கைக்கு கை மாறும் பணமே…!
“குடும்மா..! ஏம்மா.? நான் குத்துக்கல்லாட்டம் பக்கத்துல நிக்கயில நீ போயி தண்ணில கைய வச்சு இதெல்லாம் கழுவிகிட்டு..! நவுரு…”
சாதாரணமாய் நான் எப்போதாவது இதுபோன்ற வேலைகளை செய்தால் ‘ எனக்கென்ன ‘ என்பது போல் கண்டும் காணாமல் போவாள் பொன்னி..
“அம்மா காயி ஏதாவது அரியணுமா..சொல்லு…
நேத்தே தேங்கா துருவணும்னு சொல்லிக்கிட்டிருந்தியே..குடு..துருவிக் குடுத்துட்டு போறேன்…”
பிடுங்கி பிடுங்கி வேலை செய்கிறாளே…
“ஏம் பொன்னி…! இன்னும் மூணு வீடு போகணும்..வரட்டா..வரட்டா “ன்னு கால்ல வென்னீர கொட்டிட்டு பறப்பியே ! என்னாச்சு இன்னைக்கு….??”
“எனக்கென்னமா…..?? நீ இருக்கையில எனக்கு இன்னா கவல…?”
“சரி..கெளம்பு.. நேரமாச்சு…! எனக்கு கொஞ்சம் பாங்க் வரைக்கும் போகவேண்டிய வேலை இருக்கு…”
“அம்மா…அது வந்து…!”
தலையைச் சொறிந்தாள் பொன்னி…!
இந்த சிக்னல் போதாதா….?எனக்கு மிகவும் பழக்கமான ஒன்று..!
“என்ன பொன்னி.. பணம் வேணுமா…?”
“அம்மான்னா அம்மாதான்..கரீக்கிட்டா கண்டுக்கின!
“பொன்னி..நீ இதுவரைக்கும் எவ்வளவு அட்வான்ஸ் வாங்கியிருக்க தெரியுமா…?
மேல மேல கேட்டுகிட்டே இருக்க..கேட்டா சம்பளத்துல பிடிச்சுக்குங்கன்னு சொல்வ.!
உனக்கு எவ்வளவு சம்பளம்னு தெரியுமில்ல..தயவுசெய்து இனிமே கேக்காத…!
இந்த தடவ குடுக்க முடியாது…!”
“அம்மா..நீயே முடியாதுன்னா எப்பிடிம்மா..? புருசன் சோலிக்கு போயி ஆறுமாசம் ஆவுது..மூணுவேள சாப்பிட்டு எத்தினி நாளாவுது..? புவனா வேற முழுகாம இருக்கு..
வளைகாப்பு, சீரு, செனத்தின்னு…..
நெனச்சாலே வயிறெல்லாம் கலக்குது…இந்த ஒருவாட்டி மாட்டேன்னு சொல்லிபுடாத !
அடுத்த தபா எல்லாக் கடனையும் அடச்சுபுட்டுத்தான் அட்வான்சு கேப்பேன்…!”
மறுபடியும் இமோஷனல் பிளாக் மெயில்…!
கடைசியில் கையில் பணத்துடன் தான் கிளம்பினாள் பொன்னி..
“பரவாயில்லை..! எப்படியோ நினைத்ததை சாதித்து விட்டாளே..!
நினைத்துக் கொண்டே பாங்குக்கு கிளம்பினாள் மரகதம்..
***
“குட் மார்னிங் சார். !”
“என்ன சிகாமணி..? எப்பவும் பத்து நிமிஷம் லேட்டா வருவீங்க..? இன்னைக்கு அதிசயமா பதினஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க.!”
“அது ஒண்ணும் இல்ல சார்..நேத்து சொன்னீங்களே.. ஹெட் ஆபீசுல நிறைய ரிப்போர்ட்ஸ் பெண்டிங்குல நிக்குதுன்னு..
இன்னைக்கு ஓவர் டைம் வேல பாத்தாவது முடிச்சு குடுத்திறலாமேன்னு….!
சொல்லுங்க சார்..!”
“வெரிகுட் சிகாமணி..இந்த மாதிரி வேலைல ஆர்வம் இருக்கிறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்..!
ஏனோதானோன்னு வேல செய்யுறவங்களுக்கு மத்தியில உங்கள மாதிரி கடமை உணர்ச்சி இருக்கறவுங்கள பாக்குறதே அபூர்வம்…! கோ அகெட்…!
பேப்பரெல்லாம் ரங்கசாமி டேபிளுக்கு கொண்டு வருவான்..”
“தேங்யூ சார்…!”
“என்ன சிகாமணி..சாப்பிட வரலியா.உனக்குத்தான் எல்லோருக்கும் முன்னாலேயே பசி வந்துடுமே…”
“நீ போய் சாப்பிடு கணேசா..! எனக்கு இன்னும் பத்து நிமிஷம் பிடிக்கும்..!”
சரி சிகாமணிக்கு ஏதோ மேனேஜரிடம் காரியம் ஆக வேண்டியிருக்கும் ‘ என்று நினைத்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தான் கணேசன்..
மணி ஆறரை..
ஐந்து ஐம்பத்தைந்துக்கு சீட்டிலிருந்து எழுந்துவிடுவான் சிகாமணி..
மேனேஜர் சரவணனுக்கு அந்தரங்க காரியதரிசி..
மேனேஜர் சரவணன் ஒரு வொர்கஹாலிக்..ஆறரை மணிவரை அசையமாட்டார்..
ப்யூன் வடிவேலுவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்..
“இந்த மனுசன் தாந்தான் கம்பெனிய அப்பிடியே தாங்கிப் பிடிக்கறாப்ல.பஸ்ஸப் பிடிச்சு சூலமேடு போவத்தாவல !” என்று முணுமணுப்பான்.
இன்னைக்கு சிகாமணி சார் வேற ..!
“சார்.மேனேஜர் கெளம்பிட்டாரு..!”
“ஐய்யய்யோ.இதோ வந்திட்டேன்…”
“சார்..!”
“என்ன சிகாமணி..நீங்க இன்னுமா போகல..!”
“எல்லா பேப்பர்ஸூம் ரெடி..காலைல அனுப்பிச்சிரலாம்..”
“வெரி குட். ஐ அப்ரிஷியேட் யுவர் சின்சியாரிட்டி..ரொம்பவே லேட்டாச்சு ..நீங்க போகலாம்..!”
“சார்..அது வந்து…!”
“என்ன சிகாமணி ??”
“ஒரு லோன் அப்ளை பண்ணியிருந்தேன்..அவசரமா தேவைப்படுது..நீங்க சேங்ஷன் பண்ணிட்டீங்கன்னா…!”
‘அதுதானே பார்த்தேன் ‘ என்பது போல முறைத்தார் சரவணன்..
“போன வருஷம் வாங்கின லோனையே அடைக்கல போலியே.!”
“சார்..சம்பளத்துல பிடிச்சுக்குங்க..இப்போதைக்கு லோன் வாங்கமாட்டேன்..”
“சம்பளம் மொத்தத்தையுமே பிடிக்கணும்போலியே சிகாமணி..”
இதுதான் லாஸ்ட்.நோ மோர் லோன் ஃபார் யூ..”
“தாங்யூ ஸோமச் சார் !”
இரண்டு பேரையும் வெளியில் தள்ளாத குறையாய் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டினான் வடிவேலு..
***
‘ மணி ஏழரையாகுது… இன்னும் வரக்காணம்..! எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் டாண்ணு ஆறரை மணிக்கு வீட்டில இருப்பாரே…””
ஒரு வழியாக ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தார் சிகாமணி.
“என்ன மரகதம்..? என்ன வாசல்லேயே காத்து கிடக்க…?”
“மழதான் கொட்டப்போவுது…..! ஒருநாளும் இல்லாத திருநாளா..? ஓவர்டைம் எல்லாம் உங்க உடம்புக்கு ஒத்துக்காதே…!”
“என்ன மரகதம்.. சந்தடி சாக்கில எங் கால வார்ற.?
சரி..ஒண்ணுமே சாப்பிடல பசிக்குது.. ஏதாச்சும் கொண்டா…”
மரகதம் ஒரு தட்டில் சுடச்சுட வெங்காய பக்கோடாவும், கேசரியும் கொண்டு வைத்தாள்..
