கேவலம் அன்புதான் மிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2025
பார்வையிட்டோர்: 309 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழைச்சாரல் மேலே தெறிக்காதபடி ஆளோடியில் ஒண்டிக் கொண்டிருந்த ராமதுரை முணுமுணுத்தான்! ”சனியன், சனியன்! போனால் போன டத்தில் உட்கார்ந்து விட வேண்டியது. அனுப்பி எத்தனை நேரமாகிறது பார்! உண்டு இல்லையென்று கேட்டுக்கொண்டு வர வேண்டியது தானே?”

லலிதாவும் தலையை நீட்டித் தெருக்கோடியைப் பார்த்தாள் “அதோ வருகிறாள்” என்றவள், “ஓரமாய் வாடி! நனையாதே! ஓடி வா” என்று உரக்கக் குரல் கொடுத்தாள்.

தலையிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட, மூச்சு முசுமு சுவென்று கேட்க, ஓட்டமாய் வந்த பாப்பா, “இல்லை யாம்பா” என்று ஒரே வார்த்தையில் போன காரியத்தின் முடிவைத் தெரிவித்தாள்.

“பிசுநாரி! எது கேள், இல்லைதான்!” என்று பல்லைக் கடித்தான் ராமதுரை.

மகளை ஒரு கையால் அணைத்தவாறு மறுகையால் புட வைத் தலைப்பைக் கொண்டு தலையைத் துவட்டினாள் லலிதா. ”போன தடவை வாங்கி வந்த போது ஒரு வாரம் வைத்துக் கொண்டு விட்டோம். அதனால் தான் இப்போது கொடுக்க மாட்டேனென்று சொல்லியிருப்பார்கள்…”

ராமதுரை கோபத்துடன் மனைவியைப் பார்த்தான். “ஒரு வாரம் எதற்காக வைத்திருந்தாய்! நான் அன்றைக்கே திருப்பித் தரச் சொன்னேனே?”

”என்னமோ கை வரவில்லை. மறந்து போய் விட்டது.”

”முகரை! உனக்கு எது தான் நினைவு இருந்து வாழுகிறது! குடையும் வேண்டாம், கத்தரிக்காயும் வேண்டாம்! போய்த் தொலைகிறேன்!” என்று சீறி விட்டு, கைக்குட்டையைத் தலை மீது போட்டுக் கொண்டு தெருவில் இறங்கினான் ராமதுரை.

”என்ன… மழை கொஞ்சம் நிற்கட்டுமே?” என்று மனைவி குரல் கொடுத்தது அவன் காதிலேயே விழவில்லை.

லலிதா ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தி விட்டுக் குழந்தையின் கேசத்தை உதறினாள். “நனையாமல் ஓரமாய் வரத் தெரியாதா? மழையென்றால் உனக்குக் கும்மாளம்!” என்று கடிந்து கொண்டாள்.

அதற்குப் பதில் சொல்லாமல், சம்பந்தமே இல்லாமல், ”தரித்திரம்னா என்னம்மா?” என்று பாப்பா வினவினாள்.

”ஏன், அதற்கு அர்த்தம் வேறே தெரிந்து கொள்ளணுமா? தினம் தான் பார்க்கிறாயே?”

“இல்லைம்மா, பார்வதி மாமி வீட்டிலே அப்பா குடை கேட்டார்னு கேட்டேன் இல்லையா? இல்லைன்னு சொல்லிட்டா. நான் வாசல்லே வந்தாவிட்டு, ‘எப்பப் பார்த்தாலும் இரவல் தான். தரித்திரம்’னு அந்த மாமி மாமா கிட்டே சொன்னா. தரித்திரம்னா கெட்ட வார்த்தையா, நல்ல வார்த்தையா? ஏம்மா…?”

லலிதா விக்கித்து நின்று விட்டாள். பார்வதி வீட்டினர் தான் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் அனுதாபமோ ஆதரவோ காட்டுகிறவர்கள் என்று நினைத்திருந்ததும் பொய்யாயிற்றே! சீ! கேவலம் ஒரு குடைக்காக இப்படிக் கண்ட பேச்சுக் கேட்கும்படி இருக்கிறது.

“அம்மா, பால்!” என்று குவளையும் கையுமாக வந்து நின்ற பால்காரன் குரல் கொடுத்தான்.

லலிதா உள்ளே போய்ப் பாத்திரம் எடுத்துக் கொண்டு வந்து, முந்தானையில் முடித்து வைத்திருந்த சில்லறையை அவிழ்க்கத் தொடங்கினாள். சட்டென்று முடிச்சை அப்படியே விட்டு விட்டு, “பால் வேண்டாம்பா” என்றாள்.

