருஷ்ணமூர்த்திக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. பழனியப்பனை அறைய வேண்டும் போல் அவர் கை தினவெடுத்தது. அவருடைய மகள் பவானிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
“செல்லையா, உன்னைப் பார்ப்பதற்கு முன்பு, நீ ஒரு காட்டு மிராண்டியாயிருப்பாயோ என்று நாங்கள் சந்தேகித்ததுண்டு. ஆனால் நீ அதைக் காட்டிலும் மோசமாயிருக்கிறாய். நீ ஒரு நன்றி கெட்ட முட்டாள்!” என்றாள் அவள் துடுக்குடன்.
செல்லையாவின் கண்கள் சினத்தால் சிவந்தன. ஏதோ பதில் கூறுவதற்கு அவன் வாயெடுத்தான். ஆனால் அடக்கிக்கொண் டான். ‘நல்ல வேளையாகக் கண்ணன் நமக்கு ஏற்கெனவே எச்சரிக்கை செய்து வைத்தான். இல்லாவிட்டால் இந்தக் கிருஷ்ண மூர்த்தியையும் இவரது பெண்களையும் நமது நண்பர்களென்றல்லவா நாம் நம்பியிருப்போம்!’ என்பதுபோல் பழனியப்பனை நோக்கிப் பேசாமல் பேசின செல்லையாவின் விழிகள். பவானியின் சுடு சொற்களுக்குப் பதிலளிக்காமல் விடுவதா என்ற அகங்காரம் அவன் உள்ளத்தை உறுத்தியது.
“பவானீ! நான் மட்டும் முட்டாளல்ல; என் தந்தையும் கூடத்தான் ! சில தகுதியற்ற நபர்களை அவர் நண்பர்களென்று நம்பி மோசம் போனார்! ஆனால், அதே தவறை நான் செய்ய மாட்டேன்!” என்றான் அவன்.
“செல்லையா, ஏன் இந்த வீண் விவகாரம்? வா, உன்னு டைய வெள்ளை மாளிகைக்குப் போகலாம்,” என்று தம் இருக்கையை விட்டு எழுந்தார் துப்பறியும் கேசவன்.
அவரைச் சற்று சந்தேகக் கண்களோடு நோக்கினான் செல்லையா. துப்பறியும் கேசவன் சிரித்தார்.
“என்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார்காரைப் பார்த்து ஆசைப்பட்டாயே ? அதில் நீ ஏறிப்பார்க்க வேண்டாமா?” என்றும் கேட்டார். “அதில் ஏறிப் போயே உன்னுடைய வெள்ளை மாளிகையைப் பார்த்துவிடலாம், வா!”
செல்லையாவின் பார்வை அவனையறியாமலே அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் பக்கம் திரும்பியது. அதன் கம்பீர்யத்தின் கவர்ச்சியால் அவன் முகம் மலர்ந்தது. ஆனால், பழனியப்பன் குறுக்கிட்டான்.
“அப்படியானால் நானும் செல்லையா கூடவே அந்தக் காரில் வருவேன்!” என்றான் அவன்.
“நீ யாரப்பா அழையா விருந்தாளி?” என்று அவன் பக்கமாகத் திரும்பினார் துப்பறியும் கேசவன்.
“நான் யாராய் இருந்தால் உமக்கென்ன? முதலில் நீர் யார்? அதைச் சொல்லும்.”
“என் பெயர் துப்பறியும் கேசவன்! ஆனால் நீ யார் என்பது தான் எனக்கு இன்னம் சரியாகத் தெரியவில்லை!”
அந்தப் பெயரைக் கேட்டதும், ஒருவித வியப்பும், திகைப்பும் அடைந்தவனாய், வாயைப் பிளந்துகொண்டு நின்றான் பழனீயப்பன். செல்லையாவின் தோளில் கையை வைத்தவாறு, அவனைக் காருக்கு அழைத்துச் சென்றார் துப்பறியும் நிபுணர்.
“சரி, வெள்ளை மாளிகைக்கு எப்படிப் போகவேண்டுமென யாராவது வழி சொல்லுவீர்களா?” என்று கேட்டார் அவர்.
“சுலபமான வழிதான்! நேரே டவுனுக்குள் போய், திருவெற்றியூர் ரோடு வழியாகப் போங்கள். அதில் ஒரு கிளை ரோடு பிரியும். முக்கால் மைல் போனால் தனியாக ஒரு தோப்பில் வெள்ளைச் சலவைக்கல் மாளிகை தென்படும்!” என்றார் ஓவியர்.