“என்ன இன்னைக்கு உபசாரம் பலமா இருக்கே..!”
“பசியோட வருவீங்கன்னுதான்…!
ஏங்க.. நானும் எத்தன மாசமா சொல்லிகிட்டு இருக்கேன்…?”
“ம்ம்ம்….”
“நம்ம பையனுக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா, இப்ப இருக்கிற இடம் பத்தாது.மாடியில ஒரு ரூம் போடணும்..ஆபீசுல லோன் போடுங்கன்னு சொல்லி சொல்லி அலுத்திருச்சு…!”
“ஓ! அதுக்குத்தான் கேசரியா..? மரகதம் சொன்னா நம்ப மாட்ட..! லோன் சேங்ஷன் ஆயிடிச்சு..
இந்தா..வாயத் தொற..ஸ்வீட் எடு.கொண்டாடு..”
“மெய்யாலுமா…நீங்க கெட்டிக்காரர் தான்…! அப்புறம்…உங்க கிட்ட இன்னொரு விசயம் சொல்லணும்..!”
“என்ன..? இன்னொரு ரூம் போடணுமா…?”
“நீங்க வேற…! நம்ப பொன்னி சரியான சாமர்த்தியக்காரி..”
“ஏன் என்ன செஞ்சா…?”
“அதிசயமா இன்னைக்கு கையில இருந்த கரண்டியக்கூட கழுவ விடாம பிடுங்கி பிடுங்கி வேலை செஞ்சா..!
கடைசியில பாத்தா, அட்வான்சு வேணுமாம்…”
சிகாமணி ஒரு வினாடி திகைத்தே போனார்..
“அப்புறம்….?
“முதல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன்…”
“ஏன் மரகதம்..! பாவம்..நாம உதவி செய்யாட்டா வேற யாரு குடுப்பா..?”
‘ ஆமா..அவளுக்கு வேற வேலையில்ல.இனிமே இந்த அட்வான்சு குடுக்கிற பழக்கத்த நிறுத்து ‘ ன்னு சொல்ற ஆளு..!
“சரி..குடுத்தியா இல்லியா…??”
“இதான் கடைசின்னு சொல்லி குடுக்க வச்சிட்டாளே…!”
“நல்ல காரியம் செஞ்ச…..!”
சிகாமணி முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனார்….!
***
எங்கோ வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் சரவணன்..
இந்த மாதிரி மேனேஜர் உட்கார்ந்து பார்த்ததேயில்லையே..?”
“இன்னா சார்..?ஏதோ மூடவுட்ல இருக்காப்ல இருக்கியே…?
சுருசுருன்னு இந்நேரம் பத்து ஃபைல பாத்து முடிச்சிருப்பியே..?
என்னாச்சு சார்??”
“வடிவேலு..! மனசே சரியில்லப்பா, எதுக்காக இப்படி ஒழைக்கணும்னு தோணுது..
பேசாம யாருக்கும் சொல்லாம கொள்ளாம ஏதாவது ஒரு ஆசிரமத்துல போயி சேந்திரலாம்னு தோணுது..!
“சார்.சார்..போறப்போ என்னையும் சேர்த்து கூட்டிகிட்டு போ சார்.. வீட்ல ரவுசு தாங்கல…!
எம். டி. கூப்பிடாறாப்லஇருக்கு..!
“எம்.டி.யா?’
“ஆமா சார்… ஒரு மணிநேரமாச்சு வந்து…ஏதோ முக்கியமான வேல போல..! ஃபோன்லயே பேசிக்கிட்டு இருக்காரு…!
சரவணனுக்கு அதிசயமாய் இருந்தது..ஏதோ அவசர வேலையாய் இருந்தாலொழிய இத்தனை சீக்கிரம் வரமாட்டாரே..!
“சார்..உன்ன கேபினுக்கு கூப்பிடறாரு..!”
“குட்மார்னிங் சரவணன்.. உங்க சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்கள மாதிரி கடமை உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தா கம்பெனி இந்த நிலைமைக்கு வந்திருக்குமா…?”
“என்ன சார் சொல்றீங்க..?”
“உக்காருங்க சரவணன்.. அவர் கம்பெனி இஸ் இன் டீப் ட்ரபிள்..!
இதே நிலமை நீடிச்சா கம்பெனிய இழுத்து மூட வேண்டி இருக்கும்..
சேர்மென் செம கடுப்பில இருக்காரு…!
நீங்கதான் சேவியர்…!
“சொல்லுங்க சார்…! என்ன செய்யணும்…?”
“பாங்கில இன்னும் கொஞ்சம் லோனுக்கு ஏற்பாடு பண்ணனும்..எக்கச்செக்கமா ஓவர்டிரா பண்ணியிருக்கோம்…
இந்த ஸ்டேட்மென்ட்டெல்லாம் சரி பாருங்க..
அக்கவுன்ட்டன்ட் மூர்த்திய கூப்பிட்டுகிட்டு நம்ம ஆடிட்டர் ராமானுஜத்த பாருங்க..
அவர கலந்து பேசி, பாங்க் மேனேஜர் நாகப்பன போயி பாத்து எப்படியாவது நம்ப கம்பெனி மானத்தை காப்பாத்துங்க….!
அவர்தான் உங்க தோஸ்த்தாச்சே..!
இன்னைக்கு முடிச்சாகணும்..! “
வேலயென்று வந்துவிட்டால் சரவணன் ஜீபூம்பாதான்..
“கவலைய விடுங்க சார்…”
எம்.டி. சொன்னதையெல்லாம் செய்து முடித்து ஆபீசுக்கு திரும்பும் போது மணி நாலாகி விட்டிருந்தது..
“சரவணன்..யூ ஆர் கிரேட்..! கை குடுங்க.. அவர் கம்பெனி இஸ் இன்டெப்ட்டட் டு யூ.
பாங்க் மேனேஜர் நாகப்பன் என்ன கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லிட்டார்…!
உங்கள எவ்வளவு பாராட்டினாலும் தகும்…!”
‘இதுதான் தருணம்…! கேளு..கேளு..!’ என்று உள்ளேயிருந்து ஒரு குரல்..!
“சார்.ஒரு ஆப்ளிகேஷன்….! நான் பிரதி உபகாரம் எதிர்பார்க்கறதா நீங்க நெனச்சுடக்கூடாது..”
“உங்களுக்கு என்ன வேணா செய்யலாம்.. சொல்லுங்க..!”
நேற்று நடந்தை நினைத்தால் இன்னமும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது…
மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை சொன்னார் சரவணன்…
“இவ்வளவுதானே…மூணு தவணையா லோன் எடுத்துக்குங்க..சம்பளத்துல பிடிச்சிட்டா போகுது…!
அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ்..கிரெடிட் கார்ட கவனமா யூஸ் பண்ணுங்க.ஓவர்டிரா பண்ணாதீங்க….
ஆல் தி பெஸ்ட்….!
“அப்புறம்..சொல்ல மறந்துட்டேனே..! நாளைக்கு ஒரு செமினார்..
‘இந்திய பொருளாதாரத்தில் உலக வங்கியின் பங்கு..’
நானும் பேசப்போறேன்.நாளைக்கு வர லேட்டாகும்..!
“விஷ் யூ ஆல் தி பெஸ்ட் சார்..!”
“தாங்யூ சரவணன்.. உங்களால் தான் நிம்மதியா போறேன்…!”
பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் தீரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை..
ஆமாம்.. நேற்று அப்படி என்னதான் நடந்தது..??
***
சாதாரணமாய் ஞாயிற்றுக் கிழமைகளில் சரவணன் தனது குடும்பத்துடன் அமைதியாக வீட்டில் இருப்பதையே விரும்புவார்.
மனைவி கௌரி, இரண்டு மகன்களுடன் ஒன்றாக சாப்பிட்டு, ஏதோ சினிமா பார்த்துக் கொண்டு.. ..
ஆஃபீஸ் டென்ஷன் இல்லாமல்.!
வாசலில் ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம்..
அமுதன் கேட்டைத் திறந்து “யார் வேணும் ?”என்று கேட்பதற்கு முன்னால்,
“சரவணன் யாரு ? இந்த வீடுதானே ‘ என்று அதட்டும் குரலில் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த வாலிபனுக்கு சுமார் முப்பது வயசு இருக்கும்..
நல்ல திடகாத்திரமான உடல். அடித்தால் நேரே எமலோகம்தான்..!
“சார்..சரவணண்கிறது..?”
“நான்தான்..”
“லாங் லைஃப் இன்சூரன்ஸ் ‘ கம்பெனி மேனேஜர்.?”
“ஆமாம்பா….!நீ யாரு சொல்லவேயில்லையே…”
“சார்..மே ஐ சிட் டவுன்..?
“உக்காரு தம்பி…”
“நான் சொல்லப் போற விஷயம் கொஞ்சம் சீரியஸ் அண்ட் அர்ஜென்ட்..
எம்பேரு அர்ஜுன்.. கிரெடிட் கார்டு லோன் ரிகவரி ஏஜென்சியிலேர்ந்து வரேன்…”
அடையாள அட்டையை எடுத்து காண்பித்தான்…
சடாரென்று சரவணண் முகம் இறுகியது…!
“இப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்குமே..!
மூணு கார்டு வச்சிருக்கீங்க..எல்லாமே ஓவர் டிரா பண்ணியிருக்கீங்க..!
இதோ ஒரு வருஷமா உங்களுக்கு அனுப்பிச்ச அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்…
நீங்களும் ‘ அடுத்த மாசம்.அடுத்த மாசம்னு ‘ கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிட்டிருக்கீங்க..
அஞ்சு லட்சம்..வட்டியோட…! எப்படி எப்போ செட்டில் பண்றதா இருக்கீங்க..??
மரியாதைக் குறைவா நடந்துக்க வேணாம்னு பாக்கிறேன்..”
“மிஸ்டர்.அரஜூன்..நான் டைம் கேட்டிருந்தேனே…நீங்க அதுக்குள்ள என் கார்ட பிளாக் பண்ணிட்டீங்க..”
“சார்.. நான் இப்போ நெகோஷியேட் பண்ண வரல..
இது கடைசி எச்சரிக்கை……
அடுத்த முறை வரும்போது உங்களுக்கு இந்த மரியாதை கிடைக்கும்னு சொல்லமுடியாது..
எனக்கு வேண்டியது ஒண்ணுதான். இரண்டு, இல்லைனா மூணு தவணையில முழுத் தொகையும் வந்தாகணும்.
முதல் தவணை என்னைக்கு ? எவ்வளவுன்னு இந்த பாண்ட் பேப்பர்ல எழுதி கையெழுத்து போட்டு தரணும்….
மீறினா, கம்பெனி கிரிமினல் நடவடிக்கை எடுக்கத் தயங்காது..!
சரவணன் மறுபேச்சு பேசாமல் சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்..
பயந்து போய் உள்ளேயே இருந்த கௌரி வெளியே வந்தாள்..
“என்னங்க.. இப்படி மிரட்டிட்டு போறான்..? நீங்க எதுக்கு இத்தன கடன் வாங்கினீங்க…?”
“நல்லா கேட்ட ஒரு கேள்வி……
ஏறினா பென்ஸ் காருலதான் ஏறுவீங்க..!
போனா தாஜ் ஓட்டல்ல தான் சாப்பாடு இறங்கும்…!
இங்க இருக்கிற கொடைக்கானலும், ஊட்டியும் கண்ணுக்கு தெரியாது..லண்டனும், பாரீசும்தான் தெரியும்..!
அவன் குடுக்கிறானேன்னு வாங்கி வாங்கி போடும்போது இனிச்சுதில்ல.. திருப்பி குடுக்கும் போது கசக்குதா..?”
கையிலிருந்த காகிதங்களை விட்டெறிந்துவிட்டு உள்ளே போனார் சரவணண்…!
இதுதான் நடந்தது…!
நிம்மதியாக வீடு திரும்பினார் சரவணன்…!
***
“ஐய்ய..? நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கேன்.! என்னமோ கவுந்தடிச்சி ஒரு அவரா அந்த பேப்பர படிச்சுகிட்டு கிடக்க.!
பத்தாவது ஃபெயிலு..! ஒரு சோலிக்கும் போக துப்பில்ல.
நல்லா மூணு வேளைக்கும் மூக்க பிடிக்க துன்னுப்போட்டு ஐயா பேப்பர் படிக்கிறத பாத்தா ஏதோ பெரிய ஆபீசராங்கண்டியும்னு பாக்குறவங்க நெனக்கப் போறாங்க..!
அப்படி என்னதாய்யா எழுதி இருக்கு.?
பொன்னியின் கணவன் சாமிதுரை வேலைக்கு போவதில்லையே தவிர குடி, அடி, உதை எதுவும் கிடையாது..
ஆனால் வாய்சவடால்..ஊர்நடப்பு, உலக நடப்பு எல்லாம் விரல் நுனியில்..
பொன்னிக்கு கோவமாய் வரும்.இந்த பேப்பர் வாங்குற காசுல கால் கிலோ உப்பு, புளி வாங்கிப்போட்டால் வாய்க்கு வக்கணையாய் ஆக்கியாவது போடலாம்..!
ஏதோ ஊர் சுற்றாமல் வீட்டோடு கிடக்கிறானே.! அந்த மட்டில் லாபம் என்று விட்டு விடுவாள்..
“பொன்னி..இதோ பாரேன்..நீ வேல செய்யுறியே ! மரகதம்மா..! வீட்டுக்காரர் பேர் சிகாமணி சார் தானே.!
“ஆமா..இன்னாத்துக்கு இப்போ அந்தக்கத உனக்கு..?”
“அவரு அபீசுல இருக்கிற முதலாளி இந்த மீட்டிங்குல பேசியிருக்காரு பாரு..?”
“இன்னாவாம்…?”
“இந்தியா உலக வங்கியிலிருந்து வருடத்துக்கு இரண்டு லட்சம் கோடி கடன் வாங்குகிறது..இப்போ மொத்த கடன் நூறு லட்சம் கோடி…!
இது இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் செலுத்த மிகவும் உதவியாக இருக்கிறது..!
இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயர்ந்திருப்பதைத் கண்கூடாகக் காணமுடிகிறது…”
“இரு.. மச்சான்..நீ பாட்ல ஏதோ சொல்லிக்கினே போறியே..!
இன்னா சொன்ன..? நம்ம நாடு நூறு லட்சம் கடன் வாங்கியிருக்கா..?”
“நூறு லட்சம் இல்ல பொன்னி நூறு லட்சம் கோடி…!”
“அம்மாடியோவ்…பொறகு…? ஆமா..வாழ்க்கைதரம்னு என்னவோ சொன்னியே..!”
“அதுவா..? நம்மள மாதிரி ஏழபாழைங்க வாழ்க்கை நல்லா முன்னேறி இருக்காம்..?”
“என்னத்த முன்னேறி கெடக்கு..?
அதே ஓல குடிச.அதே கஞ்சி, கருவாடு..”
“என்ன பொன்னி பேசுற ? நீ முன்னாடியெல்லாம் வேல செய்யுற எவ்வளவு கடன் வாங்குவ..?”
“என்ன? ஒரு அஞ்சோ, பத்தோ ?”
“இப்ப..?”
“ஆயிரம் ரூபா அடவான்சு கேட்டேன்..முதல்ல முடியாதுன்னுதான் சொல்லிச்சு.! அப்புறம் தூக்கி குடுத்திச்சே மவராசி..!”
இப்போ உன்ன நம்பி ஆயிரம் ரூபா குடுத்திருக்குன்னா…?என்ன அர்த்தம்?
இதத்தான் பிள்ள சொல்றாங்க…..
முன்னாடி பத்து ரூபா பெறாத நீ இப்ப எப்படி ஆயிரம் ரூபா மதிப்புக்கு ஒசந்திட்ட?
நம்ப வாழ்க்கைத்தரம் உசந்து போச்சா இல்லியா..?”
“மாமா..நீ சொன்னது ஒண்ணும்வெளங்கல..ஆனா நீ எங்கியோ இருக்க வேண்டியவன் மாமா..!”