குவாட்டர்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 146 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாறிவரும் நாகரிகத்தின் காற்று தோட்டப்புறங்களி லும் வீசத்தான் செய்கின்றது. 

வளைந்தோடும் இந்த தேயிலை மலைகளுக்கூடான செங்குத்துப் பாதைகளில் முன்பெல்லாம் கேம்பிரிட்ஸ் காரை யும் லேண்ட்ரோவரையும் தோட்டத்து லொறியையும் தவிர வேறு வாகனங்களைக் காண்பதே அரிது. 

நிறத்துக்கொன்றாக சிவப்பு, மஞ்சள், பச்சையென்று எத்தனை வாகனங்கள் இன்று இந்தப் பாதையில் ஓடு கின்றன. தோட்டத்துரையின் காரை மட்டுமே கண்டு பழகிய சின்னஞ் சிறுசுகள் கூட இந்த வித்தியாசத்தை உணரத் தலைப்பட்டு விட்டன. 

பாதையோரத்தில் மேட்டுப் புறத்தில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் புதிய மோஸ்தரில் அமைந்த அந்த கொட்டேஜ் டைப் வீடுகள் இந்த மாற்றங்களின் வெளிப்புறச் சின்னங்கள், 

அவளால் அதற்குமேல் சிந்திக்க முடியவில்லை. இந்த மாறுதல்கள் அவள் வாழ்க்கைப் போக்கை எப்படிப் பாதித்து விட்டன. 

பழைய லயன் காம்பரா வாழ்க்கையில் அவள் சலிப் படைந்திருந்தாள். பக்கத்துவீட்டு அசுத்தமும் சந்தடிமிகுந்த வாழ்க்கையும் அவளுக்கு வெறுப்பை ஊட்டியிருந்தன. 

எலி வளையென்றாலும் தனி வளை வேண்டுமென்பதைப் போல தனக்கென ஒரு வீடிருந்தால் எப்படியெல்லாம் வைத்துப் பேணலாம் என அவள் கனவு கண்டிருக்கிறாள். 

தோட்டத்துப் பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் டீமேக்கர் ஐயா வீட்டிலும் கிளாக்கர் ஐயா வீட்டிலும் அவள் கண்ட நேர்த்தியும் சுத்தமும் அவளது கனவைப் பெரிதாக்கி விட்டிருக்கின்றன. 

விசாலித்துக் கிடந்த காய்கறித் தோட்டமும் வகைக் கொன்றாக வாசம் வீசி நிற்கும் மலர்ப் பாத்திகளும் அவளது கனவுகளை வான் நோக்கிப் பறக்க விட்டிருந்தன. 

இரண்டு குடும்பத்துக்கொன்று என்ற முறையில் காய் கறித்தோட்டம் போடுமளவுக்கு இடம் ஒதுக்கி அமைக்கப் பட்ட இந்த கொட்டேஜ் டைப் குவாட்டஸ், தொழிலாளி களுக்கு ஒதுக்கப்பட்டபோது அவளது இளமைக்கால கனவு: கள் மீண்டும் உயிர் பெற்றன. 

தனக்கும் தன்னுடைய தாய்க்குமாக அதில் ஒரு குவாட்டர்ஸ் கிடைத்தால் போதுமென்று ஆசைப்பட்டு பெரிய கணக்கப் பிள்ளையிடம் கதைத்துப் பார்த்தாள். 

பெரிய கணக்கப்பிள்ளை இப்படி ஒரு சந்தர்ப்பத்துக் காகத்தானே காத்துக் கிடந்தார். ஆண்டுக் கணக்கில் அதே தோட்டத்தில் வசித்து வரும் தொழிலாளர்கள் அவரது சிபார்சில்தான் புதிய குவாட்டர்சுக்குப் போகலாம். 

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பன்னிரண்டு குவார்ட்டசி லும் ஆகமொத்தம் இருபத்து நான்கு குடும்பத்துக்கு மட்டுமே இடம் இருக்கையில் அந்த தோட்டத்திலிருக்கும் இருநூறு குடும்பத்தாரும் எனக்கு உனக்கு என்று முண்டியடித்து முட்டிக் கொள்கையில் பெரிய கணக்கப் பிள்ளையின் கை ஆளுயரத்துக்கு எழும்பி நிற்பதில் ஆச்சரியமில்லை. 

முன்கை நீண்டால்தான் முழங்கை நீளும் என்று சொல்லியே கிடைத்த சந்தர்ப்பங்கள் அத்தனையும் பயன்
படுத்தி வேண்டிய சுய வசதிகளைப் பெருக்கிக் கொண்ட பெரிய கணக்கப்பிள்ளை இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது முன் கையை என்ன முழு உடலையுமே நீட்டுவிக்கப் போதுமே. 

அவள் அவரை கிறங்கடித்திருக்கிறாள். நேர் நின்று நிமிர்ந்து பேசுகிற அவளது அலட்சியப் போக்கு அவரை வெகுவாக ஆட்டுவித்திருக்கின்றது. அவளது செம்பொத்த மார்பும், கொம்பொத்த உடலும், அம்பொத்த விழியும் அவரது கண்களுக்கு விருந்தாக மட்டுமே அமைந்தன. 

தோட்டத்தில் பெரிய கணக்கப்பிள்ளையென்றால் அதிகாரம் செலுத்தும் தோட்டத்துரைக்கு அடுத்தவர் என்றர்த்தம். தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்துமே அவரது அதிகாரத்துக்குட்பட்டதுதான். 

குடியிருக்கும் லயன் காம்பரா ஒழுகினால், குடித்துவிட்டு வீடுவரும் கணவன் குழப்பம் விளைவித்தால், வயது வந்த பிள்ளைகளுக்குப் பேர் பண்ண வேண்டி வந்தால், பிந்தி நேரங்கடந்து வேலைத் தளத்துக்கு போக நேர்ந்தால் அத்தனைக்கும் அவரது தாட்சண்யம்தான் தேவை. 

தனியாய், தாயோடு மாத்திரமே வாழ்ந்த காரணத்தால் இதுநாள் வரை அவளுக்கு இந்த தாட்சண்யம் தேவைப் படாமலே இருந்தது. 

பெரிய கணக்கப்பிள்ளையின் நினைவுகள் சுடு மணலின் சுகந்த ஆவியாய் கமழத் தொடங்கின. 

திளைப்பதற்கென்றே அமைந்த வாழ்க்கை தன்னுடைய தென்ற நினைப்பு அவருக்கு. 

எட்டாம் வகுப்போடு முடிந்துபோன சுயமொழிக் கல்வி எழுத்துப் பிழையில்லாமல் ஆட்களின் பெயர்களை எழுதுவிக் கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை, கூட்டல், கழித்தலில் பரிச்சயப் பட்டுப்போன நிதானம், வை எல்லாவற்றுக்கும் மேலாக தோட்டத்துரையும் அவரும் மாத்தறையில் ஒரே கிராமத்திலிருந்து வந்தவர்கள். 

பெரிய கணக்கப்பிள்ளையின் அடிப்படைத் திறமைகள் இவைகள் தாம். 

நாளுக்கொரு ஜேக்கின் நேரத்துக்கொரு குடை, மாதத் துக்கொரு சப்பாத்து என்று புதிது புதிதாய் அணிந்து தனக்கென்றோர் இமேஜைத் தொழிலாளர்களிடையே அவர் வளர்த்துக் கொண்டிருக்கின்றார். 

அவர் புகைப்பதெல்லாம் ‘டன்ஹில்’ வெளிநாட்டு சிகரெட். குடிப்பதெல்லாம் ‘டபள் டிஸ்ரில் தென்னஞ் சாராயம்’. 

அந்திக் கருக்கலில் வீடு திரும்பியவுடனேயே உச்சஸ் தானியில் அவர் வீட்டில் கெசட் அலறும். ஒரு போத்தலை உடைத்து மேசையில் வைத்து விட்டு உட்கார்ந்தாரென்றால் ஒன்பது மணிக்குச் சாப்பிட எழும்பும்போது 

எழும்பும்போது வெத்துப் போத்தலை சுத்தம் பண்ணும் விரையாவுக்கு எனக் கொஞ்சம் விட்டு வைத்திருப்பார். வீரையா அவரது வீட்டுவேலையாள். சமைப்பதிலிருந்து தோட்ட வேலை செய்வதுவரை எல்லாமே அவன்தான். தினந்தோறும் அவனுக்குப் பெயர் விழுவது தோட்டக் கணக்கில்தான். 