”ஏம்மா? மழைத் தண்ணியோடே கொண்டு வந்திருப்பேன்னு பார்க்கறீங்களா?”

“அதெல்லாம் இல்லை. பால் வேண்டாம். இன்றோடு நிறுத்திக் கொள்” என்று கூறி விட்டு உள்ளே திரும்பி விட்டாள் லலிதா.

லேசாய் இருமுகிறதென்று, வாடிக்கையைத் தவிரத் தனியாகத் தனக்கெனத் தினசரி ஓர் ஆழாக்குப் பால் கையில் பணம் கொடுத்து வாங்கி வந்தாள் லலிதா. இப்போதிருந்த வெறுப்பில், பால் என்ன வேண்டிக் கிடக்கிறது கெட்ட கேட்டுக்கு என்று தோன்றியது.

மழைக்காலம் பூரா மழைத் தண்ணீரும் வெய்யில் காலம் பூரா வெய்யிலும் இறங்குவதற்காகவே கணவனின் தலை இருக்கிறது. சொட்டச் சொட்ட ஈரமும் சிவக்கச் சிவக்க எரிச்சலுமாக ராமதுரை வருவதை இத்துடன் ஆயிரம் தடவை பார்த்தாயிற்று. இத்தனைக்கும், ஏதோ ஆபீசுக் குப் போனோம் வந்தோமென்ற உத்தியோகமா? தெருத்தெருவாய், வீடு வீடாய்ச் சென்று மின்சார மீட்டர் கணக்கெடுக்கும் சிப்பந்தி. அலைந்தால்தான் சாப்பாடு. அப்படியும் அவருக்கு ஒரு குடை வாங்க வேண்டுமென்ற எண்ணம் உதிக்கவே இல்லையே என்று நொந்து கொண்டாள் லலிதா.

பால் வாங்காமல் மிஞ்சிய சில்லறை கையில் உறுத்தியது. இப்படி எப்போதாவது மிச்சமாவதைப் போட்டு வைக்க ஒரு சிறு மண் உண்டி உண்டு. அதில் போடலா மென்று மாடத்திலிருந்து எடுத்தாள்.

என்ன, இவ்வளவு கனக்கிறதே? நிறையத்தான் சேர்ந்தி ருக்கிறது. ஒரு குடை வாங்குவதற்கு இருக்குமா என்று எண்ணம் ஓடிற்று.

ஐம்பது ரூபாயாவது வேண்டும். நிச்சயம் அவ்வளவு இருக்காது. இருந்தாலும் ஆவல் தீரவில்லை. வாய் வழியே காசுகளை வெளியெடுக்க முயன்றாள். பதற்றத்துக்குத் தகுந்த வேகத்தில் நாணயம் விழவில்லை.

தரையில் மெதுவாய் இரண்டு தட்டுத் தட்டி உடைத்தாள். நோட்டுகளும் வெள்ளி நாணயங்களும் விழுந்தன.

எண்ண எண்ண, உற்சாகம் பெருகிற்று, ஒன்று, இரண்டு… ஐம்பத்திரண்டு இருந்தது. தேவலையே!

பக்கத்தில் நின்றபடி அம்மாவின் ஒவ்வொரு செய்கையையும் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்த பாப்பா, ”எனக்காம்மா?” என்று கேட்டாள்.

“உன் தலைக்கு! வா இந்தண்டை” என்று சொல்லி விட்டு சில்லறைக் காசுகளை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டினாள். இருப்பதற்குள் நல்லதாகப் பாவாடை சொக்காய் மாட்டினாள் பெண்ணுக்கு. தன் தலைக்குப் பின்னலை அவசரமாய்க் கையால் அமுக்கிச் சரி செய்து கொண்டபின், கதவைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டாள் பாப்பாவுடன்.

கடைத்தெரு நல்லவேளையாய் அருகிலேயே இருந்தது. ஒரு கடைக்கு நாலு கடையாய் ஏறியிறங்கி விசாரித்தாள். சுமாரான குடைதான் கிடைத்தது.

மறுநாள் காலை வேலைக்குப் புறப்படுகிற வரையில் ராமதுரைக்கு விஷயம் தெரியாது. வழக்கம் போலத் தூறலில் கிளம்பிய போது, “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லி, உள்ளே சென்று கையில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து திடுமென்று குடையை நீட்டினாள் லலிதா.

“ஏது? எப்போ வாங்கினாய்? எப்படி?” என்று கேட்டவாறே புதுக்குடையைப் பிரித்து மடக்கிப் பார்த்து பெருமைப்பட்டான் ராமதுரை. வாயினால் அதிகம் பாராட்டா விட்டாலும் அவன் கண்களில் பளிச்சிட்ட ஒளியொன்றே லலிதாவின் இதயத்தில் ஆனந்தம் சுரக்க வைத்தது.

”சேர்த்து வைத்திருந்து வாங்கினேன்” என்று மட்டுமே தெரிவித்த பின் உள்ளே சென்று விட்டாள்.

“நல்ல பிராண்டுதான்” என்று கூறி விட்டு ராமதுரை தெருவில் இறங்கிய சமயம் சைக்கிளில் பேப்பர் போடுகிற ஆள் சர்ரென்று வந்திறங்கி, “சார் பில் பாக்கி…” என்றான்.

“அடுத்த மாதம் சேர்த்துத் தருகிறேன் என்று தான் அன்றைக்கே சொன்னேனே” என்றான் ராமதுரை.

ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கிய வண்ணம் அவன் சைக்கிளில் ஏறிக்கொண்டான். ஆனால் சும்மா போகவில்லை. “நீங்களெல்லாம் இப்படிப் பண்ணினால் என்ன சார் சொல்ல முடியும்?” என்று ஏதோ முணு முணுத்துக் கொண்டே போனான்.

சுர்ரென்று ராமதுரைக்குக் கோபம் வந்தது. “டேய்!” என்று ஓர் அதட்டல் போட்டு, போனவனைத் திரும்பக் கூப்பிட்டான். அவன் வந்ததும், ”எவ்வளவுடா பாக்கி?” என்று உறுமினான்.

“முப்பதேகால் ரூபாயுங்க” என்று பேப்பர் ஆள் பதிலளித்தான் சிறிது அச்சத்துடன்.

“இரு தருகிறேன்” என்று ராமதுரை உள்ளே விரைந்தான். “இங்கேயிருந்த உண்டி எங்கே? அல்ப ராஸ்கல்! இரண்டாயிரம் பாக்கி மாதிரியல்லவா பேசுகிறான்? எங்கே அந்த உண்டி?” என்ற கூச்சல் லலிதாவை வரவழைத்தது.

“அது… அது இல்லையே?” என்றாள் தயக்கத்துடன்.

“இல்லையென்று தான் தெரிகிறதே? நீ என்ன சொல்வது? எங்கே போச்சு என்று தான் கேட்டேன்?”

”அதில் இருந்ததை எடுத்துத்தான் குடை வாங்கினேன்… நேற்று…”

நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு விழிகளை உருட்டிப் பார்த்துக் கத்தினான் ராமதுரை. “குடை இல்லையென்று நான் உன்னிடம் வந்து அழுதேனா? யாரைக் கேட்டுக் கொண்டு வாங்கினாய்? பண விஷயத்தில் என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது என்று ஆயிரத்தெட்டு தடவை சொல்லியிருக்கிறேனே, அறிவில்லை?”

லலிதாவுக்குக் கூடக் கோபம் வந்தது.

”உண்டியிலே போட்டிருந்ததெல்லாம் நானாகச் சேர்த்தது தானே? உங்கள் செலவுக்கு அதையா எதிர்பார்த்தீர்கள்? ஏதோ என் ஆசைக்கு நான் செலவழித்தேன்”.

”நாயே, நாயே! எதிர்த்துப் பேசாதே நாயே! உன் பணம் என்று தனியாய் வாழுகிறதோ? அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்தாய் பார், ஆயிரக்கணக்கில்! எடுத்து செலவழித்தாயாக்கும்?”

“அம்மா இருந்தால் நான் ஏன் இப்படி லோல்படுகிறேன்! நன்றாய் இரைகிறீர்கள்!”

ராமதுரையின் சினம் அளவுக்கு மீறி விட்டது.

“பதிலா சொல்லுகிறாய், விதியற்ற கழுதை!” என்று சீறியபடி பாய்ந்தவன், கையிலிருந்த குடையாலேயே அவள் தலையிலும், தொடையிலும் ஓங்கி அறைந்து விட்டு, குடையையும் மூலையில் போட்டு விட்டுப் போய்விட்டான்.

பிற்பகல் ராமதுரை சாப்பாட்டுக்காகத் திரும்பிய போது, வாசலில் நின்றிருந்த பாப்பா, “அம்மாவுக்கு ஜுரம் அப்பா! ஒண்ணுமே சாப்பிடாமல் படுத்திருக்கிறாள்” என்று தெரிவித்தாள்.

மனத்துக்குள் ஒரே கலக்கமாகி விட்டாலும் அதிகமாய் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்றவன், “ஏய், என்ன உடம்பு? ஊம்? உன்னைத்தான்? ஏய் லலிதா!” என்று அதட்ட மனமின்றி அதட்டினான்.

நீட்டிய காலை மடக்கிக் கொண்டு, புஸ்ஸென்று வீங் கியிருந்த முகத்தைத் துடைத்தபடி லலிதா படுக்கையில் மெல்லப் புரண்டாள். “ஒன்றுமில்லை, லேசாகத் தலை வலி.”

நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். சுளீரென்று சுட் டது. “மழையிலும் தண்ணீரிலும் அலைந்தாயாக்கும். படித்துப் படித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது, பச்சைப் பிள்ளைக்குச் சொல்லுகிற மாதிரி. டாக்டரிடம் போவதற் கென்ன? பார்மஸி ராமமூர்த்தியிடம் கையில் பணம் கூடத் தர வேண்டாமே? கணக்கிலே மருந்து தருவானென்று தெரியாதா?”

“டாக்டரிடம் போகும்படி அப்படியொன்றுமில்லை.”

“ரொம்பத்தான் பிகு பண்ணிக்கொள்ளாதே, எழுந்திரு. போய்க் காட்டி விட்டு இரண்டு வேளை மருந்து வாங்கி வா… ஊம்!”

“எனக்கு ஒன்றும் வேண்டாம்!”

”எழுந்திருக்கப் போகிறாயா, இல்லையா?”

அதற்கு மேல் மறுக்கத் துணிவில்லாமல் மெதுவாக எழுந்து கொண்டாள் லலிதா. வெளியே கிளம்பியபோது, ராமதுரை தன் பர்சைத் துழாவி சிறிது சில்லறையை அவள் கையில் கொடுத்தான்.

“நடந்து போகாதே. ஆட்டோ வைத்துக் கொண்டு போ” என்றான்.

காப்பி போட்டு வைக்கலாமென்று வென்னீர் தயாரித்துக் கொண்டு அடுப்படியில் அவன் உட்கார்ந் திருந்த போது லலிதா திரும்பி வந்தாள் கையில் மருந்துடன்.

”என்ன சொன்னார்?” என்றான்.

“நாலு வேளைக்கு மாத்திரை கொடுத்தார்”.

“நன்றாகப் பார்த்தாயா? ஜூரம் எத்தனை இருந்தது?”

“நூற்றொன்று தான். நாளைக்கு மறுபடி வந்து காட்டச் சொன்னார்”.

ஆயாசத்துடன் படுக்கையில் அவள் சாய்ந்து கொள்ளும் ஓசை கேட்டது.

காப்பியைப் போட்டு டபரா டம்ளரில் ஆற்றி எடுத்துக் கொண்டு சென்றான்.

”எனக்கு ஒன்றுமில்லை. எதற்காக இதெல்லாம் செய்கிறீர்கள் நீங்கள்?” என்று கூறி, காப்பியை வாங்கிக் கொண்டாள் அவள்.

ராமதுரையின் பார்வை தற்செயலாய்த் திரும்பியது. ஏது இது மாடத்தில்…

புது உண்டி…

கையிலெடுத்துக் குலுக்கிப் பார்த்தான்.

மிகக் குறைச்சலான சில்லறைகள் பலமான ஓசையெழுப்பின.

”ஏது லலிதா, இந்தப் புது உண்டி?”

“வாங்கி வந்தேன்”.

”சில்லறை?”

அவள் தயங்கினாள். “ஆட்டோ கிடைக்கவில்லை. மிச்சமான சில்லறையைப் போட்டு வைத்தேன்.”

அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பேசியதே சொல்லி விட்டது அவள் பொய் கூறுகிறாள் என்பதை.

மனைவியின் அருகில் உட்கார்ந்து கொண்டான் ராமதுரை. “இத்தனை பெரிய தெருவில் உனக்கு ஆட்டோ கிடைக்காமலா போய் விட்டது? இவ்வளவு உடம்போடு நீ நடந்து போகலாமா லலிதா? ஊம்?”

“மிச்சம் பிடித்துக் காசு சேர்க்கிறேன்” என்றாள் லலிதா ஒரு காய்ச்சல் சிரிப்புடன்.

“எதற்கு?”

“குடை வாங்க…”

“குடை?” ராமதுரை திகைத்தான்.

“ஆமாம். காலையில்… அது… அந்தப் புதுக் குடை… நீங்கள் அடித்ததில் முறிந்து விட்டது” என்றாள் லலிதா.

பேச்சில் பயமும் தெரிந்தது. பெருமையும் தொனித்தது.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *