கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2025
பார்வையிட்டோர்: 309 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்னம் தன் பதினைந்து வயது மைத்துனனைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறாள். அவசரத்தில் ஈரம் உலராத புடவையைக் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள். கணுக்காலில் இடித்து இடித்துக் கொசுவம் தடுக்கியது. குளித்து முடித்த கையோடு விஜியைக் காணவில்லை என்று தெரிந்ததால் அப்படியே புறப்பட்டு விட்டாள். தெருக் கடைசியில் ஆஞ்சனேயர் கோவில் இருந்தது. கன்னத்தில் போட்டுக் கொள்ளாமலே தாண்டிவிட்டாள். பிறகுதான் ஞாபகம் வந்தது. பதற்றத்துடன் திரும்பி வந்து, “என் குழந்தை பத்திரமாய் வந்துடணும். வடைமாலை பண்ணிச் சாத்துகிறேன்” என்று பளீர் பளீரென்று கன்னத்தில் போட்டுக்கொண்டு நடையைத் தொடர்ந்தாள்.

‘மன்னி, என்னைத் தேட வேண்டாம்’ இரண்டே வரி, சமையலறையில் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்க விட்டிருந்த சிலேட்டுப் பலகையில் எழுதி வைத்துவிட்டு விஜி போய் விட்டான்.

‘அவ’ருக்குக் கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் தம்பியை அடித்து விடுவது உண்டு. விஜி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ‘வெளியேறி’ விடுவான். பாவம், அவனுக்குப் போக்கிடம் ஏது? அக்காவா, அத்தையா, பெரியப்பா சித்தப்பா வீடுகளா? எதுவும் கிடையாது. வயிற்றைக் காயப்போட்டுக் கொண்டு காவேரிக் கரைக்கு ஓடுவான். பாலத்தின் கீழே பெரும்பாலும் தண்ணீர் இருக்காது. குளுகுளுவென்று நிழலாக இருக்கும். ஆடுமாடுகளுக்கும் அதுதான் இடம். அசிங்கம் பண்ணியிருக்கும். சில சமயம் மனிதர்களும்தான். இருந்தாலும் ஒரு நல்ல இட மய்த் தேடிப் பிடித்து, இரண்டு பாறாங்கல்லைத் தலைக்குக் கொண்டு வந்து போட்டுக்கொண்டு விஜி மல்லாந்து படுத்திருப்பான். சொக்காயைக் கழட்டி, பந்தாகச் சுருட்டி, தலைக்கு வைத்துக் கொள்வான். அல்லது முதுகுக்குக் கீழே பாய் மாதிரி அதை விரித்துக் கொள்வான்.

”நான் வரல்லே மன்னி. வரமாட்டேன்னா வர மாட்டேன். விடு என்னை. விடுன்னா விடு” என்று முரண்ட முரண்ட அன்னம் விடமாட்டாள். இடுப்பிலே செருகிக் கொண்டு வந்திருக்கிற பொரிவிளங்காய் உருண்டையையோ கடலை உருண்டையையோ அவன் வாயில் திணித்துச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவாள்.

“வீட்டை விட்டுப் போன அவன் எதற்காக வரணும்? வேண்டாம். வரக் கூடாது அவன். நான் விட மாட்டேன்!” என்று அவர் குதிப்பார். சும்மாவானும்தான். கூடப் பிறந்த பாசம் போய்விடுமா?

பலதடவை அவன் ரோஷப் பட்டுக் கொண்டு போன வன்தான். ஆனால் ‘மன்னி, என்னைத் தேட வேண்டாம்’ என்று இதுவரை எழுதியது கிடையாது. இன்றைக்கு அப்படி எழுதும்படி, எழுதிவிட்டு ஓடும்படி, எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே? விஜி, விஜிம்மா, உனக்கு என்னப்பா தீங்கு செய்தேன் நான்? இல்லை, என்ன குறை வைத்தேன்?

மூன்று வருடத்துக்கு முன்னாலே நான் உன் அண்ணாவுக்கு வாழ்க்கைப்பட்டு இந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தபோது நீ பன்னிரண்டு வயசுக் குழந்தை. இப்பவும் என்ன, பதினைந்து வயசுக் குழந்தை. அவ்வளவுதானே?

கல்யாணத்தின்போது வாசலிலே கட்டியிருந்த வாழை மரத்திலே இலையைக் கிழித்து ஊதல் பண்ணி எத்தனை நன்றாய் நீ பாட்டு வாசித்தாய்? தாலி கட்டிக் கொள்ளப் போகிற சமயம். நான் கடக்கென்று சிரித்து விட்டேன். மரத்திலேயிருந்து ஒரு கச்சல் வாழைக்காயைப் பறித்து நீ கடித்தாய். உன் தாத்தாவோ யாரோ, ‘கல்யாண வாழையைப் பிய்க்கிறான் பார்!’ என்று உன்னை முதுகிலே ஒன்று வைத்தார்கள். ‘பாவம், அடிக்காதீர்கள்’ என்று என்னை மறந்து நான் சொல்ல, ‘மச்சினன் பேரில் இப்பவே என்ன கரிசனம் பார்த்தியா?’ என்று பெண்கள் எல்லாரும் சிரித்துக் கேலி செய்தனர்.

