கூனல்
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைத்தொழில் விவசாயத்துறை களில் முசலாளி தொழிலாளி வர்க் கங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரிகிறது ஆனால், சமயத்துறையிலும் அவை இருக்கின்றன என்பது பலருக்குத் தெரிவதுமில்லை; புரிவதுமில்லை. இந்துமத ஆலய நிருவாகத்திலே காணப்படும் இந்த வர்க்கபேதத்தை – விம்மாமல் புலம்பாமல் உள்ளத்தினுள்ளே குமுறிக் கொண்டிருக்கும் அர்ச்சகர்களது வாழ்க்கைப் போராட்டத்தை – இக்கதை சுட்டிக்காட்டுகிறது.
கோயிற் கதவை இழுத்துப் பூட்டிவிட்டு அருகில் இருந்த ‘எசமான் வீட்டை நோக்கி நடந்தார் ஐயர். மெலிந்த – நெடுத்த உருவம் வயதுக்கு மீறிய முதிர்ச்சியடைந்து கூனி வளைந்துபோயிருந்தது. காலம் காலமாகத் தோய்த்துத் தோய்த்துத் தினமும் உடுக்கும் நாலுமுழத் துண்டு எண் ணெயும் கரியும் படிந்து, நிறம் மங்கிக் கிழிசல்கள் ஓட்டு களுடன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்தது.
எசமான் வீட்டின் வாசலில் ஏறி அழைப்பு மணியை அமுக்குகிறார். மின் விளக்குகளும், மின்விசிறிகளும், அழகிய பூச்சாடிகளும், பெரிய பெரிய அலங்கார சோபாக்களும், யன்னல் திரைச்சீலைகளும் அந்த ஆலய நிர்வாகியான எசமானு’டைய பண நிலைமையைத் துலாம்பரமாக எடுத் துக் கூறிக்கொண்டிருந்தன.
வாசலருகிலிருந்த குஷன் தைத்த சோபா ஒன்றில் தூங் கிக்கொண்டிருந்த நாய்க்குட்டி இவரைக் கண்டதும் மெல்ல உறுமிக்கொண்டு இறங்கியது. உள்ளேயிருந்து வந்த எசமானிடம் இவர் கோயிற் திறப்பை ஒப்படைத்தார். கோயிற் பூஜைகள் எல்லாம் சரியான நேரத்துக்கு நடப்பதற்கும், கோயிற் பாதுகாப்புக்குமாகத் திறப்பை ஒவ்வொரு நேரப் பூசை முடிந்ததும் தம்மிடமே ஒப்படைக்க வேண்டுமென்பது அவரது கட்டளை.
”ஏன்காணும் இண்டைக்குப் பத்து நிமிஷம் முந்தியே பூட்டிக்கொண்டு வந்திட்டீர்! ஒருமணி மட்டும் கோயில் திறந்து வைச்சிருக்க வேணுமெண்டல்லே சொன்னனான்”
ஒருமணி ஆகிவிட்டதா இல்லையா என்று அறிந்து கதவைப் பூட்டுவதற்கு கையில் மணிக்கூடு கட்டியிருக்கத்தக்க வசதி ஐயருக்கு இருக்கிறதா என்ன? அந்த இல்லாமையைக் கூறத் துணிவில்லாமல் தயங்கி நின்றார் அவர்.
அப்போது உள்ளேயிருந்து வந்த எசமானின் மகள், காரிக்கன் துணியில் தைத்து கோயிலின் எண்ணெயும் கரியும் சுமந்த, ஐயரின் பை சோபாவில் கிடப்பதைக் கண்டு “ஓ, ஐயரே! இந்தப் பையிலை கிடக்கிற எண்ணெயும் கரியும் சோபாவிலையல்ல பிரளப்போகுது” என்று கர்வத்தோடு கத்தினாள். சற்றுமுன் அவர்களது நாய்க்குட்டி படுத்திருந்த அந்தச் சோபாவில் தனது பை இருப்பதற்குத் தகுதியில்லை யென்று நினைத்தபோது அவருக்கு உள்ளுற ஆத்திரம் பொங்கியது.
மௌனமாக அந்தப் பையைக் கையிலெடுத்துக் கொண்டு எசமானைப் பார்த்தபடி தயங்கி நின்றார் ஐயர். அவரது தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட எசமான், “சம்பளத்துக்கு என்னும் பத்து நாள் கிடக்கு; அதுக்கு முன்னம் ஒண்டும் கிடையாது.” என்று கண்டிப்பாகக் கூறி விட்டு உள்ளே திரும்பினார். இனி நிற்பதிற் பயனில்லை யென்று வெளியேறினார் ஐயர்.
நகர மத்தியில் பிரபலமாக அமைந்துள்ள அந்தப் பெரிய கோயிலில் வருமானத்தை எசமானின் வீட்டு நிலைமைகளிலிருந்தும் அவரது மகளின் நடத்தையில் இருந்தும் கணிப்பிட்டுவிடலாம். இருந்தும், நான்கு நேரப் பூசைக்காக சரியான மணிக்கணக்குத் தவறாமல் அரைமைல் தூரத்திலிருந்து நடையிலேயே தினமும் வந்து போகும் அந்த அர்ச்சகருக்கு மாதம் அறுபது ரூபா சம்பளம் மட்டும் கொடுக்கிறார்கள்.
உதவிக்கு வேறு ஆளில்லாமல் நைவேத்தியப் பொருட்கள் தயாரித்து, அபிஷேகம் பூஜைகள் எல்லாவற்றையும் அவர் தனியொருவராகவே செய்தபோதுங்கூட அவருக்கு மாதச் சம்பனம் அவ்வளவுதான்! அர்ச்சனைப் பணம் யாவும் கோயிலுக்குரியது.
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாது. அர்ச்சனைக்கு வருகிறவர்கள் அவர் நிலைகண்டு இரங்கி தட்சணையாகக் கொடுப்பதைக்கூட எடுப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. அதுவும் கோயிலின் உண்டியலிற் போடப்பட்டுவிட வேண்டும் உண்டியலில் ‘திருப்பணி உண்டியல்’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்தில் பெரும் பகுதி எசமான் வீட்டுத் திருப்பணிக்குப் போய்விடுவது வழக்கம்.
“தொழிலாளர்கள் முதலாளிகளினால் சுரண்டப்படுகிறார்கள். சாதித் திமிர் பிடித்த பெரும் பணக்காரப் பூர்ஷ்வாக்கள் ஏழைத் தொழிலாளரைக் கொடுமைப் படுத்தித் தமது வயிறு வளர்ப்பதைத் தடுக்கவேண்டும். நாம் அந்த முதலாளித்துவ சக்திகளை எதிர்த்துப் போராடவேண்டும்” என்று யாரோ ஒரு தொழிற் சங்கவாதி பேசியிருந்ததாக அன்றைய தினசரியில் படித்த வசனங்கள் அவர் நினைவுக்கு வந்தன.
“அப்படியானால். என்னுடைய நிலைமைக்கு எந்தத் தொழிற்சங்கம் வழிவகுக்கும்? விடியற்காலையிலிருந்து அர்த்தஜாமப் பூஜைவரை, இடையில் இரண்டொரு மணித்தியாலங்கள் தவிர மீதிப்பொழுதெல்லாம் கோயிலில் கஷ்டப்படுகிறேன்; மடைப்பள்ளிப் புகையில் வேர்த்துக்களைத்து வெந்து போவதும், குடம் குடமாகத் தண்ணீர் அள்ளி அபிஷேகம் பண்ணுவதுமாகக் கஷ்டப்படுகிறேன்; எனது வேலைக்கேற்ற ஊதியம் தரப்படுவதில்லை.
அது மட்டுமல்லாமல் கிடைக்கின்ற தட்சணைப் பணமும் கோயில் எசமான் என்ற முதலாளியால் அரக்கத்தனமாகச் சுரண்டப்படுகிறது. என்னை இப்படி வாட்டிவதைத்து அவர் பெரிய மாளிகையில் சொகுசு வாழ்க்கை வாழுகின்றார் நான் ஒரு தொழிலாளியாக இருக்க முடியாதோ?
ஜாதி ல்லை என்று சொல்கிற அதே பிரமுகர்கள் ஜாதியை வைத்தே தொழிலாளி – முதலாளி பேதத்தை இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள். ஒருவேளை ‘மதமும் மதச் சடங்குகளும் மானுடத்திற்கு வேண்டாதவை; எனவே இவனும் வேண்டாதவன்’ என்று ஒதுக்க முயற்சிக்கலாம். ஆனால் இன்று மதம் மக்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த ஏழைத் தொழிலாளருக்கு மனச்சாந்திக்கு இந்த வழிபாடு அவசியம். தேவை, நான் இல்லாவிட்டாலும் கோயில் வழிபாட்டை அவர்கள் நிறுத்தப் போதில்லை.
அது மட்டுமல்லாமல் மதம் வேண்டாம் என்று சொல்கிற’ பெரிய கை’கள்கூட சந்தர்ப்பத்தில் பகட்டாகவந்து காளாஞ்சி வாங்கிக்கொண்டு போக ஆலயமும், ஐயரும் அவர்களுக்குத் தேவை அல்லவோ!”
பலவித சிந்தனைகள் அலைமோத, இன்றைய சமூக நிலைகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சிந்தித்த வாறு அந்த மெல்லிய குச்சி உருவம் நடந்துகொண்டிருந்தது.
“தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைபற்றிக் கதை கதையாக எழுதுகிறார்கள். நான் தினமும் சிந்துகின்ற வியர்வையெல்லாம் அபிஷேக ஜலத்தோடு கலந்து கழுகப்படடுப் போய்விடுவதால் அவர்களுக்குத் தென்படுவதில்லையோ!
இந்த ஜாதி அமைப்பு ஏன்தான் வந்ததோ! என் மகனுடைய வாழ்க்கை பாழாவதற்கும் என்னுடைய இந்த நிலைதானே காரணம். அவனை வேலைக்கு வரச்சொல்லி ஒரு சின்னக் கொம்பனியிலிருந்து போனகிழமை கடிதம் வந்தது. அவள் கொழும்பில் கண்டகண்ட இடங்களிலும் சாப்பிடவேண்டி வரும்; அப்படிவந்தால் நான் பூஜை பண்ணத் தகுதியற்றவன் என்று என்னை நீக்கிவிடப்போவதாக எசமான் மிரட்டினார்.
வயிற்றுக்குச் சோறுபோடும் இந்த அறுபது ரூபாவை விட்டால் எனக்கு வேறு வழி ஏது? வேலை வேண்டாமென்று மகனைத் தடுத்து நிறுத்திவிட்டேன். பூசாரியின் மகனுக்கு உத்தியோகம் என்ன வேண்டியிருக்கு என்பது எசமானின் நினைவு.
இப்ப அவனுடைய நல்வாழ்வுக்கு மட்டுமல்லாமல் என்னுனடய இந்த நிலைமைக்கும் இந்தச் சமுதாய அமைப்பு முறைதானே காரணம். நான் ஒரு பெரிய சாதிக்காரன் என்றதாலே, நான் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்தாலும் பூர்ஷ்வா என்ற பேரை மாற்றமுடியாது. எனக்கு உதவ யாரும் முன்வர மாட்டார்கள்.
இன்றைக்கு முற்போக்குப் பேசுபவர்கள்கூட எசமான் போன்றவர்களைப் பின்னால் நின்று தீட்டித் தீர்த்துவிட்டு. முன்னால் வந்து நின்று பல்லிளிப்பதைத்தான் காணமுடிகிறது. யாரும் என்னைத் தொழிலாளி என்று ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இருக்கிற ஜாதிகளை நான் இறைக்குத்தான் புரிந்து கொண்டேன். பிராமணன், வேளாளன் பள்ளன், பறையன் என்பதெல்லாவற்றையும்விட, உள்ளவன் இல்லாதவன் என்ற இரண்டும்தான் ஜாதிகள்…!”
அன்றிரவு எசமான் வீட்டில் திறப்பைக் கொடுத்துவிட்டு “நாளைக்குத் தொடக்கம் திறப்பு வாங்க வரமாட்டேன்” என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பி நடந்தார், ஐயர்!
”மகனை நாளைக்குக் கொழும்புக்குப் போக ஆயத்தப் படுத்தச் சொல்லவேணும். அவன் உடனே போய் அந்த வேலையை ஒப்புக்கொள்ளவேணும்” என்ற எண்ணத்தோடு நடந்த அவரது கூணல் முதுகுகூட நிமிர்ந்திருந்தது
– சுடர், தை 76
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
ஆனந்தபைரவி
“கோப்பாய் – சிவம்” என ஈழத்துப் படைப்பிலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்டவர், ஆனந்தபைரவி. இவருடைய இயற்பெயர் ப. சிவானந்த சர்மா கிளி நொச்சியில் பணியாற்றுகிறார்.
ஜோதி என்னும் சஞ்சிகையில் 1967 இல் வெளியான ஒரு கவிதையுடன் சிவம் அவர்களது இலக்கியத்துறைப் பிரவேசம் நிகழ்ந்தது. கட்டுரை, கவிதை, சிறுகதை, குறுநாவல் என்னும் பல்வேறு துறைகளிலும் ஓய்வின்றி எழுதிவருகிறார்.
சிவம் அவர்கள் விடிவெள்ளி முத்தையா நினைவுச் சிறுகதைப் போட்டி, ஈழ நாடு – விகடகவிதைப் போட்டி, செவ்வந்தி கவிதைப் போட்டி ஆகியவற்றில் பரிசுகள் பெற்றுள்ளார். இவர் எழுதிய ஆன்மீகத் துறை சார்ந்த மூன்று நூல்களும் வெள் ளோட்டம் என்னும் குறுநாவலும் அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன. ‘நியாய மான போராட்டங்கள்’ என்னும் இவருடைய சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றுள்ளது.