முன் சீட்டில் துப்பறியும் கேசவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் செல்லையா. எண்பத்தைந்து மைல் வேகத்தில் கார் பறந்துகொண்டிருப்பதைக் காட்டியது ஸ்பீடா மீட்டர். அந்தப் புதுமையான அனுபவத்தால், அவன் கண்களில் மகிழ்ச்சி தளும்பியது. இதழ்களில் புன்னகை பொலிந்தது.
“இந்தக் கார் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!” என்றான் செல்லையா.
“வாஸ்தவம்! எனக்குக்கூட அப்படித்தான்!” என்று அவன் முகத்தைப் பார்க்காமலே பதிலளித்தார் துப்பறியும் கேசவன். பிறகு திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவர் போல அவன் பக்கம் திரும்பினார்; “ஆமாம், நீ ஏனப்பா இவ் வளவு முட்டாள்தனமாக நடந்துகொள்கிறாய்? ” என்று கேட்டார்.
இந்த வார்த்தையைக் கேட்டதும், அதுகாறும் செல்லையாவின் முகத்தில் ததும்பிய மலர்ச்சியானது பளிச்சென்று மறைந்து, அதில் கடு கடுப்பும் சந்தேகமும் குடிபுகுந்தது.
“என்ன? நான் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறேனா ? இப்படி மரியாதையில்லாமல் பேசுவதற்காகத்தான் என்னைக் காரில் அழைத்து வந்தீரா?”
“உன்னை அவமதிக்க நான் ஆசைப்படவில்லை. ஆனால், நீதான் உன்னையறியாமலே உன் நண்பர்களை அவமதித்து விடுகிறாய்! அதனால் உனக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் இழந்துவிடுகிறாய்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“என் நண்பர்களென்று நீர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ஓவியர் கிருஷ்ணமூர்த்தியையா?”
“ஏன், அவருடைய பெண்கள்…”
“இல்லை. அவர்களெல்லாம் என் நண்பர்களல்ல,” என்று அழுத்தமாகக் கூறினான் செல்லையா. “ஒரு வேளை அவர்கள் என் விரோதிகளாகக்கூட இருக்கலாம்! ஏன் நீர் கூட என் விரோதியாய் இருக்கலாம்!” என்றான் செல்லையா.
“உண்மைதான்!” என்று ஆமோதித்தார் துப்பறியும் கேசவன். “மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்! நீ விரோதிகள் வேண்டுமென்று தேட ஆரம்பித்தால், விரைவில் அவர்களைச் சந்திப்பாய்! இருந்தாலும் உனக்கு யாருமே ஓரளவாவது நண்பர்களில்லையா?”
“ஏன் இல்லை? கண்ணனும் பழனியப்பனுமே ஓரளவாவது என் உண்மையான தோழர்கள்!”
“ஓஹோ! அப்படியானால் நீ ஒரு பெரிய மேதாவிதான்! உன்னை யாருமே ஜயிக்க முடியாது!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன்.
“நான் மேதாவியோ, முட்டாளோ? அதைப்பற்றி உமக்குக் கவலையில்லை. உமக்குச் சம்பந்தமில்லாத விவகாரத்தில் நீர் ஏன் தலையிடுகிறீர்?” என்றான் செல்லையா.
“அதுதான் என் தொழில் தம்பீ!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன். “நான் ஒரு துப்பறியும் நிபுணன்! அப்படி யென்றால் என்னவென்பது உனக்குத் தெரியுமல்லவா?”
“தெரியும்! துப்பறியும் நாவல் ஒன்றை நான் படித்திருக்கிறேன். நீர் ஒரு போலீஸ்காரர்!”
“அதுதான் இல்லை. சர்க்காரிடம் சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டு பொது மக்களுக்காக இரவு பகலாய் அரும்பாடு பட்டு உழைப்பவர்கள் போலீஸ்காரர்கள். ஆனால் நானோ, தனிப் பட்டவர்களுக்காகச் சொற்பமாக வேலை செய்து விட்டு, ஏராள மாகப் பணம் வாங்குவேன். எனக்குப் பணம் கொடுக்கும் தகுதி யுடையவர்கள் யார் வேண்டுமானாலும் என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“நீர் இப்பொழுது யாருக்காக வேலை செய்கிறீர்?”
“ஓவியர் கிருஷ்ணமூர்த்திக்காக! முத்தையா முதலியாரைக் கொலை செய்தது உன் தந்தையல்லவென்று அவர் நிச்சயமாக நம்புகிறார்! உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிப்பதன் மூலம், உன் தந்தையின் மீதுள்ள அபவாதத்தை அகற்றுவதற்காக அவர் என்னை அமர்த்தியிருக்கிறார்!”
இதைக் கேட்டதும், சிறிது நேரம் மௌனமாகச் சிந்தனை செய்தான் செல்லையா. பிறகு திடீரென்று கேட்டான், “கிருஷ்ண மூர்த்தியும் நீரும் நெடுநாள் சிநேகிதர்களோ?”
” அதெல்லாமில்லை! இன்று முதற்கொண்டுதான் அவர் எனக்கு அறிமுகமாகியிருக்கிறார்!”
“என் தந்தையின் விஷயத்தில் அவருக்கென்ன அவ்வளவு அக்கறை?”
“அவர் உன் தந்தையின் நண்பர் என்பதனால்தான்!”
“அதை நான் நம்ப முடியாது. நீர் அவருக்காக வேலை செய்யவேண்டிய அவசியமுமில்லை!”
“அதெப்படி முடியும்? எனக்குப் பணம் கொடுப்பவர் யாராயிருந்தாலும் நான் வேலை செய்யத்தானே வேண்டும்?”
“உமக்கு அவர் எவ்வளவு கொடுப்பார்?”
“அதை இன்னும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை!”
“அவர் கொடுப்பதைவிட இரண்டு மடங்கு சன்மானம் உமக்கு நான் தருகிறேன். எனக்கு நீர் வேலை செய்வீரா?”
“தாராளமாக!” என்று சொல்லிக்கொண்டே வெள்ளை மாளிகையின் காம்பவுண்டுக்குள் காரைத் திருப்பி, ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தினார் துப்பறியும் கேசவன்.
“ஆனால் ஒரு விஷயம்! இதை நான் ஓவியர் கிருஷ்ண மூர்த்தியிடம் தெரிவித்துவிடவேண்டும்.”
“அவர் உம்மை விட மறுத்தால்?”
“அவ்வளவு பணம் உன்னைப்போல் கொடுக்க அவரிடம் இல்லை! செல்லையா! அவரை நான் சரி பண்ணிக்கொள்கிறேன். அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்,” என்றார் துப்பறியும் கேசவன்.
“உம்மைத் துப்பறியும் வேலைக்கு வைத்துக்கொண்டால் உண்மையை மட்டுந்தான் கண்டுபிடிப்பீரா?”
“ஆமாம். அப்புறம் வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் ! உதாரணமாகப் பார், செல்லையா! என்னைத் துப்பறியும் வேலைக்கு ஒருவர் அமர்த்திக்கொண்டார்! அதாவது உண்மை யான கொலைகாரனைக் கண்டுபிடிக்கும்படி சொன்னார்! நான் கஷ்டப்பட்டு அவர்தான் அந்தக் கொலைகாரன் எனக் கண்டுபிடித்தேன். அவர் எனக்குச் சன்மானம் கொடுக்கவில்லை. ஆனால் தூக்குமரத்தில் தொங்கினார்.”
அதே சமயம் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் வேதாசலம், பழனியப்பன் மூவரும் வெள்ளை மாளிகைக்கு வேறொரு மோட்டார் காரில் வந்திறங்கினார்கள்.
“ஏன் வெளியே நிற்கிறீர்கள் ? பங்களாவின் உள்ளே போய் உட்கார்ந்திருக்கலாமே?” என்று துப்பறியும் கேசவனை நோக்கினார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
வெள்ளை மாளிகை மர்ம மாளிகைபோல் காட்சியளித்தது மதில் சுவரையுடைய ஒரு பெரிய தோப்பின் நடுவிலே, பிரும் மாண்டமான வெண்ணிறத் தூண்களுடன் வானளாவி நிற்கும் பழையகாலத்துக் கட்டிடம் அது. அந்தப் பங்களாவைச் சுற்றிலும் பூப் பந்தல்களும், தடாகங்களும் கவனிக்கப்படாமல் நிராதரவாய் இருந்தன. அந்தக் காம்பவுண்டிற்குள், பங்களாவிற்குச் சிறிது தள்ளி, பத்மாவதி வசிக்கும் சிறு விடுதி. விருந்தினர் அவுட் ஹவுஸாகக் கட்டப்பட்ட விடுதி அது! இன்னொருபுறம் வேலைக் காரன் கனகப்பன் வசிப்பதற்கு ‘சர்வெண்டு க்வார்ட்டர்ஸ்1 வெள்ளை மாளிகைத் தோப்பின் பின்புறம், சமுத்திரத்தில்போய விழக்கூடிய கால்வாய் ஓடியது.
“பங்களாவில் இப்போது யாரிருக்கிறார்கள்?” என்று கேட்டான் செல்லையா.
“குருந்தாயி என்ற வேலைக்காரியை அமர்த்தியிருக்கிறேன்! அவள் காலையில் வந்து, சாயங்காலம் வீட்டுக்குப் போய்விடுவாள். உனக்கிஷ்டமானால் அவளைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ளலாம்…”
“இல்லை, இல்லை. நாங்கள் அதற்கெல்லாம் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறோம்!” என்று குறுக்கிட்டான் பழனியப்பன்.
அவனுக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை ஓவியர் கிருஷ்ண மூர்த்தி. நேரே சென்று, அவர் பங்களாவின் முன் வாசல் கதவைத் தட்டினார். நடுத்தர வயதுள்ள மாதொருத்தி வந்து கதவைத் திறந்தாள். அவள்தான் குருந்தாயி. எல்லோரும் வெள்ளை மாளிகையின் உள்ளே நுழைந்தனர்.
அது மிகவும் பழங்காலத்துக் கட்டிடமாகையால், ஜன்னல் கள் அதிகமில்லாதபடி, உள்ளே இருளடைந்திருந்தது.
முதலில் ஒரு பெரிய ஹால். அந்த ஹாலில், வெளிக் கதவுக்கு நேரே, மாடிக்குச் செல்லும் ஒரு விசாலமான படிக்கட்டு. அந்தப் படிக்கட்டின் ஒருபுறத்தில், பழமையான பெரிய சுவர்க் கடிகாரம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அந்தக் கடிகாரத்தின்மீது தூசியும் சிலந்தி வலைகளும் படர்ந்திருந்தன.
“முத்தையா முதலியாரது கொலை வழக்கில் பிராதானமாகப் பிரஸ்தாபிக்கப்பட்ட கடிகாரம் இதுதான் போலும்?” என்று வின வினார் துப்பறியும் கேசவன்.
“ஆம்; இதுவேதான் அந்தக் கடிகாரம்!” என்று பதிலளித் தார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. “பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு அந்தக் கொலை நடந்தது. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை இங்குள்ள தட்டுமுட்டுச் சாமான்களைக்கூட யாரும் இடம் பெயர்த்து எடுத்து வைக்கவில்லை. இவ்வளவு பெரிய வீட்டிற்கு ஒரே வேலைக்காரியை அமர்த்தியிருக்கிறபடியாலே, சமையற் கட்டும் சல்லாப கூடமும் மட்டுந்தான் கூட்டிச் சுத்தமாக வைக்கப் பட்டிருக்கின்றன! மற்ற அறைகளெல்லாம் மூடப்பட்டே இருந்து வந்திருக்கின்றன. இந்த வீடு முழுவதையும் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டுமானால் நாலைநது ஆட்கள் தேவைப்படும்! இதோ பாருங்கள்; இந்தப் படிக்கட்டுக்கு வடக்குப் புறத்திலிருப்பது தான் முத்தையா முதலியாரின் அந்தரங்க அறையாயிருந்தது. இதே அறையில்தான் அவர் நடு இரவில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்! பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு இப்போதுதான் திறந்து பார்க்கிறோம்!” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
அந்தப் பயங்கரமான அறையின் கதவைத் திறந்து, உட்புறத்தே உற்றுப் பார்த்தார் துப்பறியும் கேசவன்; பிறகு, அவ் வறையின் வாயிற்படியில் நின்றவாறே, அந்த ஹால் முழுதையும் தன் விழிகளால் துழாவினார்; அங்கிருந்து படிக்கட்டில் வந்து ஏறி, அதன்மேல் கோடி வரையில் நடந்துபோய் மறுபடியும் கீழே இறங்கினார். அவர் முகத்தில் ஒரு விநோதமான புன்னகை நிலா வீசலாயிற்று.
ஆனால் இதிலெல்லாம் சிரத்தை கொள்ளவில்லை செல்லையா. அந்த மாபெரும் மாளிகையின் கம்பீரமான தோற்றம் அவனை பிரமிக்க வைத்தது. குழந்தைப் பருவ முதல் அவன் கோடித் தீவில் அனுபவித்த குடிசை வாழ்க்கை எங்கே ? இப்போது அவன் அனுபவிக்கப் போகும் இந்த உப்பரிகையின் உல்லாச வாழ்வு எங்கே? உண்மையிலேயே எல்லாம் ஒரு கனவு போலிருந்தது அவனுக்கு. மனங்கொள்ளாப் பெருமிதம் அவனது வாலிப விழிகளில் ததும்பியது.
“பழனியப்பா, இந்தப் பங்களா எப்படி? உனக்குப் பிடித் திருக்கிறதா?” என்றான் செல்லையா தன் உற்சாகத்தை வெளிக் காட்டாத தொனியில் பழனியப்பன் ஒருவன் மீதுதான் தற்காலீகமாக அவனுக்கு நம்பிக்கை; மனப்பூர்வமான நட்பு! “அம்மாடி! எம்மாம் பெரிய வீடு! இது நிஜமாகவே உன்னுடையதாகப் போகிறதா, செல்லையா?” என்று வாயைப் பிளந்தான் பழனியப்பன்.
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே, அங்கு வாசற்படியில் வந்து நின்றாள் ஒரு பருவப் பெண். அவள் அணிந் திருந்த நீல ரவிக்கையும், செந்நிற வாயில் சேலையும் அவளது பருவ அழகை மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டின. அவளைச் சுற்றி கம்மென்ற சந்தனச் சோப்பின் வாசனையும், பௌடர், அத்தர் செண்டு, ஜாதி மல்லிகை முதலானவற்றின் மணமும் வீசின. அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே, இவள்தான் மஞ் சுளா போலும் என்று ஊகித்துக்கொண்டார் துப்பறியும் கேசவன். மயக்கு விழி மோகினியாக நடிக்க வந்திருக்கும் சினிமா நடிகை போலவே அவள் தோற்றமளிப்பதையும் துப்பறியும் கேசவன் புரிந்து கொண்டார். வாயிற்படியில் நின்றவாறே, அவள் தன் கரு நீலக் கண்களால் செல்லையாவைக் கனிவோடு நோக்கினாள். “செல்லையா, என்னை உனக்குத் தெரியவில்லை? நான் தான் மஞ்சுளா! நாமிருவரும் இதே வீட்டில் குழந்தைகளாய் விளையாடி யிருக்கிறோம். எனக்கு அதெல்லாம் அப்படியே நினை விருக்கிறது. உனக்கு நினைவிருக்கிறதா?” என்றாள் அவள், ஒரு பெருமூச்சுடன். அவனுடைய நினைவால் அப்படியே இத்தனை வருஷங்களும் வாடிக் கொண்டிருப்பவள் போலவே உருக்கமாக நடித்தாள் மஞ்சுளா.
“நன்றாய் நினைவிருக்கிறது!” என்று வெட்கம் ததும்பக் குறுநகை புரிந்தான் செல்லையா. அவ்விருவரையும் மாறி மாறி நோக்கிப் பல்லைபிளித்தான் அவலட்சண முகம் படைத்த பழனியப்பன்.
“உன்னை அவன் மறக்கவேயில்லை, அம்மா. உன் போட்டோவை அவன் பன்னிரண்டு வருஷ காலமாய்த் தன் சட்டைப் பையிலேயே சுமந்து திரிகிறான்!” என்றான் பழனியப்பன்.
“நிஜந்தானா?” என்று வியப்போடு வினவினாள் மஞ்சுளா, உணாச்சிவசமானவள் போன்ற பார்வையுடன்.
“ஆமாம்!” என்று லஜ்ஜை ததும்பத் தன் தலையைக் கவிழ்த்தான் செல்லையா.
“நீங்கள் யார் ? செல்லையாவின் சிநேகிதரா?” என்றாள் அவள் பழனியப்பனை நோக்கி.
“ஆமாம் பெண்ணே! நானும், அவனும் பழமையான தோழர்கள். அதேபோல் உனக்கும் அவன் பால்யத் தோழன். இப்போது நாம் மூன்றுபேரும் ஒன்றாகி விட்டோம்! இல்லையா?” என்றான் நேச பாவத்தோடு பழனியப்பன்.
“ஆமாம், ஆமாம்!” என்றாள் மஞ்சுளா. பழனியப்பன் ஒரு தினுசான பேதை என்று அவளுக்குப்பட்டது. “நீங்கள் செல்லையாவோடு கோடித் தீவில் வசித்தீர்களா? அவர் அங்கே எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டு மென்று எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்றாள் மஞ்சுளா.
“அதை செல்லையாவின் வாயாலேயே கேட்டால்தான் உங்கள் ஆசை அடங்கும்!” என்று சிரித்தான் பழனியப்பன்.
அவள் கடைக் கண்ணால் செல்லையாவை நோக்கினாள். “செல்லையா, உன் வேலையெல்லாம் முடிந்த பிறகு நம் வீட்டுக்கு வாயேன். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வரலாம்!” என்று கூறிய மஞ்சுளாவின் குரலில் பரிவு மிளிர்ந்தது.
“ஆகட்டும்” என்றான் செல்லையா பாசப் புன்னகையோடு, அவளைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே, அவனது நெஞ்சத்தைக் காந்தம் போல் இழுத்துக் கொண்டே வெளியே ஓடினாள் மஞ்சுளா.
ஓவியர் கிருஷ்ணமூர்த்திக்கு ஏனோ அந்த மாளிகையில் நிற்பதற்கே பிடிக்கவில்லை. வக்கீல் வேதாசலத்தை நோக்கி, “வக்கீல் சார், செல்லையாவின் சொத்துக்களை யெல்லாம் நீங்களேயிருந்து அவனிடம் ஒப்படையுங்கள்! நான் வீட்டுக்குப் போகிறேன்!” என்றார் அவர்.
“நான் கூடத்தான் புறப்பட வேண்டும்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“ஏன்? நீங்கள் இங்கேயே தங்கியிருந்து எனக்காக வேலை செய்ய மாட்டீர்களா?” என்று ஆவலோடும் பீதியோடும் கேட்டான் செல்லையா.
“உன் வேலையாகத்தான் இப்போது நான் சென்னைக்குப் போகிறேன். நாளைக் காலையில் திரும்பி வந்துவிடுவேன்!” என்றார் துப்பறியும் கேசவன்.
கேசவனும் செல்லையாவும் இப்படிப் பேசிக்கொள்வது ஒவியர் கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பாக இருந்தது. வெள்ளை மாளிகையை விட்டுப் புறப்பட்டுப் போகும் வழியில், செல்லையாவுக்கும் தனக்கும் நடந்த சம்பாஷணைகளை அவரிடம் விளக்கிக் கூறினார் துப்பறியும் கேசவன்.
“நல்ல யுக்தி செய்தீர்கள்!” என்று சிரித்தார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. “அந்தப் பைத்தியக்காரப் பையன் எங்களை நம்பமாட்டேன் என்கிறான். என்னை ஓர் அணுவளவுகூட நம்ப முடியாது என்பதுபோல் நேரிலே என் முகத்தில் அடித்தது மாதிரிப் பேசிவிட்டான். இதற்கு மேல் அவனைப் பார்க்கக்கூட எனக்குப் பிடிக்க வில்லை தான். ஆனால் அவனுடைய அப்பாவின் சினேகிதத் திற்காக அவனைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது! முறித்துக் கொண்டு போகிறவனை என்ன செய்வது என யோசித்தேன். ஆனால் நீங்கள் சாதுரியமாகப் பேச்சுக் கொடுத்து அவனே உங்களைத் துப்பறியும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும்படி செய்து விட்டீர்கள்!” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
“இதில் சாதுர்யம் ஒன்றுமில்லை! நான் பட்டவர்த்தனமாகச் சில வார்த்தைகள் பேசினேன். பையன் என் விருப்பம் போல் வளைந்து வந்துவிட்டான்!”
“ரொம்ப சந்தோஷம்! அடுத்தபடியாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”
“முத்தையா முதலியார் கொலை வழக்கை விசாரித்த நீதிபதியையும், அதில் சாட்சி சொன்ன கிழச்சாமியாரையும் நான் பார்த்து வரப் போகிறேன்! அவரை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும்! அறவானந்த அடிகளார் மடத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஆனால் அந்தச் சாமியாரை நீங்கள் விசாரிப்பதால் உங்களுக்கு ஒரு பலனுமில்லை. கொலை வழக்கின் விசாரணையில் சாட்சியம் சொன்னதைத் தவிரப் புதிதாக ஒன்றையும் அவர் சொல்லி விடப் போவதில்லை!” என்றார் ஓவியர்.
“அதையும் பார்க்கலாம். ஏதாவது ஒரு யூகம் கிடைக்கலாம்!” என்றார் துப்பறியும் கேசவன்.
– தொடரும்…
– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.