அந்த நாளில் விஜி ரொம்ப ஒல்லியாய் இருப்பான். தாயில்லாப் பிள்ளை. யார் கவனித்துச் சாதம் போடுகிறார்கள்? அன்னம்தான் வகை வகையாய்ப் பண்ணிப் போட்டு, மூன்றே மாதத்துக்குள் அவனைக் குண்டாக்கி விட்டாள். ‘மன்னி, இந்தத் தேங்காய்த் துவையல் மாதிரி நான் சாப்பிட்டதேயில்லை…!’ ‘மன்னி, இது என்ன கல்யாண வீட்டு ரசம் மாதிரி இருக்கு? எப்படிப் பண்ணறதுன்னு எனக்குச் சொல்லிக் கொடு, மன்னி’…

எட்டாம் வகுப்புப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்தான். கேள்வி முறையில்லாததால்தான். வலுக்கட்டாயப்படுத்தி அதைத் தொடரும்படி பண்ணினாள். ‘எனக்குக் கணக்கு வராது மன்னி’ என்று சிணுங்கினான். அன்னம் எஸ்.எஸ்.எல்.ஸி. பாஸ் பண்ணியவள்; கணக்கில் 80 மார்க் வாங்கினவள். ”நான் சொல்லித் தருகிறேன் உட்கார்” என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். அவன் மக்குத்தனமாய் விழிக்கிறபோது தலையில் நறுக்கென்று குட்டுகிறவளும் அவளே. பிறகு அந்தத் தலைக்கு ஹேராயில் போட்டு வகிடெடுத்து வாரி விடுகிறவளும் அவளே.

‘மன்னி, நான் ஒண்ணு சொல்றேன், சிரிக்கக் கூடாது” என்றான் ஒரு நாள் குழந்தை மாதிரி.

“என்னப்பா?” என்றாள் அன்னம். ஒரு இரண்டும் கெட்டான் மரியாதைக்காக ‘அப்பா’தான் அவள் உபயோகப்படுத்துவது.

”என் பேர் விஜயராகவன்னு உனக்குத் தெரியுமில்லையா? யாரோ சின்ன வயசிலே விஜின்னு கூப்பிட்டாங்க. அப்படியே நின்னு போச்சு. பொம்பளை பேராட்டம் என்னவோ போலிருக்கு. நீயாவது இனிமே என்னை விஜுன்னு கூப்பிடேன். அப்புறம் மற்றவங்களும் அப்படியே என்னைக் கூப்பிட ஆரம்பிப்பாங்க. என்ன?”

“ஓ” என்றவள், இரண்டு நாள் ‘விஜு’ என்று கூப்பிட்டாள். அவனுக்குப் அவனுக்குப் பெருமையாய் இருந்தது. அப்புறம் அது என்னவோ போல் தோன்றியது. பழையபடி விஜி என்றே கூப்பிட ஆரம்பித்தாள்.

இதெல்லாம் போன வருஷம். இந்த வருஷம் தான் விஜி கொஞ்சம் மாறிவிட்டான். அது கூட இந்த வயசிலே எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படுகிற ஆசைதான் – சினிமா ஆசை. கண்டும் காணாமலும் நிறையப் போனான். தமைய னார்கிட்டே அதிகம் காசு பெயராது. ‘மன்னி, மன்னி. ரொம்ப நல்ல படமாம் மன்னி. இன்றோடு லாஸ்டாம் மன்னி’ என்று அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வரும்போது அவளால் சிரிக்காமல் இருக்க முடியாது. கேட்ட காசைக் கொடுக்காமலும் இருக்க முடியாது. வீட்டுக்கு வந்து நிறையப் பாடுவான், அண்ணா இல்லாத வேளையில். நல்ல குரல் அவனுக்கு, “மன்னி, உனக்குக்கூட ரொம்ப ஜோரான குரல்தான். சுசீலா மாதிரியே இருக்கு. நீ பாடேன் பார்க்கலாம்” என்றான்.