அவர் என்ன தோட்டத் துரையா அலவன்சில் ஆள் வைத்துக் கொள்ள? 

அவருக்கு அவனை நன்றாகப் பிடிக்கும். 

அவரிடமிருந்து அவன் கதைக்கத் தெரிந்து கொண்டது சில சிங்களச் சொற்களைத்தாம். 

அவர் தெரிந்து கொண்டதோ ஏராளம். அவரது அனுபவங்கள் பெருகியதற்குக் கூட அவனது ஒத்துழைப்புத் தான் காரணம். அவரது ஆசைகள் அளவு கடந்துபோனதற் கும் அவனது உதவிகள் தாம் காரணம். 

பெரிய கணக்கப்பிள்ளை வீரையாவை விசாரிக்கத் தொடங்கினார். ‘ஏன் வீரையா, புது குவாட்டர்ஸ் கட்டிக் கிடக்குதாமே யாரும் வேணும்னு கேட்கலையா’ 

வீரையாவுக்குச் சட்டென்று புரிந்தது, ஐயா எதற்குக் கேட்கிறாரென்று. 

இருநூறு குடும்பத்தில் இருபத்துநான்கு குடும்பத்தைத் தெரிந்தெடுக்க வேண்டுமே. 

தகுதி இருப்பவர்கள் எல்லாருக்கும் வீடு கிடைக்கப் போவதில்லை. எனவே, தகுதியில்லாத யாருக்கும் வீடு கிடைப்பதும் தடைப்படப் போவதில்லை. 

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எந்த ஒரு மனிதனும் சாமர்த் தியசாலியாகி விடலாம். 

‘என்னங்கையா புது குவாட்டர்ஸ். இப்ப போயிற மழைக்கும் வீசிற காத்துக்கும் இதெல்லாம் தாங்காதுங்க. தெரியாமலா வெள்ளைக்காரன் கருங்கல்லில் கட்டி வச்சான். லயத்தில் இருக்கிறதே ஒரு சொகந்தானுங்களே’. 

‘தொங்க காம்பரா ரெண்டும் மழையில் நனைஞ்சாலும் மத்த காம்பராக்களும் அப்படியே இருக்குங்களா’ என்று கூறினான். 

கொழும்பு நகரில் கட்டப்படும் ஃபிளாட்ஸ்களைப் பார்த்த போது அவையெல்லாம் நவீன லயன் காம்பராக்கள் என்று தான் நினைத்ததையே வீரையாவும் சொல்கிறான் என்பது பெரிய கணக்கப்பிள்ளைக்கு எளிதாக விளங்குகிறது. 

‘அதில்லடா நான் சொல்றது. அந்த மாரியாயி நமக் கிட்ட புது குவாட்டர்ஸ் கேட்டது. நான் தொரைக்கி சொன் னது. நாளைக்கு அவளையும், அவ அம்மாவையும் ரோட் ஓரத்தில் இருக்கிற புது குவாட்டர்ஸ்சுக்கு போகச் சொல்லு என்றார். 

புது குவாட்டர்ஸ்சுக்கு துரையிடம் சிபார்சு செய்யப்பட்ட பேர்களில் மாரியாயின் பெயர் இல்லை என்பதை பெரிய கணக்கப்பிள்ளை மரத்திரமே அறிவார். 

வீரையா ‘பெரிய ஐயா’ வீட்டில் வேலை செய்பவன். அவனது பேச்சை அவள் நம்பாமல் இருக்க முடியுமா? போதாததற்குத் தன்னிடம் நேரில் கேட்டவள் அவள்தானே! 

பெரிய கணக்கப்பிள்ளை விரித்த வலை வேலை செய்தது. 

மாரியாயிக்கும் அவளது தாயாருக்கும் தோட்ட நிர் வாகம் வேலை நிற்பாட்டியது. 

தங்கள் அனுமதியின்றி பலாத்காரமாகப் புதிதாகக் கட்டிய குவார்ட்டஸ்சில் குடியேறியதாகப் பொலிசில் முறைப் பாடு செய்யப்பட்டது. 

வீரையா அவளுக்கு ஒரு வழியில் தம்பி முறை. ஆனால் ‘நான் என்ன செய்வது அக்கா. தொரைகிட்ட நான் சொல் லும் சாக்கி எடுபடுமா’ என்று அவன் ஒதுங்கிக் கொண்டான். 

தனக்குப் புது குவாட்டர்ஸ்சுக்குப் போவதற்கு பெரிய கணக்கப்பிள்ளை தான் அனுமதி வழங்கினார் என்பதை நிரூபிக்க அவளுக்கு வழியில்லை. 

பத்துப் பேர் பன்னிரண்டு பேர் என்றிருக்கின்ற குடும்பத் துக்கே புது குவாட்டர்ஸ்சில் இடம் கொடுக்காத போது இரண்டு பேர் மாத்திரமே இருக்கின்ற தங்களுக்கு எப்படிப் புது குவாட்டர்சில் இடம் கொடுப்பார்கள் என்பது அவனது: தாயாரின் கேள்வி. அது நியாயமானதுதான். 

‘ஏண்டி அன்னைக்கே சொன்னேன். கேட்டியா? இன் னைக்கே மாசம் மூணாச்சு இப்படி வேலையும்போய் வெட்டியு மில்லாம இருக்க வேண்டி வந்திருச்சே. மூதேவி கழுத பேசாம பழைய லயத்துக்கே போயிர வேண்டியதுதான்’ என்று தாய் புலம்புவதைக் கேட்ட மாரியாயிக்குப் பொறி தட்டியது. 

பெரிய கணக்கப் பிள்ளை மாத்தியாவும் மூன்று மாதமாக அதையேதான் சொல்லிக் கொண்டு வருகின்றார். “என்ன மாரியாயி நான் சொல்றது வௌங்கிறதில்லையா. தொரைக்கு நான் சொல்லுறன். நீ பேசாம நான் சொல்ற படி செய்’ 

போன வாரம் ஐயா வீட்டில் அந்திக் கருக்கலில் மூன்று நாளா மாரியாயியைக் கண்டது வீரையாவுக்கு மனசை என்னமோ செய்தது. 

அவனும் மனிதன்தானே. போதாதற்கு அவள் அவ னுக்கு அக்கா முறை வேறு. 

இரவு மணி பத்தாகிவிட்டது. 

எப்போதும் இல்லாத விதத்தில் இன்று இரண்டாவது போத்தலையும் உடைக்க வேண்டி வந்துவிட்டது. 

‘டன்ஹில்’ சிகரெட் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஊதித் தள்ளினாலும் உடலுக்கு இதமாகவில்லை. 

தனக்கு இன்னைக்கு என்ன நேர்ந்தது? 

திளைப்பதற்கென்றே அமைத்த தனது வாலிப வயதில் இந்த இரண்டு கிழமைகளில் தாம் தான் மிகவும் களிப்பு அடைந்திருப்பதாகப் பெரிய கணக்கப்பிள்ளை எண்ணிக் கொண்டிருந்தார். 

‘என்னடா இன்னைக்கி மாரியாயி வரல்லியா?’ 

பதிலில்லை. 

‘வீரையா என்ன பேச்சைக் காணோம்’ 

‘அந்திக்கு கண்டுச்சுங்க. காலில என்னமோ காயமாம். நடக்க முடியலிங்களாம். ஐயாவை வேணும்னா வரச் சொல் லிச்சுங்க’ என்று இழுத்தான். 

ரோட்டோரத்தில் புதிதாகக் கட்டிய குவாட்டர்ஸ் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்று அவர் கற்பனை பண்ணி யது கூட இல்லை. இன்று நேரில் தரிசிப்பது என்று புறப்பட்டே விட்டார். 

திரும்பி வருகையில், அவளையும் தன்னுடைய குவார்ட்ட சுக்கே அழைத்து வரவேண்டும் என்பதை, புது குவார்ட்டசில் அவர் தோட்டத் தொழிலாளிப் பெண் ஒருத்தியோடு குடும்ப உறவு கொண்டதை சாட்சி சொல்ல பழைய லயத்து ஆட்கள் வீரையாவின் தலைமையில் காத்திருக்கின்றார்கள் என்பதை யும் அந்த நேரத்தில் அவரால் விளங்கிக் கொள்ள முடியாது தான். 

– 1990

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *