கொஞ்சம் பால் இருக்கா?





அரை மணி கால யோசனைக்குப் பிறகு இவள் தயங்கித் தயங்கி வெளியே வந்தாள். குழந்தை துணியால் கட்டிய தூளியில் அழுது கொண்டிருந்தது. இவள் கையில் ஒரு சிறிய தகரக் குவளை. அதன் கைப்பிடியில் கீழ் பகுதி உடைந்திருந்தது. மேல் பகுதி இன்னும் சில நாட்களில் உடைந்துவிடும். இவள் வாழ்க்கையே விளிம்பில் நிற்கக் கிடக்க, தகரக் குவளையின் கைப்பிடி பற்றி கவலைப்பவில்லை.

அடுத்த வீட்டுக்குப் போய் கடன் கேட்பது வழக்கமாகி விட்டது. நேற்று முன்தினம் ரொட்டி சுட மாவு…நேற்று அரிசி…இன்று குழந்தைக்கு பால்…நாளை? வேண்டாம், நாளை பற்றி இப்போதே ஏன் ஆரம்பிக்க வேண்டும்? இன்றைய பாடு இன்னும் ஓய்ந்த பாடில்லையே?
அடுத்த வீட்டு வாசலில் நின்றாள். தன் பெயரை சொல்லாமல், அடுத்த வீட்டுக்காரியின் பெயரை கூவி அழைத்தாள் – ஆனால் சத்தமாக கூவவில்லை. அடுத்த வீட்டுக்காரிக்குக் கேட்டிருக்கும். இவள் கையிலிருந்த தகரக் குவளை சிறிது நடுங்கியது; இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.
அடுத்த வீட்டுக்காரியின் தலை மட்டும் வெளியில் நீண்டது. அவள் முகத்தில் கேள்விக்குறி. அவள் எதுவும் பேசவில்லை, கேட்கவில்லை.
‘என்ன?’ என்றது அவளின் முகம்.
“குழந்தைக்கு கொஞ்சம் பால் கிடைக்குமா?”
“வேற வீட்டுல நீ கேட்டு பாரேன்.” அவளின் முகம் மறைந்து.
அடுத்த வீட்டிலிருந்து சிறிது தள்ளி வந்து நின்று பார்த்தாள். ‘வேற வீட்டுல நீ கேட்டு பாரேன்’ வேறு எந்த வீட்டுல கேக்கறது? பத்தடிக்கு ஒரு டெண்டு இருந்தது. ஒவ்வொரு டெண்டும் ஒரு வீடு! இரண்டாயிரம் டெண்டுகள் இருக்குமா? எண்ணுவதற்கே தயக்கம். எண்ணினால் தாக்கம். துக்கம். அழுக்கடைந்த பழுப்புத் துணியால் கட்டப்பட்ட டெண்ட் குடியிருப்பு முகாம். ஒவ்வொன்றிலும் எத்தனை மனிதர் ‘வாழ்கிறார்கள்’ என்பது தெரியவில்லை. எப்படி ‘வாழ்கிறார்கள்’ என்பதும் புரியவில்லை. முகாம் பகுதியைத் தாண்டி சுற்றிலும் தரை மட்டமான கட்டிடங்கள்…டெண்டுகளில் வசிப்போரின் முற்கால தங்குமிடம்.
இவள் தகரக் குவளையுடன் ஓர் இடிந்து கிடந்த காரைக் குவியல் மேல் அமர்ந்தாள். தங்கள் நாடு, தங்கள் மண், தங்கள் வீடு என்றெல்லாம் நினத்திருந்த காலம் மாறி, இன்று இங்கே, நாளை எங்கேயோ என ஊசலாடும் அவலம்.
மேலும் அழ திராணி இல்லாமல் குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது. இவள் நெடு நேரம் வானத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். இவள் மனதைத் துளைத்த கேள்வியைப்போல வானம் நீண்டு கிடந்தது.
பி.கு. உலகில் தற்போது நடந்துவரும் உள் நாட்டு போர்களினால் பாதிக்கப் பட்ட வெகுளி மக்களின் அன்றாட அவல நிலை. இதற்கு காரணம் – இரண்டே சொற்கள்: ஆட்சி வெறி, பண வெறி.