“எனக்கு என்னப்பா பாட்டுத் தெரியும்?” என்று அன்னம் சொன்னதால், யாரோ ஒரு கிளாஸ் பிள்ளையைக் கெஞ்சிக் கூத்தாடி டேப் ரெகார்டரும் ஏகப்பட்ட ரெகார்டுகளும் வாங்கி வந்தான். அதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கும் நெட்டுரு ஆகிவிட்டது. டி.எம்.எஸ். பாடியிருப்பதையெல்லாம் விஜி பாடுவான். சுசீலா பாடியிருக்கும் இடங்களை அவள் பாடுவாள். எல்லாம் அவர் வீட்டில் இல்லாத வேளையில்தான். இருந்தால் முதுகுத் தோலை உரித்துவிட மாட்டாரா?… சில பாட்டு உண்டு. ‘சீ போ, விஜி. அதெல்லாம் அசிங்கமாய் இருக்கு’ என்று அவள் பாட மறுத்து விடுவாள். சில பாட்டுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. குழந்தை… அவனுக்கு என்ன தெரியும்?

அப்படியெல்லாம் குழந்தை மாதிரி பழகி வருகிறவனுக்கு இப்போது என்ன வந்தது இத்தனை கோபம்? ‘மன்னி, என்னைத் தேட வேண்டாம்.’

திடுப்பென்று அன்னத்துக்கு ஞாபகம் வந்தது. நேற்று ராத்திரி நடந்த நிகழ்ச்சி. அஜீஸ் பாயிடம் ரவிக்கை தைக்கக் கொடுத்திருந்தாள். ‘கூலியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கி வா’ என்று விஜியிடம் இரண்டு ரூபாய் கொடுத்திருந்தாள். விஜி வாங்கி வந்தான். போட்டுப் பார்த்தாள். கை ரொம்ப லூஸாய் இருந்தது. “கொஞ்சம் சின்னது பண்ணித் தரச் சொல்லு” என்று இரண்டாம் முறை விஜியை அனுப்பினாள்.

“இது சரியாத்தானே இருக்கு மன்னி?” என்று முனகிக் கொண்டே போனான். அரைமணி உட்கார்ந்திருந்து சரி செய்து வாங்கிக் கொண்டு வந்தான். சமையல் கட்டில் அன்னம் போட்டுப் பார்த்துக் கொண்டாள். புடவைத் தலைப்பை மோவாய்க்கும் கழுத்துக்கும் இடையில் கவ்வியபடி ரவிக்கையைப் போட்டுக் கொண்டாள். “பார்த்தியா, இப்பத்தான் கச்சிதமாயிருக்கிறது” என்றாள்.

“ஆமாம் மன்னி” என்று அவள் கையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

கூந்தலில் ரவிக்கையின் பொத்தான் சிக்கிக் கொண்டு விட்டது. ‘ஸ்!’ என்று அவள் கூவ, விஜிதான் ரவிக்கையிலிருந்து கூந்தல் இழையைப் பிரித்துவிட்டான். மோவாயில் கவ்வியிருந்த புடவைத் தலைப்பு அப்போது விழுந்துவிட்டது.

“விஜி! தையல்காரனிடம் வாங்கி வந்த பாக்கி ஒரு ரூபாயை என்னிடம் நீ தரவேயில்லையே! சினிமாவுக்குப் போகலாம்னுதானே வச்சிட்டிருக்கிறே?”

“அ… ஆமாம் மன்னி…” என்று என்னவோ தடுமாறி விட்டுப் போய் விட்டான்.

நேற்று ராத்திரி சாப்பிடும் போது கூட அவன் முகம் சுரத்தாகவேயில்லை.

அன்னத்தை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்பட்டான்.

‘என் நாக்கு சும்மா இருக்கக் கூடாதா?’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் அன்னம். ‘கேவலம் ஒரு ரூபாய்! அதைத் திருப்பிக் கேட்டுத்தான் ஆகணுமா? குழந்தை அதைச் செலவழிச்சுட்டான் போலிருக்கு. அதான்…’

அதோ பாலம்… பாலத்தின் கீழே விஜி படுத்திருக்கிறான். அம்மா, தாயே! நீ காப்பாற்றிவிட்டாயம்மா.

“விஜி… என்னப்பா என்மேலே கோபம்?”

அவன் திடுக்கிட்டு எழுந்து கொண்டான். அன்னத்தைப் பார்த்து மிரள மிரள விழித்தான். ஓடத் தொடங்கினான்.

”விஜி… ஓடாதேப்பா. நான் உன்னை ஒண்ணும் கேட் கல்லே. நீ என் குழந்தை. என் செல்லம். என் தம்பி. நான் உன்னை என்ன பண்ணினேன்? நில்லுப்பா, நில்லு! நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ளே உன்னை யார் என்ன சொன்னார்கள்?… விஜி…”

“என்னைக் கூப்பிடாதே, மன்னி! கூப்பிடாதே!” என்று கத்திக் கொண்டே தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான் விஜி. திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, “நான் குழந்தை இல்லை, குழந்தை இல்லை!” என்று இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தான்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *